Thursday, April 12, 2007

"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"
"பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"
காலை நேரமிது
கனவெல்லாம் நனவாக
களிப்புடனே கிளம்புகிறாய்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

அன்னையவள் அன்புடனே
ஆசையாய் உணவெடுத்து
அன்புடனே அனுப்பி வைப்பேன்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

வாகனங்கள் இங்குமங்கும்
வேகமாய்ப் போய் வரும்
வழிமீது விழி வைத்து நீ
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

அப்பா! நான் போயிட்டு வரேன்
என்று சொல்லி என் மகளே
அக்கறையாய் இறங்குகிறாய்
பத்திரமாய்ப் போய் வா என் கண்ணே!"

ஆ! இதென்ன! என்ன நிகழ்கிறது?
அப்பக்கம் இப்பக்கம் எதுவுமே பாராமல்
இப்படி ஓடுகிறாளே அலட்சியமாய் என் மகள்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஐயோ! இதுவென்ன்ன சத்தம்!
காரொன்று "கிறீச்"சுகிறதே!
உனக்கேதும் ஆகவில்லையே?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஏனிந்த மயான அமைதி?
என்ன நடந்து விட்டதிங்கு?
ஏன் எல்லாரும் எனைப் பார்க்கின்றனர்?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

ஏதோ விபத்து நடந்திருக்கிறது!
ஏன் என் மகள் இன்னும் பஸ் ஏறவில்லை?
அவளுக்கு ஏதும்.........................
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

அரைபட்டுக் கிடக்கிறாள் அன்புமகள்
கைபிசைந்து நிற்கின்றார் காரோட்டி
கையில் தவழ்ந்த மகளைக் கையிலெடுத்து...:(
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

காலையில் கிளம்புகையில் நினைத்தேனா?
கனிமொழியைப் பறிகொடுப்பேனென்று
காதல் மனைவிக்கு என் சொல்வேன்?
பத்திரமாய் இருக்கிறாயா என் கண்ணே!"

அவசரமாய் அள்ளுகின்றேன்
அசைவில்லை அவள் உடலில்
அரற்றுகின்றேன் நானினிங்கு
பத்திரமாய் இருக்கிறாயா என் கண்ணே!"

அவசரப்பிரிவில் என் மகள்
அறுவைச் சிகிச்சை நடக்கிறது
உயிருக்கு உத்திரவாதமில்லை
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

கையைப் பிசைந்த வண்ணம்
காப்பாற்ற முடியவில்லையென
சொல்லியங்கே செல்கின்றார்... இனி என்ன?
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

போகும் வழியிலே பயமில்லை இனி
யாரும் உனைத் தொந்தரவு செய்ய மாட்டார்
வாகனங்கள் ஏதும் வேகமாக வாராது
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

செல்லுகின்ற வேளையிலும்
உயிரதனைப் பிரிந்தாலும்
இதயத்தைத் தானம் தந்தாய்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

நீ எம்மைப் பிரிந்தாலும்
இனியின்றிப் போனாலும்
"உன்னிதயம்" வாழுமிங்கு
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

நினைவெல்லாம் நீயாக
உயிரெல்லாம் உனதாக
உனை எண்ணி வாழ்ந்திருப்போம்
பத்திரமாய்ப் போய்வா என் கண்ணே!"

[இந்தப் பதிவு எழுதும் இந்நேரத்தில், நேற்றைய தினம் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு கார் மோதி, மரணமடைந்த என் தமிழ்நண்பரின் 12 வயதுக் குழந்தை அனுஷாவின் இதயம் யாரோ ஒருவருக்குப் பொருத்தப்படுகிறது; அவளும் கடைவழி செல்கின்றாள் என்னும் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, அந்தக் குழந்தைக்காகவும், அவர் குடும்பத்தினர்க்காகவும் ஒரு நொடி பிரார்த்தியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்]

இதற்கு மேல் தொடர மனமில்லை.
இதைக் கேளுங்கள்!
"நாம் எவ்வளவு நல்லவர் என்பது இல்லை; எவ்வளவு நல்லது செய்தோமென்பதே" --அனுஷா வாஸுதேவா

41 பின்னூட்டங்கள்:

Subbiah Veerappan Thursday, April 12, 2007 2:20:00 PM  

அந்த அன்பு மயிலின் இழப்பைத் தாங்கும் வலிமையை அவளுடைய பெற்றொர்களுக்கு கொடுக்கும்படி ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்

MeenaArun Thursday, April 12, 2007 2:20:00 PM  

நெஞ்சை உலுக்கிவிட்டது.அந்த பெற்றோர்க்கு ஆறுதல் சொல்ல யாராலும் இயலாது

ஆழ்ந்த வருத்தங்கள்
மீனாஅருண்

குலவுசனப்பிரியன் Thursday, April 12, 2007 2:35:00 PM  

தாங்க முடியாத இழப்பு. பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்யும் நாட்டிலும் இப்படிபட்ட விபத்துகள் நடக்கின்றன. தள்ளாத துயரிலும் பிறருக்கு தொண்டு செய்த பெற்றோரை வணங்குகிறேன்.

VSK Thursday, April 12, 2007 2:37:00 PM  

இதைப் படிக்கும் அனைவரும் அக்குடும்பத்தினர்க்கு ஆறுதலாக ஒரு வரி எழுதினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

நாமக்கல் சிபி Thursday, April 12, 2007 2:42:00 PM  

அப்பெண்ணின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

மகளைப் பிரிந்த கணத்திலும், இன்னொருவர் வாழ இதய தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் உயர்ந்த உள்ளத்திற்கு தலை வணங்குகிறேன்!

VSK Thursday, April 12, 2007 2:44:00 PM  

அந்தக் குழந்தையின் இனிய புல்லாங்குழல் இசையைக் கேளுங்கள்!

G.Ragavan Thursday, April 12, 2007 3:21:00 PM  

முருகா முருகா முருகா! என்ன செய்து விட்டாயப்பா! குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உற்றாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

மணிப்ரகாஷ் மு Thursday, April 12, 2007 5:28:00 PM  

//அனைவரும் அக்குடும்பத்தினர்க்கு ஆறுதலாக ஒரு வரி//
எப்படி எழுதுவது?
கண்ணில் நீர் ...


பள்ளி தானே போய்வர சொன்னாள் உன் அம்மா?

நீ எதற்கு இத்துனை அவசரமாய் சொர்க்கம் சென்றாய்?


உன் இல்லாமையினை
தாங்கும் மனதிடத்தினை
தந்து விடு அனுசா
உன் குடும்பத்திற்கும்
உன் நட்புகளுக்கும்..பத்திரமாய் போய் வா என் கண்ணே...

பத்திரமாய் போய் வா

:(

குமரன் (Kumaran) Thursday, April 12, 2007 5:47:00 PM  

என்ன சொல்வதென்று தெரியவில்லை எஸ்.கே. :-((

வைசா Thursday, April 12, 2007 6:17:00 PM  

இடி போல இதயத்தைத் தாக்கும் நிகழ்வு இது. ஆறுதல் கூற வார்த்தைகள் ஏது? :-((

வைசா

VSK Thursday, April 12, 2007 6:17:00 PM  

தாள முடியா சோகம் இது ஆசானே!

7 பேர் இன்று அவளருளால் உயிர் வாழ்கிறார்கள்.

ஆம்!
தன் இதயம்,கணையம், 2 நுரையீரல்கள், இரண்டு சிறுநீரகங்கள் இதனைத் தந்து விட்டுத்தான் சென்றிருக்கிறது அந்தப் பிள்ளை!

வாழ்க அதன் பெற்றவர்கள்!

VSK Thursday, April 12, 2007 6:19:00 PM  

மிக்க நன்றி, மீனா அருண், குலவுசனப்பிரியன், சிபி, ஜி.ரா., மணிப்ரகாஷ் அவர்களே.

7 பேருக்கு வாழ்வு கொடுக்க இறைவன் இந்தச் சிசுவை எடுத்திருக்கிறான்!

அவன் கணக்கை எப்படி அறிவது?
:(

VSK Thursday, April 12, 2007 6:21:00 PM  

ஆமாம் வைசா!

இப்போதுதான் அவளை அனுப்பி விட்டுத் திரும்புகிறேன்.

கூடப் படிக்கும் மாணவ மாணவியரின் அழுகை நெஞ்சை உலுக்கியது.

நமக்கே இப்படியென்றால், பெற்றவர்க்கு....????????
:((

Murali Venkatraman Thursday, April 12, 2007 8:41:00 PM  

manasu ganaththup pOy vittadhu andhak kuzandhaiyin pugaippadam paarththu.

let her soul rest in peace.

Kannabiran, Ravi Shankar (KRS) Thursday, April 12, 2007 8:51:00 PM  

//7 பேருக்கு வாழ்வு கொடுக்க இறைவன் இந்தச் சிசுவை எடுத்திருக்கிறான்!//

வள்ளல்கள் ஏழு பேர் கூடத் தனித்தனியாகத் தான் கொடுத்தார்கள்!
ஆனால் இந்த வள்ளல் குழந்தை அனுஷா - ஒரே நேரத்தில் எழுவர்க்கு வாழ்வு தர - இப்படியா? அய்யகோ!

அந்தக் குழந்தையின் கை எழுத்தை, மெய்பித்துக் காட்டிய அவள் பெற்றோரின் நல்ல உள்ளத்துக்கேனும், நீ கட்டாயம் போய், "வர வேண்டும்" கண்ணே!

Anonymous,  Thursday, April 12, 2007 10:19:00 PM  

I could not even complete my reading of your post. May God bless all.

கோவி.கண்ணன் Thursday, April 12, 2007 10:29:00 PM  

வி.எஸ்கே ஐயா,

மூன்று ப்ளாக்குகளில் அனுஷாவைப் பற்றிக் குறிப்பிட்டு இருப்பதைப் பார்க்கும் போது உங்களை தாக்கிய இந்த சோகம் புரிகிறது.

சொந்த அண்ணனின் இழப்பைவிட இந்த இழப்பு உங்களுக்கு பலமடங்கு சோகத்தைத் தந்ததாக அறிய முடிகிறது. :(

அவள் இறக்கவில்லை ... ஒவ்வொரு நொடியிலும் உயிர்துடிப்பாக ... அவள் நல் இதயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது !

செல்வநாயகி Friday, April 13, 2007 4:45:00 AM  

ஆழ்ந்த வருத்தங்கள்.

உண்மைத்தமிழன் Friday, April 13, 2007 7:20:00 AM  

மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை உணர்த்தியிருக்கிறார்கள் அவளது பெற்றோர்கள்.. சோகத்திலும் ஒரு பெருந்தன்மை.. உலகம் இயங்குவது இவர்களைப் போன்றவர்களால்தான்..

ஓகை Friday, April 13, 2007 2:50:00 PM  

உடலால் எழுவர்க்கு உயிர்தந்து தாயுமாகி நின்றாள்.
வாரி வழங்குவதில் நம்மை வானமாக சொன்னாள்
பலராய் வாழ்வைத் தொடரும் பேறினைப் பெற்றாள்
இழந்து வாடும் பெற்றோரை தெய்வமே தேற்றும்.

அன்புத்தோழி Friday, April 13, 2007 3:52:00 PM  

கடவுளுக்கு யாரை மிகவும் பிடிக்குமோ அவரை தான் சீக்கிரம் அழைத்துக் கொள்வார், என்று சொல்லி கொண்டு தான் நாம் தேற்றி கொள்ள வேண்டும். அந்த குழந்தையுடைய பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மற்ற ஜீவன்களை காக்க தன் உயிரையே கொடுத்திருக்கிறாள். அவள் பெற்றோருக்கு நான் தலை வணங்குகிறேன். மறு பிறப்பு எடுத்து அவள் நீண்ட ஆயுள் வாழ்வாளாக.

VSK Friday, April 13, 2007 6:30:00 PM  

வருத்தத்தில் பங்கு கொண்டு
அனுதாபங்களை அள்ளித் தெளித்த
அனானி, செல்வநாயகி, உண்மைத்தமிழன், அன்புத்தொஷி அனைவர்க்கும் எனது நன்றி க்கலந்த வணக்கங்கள்.

கவிதையால் பாராட்டிய ஓகையாருக்கும் நன்றி.

VSK Friday, April 13, 2007 6:34:00 PM  

கோவியாரே!
இந்த நல்ல குழந்தையின், நல்ல பெற்றோர்களின் தியகச் செயல் எல்லாரையும் சென்றடைய வேண்டுமென்றே எல்லாப் பதிவுகளிலும் இதனைப் பதிந்தேன்.

சோகத்தின் அளவு சொல்லி மாளாது.

அண்ணனாரின் சாவு முடிந்த பின்பே சென்றேன்.

ஆனால், இந்தப் பெண்ணிற்கோ..... ஒவ்வொரு நொடியும் கூடவே இருந்தேன்.

புரிதலுக்கு நன்றி.

பத்மா அர்விந்த் Friday, April 13, 2007 8:15:00 PM  

இன்றைக்குத்தான் இந்த பதிவைப் பார்த்தேன். என் ஆழ்ந்த வருத்தங்கள். அனுஷாவின் உறுப்புகள் கொண்ட மற்ற எல்லோரும் நலமுடன் வாழவும் அனுஷாவின் குரலாக இதய துடிப்பாக செயல்படவும் என் பிரார்த்தனைகள்

VSK Friday, April 13, 2007 9:03:00 PM  

இன்று அந்தப் பெற்றோரைச் சந்தித்து வந்தேன்.

நம் பதிவுலகத்திலிருந்து வந்த அனுதாபமடல்களுக்கு நன்றி சொல்லச் சொன்னார்கள்.

அந்தக் குழந்தை என்றும், இன்றும் வாழ்கிறது, பதமா அவர்களே.

அனைவருக்கும் நன்றி.

மங்கை Friday, April 13, 2007 10:23:00 PM  

ஆழ்ந்த அனுதாபங்கள்..பெற்றோருக்கு ஆண்டவன் இதை தாங்கும் சக்தியை கொடுத்து துணை இருக்கட்டும்

SurveySan Friday, April 13, 2007 11:22:00 PM  

மிகவும் துக்கமான செய்தி.

ஆனால், இந்தத் துயரத்திலும், துவளாமல், மற்றவருக்கு உதவும் விதத்தில் (உறுப்பு தானம்) நடந்து கொண்டது மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது.

சிலரின் இந்த மாதிரி பெரிய சங்கடங்கள் காணும்போதுதான், நாமெல்லாம் படும் சின்ன சின்ன கஷ்டங்கள் ஒன்றுமேயில்லை என்பது புலப்படுகிறது.

இறைவனின் வழிகள் விசித்திரமாகத்தான் இருக்கிறது.

ஹ்ம். இறைவன் காக்கட்டும்.

அவர் பெற்றோருக்கும், சகோதரிக்கும், இதையெல்லாம் தாங்கும் வல்லமை கிட்டட்டும்.

அனுஷா, செய்த அளவுக்கு இல்லையென்றாலும், சிறிதளவாவது நாமும், மற்றவருக்கு உதவவேண்டும்.

IF they have formed any trust for her rememberance, please forward the information. We can donate for some good cause through this.

Very sad.

I am equally worried to think about the agony, the driver who caused this is going through now (if he/she is sane).

god bless all!

Anonymous,  Friday, April 13, 2007 11:33:00 PM  

Looks like the bus stop was 'unsafe' and parents were trying to get it fixed.
authorities over looked the issue all these years.

sad that it needs a young kids life, to get things 'fixed'

reminds me of the AnnaNagar tower incident, where a small boy died, which prompted the authorities to fix the issues there.

http://www.highbeam.com/doc/1Y1-105125924.html

VSK Saturday, April 14, 2007 1:28:00 AM  

What you have said is very true, Mr.Anonymous!

For the last 4 years their pleas have fallen in deaf ears!

And a child has lost her life today!:(

It's very sad!

Anonymous,  Saturday, April 14, 2007 1:36:00 AM  

ohh no..no words...:( why lyk dis? :(

VSK Saturday, April 14, 2007 1:36:00 AM  

நன்றி மங்கை, சர்வேசன் அவர்களே!

ஆனல், இதில் அந்தக் காரோட்டியின் மீது தவறேதும் இல்லை எனவே சொல்லுகிறார்கள்!

வேகக்கட்டுப்பாட்டுக்கும் கீழேதான் அவர் ஓட்டியிருக்கிறார்.

குழந்தைதான் வலதுபுறம் வந்த பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் இடதுபுறம் கவனிக்கவில்லையாம்.

என்னமோ நடக்க வேண்டியது நடந்துவிட்டது.

சம்பந்தப்பட்ட அனைவருமே இடிந்து போயிருக்கிறார்கள்!

தெரியாமல் ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டேனே என அந்தக் காரோட்டி புலம்புவதும் பத்திரிக்கையில் வந்தது.

ஏதேனும் அறக்கட்டளை அமைக்கப் போகிறார்களா எனக் கேட்டுச் சொல்லுகிறேன்.

நன்றி.

VSK Saturday, April 14, 2007 1:48:00 AM  

What to say Miss.Thuuyaa!

Words can never explain this tragedy!

வெற்றி Sunday, April 15, 2007 1:23:00 AM  

இந்தப் பதிவை நீங்கள் போட்ட அன்றே அதாவது சில தினங்களுக்கு முன்னரே படித்திருந்தாலும் என்ன எழுதுவது என்று தெரியாததனால் ஒன்றும் எழுதாமல் சென்று விட்டேன்.

மரணம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாதது என்றாலும், இந்த பிஞ்சு வயதில் காலன் உயிரைப் பறிக்கும் போது வருத்தப்படாமல் இருக்க முடியாது.

இக் குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Santhosh Monday, April 16, 2007 12:35:00 AM  

கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு எஸ்.கே அதுவும் 12 வயதில் பாவம் பச்ச புள்ள :(. அனுஷாவோட ஆன்மா சாந்திஅடையா பிராத்தனைகள். ஆறுதல் அடைய கூடிய நிலைமையில் அந்த பிஞ்சுக்குழந்தையின் பெற்றோர் இருக்க மாட்டாங்க.
//7 பேர் இன்று அவளருளால் உயிர் வாழ்கிறார்கள்.//
இழப்பிலும் இவ்ளோ பேரை வாழ வெச்சி இருக்கு அனுஷா. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை எஸ்.கே. கண்ணீர் தான் மிஞ்சுகிறது.

Geetha Sambasivam Monday, April 16, 2007 7:41:00 AM  

alaready read about it in muththamizh. even though after seeing the girl's photo, I did not know what to say. Our hearties condolenses to the parents. Only time will help them to recover from this. :(((((((((((((((((((((((((

VSK Monday, April 16, 2007 11:24:00 AM  

ஆறுதல் மொழிக்கு அன்பான நன்றி, திரு. வெற்றி.

கூடவே அந்தப் பெண் வாசிக்கும் புல்லாங்குழல் இசையையும் கேட்டிர்களா, தலைவி?

VSK Monday, April 16, 2007 5:41:00 PM  

நீங்க சொல்றது ரொம்பச் சரிதான் திரு. சந்தோஷ்.

ஆறுதல் சொல்லித் தேற்ற முடியாது அவர்களை.

நம் பிரார்த்தனைகள்தான் அவர்களுக்குத் தேவையான அமைதியைக் கொடுக்க முடியும்.

நன்றி.

காட்டாறு Monday, April 16, 2007 7:07:00 PM  

கண்கள் கலங்கிவிட்டன. அப்பெண்ணின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.

மகளைப் பிரிந்த கணத்திலும், இன்னொருவர் வாழ இதய தானம் செய்ய முன்வந்த பெற்றோரின் உயர்ந்த உள்ளத்திற்கு... நா தழுதழுக்கிறது.

பங்காளி... Monday, April 16, 2007 9:39:00 PM  

வலியும், வெறுமையும் மனதை வேதனையாய் பிசைய...எனக்கே ஆறுதல் தேவைப்படுகிறது...

திரும்ப வருகிறேன்.....

சீமாச்சு.. Saturday, April 28, 2007 11:51:00 AM  

ரொம்ப பெரிய இழப்பு VSK !!

கண்ணெல்லாம் கண்ணீர்...

எவ்வளவு நல்லதொரு பிராயம்.. எவ்வளவு நல்ல சிந்தனை அந்தக் குழந்தைக்கு.... இந்தக் குழந்தை வளர்ந்து ஆளாகியிருந்தால்.. அவளது சிந்தனை எவ்வளவு பெரிய விருட்சமாயிருக்கும்..

எவ்வளவு நன்மைகள் பிற்காலத்தில் அவள் செய்திருக்கக்கூடும் !!

யார் யாரோ இந்த உலகத்தில் இருக்க்த் தகுதியில்லாதவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இந்தக் குழந்தை என்ன பாவம் செய்த்து.. இருந்திருக்கக்கூடாதா?


Anusha you are GREAT !!!

யாரிடம் உன் இதயம் சேர்ந்ததோ... உன் எண்ணங்களும்.. நற்சிந்தனைகளும் அவர்களிட்ம் பெரியதாக வளர்ந்து உன் எண்ணம் முடிக்கும் என்று நம்புகிறேன் கண்ணே...

பத்திரமாகச் சென்று ... மறுபடியும் வா !!!!!

அன்புடன்,
சீமாச்சு...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP