Friday, October 14, 2011

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 31

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- - 31
30.

'நேத்திக்கு இப்பிடித்தான்! மாமி ஒரு சாம்பார் வைச்சா! ரொம்ப திவ்யமா இருந்துது!

'என்னன்னா! எப்பிடி இருக்குன்னு சொல்ல மாட்டேங்கறேளே'ன்னா !

'அதெப்பிடிறீ சொல்றது?'ன்னு சொல்லிப் பாத்தேன்! விடலை அவ! தொடர்ந்து கேட்டுண்டே இருந்தா! எனக்குக் கோவம் வந்துடுத்து!

'இவ்ளோ நன்னாப் பண்ணிட்டு எப்பிடி இருக்குன்னு கேக்கறியே! இது நோக்கே ந்யாயமா இருக்கான்னு கத்திட்டேன்! அப்பிடியும் விடாம நச்சரிச்சா! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை!

'அதை எப்பிடிறீ என் வாயால சொல்லுவேன்! அதையெல்லாம் அவாஅவா ரசிச்சு, ருசிச்சுப் பாத்தான்னா தெரியும்! நான் சொல்லிப் புரியவைக்க முடியுமோ'ன்னு பொலம்பிட்டேன்' என ஏதோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சாஸ்திரிகள் பேசினார்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

'இப்ப அதுக்கும், அநுபூதிக்கும் என்ன சம்பந்தம்? அதை ஏன் இப்ப வந்து சொல்றீங்க?' எனக் கேட்டுவிட்டு,
'இப்ப அருணகிரியார் தான் அனுபவிச்சது என்னன்னு சொல்லப்போறாரா, இல்லையா, அதைச் சொல்லு மன்னார்' என்றேன் ஆவலாக!

'ஞானும் அதே சோதிச்சு!' என்றான் நாயர்!

சாஸ்திரிகளைப் பார்த்துச் சிரித்தான் மயிலை மன்னார்!

ஐயர் சொன்னது புரியலியா ஒனக்கு ? அவரும் அதையேதான் இன்னொருவிதமா சொல்லிக் காமிச்சாரு! நீ பாட்டைப் படி' என்றான் சிரித்தபடியே!

நானும் படிக்கலானேன்!

செவ்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதா
னவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப்பதுவே

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.

"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்தது தான்"

காலைக் கருக்கல்லியும், சாயங்காலத்துல மேக்கே விளறப்பவும் சூரியனைப் பாத்திருக்கியா நீ? செக்கச் செவேல்னு மானம் முச்சூடும் செவப்பை வாரி எறைச்சமாரி இருக்கும்!

கோபுரத்து மேலேர்ந்து இவுரு குதிச்சப்ப , கீளே தாங்கிப் பிடிச்சது அந்த முருகன்!

இன்னும் சாவலியான்னு கண்ணை முளி[ழி] ச்சுப் பாத்தவர்க்கு ஒரே ஆச்சரியம்!

செவ்வானம் போல செவப்பா ஒரு உருவம் இவரைத் தாங்கிக்கினு க்கீது!

ஆர்ரான்னு பாத்தா நம்ம முருகன்!

நெருப்புலேர்ந்து வந்தவர்தானே முருகன்!

அதும்மட்டுமா? இவரோட அப்பா ஆரு? நம்ம கபாலி! அவுரு இன்னா நெறம்? அவரும் செவப்புத்தான்! நேரா அவரோட நெத்திக் கண்ணுலேர்ந்து ஆறு பொறியா வந்தவர்தானே நம்ம கந்தன்!

அதுனால , இவரும் செவப்புக் கலர்ல ஜொலிக்கறாரு!

கையுல ஒரு வேலு!... ஞானவேலு! சக்தி வேலு! ….அதுவும் செவப்பு!

ஆகக்கூடி, மொத்தமா, அந்திவானச் செவப்பு மாரி க்கீறாராம் முருகன்!

அந்த வேலவன் இவுருக்கு ஒரு ஞானத்த சொல்லிக் குடுக்கறாரு!

இதுக்கு ஈடு இணையே கிடையாதுன்ற மாதிரி... இது எத்தோடயும் ஈடு கட்ட முடியாதுன்னு சொல்லாம சொல்லி, இவருக்கு புரிய வைக்கறாரு!

இதுவரைக்கும் இப்பிடி ஒரு சந்தோசத்தை ஒ[உ]ணர்ந்ததே இல்லைன்னு மட்டும் இவுருக்குப் புரியுது! ஆனா சொல்லத் தெரியல! .... நம்ம ஐயரு சாப்ட்ட சாம்பாருமாரி!' எனச் சிரித்தான் மயிலை மன்னார்!

சரி, இப்ப அடுத்த வரியைப் படிப்போம்!

"அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே"

'கந்தரநுபூதி'ன்னு பேரு வைச்சிட்டோமே! இந்த அநுபூதியப் பத்தி எப்பிடியாச்சும் சொல்லணும்னு பாடிக்கினே வராரு அருணகிரி! ஆனா இன்னும் அவரால அத்தச் சொல்ல முடியல! இன்னான்னாமோ பண்ணிப் பாக்கறாரு! ம்ஹூம்.... இன்னும் ஒரு வரிகூட அவரால தெளிவா சொல்ல முடியல!

இப்ப இன்னா பண்ணலாம்னு யோசிக்கறாரு!

சரி, வுடு! இத்த வாயாலெல்லாம் சொல்லவே முடியாது! அப்பிடி சொல்றதுன்றது ஆராலியுமே ஆவாத காரியம்! இத்தயெல்லாம், அவங்கவங்களா அனுபவிச்சுப் புரிஞ்சுக்கணுமே தவர, வாயால பலான பலானதுன்னு சொல்லிக் காட்டவே முடியாது போ'ன்னு கொஞ்சம் வெறுத்துப் போயிடறாரு அருணையாரு!

இதெல்லாம் உள்ளுக்குள்ளாற ஊறிக்கினே இருக்கும்! இன்னாமோ சந்தோசமா க்கீறமாரி ஒரு ஃபீலிங் இருக்கும்! ஆனா, அத்த இது இப்பிடித்தான்னு புட்டுப் புட்டு வைக்க முடியாதுப்பான்னு சொல்லி நிப்பாட்றாரு' என்றான் மயிலை மன்னார்! '

அதேதாண்டா! பட்டினத்தார் கூட இதை ரொம்ப அழகாச் சொல்லுவார்!

"சொல்லாலே சொல்லுதற்கு சொல்லவா யில்லையடி
எல்லோருங் கண்டிருந்து இப்போ தறியார்கள்'னு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.

‘எந்தா ஐயர்சாமி! ஆ சாம்பாரைப் பத்தி கொறச்சு பறையணும் நீங்க' எனச் சீண்டினான் நாயர்!

அதையெல்லாம் கொறைச்சே சொல்ல முடியாதுரா! ரொம்ப திவ்யமா இருந்துது! அவ்ளோதான் சொல்ல முடியும்; போ! வேணும்னா ஒனக்கும் தரச் சொல்றேன். சாப்ட்டுட்டு நீயே சொல்லு பார்க்கலாம்!!' என பதிலுக்கு சாம்பு சாஸ்திரிகளும் சீண்ட ஒரு பெரிய சிரிப்பலை எழுந்தது அங்கே!

கந்தர் சஷ்டிப் பொழுது இன்பமாக முருகன் பெருமையில் நிறைந்து கொண்டிருந்தது!
>>>>>>
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Friday, October 14, 2011 9:54:00 PM  

சாம்பசிவன் மகன் என்பதால் சாம்பார் உதாரணம் தரத்தோன்றியதோ?

VSK Saturday, October 15, 2011 6:51:00 PM  

இப்படிச் சொல்ல வைத்ததும் சாம்பாரின்[சாம்பனின்] மகிமையே!:)))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP