Friday, September 09, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26"

"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26"
25.

லேசாக மழைத் தூறல் பெய்யத் தொடங்கியது! காற்று சில்லென்று வீசியது! மாலை மங்கிய இனிய நேரத்தில் மேலே வானத்தில் ஒரு அழகிய வானவில் தெரிந்தது!
மனதையள்ளும் அந்தக் காட்சியில் மனதைப் பறிகொடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் பார்ப்பதைக் கவனித்த மன்னார் லேசாகச் சிரித்தான்.


'எவ்ளோ அள[ழ]கா இருக்கில்ல?' என்றான் மெதுவாக.
'ஆமாம் மன்னார்! அப்பிடியே பார்த்துகிட்டே இருக்கலாம்போல இருக்கு!' என்றேன் பரவசமாய்.
'ஆமாமாம்! நல்லாப் பார்த்துக்க. இல்லேன்னா சீக்கிரமே மறைஞ்சிரும்' என்றான் மன்னார்.


துணுக்குற்று திரும்பினேன் ! அவன் சொல்வதில் ஏதோ பொருள் இருப்பதாக உணர்ந்தேன்.
'நீ என்ன சொல்றே மன்னார்?' எனக் குழப்பத்துடன் வினவினேன்.


'பாக்கறதுக்கு எவ்ளோ அள-ழ]கா இருந்தாக்கூட, இது நெலையானதில்ல. ஒரு மாயம் அவ்ளோதான். இந்த நேரத்துக்கு நல்லா இருக்கு. ஆனா நெலைச்சு நிக்குமோ? நிக்காது! அப்பிடித்தான் நம்மளோட வாள்[ழ்]க்கையும்! இதைப் பத்தித்தான் அடுத்த பாட்டு சொல்லுது! அத்தப் படி;.... கேப்போம்' என்றதும்தான்,


'ஆஹா! வந்த விஷயத்தை மறந்துவிட்டு இப்படி கவனத்தைச் சிதறவிட்டுவிட்டேனே' என ஒரு குற்ற உணர்வுடன் பாடலைப் படித்தேன்.

மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே/னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றியசே வகனே . [25]

மயிலை மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னான்.

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே .

'மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ?'

'வானவில்லைப் பார்த்தியான அதுல விதவிதமான கலருங்க இருக்கும். ஒண்ணொண்னும் ஒரு கொணத்தக் காட்டும்! ஒரு நேர்க்கோட்டுலியும் இருக்காது! வில்லு மாரி வளைஞ்சுக் கீறதாலத்தானே அதுக்கே அந்தப் பேரு வந்திச்சு!


ஒரு சமயம் பாத்தா ஒரு கலரு தூக்கலாத் தெரியும், இன்னொரு சமயம் வேற ஒரு கலரா இருக்கும்.
அதுமாரித்தான் நம்ம வாள்[ழ்]க்கையும்!


அப்பப்ப நடக்கறதுல மனசைத் தவறவிட்டுட்டு, அதும் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு, படாத பாடுல்லாம் பட்டு, அப்புறமாத்தான் புத்தி வரும்.... இதெல்லாம் மெய்யில்ல; அத்தினியும் பொய்யின்னு!


ஆனாக்காண்டிக்கு, நடக்கற வரைக்கும் பாத்தியானா, இன்னாமோ அதான் கெடைக்கக்கூடாத பெரிய செல்வம்ன்றமாரி தெரியும். பின்னாடி பாத்தா, இதுக்கா அலைஞ்சோம்னு நமக்கே வெக்கமாப் பூடும்!
இப்பிடி அலையறதைப் பத்தித்தான் மொத ரெண்டு வரியும் சொல்லுது!


எப்பிடிப் பாத்தாலும் வெறும் சோகத்த மட்டுமே தர்ற இந்த ஒலக வாள்[ழ்]க்கையைப் போயி மெய்யின்னு நம்பி அதும் பின்னாடியே ஓடி இப்பிடி நான் அலையுறது நியாயமா முருகான்னு கேட்டுத் தலையைத் தூக்கறாரு!


எதுத்தாப்புல முருகன்!!!
அந்த சாமியைப் பாத்ததுமே அடுத்த ரெண்டு வரி தானா வந்து விளுது!

'கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே !'

செக்கச்செவேல்னு முருகன் ஜொலிக்கறாரு!
கையைப் பாத்தா அது செவப்பு!
கேட்டவங்களுக்கெல்லாம் அருளை வாரிவாரிக் குடுக்கற கையில்லியா அது! அதான் அம்மாம் செவப்பு!


கையுல பிடிச்சிருக்கற வேலு.... அதும் செவப்பு!
சூரனைக் கிளிச்சதுனாலியா?
இல்லையில்லை!
வேலு ஞானத்தோட சின்னம்!
கூர்ப்பான அறிவைக் காமிக்கறதுதான் வேலு! செம்மையான ஞானத்தோட அடையாளம் அந்த வேலு!


ஒடம்பு முளுக்க பாத்துக்கினே காலுகிட்ட வராரு!
அந்தக் காலும் செவப்பாக் கீது! எதுனால தெரியுமா?
ஒன்னைப் போல எத்தினியோ ஜனங்க முருகா! நீதாம்ப்பா கெதின்னு அவரு காலைப் பிடிச்சுகிட்டு விடாம க்கீறதால, அதுவும் செவந்து போயிருச்சு!


இப்பிடி ஒடம்பு முச்சூடும் செவப்பா ஜொலிக்கறாரு முருகன்!'அதான் கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்'!


அவரு குந்திக்கினு க்கீற மயிலைப் பாக்கறாரு!
அது இன்னொரு ஆச்சரியத்தக் குடுக்குது இவுருக்கு!


மயிலுதான் இருக்கற பறவைங்களுக்குள்ளியே ரொம்ப ரொம்ப அள[ழ]கான பறவை!
கண்ணு ஒரு கலரு, தலைக் கொண்டை ஒரு கலரு, களு[ழு]த்து ஒரு கலரு மூக்கு ஒரு கலரு... இதெல்லாம் பத்தாதுன்னு.... தன்னோட தோகையை விரிச்சா, அதுல ஏகப்பட்ட கலருங்க!
அதுவும் அது நல்லா முளு[ழு]சா அந்தத் தோகையை விரிச்சா, அப்பிடியே ஒரு பெரிய வானவில்லுமாரி இருக்கும்!


ஆனா, ஒரே ஒரு கலரு மட்டும் அதுல 'மிஸ்ஸிங்காப்' பூடும்!
அதான் செவப்பு!


இப்ப ஒனக்குங்குடக் கொஞ்சம் புரிஞ்சிருக்கணுமே!' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்!


''ஓம் சரவணபவ' என உதடசையச் சொல்லிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த நாயர், உடனே தன் கண்களை அகலமாக விரித்து, 'ஞான் பறயட்டே! இங்கியும் ஒரு வானவில்' எனக் குதூகலித்தான்!


'கரீட்டாச் சொல்லிட்டேப்பா! தோகை விரிச்ச மயிலுக்கு நடுவுல ஒக்காந்துக்கினு க்கீற செவப்பான முருகனோட கலரு தூக்கலாத் தெரிய நெசமாவே இங்கியும் ஒரு வானவில்லுதான் தெரியுது அருணகிரியாருக்கு! அதான் மயிலேறிய சேவகனே !'ன்னு பாடறாரு!
ஆனா, ஒரு வித்தியாசம்!


இந்த வானவில்லு நெசம்! மறையாது! கலையாது!
அதும்மேல கெவனம் வைச்சு அதையே தியானம் பண்ணினியானா, இந்த வானவில்லு ஒனக்கு முன்னாடியே, எப்பவும் நிக்கும்!


இந்த சேவகனேன்றத ரெண்டு விதமாப் பாக்கலாம்!


சேவகன்னா சண்டைக்குப் போற வீரன்னு சொல்லலாம்.
எஜமானனுக்கு கைகட்டி சேவகம் பண்ற ஆளுன்னும் சொல்லலாம்!


பலவிதமா என்னை வெனைங்கள்லாம் தொறத்தறப்ப, அதுங்களை சண்டை போட்டு வெரட்டறதுக்காவ மயில் மேல வாப்பான்னு கூப்பிடறதாவும் வைச்சுக்கலாம்.

இல்லேன்னா,
இந்த வானவில்லைப் பாத்ததுக்கப்புறமா, நான் ஏன் கண்டதும் பின்னாடியும் அலையப் போறேன்னு சொல்லி கந்தன் காலுல விள, இவரைத் தூக்கியெடுத்து, அவன் சேவகம் பண்றமாரி நிப்பான்னு சொல்றமாரியும் புரிஞ்சுக்கலாம்!
அதான் முருகனோட பெருமை!
எனச் சொல்லி நிறுத்தினான் மன்னார்.

ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்!
'சரி, ஒரு வேலை க்கீது! அத்த முடிச்சிட்டு ஒரு அரை அவர்ல வந்திடறேன் வாரேன்' எனச் சொல்லி எழுந்தவன், எங்களைப் பார்த்து,
'ஆமா, முருகன்மாரியே செவப்பா க்கீற இன்னொரு சாமி ஆரு தெரியுமா? ஐயரே! நீங்க சொல்லாதீங்க!' எனக் கண்சிமிட்டினான்!


சட்டென்று நினைவுக்கு வராமல் நாங்கள் இருவரும் விழிக்க,
'அதாம்ப்பா,... தோ... க்கீறாரே, இந்தக் கபாலிதான் அந்த இன்னொரு ஆளு! ஒன்னோட தோஸ்த்து சிவசிவாகூட சொல்லுவாரே' எனச் சொல்லிவிட்டு, 'பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து' என முணுமுணுத்துக்கொண்டே, அந்தப் பக்கமாய் வந்த ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்!


'அட! ஆமாம்ல!' என நான் நாயரைப் பார்த்துச் சொன்னேன்!
'ம்ம்ம்... ஒனக்கு எந்த விஷயந்தான் ஞாபகத்துல இருக்கப்போறது!' எனத் தன் தலையில் அடித்துக்கொண்டே சாம்பு சாஸ்திரிகள் எழுந்து உள்ளே சென்றார்!


நாயர் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தபடியே, 'சேட்டா, வரு! கடைப் பக்கம் போலாம்' என அழைத்துச் சென்றான்!
*********
வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Friday, September 09, 2011 11:23:00 PM  

சேவற்கொடியோனாம் செம்முகனின் சேவடியே சரணம்;

என் சிரம்பட்டு அவன் செவ்வடிகள் மேலும் சிவப்பது கண்டு ஆனந்தமாய் இருக்கிறது!

VSK Monday, September 12, 2011 10:15:00 AM  

உங்களைப் போன்ற அடியாரின் சிரம் படும்போது இன்னமும் அதிகமாகவே சிவக்கும் அம்மா! மு.மு.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP