"நாம் அனைவரும் இந்துவே!"
"நாம் அனைவரும் இந்துவே!"
நண்பர் திருவின் பதிவைப் படித்ததும் எனக்குள் தோன்றிய உணர்வுகளை,
"பாதிக்கப்பட்ட இருவருமே" பேசிக்கொள்வது போல ஒரு மாற்றுக் கவிதை வடித்திருக்கிறேன்!
வீண் கதை பேசி, விரோதத்தை வளர்ப்பதை விட, உண்மை புரிந்து ஒருங்காய் வாழ வழி வகுக்கலாமே எனும் அற்ப ஆசையில்!
யாரும் தவறாகக் கொள்ள வேண்டாம்!
வேதம் மொழிந்தவன்
பார்ப்பனன் அல்லன்!
வேதம் கொடுத்தவனும்
பார்ப்பனன் அல்லன்!
வாழ்வுதான் வேதம் என்று
வேதம்தான் வாழ்வு என்று
நால்வகைத் தொழிலை
நயமுடன் செய்து
நலமுடன் வாழவே விதித்தது வேதம்!
எங்கள் நலனைக் காக்க வேண்டி
யாகம் செய்யும் தொழிலது கொடுத்தோம்!
யாகத்தின் முடிவில் நீங்கள் கொள்ள
வெகுமதியும் கொடுத்தோம்.
செய்த தொழிலுக்குக்
கூலி கொடுத்தல்
எங்கள் மரபன்றோ!
உங்களில் பிறந்து
உங்களோடு வளர்ந்து
உங்களால் கடவுளாக்கப் பட்டவனுக்கு
நீங்களே கோபுரம் எழுப்பி
எம்மையும் பணித்தீர்
பணி செய்யவென
அதற்குக் கூலியும் கொடுத்தீர்
வெளியில் நின்றே விமலனை வழிபட்டீர்!
அவரவர்க்கு இதுவென
நீயே சாத்திரம் அமைத்தாய்!
ஆம்! மனுவும் நம்மில் ஒருவனே!
அவரவர் தத்தம் கருமம் செய்தால்
நானிலம் பயனுற வாழும் என்னும்
விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!
கருமம் முடித்ததும்
கால்சட்டை களைந்து
அனைவரும் ஒன்றாக
வாழுவோமென்று
அன்றவன் விதித்ததை
நாமங்கு மறந்து
நம் தொழில் செய்வதில்
காலத்தைப் போக்கி
நம்மில் பிரிவுற்று
நாமே வாழ்ந்து
இன்றவனைப் பழித்து
குளிர் காய்கின்றோம்!
உன் வேலையை நீ செய்ய
உனக்கு நான் கொடுப்பேன் கூலி
அதில் நீ பிழைத்து
உலக நலன் வேண்டும்
கருமம் செய்வாய் எனச் சொல்லி
இன்றவன் என்னை மிதிக்கிறானே
எனஇரக்கப் புலம்பல்
எங்ஙனம் நியாயம்?
உண்டு கொழித்த காலம்
என்றோ போயிற்று!
இன்று நீயும் நானும்
உழைத்து வாழ்ந்தால்தான்
உய்வதற்கு வழியென
விதி இங்கே ஆன பின்னே
என்னை வாவென
நீயழைக்க வேண்டாம்!
நானே அங்குதான் இருக்கிறேன்
உன்னோடு சேர்ந்தின்று!
உணர மறுத்து, - திரும்பிப்
பார்க்க மறுத்து
பழங்கதை பேசி
பொழுதைக் கழித்தல்
உனக்கும் வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!
வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!
104 பின்னூட்டங்கள்:
மணியாட்ட பாப்பானை அனுப்பி வைத்தது எல்லாம் சரிதான். ஆனால்
வர்ணாசிரமம் என்று சொல்லி அண்டச்சபிலிட்டியை கொண்டு வந்தது யார்?
தொட்டால் பாவம், அபச்சாரம் என்று சொல்லி தூர நின்று பேசுவது எதனால்?
குலக்கல்வி என்று சொல்லி திராவிடர்களை முன்னேற விடாமல் குறுக்குவழி திட்டம் தீட்டியது யாருடைய கேவலமான செயல்?
திராவிடரை வீட்டுக்குள் விடவேண்டாம். ஆனால் திண்ணையில் உட்கார்ந்து பேசினாலே அவர் சென்றதும் தண்ணீர் தெளித்து கழுவிவிடும் கேவலமான புத்தி ஏன்?
SK அய்யா,
//வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்! //
இந்த கூற்றை நான் ஆதரிக்கிறேன்..
வரவேற்கிறேன்..
எஸ்.கே
எந்த கோட்பாட்டிலும் நல்லதும் இருக்கும்,கெட்டதும் இருக்கும்.கெட்டதை அகற்றிவிட்டு,நல்லதை ஏற்பதே பகுத்தறிவு.இருப்பதை முழுக்க ஒழித்துவிட்டு பறப்பதை பிடிப்போம் என்பது பகுத்தறிவு அல்ல,பகல் கனவு.
ஒரே கோட்பாட்டையோ,மதத்தையோ நூற்றுக்கு நூறு பின்பற்றுபவன் முட்டாள்.அனைத்து கோட்பாட்டிலும் இருந்து நல்லதை ஏற்று அல்லதை அகற்றுபவனே புத்திசாலி.
பூசாரியும் மனிதன் தான்,தன் தொழிலை செய்து வாழ்பவன் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.கடவுளைப்போன்று புனிதமாக அவன் இருக்கவேண்டும்,இல்லாவிட்டால் அவன் அயோக்கியன் என்கிறோம்.
பிராமணர்கள் என்பவர்கள் மனிதர்கள்.கடவுளுமல்ல,அரக்கனுமல்ல.சில பிராமணர்கள் தப்பு செய்வார்கள்,சில செட்டியார்களும்,அம்பலத்தாரும் தப்பு செய்வதுபோல்.நல்லதும்,கெட்டதும் கலந்தது தான் மனிதனும்,அவன் இனமும்.இதை பிரித்தாராய்வதே பகுத்தறிவு.
//உணர மறுத்து, - திரும்பிப்
பார்க்க மறுத்து
பழங்கதை பேசி
பொழுதைக் கழித்தல்
உனக்கும் வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!
வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!//
இதை மனதார வழிமொழிகிறேன்.
இதை எழுதியதற்கு எழுதாமலே இருந்திருக்கலாம்,... மனுதர்மத்திற்கும், சாதிய சாக்கடைக்கும் வக்காலத்து வாங்கும் இந்த பதிவிற்கு என் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்...
SK
//உண்மை புரிந்து ஒருங்காய் வாழ வழி வகுக்கலாமே எனும் அற்ப ஆசையில்!//
அற்ப ஆசையில்லை SK! அன்பு ஆசை!
"நாலு வகுப்புஇங் கொன்றே; -- இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே -- செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
சாதிக் கொடுமைகள் வேண்டாம், அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
சாம்பல் நிறமொரு குட்டி -- கருஞ்
சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி -- வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் -- அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் -- இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்--அதில்
மானுடர் வேற்றுமை யில்லை.
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்."
பகையுணர்வு என்ற தீ மூட்டி
குளிர்காயும் கயவர்களுக்கு
சமூக நலனில் அக்கறை
என்னும் பாடம் கற்றுத்தர விழையும் பதிவுக்கு நன்றி!
கவிதையெல்லாம் ஓகே!
ஆனால் கருத்துக்கள் ஏற்புடையதாயில்லை.
எஸ்.கே. இரண்டு முறை படித்துவிட்டேன். இன்னும் முழுதாகப் புரியவில்லை. இருவர் பேசிக் கொள்வதைப் போல் எழுதியிருக்கிறீர்களா? யார் யார் அது?
முதல் முறை படித்த போது ஒன்றுமே புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை. குழலியின் பின்னூட்டத்தைப் படித்தப் பிறகு அந்தக் கண்ணோட்டத்தில் படித்துப் பார்த்தேன். மனு தர்மத்திற்கும், சாதிய சாக்கடைக்கும் இந்தப் பதிவு வக்காலத்து வாங்குவதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மேலே சொன்னபடி எனக்குப் புரியாமல் இருக்கலாம்.
எந்த நோக்கமும் இல்லாமல் பின்னூட்டம் போட்டாலே அதில் ஆயிரம் நோக்கம் கண்டுபிடித்து 'அடிக்கும்' இந்த வலையகத்தில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளத் தனி அறிவு இருக்கவேண்டும். அதனால் நீங்களே என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று சொன்னால் சரி. இல்லை பதிவின் நோக்கத்தைக் 'கண்டுபிடித்து'ச் சொல்லும் அறிஞர்கள் கூற்றினை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். :-)
//உன் வேலையை நீ செய்ய
உனக்கு நான் கொடுப்பேன் கூலி
அதில் நீ பிழைத்து
உலக நலன் வேண்டும்
கருமம் செய்வாய் எனச் சொல்லி
இன்றவன் என்னை மிதிக்கிறானே
எனஇரக்கப் புலம்பல்
எங்ஙனம் நியாயம்?//
SK ஐயா,
இதுக்கு என்ன அர்த்தம்?
முதன் முதல் என் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டதர்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், திரு. வி. க. !
இவ்வளவு சீக்கிரமே வந்தது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி எனக்கு.
நீங்கள் கேட்ட கேள்விக்கு முதல் இரு வரிகளில் பதில் இருக்கிறது.
வர்ணாசிரமம் எழுதிய மனு ஒரு பார்ப்பான் அல்லன்!
ஒரு க்ஷத்திரியன்.
அந்தக் காலத்தில் ஒரு சில சமூகத் தேவைகளுக்காக எழுதி வைத்தது அது.
அதைத் தீவிரப்படுத்தி, மேலும் கடுமையாக்கியதில், பார்ப்பனர்களைப் போலவே, அனைத்து மேல்சாதியினருக்கும் சம பங்கு உண்டு. இதி மறுப்பதற்கில்லை.
திண்ணையைக் கழுவுவது ஏதோ பார்ப்பனர்கள் வீட்டில் மட்டும் நடந்த ஒன்றல்ல!
எல்லா மேல்சாதியனர் வீட்டிலும் நடந்ததே!
இன்று அனைவருடனும் அமர்ந்து சரி சமானமாக கலந்து கொள்ளும் பாங்கினையே பெரும்பாலான பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.
அவ்வாறு செய்பவர்களை ஊக்குவிக்குமாறும், மேலும் பெருகுமாறும் செய்ய வேண்டியதுதான், நாம் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று என நான் நம்புகிறேன்.
மற்ற நண்பர்களுக்கு நான் சொல்லும் பதிலையும் கவனியுங்கள்.
நன்றி.
வருகைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி, சிபா!
அனைவரும் ஒரு நோக்கில் சிந்தித்தால் ஆகாதது ஒன்றில்லை!
நான்கு வர்ண தொழில்களையும் ஒருவேரே செய்வதுதான் மனிதம்.
நடுவில் வந்தவர்கள் அதை மாற்றியதை நாம் அறிவோம் அந்த வேற்றுமையை களைவோம்
மாற்றம் மட்டுமே நிரந்தரம் என்பது இந்து மதத்தின் தத்துவம் என்றுணர்ந்து மாறுவோம். புதியதோர் உலகம் செய்வோம்
அதுவேதான் என் கருத்தும், செல்வன்!
சரியாகப் புரிந்து மறுமொழி இட்டதற்கு மிக நன்றி!
மனிதரை, மனிதராய்ப் பார்க்க மறுக்கும் யாராயிருந்தாலும் அவர்களை முறியடிக்க ஒன்று சேருவோம்!
ஜாதி பற்றி என் கருத்து இதுதான்.
சூத்திரனுக்கொரு நீதி
பார்ப்பனுக்கொரு நீதி என்று
சாத்திரம் சொல்லுமாயின்,அது சாத்திரமன்று
சதியென்று கண்டேன்
சாதி இரண்டொழிய வேறில்லை
இட்டார் பெரியார்
இடாதார் இழிகுலத்தார்
இந்துமதத்தை பின்பற்றுவோர் அனைவரும் இந்துக்கள்
கவுண்டனோ,தலித்தோ,கள்ளனோ,அம்பலத்தானோ,பார்ப்பனனோ அல்ல
நீங்கள் சொன்னதுபோல்
புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!
இது அந்த நோக்கில் எழுதப்பட்டது அல்ல என உறுதி கூறுகிறேன், திரு. குழலி.
ஒரு சாராரில் சிலர் மாற மறுக்கிறார்கள்.
இன்னொரு சாராரில் சிலர், இந்த நிலைமை அப்படியே இருப்பதில் மட்டும் மிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்கள் இருவருமே மாற வேண்டும்!
மாற்றிக்கொள்ள வேண்டும் தங்கள் பத்தாம்பசலிக் கருத்தை, நம்பிக்கையின்மையை.
மாறுதல் நாடி ஓடி வருபவர்களை இருகரம் கூப்பி அணைக்க வேண்டுவதே, மானுடம் விரும்பிடும் மக்களின் கடமை.
இதை மறுக்கின்ற யாருமே, மனைதரல்லர்... இன்றைய உலகில்!
ரொம்ப நாள் கழித்து மீண்டும் வந்ததற்கு மிக்க நன்றி!
நல்ல முறையில் புரிந்து கொண்டு, நல்லதொருபாரதி கவிதையும் அளித்தமைக்கு மிக்க நன்றி, திரு. ரவி!
பழையதை மறப்போம்; மீண்டும் செய்தால் தடுப்போம்; புது வழி நடப்போம்!
எல்லாமெ சர்ருக் கடினம்தான்!
முயன்றால் முடியாதா என்ன!
முயல முனைவோம்!
அருமையான சொல் ஒன்றை -- சமூக நலனில் அக்கறை-- சொல்லி இப்பதிவின் நோக்கத்தை அழகுற உரைத்தமைக்கு மிக்க நன்றி, திரு. ஜீவா!
மிகவும் நம்பிக்கையூட்டுகிறது, உங்கள் மறுமொழி!
கருத்தும் ஏற்புடையதாகும், திரு.ஜோ!
மீண்டும் படியுங்கள்!
கடந்த கால சமூக அவலங்களையே சொல்லிக் கொண்டிராமல், தடாலடியாக மாற்ற நினைக்காமல், மாறி வருபவர்களை, மாறியவர்களை அரவணைத்து, மற்ற "அனைவருக்கும்" காட்டி, இவர் போல நீங்களும் ஆகுங்கள் என்பதைச் சொல்லிப் புரியவைக்கலாம்!
நன்றி!
இது போல கேள்வி கேட்டு, மேலும் விவரிக்க வைப்பது, உங்களுக்குக் கைவந்த கலையாயிற்றே, குமரன்!
அறிய மாட்டேனா என்ன? :))
மேல்சாதியனரும், ஒடுக்கப்பட்டசாதியினரும் ஒருவருக்கொருவர் இன்றைய நாளில் பேசிக்கொள்வது போல உருவகப்படுத்தி இருக்கிறேன்.
சமூக நல்லிணக்கம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு!
எதை யார் சொல்கிறார்கள் என்பது அவரவருக்குப் புரியும்!
யாருக்கும் வக்காலத்து வாங்க வில்லை!
யாரையும் குறை கூற வில்லை.
இவர் மாறி வருவதை அவ்ரும், அவருக்கு ஒரு மாற்றம் தேவை என்பதை இவரும், ஒருவருக்கொருவர் உணரல் வேண்டும் என எழுந்த என் உள்ளக் கிளர்ப்பாடு இது!
இப்போது படித்து விட்டுச் சொல்லுங்கள்!
நன்றி.
//நால்வகைத் தொழிலை
நயமுடன் செய்து
நலமுடன் வாழவே விதித்தது வேதம்//
அடடா என்னே நயம்! என்னே நயம்!!
தொழில்களை சுழற்சி முறையில் பங்கிட்டுக் கொள்ளலாமா!!
//விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!//
அப்படீங்களா??
சரி வாங்க அனைவரும் கருவறைக்குள் செல்வோம். கட்டித்தழுவுவோம்.
சாத்தான் ஓதும் வேதம் எப்படி இருக்கும் என்று நீண்ட நாள் தெரியாது இருந்தது.
இன்று....
தன் இனத்து ஒருவனை இறைவனை உருவாக்கி,[கண்ணன் இடையன், இராமன் வீரன், முருகன் திராவிடன், இப்படி பல] அவனுக்குக் கோயில் கட்டி, அதற்கு மானியங்கள் அளித்தது எல்லாம் பார்ப்பனர் அல்லாத மற்றவரே!
இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன், திரு. ஜோ.
அங்கு ஒரு பார்ப்பனனை பணியில் அமர்த்தியதும் இவர்கள்தான்.
அவன் தனக்குக் கிடைத்த இந்த ஒப்பற்ற சேவையை செய்யும் மட்டில் தான் அவனுக்கு மரியாதை.
அதை விடுத்து, தடம் மாறிப் போனான் என்றால், அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு கட்டுப் படுத்தாது விட்டு விட்டு, ஒரு கால கட்டத்தில் அது எல்லை மீறிப் போன போது, அதை சகித்துக் கொண்டு இப்போது குறை கூறல் வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறேன்.
மேலும், அவை எல்லாம் மாறிவரும் இவ்வேளையில், மாறுதலை வரவேற்போம் எனவும் விரும்புகிறேன்.
இன்னும் பழங்கதை வேண்டாமே என வேண்டுகிறேன்.
நன்றி.
இதுவரை வந்த அனைவருமே இதைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டதைப் போலவே நீங்கள்ம் ஒரு நல்ல கருத்தைக் கூறியிருப்பது நிறைவாய் இருக்கிறது, சிவா1
அண்ணன் வந்தார்!
ஒலித்தட்டு தந்தார்!
நன்றி!
மீண்டும் வந்து இன்னொரு நல்ல கருத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, செல்வன்!
இது நண்பர் திரு.வின் பதிவின் தாக்கத்தால் விளைந்த கருத்து என்பதல், ஹிந்து எனும் சொல் தவிர்க்க முடியாததாயிற்று, திரு. நக்கீரன்!
வேற்றுமை பாராட்டுபவர் அடியே இல்லாமல் போய்விட்டார்கள் என நான் சொல்லவில்லை.
இருக்கிறார்கள் இன்னமும் அப்பாதகர்கள்!
நான் காட்டுவது மாறிவரும் இளைய தலைமுறையினரை!
அவர்களை வரவேற்றாலே நிறைய புத்துணரச்சி வளரும் என நம்புகிறேன்.
மற்றபடி, அனைத்து மக்களும், சாதி, மத வேறுபாடின்றி, சமூகத்தில் இசைந்து வாழ நாம் முயல வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடே.
நன்றி.
SK
மிகவும் அருமையான பதிவு. மிகவும் தேவையானதும் கூட. தற்போதைய தமிழ்மண இறுக்கமான சூழலில் இப்பதிவுக்கு மிகுந்த தீரம் தேவை. வாழ்த்துக்கள்.
பழையனவற்றின் தாக்கம் இல்லாமல் தற்கால சூழலின் யதார்த்தத்தை புரிந்து எல்லோரும் சுமுகமாக வாழவும் பழகவும் பலருக்கு பழையதை விட்டுவிட மனதில்லை என்று பின்னூட்டங்களில் புரிகிறது. மிகவும் வருத்தப்படவேண்டியது. இந்திய சமுதாயத்தின் பலப்பல ஆற்றல்களையும், பலங்களையும் மறந்து காழ்ப்புணர்ச்சியை வளர்த்து நம்மிடையே தேவையில்லாத பிணக்குகள் நம் எல்லோருக்குமே நஷ்டமாய் முடியும். இந்த உண்மையை எல்லோருக்கும் புரியவைத்ததற்கு மிக்க நன்றி
எஸ் கே,
waste of time.... அவர்கள் எண்ணம் ஜாதிகளை ஒழிப்பது அல்ல....மாற்றாக சாதிக் கொடுமைகளுக்கு இந்துக் கடவுள் தான் காரணம் என்று கூறி
கிறுத்தவனாக மாற்ற...
// Mr.SK.Said...வீண் கதை பேசி, விரோதத்தை வளர்ப்பதை விட, உண்மை புரிந்து ஒருங்காய் வாழ வழி வகுக்கலாமே எனும் அற்ப ஆசையில்!//
அற்பமான ஆசையென்று ஏன் சொன்னீர்?
அற்புதமான ஆசையென்பேன் அதை நண்பரே!
இச்செகத்தோரெல்லாம் அதைஉணர்ந்தால்
இங்கு ஒரு பேதம் இனியுண்டோ?
நண்பர் SK,
ஆதிக்க தத்துவங்கள், வேதங்கள், சாத்திரங்கள், கருத்துக்களை கழையாமல் இந்து என்ற போர்வை போர்த்தி மயக்கத்தில் வைப்பதால் சமமான உலகு அமையுமா?
பழையன அடிமைப்படுத்தும் போது அந்த அடையாளங்களை கழைவதில் என்ன தவறு? புது உலகில் புது அடையாளங்கள் பிறக்க அது தானே வழி தரும்?
போகியின் போது பழைய பொருட்களை எரிப்பது எதன் அடையாளம்?
ஹிந்துவா இல்லீங்க, தமிழனாவும் இல்லை, இந்தியனாவும் இல்லை, மனிதனாவும் இல்லை எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்துபவர்களாக எல்லோரும் மாற வேண்டும்.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடினானே ஒரு கவிஞன் அது போல எல்லாம் மாற வேண்டும்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்னாரே ஒருவர் அது போல ஆக வேண்டும் இவ்வுலகு.
ஆனா மாற்று மனிதர்களை எல்லாரையும் வேற்றுமை படுத்தி குலம், மதம் என்று மனிதனை மனிதனே இரையாக்கும் இந்த நிலையே மாறாத பொழுது அதெல்லாம் அவர்கள் கற்பனை கூட செய்திருக்கக் கூடாது தான்.
//வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!//
நிச்சயமாக ஆனால் அதற்கு முன் சாதியும் வர்ணாசிரமும் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு நிவாரணம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் புதிய உலகம் எப்படி இருக்கும்... உதாரணமாக நன்றாக சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து கொழுத்த ஒருவன், அவனுக்கு அடிமை சேவகம் செய்து நோஞ்சானாக மற்றொருவன், திடீரென ஒரு நாள் இருவரும் ஒன்று இரண்டுபேரும் ஓட்டப்பந்தயத்தில் ஒன்றாக ஓடுங்கள், இது புதிய உலகம் என்று சொன்னால் என்னாவது? முதலில் நிவாரணம் வேண்டும், இல்லையென்றால் புதிய உலகம் ஒருதலைபட்சமான உலகம்...
//மேல்சாதியனரும், ஒடுக்கப்பட்டசாதியினரும் ஒருவருக்கொருவர் இன்றைய நாளில் பேசிக்கொள்வது போல உருவகப்படுத்தி இருக்கிறேன்.
//
//அவரவர்க்கு இதுவென
நீயே சாத்திரம் அமைத்தாய்!
ஆம்! மனுவும் நம்மில் ஒருவனே!
அவரவர் தத்தம் கருமம் செய்தால்
நானிலம் பயனுற வாழும் என்னும்
விதியினை வகுத்ததும் நாமன்றோ!
நாமனைவரும் இந்துவன்றோ!
//
நானிலம் பயனுற வாழுமா? ஒரு கேவலமான மனிதர்களை சுரண்டும் மனுதர்மத்திற்கு, சிலரை உயர்த்தி சிலரை தாழ்த்தி சிலருடைய நன்மைக்காக உருவான மனுநீதிக்கு இந்த வரிகள் வக்காலத்து வாங்குவதாகவே நான் கருதுகிறேன்.
//அந்தக் காலத்தில் ஒரு சில சமூகத் தேவைகளுக்காக எழுதி வைத்தது அது.//
இது உங்கள் பின்னூட்டத்தில், மனுதர்மத்தை எதற்காக அந்த காலத்தில் சில சமூகதேவைகளுக்காக எழுதி வைத்தது என்று வக்காலத்து வாங்க வேண்டும்??
இப்போதும் சொல்கிறேன், இந்த கவிதை மென்மையான வார்த்தைகளால் மனுநீதிக்கு வக்காலத்து வாங்கிய கவிதை, இப்படியான எல்லாவிதமான சகல வித்தைகளையும் கடைபிடித்துதான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகியும் புத்தன் முதல் எத்தனையோ பேர் போராடியும் இன்னும் வர்ணாசிரமத்தின் ஒரே ஒரு முடியை கூட பிடுங்க முடியவில்லை...
//உணர மறுத்து, - திரும்பிப்
பார்க்க மறுத்து
பழங்கதை பேசி
பொழுதைக் கழித்தல்
உனக்கும் வேண்டாம்!
எனக்கும் வேண்டாம்!
வா! புதியதோர் உலகம் காண்போம்!
பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!//
மற்றவை எனக்கு புரியவில்லை ஆனால் இந்த கூற்றை நானும் Sivabalanனுடன் சேர்ந்து ஆதரிக்கிறேன்..
அது போகட்டும் குழலி / Kuzhali என்ன தான் சொல்லவாராரு. வர வர அவர் சொல்லறது ரொம்ப குழப்பறாருபா???!!!
வரவேற்கிறேன்..
//கிறுத்தவனாக மாற்ற...//
அடேங்கப்பா!விட்டா குழலி ஒரு கிறிஸ்தவ மத பிரச்சாரகர்-ன்னு சொல்லுவீங்க போல
SK அய்யா,
சில பேர் இங்கே வந்து "பிராமணத்தை எதிர்ப்பது சரியல்ல" என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
அதே போல் அவர்களின் பதிவில் பிராமணத்தை ஆதரித்து எழுதுகின்றனர்.
நீங்கள் இந்தப பதிவின் மூலம் இரு சாராரையும் சாடுகின்றீர்கள் என உணர்கிறேன்.
அதுபோல் குழலி சொன்னது போல் புதிய உலகில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும்.
மற்றபடி நீங்கள் கடைசியாக கூறிய கூற்றை மீன்டும் வழிமொழிகிறேன்.
பாராட்டியதற்கு நன்றி திரு. ஜெயராமன்.
ஆனால், 'பலருக்கு மனதில்லை' என எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
உங்களைப் போல சிலர் ஒரு பக்கமும், அதற்கு மாற்றாக சிலர் மறு பக்கமும் இருப்பதுதான் நான் காணும் நிலை!
பெரும்பாலானோர் இசைந்து வாழவே விரும்பி வருகின்ற இந்நேரத்தில், சொல்லாடலைக் கொஞ்சம் கவனமாகக் கையாளுங்கள் என அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
உங்களையும், மற்றவர்களையும்!
ஒரு தவறான சொல்லாடல் போதும், இப்பதிவின் நோக்கத்தையே மாற்றிவிட!
அங்ஙனம் விரும்பமாட்டீர்கள் என நம்புகிறேன்.
பழையதை விட வேண்டும் எனத்தான் இருவரும் விரும்ப வேண்டும்!
நன்றி.
அவர்கள் எண்ணம் என்ன என்ற கவலையை விட்டு, நீங்கள் ஒரு சமூக மேம்பாட்டைக் கொண்டு வருவதில் என்ன பங்களிக்க முடியும் என யோசிக்க ஆரம்பிக்கலமே, திரு வஜ்ரா!
எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே சொல்லிக்கொண்டு விரோதத்தை வளர்ப்பது!?
நாம் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ ஒரு சில சமாதானங்கள், விட்டுக்கொடுத்தல்கள் நடந்துதான் தீர வேண்டும்.
திரு. ஜெயராமனுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோளையும் படியுங்கள்.
எழுத்துகளில் தீவிரத்தை குறைத்து எழுதவும்
யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்னால்.
வேண்ட முடியும்!
நன்றி.
புரிதலோடு கூடிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, திரு. சுப்பையா!
செகத்தோர் உணர நம்மாலானதைச் செய்யலாமே என்ற அற்ப ஆசைதான்.....மீண்டும்! :)
"கத்தி ஒருவனைக் கொல்வதில்லை; கத்தி ஏந்தியவனே கொல்கிறான்" என்னும் பழமொழியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன், திரு. மாசிலா.
மதம் ஒருவனை மாற்றுவதில்லை.
மதவெறியே!
அதை மாற்றினாலே போதும்!
எல்லா மதங்களும் அன்பைத்தானே போதிக்கின்றன?
அதை ஏன் பீடை என்கிறீர்கள்?
அதில் இருக்கும் சில தீய சக்திகளை இருபக்கமும் களைவோம்....அன்பெனும் மதம் கொண்டு.
நன்றி.
திரு. வஜ்ராவின் சொல்லுக்கு பதிலடி வரும் என எதிர்பார்த்தேன்.
நீங்கள் ஏமாற்ற வில்லை, திரு. ஜோ!
இது போன்ற சொற்களை பொது இடத்தில் விதைப்பதால், மனக்கசப்புதான் அதிகமாகும்.
என் நோக்கம் மாறி வருபவர்களுக்கு ஊக்கம் அளிப்பதே!
மற்றபடி, மேற்கூறிய "இரு" சொல்லாடல்களையும் நான் ஒதுக்குகிறேன்.
நீங்களும் முயற்சி செய்ய வேண்டுகிறென்,, திரு.வஜ்ராவிடம் வேண்டியபடியே!
ஒவ்வாத பழையன களைவதில் எனக்கொன்றும் மறுப்பில்லை, நண்பர் திரு.
போகியின் போது ஆண்டாண்டுகளாய் எரித்துக் கொண்டுதானே இருக்கிறோம்!
மீண்டும் அடுத்த போகிக்கு வேறு சில பழையன சேர்ந்து விடுகிறது!
"இரு கோடுகள்" மூலமே புது அடையாளம் வர முடியும்.
அப்போது பழையனவற்றை அழிக்கவே வேண்டாம்.
அதுவே இல்லாமல் பின் தங்கி விடும்.
மேலும்,புதியன படைக்கும் நம் ஆற்றலையும், இந்தப் 'பகையன் அழித்தலில்' செலவிடுதல் குறைத்துவிடும்.
அப்போதும் இங்கொன்றும், அங்கொன்றுமாய் இருந்து கொண்டுதான் இருக்கும்.
ஆனால், நம்மை அது பாதிக்காது.
//'நல்லிணக்க முயற்சி' என்ற பெயரில், விழிப்புணர்ச்சியை அழிக்கவும், சுயமரியாதையை துடைத்தெடுக்கவும் விழையும், எக்காரணம் கொண்டும் சமத்துவத்தை அனுமதித்திடாத ஆக்கிரமிப்பு சக்திகள் மற்றும் அவர்களின் கைகூலிகளை போல் அல்லாமல், உங்கள் நம்பிக்கையை நீங்கள் நேர்மையாக எழுதுகிறீர்கள் எனறு நானும் நம்பிக்கொண்டு செல்கிறேன்.//
உங்கள் நம்பிக்கை வீண் போகாவண்ணம் எழுதுவேன் என உறுதி கூறுகிறேன், "வணக்கத்துடன்"!!
சீரிய கருத்துகள், திரு. குமரன் எண்ணம்!
முதலில் நம் வீட்டை சுத்தப்படுத்தத் துவங்கி பிறகு தெருவுக்கு போகலாமே என்ற.......அற்ப ஆசைதான்! :)
மீண்டும் வருகைக்கு நன்றி, திரு. குழலி.
நான் சொல்வது, எழுதுவது, மக்கள் என்னும் நிலையில் இருந்து நாம் என்ன செய்யலாம் என்பது குறித்தே.
நீங்கள் சொல்வது ஒரு அரசாங்கத்தின் வேலை.
அவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள் செயல்பாட்டினையும் சரிப்படுத்துதல் ஒன்றே நாம் செய்யக் கூடியது.
தனி மனிதன் என்ற நிலையில் இருந்து நானும், நிர்வாக அளவில் நீங்களும் வெவ்வேறாகச் சிந்திப்பதால்தான் இந்த கருத்துக்குழப்பம் நம்மிருவருக்கிடையே!
மேலே திரு.கு. எ. அவர்களுக்குச் சொன்னது போல என்னை நான் சுத்தம் செய்து கொள்கிறேன்.
கொழுத்தவன், நோஞ்சான் என்பதெல்லாம் உங்கள் அளவுகோல்கள்.
அதைப் பற்றி எனக்குக் கருத்து இல்லை.
அடிபட்டவன் என்னும் நிலையினின்று உங்கள் கண்ணோட்டத்தில் பார்ப்பது உங்களுக்கு சரியே1
ஆனால், அடிபடும் அனைவரையும் நான் பார்க்கிறேன்.
இப்போதைய நிலையில் ஆதாயம் தரக்கூடிய இரு கழக சார்பு நிலையினின்று விலகி, தனி மனிதனாக வந்த கேப்டனை ஆதரிக்கும் நிலை எடுத்ததில் இருந்தே புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்! :))
அடுத்த கேள்விக்கு உடனே வருகிறேன்!
SK,
SC/ST சாதிகள் ஒடுக்கபட்டு இருப்பது சில நூற்றாண்டுகளாக நடக்கும் economic exploitation என்ற விஷயத்தால்.
இதை செய்வது நாய்க்கர்கள், முதலியார்கள்,செட்டியார்கள்,கவுண்டர்கள்மற்றும் தமிழ்நாட்டில் எந்த-எந்த சாதியினர் நிறைய நில-புலங்களை வைத்துள்ளார்களோ அவர் எல்லோரும்.
எவனும் பகவத்கீதையை படித்துவிட்டு அந்த சாதிக்காரனை விரட்டு,இவனை ஒதுக்கு என்று சொல்வதில்லை.
மணுஸ்மிரிதியை இவர்களை தவிர மற்றவர்கள் மறந்தேவிட்டார்கள்.
பிறவியில் இருந்தே அவனுக்கு என்ன சொல்லி வளர்க்கபடுகிறதோ அதையே அவன் பின்பற்றுவான்.
வெளிநாட்டில் போய் இந்திய சாதிகொடுமைகளை படம் போட்டு காட்டும் காஞ்சி இலையாக்கள் இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் இந்த படங்களை காட்டி குழந்தைகளின் மனதில் நல்ல என்னங்களை விதைக்கலாம்.
இதையெல்லாம் இனி நாம் தான் செய்யவேண்டும்.
SK ஐயா,
நல்ல கவிதை. ஆனால் பல உண்மைகளைத் திரித்து காலம் காலமாக நடந்தேறும் பல அநாகரீகமான செயல்களை நியாயப்படுத்த பொய்யான காரணங்கள் கூறப்பட்டுள்ளது உங்கள் கவிதையில். அதனால் கவிதையின் பொருளோடு எனக்கு உடன்பாடில்லை.
எடுத்துக்காட்டாக,
//எங்கள் நலனைக் காக்க வேண்டி
யாகம் செய்யும் தொழிலது கொடுத்தோம்!//
நாங்கள் அவர்களுக்கு இத் தொழிலைக் கொடுக்கவில்லை. நாங்கள் தீண்டப்படாதவர்கள், ஆண்டவனை நெருங்கக் கூடாது என்பது வேதம் எனும் கட்டுக்கதைகளைச் சொல்லி அவர்கள் தாமாக அத் தொழிலை எடுத்துக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை. நாமும் அந்தக் கட்டுக்கதைகளை நம்பி இன்று வரை ஏமார்ந்து வருகிறோம். இந்த முட்டாள்தனம் மாறவேண்டும் என்பதே என் நோக்கம். மற்றப்படி எந்தச் சமூகத்தைச் சாடுவது என் நோக்கமல்ல.
இந்தப் பதிவிற்கு இப்போதைய வாக்கு நிலவரம்: - 2 / 7.
இந்தப் பதிவிற்கு இப்போதைய வாக்கு நிலவரம்: - 2 / 7.
"வாழும் வழி" எனும் அமைப்பைச் சரியாக நீங்கள் புரிந்து கொள்ளாதது உங்கள் குற்றமல்ல.
உங்களுக்கு அது மறைக்கப்பட்டதால், அவலங்களை மட்டுமே பார்த்து துவண்டு போன மனதின் குமுறல்களே அவை என்பதை நானறிவேன், வெற்றி.
இது மறைக்கப்பட்டதற்கு, திரிக்கப்பட்டதற்கு, மாற்றப்பட்டதற்கு, பல சமூகங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், ஒரு சாரர் மட்டும் அல்ல.
ஆனால் இது மிக வசதியாக மறைக்கப் படுகிறது.
தான் தப்பித்துக் கொள்ள வேண்டி, குற்ற செய்தவர்கள், ஒருவனை மட்டும் அடையாளம் காட்டி, சாடுவதுதான் இப்போது நிகழ்கிறது.
எப்படி ஒரு காலகட்டத்தில்,.... உண்மையான நோக்கம் என்ன என்பதை மறைத்து, ஒரு சமூகத்தைத் தள்ளி வைத்தார்களோ, கொடுமை செய்தார்களோ, அதேதான் இப்போது இன்னொரு சமூகத்துக்கு நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு வேறுபாடு, முதலாமவன் குற்றமற்றவன்; இப்போது அடிபடுபவன், குற்றவாளிகளில் ஒருவன்!
மொத்தப் பதிவையும் மீண்டும் ஓரிரு முறை படியுங்கள்; நான் எதையும், யாரைரையும் நியாயப்படுத்தவோ, மறைக்கவோ முயலவில்லை, இந்த சமுதாயக் குற்றத்திற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்; அத்துடன், அதையே சொல்லிக் கொண்டிராமல், மாறிவரும் இளைய தலைமுறை ஒன்று பட்டு வாழ நாம் உதவிட வேண்டும் என்பது மட்டுமே என் கருத்து.
"முட்டாள்தனம்" என நீங்கள் குறிப்பிட்டிருப்பதை உணர்ந்து, வருகின்றவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் தானே!
மற்றபடி, நீங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் பற்றி கருத்து சொல்லி இதை மேலும் ஒரு சாதிப் பிளவு பிரச்சினையாக்க எனக்கு விருப்பமில்லை.
நிறையப் பேர் நிறையவே இது பற்றி சொல்லியாகி விட்டது.
நான் முன்னோக்கி செல்ல விரும்புகிறேன்!
கூட வருவீர்கள்தானே, உங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு!
நன்றி.
நன்றாக, உங்காள் பார்வையிலிருந்து, என்ன... கொஞ்சம் வேகமாகவே!...சொல்லியிருக்கிறீர்கள்!
-"நாம்தான் செய்ய வேண்டும்" என்று சொன்னீர்களே, அதுவே நான் வேண்டுவதும்.
நன்றி, திரு. சமுத்ரா.
பஞ்ச் டயலாக் எல்லாம் ஒண்ணுமில்லீங்க!
மன ஆதங்கம்!
நன்றி, மௌல்ஸ்
//நீங்கள் இந்தப பதிவின் மூலம் இரு சாராரையும் சாடுகின்றீர்கள் என உணர்கிறேன்.
அதுபோல் குழலி சொன்னது போல் புதிய உலகில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை அனைவரும் உணரவேண்டும்.
மற்றபடி நீங்கள் கடைசியாக கூறிய கூற்றை மீன்டும் வழிமொழிகிறேன்//
இரு சாராரையும் சாடவில்லை, சிபா!
இருசாராரிலும் மாறிவரும் மனப்பான்மையைப் பார்க்கிறேன்; போற்றுகிறேன்.
கடைசியில் சொல்வது போல....!
சும்மா யாரும் ஓடிவர முடியாது.
கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுக்க வேண்டியதைக் கொடுப்பதில் எனக்கு என்றுமே பிரச்சினை இல்லை.
அது அரசின் வேலை.
நீங்களும், நானும் என்ன கொடுக்கப் போகிறோம்?
அதைத்தான் கேட்கிறேன்.
நன்றி.
SK அய்யா,
சில விசயங்கள் அரசாங்கத்தால் நிறைவேற்றப் படாவிடின் போராடி பெற்றுத்தான் ஆக வேண்டும்.
நீங்கள் சொல்வதுபோல் கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைப்பத்தற்கு.
இது யாரையும் எதிர்க்கும் நோக்கில் இல்லை.
இந்தப் பதிவிற்கு இப்போதைய வாக்கு நிலவரம்: - 5 / 10
எஸ்.கே ஐயா,
"ஆரம்ப காலத்தில் நான்கு வருணத்தாருக்கும் உரியது வேதம் என்றே ரிஷிகள் வகுத்தனர்" என்று விவேகானந்தர் கூறுகிறார். பின்னாளில் இது 3 வருணத்தவர்க்கு மட்டும் என்று திரிந்து, பின்னர் பார்ப்பனர்க்கு மட்டும் என்று ஆயிற்று.
மேலும், வர்ணம் மற்றும் அதன் குணப் பாகுபாடுகள் ஒரே மனிதனுக்குள்ளேயே இருக்கின்றன என்பது தான் இதற்குச் சரியான தத்டுவ விளக்கம். மலர்மன்னன் எழுதிய "ஜாதியில்லை வர்ணமுண்டு" என்ற கதை இதை அற்புதமாக விளக்குகிறது. கதை இங்கே -
http://www.thinnai.com/?
module=displaystory&story_id=105111
14&format=html
நால்வருணம் பற்றிய தங்கள் கவிதை உயரிய நோக்கம் கொண்ட தங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது. "பகையுணர்வின்றி வாழ்வோம்" என்ற மெஸேஜ் தான் இன்று முக்கியமானது.
அப்படிப் போராடப் போகுமுன், இதுவரை கிடைத்ததை எப்படி நம் மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செல்லலாமே; இப்படி ஏகப்பட்ட ஒதுக்கப்பட்ட காலி இடங்களை நிரப்ப என்ன வழி என்று பார்த்து விட்டு, மேலே போராடலாம் எனச் சொல்கிறேன்,சிபா!
வாக்கு எண்ணிக்கை எல்லாம் சரியாத்தானே போகுது, குமரன்! :)
ஒண்ணும் கள்ள ஓட்டு விழலியே!?
:))
வாங்க, திரு. ஜடாயு.
நீங்க இப்படிச் சொல்றீங்க!
அங்கே திரு சார் என்னான்னா, 'னாடகம் ஆடாதே' ங்க்றாரு, இன்னொரு பதில் கவிதை போட்டு!
[[இ.வி.!!]
அலை ஒய்ந்து கட்டலில் குளிக்கப் போகிறேன் என்கிறார்.
நான் நம்புவது இரு புறமிருந்தும் மாறி வருபவர்களை!
எல்லாத் தரப்பிலும் எல்லாரும் இருப்பார்கள் தானே!
கதை படித்து விட்டு சொல்கிறேன்.
நன்றி.
///என்னை வாவென
நீயழைக்க வேண்டாம்!
நானே அங்குதான் இருக்கிறேன்
உன்னோடு சேர்ந்தின்று!///
விளங்கினால் சரி
//நீங்க இப்படிச் சொல்றீங்க!
அங்கே திரு சார் என்னான்னா, 'னாடகம் ஆடாதே' ங்க்றாரு, இன்னொரு பதில் கவிதை போட்டு!
//
அதுதான் திராவிட பண்பாடு. ஒரு கருத்தை சொன்னால் அதன் பொருளை பார்க்காமால் சொன்னவரின் ஜாதியை பார்ப்பது.
//In a mail Vajra Shankar said....//
SK ஐயா...உங்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன்...!
வேற்றுமை முன்னொரு காலத்தில் சில முட்டாள் பார்பானர்கள் பாராட்டின்ர் என்பதற்காக இன்றும் பாராட்டுபவர்கள் முட்டாள்களே...அதே போல் அந்த காலத்தில் வேற்றுமையால் பாதிக்கப் பட்டவர் என்ற முறையில் பழிவாங்கும் எண்ணத்துடன் திரிந்து கொண்டிருக்கும் மூளையில் உங்கள் உயரிய எண்ணங்கள் சென்றடையாது...
//
அடேங்கப்பா!விட்டா குழலி ஒரு கிறிஸ்தவ மத பிரச்சாரகர்-ன்னு சொல்லுவீங்க போல
//
குழலி ஒன்றும் அப்படிப்பட்டவர் அல்ல...மேலும் அந்த கமெண்ட் குழலிக்காக அல்ல...குழலியில் கருத்துக்குப் பின் நின்றுகொண்டு தாக்க விரும்புபவர்களுக்குத்தான்.
//மொத்தப் பதிவையும் மீண்டும் ஓரிரு முறை படியுங்கள்; நான் எதையும், யாரைரையும் நியாயப்படுத்தவோ, மறைக்கவோ முயலவில்லை, இந்த சமுதாயக் குற்றத்திற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்; //
எஸ்.கே
நூற்றுக்கு நூறு உண்மை.ஆதிக்க சாதியினர் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.பிராமனனை மட்டும் சொல்லிவிட்டு இவர்கள் தப்பிக்க முடியாது.என் ஜாதிக்காரர்கள் தலித்துகளை மிக மோசமாக நடத்துவார்கள்.இதுக்கெல்லாம் இவர்கள் பொறுப்பேற்ரே தீரவேண்டும்
SK ஐயா,
நண்பர் குமரன் அவர்கள் பாரதியாரின் வசன கவிதையொன்றைத் தனது பதிவிலிட்டிருக்கிறார். பாரதியைவிட யாராலும் இந்த விடயத்தை அழகாக, ஆணித்தரமாக, உள சுத்தியுடன், நேர்மையாகச் சொல்ல முடியாது.
பாரதியார் சொன்னதைத் தான் நான் எனது முன்னைய பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்.
//தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் காற்று நன்று; அதனை வழிபடுகின்றோம்.//
கவிதை அருமை!
நண்பர் SK,
சாதீய கட்டமைப்பை கட்டிக்காப்பது வேதங்கள் என்பதும், அதை அடிப்படையாக கொண்டதே பார்ப்பனீய இந்து மதம் என்பதும் உண்மை. இதை நெஞ்சத் துணிவுடன் உங்களாலோ வேறு எவராலோ மறுக்க இயலுமா? இது மலர்மன்னனுக்கும் பொருந்தும்.
//நீங்களே கோபுரம் எழுப்பி
எம்மையும் பணித்தீர்
பணி செய்யவென
அதற்குக் கூலியும் கொடுத்தீர்
வெளியில் நின்றே விமலனை வழிபட்டீர்!//
ஆதிக்கசாதியினரை அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பூசை செய்ய அனுப்பியது என்கிற உங்கள் கருத்து வரலாற்ரு உண்மை தானா? பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே விரும்பி அடிமைகளாக மாறினார்களா? கோடம்பாக்கத்து சினிமா கதைகளை மிஞ்சிய கற்பனை இது. சொற்களில் வல்லவர் நீங்கள் அதை வரலாற்றை திரித்து எழுதுவதிலா காட்ட வேண்டும்?
இந்துமத ஆகமங்கள், வேதங்கள், சாத்திரங்கள் அடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லையெனில்; அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு ஆணையை பார்த்ததும் பதறியடித்தது ஏன்?
சிதம்பரம் கோயிலில் தமிழுக்கு தீட்டு ஏன்?
திண்ணியத்தில் ஆதிக்கசாதி இந்துக்கள் தலித் மகக்ள் வாயில் மலம் திணித்தது ஏன்?
பள்லப்பட்டி, பாப்பாபட்டி என ஏன்? ஏன்?
ஹரியானாவில் செத்த மாட்டின் தோலை உரித்து தனது வேலையை செய்த 5 தலித்களை ஆதிக்கசாதி இந்து தீவிரவாதிகள் கொன்றது ஏன்?
கோயிலில் மாடு தோத்திரம் போனதை புனிதமாக கருதியதும், கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்ட குழந்தையை எட்டி உதைத்த ஆதிக்கசாதி இந்துத்துவ வெறி ஏன்?
பின்னூட்டமிட்ட சிலருக்கு முற்போக்கு சிந்தனை திராவிடமாக தெரிவது வியப்பில்லை. ஆம் மனிதம் பேசுவது திராவிடம் என்றால் திராவிடம் பெருமையானது. அடையாளங்களை ஒட்டி அழகு பார்ப்பது நீங்களே! நீயும் நானும் ஒரே மதமல்ல, ஆயினும் நான் மனிதன். நாம் மனிதனாக ஒன்று சேர்வோம். எம்மை மிதிக்கிற அடிமை கருத்துக்களை கழைவோம் போகியில் வேண்டாதவற்றை கழைவதை போல. இல்லை அடிமைத்தனத்தை கட்டிக்காக்கிற வேதங்களும், சாத்திரங்களும் உனக்கு அவசியம் வேண்டுமா ? வைத்துக்கொள் ! என்னை என் வழியில் போகவிடு ! நான் இந்துவல்ல!! நான் மனிதன்!!!
இல்லை, நீயும் இந்து தான் என என்னை நிற்பந்திக்கிறாய் என்றால் உனது சூட்சுமம் தெரிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் பல வடிவங்களில் அடிமையாக தலைமுறைகளை வைத்திருந்தாய்.
இனியும் இந்த புரட்டுகள் வேண்டா!
http://aalamaram.blogspot.com/2006/09/blog-post_06.html
அதெல்லாம் சரிதான். சூத்திராளும் கோயிலில் மணியாட்டலாம்னா எதுக்கு பாப்பாரப் பசங்க கிடந்து லபோ திபோன்னு குதிக்கனும்?
திரு. வஜ்ரா ஷங்கர்,
நான் உங்களிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவதாக சொல்பவர் சொல்லட்டும்!
ஆனால், உங்களுக்குத் தெரியும் நான் உங்கள் பதிலைமுழுமையாக வெளியிடவில்லையென்று!
உங்கள் தீவிரக் கருத்துகளுடன் எனக்கு ஒப்புதலில்லை.
ஆனாலும், உங்கள் உணர்வை மதிக்கிறேன்!
அதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கட்டும், சிவா!
நமக்கென ஒரு வழி உண்டு!
அனைவரையும் ஒன்று சேர்த்து செல்வது -- வருபவர்களை!!
அதில் உறுதியாய் இருப்போம்!
புதிய "பாரதம்" படைப்போம்!
எஸ்.கே அய்யா ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். கிடைக்கவில்லையா, அல்லது வெளியிட விருப்பம் இல்லையா என்பதை மட்டும் அறிய ஆவல்
யார் யார் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என, முடிவு செய்ய முனைபவர்கள் முனையட்டும், செல்வன்!
இதோ, வருகிறார்களே, மனம் மாறி... அவர்களை வரவேற்று வழி காட்டிச் செல்வோம், வாருங்கள்!
கூவுபவர்கள், கூவிக்கொண்டே,.. அங்கேயே நிற்கட்டும்!
பாரதி இருந்து எழுதியது, 1910களில்!
அதுவா இன்றைய நிலை? வெற்றி!
மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்!.....
அனைத்து தரப்பு மக்களும்!
ஒரு சிலர் இன்னும் பழைய நிலையே இருக்காதா என ஆசைப் படுகின்றனர்!
அவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்.
மாய பிம்பம் இன்னும் வேண்டாம்1
மனம் மாறி பலர் வருகின்றனர்1
எல்லாத் தரப்பிலும்!
ஆனாலும், இன்னமும், பாப்பாரப்பாட்டியும், கீரிப் பட்டியும் இருக்கின்றன!
அவைகளுக்கு பார்ப்பனர் அல்ல காரணம்!
ஆனாலும், அதே உணர்வைஊட்டி வளர்க்க ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது!
நானும் ஒரு பார்ப்பனன் என்ற முறையில் இதை அறுதியிட்டுக் கூறுகிறேன்!
நாங்கள் மாறிவிட்டோம்!
இதைப் பொறுக்காமல், இதில் குளிர் காய்ந்தவர்கள், எங்களைச் சாடியே தம் குற்றம் மரைத்தவர்கள், இன்று இடும் ஓலத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
இதுதான் நான் வேண்டுவது, வெற்றி!
உரிமையுடன், உறுதியுடன் சொல்கிறேன்!
நன்றி!
//"கவிதை அருமை"//
என்ன, அவ்வளவுதானா, தம்பி?
:))
நன்றி!
//ஆதிக்கசாதியினரை அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பூசை செய்ய அனுப்பியது என்கிற உங்கள் கருத்து வரலாற்ரு உண்மை தானா?//
தஞ்சைக் கோயில் கட்டியது ராசராசனா, இல்லை ஒரு பார்ப்பானா?
இன்ன பிற கோயில்களைக் கட்டியது மன்னரும் மற்ற சாதியினருமா, பார்ப்பன்ரா?
சொல்லுங்கள், திரு!
//இந்துமத ஆகமங்கள், வேதங்கள், சாத்திரங்கள் அடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லையெனில்; அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசு ஆணையை பார்த்ததும் பதறியடித்தது ஏன்? //
இறைவனுக்கு பூசை செய்யும் விதியை அன்று முதல் இன்ரு வரை செய்து வந்த ஒரு அண்மை உணர்வினாலேயே!
திடீரென ஒருவன் வந்து அரசாணை மூலம் இன்று முதல் அனைவரும் உங்கள் வீட்டிற்குல் வரலாம் என்று சொன்னால், ஒரு கம்யூனிச நாட்டில் சரி, ஒரு ஜனநாயக நாட்டில், நீங்கள் எப்படி அதை எதிர் கொள்வீர்களோ, அதே உணர்வுதான் ஒரு சிலருக்கு ஏற்பட்டது.
எனக்கு இறைவன் என்னுள்ளே இருக்கிறான்!
நான் கிராமத்துக்குச் செல்லும் போது, பூசாரியிடமும் 'துன்னூறு' வாங்கிக் கொள்வேன்,;
கோவிலில் அர்ச்சகரிடமும்!
ஆனால், உள்ளே சென்று வழி பட வேண்டும் என விரும்ப மாட்டேன்.
இது என் நிலைப்பாடு மட்டுமே!
//சிதம்பரம் கோயிலில் தமிழுக்கு தீட்டு ஏன்? //
இது எவ்வலவு தவறான வாதம் என்பது, இது வரை நடப்பதில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும்!
தமிழுக்குத் தீட்டு இல்லை அங்கு!
இது பற்றி ஏற்கெனவே நிறையப் பேசிவிட்டதால் விடுகிறேன்!
//திண்ணியத்தில் ஆதிக்கசாதி இந்துக்கள் தலித் மகக்ள் வாயில் மலம் திணித்தது ஏன்?
பள்லப்பட்டி, பாப்பாபட்டி என ஏன்? ஏன்?
ஹரியானாவில் செத்த மாட்டின் தோலை உரித்து தனது வேலையை செய்த 5 தலித்களை ஆதிக்கசாதி இந்து தீவிரவாதிகள் கொன்றது ஏன்?
கோயிலில் மாடு தோத்திரம் போனதை புனிதமாக கருதியதும், கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்ட குழந்தையை எட்டி உதைத்த ஆதிக்கசாதி இந்துத்துவ வெறி ஏன்?//
இதெல்லாம் குற்றமில்லையென்று சொல்லவில்லை!
தவறான கதவை, வேண்டுமென்றே தட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றே சொல்வேன்!
இன்னும் எத்தனை நாளைக்கு?
இது தவறு என்று, இதோ நான் சொல்கிறேன், என்னைப் பாராட்டுகிறீர்களா?
இல்லையே!
முத்திரை குத்தி பழிக்கும் பதிவுகளைத்தானெ பின்னூட்டங்களில் இன்னமும் வெளியிட்டு மகிழ்கிறீர்கள்!
உங்களை நான் வேறுவிதமாகக் கற்பனை செய்து ஏமாந்தேன் என்பதே உண்மை!
//இல்லை, நீயும் இந்து தான் என என்னை நிற்பந்திக்கிறாய் என்றால் உனது சூட்சுமம் தெரிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் பல வடிவங்களில் அடிமையாக தலைமுறைகளை வைத்திருந்தாய்.
இனியும் இந்த புரட்டுகள் வேண்டா!//
புரட்டென்று சொல்ல உனக்கெந்த அதிகாரமும் இல்லை!
எப்படி நீ உந்தன் கருத்தை ஒளிவின்றி சொல்கிறாயோ
அப்படியே மற்றவர்க்கும் உரிமை உண்டென்பதை ஏன் மறந்தாய்!
வரவில்லை, வர மனமில்லையெனில்,
நடத்து, நடத்திக் கொண்டிரு
உன் நாடகத்தை!
உலகம் உன்னை விட்டு எங்கோ ஓடியிருக்கும்!
உணர்வாய் நீ அதனை ... தாமதமாக!
நன்றி. நண்பரே!
'மரத்தடி'யாரே! மேலே நண்பர் திருவுக்குக் கூறிய பதிலைப் பார்க்கவும்.
வந்ததற்கு நன்றி!
அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்!
மறைந்து, மறந்து போனது முன்னைய பின்னுட்டத்தை வெளியிட!
கவனக் குறைவுக்கு வருந்துகிறேன், திரு. முத்துக் குமரன்!
இனி,
//அடடா என்னே நயம்! என்னே நயம்!!
தொழில்களை சுழற்சி முறையில் பங்கிட்டுக் கொள்ளலாமா!!//
அருள் கூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன்!
மரைந்து, மரந்து போனது முன்னைய பின்னுட்டத்தை வெளியிட!
கவனக் குறைவுக்கு வருந்துகிறேன், திரு. முத்துக் குமரன்!
இனி,
எனக்கு சம்மதமே! இக்கால வசதிகளில் அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.
உங்கள் கடையை நான் எப்போது எடுத்துக் கொள்ளலாம்?
துப்பாக்கி சுட பயிற்சி நிலையம் இருக்கிறது!
பாத்ரூம் கழுவ லைசால் இருக்கிறது!
உங்களுக்கு வேதம் கற்றுத்தர நான் ரெடி!
எப்படி வசதி?
//சரி வாங்க அனைவரும் கருவறைக்குள் செல்வோம். கட்டித்தழுவுவோம்//
அது எப்படீங்க?
முறைப்படி, நீங்க போய் கட்டித்தழுவும் போது[!!!] நான் வெளியெ நின்னுதானெ துன்னூறு வாங்கணும்!!:)
//சாத்தான் ஓதும் வேதம் எப்படி இருக்கும் என்று நீண்ட நாள் தெரியாது இருந்தது.
இன்று.... //
உங்களுக்கு சாத்தானையும் தெரியாது! வேதமும் இதுவரை தெரியாது!
எதுக்கு தெரியாத விஷயத்துல எல்லாம் தலையை நுழைக்கிறீங்க?
பி.கு.: உங்கள் பாணியிலேயே பதிலிறுத்ததை தமிழின்புறுவீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்!
பி.கு.: உங்கள் பாணியிலேயே பதிலிறுத்ததை தமிழின்புறுவீர்கள் என நிச்சயமாய் நம்புகிறேன்!
நெடுநாள் கழித்து தமிழ் சுவைக்க வந்ததற்கு நன்றி, திரு. முத்துகுமரன் !['க்' இல்லை!!]
//Thalaivar SK, I think my comment is missing. moderated? //
வருத்தத்துடன்.. ஆமாம், திரு. நெருப்பு சிவா!
மன்னிக்கவும்.
பிரசுரிக்கத் தகுந்ததாக எனக்குப் படவில்லை.
மாற்றிப் போடவும் மனமில்லை.
அதனால் தான்.
மீண்டும் புதிதாய் சொல்லுங்கள்!
மேலும் இது என் பதிவுக்கான மறுமொழி அல்ல என நினைக்கிறேன்!
உங்கள் வசைபாடலை, தனி மனிதத் தாக்குதலை வெளியிடத்தான் நண்பர் திரு இருக்கிறாரே!
SK அவர்களுக்கு உங்கள் பதிவின் நோக்கம் மிக சிறப்பானது என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன்.
ஆனால் அதே சமயம் இங்கு உங்களுக்கு எதிர் வாதம் செய்துள்ள சிலரிடமும் மிக சிறப்பான வாதங்கள் உள்ளது என்பதை தாங்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதே சமயம் எதிர் வாதம் புரியும் அனைவரிடமும் நான் வைக்கும் கோரிக்கைகள் எந்த வாதமும் அன்பான முறையில் செய்யுங்கள்.
கோபம் கொள்வது யாருக்கும் எளிது கோபம் கொள்ளாமல் அன்பான முறையில் எல்லா இன்னல்களையும் எதிர் கொள்வதுதான் கடினமானது.
ஒடுக்கப் பட்ட மக்களுக்காக கண்டிப்பாக குரல்கள் எழுப்பப் பட வேண்டும் அக்குரல்கள் அன்பு வழியில் அற வழியில் எழுப்பப் பட வேண்டும் மாற்று மனிதரை கீழ்மை படுத்தி எழுப்பப் படக் கூடாது.
பிறர் தவறு செய்தார் என்பதால் நாமும் மீண்டும் தவறிழைக்க கூடாது.
மாறி விட்டோம் சேர்ந்து நாளை உலகை சந்திப்போம் என்று குரல் கொடுக்கும் ஒருவருக்கு கண்டிப்பாக துணை இருத்தல் வேண்டும்.
இங்கு SK அவர்களின் கவிதை சேர்ந்து நாளை உலகை சந்திப்போம் என்கிறது அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
இதுவே என் வேண்டுகோள்.
தாழ்த்தப்பட்டவர்கள் தம் மீது திணிக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிய வேண்டும்.
அது போல உயர்குடிகளும் தம் வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும். அட்லீஸ்ட் பூணூலை விட்டாவது. மற்ற சாங்கியங்களை அப்பால பார்க்கலாம்.
மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்' என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி.
சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் காற்று நன்று; அதனை வழிபடுகின்றோம்.
-----------------
பாரதியாரின் 'காற்று' என்ற வசனகவிதையின் 10ம் பாகத்தில் உள்ள வரிகளில் சிலவற்றை நண்பர் வெற்றி இங்கே தந்திருக்கிறார். அந்த வரிகளை மட்டுமே படித்தால் பாரதியார் என்ன சொல்ல வருகிறார் என்ற தெளிவு ஏற்படாதோ என்று தோன்றுவதால் 10ம் பாகம் முழுவதையும் இங்கே தந்திருக்கிறேன். பாரதியார் என்ன சொல்ல வருகிறார் என்பதை 10ம் பாகம் முழுவதும் படித்துப் புரிந்து கொள்ளலாம்.
அன்பின் SK,
உங்களை வசைபாடுவதோ, தனிமனித தாக்குதல் நடத்துவதோ என் வேலையல்ல. உங்களது தமிழை, தமிழ்க்கடவுள் மீதான காதலை மிகவும் மதிக்கிறேன்.
அதே வேளை இந்த கவிதையின் கருத்தியலை எதிர்க்கிறேன். அதற்குள் ஒளிந்து கிடக்கிற சூட்சுமத்தை வெளிப்படுத்துகிறேன். உங்கள் பார்வையில் எனது கவிதை ஏற்றுக்கொள்ள எப்படி முடியவில்லையோ அதே போல பாதிக்கப்பட்ட மக்களது பார்வையில் உங்களது பதில் கவிதையின் கருத்தியல் ஏற்கமுடியாதது என்பதை சுட்டுவது மட்டுமே நோக்கம். உங்களது
தமிழை, நம்பிக்கையை தனிப்பட்ட முறையில் தாக்குவதால் இன்புறும் கோழையல்ல நான். என்னை திட்டி வந்த பின்னூட்டங்களாக இருப்பினும் பிறரது எல்லா பின்னூட்டங்களையும் அனுமதித்திருக்கிறேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை உணர்வீர்கள் என நம்புகிறேன். உங்களை திட்டியதாக கருதுகிற பின்னூட்டங்களை தனிமடலில் குறிப்பிடுங்கள் அவற்றை பரிச்சீலிக்க தயாராய் இருக்கிறேன்.
//வா! புதியதோர் உலகம் காண்போம்! பகையுணர்வின்றி அங்கு வாழ்வோம்!//
இந்த வரிகள் உயர்ந்த வரிகள். இந்த இலக்கை அடைய எது அநீதியோ, எது தடையாக இருக்கிறதோ அதை அப்புறப்படுத்தவேண்டும் அப்போது தான் நாம் ஒன்றாய் சேரமுடியும். வர்ணாஸ்ரம பார்ப்பனீய கருத்தியலை நடைமுறையில் மதத்தின் உள்ளே வைத்திருக்கும் வரை புதிய உலகம் படைத்தாலும் அது சமத்துவ உலகமாய் இருக்காது. சாதி வேறிபாடுகள் இருக்கத்தான் செய்யும். இந்த இடத்தில் உங்கள் கருத்தியலோடு வேறுபடுகிறேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். யாரையும் கழுமரம் ஏற்றவோ, தீயிலிட்டு பொசுக்கவோ, கொலை செய்யவோ அழைக்கவில்லை. எது இருவரும் ஒன்றுசேர தடுக்கிறதோ அதை கழைவோம் இருவருமே என்கிறேன். இல்லை இது எங்கள் நம்பிக்கை அதில் கேள்வியெழுப்ப முடியாது, அவற்றை மாற்றுவது பற்றி சிந்திக்கவே மாட்டேன், இதை கேட்க நீங்கள் யார் என்றால்; நாம் அனைவரும் இந்துவல்ல என்பது உண்மையே.
உங்களது மற்ற கேள்விகளுக்கான பதில்களை தனிப்பதிவாக வெளியிடுவேன்.
நட்புடனே,
திரு
திரு. மௌல்ஸ்,
தமிழ்மணம் யார்? நாம்தானே!
நம் பதிவுகளை பலர் படிக்கிறார்கள் என நம்புகிறோம்.
அவர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியது, மாற்றத்தை, மாறி வருவதை!
பழங்கதை தான் அவர்களுக்கும் தெரியுமே!
அதைத்தான் சொல்ல வந்தேன்.
எவரையும் தனியே குறிப்பிட்டு அல்ல!
நன்றி!
மிக அருமையாகவும், பொறுமையாகவும் கருத்தளித்த திரு. காந்தித் தொண்டன், உங்களுக்கு என் நன்றி.
எதிர்வாதங்கள் உண்மையில்லை என்று நான் எப்போதும் கூறவில்லை.
அநியாயங்கள் நிகழ்த்தப் பட்டது உண்மை.
இன்றும் ஓர் அளவில் தொடர்வதும் உண்மை!
ஆனால், "பலர்" மாறி வருகின்றனரே!
அவர்களைக் கவனிக்க வேண்டாமா?
சந்தேகக் கண்ணோடு நோக்கிக் கொண்டே இருந்தால் என்ன செய்வது?
அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் நடந்தால், அதன் மூலம் இன்னும் பலரை வரவழைக்கலாமே என்னும் அந்தரங்க சுத்தியுடன் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லாமல்!
புரிதலுக்கும், வருதலுக்கும் நன்றி!
உங்கள் "கருத்து"டன் ஒத்துப் போகிறேன்!
அடையாளங்கள் முக்கியமில்லை. மனமாற்றம் தான் இப்போதையத் தேவை!
தனிப்பட்டவர் சுதந்திரங்கள் அவை!
அதுவே கால ஓட்டத்தில் மாறிவிடும்.
பார்ப்பனர் மட்டும் பூணூல் அணிவதில்லை.
வேறு பல சாதியினரும் பெருமையுடன் அணிவது உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன்.
உடனே, தவறாகக் கருத வேண்டாம்.
அடையாளங்களை விடுவதின் மூலம் மட்டுமே ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பது என் "கருத்து".
நன்றி, திரு. "கருத்து"!
அன்பு SK,
முந்தைய பின்னூட்டத்தில் அனுப்ப தவறிய பகுதி இங்கே!
SKயை அல்ல, எந்த தனிப்பட்ட சாதியினரையும் அல்ல, எந்த சாதியில் இருந்தாலும் ஆதிக்க கருத்தியலை எதிர்க்கிறேன். அந்த விதத்தில் இந்துமதத்தின் சாதி ஆதிக்க கருத்தியலை கட்டிக்காக்கிற வேதங்களை, கட்டமைப்புகளை, புராணக்கதைகளை கழையவே எனது அழைப்பு. இதில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டும் எனது பதிவுகள் முன்னிறுத்துவதாக எண்ணுவதை மறுக்கிறேன். ஆதிக்க கருத்தியலான பார்ப்பனீயம் எங்கிருந்தாலும் அதை எதிர்ப்பது கடமை. நன்றி!
இதையேதான் கொஞம் வேறு விதமாகச் சொல்லியிருந்தேன், குமரன்.
ஒரு சமூக அமைப்பிற்காக, வசதிக்காக, மனிதருக்குள் பேதமில்லாமல், தொழில்களை மட்டும் வகைப்படுத்தி பிரித்து வைத்த ஒரு உன்னதமான "வாழும் வழியை" சில மூடர் தாம் செய்யும் அளவைக் காட்டி, மனிதரையே பிரித்து, கொடுமை செய்த அவலம் தான் உண்மையான வரலாறு.
இது, எங்கு, எப்போது, எந்த கால கட்டத்தில், யார்,யாரால் நிகழ்ந்தது என எவரும் அறுதியிட்டுக் கூற முடியாது!
ஆனால், பார்ப்பனர்களுக்கும் இதில் பங்கு, சரி... பெரும்பங்கு...இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
மாறிவரும் இக்காலத்தில் இருந்து பின்னோக்கிச் செல்வதா, அல்லது முன்னோக்கிச் செல்ல விழைவதா என்பதே என் கேள்வி.
முழுக் கவிதையையும் அளித்ததற்கு மிக்க நன்றி, குமரன்.
கருத்துக்கும், மதிப்புக்கும் நன்றி, நண்பர் திரு.
உங்கள் கவிதையைப் படித்ததும், என் மனதில் எழுந்த, 'இனி என்ன செய்யலாம்' என்ற கற்பனையில்[??] எழுந்த எண்ண ஓட்டங்களையே நான் வடித்திருந்தேனே தவிர, உங்கள் கவிதைக்கு மாற்றாகவோ, அல்லது நீங்கள் சொல்வது போல 'ஏதோ சூட்சுமத்தை ஒளித்து வைத்தோ, நாடகம்" ஆடவில்லை என்பதை அந்தத் தமிழ்க் கடவுள் மேல் ஆணியிட்டுச் சொல்லுவேன்.
பாதிக்கப் பட்டவர்கள் என நீங்கள் சொல்லும் பலருடன் இத்தனை ஆண்டுகளாகப் பழகிய அனுபவத்தின் மீது கூறுகிறேன், நீங்கள் சொல்வது போல 'அனைவரும்' அப்படி இல்லை.
இனியாவது நல்லது நடக்க உத்திரவாதமும், அறிகுறிகளும் இருக்குமாயின் மாற்றத்தை வரவேற்று, பழங்கதையை மறக்க அவர்கள் தயாராகவே இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன்.
இலக்கை அடைய தடைகள் என்று உட்கார்ந்திராமல், தடைகளை ஒதுக்கி வருகின்றவர்களை ஒன்று சேர்த்தாலே போது, தடைகள் தானே ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பது என் கருத்து. உங்களது வேறு விதமாய் இருக்கிறது.
தீயிலிட்டுப் பொசுக்கியோ, கழுமரம் ஏற்றியோ செய்வதானால், இன்று அரசன் முதல் ஆண்டி வரை பாதிக்கும் மேற்பட்ட தமிழகத்தை காலி செய்ய வேண்டியிருக்கும்.
இது உங்களுக்கும் தெரியும்.
இருப்பினும், திரும்பத் திரும்ப, வர்ணாசிரம, பார்ப்பனீய கருத்தியல் என்ற ஒரு இருவேறு சொற்களைச் சேர்த்து சொல்லாட்டம் ஆடுவது, பகையுணர்வை மறக்கும் செயலல்ல.
அவற்றை மாற்றுவது பற்றி சிந்திக்கவே மாட்டேன் என நான் சொல்வதாக நீங்கள் சொல்வது அதை மேலும் உறுதிப் படுத்துகிறது.
தனி மனிதத் தாக்குதலை விடுவோம் என தமிழ் மணம் அறைகூவல் விடுத்த பின்னும், திரு.'அசுரன்' மற்றும் சிலர் என்னைக் குறிப்பிட்டு எழுதிய பின்னூட்டங்களை பிரசுரித்ததால் தான் நான் அப்படிச் சொன்னேன். அது உங்கள் உரிமை.
மீண்டும் வேண்டுகிறேன்; மாற்றங்களைப் பாருங்கள்! மாறி வருபவர்களைப் பாருங்கள்! மனம் மகிழ்ந்து கை கொடுப்போம்! பகையை மறப்போம்! புத்துலகம் காண்போம்!
உங்களிடமிருந்து இன்னமும் எதிர்பார்க்கிறேன், நட்புடனே!
அப்பாடா! நீங்களாவது கண்டுபிடித்துச் சொன்னீர்களே, திரு. வணக்கத்துடன்!
என் பதின் தொனியில் இருந்து மாறியாதாக யார் சொன்னது?
படிவின் தொனி அப்படியேதான் இருக்கிறது!
அது, மாறிய இருவர் கை கோர்த்து, பழங்கதையைப் பற்றி சிரித்தபடி, கேலி செய்தபடி, கை கோர்த்துச் செல்லும் போது படுவதாக அமைந்த வரிகள்!
ஆனால், பதிவுக்கு வந்தவர்களில் பலர், அதை எப்படிச் செய்யலாம் என்பதை விடுத்து, வேறு பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருப்பதால், இன்னும் பாயசம் பரிமாற முடியவில்லை!
இதன் மூலம் இன்னும் சிலரும் புரிந்து கொள்ளும் வாய்ப்பிருப்பதால், இதை தொடரவும் செய்கிறேன்.
நான் சொன்னது இன்றைய நிகழ்வும் நாளைய நிச்சய நடப்பும்!
இன்னும் இங்கே பேசப்பட்டுக் கொண்டிருப்பது நேற்றைய கொடூரம்!
நடக்கப் போவதைப் பற்றிப் பேசலாமே ஒத்த கருத்துள்ளவர்கள்?
என்ன சொல்கிறீர்கள்?
நன்றி!
:)
//ஆதிக்க கருத்தியலான பார்ப்பனீயம் எங்கிருந்தாலும் அதை எதிர்ப்பது கடமை. நன்றி!//
ஆதிக்கக் கருத்துகள் என்பது சரி!
அதற்கு 'பார்ப்பனீயம்' என பெயர் சூட்டி ஒதுக்குவது எப்பட்ச்டி தனி மன்னித அல்லது தனி இனத் தாக்குதல் இல்லை என்று சொல்கிறீர்கள்?
ஏன், 'தேவரீயம்' 'முதலியாரீயம்' பிள்ளைஇயம்' எனச் சொல்லக் கூடாது?
[ஒரு உதாரணத்துகாகச் சொன்னது. மற்றபடி எந்த ஒரு சாதியையும் குறித்தல்ல!தவறாக எண்ண வேண்டாம்]
இங்குதான் நோக்கம் பிறழ்கிறது, அன்பு திரு.
திரு. மாசிலா,
உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க வில்லை. மன்னிக்கவும். எதை வைத்து அப்படிச் சொல்லுகிறீர்கள் என்பதை விளக்கினால் நலமாயிருக்கும். நன்றி.
என் பின்னூட்டத்தை போடவேண்டாமென நீர் எடுத்த முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது. இத்தனைக்கும் நான் எதையும் அபத்தமாக சொல்லவில்லையே! நான் கேட்டிருந்த கேள்வி நியாயமானதுதான். உங்கள் வாதத்தின் மூளக்கருத்து பிறந்த நேரத்தில் உம் மன நிலை எந்த வித எண்ணங்களால் சூழப்பட்டிருந்தது என்பதே என் கேள்வி.
திரு. மாசிலா,
இது போன்றே நேரடியாகக் கேட்டிருந்தால் பிரசுரிக்கத் தயக்கம் இல்லை எனக்கு.
கேள்வியை மாற்றி வடிவமைத்து, நான் பதிலுறுத்தும் வண்ணம் கேட்டமைக்கு மிக்க நன்றி!
நீங்கள் கேட்ட கேள்வி என்னை மிகவும் பாதித்தது!
நண்பர் திருவிடம் ஏற்கெனவே சொல்லியது போன்று, அவரது முதல் கவிதையைப் படித்ததும் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி, என் போன்றோரெல்லாம் ஏன் அவர் கண்களில் படவில்லை என்பதுதான்!
எனது தலித் நண்பர் ஒருவரும், நானும் பேசிக்கொள்ளும் போது அவன் என்னைச் சீண்டுவதும், பதிலுக்கு நான் அவனைக் கேலி செய்வதுமாக் கழித்த பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன.
ஒரு சோகத்தை உள்ளடக்கியே அவனும், ஒருவிதத் தயக்கத்துடனேதான் நானும் முதலில் பழக ஆரம்பித்தோம்.
படிப்படியாக எங்கள் நட்பு உறுதி பெற்றது.
அதற்கு நான் என் தாய், தந்தை இருவருக்குமே இப்போதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
அன்புடனும், நன்றியுடனும் அவர்களை நினைவு கூருகிறேன்.
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதை அந்நாளிலேயே எங்களுக்கு போதித்து வாழ்ந்தும் காட்டிய நல்லவர்கள்!
எத்தனையோ முறை என் நண்பன் எங்களுடன் உட்கார்ந்து உணவருந்தியிருக்கிறான். நானும் அவர்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.
அவன் அம்மா, பயந்து தயங்கி ஒரு மண் கலயத்திலோ, அல்லது அலுமினிய பாத்திரத்திலோ "டாக்டர் வூட்டுப்புள்லை எங்க வூட்ல எல்லாம் சாப்டுமா!" என்று சொல்லி அன்புடன் கொடுத்த நீர்சோற்றை உண்டிருக்கிறேன்.
அவனும், நானும் அன்புடன் பழகிய காலத்தில், நாங்கள் பேசிக்கொண்ட நினைவுதான் என்னை இது போல நான் கண்ட பலரை எண்ண வைத்தது!
இவர்களின் எண்ணிக்கை பெருக, நாம் பேசலாமே எனவும் தோன்றியது.
அவர் கவிதையைப் படித்த அடுத்த அரை மணி நேரத்தில் எழுதி முடித்தேன்.
ஓரிடத்திலும் யோசிக்கவில்லை.
பகை மறந்த புத்துலகம் காண முடியும், நாம் அதற்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர வேறு ஏதும், நாடகமோ, ஒளித்து மறைத்த சூட்சுமமோ கிடையாது என மீண்டும் உறுதி கூறுகிறேன்.
சிறு வயதில் நடந்த அந்த நிகழ்வு, என்னைப் பிற்காலத்தில் வேற்றுமை பாராட்டாமல் எல்லாருடனும் பழக முடிந்த துணிவைக் கொடுத்தது!
வைரமணிக்கு நன்றி! [அவன் பெயர், ஊர் திருச்சி, ஈ.ஆர். உயர்நிலைப் பள்ளி, நிகழ்வு 1960களில்!!]
இதை சொல்ல வைத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அன்பு. மாசிலா!
பி.கு.: இருவரும் அவரவர் அடையாளங்களோடுதான் பழகினோம்; அது ஒரு தடையாக இருக்கவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
ஆனால், திணிப்பில்லை!
-
தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் காலமும் வருமோ?
மனிதரை, மனிதரென அன்புசெலுத்தும் காலமெப்போ?
வாதத்திற்கு முடிவு(மருந்து) உண்டு; பிடிவாதத்திற்கு?
சாற்றிறங்கள், கதைகள், இலக்கியங்கள் ஆகியவைகளில் தங்களுக்குச் சாதகமாக இருப்பதை மட்டும் வைத்துகொண்டு, அதைமட்டும் தங்களின் விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டு குளிர்காய்வது இன்னுமெத்தனை காலம்? அவை சொல்லும் உண்மைக் கருத்துக்கள் ஏன் வெளியிடாமல் மறைக்கப்பட்டன? இதனால் மறுசாராரிடம் அவைகளின்மீதே வெறுப்பு!
இவைகளால் காலவிரையம் எவ்வளவு? இவ்வாதங்களால் நண்பர்களுக்குள் எத்தனை மனக்கசப்பு?
இவையொழித்து அன்பு செலுத்துவது எவ்வளவு நன்றாக இருக்கும்?
நான் வாத்தியாரல்ல; நாட்டாமையுமில்லை. என் ஆதங்கத்தை எத்தனை காலம்தான் கட்டுப்படுத்துவது.
"ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது அறிவுக்கு வேலை கொடு." இதை மட்டும் அருள்கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள், நண்பர்களே.
நான் அனைவரும் நண்பர்களே, நாம் அனைவரும இந்தியரே, நாம் அனைவரும் தலித்துக்களே, நாம் அனைவரும் ஒரே குடும்பம் என் கூறியிருக்கலாமே. ஏன் இடையில் மதத்தை இழுத்தீர்கள். மறுபடியும் உங்கள் ஆதிக்க குணத்தை அவர்மீது செலுத்தி அவரை உம் இழுக்கும் நோக்குடன் இருந்திருக்கிறீர்கள்.
ஏன், மதமே இல்லாமல்கூட இருக்கலாமே! மனிதர்கள் கட்டாயமாக ஏதாவது மதத்தை தழுவி வாழ்ந்துதான் ஆகவேண்டும் என சட்டம் இல்லையே.
நன்றி எஸ்.கே. இதனைத் தான் நானும் என் பின்னூட்டத்தில் கேட்டேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள். எனக்குப் புரியவில்லை என்று. இப்போது உங்கள் கவிதையைப் படித்தால் எனக்கு அரைகுறையாக முன்பு புரிந்தது சரியே என்று தெரிகிறது. மிக்க நன்றி.
உங்களுக்கு மட்டும் இல்லை. இங்கே இந்த சர்ச்சையில் ஈடுபடாமல் படித்துவிட்டுப் பேசாமல் சென்றவர்கள் பலருக்கும், படிக்காமலேயே இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று சென்றவர்களில் பலருக்கும், பார்ப்பன வெறுப்புடன் எழுதிவிட்டு பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்று சொல்பவர்களால் பார்ப்பன அடிவருடி என்று ஏசப்படுபவர்கள் அனைவருக்கும் இதே மாதிரி அனுபவங்களும் உணர்வுகளும் உள்ளன என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.
மேலே பார்ப்பன அடிவருடி என்று ஏசப்படுபவர்களை மட்டும் சொன்னேன். பார்ப்பன வகுப்பில் பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டுவிட்டேன். பார்ப்பன வகுப்பில் பிறந்தவர் எல்லாருமே சாதியை விட்டுவிட்டார்கள் என்று சொல்வது பொய்யாகும். எந்த சாதியை எடுத்துக் கொண்டாலும் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள். சொல்லப்போனால் எண்ணிக்கையில் மற்ற வகுப்பில் சாதி உணர்வு கொண்டவர்கள் பார்ப்பன வகுப்பில் உள்ளவர்களை விட அதிகம். (இது என் அனுபவத்தில் பார்த்து. மற்றவர் அனுபவம் வேறாக இருக்கலாம். இல்லை நான் அணியும் கண்ணாடியும் அவர்கள் அணியும் கண்ணாடியும் வெவ்வேறு நிறத்தினதாக இருக்கலாம்). ஆனால் பார்ப்பன வகுப்பிலும் சாதி என்ற உணர்வே இல்லாமல் எல்லாருடனும் சமமாகப் பழகும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை பார்ப்பன வெறுப்புடன் எழுதும் 'பார்ப்பனிய' எதிர்ப்பாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. கேட்டால் அவர்கள் சிறுபான்மை என்று இடக்கையால் தள்ளிவிட்டுச் சென்று கொண்டே இருக்கிறார்கள்.
அனுவத்தின் வழியே விளைந்த முத்தான சொற்களைக் கண்டு மனமகிழ்கிறேன், திரு. ஞானவெட்டியான்!
அன்பின் வழி செல்லத் தூண்டும் உங்கள் அறிவுரை அனைவர் இதயங்களையும் சென்றடைய வேண்டுகிறேன்..
மிக்க நன்றி.
அனைவருக்கும் விரைவில் விளங்கி விடும், திரு. 'கெபிடல்'[Capital]
பதிலளிக்கத் தாமதமானதற்கு மன்னிக்கவும்.
உங்களுக்கு எத்தனை முறை சொல்வது, திரு. மாசிலா, இது நண்பர் திருவின் கவிதயில் விளைந்த ஒன்று என்பதை?
அவர் தலைப்புக்கு மறு தலைப்பு அதை ஒட்டியே வைத்தேன். இதிலென்ன தவறு?
மேலும் நான் என்ன சொல்ல வேன்டும் என நீங்களொ அல்லது நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என நானோ நிர்பந்தத்தல் தனி மனித சுதந்திரத்தில் குறுக்கிடுவது என்பதி தாங்கள் உணராதது பெரிய சோகம்!
இதுதானே தந்தை பெரியார் வலியுறுத்தியது?
மதமே இல்லாமல் இருக்கலாமே எனச் சொன்ன நீங்கள் விண்ணப்ப படிவங்களில் மதம் கேட்கிறார்கள் என எப்போதாவது அதனை மறுத்ததுண்டா?
அது அரசு ஆணை என்று சொல்வீர்கள்.
அது போலத்தான், ஏதாவது நிகழ்ந்து மதங்களைத் தடை செய்தால்தான் இது சாத்தியம்.
கம்யூனிஸ நாடுகளில் கூட இன்னும் மதங்களை பின்பற்றுவோர் அதிகரித்து வருகின்றனர் எனப் படிக்கிறேன் இப்போது!
எனக்குத் தெரிந்து, மதங்களைத் தடை செய்யாமல், அது உன் சொந்த விஷயம்; ஆனால், பொதுவில் செய்யாதே என விண்ணப்பங்களில் கூட அதைக் கேட்காத ஒரு நாடு...... மயங்கி விழுந்து விடாதீர்கள்,....... அமெரிக்கா!!!
நன்றி!
அதற்குத்தான் இன்னும் சில முறை படியுங்கள் எனச் சொன்னேன், குமரன்!
புரிந்தது என எழுதியதற்கு நன்றி.
நீங்கள் சொன்ன அந்த மாறிவரும் இளைஞர்களை ஒன்று சேர்த்து வரவேற்கலாம் என்பது என் கருத்து.
உங்கள் இரண்டு பின்னூட்டங்களுக்கும் அதில் உள்ள கருத்துகளுக்கும் எனது நன்றி!
மிக்க நன்றி, திரு. மௌல்ஸ்.
என் போன்ற அனுபவம் பல பேருக்கு உண்டு என்பது எனக்குத் தெரியும்.
:)
Post a Comment