Tuesday, April 17, 2007

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"--11

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"-- 11

2007 பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது!

திருவெம்பாவை எழுதத் தொடங்கியபின் , மயிலை மன்னாரைப் போய்ப் பார்க்கவேயில்லை என்ற எண்ணம் திடீரென மனதில் தோன்றி உறுத்தியது.

அதற்குக் காரணமும் இருந்தது.[??]

எப்படிப் போய் அவனைப் பார்ப்பது என்ற அச்சம் இருந்தாலும், அவனைப் பார்க்காமல் எப்படி இருப்பது என்ற ஆவல் மிகவும் உந்தவே, அடுத்த நிமிடம் மயிலாப்பூர் மாடவீதியில் நின்றேன்!

சொல்லாமல், கொள்ளாமல் வந்தாலும் கொஞ்ச நேரம் குளத்தைச் சுற்றி வந்தால் எப்படியும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில், கால் போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

எங்கும் காணாமல் மனம் நொந்து, இன்னொரு தடவை சுற்றலாம் என நினைத்து, ஒரு 2 ரூபாய்க்கு சூடான வறுத்த வேர்க்கடலை வாங்கி, அதைக் கொறித்தவாறே நடந்தவனின் முதுகில் பளாரென ஒரு அடி விழுந்தது!

"இன்னாப்பா! ஆரைத் தேடிக்கினு இங்கே சுத்தறே? நீதான் இப்பெல்லாம் நம்மளையெல்லாம் பாக்க வரமாட்டியே? இன்னா வோணும்?" என்று நக்கலாகக் கேட்டபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!

"இல்லே மன்னார்! உன்னைப் பார்த்து நாளாகி விட்டதே என்றுதான் சுற்றிக் கொண்டிருந்தேன்" என்று அசடு வழிந்தேன் நான்!

"சரி! இன்னா சமாச்சாரம்? இப்ப எதுக்கு என்னியத் தேடிக்கிணு வந்தே? சொல்லு!" என்று அன்பாகக் கேட்டான் என் நண்பன்.

"திருக்குறள் அதிகாரம் எழுதி நாளாச்சு. காமத்துப் பாலில் இருந்து ஒரு அதிகாரம் நீ சொல்லி நான் எழுதணும்னு ஆசை! அதான்..." என்று தயக்கத்துடன் இழுத்தேன்!

"ப்பூ! இத்தானா! இதுக்கா இப்படி பம்மறே! மொதமொதலா காமத்துப்பால் எளுதப்போறேன்ற! அதுல இன்னால்லாமோ ஸொல்லிருக்காரு அய்யன்! பொண்ணு தனியா பொலம்புது, காதலன் தவிக்கறான்! ரெண்டு பேருக்கும் இன்னென்னமோ அட்வைஸ் கொடுக்கறாரு. ஸரி! நீ கேட்டுட்டே! ஒரு காதலன் காதலி ரெண்டு பேருமே ஸொல்ற மாரி ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு. அத்தைச் சொல்றேன். எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்!


"புணர்ச்சி விதும்பல்னா, காதலின்பத்தைச் சொல்றதுன்னு அர்த்தம். மொதல்ல காதலி ஒரு 8 பாட்டு சொல்றா. பொறவால, காதலன் கடைசி 2 பாட்டு." என்றவாறு தொடங்கினான்.

இனி வருவது குறளும், அவன் விளக்கமும்!

"அதிகாரம் 129." "புணர்ச்சி விதும்பல்"

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு." [1281]

"இப்ப ஒரு பாட்டில் தென்னங்கள்ளு... அதுக்கு நீ கேரளாவுக்குப் போவணும்!... ஒனக்குக் கிடைக்குது. அத்தப் பாக்கற! வெள்ளையா இருக்கு. மூந்து பாக்கற! ஒரு கப்பு அடிக்குது! இத்தயா குடிக்கப்போறோம்னு நினைக்கறே! மூக்கைப் பிடிச்சுகிட்டு கப்பு கப்புன்னு அடிக்கறே! வவுத்தைப் பொறட்டுது மொதல்ல. கொஞ்சம் ஊறுகாயை எடுத்து நாக்குல தடவி, அந்த டேஸ்டை மாத்தறே! காவ் காவுன்னு ரெண்டு ஏப்பம் வுடறே! கொஞ்ச நேரம் களிச்சு , .... அப்பிடியே மெதக்குறே! ஒலகமே நல்லாத் தெரியுது ஒனக்கு! ரொம்ப சந்தோசமா இருக்கே!

ஆனா, இதெல்லாம் எப்ப வருது? எல்லாம் உள்ளே போனதுக்கு அப்புறமாத்தான்.
ஆனா, காதல்ங்கறது அப்பிடி இல்லை! ஆளை நெனைச்சவுடனேயே, ஒரு கிக் வருது! பார்த்தவுடனேயே ஒரு சந்தோஷம் வருது! இதான் காதலோட மகிமை! கள்ளை விட சிறந்தது காதல்!"


"தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்." [1282]


"எனக்கு அவரை நினைச்சாலே இம்மாம் அளவுக்கு காதல் பொங்குது மனசுல. ஒரு பனைமரம் அளவுக்கு உசருது என் உள்ளத்துல. இது இப்படியே இருக்கணும்னா, நான் துளிக்கூட அவரைப் பத்தி தப்பா நினைக்கக் கூடாது! 'அவரு என்னிய இன்னும் வந்து பாக்கலியே, நேத்துப் பார்த்த போது எங்கிட்ட ராங்கு பண்ணினாரே'ன்னு தோண ஆரம்பிச்சு அவரு மேல கோவம் வர ஆரம்பிச்சுதுன்னா, அவ்ளோதன், 'புஸ்'ஸுன்னு அல்லாம் எறங்கிடும்.அவரு பத்தின நல்ல நினைப்ப அப்பிடியே உசரமா வெச்சுக்கணும்!"

"பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல் கண்." [1283]

"என்னைக் கட்டிக்கிட்டவரு[கொண்கன்] என்னை மதிக்காம, அவரு இன்னா நினைக்கறாரோ, அப்பிடியே அவர் மனசுபோல செஞ்சாலும், அவரைப் பார்க்காம இருக்க இந்தப் பாளும் பொம்பளை சென்மத்தால இருக்க முடியலியே!இந்தக் கண்ணு அவரையே தேடுது!"

"ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு." [1284]


"அவர்கூட சண்டை போடணும்னுதான் மனசுல நினைச்சுகிட்டு அவரைப் பார்க்கப் போனேன். ஆனா, பாவிமவ, அவரைப் பார்த்தவொடனியே அல்லாம் மறந்து அவரைக் கட்டித் தளுவணும்னு மனசு கிடந்து துடிக்குது! சே இன்னா பொளைப்பு இது!"

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து." [1285]

"கண்ணுக்கு மை தீட்டலாம்னு ஒரு குச்சியை எடுத்து, மைதடவி, கண்ணு மேலே தீட்ட ஆரம்பிச்சேன். கண்ணாடி முன்னே நின்னு மை தடவும் போது,கண்ணு மேலியே என் கண்ணு நின்னுது. கோலை.. குச்சியைப்... பார்க்கவே இல்லை! அதே போல, அவரைத் திட்டணும்னு பலதை நினைச்சுகிட்டு இருந்தாலும், அவரு.. அதாங்க என்னைக் கொண்டவரு.. அவரைத்தான் "கொண்கன்"னு ஐயன் ஸொல்றாரு... எதிர்க்க வந்து நிக்கும் போது அவரைத் தவிர, வேற் எதுவும் நெனப்புல வரவே மாட்டேங்குது! குத்தம்ங்க்ற 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!"

"காணுங்கால் காணேன் தவறாய் காணாக்கால்
காணேன் தவறல் லவை." [1286]

"அந்த மனுஷன் என்னெதிர்ல நிக்கறப்ப, அவரோட குத்தம் எதுவுமே மனசுல வர மாட்டேங்குது1 அவர் இல்லாதப்ப, அவரு பண்ணின தப்பில்லாத எதுவுமே நெனப்புக்கு வர மாட்டேங்குது! இது எப்படின்னு எனக்குப் புரியவே இல்லை!"

"உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து." [1287]

"இப்ப தொபுக்கடீர்னு போய் ஒரு ஓடற ஆத்துல குதிக்கறோம்! அது இன்னா பண்ணும்? நம்பளை அப்பிடியே இளுத்துகிணு போவும்! அது தெரிஞ்சும் அதுல குதிக்கிறோம்! அது போல, அவரோட சண்டை போட்டாக் கூட, அது நிலைக்காது, நான் அவரோட சமாதானமாயி கூடவே போயிடுவேன்னு தெரிஞ்சும், சண்டை போடற மாரி நடிக்கறேனே?"

"இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே உள்வநின் மார்பு." [1288]


மொதப் பாட்டுல.... குறள்ல... கள்ளைச் சொல்லி ஆரம்பிச்சாங்க இந்தத் தலைவி.... [கீதாம்மாவைச் சொல்லலை]!! இப்ப கடைசிப் பாட்டிலியும் அதே கள்ளை உதாரணம் ஸொல்லி முடிக்கறாங்க!
"ஏ கள்ளப்பயலே! கள்ளைக் குடிச்சா, அதால கெட்ட பேர்தான் வரும். இருந்தாலும் திரும்பவும் அதைக் குடிக்கணும்னு ஆசைதான் வருது. அதே போல, உன்கூட சேர்றது எனக்குக் கெட்டதுதான்னாலும், எம்மனசு கிடந்து உன்னோட மார்பைத் தளுவறதுக்கே திரும்பத் திரும்ப ஓடுது! இத்த் இன்னா பண்ணாத் தாவலை!"


இத்தைக் கேட்டுக்கினே நம்ம ஆளு வரான்! ஒரு ரெண்டு பாட்டு தலைவன் ஸொல்றான்!

"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்." [1289]

"காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கும். அத்தைச் சொல்லி முடியாது! என்னியப் போல அதை அனுபவிச்சவங்க இந்த ஒலகத்துல ரொம்பக் குறைஞ்ச பேர்தான் இருப்பாங்க!"

"கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னிலும் தான்விதுப் புற்று." [1290]

"என்னியப் பார்த்தவொடனே அவ கண் கலங்கித் தவிச்சா. ஆனா, அடுத்த நிமிசமே அத்தை மறந்திட்டு, என்னியவுட ரொம்ப வேகமா என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டா! அவளோட அன்புக்கு முன்னால என்னுதுல்லாம் ஒரு தூசுக்கு சமானம்!"

எல்லாம் சொல்லி முடித்தவுடன் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான் மன்னார்.

"என்ன ஆச்சு?' என வினவினேன்.

"இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என் பொஞ்சாதி கிளம்பும்போது கேட்டுச்சு. ஒன்னியப் பார்த்த குஷில அத்த மறந்துட்டேன். இப்ப நான் போவணும். இல்லேன்னா அது சங்கடப்படும்" என்றான்.

"அதுவும் சரிதான். அண்ணியைக் கேட்டேன்னு சொல்லு." என்று சொல்லியபடி அன்புடன் விடை கொடுத்தேன் என் ஆசை நண்பனுக்கு.... டீ, மசால்வடை சாப்பிடாமலேயே!

மீண்டும் அடுத்த வாரம்!!

17 பின்னூட்டங்கள்:

Unknown Tuesday, April 17, 2007 9:34:00 AM  

//காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கும். அத்தைச் சொல்லி முடியாது//
இதைப் படிக்கும்போது "என் மனதில் காதல் நிரம்பியிருக்கும்போது ஒரு நாற்காலியைக்கூட என்னால் மிருதுவாகத் தொட முடிகிறது" என்ற ஓஷோவின் வரிகள் நினைவுக்கு வருகிறது.

//நீதான் இப்பெல்லாம் நம்மளையெல்லாம் பாக்க வரமாட்டியே?//
இருந்தாலும் ரொம்ப நாட்களாகவே மன்னாரை மறந்திட்டீங்களே ஐயா.

VSK Tuesday, April 17, 2007 10:50:00 AM  

அற்புதமான ஓஷோ வரிகளுடன் அருமையாகத் தொடங்கி வைத்திருக்கிறீர்கள், நண்பரே!

நீங்க கூடத்தான் ரொம்ப நாளா மறந்துட்டீங்க!

இப்ப மன்னார் வந்து கூப்பிட வேண்டியிருக்கு!
:))

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, April 17, 2007 12:04:00 PM  

வாங்கய்யா மன்னாரு
உனக்கோசரம் எத்தினி பீபிள் வெயிட்டிங்?

//இப்ப ஒரு பாட்டில் தென்னங்கள்ளு... அதுக்கு நீ கேரளாவுக்குப் போவணும்//

அம்மாந் தூரம் எதுக்குப்பா?
மயிலை கொஞ்சம் தாண்டினா பட்டினப்பாக்கம் கொண்டி மோட்டுத் தெருவுல கெடைக்குதுப்பா...:-))

ஷைலஜா Tuesday, April 17, 2007 12:20:00 PM  

காதல் வரிகளிலும் இதயம் லப்டப்!
அசத்தல் விஎஸ்கே!
ஷைலஜா

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, April 17, 2007 1:20:00 PM  

//இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என் பொஞ்சாதி கிளம்பும்போது கேட்டுச்சு//

குறளை எல்லாம் விளக்கும் போது, மனசுல நிக்காத மன்னாரு!
இப்ப, அப்படியே நிக்கறாருப்பா!

Kannabiran, Ravi Shankar (KRS) Tuesday, April 17, 2007 1:20:00 PM  

//எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே போல்//

இது சூப்பர் எடுத்துக்காட்டு SK.
மைக்குச்சி தள்ளி இருந்தா தானே தெரியுது. மை எழுதும் போது தெரிய மாட்டங்குதே!

ஆக, கண்ணுக்குள் கண்ணாய் காதலை வைத்துக் கொண்டால், கண்டதும் கண்ணுக்குத் தெரியாது.
"கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும்" என்ற குலசேகரர் பாட்டும் நினைவுக்கு வருகிறது!

VSK Tuesday, April 17, 2007 2:06:00 PM  

இதை எழுதும் போது எனக்கும் இதே எண்ணம் வந்தது, ரவி!

இந்தக் குறளை எழுதுவதற்கு முன், வள்ளுவர் ஒரு மைக்குச்சியை எடுத்து, கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டது போல ஒரு நிழலாடியது!

குலசேகராழ்வார் பாடலுக்கும் நன்றி!

VSK Tuesday, April 17, 2007 2:10:00 PM  

"லப்-டப்"பினது வள்ளுவனும், மன்னாரும், ஷைலஜா!

இப்பவே கூப்பிட்டுச் சொல்லி விடுகிறேன், மன்னாரிடம்!

நன்றி!

[காதலைப் பற்றிச் சொன்னதும், சுல்தான், ஓஷோவை,... ரவி, ஆழ்வாரை,.... நீங்கள் இதயத்தை என வரிசையாகக் கொண்டுவந்து அசத்துகிறீர்களே!] :))

VSK Tuesday, April 17, 2007 2:12:00 PM  

அட நா ஸொல்றது "அசலாயிட்டு"
தென்னங்கள்ளைப் பத்தி!

கொண்டிமோட்டுத்தெரு சமாச்சாரம்லாம் மன்சன்
குடிப்பானா?

:)

//மனசுல நிக்காத மன்னாரு!//

அப்போ குறள்ல சொன்ன விளக்கம்லாம் நல்லா இல்லேன்றியா நீ!

எப்பிடியோ நிக்கறேன்னு சொல்லி, மன்ஸைத் தொட்டுட்டே!
நல்லாயிரு கண்ணு!!
[அதாம்ப்பா.... கண்ணபிரானை செல்லமா கண்ணுன்னு!
:))

வடுவூர் குமார் Tuesday, April 17, 2007 6:59:00 PM  

குத்தம்ங்க்ற, 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!"
குத்தும் என்று இருக்க வேண்டுமோ?
மன்னாரே வா வா,கொஞ்சம் சூட்டை குறைக்க வா!
விளக்கம் மிக மிக அருமை.

VSK Tuesday, April 17, 2007 8:20:00 PM  

குத்தம்னு சொன்னது குற்றம் என்றதுங்க குமார்!


சூட்டைக் குறைக்க எனக்கும் மன்னார்தான்!

இலவசக்கொத்தனார் Wednesday, April 18, 2007 1:50:00 PM  

லேட்டா வந்ததுக்கு மாப்பு. கொஞ்சம் கொஞ்சமா படிச்சு முடிக்க ரெண்டு நாள் ஆச்சு. இப்படி எல்லாம் தலைவியின் பார்வையிலேயே சொல்லி இருக்காரே, தலைவன் இந்த மாதிரி ஓண்ணும் சொல்லலையா?

ஏற்கனவே நம்மளைப் ப்ரொபைல் எல்லாம் பண்ணறாங்க. இதுல நான் எதாவது சொல்லி ஜாஸ்தியாகிடப் போகுது.

ஆமாம் இப்படி எல்லாம் தெகிரியமா சொல்லி இருக்காரே, அந்த காலத்தில் ப்ரொபைலிங் எல்லாம் கிடையாதா? இல்லை இவரையும் நம்ம மாதிரி ப்ரொபைல் பண்ணிட்டாங்களா?

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, April 18, 2007 2:23:00 PM  

//அப்போ குறள்ல சொன்ன விளக்கம்லாம் நல்லா இல்லேன்றியா நீ!//

கோவிச்சுக்காதே மன்னாரு!
நீ கோவிச்சிக்கினா, அப்பாலிகா அண்ணி கிட்ட சொல்லிப்புடுவேன் ஆமாம்!

நீ குறளைச் சொன்னப்போ, மன்சுக்குள்ள குறள் நின்னுக்கிச்சுப்பா..
இப்ப அண்ணியப் பத்தி நல்ல விதமா சொன்னியா, அதான் நீ வந்து நின்னுக்கினே! :-)

VSK Wednesday, April 18, 2007 2:53:00 PM  

சரியாப் படிக்கலியா, கொத்ஸ்!

இது வள்ளுவர் எழுதிய டூயட் அதிகாரம்!

முதல் 8 குறள் தலைவி சொல்லுவதாகவும், கடைசி 2-ம் தலைவன் சொல்வதாகவும் அமைந்த டூயட் அதிகாரம்!

என்ன ஆச்சு?
என்னமோ ப்ரொஃபைல் எல்லாம் சொல்லி பயமுறுத்தறீங்க!
:))

VSK Wednesday, April 18, 2007 2:55:00 PM  

ரொம்ப டேங்க்ஸ்ப்பா, ரவிக்கண்ணு!

அடுத்த தபா வர்றச்சே ஒரு வார்த்தை சொல்லி வுடு!

கொண்டிமோட்டுத் தெருவுக்கு போயாறலாம்!

:))

வல்லிசிம்ஹன் Thursday, April 19, 2007 7:43:00 AM  

இப்படியெல்லாம் தெருப் பெயரைச் சொல்லி எங்க மயிலையை ஒண்ணும் செய்ய முடியாது ஆமாம்:-)

வள்ளுவர் சொல்லும் காதல் இதமா இருக்கு வி.எஸ்.கே சார்.

இதைப் பாடமா பள்ளிகளில் வைக்கலாம். வேற எதையோ சொல்லித் தருவதற்குப் பதிலா.

பின்னூட்டங்களும் அற்புதம்.

குமரன் (Kumaran) Wednesday, May 02, 2007 9:59:00 AM  

எஸ்.கே. இந்த இடுகையை இட்டு நிறைய நாள் ஆயிற்று நான் படிக்க. நான் படித்து நிறைய நாள் ஆயிற்று பின்னூட்டம் இட. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

இன்பத்துப்பாலில் இருந்து நல்லதொரு அதிகாரம்.

ஒவ்வொரு குறட்பாவிற்கும் நல்ல விளக்கம் சொல்லியிருக்கார் மன்னாரு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP