Thursday, February 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50 [46]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 50


46.

எந்தாயு மெனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.

என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.

மயிலை மன்னார் வந்து உட்கார்ந்தவுடனேயே, மடமடவெனப் பாடலைப் படித்து, அவனைக் கட்டிக் கொண்டேன்.

‘பரவாயில்லியே! இதுவரைக்கும் சொன்னதுக்கு ஒரு பலன் இருக்கு போலிருக்கே!’ எனத் தன்னையறியா ஒரு மகிழ்ச்சியுடன் என்னை அணைத்துக் கொண்டான் மன்னார்!

‘சரி, இப்ப பாட்டைப் பார்க்கலாம். மொத வரியுலியே ஒரு பெரிய விசயத்தைச் சொல்றாரு அருணையாரு.

'என் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ'

ஆத்தாகிட்ட எப்பவுமே ஒரு தனியான உரிமை வந்திரும்! எனக்கு ஒரு நல்லது பண்றதத் தவிர வேற வேலையே இவளுக்குக் கெடையாதுன்னு ஒரு நம்பிக்கை நமக்குள்ள வந்திருது. மத்தவங்களுக்கெல்லாம் குடுக்கற மரியாதையைக் குடுக்காம, 'ஏ ஆத்தா'ன்னு நேரடியாச் சொல்லிருவோம். அன்பு ஜாஸ்தியினால வர்ற வார்த்தை அது! அத்தயேதான் இதுலியும் சொல்றாரு அருணகிரியாரு…… என் தாயின்னு.

அத்தயே நைனாகிட்ட வர்றப்ப பாத்தியானா, ஒரு கூடுதல் மரியாதை தானா வந்திரும். அன்பு செலுத்தற அம்மாகிட்ட உரிமை! அதே அப்பான்னு வர்றப்ப, அருள் பண்ற தந்தையேன்னு பணிவா சொல்றாரு.
இந்த ரெண்டு வார்த்தைக்குள்ளியே பெத்தவங்களை எப்பிடி மதிக்கணும், எப்பிடி அவங்ககிட்ட போவணும்ன்றதக் கோடிகாட்டிச் சொல்லியிருக்காரு பாரு!

எங்கிட்ட அன்பு காட்டறவணும் நீதான்! எனக்கு அருள் பண்றவனும் நீதான்! அதுனால, நீதான் எனக்கு ஆத்தாவும், நைனாவுமா க்கீறேன்னு பாசமாக் கூப்புடறாரு அருணையாரு.

இப்ப அவருக்கு ஒரு பெரிய கவலை புடிச்சு ஆட்டுது! இந்த ஒலகத்துல க்கீற மக்களெல்லாம் இப்பிடி தறிகெட்டுப் போயி அலையுறாங்களே; அல்லாத்தியுமே தன்னோட அறிவுனால சமாளிச்சிரலாம்னு கெர்வம் புடிச்சுத் திரியறாங்களே! அந்த எமன் பாசக் கவுத்த எடுத்துக்கினு தன்னோட மீசையை முறுக்கிக்கினு, 'கெளம்புறா மவனே'ன்னு வரக்கொள்ள, இந்த பாளா[ழா]ப்போன அறிவா வந்து காப்பாத்தப்போவுது? இத்தப் புரிஞ்சுக்காம இப்பிடி தலைக்கனம் பிடிச்சு மயங்கறாங்களே!'ன்ற கவலைதான் அது!

அதப் பத்தி யோசனை பண்னிப் பண்ணி இவரு மனசு கெனத்துப் போயிருது! அதத்தான் 'சிந்தாகுலம்'னு சொல்றாரு! முன்னாடி ஒரு தபா சொல்லியிருக்கேன்ல, ஆகுலம்னா கவலைன்னு. இப்ப சிந்தை ஆகுலம்... அதாங்காட்டிக்கு.... மனக்கவலை வந்து வாட்டுது இவரை!
இந்தக் கவலையைத் தீர்த்து என்னை ஆட்கொள்ளுப்பான்னு கெஞ்சறாரு இந்த வரியுல, “ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்”.
இன்னுமொரு விசயம் இதுல நீ கெவனிக்கணும்! சிந்தாகுலம் தீர்த்து என்னிய ஆளுன்னு சொல்லலை! சிந்தாகுலம் ஆனவைன்னு சொல்லிருக்காரு!

அதென்னா ‘ஆனவை’?ன்னு நீ கேப்பே! இந்த அறிவு குடுக்கற ஆணவத்தால இன்னான்னால்லாம் வருதுன்றதப் பட்டியல் போடற வார்த்தைதான் அந்த ‘ஆனவை’.

ஆசை, பேராசை, கோவம், ஆத்தரம், காமம், லோபம், வெறுப்புன்னு பலதையும் இந்த அறிவு நமக்குக் காட்டிக் குடுக்கும்! அதும் போக்குல போயி நாமளும் கண்டதியும் பண்ணிருவோம். அத்தயெல்லாம் சேத்துத்தான், சிந்தாகுலம் ஆனவை அல்லாத்தியுமே நீ தீத்து என்னைக் காப்பாத்துப்பான்னு சொல்றாரு!

இத்தயெல்லாம் நமக்காவத்தான் சொல்றாருன்றதப் புரிஞ்சுக்கோ!
நம்ம மேல வைச்ச அக்கறையால!’ எனப் பாசமாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

அதெல்லாம் சரி, மன்னார்! இப்ப அதுக்கும் அடுத்தாப்புல வர்ற வரிக்கும் என்ன சம்பந்தம்?’ எனக் கேட்டேன் நான்.

‘‘அருணகிரியாரு ரொம்ப ரொம்பப் பெரிய ஆளு! அவரை அப்பிடி ஆக்கினது அந்த முருகன்! அப்பனா அருள் பண்ணி, ஆத்தாவா அன்பு பண்ணி இவருக்குத் தாயும், தந்தையுமா இருந்த முருகன்!
அத்தச் சொன்ன அருணகிரியாரு ச்சும்மா வெறுமினியா அடுத்த வரியைப் போட்டிருப்பாரு! சரியான ‘குடாக்’குடா நீ!’ எனச் சிரித்தான் மன்னார்!

பொங்கிவந்த சிரிப்பைத் தன் மேல்துண்டால் மறைத்தபடி சிரித்தார் சாஸ்திரிகள்!

ஒரே ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் ‘ஓம் சரவணபவ’ உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!

எனக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது! மன்னாரைப் பரிதாபமாகப் பார்த்தேன்!

சொல்லமுடியாத அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டுப் பேசத் தொடங்கினான் மயிலை மன்னார்!

‘அடுத்த ரெண்டு வரியை நல்லாக் கெவனி!

‘கந்தா, கதிர்வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே ‘

கந்தான்னு மொதல் வார்த்தை!

கந்தன்னா ஆரு?
சிவனோட புள்ளை. அது மட்டுமில்ல! இன்னோரு அர்த்தமும் க்கீது!

தன்னோட புலனையெல்லாம் அடக்கின அருகன்னும் ஒரு பொருள் சொல்லுவாங்க!

இவருக்கு என்னல்லாம், எதுனாலல்லாம் மனக்கவலை வந்துச்சோ, அத்தயெல்லாம் அடக்கினவனைக் கூப்பிடறாரு!

அடுத்தாப்புல, கதிர்வேலவனேன்றாரு!

வேலு ஞானத்தோட அடையாளம்!
கதிர்வேலுன்னா சூரியனோட கதிர்மாரி ஞானத்தக் கூராக்கி வைச்சிருக்கறது.
அத்தக் கையுல வைச்சுக்கினுக்கீற ஆளுதான் நம்ம கந்தன்!

ம்ம்ம்.. அடுத்து இன்னா?
‘உமையாள் மைந்தா’

இந்த ஒரு வார்த்தையுல ஆத்தான்றவளோட அத்தினி அன்பையும் அப்பிடியே பிளி[ழி]ஞ்சு தந்திட்டாரு நம்ம அருணகிரியாரு!

முருகன் பொறந்தது சிவனோட நெத்திக் கண்ணுலேர்ந்து!

வளந்தது ஒரு கொளத்துல!

பால் குடுத்ததோ ஒரு ஆறு பொண்ணுங்க!

இந்தம்மா, உமையா,… பண்ணினதெல்லாம் அந்த ஆறு கொளந்தையையும் ஒண்ணாச் சேத்தது மட்டுந்தான்!

அது ஒண்ணே போதும்னு அல்லா சொந்தபந்தத்தியும் வுட்டுட்டு, ‘ஒமையாள் மைந்தா’ன்னு உரிமையாக் கூப்பிடறாரு அருணையாரு!

அதான் அம்மாவோட பெருமை! வேற ஆருக்கும் கிடைக்காது அந்தப் பெருமை!

குமரான்னு அடுத்தாப்பல! அப்பனுக்கும் கொமரன்! ஆத்தாவுக்கும் இவந்தான் கொமரன்!

மறைநாயகனேன்னு ஒண்ணை ஸ்பெசலா போடறாரு இப்ப!

இதுக்கு முன்னாடியே எத்தினியோ தபா இந்தக் கதையை சொல்லிக்கீறேன்!
ஓம்முன்றதுக்கு முருகன் பொருள் சொன்ன கதையை!

பெத்த அப்பனை மருவாதியாக் கூப்பிடறது அல்லாரும் செய்யறது!
ஆனாக்காண்டிக்கு, இந்த எடத்துல மட்டுந்தான், பெத்தவனே மண்டியிட்டுக் கேட்ட கதை!

பெக்காதவளே ஆத்தா! பெத்தவனே மண்டியிட்டுக் கேட்டான்!

அப்பிடியாப்பட்ட பெருமை இந்த முருகனுக்கு க்கீது!

இப்பிடியாப்பட்டவனைப் பாத்து, நீதான் எனக்கு ஆத்தாவும், அப்பனும்!
நீதான் என்னோட மனக்கவலையைத் தீத்து வைக்கணும்னு இவரு கேக்கறதுல இன்னா தப்பு? இவரு பண்ணாத வேற ஆரால பண்ணமுடியும்?
இப்பப் புரியுதா?’ என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!

என்னையறியாமலேயே, என் வாயினின்றும், ‘ஓம் சரவணபவ’ மந்திரம் தானே வெளிப்பட்டது!
கபாலி கோயில் மணியும் அதை ஆமோதிப்பதுபோல அப்போது ஒலித்தது!
மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிட்டு, தன் ஓம் சரவணபவ உச்சாடனத்தைத் தொடர்ந்தான் நாயர்!
**************
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Saturday, February 25, 2012 6:23:00 AM  

உயிர்மாய்த்துக்கொள்ள முனைகையில் காப்பாற்றியதோடன்றி முதலடி எடுத்துக்கொடுத்து புனிதமான மறுபிறவி அளித்த கருணாகரனை
"எந்தாயுமெனக்கருள் தந்தையுநீ "என்று அருணகிரியார் பெற்றோராகவே பாவித்துப் பாடியது மிகவும் பொருத்தமாய் இருக்கிறது!

VSK Monday, February 27, 2012 3:06:00 PM  

தாயும், தந்தையும் என்பதற்கு இன்னுமொரு இனிய விளக்கம்.... அன்னையிடமிருந்து! வணக்கம்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP