Tuesday, April 24, 2007

"முன்னமொரு காலத்திலே!"


"முன்னமொரு காலத்திலே!"

அது ஒரு பெரிய காடு!

மணம் பொருந்திய காடு!

காட்டில் மரங்கள் உண்டு!

செடிகொடிகள் உண்டு!

சிங்கம், புலி, கரடி, ஓநாய், யானை, மான், எருது எனப் பல மிருகங்கள் உண்டு!

சிங்காரப் பறவைகளும் உண்டு!

அழகிய ஓடைகள் அங்குமிங்குமாய் குதித்தோடும்.

வவ்வால்கள் தலைகீழாய்த் தொங்கும் ஒரு சில மரக்கிளைகளில்!

அவ்வப்போது வேட்டைக்காரர்கள் வந்து சில தோட்டாக்களை வீசிச் செல்வார்கள்.

இத்தனையையும் தாண்டி, அங்கு இதமான காற்று வீசிக்கொண்டுதான் இருந்தது.

பறவைகள் காலையில் கீசுகீசுசென்று பேச்சரவம் பேசிக்கொண்டிருந்தன.

மிருகங்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன.

புலிகள் பசியெடுக்கும் போது, ஒரு மான் அல்லது எருமைக் கூட்டத்தைப் பார்க்கும்.

தனக்குத் தேவையான இரையைக் கவ்விக் கொல்லும்.

சிங்கம்... பெண்சிங்கம்... இரையைக் கொண்டுவர, ஆண்சிங்கங்கள் அதனை உண்டு பசியாறும்.

யானைகள் கூட்டங்கூட்டமாகச் சென்று இலை, தழைகளை உண்டு, ஓடையில் நீர் பருகிப் பசியாறும்.

மான்கள் மருண்டு பார்க்கும்.... எங்கேனும் வல்லிய மிருகங்கள் இருக்கின்றனவா என்று!

கண்டதும், வெருண்டு ஓடும்.

காடு நன்றாகவே இருந்தது!

ஒரு சில நரிகள் வந்தன காட்டுக்குள்!

இந்த அமைதியான காட்டைப் பார்த்ததும், மனதுக்குள் ஆனந்தம் பொங்கியது அவைகளுக்கு!

இந்த அமைதியைக் குலைத்து, அலங்கோலம் பண்ண எண்ணியன அவை!

யானையிடம் சென்று, புலியைப் பற்றி, .....சிங்கத்திடம் சென்று, காட்டெலியைப் பற்றி, .....கழுகிடம் சென்று, குருவியைப் பற்றி...... தப்புத் தப்பாக, ......இல்லாதது, பொல்லாதது எல்லாம் பேச ஆரம்பித்தன.

காட்டின் அமைதி குலைந்தது!

ஒன்றை ஒன்று சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தன.

திடீர் திடீரெனத் தாக்குதல்கள் தொடங்க ஆரம்பித்தன.

எவர் எவரைத் தாக்குகிறார்கள் என எவருக்கும் தெரியவில்லை.

இதுவா, அதுவா எனத் தெரியாமல் எல்லா ஜீவராசிகளும் திகைத்தன.

ஓடைகள் வறண்டன.

மலர்கள் மலர மறந்தன.

வண்டுகளின் ஓட்டம் குறைந்தது.

காடு மணம் இழந்தது.

இது தீர என்ன வழி?

நரிகளை முதலில் துரத்துவோம் என சில மிருகங்களும், பறவைகளும் முடிவெடுத்தன.

நரிகளைப் பற்றிக் கவலைப் படாமல் அவரவர் வேலையை முன் போல் தொடரலாமே எனச் சில ஆலோசனை சொன்னன!

முடியாவிட்டால், இடம் பெயர்வதெனவும் முடிவு செய்யப்பட்டது!

காடு மீண்டும் தன் மணத்தைப் பெறுமா?

காலம் பதில் சொல்லும்!35 பின்னூட்டங்கள்:

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, April 24, 2007 9:08:00 PM  

SK
என்னங்க இது, மூன்றாம் பிறை கமல் பாடிக் கதை சொல்றா மாதிரி பாட்டு இருக்குதே! :-)

கோவி.கண்ணன் Tuesday, April 24, 2007 9:11:00 PM  

//முடியாவிட்டால், இடம் பெயர்வதெனவும் முடிவு செய்யப்பட்டது!

காடு மீண்டும் தன் மணத்தைப் பெறுமா?

காலம் பதில் சொல்லும்!//

பூனைகள் கண்ணை மூடி பூலோகம் இரண்டது என்று சொல்லுமாம்...

எல்லா விலங்களும் விழிப்புணர்வு பெற்றதால்... பசிக்கு எதுவும் கிடைக்காத....
காட்டுபூனைகள் கனவு கண்டு காடு அழிவதாகச் சொன்னதைகேட்டு குள்ளநரிகள் போகிற போகில் கொளுத்திப் போட முயன்றதும் கடும் மழைவந்து காட்டை மேலும் செழிப்பாக்கியது போல எனக்கு கதையின் முடிவு சுபமாகவே தெரிகிறது.

குமரன் (Kumaran) Tuesday, April 24, 2007 9:14:00 PM  

காலம் பதில் சொல்லும்.

VSK Tuesday, April 24, 2007 9:22:00 PM  

அதேதாங்க!

"நீலக்கலர் மாறிப் போச்சு
நரியின் சாயம் வெளுத்துப் போச்சு!"

VSK Tuesday, April 24, 2007 9:24:00 PM  

கனவு இல்லை கோவியாரே!

ஏன் "காலம்" அவசரப்படுகிறது?

உண்மையான காலம் சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அவசரப்படாது!

சுபமான முடிவு கதைகளில் மட்டுமே!
:))

VSK Tuesday, April 24, 2007 9:26:00 PM  

சொல்லுமா குமரன்?
:))

சொல்லும் !!

கோவி.கண்ணன் Tuesday, April 24, 2007 9:28:00 PM  

//முடியாவிட்டால், இடம் பெயர்வதெனவும் முடிவு செய்யப்பட்டது!//

//சுபமான முடிவு கதைகளில் மட்டுமே!
:)) //

உங்க முடிவு படியே கதை இருந்தால் அது சுபமாகவே இருக்கட்டும்... இடம் பெயர்ந்த விலங்குகள் மற்றொருக்காட்டையும் இதே போல் ஆக்காமல் இருந்தால் நல்லது.

VSK Tuesday, April 24, 2007 9:44:00 PM  

அதற்க்கு முன்னால் இரண்டு நிகழ்வுகள் கதையில் இருக்கிறதே கோவியாரே!

அதற்குள் துரத்துகிறீர்களே!
:))

முன்னவையே நடக்குமென காட்டு ஜீவராசிகள் சொல்லுகின்றன.

காடு மீண்டும் மணம் பெறும்!

அனைத்து ஜீவராசிகளும் நலமாக வாழ நீங்களும் விரும்புங்கள்!

:)

குமரன் (Kumaran) Tuesday, April 24, 2007 9:52:00 PM  

//முடியாவிட்டால், இடம் பெயர்வதெனவும் முடிவு செய்யப்பட்டது!//

கண்ணன் அண்ணா. இந்த வரிகள் என் போன்றவர்கள் நிலையைச் சொல்கின்றன. ஒரு முறை இடம் பெயர்வதென முயன்றேனே.

அந்தப் பின்புலத்தில் மீண்டும் இந்தக் கவிதையைப் படித்தால் வேறு பொருள் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். நான் அந்தக் கருத்தில் படித்துத் தான் 'காலம் பதில் சொல்லும்' என்றேன்.

நரிகளைப் போன்று கலகம் செய்பவர்கள் எல்லோருமே மணம் வீசும் காட்டை விட்டுப் போகவில்லை இன்னும். அது வரையில் என்னைப் போன்ற பறவைகளுக்கு 'நரிகளைப் பற்றிக் கவலைப் படாமல் அவரவர் வேலையை முன் போல் தொடரலாமே' என்பது தான் தற்போதைய நிலைமை.

காலம் பதில் சொல்லும்.

ஷைலஜா Tuesday, April 24, 2007 10:02:00 PM  

நாடு தான் காட்டுல மறைஞ்சிருக்கா? என்னவோ நீங்க தெளிவா எழுதியும் எனக்குத்தான் புரிந்தும் புரியாமலும் இருக்கிறதே vsk:)

VSK Tuesday, April 24, 2007 11:17:00 PM  

பறவைகள் மனதை யாரறிவார்- அந்தப்
பரம்பொருள் ஒன்றே தானறிவார்!


பறவைகள் தன் பேச்சரவத்தைத் தொடர்ந்து நிகழ்த்தட்டும், குமரன்!

சலசலப்புக்கு அஞ்ச வேண்டாம்!

VSK Tuesday, April 24, 2007 11:20:00 PM  

நாடு, காடு, வீடு எல்லாம் அறிந்தவனு[ளு]க்கு ஒன்றுதான் ஷைலஜா!

எவர்க்கும் அஞ்சாமல், தமிழ்ப்பணி தொடருங்கள்!

காடு அனைவரையும் காக்கும்!

வெற்றி Tuesday, April 24, 2007 11:23:00 PM  

VSK ஐயா,
நல்ல கதை.

VSK Tuesday, April 24, 2007 11:33:00 PM  

நீங்கள் ஒருவராவது என் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு இதை நல்ல கதை எனச் சொன்னீர்களே!

மிக்க நன்றி திரு. வெற்றி!

காடு மணம் வீச என்னுடன்,.... எனக்காக வேண்டுங்கள்!

ஆதி Tuesday, April 24, 2007 11:41:00 PM  

தமிழ்மணத்தினை வெவ்வேறு சொற்கள் கொண்டு கிண்டல் செய்து இருக்கும் சங்கர் குமாரை கண்டனம் செய்கிறேன்.

VSK Tuesday, April 24, 2007 11:56:00 PM  

ஆதிசேஷனுக்கு ஆயிரம் நாக்குகள்!

அதில் எந்த நாக்கைக் கொண்டு திட்டினாலும், அர்த்தமில்லாத இந்த குற்றச்சாட்டினை, அப்படியே தள்ளுகிறேன்.

புதிதாய் வந்தவர்க்கு, காடு புரியாதுதான்!

காடு மணக்கட்டும்!

அது கூடாதெனப் பிணக்கும் நரிகள் ஒதுங்கட்டும்!

VSK Tuesday, April 24, 2007 11:59:00 PM  

///எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!///

நன்றி, திரு. ஆதிசேஷன்!

Anonymous,  Wednesday, April 25, 2007 12:29:00 AM  

Very good story. It moved me.

Forest is the only zone for the animals. They have nowhere to go. The forest is only designated by survival instinct. Here everyone wants to be the fittest to survive. The rule of the jungle is really cruel. Here always the might wins over right. Therefore, the lambs and peacocks and rabbits find this terrorizing. They pray to God to save them.

(sorry no tamil font...)

SurveySan Wednesday, April 25, 2007 1:22:00 AM  

:))))

காடுன்னா குள்ள நரியும் இருக்கணுமே.. அப்பதான அது காடு?

எல்லா மிருகமும் இருந்தாதான், காடு காடாக இருக்கும்.

சில அசிங்கம் பண்ற குள்ள நரீஸ வேணா, காடு கடத்தலாம், இல்லன்னா அடிச்சு மரத்துக்கு உரமா போடலாம்.

எல்லாம் அவன் செயல் :)

Unknown Wednesday, April 25, 2007 7:10:00 AM  

//நரிகளை முதலில் துரத்துவோம் என சில மிருகங்களும், பறவைகளும் முடிவெடுத்தன.
நரிகளைப் பற்றிக் கவலைப் படாமல் அவரவர் வேலையை முன் போல் தொடரலாமே எனச் சில ஆலோசனை சொன்னன!//

இடம் பெயர இனி யோசிப்பானேன். நரிகள் துரத்தப்பட்டு விட்டதால், இனி எந்தக் கவலையுமின்றி அவரவர்கள் தம் வேலைகளை முன் போலத் தொடர்ந்தால் காடு மணம் பெறும்.

வல்லிசிம்ஹன் Wednesday, April 25, 2007 7:27:00 AM  

காடு வெட்டி
நாடு கண்டு,
மணம் வீச வைத்த பிறகு
நடுவில் பருவம் மாறினால்
நிலை மாறுவதும் சகஜம்தானே எஸ்.கே சார்.

மீண்டும் நல் மணம் கமழும்.
நிறைய பொறுமை வேண்டும்.:-)
வசந்தம் இந்த ஊரில் வந்துவிட்டதே!!

இலவசக்கொத்தனார் Wednesday, April 25, 2007 7:49:00 AM  

ஆஹா! நல்ல கதை எழுதி இருக்கீங்க. ஷைலஜாக்கா சொல்ற மாதிரி நமக்குத்தேன் கொஞ்சம் மப்பா இருக்கு. இந்த மிருகங்கள் பறவைகள் எல்லாம் பத்திப் புரியாமதான் அக்கவுண்டன்ஸி எடுத்துப் படிச்சது. ஆனா இந்தக் கொடுமை விடமாட்டேங்குதேய்யா.

எது ஓநாய்? எது குள்ள நரி? ஒண்ணும் புரிய மாட்டேங்குது. வாலை ஆட்டி ஊளையிடும் எதைப் பார்த்தாலும் கொஞ்சம் பயமாவும் கொஞ்சம் அருவெறுப்பாவும்தான் இருக்கு.

இன்னும் என்னென்ன நடக்குமோ பார்க்கலாம்.

VSK Wednesday, April 25, 2007 8:58:00 AM  

//

எல்லா வகையான விலங்குகளும், பறவை இனங்களும், அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு சென்று, காடு மணமாக இருக்கும் எனத்தான் என் போன்ற பலர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், இந்தக் கதையில்,.... திரு. 'அனானி'.

காட்டு நீதி கடுமையானதுதான், நீங்கள் சொல்வது போல.

ஆனால், கூட்டு சேர்ந்து போட்டுத்தள்ளும் கலை அங்கு இல்லை.

VSK Wednesday, April 25, 2007 9:04:00 AM  

மூன்று வழிகள் இருக்கின்றன அக்கதையில், திரு. சுல்தான்!

முதல் இரண்டும் தான் அந்த ஜீவராசிகளின் முதல் சாய்ஸ்!

துரத்தப் பட வேண்டிய நரிகள் இன்னும் மீதமிருப்பதாகத் தெரிய வருகிறது.

அதனல் என்ன! அது பாட்டுக்கு நடக்கும்!

நீங்க எப்ப உங்களோட மற்ற மாளிகைகளுக்கு எங்களைக் கூட்டிச் செல்லப் போகிறீர்கள்!?

பொன்மொழிப் பதிவுகள் எங்கே?
:))

VSK Wednesday, April 25, 2007 9:06:00 AM  

நீங்க சொன்னா நடக்காமலா போயிடும், வல்லியம்மா?

நம்பிக்கைதானே நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது!

நன்றி.

VSK Wednesday, April 25, 2007 9:07:00 AM  

நல்லதே நடக்கும், கொத்தனாரே!

நீங்க எப்பவும் போல எலவசமா வூடு கட்டிக்கிட்டே இருங்க!

:))

SP.VR. SUBBIAH Wednesday, April 25, 2007 9:16:00 AM  

காடென்று கண்டபின்னே
கலங்கியென்ன லாபம்?
காலன் துணைவருவான்
முடிந்திடும் சாபம்!

VSK Wednesday, April 25, 2007 9:50:00 AM  

ஆறுதலாகப் பேச ஆசானை விட்டால் ஆரே வருவார்!

நன்றி, ஆசானே!

ஓகை Wednesday, April 25, 2007 10:59:00 AM  

எல்லாம் அவன் செயல்.
காட்டை செய்த கடவுளைச் சொன்னேன்.
காட்டை மேய்க்கின்ற கடவுளைச் சொன்னேன்.
செல்லென்று அவன் விதித்த பாதையில்
செல்லுகின்ற காடிதுவே!
மெல்லவே உணர்ந்தீர் நீர்
மெலிந்தழுது புலம்புகின்றீர்
என்னால் ஆற்றவும் ஏலுமோ?
இது தெய்வச் செயலெனவே உமக்கு
என்னால் ஏற்றவும் ஏலுமோ?
வெள்ளைக் கொடிக்கையர் உம்மை
என்னால் போற்றவும் ஏலுமோ?
நட்பின் தகைசான்ற உம்மை
என்னால் தூற்றவும் ஏலுமோ?

Anonymous,  Wednesday, April 25, 2007 11:00:00 AM  

நல்லதொரு பலபொருள் நேரக்கவிதைக்கதை....

எனக்கு புரிஞ்சது இது :

* காடுன்னாலே நரி ஒனாய் நாய் சிங்கம் புலி பூனை எல்லாம் இருக்கத்தான் செய்யுது..

* காலநிலைகள் மாறும்போது காட்லே அங்கங்கே இடப்பெயர்ச்சிகளும் நடந்துக்கிட்டு தானிருக்கு..

* நரி ஊளையிடும்.

* வலியதான சிங்கம் புலி எல்லாம் எது எளிமையாக கிடைக்குதோ அதனை வேட்டையாடும்...நோ எத்திக்ஸ்...மிருகம் தானே, எதிர்பார்க்க முடியுமா ?

* காடு கடைசிவரைக்கும் காடாக இருக்காது...பயணிகள் வரவர சில மாற்றங்களும் பாலித்தீன் பேப்பர்களும் விழுந்து அதன் இயற்கை தன்மையை இழக்கத்தான் செய்யும்...இது காலத்தின் கட்டாயம், நாம ஒன்னும் செய்ய முடியாது...

இந்த பின்னூட்டத்தை போட்டுக்கிட்டு இருக்கும்போதுகூட ஒரு நரி என்னுடைய பதிவில் நாய் போல குலைத்துக்கொண்டிருக்கிறது...என்ன செய்ய...வெயிட் பண்ணித்தான் பார்க்கனும்...

VSK Wednesday, April 25, 2007 11:45:00 AM  

கண்டதைச் சொல்லுகிறேன்
கண்டதையும் சொல்லவில்லை
வருந்துகிறேன் நிலை கண்டு
புலம்பவில்லை இங்கு
நல்லதைச் சொல்லிடவோ
நடுக்கம் ஏதுமில்லை
அல்லதைத் தள்ளுதற்கோ
தயக்கம் சிறிதுமில்லை
நன்றி நண்போகையாரே
முருகனருள் முன்னிற்கும்.

VSK Wednesday, April 25, 2007 11:47:00 AM  

சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள், செந்தழலாரே!

இதுவும் ஓர்நாள் கழிந்து போம்!

நன்றி.

அன்புத்தோழி Wednesday, April 25, 2007 5:32:00 PM  

எப்பொழுது மறுபடியும் எல்லோரும் ஒன்றாக சேர வேண்டும் என்று விலங்குகள் நினைத்தனவோ அதுவே நல்ல முடிவு.

VSK Wednesday, May 02, 2007 12:12:00 AM  

புரிய வேண்டியவர்களுக்கும் புரிந்தால் சரி!
:)

நன்றி, தலைவி!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP