Wednesday, March 05, 2008

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 19 "செங்கோன்மை"

"சீக்கிரமாப் பாருங்க சங்கர்! உங்க மன்னார் எங்கே இன்னும் காணும்?" சற்று அவசரத்துடனே கேட்டார் மஞ்சூரார்!

"இருங்க சுந்தர்! மன்னார் எப்ப வருவான், எப்படி வருவான்னு யாருக்கும் தெரியாது! ஆனால், கண்டிப்பா வருவான்! சொல்லுங்க நாயர்! நான் சொல்றது சரிதானே!" என்றேன் நான்!
[ஆமாங்க! நம்ம முத்தமிழ் மஞ்சூரார் தான்! சென்றமுறையே அடுத்த தடவை மயிலைக்குப் போகும்போது தானும் வருவதாகச் சொல்லியிருந்தார்!! ]

"ஸார் பறைஞ்சது செரிதன்னே! ஞான் கூட ஆயாள் எப்போ வரும், எங்கனே வரும்னு தெரியாம, பலசமயம் குழம்பிப் போயுண்டு!" எனச் சொல்லி நாயரும் சிரித்தார்!

'சரி! அவர் வரும் வரை நாயர் ஸ்பெஷல் மசால் வடை, டீ சாப்பிடுவோம்!" என நான் சொன்னதும் நாயர் சுறுசுறுப்பானார்.

ஒரு ஆட்டோ பலத்த உறுமலுடன் வந்து நின்றது!

"வந்து ரொம்ப நேரமாச்சா நண்பா! ஒரு பிரச்சினைக்கு மத்தியஸ்தம் பண்ணக் கூப்பிட்டிருந்தாங்க! அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு! இன்னா நாயர்! நம்ம ஆளுங்களை நல்லா கவனிச்சுக்கினியா?' எனக் கேட்டு அட்டகாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பக்கத்தில் இருந்த மஞ்சூராரைக் கவனித்தவன், "ஓ! இவர்தான் நீ சொன்ன உங்க தலைவரா? முத்தமிளுக்கே சொந்தம்னு சொன்னியே! அவர்தான் இவரா? இன்னா தலீவா! செங்கோல்லாம் எடுத்துக்கினுதானே வந்திருக்கீங்க?" எனக் கண்ணடித்தான்!

மஞ்சூரார் சற்றுக் குழப்பத்துடன், மன்னார் ஏதோ கிண்டல் செய்கிறான் என மட்டும் புரிந்து கொண்டு, என்னை நோக்க,
நான் அவரைப் பார்த்து சிரித்தபடியே, " பதறாதீங்க சுந்தர்! மன்னார் எப்பவுமே இப்படித்தான்! எல்லாருடனும் உடனே நட்பு பாராட்டி, சொந்தமாகப் பாவிக்கத் தொடங்கிடுவான்! அவன் கேட்ட செங்கோல் உங்க பேனாவைத் தான்! இன்னிக்கு உங்களுக்குத்தான் வேலை! நீங்கதான் எழுதிக்கணும் அவன் சொல்வதை! உங்களுக்குத்தான் ஏதோ மேட்டர் சொல்லப் போறான்னு நினைக்கிறேன்!" என்றதும் சமாதானமாகி, பேப்பர் பேனாவை சிரித்துக் கொண்டே எடுத்தார்.

இனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொன்ன விளக்கமும்!

"செங்கோன்மை" -- அதிகாரம் 55

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை." [541]

இப்ப ஒரு குழுமத்துக்கு தலையா நீங்க இருக்கீங்கன்னு சங்கர் சொன்னான். ரொம்ப நல்ல விசயம். நல்லாவாவும் நடத்துறீங்கன்னும் சொன்னான். கேக்கவே சந்தோசமா இருக்கு. ஒரு தல இன்னா பண்ணனும்னு இதுல ஐயன் சொல்றாரு.
ஏதோ ஒரு தலைப்புல சில பேரு வந்து ஏடாகூடமா எளுதறாங்கன்னு வைச்சுப்போம். அதை எளுதறது யாருன்னு தக்கபடி விசாரிச்சு, தெரிஞ்ச ஆளு, புது ஆளுன்னு பாக்காம, நடுநிலைமையா ஆராய்ஞ்சு பாத்து, அததுக்கு தகுந்த தீர்ப்போ, தண்டனையோ கொடுக்கறதுதான் சரியான வளின்னு சொல்றாரு!

"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி." [542]

இந்த ஒலகத்துல இருக்கற உயிருங்கல்லாம் மானத்துலேருந்து பெய்யற மளையை நம்பித்தான் வாளுது! அதேபோல, ஒரு தலீவன் இன்னாமாரி தன்னோட மக்களை நடத்தறான்னு அவனோட செங்கோலைப் பாத்துகிட்டே இருக்காங்களாம். பாராட்டறதுக்குப் பாராட்டி, தட்றதுக்குத் தட்ட, உன்னோட செங்கோலு, அதாம்ப்பா.. பேனா.. தயங்காம இருந்தாத்தான் அல்லாமும் நல்லா நடக்குமாம்!

"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்." [543]

நல்லாப் படிச்சவங்க கூட, இந்த இடத்துல நியாயமா நடத்துவாங்க நம்மளைன்னு ஒரு நம்பிக்கையோட வந்து எளுதறதுக்குக் கூட ஒன்னப் போல தல நடத்துற விதத்துலதான் இருக்கு. இப்ப, எங்க சீதாம்மா, ஜப்பார் அய்யா போல ஆளுங்கள்லாம் முத்தமிள்ல ரொம்ப சிறப்பா எளுதறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதெல்லாத்துக்கும் காரணம் நீங்க நடத்தற விதந்தான்னு இதைப் புரிஞ்சுக்கணும்! சரியா!

"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு." [544]

ஒரு குளுமத்துல இருக்கற ஆர்கிட்டயும் விரோதம் பாராட்டாம, அன்பா அவங்களை நடத்திகிட்டுப் போனா, அவுக அல்லாரும் 'ஆஹா! நம்ம மஞ்சூரார் போல உண்டா!'ன்னு உங்க கூடவே நிப்பாங்க! இது ரொம்ப முக்கியமா கவனத்துல நீங்க வைச்சுக்கணும்!

"இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு." [545]

ஒரு ராசா சரியான வளியில ஆட்சி பண்ணினான்னா, பெய்யற மளை கூட மொறை தவறாமப் பெய்யுமாம். விளையற பொருளு கூட நல்லா விளையுமாம்! இது எப்பிடி எனக்குப் பொருந்தும்னு தானே கேக்க வரீங்க! பெய்யற மளைன்றது சீதாம்மா போல ஆளுங்க ரெகுலரா எளுதறது! விளையற பொருளு... நல்ல சமாச்சாரமெல்லாம் நிறைய வந்துகிட்டே இருக்கறது! ரெண்டும் முக்கியம்! புரியுதுங்களா!;))

"வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்." [546]


சண்டை போட்டு நாலஞ்சு பேரை விரட்டறது வீரமில்ல! செய்யற காரியத்த பாரபட்சமில்லாம பொதுவா ஒரு ராசா... நீங்க கூட மஞ்சூர் ராசான்னுதான் பேரு வைச்சிருக்கீங்களாமே!:))))... பொதுப்படையா ஒரு ராசா செஞ்சா அதான் பெரிய வீரமாம்!

"இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்." [547]


ஒரு நாட்டை எவ்வளவோ நிறைவா ஒருத்தன் நடத்தினாலும், அவன் தன்னோட செங்கோலை எப்பிடி குத்தமில்லாம நடத்துறான்றதை வைச்சுத் தான் அவனோட மதிப்பு வளரும்! புரிஞ்சா சரி!

"எண்பகத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்." [548]

நல்ல விஷயத்தை ஒருத்தர்.. இப்ப நம்ப சீதாம்மா மாதிரின்னு வைச்சுப்போமே... அவங்க வந்து சொல்ல வராங்க! அவங்களை எப்படி நாம வரவேற்கணும்? சொல்ல வந்ததைச் சொல்லுங்க! இதை வில்லங்கம் இல்லாம நான் பார்த்துக்கறேன்னு அவங்களுக்கு தெம்பு கொடுக்கணும். அப்ப, எவனாவது வந்து, ஏடாகூடமா கேள்வி கேட்டு, திசை திருப்பினா, அதைக் கண்டுக்காம விட்டா, அப்ப, அந்தப் பதிவு மட்டுமில்ல, தலையா நிக்கற உங்களோட பேனாவும்... செங்கோலும்... வளைஞ்சு போயிருமாம்! இதைக் கவனத்துல வைச்சுக்கங்க சாமி!

"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்." [549]

ஒங்க குளுமத்துல வேந்தன்னு ஒருத்தர் இருக்காருன்னு சங்கர் சொன்னான். ரெண்டு வார்த்தைல தன்னோட கருத்தை அடுத்தவனுக்கு அது புரியுதோ இல்லியோ.. சொல்லிட்டுப் போயிடுவாராம். அதாவது, அடுத்தவனையும் வருத்தாம, அதே சமயம் அவ மனசிலியும் பதியுற மாரி! இதுனால, வேந்தனுக்கும் சங்கடமில்லை! சொன்னவனும் புரிஞ்சுப்பான்! இப்பிடி நடந்துகிட்டா, தலைக்கு நல்லது! நான் சொல்லை! ஐயன் சொல்றாரு!

"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்." [550]


இவ்ளோ சொல்லியும் ஒருத்தன் கேக்கலைன்னு வைச்சுக்குவோம்! அப்போ இன்னா பண்ணணும்! தாட்சண்ணியம் பாக்காம அவனை வெட்டி விட்டுறணும்! இது எப்பிடீன்னா, நல்ல பயிரை வளக்கும் போது, இடையிலே மொளைச்சிருக்கற சில களைங்களை எல்லாம் வெட்டிப் புடுங்கி எறியற மாதிரீன்னு ஐயன் சொல்றாரு!

"இன்னா! நான் சொன்னதைக் கேட்டு தெகைச்சுப் போயிட்டீங்களா? இதுவரைக்கும் நீங்க நல்லாத்தான் நடத்திகிட்டு வர்றதா சொல்லியிருக்கான் நம்ம தோஸ்த்து! அதுனால, இதுவரைக்கும் பண்ற மாரியே பண்ணிகிட்டு வாங்க! சீதாம்மா போல ஆளுங்க ஒங்க பதிவுல எளுத வந்ததே ஒரு பெரிய விசயம்! அவுங்களைப் போல ஆளுங்க தொடர்ந்து எளுத நீங்கள்லாம் ஒதவி பண்ணனும்! அவ்ளோதான் நான் சொல்லுவேன்! இன்னாப்பா சங்கர்! நான் சொன்னதுல எதுனாச்சும் தப்பு இருக்கா?" என்று சிரித்தான் மயிலை மன்னார்!

"நீ என்னிக்காவது தப்பா சொல்லி இருக்கியா? நீ சொல்றதை முழு மனசோட ஆமோதிக்கிறேன்! நாயர்! இன்னும் ரெண்டு வடை!" எனச் சொன்னேன்!

"ஒங்காளு மெய்யாலுமே பெரிய ஆளுதான்யா!"......டீயை உறிஞ்சியபடியே என் தோளில் கை போட்டர் மஞ்சூரார்!

"எல்லாப் பெருமையும் ஐயனுக்கே" என்றபடி ஆட்டோவில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!

10 பின்னூட்டங்கள்:

Anonymous,  Wednesday, March 05, 2008 11:23:00 PM  

மூஞ்சூரு ராசாவுக்கு தாங்கற பதிவா இது? சரி சரி.

VSK Wednesday, March 05, 2008 11:30:00 PM  

சிரி சிரி!!!
புரி புரி!!!!

வடுவூர் குமார் Thursday, March 06, 2008 12:05:00 AM  

சொல்லும் போது மன்னாரின் கையில் கோல் - செங்கோல் இருந்ததா?

மன்னாரின் விளக்கம் நன்றாக இருந்தது.கடைசியில் வன்முறையில் இறங்கிட்டாரே என்ற கஷ்டமும் வந்தது.:-)

Unknown Thursday, March 06, 2008 6:51:00 AM  

//தாட்சண்ணியம் பாக்காம அவனை வெட்டி விட்டுறணும்! இது எப்பிடீன்னா, நல்ல பயிரை வளக்கும் போது//

அய்யோ. இப்போதெல்லாம் குழுவாக ஆட்களை சேர்த்துக் கொண்டு தலையையே (தலைமையையே) வெட்டி விடுகிறார்களாம். அரவணைச்சு போகனுமாம். அப்படி ஒண்ணு இப்படி ஒண்ணும் இருக்கத்தான் செய்யுமாம்.

SP.VR. SUBBIAH Thursday, March 06, 2008 7:10:00 AM  

////ஒரு நாட்டை எவ்வளவோ நிறைவா ஒருத்தன் நடத்தினாலும், அவன் தன்னோட செங்கோலை எப்பிடி குத்தமில்லாம நடத்துறான்றதை வைச்சுத் தான் அவனோட மதிப்பு வளரும்! புரிஞ்சா சரி!////

க்ரெக்ட் மன்னாரு!
புரியாட்டா அடுத்தவாட்டி சனங்க மாத்திக் குத்திடுவாங்க - இதையும் சொல்லியிருக்கலாமே மன்னாரண்ணே!

VSK Thursday, March 06, 2008 7:44:00 AM  

கொலையிற் கொடியாரைத்தான் அப்படி செய்யணும்னு வள்ளுவர் சொல்றாருங்க திரு. குமார்! ஆளைத் தீர்த்துக் கட்டச் சொல்லலை! விலக்கிடுங்கன்றாரு!
:))

VSK Thursday, March 06, 2008 7:45:00 AM  

கொலையிற் கொடியாரைத்தான் அப்படி செய்யணும்னு வள்ளுவர் சொல்றாருங்க ஆளைத் தீர்த்துக் கட்டச் சொல்லலை! விலக்கிடுங்கன்றாரு!

நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்குங்க திரு. சுல்தான்.

அரவணைச்சும் போக முடியலைன்னா என்ன பண்றது!:))

VSK Thursday, March 06, 2008 7:46:00 AM  

அல்லாத்தியும் நானே சொல்லிட்டா அப்புறம் ஆசான் வந்து இதுமாரி சொல்ல மாட்டாரேன்னு சொல்லிச் சிரிக்கிறான் மன்னார்!:))

மிகவும் சரியாகச் சொல்லியிருக்கீங்க! நன்றி!

திவாண்ணா Thursday, March 06, 2008 11:58:00 PM  

என்ன மன்னாரு குறளை அப்படியே பாக்காம பால்டிக்ஸ் ல இறங்கறாரு!

VSK Monday, March 10, 2008 12:45:00 AM  

குறளை எப்படி எப்படியோ பாக்கறவங்களை விட்டுட்டு,, மன்னாரைப் போய் குறை சொல்றீங்களே திவா!
:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP