"[புது] வேதம் படிப்போம்!"
"புது வேதம் படிப்போம்!"
ஜெயஸ்ரீஅவர்களுக்கு நன்றி!
வெற்றி அவர்களுக்கு நன்றி!
வெற்றி ஒரு பதிவு போட்டு, யார் எழுதியது இந்தக் கவிதை எனஒரு கவிதையைக் கேட்காவிட்டால்,
ஜெயஸ்ரீஅவர்கள் வந்து, 'பாரதியா' எனச் சொல்லா விட்டால்,
நான் பாரதியை இன்று முழுதும் புரட்டியிருக்க மாட்டேன்!
அப்படிப் புரட்டிய போது கண்ணில் பட்டது இந்தக் கவிதை!
இன்று "விடாது கருப்பு" முதல், "வஜ்ரா சங்கர்" வரை அலசப்படுகின்ற ஒரு தலைப்பின் கருத்தை அன்றே பாரதி எவ்வளவு தெள்ளத்தெளிவாக உணர்த்தியிருக்கிறான் என்பதைப் படிக்கையில்,
நெஞ்சம் இறுமாப்புறுகிறது!
உவகையுறுகிறது!
வருந்துகிறது...
....இது இன்றுவரை அதிகம் கவனிக்கப்படாமல் போனதை நினைத்து!
இதைப் படித்த பின்னராவது, தமிழ்மணத்தில் ஒரு ஒருமித்த கருத்து வரவில்லையெனில், நான் பெரிதும் வருந்துவேன்!
குறைந்த பட்சம், பாரதியைப் பழிக்காதீர், இனிமேலும்!!
இதற்கு மேல் தெளிவாக வேறு எந்த "சும்பனும்" சொல்ல முடியாது என்பதால், மேலும் முன்னுரையைத் தவிர்த்து, உங்களின் பார்வைக்கும், படிப்பிற்கும், எண்ணத்திற்கும் இதனைப் படைப்பதில் பேருவகை அடைகிறேன்!
.
இதைத் தமிழ்ப் பாட நூல்களில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைக்கிறேன்!
வாழ்க நீ எம்மான்! வாழ்க நீ பாரதி!
*************************************************************
"உயிர் பெற்ற தமிழர் பாட்டு!"
"பல்லவி"
இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை.
"ஜாதி"
மனிதரில் ஆயிரம் ஜாதி -- என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று -- அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.
பூவில் உதிர்வதும் உண்டு -- பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு;
நாவிற்கினியதைத் தின்பார் -- அதில்
நாற்பதினாயிரம் சாதிகள் சொல்வார்.
ஒன்றுண்டு மானிட சாதி -- பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது -- உயிர்த்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்,
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் -- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
"இன்பத்திற்கு வழி"
ஐந்து புலனை அடக்கி -- அரசு
ஆண்டு மதியைப் பழக்கித் தெளிந்து
நொந்து சலிக்கும் மனதை -- மதி
நோக்கத்திற் செல்ல விடும்வகை கண்டோம்.
"புராணங்கள்"
உண்மையின் பேர் தெய்வம் என்போம் --அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதம் என்போம் -- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும் -- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததத னாலே -- தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியி னுள்ளே முழு கிப்போய் -- அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த -- திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும் -- ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும் -- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
"ஸ்மிருதிகள்"
பின்னும் [ஸ்]மிருதிகள் செய்தார் -- அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின் வல்ல -- இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்
காலத்திற் கேற்ற வகைகள் -- அவ்வக
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் -- எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை,
சூத்திர னுக்கொரு நீதி -- தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின் -- அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.
"மேல்குலத்தார் எவர்?"
வையகம் காப்பவ ரேனும் -- சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே -- பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.
"தவமும் யோகமும்"
உற்றவர் நாட்டவர் ஊரார் -- இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் -- இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம் -- தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் -- நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி,
"யோகம், யாகம், ஞானம்"
ஊருக் குழைத்திடல்யோகம்: -- நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் -- உளம்
பொங்கல் இலாத அமைதிமெய்ஞ் ஞானம்.
"பரம் பொருள்"
எல்லையில் லாத உலகில் -- இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லையில் லாதன வாகும் -- இவை
யாவையு மாயிவற் றுள்ளுயிராகி,
எல்லையில் லாப்பொருள் ஒன்று -- தான்
இயல்பறி வாகி இருப்பதுண்டென்றே
சொல்லுவர் உண்மை தெளிந்தார் -- இதைத்
தூவெளியென்று தொழுபவர் பெரியோர்.
நீயும் அதனுடைத் தோற்றம் -- இந்த
நீல நிறங் கொண்ட வானமும் ஆங்கே.
ஓயுதல் இன்றிச் சுழலும் -- ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே.
சக்திகள் யாவும் அதுவே -- பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே.
நித்திய மாவிவ் வுலகில் -- கடல்
நீரில் சிறுதுளி போலும்இப் பூமி.
இன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்,
துன்பமும் ஓர்கணத் தோற்றம் -- இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.
"முக்தி"
தோன்றி அழிவது வாழ்க்கை -- இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும் -- களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.
இனி ஒரு தொல்லையும் இல்லை -- பிரி
வில்லை, குறையும் கவலையும் இல்லை.
********************************************************************
இதையே இனித் தமிழ் வேதம் எனக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்!
வாழ்க பாரதி!
33 பின்னூட்டங்கள்:
அசத்திவிட்டீர்கள் எஸ்கே!
பாரதியைப் பற்றி புரிந்தவர்கள்தான் தமிழர்கள். ஆனால் அவர் பிறந்த சாதியினால் அவரை இழிவுபடுத்த சிலர் வீண் முயற்சி செய்கிறார்கள்.
அவர் பாடலிலேயே ஒரு பாதியை மட்டும் சான்றாகக் கூறி அவர் ஒரு சாதி வெறியர் என்று கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். என்ன சாதிக்கப் போகிறார்கள் இவர்கள்?
ஒரு சாதியை சொல்லிச் சொல்லி தூற்றி சாதி இல்லாத உலகை உருவாக்கப் போகிறார்களா?
மிக நல்ல பதிவு.
நன்றி எஸ்கே.
SK அய்யா!
மிகவும் அருமையான, அனைவரும் படித்துக் கடைப்பிடிக்க வேண்டிய மகாகவியின் பாடலொன்றை இங்கே பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
//நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும் -- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.//
மிகவும் அருமையான வரிகள். சும்மா பல கட்டுக்கதைகளைச் சொல்லி சிதம்பரத்தில் அண்மையில் நடந்த கூத்துக்களைக் கூட அறிந்திருப்பீர்கள் தானே!
//உற்றவர் நாட்டவர் ஊரார் -- இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் -- இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம் -- தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் -- நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி,//
பாரதி இடித்துச் சொன்னது போல், இந்தப் பண்புகளோடு வாழ்பவர்களே உயர்ந்தவர்கள்.
//இதற்கு மேல் தெளிவாக வேறு எந்த "சும்பனும்" சொல்ல முடியாது //
உங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
//இதைத் தமிழ்ப் பாட நூல்களில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைக்கிறேன்!//
நானும் இக் கருத்தை வழிமொழிகிறேன். மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் இதைச் செய்வார் என நம்புகிறேன்.
பாரதி மேல் சேற்றை வீசுபவர்களுக்கு நாம் என்ன சொல்ல முடியும்?
காலத்தை வென்ற தீர்க்கதரிசி என அவனைப் புகழ்வார்கள்!
அது மிகையல்ல என நிரூபிக்கும் அற்புதக் கவிதை இது!
படித்தவுடன் மெய் சிலிர்த்துப் போனேன்!
இதைப் படித்தாவது சண்டைகள் ஓயுமா?
தெளிவு பிறக்குமா?
மிக்க நன்றி, ஓகையாரே!
பதிவின் முதல் வரிகளைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன், வெற்றி!
இக்கவிதையை எனக்குக் காட்ட உதவியாய் இருந்தது உங்கள் பதிவே!
உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லியிருக்கிறேன்!
இக்கவிதையின் ஒவ்வொரு வரியும் செவுட்டில் அறைந்த மாதிரியான சொல்லாடல்!
இதில் இவர், அவர் எனப் பாகுபாடு வேண்டாம்!
இரு சாராருமே எல்லை மீறித்தான் போகிறார்கள் என்பதுதான் மனதுக்கு வேதனை அளிக்கும் நிகழ்வு!
சிதம்பரம் கூத்து என்று சொன்னீர்களே, அதிலும், என் கருத்துப்படி, இருவருமே வரம்பற்ற முறையில்தான் பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள்!
இது பற்றி, பலர் பேசியாகி விட்டது.
மேலே ஒன்றும் சொல்ல மனமும் இல்லை!
பாராட்டுகள் அனைத்தும் போகட்டும் அந்தப் பாட்டுக்கோர் புலவனுக்கே!
மீண்டும் நன்றி!
//இதைப் படித்த பின்னராவது, தமிழ்மணத்தில் ஒரு ஒருமித்த கருத்து வரவில்லையெனில், நான் பெரிதும் வருந்துவேன்!//
எஸ்கே ஐயா...!
தமிழ்மணம் பதிவர்களை இழுத்ததே சர்சைக் குறியபதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததால் தான். இல்லையென்றால் வெறும் கையழுத்துப் பத்திரிக்கைப் போல் இருக்கும். இருந்தாலும் கூறிக் கொள்ள விரும்புவது... பதிவர்கள் தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுதினார்கள் என்றால் நலம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும். :))
//குறைந்த பட்சம், பாரதியைப் பழிக்காதீர், இனிமேலும்!!//
காந்தியையே யாரும் விட்டுவைக்கவில்லை எனும் போது பாரதி சர்சையில் சிக்காமல் போய்விடுவாரா என்ன ? அதனால் அவர் புகழ் குறைந்துவிடுமா என்ன ?
வீன் கவலையை விடுங்கள்
//இதற்கு மேல் தெளிவாக வேறு எந்த "சும்பனும்" //
தெளிவாக இங்கே குழப்பியிருக்கிறீர்கள் 'சும்பன்' யாரு ?
கம்பனா ? சுப்பனா ? குழம்புது.
//இதைத் தமிழ்ப் பாட நூல்களில் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையையும் தமிழக அரசுக்கு வைக்கிறேன்!//
வந்தேமாதரம் போன்று பின்னாளில் சர்சைக்கு வழிவகுக்காமல் இருக்குமா என்பது தெரியவில்லை :))
//நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை//
இங்கு தான் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பாரதியார் நந்தனாரை புகழ்கிறாரா, அல்லது பார்பனரை புகழ்கிறாரா என்பது சரியாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. இருந்தாலும் சாதியை சாடுவதால் நந்தனாரை மட்டும் புகழுவதாக எடுத்துக் கொள்ளலாம் !
//உண்மையின் பேர் தெய்வம் என்போம் --அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதம் என்போம் -- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்
கடலினைத் தாவும் குரங்கும் -- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததத னாலே -- தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியி னுள்ளே முழு கிப்போய் -- அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த -- திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
//
இங்கு எனக்கு பாரதியார் நாத்திகம் போல் மெய்பொருள் கான்பது அறிவு என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். அதாவது சத்தியமே ஜெயதே, அன்பே கடவுள், என்று புத்த தத்துவம் போல் உள்ளது. புராணங்கள், வேதங்கள் எல்லாவற்றையும் கதை என்கிறார். அவர் உண்மை பேசியதால் சிலருக்கு வருத்தமாகவும் இருக்கும். இதனால் தான் பாரதியார் அன்று தள்ளிவைக்கப்பட்டாறோ ? அவர் கலங்கவில்லை மாறாக மகிழ்வுற்றார் என்பது வேறு விசயம்.
பின்னூட்டம் நீண்டுவிடும்... மீண்டும் வருகிறேன்... பாரதியை படிக்க...!
:)
பேரன்பிற்கும், பெருமதிப்புற்கும் உரிய எஸ்.கே ஐயா அவர்களுக்கு,
பதிவு மனதைத் தொடும்படி நன்றாக உள்ளது.
பாராட்டுக்கள்
தூங்கிக் கொண்டிருந்த தமிழனைத் தட்டி எழுப்பியவர் பாரதிதான். அதில் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை.
அதேபோல ஜாதிகளை எதிர்த்து முதன் முதலில் குரல் எழுப்பியவரும் அவர்தான்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதியவர் அவர்தான்
அதேபோல எழுந்த தமிழனுக்குச் சட்டை வேஷ்டி கட்டி விட்டுக் கெளரவமாக நடமாட விட்டவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்தான். அதிலும் இரண்டாவது கருத்திற்கு இடமில்லை.
"ஏழை யென்றும், அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே!
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே,
மனிதர் யாரும் ஒருநி கர்ஸ -
மான மாக வாழ்வமே!"
என்று பாரதி மனதில் ஆணி அடித்துச் சொல்வது போல சொன்னார்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இப்படிச் சொன்னார்
ஒன்று எங்கள் ஜாதியே!
ஒன்று எங்கள் நீதியே!
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே!
அவர்கள் இருவரும் எழுதிய மனதைக் கிறங்க அடிக்கும் - மனதைச் செம்மைபடுத்தும், கவிதை வரிகள் எல்லாம் இன்றைய தலை முறையினருக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் வருத்தப் படக்கூடிய, ஆதங்கப் படக்கூடிய
உண்மையாகும்
நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா
மிக மிக நல்ல பாடல் எஸ்.கே. எல்லோருக்கும் இந்தப் பாடலில் பாடம் இருக்கிறது.
SK அய்யா,
பாரதியின் சிந்தனைகளிலோ அல்லது அவருடைய சமுதாயப் பற்றிலோ நிச்சயம் சந்தேகமில்லை..
என் கேள்வி எல்லாம், பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியார் மட்டும் சிறந்த கவிஞர்யாக இருந்திருக்க முடியும்? அவரை சில சாதியினர் பெரிய் அள் செய்துவிட்டனர் எனபது தான்.
மற்றவர்கள் மறைக்கப்பட்டனர்/மறுக்கப்பட்டனரா?..
மற்றபடி பாரதி மகா கவியே!!
நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை//
ஆஹா..அருமை.
மஹாகவியின் வார்த்தைகள் மனதை திருடுகின்றன.
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
என்று சொன்ன மஹான் அல்லவா அவர்?
//Sivabalan said...
என் கேள்வி எல்லாம், பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியார் மட்டும் சிறந்த கவிஞர்யாக இருந்திருக்க முடியும்? அவரை சில சாதியினர் பெரிய் அள் செய்துவிட்டனர் எனபது தான்.
மற்றவர்கள் மறைக்கப்பட்டனர்/மறுக்கப்பட்டனரா?..
மற்றபடி பாரதி மகா கவியே!!
//
சிபா..!
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாரதியார் வாழ்ந்தகாலத்தில் அவருடைய சொந்த சாதியினரே அவரை தள்ளிவைக்க முயன்றனர். அவர்களை அவர் உதாசினப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்தது. அவ்வாறு இருக்கையில் குறிப்பிட்ட சாதியினர் எப்படி அவரை பெரிய ஆளாக ஆக்கியிருக்க முடியும் என்று கருதுகிறீகள். பாரதி கம்பனைப் போல் ஒரு பிறவு கவிஞன். குன்றா விளக்கு, பொத்திவைக்க முடியாது. கண்ணதாசன் காலத்தில் பட்டுக்கோட்டையார் போன்றவர்களும் நன்றாக பாட்டு எழுதினார்கள். ஆனால் 8 வகுப்பே படித்த கண்ணதாசன் அதையெல்லாம் தாண்டி மின்னவில்லையா ? பாரதி தனிப்பட்ட திறமையினால் தான் போற்றப்பட்டார். அவர் புகழடைந்ததற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினர் காரணமாக நிச்சயம் இருக்கமுடியாது.
//தமிழ்மணம் பதிவர்களை இழுத்ததே சர்சைக் குறியபதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததால் தான். இல்லையென்றால் வெறும் கையழுத்துப் பத்திரிக்கைப் போல் இருக்கும். இருந்தாலும் கூறிக் கொள்ள விரும்புவது... பதிவர்கள் தனிமனித தாக்குதல் இல்லாமல் எழுதினார்கள் என்றால் நலம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளவேண்டும். :))//
சர்ச்சைகள் இல்லாமல் உலகமே இல்லை, கோவியாரே!
எனவே, தமிழ்மணத்தில் சர்ச்சைகள் இல்லாமல் போகாது எனத் தெரியும்.
ஆனால், இப்போது நடப்பவை வெறும் சர்ச்சைகளா?
ஆளுக்காள் வாய்க்கு... மன்னிக்க... கைக்கு வந்தபடி தட்டச்சி, தன் அழுக்கை மறைக்க அடுத்தவரைத் தூற்றும் அசிங்கமல்லவா நடக்கிறது!
அதைத்தான் சொன்னேன்.
//காந்தியையே யாரும் விட்டுவைக்கவில்லை எனும் போது பாரதி சர்சையில் சிக்காமல் போய்விடுவாரா என்ன ? அதனால் அவர் புகழ் குறைந்துவிடுமா என்ன ?
வீன் கவலையை விடுங்கள்
//
மீண்டும் அதே!
கவிதை எழுதிய கவிஞன் பாரதி!
அவன் கவிதைகளை விமரிசனம் செய்வதை விடுத்து, சம்பந்தமில்லாத புழுதி வாரி இறைக்கும் கொடுமையல்லாவா நடக்கிறது, அவன் கவிதைக்குப் பதில் சொல்ல முடியாதவர்களால்!
//தெளிவாக இங்கே குழப்பியிருக்கிறீர்கள் 'சும்பன்' யாரு ?
கம்பனா ? சுப்பனா ? குழம்புது.
//
'சும்பன்' 'கொம்பன்' என்ற சொற்களைக் கேட்டதில்லை நீங்கள்?
சும்பன் என்று, 'வீண் பெருமை Pஎசித் திரிபவனைக் குறிக்கும் ஒரு சொல்.
//இங்கு தான் யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். பாரதியார் நந்தனாரை புகழ்கிறாரா, அல்லது பார்பனரை புகழ்கிறாரா என்பது சரியாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. இருந்தாலும் சாதியை சாடுவதால் நந்தனாரை மட்டும் புகழுவதாக எடுத்துக் கொள்ளலாம் !//
அது ஏன் புகழ்வது என்றால், ஒருவரை மட்டுமென எடுத்துக் கொள்கிறீர்கள்?
அடுத்தவரை இறக்கினால்தான் மற்றொருவரைப் புகழ முடியும் என ஏன் இன்னமும் பழைய பஞ்சாங்கம் படிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒருவரை மட்டுமோ, அல்லது அனைவரையுமே ஏன் புகழ முடியது?
பார்ப்பான் என்பவன் ஒரு சில நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டிய ஒரு உயர்ந்தவன்[குலத்தால் பார்ப்பானகி அப்படி நடக்காதவர்களைச் சொல்லவில்லை!] என்றால், நந்தன் அந்த பார்ப்பான்களிலேயெ உயர்ந்த பார்ப்பான் என் பாரதி சொல்லுகிறான்.
இதன் மூலம், சமூகத்தால் தாழ்த்தப்பட்ட ஒருவரை உயர்த்தும் அதே நேரத்தில், குணங்கலின் படி நடக்கின்ற ஒரு சில [இருப்பார்கள் ஒரு சிலர்!] பார்ப்பன்களின் உயரத்திற்கு நந்தன் சளைத்தவன் இல்லை எனவும் சொல்லி விடுகிறார், இந்த சொல்லின் செல்வன்!
//வந்தேமாதரம் போன்று பின்னாளில் சர்சைக்கு வழிவகுக்காமல் இருக்குமா என்பது தெரியவில்லை :))//
இதிலுள்ள கருத்துகளைப் படித்தும் உங்களுக்கு அந்த சந்தேகம் என்றல், நான் என்ன சொல்வது?
இதுதானே வேண்டும் என பெரும்பாலோர் இப்போது வலையுலகில் கோரிக் கொண்டிருக்கிறார்கள்?
மேலும், இது என் கருத்து! அவ்வளவே!
//இங்கு எனக்கு பாரதியார் நாத்திகம் போல் மெய்பொருள் கான்பது அறிவு என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். அதாவது சத்தியமே ஜெயதே, அன்பே கடவுள், என்று புத்த தத்துவம் போல் உள்ளது. புராணங்கள், வேதங்கள் எல்லாவற்றையும் கதை என்கிறார். //
நல்ல கருத்துகளைச் சொல்ல அன்று கதைகள் தேவைப்பட்டிருக்கின்றன! அவ்வளவு ஏன்! இப்போதும் அப்படித்தானே! எனது பாலியல் கல்வி பதிவில் கூட ஒருவர் நேற்று வந்து, கதைகள் மூலம் விலக்கலாமே என்றிருக்கிறார்.
அதைத்தான், பாரதியும், கதைகளில் கவனம் செலுத்தி, சொல்லியிருக்கிற கருத்தைக் கோட்டை விட்டு விடாதீர்கள் என வலியுறுத்தி இருக்கிறான்.
அது கதையா, மிகையா என்றெல்லம் ஆராய்ச்சி செய்வதை விடுத்துப் பொருளைக் கொள்க என்று கூவுகிறான்!
கேட்டு விட்டால், பிறகு எப்படி பிரச்சினை பண்ணுவது?
எனவே, இன்றைய மானிடர் அவற்றை வசதியாக விட்டு விட்டார்!
//அவர் உண்மை பேசியதால் சிலருக்கு வருத்தமாகவும் இருக்கும். இதனால் தான் பாரதியார் அன்று தள்ளிவைக்கப்பட்டாறோ ? அவர் கலங்கவில்லை மாறாக மகிழ்வுற்றார் என்பது வேறு விசயம்.//
ஒருபக்கம் சிபா வந்து சிலர் பாரதியை உயர்த்தி விட்டார்கள் என குற்றம் சாட்டியிருக்கிறார்!
இங்கு நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்!
யாரும், யாரையும் எப்போதுமே தள்ளி வைக்க முடியாது1
குறள் பொற்றாமரைக் குளத்தில் சங்கப்பலகையில் மேலெழும்பி வந்தது போல் வந்தே தீரும்!
//பின்னூட்டம் நீண்டுவிடும்... மீண்டும் வருகிறேன்... பாரதியை படிக்க...!
:) //
மீண்டும் வந்து சிபாவுக்கு பதில் சொன்னதற்கு மிக்க நன்றி, கோவியாரே!
நல்ல பல கேள்விகளைக் கேட்டதற்கும் நன்றி.
முதன்முறை வந்து, வாழ்த்தி, பாராட்டி, கருத்தும் சொன்னதற்கு நன்றி, திரு. சுப்பையா!
கண்ணதாசனும் நான் மிகவும் மதிக்கும் ஒரு கவிஞனே1
எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாபு படத்தில் வரும் 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே'!
பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!
நான் ஒவ்வொரு நாளும் சொல்லும் வரிகள்!
நன்றி!
அப்படித்தான் நானும் எண்ணுகிறேன் குமரன்.
//பாரதியின் சிந்தனைகளிலோ அல்லது அவருடைய சமுதாயப் பற்றிலோ நிச்சயம் சந்தேகமில்லை..
என் கேள்வி எல்லாம், பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியார் மட்டும் சிறந்த கவிஞர்யாக இருந்திருக்க முடியும்? அவரை சில சாதியினர் பெரிய் அள் செய்துவிட்டனர் எனபது தான்.
மற்றவர்கள் மறைக்கப்பட்டனர்/மறுக்கப்பட்டனரா?..
மற்றபடி பாரதி மகா கவியே!!//
உங்கள் கேள்விக்கு கோவியாரே ஒரு சிறப்பான பதில் அளித்து விட்டதால், உங்கள் முதல், மூன்றாம் வரிகளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன், சிபா!
பாரதியின் இன்னும் சில வரிகளைக் காட்டிப் பாராட்டியதற்கு நன்றி, செல்வன்!
GK,
உணர்ச்சிவசப்படாதீங்க.. நான் அவர் வாழ்த காலத்தில் பிறர் இல்லையா என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
அவரை அவருடைய சாதியினர் அப்பொழுது ஆதரவு தெரிவிக்கவில்லை என நானும் அறிவேன்.
ஆனால் நீங்களும் நானும் படித்த பாட புத்தகங்களில் எத்தனை பெரியார் சிந்தனைகள், அண்ணா சிந்தனைகளைப் படித்தோம்.. இதற்கு யார் காரணம்..
இது தான் என்னுள் இருக்கும் கேள்வி..
அவ்வளவே..
இது பதிவை திசை திருப்பும் என்றால், நான் தனிப் பதிவாக கொடுக்கவும் தயார்..
//சத்தியமே ஜெயதே, அன்பே கடவுள், என்று புத்த தத்துவம் போல் உள்ளது. //
GK ஐயா. இவை எல்லாம் புத்த தத்துவமா? :-) அன்பே சிவம் என்ற திருமூலர் சொல் கேட்டதில்லையா? சத்யமேவ ஜெயதே என்ற வேத வரியைக் கேட்டதில்லையா? அசோக ஸ்தூபியில் இருப்பதால் சத்யமேவ ஜெயதே புத்தத் தத்துவமாகிவிடுமா?
//GK ஐயா. இவை எல்லாம் புத்த தத்துவமா? :-) அன்பே சிவம் என்ற திருமூலர் சொல் கேட்டதில்லையா? சத்யமேவ ஜெயதே என்ற வேத வரியைக் கேட்டதில்லையா? அசோக ஸ்தூபியில் இருப்பதால் சத்யமேவ ஜெயதே புத்தத் தத்துவமாகிவிடுமா?//
குமரன் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை. புத்தர் என்ன பொல்லாத கருத்தையா சொல்லிவிட்டார் ? நீங்கள் சொல்லித்தான் இப்பொழுது நினைவுக்கு வருகிறது அசோக ஸ்தூபியில் இருக்கும் சத்தியமே ஜெயதே. புத்தர் பிறக்கவில்லையென்றால் நரபலியும், யாகத்தில் குதிரைகளை பலியிடுவதும் தடுக்கப்பட்டிருக்காது. நீங்களும் நானும் கருத்தளை பரிமாறிக் கொண்டிருக்க முடியாது. மண்ணிக்க வேண்டும், நீங்கள் புத்தர் கருத்துக்களை எதோ சொல்லக் கூடாத, கேட்கக் கூடாத அபச்சொல் போல கருதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். தவறென்றால் மண்ணிக்கவும்.
இல்லை கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் அவற்றை புத்தக் கருத்துகள் என்று சொன்னது அவை இந்துக் கருத்துகள் இல்லை. புத்தரால் தான் முதன்முதலில் சொல்லப்பட்டவை என்ற தொனியில் இருந்ததாக நான் எடுத்துக் கொண்டேன். அதற்கான பதிலே நான் சொன்னது. அந்தக் கருத்துகள் புத்தருக்கு முன்பாகவே இந்தத் திருநாட்டில் இருந்தக் கருத்துகள் தான் என்பதே. அதற்காகத் தான் அவை வேத வரிகளிலும் திருமந்திர வரிகளிலும் வருகிறது என்று சொன்னேன்.
மற்ற படி புத்தர் பொல்லாத கருத்தை சொன்னதாக நான் எங்கே சொன்னேன்? ஏன் நான் சொன்னதைத் தவறாகப் பொருள் கொண்டீர்கள் என்று தெரியவில்லை. நான் அவை புத்தர் கருத்துகள் என்று புத்தருக்கு முன் அவை இல்லை என்ற தொனிக்கு மறுப்பு தெரிவித்தேனே ஒழிய புத்தரின் கருத்துகள் சொல்லக் கூடாத கேட்கக் கூடாத அபச்சொல் என்று எங்கேயாவது சொன்னேனா? ஏன் நான் சொல்லாததை சொன்னதாக என் வாயில் சொற்களைத் திணிக்கிறீர்கள்? :-)
நம் பண்பாட்டிற்குப் புத்தரின் பங்களிப்பை நான் சிறிதும் மறுக்கவில்லை. யாகங்களில் அளவில்லாமல் விலங்குகள் பலியிடப் பட்டதை தடுத்தப் பெருமை முழுவதும் அவரையே சாரும். அதனையும் மறுக்கவில்லை. சொல்லப் போனால் புத்தரின் மேல் வேண்டிய அளவு மரியாதை கொண்டவன் தான் நான். இங்கே மறுத்தது அவை புத்தரின் கருத்துகள் மட்டுமில்லை. அவருக்கு முன்னரே இருந்தவை தான் என்பதே. அதனை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
முடிவாக நான் சொல்ல வந்தது என்ன என்று சொல்லிவிடுகிறேன் 'நீங்கள் புத்தக் கருத்துகள் என்று சொன்னது புத்தரின் கருத்துகள் மட்டும் அல்ல. அவை அவருக்கு முன்பே இந்தத் திருநாட்டில் இருந்தக் கருத்துகள் தான்'.
இப்போது என் முந்தையப் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள்.
நான் தவறுதலாக எழுதிய விடை ஒரு அருமையான பாரதியார் பாடலை அறிமுகம் செய்ய உதவியதை எண்ணி மகிழ்கிறேன். நன்றி SK.
ஒரு நிமிடம் பாரதியோ என்று எண்ணி பின்னூட்டமிட்டுவிட்டேன். உடனே பாரதியாக இருக்காது என்பதால் பின்னூட்டத்தை அழிக்க முயன்றேன். பதிவில் அனுமதி கிட்டவில்லை. அதுவும் நன்மைக்கே.
"தன்னுடை அறிவினுக்குப் புலப்படலின்றியே
தேயமீதொருவர் சொல்லும் சொல்லினை
செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம்
தீயபக்தி இயற்கையும் வாய்த்திலேன்"
என்று தன்னைப் பற்றி பெருமிதமாகச் சொல்லிய கவிஞனல்லவா?
இதைத்தாங்க, இதெல்லாம் தெரியாத, அல்லது தெரிந்து, மறந்து, உணர்ந்த ரெண்டு பேர் சொல்றதா,... கொஞ்சம் புதுமையா சொல்ல எண்ணி,....ஒரு உருவகக் கவிதையா அடுத்த பதிவு போட்டு.....
அப்புறம் நடந்ததெல்லாம் பார்த்தீங்க தானே, ஜெயஸ்ரீ !
:))
அந்த மகாகவியே தான் வாழும்காலத்தில் கவனிக்கப்படாமல் வறுமையில்தான் உழன்றான்.அவனது இறுதி ஊர்வலத்தில் மொத்தம் 16 பேர் மட்டுமே இருந்தார்கள் SK அவர்களே. இந்தக் மகாகவியை அலட்சியப்படுத்தியதற்காக தமிழ் சமுதாயம் பின்னால் மிகவும் வருத்தப்படப்போகிறது என்று அப்போது அவரது நண்பர் (ஆர்யா?) சொன்னது நினைவுக்கு வருகிறது.
தமிழ் உலகம் ஒன்றும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை!
மாறாக, சமயம் வாய்க்கும் போதெல்லம், இந்த வலையுலகில் தூற்றத் தயங்குவதே இல்லை என்பதுதான் இன்னும் உண்மை!
தங்கமெல்லாம் தேய்க்கத் தேய்க்கத்தான் பளபளக்கும் என்பதை அறியாதவர்கள்!
Post a Comment