"என்" வலது கை
"என்" வலது கை
அயர்ந்து உறங்கிய நடுநிசியில்
அடி ஒன்று விழுந்தது போல் உணர்வில்
சட்டென்று கண் விழித்தேன்.
கனமாக ஏதோ ஒன்று எனை அழுத்த
உறக்கம் கலைந்த சினத்துடன் பார்த்தால்
என்னவளின் வலது கை என் மீது!
எரிச்சலுடன் அதை விலக்க முனைகையில்
கட்டையான கையைத் தள்ளுகையில்
விலக மறுத்து இன்னும் அழுத்தியது!
என் மனதில் ஏதோ நினைவுகள்!.......
கணநேரச் சலனத்தில் ஆவலுடன் பற்றிய கை
இனி என்றும் விடமாட்டேன் என வாக்களித்த கை
மணம் புரிந்தபோது மனமாரப் பிடித்த கை
தினமும் காலையில் தலை கோதி எனை எழுப்பிய கை
சனிக்கிழமை எனை அமர்த்தி எண்ணை தேய்த்த கை
வட்டிலிலே சோறெடுத்து ஆசையுடன் பரிமாறிய கை
கட்டிலிலே என்னோடு சாகசங்கள் பல செய்த கை
வீட்டினிலும் வெளியினிலும் என்னுடன் இணைந்த கை
எப்போதும் பாசத்துடன் எனை அணைத்த கை
அவ்வப்போது கோபத்துடன் எனை நோக்கி சுட்டிய கை
எப்போதாவது என்கை ஓங்கிட அதைத் தடுக்க முனைந்த கை
ஆதரவாய்ப் பலருக்கும் பிரசவம் பார்த்த கை
ஆசையாய் அனைவருக்கும் அன்னமிட்ட கை
விபத்தொன்றில் அடிபட்டு, நரம்பொன்று அறுந்ததால்
இன்று...வலுவிழந்து, உணர்விழந்து, செயலிழந்து
ஒன்றுக்கும் உதவாமல் போன வலது கை.
சற்றேனும் தளராமல், குறையென்று கருதாமல்
பிறர் உதவி நாடாமல், தன் செயலைத் தான் செய்து
எதிர் நீச்சல் போட்டுவரும் அவளது வலது கை!
அடியென உணர்ந்தது இனித்தது
ஆதரவாய்ப் பற்றினேன்
ஆசையாய்த் தடவினேன்
என்னவளின் வலது கையை!
........அப்படியே உறங்கிப் போனேன்!
50 பின்னூட்டங்கள்:
எஸ்.கே சார்,
கவிதைதானே இது.
ரொம்ப உருக்கமா இருக்கிறது.
SK ஐயா,
ஏதோ உங்களின் துணைவியுடனான மகிழ்ச்சியான தருணங்களை கவிதையாக அழகு தமிழில் சொல்கிறீர்கள் என நினைத்து இரசித்துப் படித்துக் கொண்டு போகையில்,
"விபத்தொன்றில் அடிபட்டு, நரம்பொன்று அறுந்ததால்
இன்று...வலுவிழந்து, உணர்விழந்து, செயலிழந்து
ஒன்றுக்கும் உதவாமல் போன வலது கை."
இந்த வரிகளைப் படித்ததும் எனக்கு ஒரு கணம் தலையே சுற்றியது. உண்மையில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஐயா.
வார்த்தைகள் வர மறுக்கின்றன. எங்கள் ஊரில் முதியவர்கள் அடிக்கடி சொல்வது யார், நல்ல காரியங்கள் அதிகம் செய்கிறர்களோ, கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர்களோ அவர்களைத் தான் கடவுள் அதிகம் சோதிப்பான் என்று. இப்போது உங்களின் கவியைப் படித்த பின் அந்த வாய்க்கியங்கள் தான் உடன் நினைவுக்கு வந்தது.
உங்கள் துணைவியார் பூரண குணம் எய்த முருகப்பெருமானை வணங்கி நிற்கிறேன்.
மிகுதி யாவும் நான் உங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.
பணிவன்புடன்
வெற்றி
ஆதரவான உங்கள் அன்பு மடல் எனை நெகிழ வைத்தது.
தங்கள் மேலான அன்புக்கு மிக்க நன்றி, திரு.வெற்றி!
முருகனருள் முன்னின்று கொண்டுதான் இருக்கிறது!
என்னங்க உண்மையாவா இப்படி ஆயிருச்சு? மனசே பதைக்குதே.
கை அதுவும் வலக்கை இப்படியாச்சுன்னா................(-:
SK,
படித்து முடிக்கையில், மனம் கனமானது.
பிரசவங்கள் பல பார்த்த கை இப்படி ஆனது வருத்தம்தான்.
//எப்போதாவது என் கை ஓங்கிட அதைத் தடுக்க முனைந்த கை//
இது சிறு நெருடலை தந்தது என்பதையும் இங்கு பதிகிறேன்.
சர்வே-சன்.
எஸ்.கே.சார்,
கவிதைனு நினைத்துவிட்டேனே.
கதையே கவிதை ஆச்சா.
உங்களிடமிருந்து பதிவு ஒன்றும் காணோமே என்று யோசித்தேன்.
என்ன சொல்வது.
முருகன் உங்கள் மனைவி கையாக மாறி அருள்செய்யட்டும்.
அவன் பாதம் உங்கள் மனத்தில் தங்கி பலம் கொடுக்கட்டும்.
மனம் பதைத்துப் போகிறது. கவனமாக இருங்கள்.
உங்க பசங்க யாராவது பக்கத்தில் இருக்கிறார்களா?
காக்க காக்க கதிர்வேல் காக்க.
கவிதைக்கும் எனக்கும் காத தூரம் என்றாலும்
"அழுத்துகிறது" இது என்னை.
இருக்கும் போது அதன் அருமையே என்றும் தெரியாது.......!
இல்லாத போது அதனையே நினைத்திருபோம்......!
:(((
தம்பதிகளுக்கு 4 கைகள் ஆயிற்றே...
ஒன்றை ஒன்று ஆதராவாக பற்றி ... விலகமால் திளைக்கட்டும் !
அனுபவம்/நிகழ்வுகள்" அவை வல்லியம்மா!
பத்து ஆண்டு நினைவுகளைச் சொல்ல வேண்டுமென ஒரு பதினைந்து நாள் உறுத்தல்!
இன்று எழுதி விட்டேன்!
நன்றி!
ரொம்ப நன்றி, 'துளசி கோபால்'.
ஆனால், இதை வைத்துக் கொண்டே அவர் சமாளிக்கும் திறன் என்னை வியக்க வைக்கிறது!
எஸ்கே..என்ன இப்படிநெகிழவச்சிடீங்க? தாங்கல மனசு.எதிர்பாராத சம்பவங்கள் கொண்டதுதானா எப்போதுமே வாழ்க்கை? கந்தன் கண்டுகொண்டு இழந்ததை மீட்டுத் தருவான், கவலைபடாதீங்க..
ஷைலஜா
உங்களுக்கு எப்படி அது புரிந்ததோ எனக்குத் தெரியவில்லை, சர்வே-சன்!
ஒரு வரிக்குள் அடைக்க நினத்து விரித்துச் சொல்லாமல் போனதால் ஏற்பட்ட குழப்பம்!
மனைவியை அடிக்கும் ரகம் அல்ல நான்.
ஆனால், குழந்தைகளை கண்டிக்க நேரிடும் சமயங்களில் அவரது கை வந்து தடுக்கும் என்பதே நான் சொல்ல வந்தது!
!
அந்தக் கதிர்வேலன் தான் இப்போதும்.....எப்போதும் கூட!
உங்கள் அன்பெல்லாமிருக்கையில் அவன் கருணைக்கு குறையேது, வல்லியம்மா!
தைப்பூச வாழ்த்துகள்!
என்னை 'அழுத்தியது', உங்களை வேறு விதத்தில் அழூத்தியதா, குமார்!
அன்புக்கு நன்றி!
இருக்கும் போது 'அதன்' அருமை தெரிந்ததால் தான் இப்படி எல்லாம் நினைவுகள் வரும், கோவியாரே!
உங்கள் அனுபவம் வேறு மாதிரியோ?
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை, ஷைலஜா!
உங்களை எல்லாம் வருத்தப் பட வைத்து விட்டேனோ என் இப்போது உணருகிறேன்.
இதை இயல்பாய் எடுத்துக்க் கொண்டு எங்கள் வாழ்க்கை இனிதாகத்தான் நடக்கிறது!
நன்றி.
//ஆனால், குழந்தைகளை கண்டிக்க நேரிடும் சமயங்களில் அவரது கை வந்து தடுக்கும் என்பதே நான் சொல்ல வந்தது//
ஓ, இப்ப புரீது. விளக்கத்துக்கு நன்றி.
முடிஞ்சா, குழப்பம் தராத வகையில் மாற்றி எழுதலாம். (எனக்கு மட்டும் தான் குழப்பம் வந்திருந்தா, கண்டுக்க வேணாம். வில்லங்கமாவே யோசிச்சு பழக்கமாயிடுச்சோ எனக்கு?)
//முடிஞ்சா, குழப்பம் தராத வகையில் மாற்றி எழுதலாம்.//
அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், சர்வே-சன்!
அப்பத்தானே உங்களைப் போல வித்தியாசமா சிந்திக்கறவங்க வந்து சொல்லமுடியும்!
ஸ்கே,
மிக வருத்தமான விஷயத்தை மனத்தை தொடும் விதம் எழுதியுள்ளீர்கள்...
தங்களுக்கும் தங்களது துணைவியாருக்கும் இறைவன் அருள் நிலைக்கட்டும்.
உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நிச்சயம் முருகன் செவி மடுப்பான்.
மிக்க நன்றி, மதுரையம்பதியாரே!
நெஞ்சு ஒரு நிமிடம் பாரமானது.....
இதை எழுதியதால் உங்கள் நெஞ்சு சற்று லேசானது என்று நீங்கள் சொல்வீர்களானால் அது சிறு மகிழ்ச்சி...
ஒரு நெடிய வாழ்க்கைப்பாதையை கவியில் கொண்டுவருவது கடினம் தான், அதை சிறப்பாக செய்தது நீங்கள்..
பாரம் எங்கள் இதயங்களுக்கு...!!!
அன்பான வரிகளுக்கு என் நன்றி, செந்தழலாரே!
நெஞ்சு லேசானது எனச் சொல்வதை விட, சொற்களில் நான் க[கா]ட்ட நினைத்த, முயன்ற ஒரு 'குட்டி தாஜ்மகால்' எனச் சொல்லலாம்!
///நெஞ்சு லேசானது எனச் சொல்வதை விட, சொற்களில் நான் க[கா]ட்ட நினைத்த, முயன்ற ஒரு 'குட்டி தாஜ்மகால்' எனச் சொல்லலாம்!////
கவித்துவமானது இந்த வரிகள்...இவ்வளவு அன்பா ?
ஆமாம், நான் ஏன் கண் கலங்குகிறேன்..ஒன்னுமே புரியல...
எஸ்.கே அய்யா! முதல் ஒன்பது வரிகளுக்குப் பிறகு...படித்து முடித்தவுடன் நெஞ்சு் கனத்து விட்டது!
நல்லவர்களுககெல்லாம் ஏன் இந்த சோதனை?
குமரகுருபரருக்குக் காசியில் வாகனமும் ஆசனமும் கொடுத்தவன், உங்களுக்கு என்றும் அந்த நான்காவது கையாக வருவான்!
//இதை இயல்பாய் எடுத்துக்க் கொண்டு எங்கள் வாழ்க்கை இனிதாகத்தான் நடக்கிறது!//
அதுவும் அவன் அருள்தான் அய்யா!
//ஒன்னுமே புரியல...//
எனக்கு அமைந்தது போல் ஒரு சரியான வாழ்க்கை துணை நலம் உங்களுக்கும் அமையும். அப்போது புரியும் இது!
:))
வாழ்த்துகள், செந்தழலாரே!
எனை 'நல்லவன்' எனச் சொன்னதற்கு மிக்க நன்றி ஆசானே!
நான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் இல்லை; இதை ஒரு 'சோதனை'யாகவும் கருதவில்லை! :))
இந்த வாரம் எங்களது மணநாள் ஆண்டு தினம் வருகிறது.
அதை ஒட்டி இதனைப் பதிந்தேன்.
உங்கள் அன்பு மனத்திற்கும், ஆறுதல் மொழிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை -:((( - இது உங்கள் மனைவியின் கைக்காக.
:) - இது உள்ளத்து உணர்ச்சிகளை அற்புதமாக கவிபடைத்த உங்களின் கைக்காக..
தைத் திங்கள் திருநாள் திருமணம் நடந்ததா?
அப்போது இனி வளரும் மணம்.
குறையே வராது.
வாழ்த்துக்களைப் பிடியுங்கள்.
இந்த ஆதூரமும்,ஆதரிசனமும் எப்போதும் இனித்து இருக்க வேண்டும்.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதுதான் உங்களுக்கு கை வந்த கலை ஆயிற்றே, பொன்ஸ்!
மிக்க நன்றி!
உங்க 'கை' கூட என்னமோ ஆச்சுன்னு கோவியார் ஒரு பதிவிட்டிருந்தாரே!
[அவரை ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்சேன்; அதுக்குள்ளே பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டதுன்னு சொல்லிட்டாரு!:(]
இப்போது எல்லாம் சுகம்தானே!
:))
//வாழ்த்துக்களைப் பிடியுங்கள்.//
பிடித்து பத்திரமாக வைத்துக் கொண்டேன்!
இந்த வாழ்த்துகள்தாம் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, வல்லியம்மா!
மிக்க நன்றி..... மீண்டும்.
எஸ்.கே.
பதிவை ஒரு முறை காலையில் படித்தேன். கண் கலங்கிப் பேசாமல் சென்று விட்டேன். இப்போது இன்னொரு முறை படித்தேன். என் வலத் தோள் பட்டையில் கொஞ்சம் வலி மூன்று நாட்களாக இருக்கின்றது. அந்த வலி இந்த வலியின் முன் ஒன்றுமில்லை என்று உணர்ந்தேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். - இப்படி சொல்லத் தான் நினைத்தேன். அப்புறம் இறைவனையே வாழ்த்தும் நாம் வயதில் மூத்தவரான உங்களை வாழ்த்தலாகாதா என்று தோன்றியது.
அண்ணிக்கும் உங்களுக்கும் அடியேனின் வணக்கங்களுடன் இணைந்த வாழ்த்துகள். இன்னுமோர் நூற்றாண்டு இரும்.
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய" வள்ளலாரின் உள்ளம் உங்கள் அனைவரின் எழுத்துகளிலும் கண்டு நெகிழ்ந்தேன், குமரன்!
எவரையும் வருந்தச் செய்யும் நோக்குடன் இதனை நான் எழுதவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்.
ஆனாலும், இது உங்களை எல்லாம் கலங்கச் செய்தது என்னும் போது, அதன் கனிவுக்கும், பரிவுக்கும் தலை வணங்குகிறேன்.
வாழ்த்துக்கு நன்றி.
நண்பரே, நலமா?
ஆனால் உங்கள் மடலப் படித்தபின் நான் கொஞ்சம் நலமிழந்தேன்.
வெகுநாட்களுக்கு முன் படித்த ஒரு சித்தர் பாடல் நினைவுக்கு வந்தது. நினைவிலிருந்து எழுதுகிறேன். அதனால் பாடல் வரிகளில் பிழை இருக்கலாம்.
அரும்பு கோணிடல் சரத்தில் குறையாமோ?
கரும்பு கோணிடில் இனிப்பில் குறையுமோ?
இரும்பு கோணிடில் ஆலையில் நிமிர்ந்திடும்:
நரம்பு கோணிடில் நாமென்ன செய்யலாம்?
//நரம்பு கோணிடில் நாமென்ன செய்யலாம்?//
நரம்பு கோணிடினும்
திடமோடு வாழலாம்-மனத்
திடமோடு வாழலாம்.
இது என் மனைவியிடம் நான் கற்ற பாடம்!
நன்றி, ஓகையாரே!
ஓகை ஐயாவின் பாடலைப் பார்த்ததும் எனக்கு உடன் நினைவு வந்த கவியரசர் பாடலொன்று:
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
...
ஐயா,
இதை படித்ததும் என்னையறியாமலே கண்கள் கலங்கியது... :(
காதல் மாதத்தில் உங்களின் அன்பு மனையாள் மீது அழகான கவி படித்து இருக்கீங்க.... :)
கவிவரிகளை தட்டச்சிட்ட உங்கள் இருகைகள் பத்துவிரல்களுக்கும் நன்றி :)
பொருத்தமான பாடல்தான்,வெற்றி.
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
கூட இந்த சூழலுக்கு பொருந்தும்!!
:))
என்னவெல்லாம் சொல்றீங்க, ராம்!
தங்கள் அன்புக்கு நான் அடிமை!
மண நாளிற்காக அந்த கரத்திற்குச் சொல்லும் நன்றியாய் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்!
படித்தபோது எங்கள் மனசும் கனத்துப் போய்விட்டது!
எப்போதும் உங்களுடன் முருகனருள் முன்னிற்கும்!
மண நாள் வாழ்த்துக்கள்!
கரத்திற்கு நன்றியா?
நன்றிக்குக் கரமா?
இரண்டும் ஒன்றுதான் சிபியாரே!
வாழ்த்துக்கு நன்றி!
:))
SK அய்யா,
மிகுந்த வருத்தமளிக்கிறது!!
தங்களுக்கும் அவர்களுக்கும் மன வலிமை கிடைக்கட்டும்..
நிச்சயம் தைரியமாக எதிர்கொள்வீர்கள்! அது தொடர வாழ்த்துக்கள்!!
ஆறுதலான மொழிக்கும், நம்பிக்கை கலந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி, சிபா!
இயைந்த உள்ளங்கள், இணைந்து வாழுங்கால் ஏற்படும் பேரிடிகளும், சிறுகடுகாய் மாறி காணாமல் ஆகும் எஸ்கே ஐயா. மலரும் நினைவுகள் உவகை தருவதோடு, சில நேரங்களில் கண்ணீரின் கரிப்பையும் தரும். இன்பமும் துன்பமும் கடல் அலை போல் மாறி மாறி வரும். அதுதானே வாழ்க்கை. அலைகள் எவ்வளவு அடித்தாலும் ஆழ்கடல் அமைதியாய் இருப்பதைப்போல் நல்ல மனிதர்களான உங்கள் வாழ்க்கையும் அமைதியுடனும் ஆனந்த குதூகலத்துடனும் கழியும் திருமதி & திரு. எஸ்கே ஐயா.
நல்ல உள்ளங்களை இறைவன் சோதிப்பது, சோதனையான காலத்திலும், அமைதியுடனும் இறை நினைவுகளுடனும் இருக்கிறார்களா அல்லது இறையையும், காலத்தையும் நிந்தித்து தட்டழிகிறார்களா என சோதித்தறியத்தான். சோதனைகளில் வெல்வீர்கள். வெல்ல வாழ்த்துக்கள் ஐயா. அன்புடன்
சுல்தான்.
நிறைவான பின்னூட்டத்தின் மூலம் நெகிழவைக்கும் அன்பைக் காட்டிய தங்கள் நல்ல உள்ளத்தை சில மாதங்களுக்கு முன் கண்ட அதே நினைவொடு மீண்டும் உணர வைத்து, வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி, நண்பர் சுல்தான் அவர்களே!
உங்கள் மனைவியின் கை விரைவில் குணமடையட்டும்!
மணநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி, 'செல்வநாயகி'.
SK ஐயா
அலுவல் பளு அழுந்த
மீண்டு, மீண்டும் ஆத்திக வலைப்பூ வந்தால், தங்கள் கவி கண்டு சற்றே கலக்கம்.
ஆனால் பின்னூட்டத்தில் நீங்கள் "இதை இயல்பாய் எடுத்துக்க் கொண்டு எங்கள் வாழ்க்கை இனிதாகத்தான் நடக்கிறது!" என்று சொல்லியதைப் படித்த பின் ஒரு நிறைவு!
"கைத்தலம்" பற்றக் கனாக் கண்டேன் தோழீ என்று ஆண்டாள் பாடினாள்!
"கைப்பிடித்து" என்று தான் இந்த உறவைச் சொல்லுவார்கள்!
அதன் தாத்பர்யம் இந்தப் பதிவு படித்த பின் இன்னும் ஆழமாகப் பதிகிறது!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க
காக்க காக்க கனகவேல் காக்க
மண நாள் வாழ்த்துக்கள் SK ஐயா!
மண நாள் பரிசுக் கவி மிக அருமை!
அம்மாவுக்கும் என் வாழ்த்தும் வணக்கமும்!
சில நாட்களுக்கு முன் தான் உங்களை நினைத்தேன்..
'என்னடா, தை பிறந்து ஆளைக் காணோமே' என்று!
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவது போல, முகிழ்வாக மொழிந்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கு நன்றி.
அடுத்த பதிவு எப்போ?
சுப்ரபாதம் பாதியில் நிற்கிறதே!
:)
ஒல்லும் இருள் விரட்ட வெல்லும் ஆதவனே விரைந்து வா!
SK ஐயா,
மிகுந்த வருத்தமளிக்கிறது.தங்களின் துணைவியார் விரைவில் நலம்பெற இறைவன் அருள் புரியட்டும்.
வேண்டியமைக்கு நன்றி, திரு.மணிகண்டன்!
Post a Comment