Tuesday, April 19, 2011

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 14

மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 14

13.
'அடுத்த பாடலுக்கும் சொல்லப்போகிறேன்' எனச் சொன்னானே என்று 'மளமள'வென அடுத்த பாடலைப் படித்தேன்.

முருகன் றனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின் றதுவே

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ
உருவன்று அருவன்று உளது அன்று இலது அன்று
இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே

தமிள் சும்மா பூந்து வெள்ளாடியிருக்கற பாட்டு இது! சொல்ல வந்த விசயமாவட்டும்; அதுக்குன்னு போட்ட வார்த்தையாவட்டும்; அதை சந்தத்துல வைச்ச ஜாலவித்தையாவட்டும்;... அப்பிடியே படிக்கப் படிக்க இன்பமா, சொல்லிக்கினே இருக்கலாம்போலத் தோணும்!
இதுவும் படிச்சதும் கொஞ்சம் புரிஞ்சிருந்தான்.


போன ரெண்டு பாட்டுல, தனக்கு முருகன் சொல்லிக் குடுத்தது இன்னான்னு சொன்னாரில்லியா? அத்தப் புரிஞ்சுக்கறது அவ்ளோ ஒண்ணும் சாதாரண விசயமில்லன்னு சொல்றாரு. அவரோட அருள் இல்லாம எதுவும் வேலைக்காவாதுன்னு தெளிவா சொல்லிடறாரு.

'சொல்லற சும்மாயிரு'ன்றது சாமான்யப்பட்ட சமாச்சாரம் இல்லை. தோ... வேலைக் கையுல பிடிச்சுக்கினு க்கீறானே... அந்தக் கந்தனா வந்து புரியவைச்சாலொளிய, நம்மகிட்ட க்கீற அறிவை 'யூஸ்' பண்ணி இத்தப் புரிஞ்சுக்கலாம்னு நெனைக்கறது ரொம்பக் கஸ்டம்னு தெளிவா நமக்கெல்லாம் சொல்றாரு.

அது மட்டும் இல்ல. அந்த ரெண்டையும் புரிஞ்சிக்கினு பண்ணினா ஒனக்கு தெரியவர்றது இன்னான்னு அந்தக் கடைசி ரெண்டு வரியுல சொல்றாரு.

உருவன்று அருவன்று உளது அன்று இலது அன்று இருள் அன்று ஒளி அன்று என நின்றதுவே

உரு இல்ல; அருவமும் இல்ல; இருக்கறதோ, இல்லாதுதோ இல்ல; இருட்டும் இல்ல; வெளிச்சமும் இல்லன்னு சொல்றப்ப தலையே சுத்தும்.

சாதாரணமாப் பாத்தா, அநுபூதின்னா அதுக்கு உருவமும்கிடையாது; அதுக்காவ, அது அருவம்னும் சொல்லமுடியாதுன்றாரு.

அவ்ளோதானா இதுன்னு கேட்டியானா, இல்லைன்னுதான் சொல்லணும்!

உருவமா க்கீறது மயிலு! நல்லாத் தோகையை விரிச்சுக்கினு அளகா, பெருசா உருவமாத் தெரியும்.
முருகனோட கொடில சேவல் க்கீது. அதோட சத்தம் காதுக்குத்தான் கேக்குமே தவுர, பாக்க முடியாது. அதுக்காவ, அதை அருவம்னும் சொல்லமுடியாது. ஏன்னா அதை நாம கேக்கறோம்.

சரி, இப்ப அடுத்த ரெண்டையும் பாப்பம்.
இந்த அநுபூதிய நீ புரிஞ்சுக்கினியானா, அப்பிடி ஒண்ணு இருக்கா, இல்லியான்னே ஒனக்குப் புரியாமப் போயிறும்.
அந்த அனுபவம் இருட்டா, இல்ல, வெளிச்சமான்னு கூடத் தெரியாது.
இத்த இன்னும் தத்துவமாப் பாக்கப் போனியானா,
'நாத விந்து கலாதி நமோ நம'ன்னு திருப்புகள்[ழ்]ல சொல்றாரே, அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் பண்ணிப் பாக்கலாம்.

இந்த நாதம், விந்துன்ற ரெண்டாலத்தான் இந்த ஒலக இயக்கமே நடக்குது.
நாதம்ன்றது உருவமில்லாதது; விந்துன்றது உருவம் இருக்கறது.
விந்துன்றது இருக்கற ஒண்ணு; நாதம் எங்கேருந்து வருதேன்னு தெரியாதது, அதாங்காட்டிக்கு, இல்லாதது.
விந்துவை மயில் தோகைக்கு ஒப்பாச் சொல்லுவாங்க. மயிலு இருட்டான மேகத்தைக் கண்டா நல்லா தோகையை விரிச்சு ஆடும்.
இருட்டெல்லாம் விலகி, வெளிச்சம் வர்றப்ப சேவல் தன்னோட நாதத்த எளு[ழு]ப்பும்.
இதும்படிக்குப் பாத்தா, இந்த நாதம், விந்துன்ற ரெண்டையும் தாண்டி நிக்கற ஒண்ணு தான் 'அது'ன்னு புரியவரும்.
இதுக்கு இன்னும் பெருசா பெருசா விளக்கம் சொல்லுவாங்க பெரியவங்கல்லாம். அதெல்லாம் புரிஞ்சுக்கறது நம்மளால ஆவுற காரியம் இல்லை. இதைத்தான் மொத ரெண்டு வரி சொல்லுது.


முருகன் தனிவேல் முனி நம் குரு என்று அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ

ஞானம் வேணும் அதுக்கு!
முருகன் கையுல வைச்சுக்கினு க்கீறாரே, அந்த தனிவேல் தான் ஞானம்.
அத்தக் குடுக்கறவன் முருகன். முனிவருங்களுக்கெல்லாம் பெரிய முனி நம்ம கந்தன்!
அவனா மனசு வைச்சு ஒரு குருவா வந்து புரியவைச்சா மட்டுமே இதெல்லாம் புரியும்.
மத்தப்படி, நம்மகிட்ட க்கீற சின்ன அறிவை வைச்சுக்கினு இத்தயெல்லாம் புரிஞ்சுக்கறதுன்றது நடக்கவே நடக்காதுன்னு கண்டிசனா சொல்லிடுறாரு இந்தப் பாட்டுல.

போன ரெண்டு பாட்டுல சொன்னதக் கேட்டதும், 'அட! இது ரொம்ப 'ஈஸி'யான சமாச்சாரம் போல'ன்னு நெனைச்சுறக் கூடாதுன்றதுக்காக இந்தப் பாட்டுல ஒரு 'டொக்கு' வைக்கறாரு அருணகிரியாரு' என்று நிறுத்தினான் மயிலை மன்னார்.
'ஞான் கூட அதே சோதிச்சு! இப்ப நல்லா மனசிலாயி' எனக் கைகூப்பினான் நாயர்.
சரி, அடுத்த பாட்டைப் பாக்கலாம்' என்றான் மன்னார்.
***************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!

2 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Tuesday, April 19, 2011 11:44:00 PM  

அவனா மனசு வெக்கறது எப்போ?நாம புரிஞ்சிக்கிறது எப்போ? வீ.எஸ் கே.!ஏதாவது பாசிடிவா சொல்லுங்களேன்.

VSK Wednesday, April 20, 2011 3:13:00 PM  

கூவியழைத்தால் குரல்கொடுப்பான் குமரன்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP