Monday, February 06, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 45”


42. [முதல் பகுதி]


சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் மீண்டும் சபை நிறைந்திருந்தது.
மயிலை மன்னார் பேசத் தொடங்கினான்.

'போன பாட்டுல அநுபூதின்ற ஒண்ணு வந்துச்சுன்னா இன்னா நெலைக்கு போவோம்ன்றதைக் கோடி காமிச்சவரு இந்தப் பாட்டுல, அத்தயே இன்னும் வெலாவாரியா சொல்ல வராரு.

கந்தனோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினா, அநுபூதி நெலை தானா வந்திரும்னு சொன்னவரு, அந்த நெலையுல இன்னான்னால்லாம் நடக்கும்ன்றத வெளக்கமாச் சொல்றாரு. பாட்டைப் படி' என்றான்.

குறியைக் குறியா துகுறித் தறியும்
நெறியைத் தனிவே லைநிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையுமற் றதுவே.


குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.

'ரொம்பவுமே கஸ்டமான பாட்டு இது! ஒர்த்தொர்த்தருக்கு ஒவ்வொருமாரி புரியும். அதும்படிக்கா அவங்க வெளக்கம் சொல்லுவாங்க. அவங்கவங்க நெலைக்கு தக்கமாரி அது இருக்கும். அல்லாமே சரிதான். அதுனால, அதுவா, இதுவான்ற ஆராய்ச்சியை வுட்டுட்டு, இப்ப சொல்றதக் கவனி. கொஞ்சம் புரியறமாரி,.... எனக்குப் புரிஞ்சமாரின்னும் வைச்சுக்கோயேன்....சொல்லப் பாக்கறேன் சரியா கெவனமாக் கேளு.

'குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்'

இதான் மொத ரெண்டு வரி.
அதென்னாது ''குறியைக் குறியாது குறித்து அறியும் நெறி'?


மொதல்ல 'குறி'ன்னா இன்னா?
அத்த எப்பிடி குறியாத குறிக்கறது?
எப்பிடி அத்த அறியறது?
இதெல்லாம் புரிஞ்சாத்தான் அந்த 'நெறி'ன்னா இன்னன்னு புரியும்.
ஒண்ணொண்ணாப் பாப்பம்!


இப்ப முருகன் மேல பக்தி பண்ணணும்னு ஒனக்கு ஆசை வந்திருக்குன்னு வைச்சுக்க!
அதுக்கு மொத வேலையா இன்னா பண்ணுவே?
முருகன்னா ஆரு? அவரு எப்பிடி இருப்பாரு? அவரோட வடிவை எப்பிடிக் காட்டிச் சொல்லிக்கீறங்கன்னு மனசு தேடும்.


அப்பிடி ஒரு உருவத்த, அள[ழ]கா, செவப்பா, ஒரு சின்னப் பையனா, கையுல வேலோட, காலுல சலங்கையோட, நல்லா பளபளன்னு ஒரு வேட்டி கட்டிக்கினு, தலையுல கிரீடம் வைச்சுக்கினு, மயிலு ஒண்ணு பக்கத்துல 'ரெடி'யா எப்பவும் நிக்கறமாரி ஒரு காட்சியை மனசுல பதிச்சுக்கினு, இவரையே 'குறி'யா வைச்சுக்கினு நீ, பாட்டு படிக்கறது, அவரைப் பத்தி நெனைக்கறது, பூஜை பண்றதுன்னு ஆரம்பிப்பே!


அது இல்லேன்னா, ஆண்டியாவோ, இல்லைன்னா வள்ளி தெய்வானையோடவோக் கூட இருக்கறமாரி, ஏதோ ஒண்ணைப் பிடிச்சுக்குவே. சரியா?
இப்பிடி மொதமொதலா ஒரு உருவத்த குறியா வைச்சு தொடங்கறதுக்குத்தான் 'குறி'ன்னு பேரு.


அடுத்தாப்புல, 'குறியைக் குறியாது குறித்து'ன்னா இன்னான்னு பாப்பம்.


இந்த 'குறி'...அடையாளம்... ஒரு உருவம்... இப்ப கிடைச்சிருச்சு. அது ஒரு படமாவோ, சிலையாவோ, வீட்டுலியோ, இல்லாட்டி கோவில்லியோ ஒனக்குத் தெரியும். அது ஃப்ரேம் போட்டு மாட்டியோ, இல்லாட்டி ஒரு பீடத்துல நிக்கவைச்சோ இருக்கலாம். மண்ணாலியோ, இல்லாட்டிக் கல்லாலியோ, இல்லேன்னா எதுனாச்சும் உலோகத்தாலியோ செஞ்சிருக்கலாம்.

ஆனாங்காட்டிக்கு, ஒனக்கு அத்த எப்பிடிப் பார்த்தாலும், அது இன்னான்னு புரியும்? ஒன்னோட முருகனே அங்க நேரா ஒம்முன்னாடி நிக்கறமாரித்தானே இருக்கும்? சாமியாப் பாக்கறச்சே, ஒனக்கு இந்த கல்லு, மண்ணு, பொம்மை, சிலைன்ற நெனைப்பே வராது! இதுவரைக்கும் புரிஞ்சுதா?


இதான் இந்தக் குறியை அது இன்னான்னு குறிக்காம, ஆனாக்காண்டிக்கு அதே நேரத்துல நீ நெனைச்ச சாமியைக் கும்பிடற ஞானம்! குறியைக் குறியாது குறித்து! வெளங்கிச்சா.?


இப்ப ஒரு சின்னச் சமாச்சாரம் சொல்றேன். உன்னிப்பாக் கேளு!


இதேமாரி ஒலகத்துல க்கீற ஏதோ ஒரு பொருளைக் கூட நீ ஆசையா நெனைக்க முடியும். எவ்ளோ வயசானாலும் பொண்டாட்டி எளமையா க்கீறமாரி நெனைச்சுக்கினு அலையலாம். இல்லேன்னா, ஒனக்கு சமமா வளந்தப்பறமுங் கூட,  புள்ளைங்களை நீ சின்ன வயசுல பாத்த அதே நெலையுல வைச்சுக்கினு, அவங்களைக் குடையலாம். இதேமாரி பலதும் சொல்லலாம். ஆன, இதெல்லாம் ஒனக்கு வேதனையைத்தான், கஸ்டத்தைத்தான் கொடுக்குமே தவிர, மனசுக்கு அமைதியைக் கொடுக்காது!


அத்தக் கொடுக்கற ஒரே ஆளு ஒன்னோட முருகந்தான்!


இத்தப் புரிஞ்சுக்கினு, அவன் ஒர்த்தந்தான் மெய்யி; மத்ததெல்லாம் பொய்யின்றதப் புரிஞ்சுக்கினியானா, அதான் ஞானம்!
மத்ததெல்லாம் அஞ்ஞானந்தான்!


'காயமே இது பொய்யடா! வெறும் காத்தடைச்ச பையடா'ன்னு ஒரு சித்தரு பாடினாரே, அத்தப் புரிஞ்சுக்கினு, அப்பப்ப மாறிப்போற, மாறிப்பேசற இந்த ஒலகத்து ஆளுங்க மேல க்கீற ஆசையை வுட்டுட்டு, அந்தப் பரம்பொருளு ஒண்ணுத்த மட்டுமே மெய்யா நம்பிப் புடிச்சுக்கறதுதான் 'குறியைக் குறியாது குறித்தறியும்' ஞானம்!


இது, இந்த ஞானம் வர்றதுன்றது, அப்பிடி ஒண்ணும் சுளுவில்லை! ரொம்பப் பாடுபடணும் இதுக்காவ! சரியான வளி[ழி]யைக் காமிக்கறதுக்குன்னு ஒரு குரு வந்து சொல்லுவாரு. எப்ப? நீ அதுக்குன்னே காத்துக் கெடக்கறப்ப!


எப்ப்டி காத்துக் கெடக்கறது?
அதுக்குன்னு ஒருசில முறை இருக்குன்னு பெரியவங்க சொல்லிக்கீறாங்க!


நீகூட சொல்லுவியே அடிக்கடி நீ கும்புடற அந்தப் பெரியவரு சொன்னாருன்னு, அதும்போல, தெனம் ஒரு பத்து நிமிசம் காலைலியும், ராத்திரியும் தியானம் பண்ணி, "அப்பனே முருகா! நான் பார்க்கலைன்னாலும், நீ இருக்கேன்றத நான் நிச்சியமா நம்பறேன். ஏன்னா நான் மதிக்கற, கும்புடற பெரியவங்க அப்பிடிச் சொல்லிக்கீறாங்க. அத்த நான் நம்பறதால நானும் ஒன்னிய நிச்சியமா நம்பறேன். நான் பண்ற அல்லாக் காரியத்துக்கும் நீதான் தொணையா இருந்து நடத்திக் கொடுக்கணும் கந்தப்பா'ன்னு வேண்டணும். இது மொத வளி[ழி]. ரொம்ப ரொம்ப சுளுவான வளி[ழி]யுங்கூட!


இத்தப் பண்ண ஆரம்பிச்சியானா, அடுத்தடுத்து ஒனக்கு நல்லதே நடக்கும்.


இதும்மாரிப் பண்றதத்தான் 'நெறி'ன்னு சொல்றாரு அருணகிரியாரு.


இதுக்கும் மேல இன்னான்றத ஒன்னோட குரு ஒனக்கு சொல்லித் தருவாரு. அது ஒர்த்தொர்த்தருக்கும் வெவ்வேறயா இருக்கும்ன்றதால அத்தப் பத்தி இப்பப் பேசவேணாம்.
ஆனா, அந்த மொதப் படியை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கோ' என நிறுத்தினான்.

'அந்தப் பாட்டை இன்னொருதரம் சொல்லுடாப்பா' என சாஸ்திரிகள் கேட்க, மகிழ்வுடன் பாடிக் காட்டினேன்.


'இறையவன் உண்டு கண்டவர் சொன்னார்
மறைநூற் பொருளின் சாரம் இதுவே
நம்பிடும் நல்லவர் சொல்லிய சொல்லால்
நானும் நம்பினேன் நீவரு வாயென.

இன்றையப் பொழுதின் செயல்கள் யாவினும்
நின்னரு ளோங்கி நித்தமும் துலங்க
இறையவா நீயே என்னுடனிருக்கும்
ஒருவரம் கேட்பேன் உடனே யருள்வாய்!'


'திவ்யமா இருக்குடா!' எனச் சிலாகித்தார் சாஸ்திரிகள்.
மன்னார் மேலே தொடர்ந்தான்.

இந்த 'நெறி'யத்தான் எப்பிடி, ஆரு வந்து காமிச்சாருன்றத அடுத்த வார்த்தையாப் போட்டிருக்காரு....."தனி வேலை நிகழ்த்திடலும்'னு!


அதென்னா 'தனி வேலை'?
எதுனாச்சும் ஸ்பெசல் வேலையா?
அப்பிடி அர்த்தம் பண்ணிக்கக் கூடாது.


"தனி வேல் ஐ"ன்னு பிரிச்சுப் பார்க்கணும்.


தனி வேலுன்னா, இதுக்கு நிகரு எதுவுமே இல்லாத வேலுன்னு அர்த்தம்.
அத்தக் கையுல வைச்சிருக்கற சாமிதான் முருகன்!
'ஐ'ன்னா தெய்வம், சாமின்னு பொருளு.


இதும்மாரி ஒரு தனிவேலைக் கையுல வைச்சுக்கினு முருகனே வந்து இவருக்கு நடத்திக் காட்டினாராம் அந்த நெறியை!


இந்த வரியுலியே இன்னொண்ணும் சொல்லாமச் சொல்லிருக்காரு அருணையாரு.
வந்தவன் தனி ஆளாத்தான் வந்தான். கையுல வேலோட வந்தான்னு ஒரு சங்கதியும் சொல்றாரு!


ஆரோ ஒரு குரு வரலை! அந்தக் கந்தனே நேரா வந்து தானே குருவா நின்னு இவருக்கு ஒரு நெறியைக் காட்டினாருன்ற சமாச்சாரம் இதுலேர்ந்து வெளங்குதா?' என்றான் மயிலை மன்னார்.

புரிந்ததுபோலத் தலையாட்டினேன். நாயர் மௌனமாகவே இருந்தான். சாம்பு சாஸ்திரிகள் கன்னத்தில் போட்டுக் கொண்டார்!

இதும்மாரி ஆனதுனால இவருக்குள்ளாற இன்னான்னால்லாம் நடந்திச்சுன்றதத்தான், அடுத்த ரெண்டுவரி சொல்லுது' என நிறுத்தினான் மயிலை மன்னார்.

'ஓம் சரவணபவ!'
********
[தொடரும்]
முருகனருள் முன்னிற்கும்!

0 பின்னூட்டங்கள்:

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP