Thursday, May 11, 2006

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா!"

"கலைஞருக்கு ஒரு வாழ்த்துப்பா"!>



மத்திய அரசுப் பதவி
ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு,
மாநிலங்களில், மாறி, மாறி,
மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து
சுயமரியாதை இன்றி சுகித்து வாழும்
காங்கிரஸை துணைக்கொண்டு,
ஐந்தாம் முறையாக அரசு காணப் போகும்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கு
திறந்த ஒரு வாழ்த்துமடல் இதோ!!

'அளகேசா! ஆண்டது போதாதா?
மக்கள் மாண்டது போதாதா?"
எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்தீர் அன்று!

'கூலி உயர்வு கேட்டார் அத்தான்!
குண்டடி பட்டுக் கொன்றார் அவரை'
எனக் கூவி மக்களின் அனுதாபத்தைப் பெற்று
ஆட்சியில் அமர்ந்தீர் அன்று!

"ரூபாய்க்கு மூன்று படி அரிசி" எனக்
கூசாமல் பொய் சொல்லி
குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஆட்சிக்கு வந்தீர் அன்று!

கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாய்
'நண்பர் இருவர்' உங்களுக்கிடையே
செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலமாய்
மாறி, மாறி தன்சுகம் மட்டுமே கண்டீர்கள்!

பருவம் அடைந்த பதினெட்டு வயதுப்
பாவைஅவளைப் பல பேர் சேர்ந்து
பாவியவள் கற்பை சூறையாடிய
கதைதான் நினைவுக்கு வருகிறது

'நம்மையெல்லாம் இழிவு செய்தான்
நாமதற்கு துணை நில்லோம்
நல்லதேசெய்வோம்' எனச் சொன்ன உமை
நம்பி நல்வாக்கு தந்திட்ட நலிந்தோரை - அட!
நாளெல்லாம் நினைக்க வேண்டாம்!- அவருக்கு
நலம் செய்ய மறந்திடலாமோ?!
நாடு போற்ற வேண்டாமா நல்லவரே!

நாலிருபது ஆண்டுகள்
நாநிலத்தில் இருந்து விட்டீர்!
ஈரிருபது ஆண்டுகள்
இம்மண்ணை ஆண்டு விட்டீர்!
ஓரிருபது ஆண்டுகள்
மத்தியிலும் பார்த்துவிட்டீர்!

இன்றைக்கு மீண்டும் உமை
பதினோராம் முறையாகத்
பரிவுடன் தேர்ந்தெடுத்து,
ஐந்தாம் முறையாக
ஆட்சிக் கட்டிலிலேற்றி
அழகு பார்த்து மகிழ்கிறார்
எம் இனிய தமிழ்மக்கள்
நீர் சொன்ன இலவசங்களை நம்பியே!

இத்தனைக் காலம் செய்ய மறந்ததை
இனிவரும் நாளிலேனும்
இனிதே செய்து,
இனிய தமிழகத்தை '
இன்பமுற வாழ வைக்க
இன்னுமொரு சந்தர்ப்பம்
இனிமேலும் வாய்க்காது
என்பதனை உணர்ந்து நீரும்,

நன்முறையில் ஆட்சி செய்து
நல்ல பெயரும் வாங்கி
நலமுடன் வாழ்ந்திடவே
நான் வாழ்த்துகிறேன்
நன்னாளாம் இன்று!

3 பின்னூட்டங்கள்:

கருப்பு Friday, May 12, 2006 12:42:00 AM  

நானும் கேப்டனை வாழ்த்தி பதிவு எழுதி இருக்கிறேன் படித்துப் பாருங்கள்.

VSK Friday, May 12, 2006 7:36:00 AM  
This comment has been removed by a blog administrator.
VSK Friday, May 12, 2006 7:38:00 AM  

உங்களைப் போல இவ்வளவு விவரமாக எல்லாம் எனக்கு அலசத் தெரியாது!

எடுத்துக்கொண்ட தலைப்பு எதுவாயினும், புள்ளிவிவரங்களொடு, விவரணையாக எழுதும் உங்கள் எழுத்தை மதிக்கிறேன், உங்கள் கருத்துகளொடு முழுமையாக ஒத்துப் போகாவிடினும்!

அதனாலெல்லாம் எழுத்தை ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன?!

விஜய்காந்தைப் பற்றி நீங்கள் எழுதிய விமரிசனம் மிக நன்றாக இருந்தது.

வருகைக்கு நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP