Sunday, February 06, 2011

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

மயிலை மன்னாரின் "கந்தர் அநுபூதி" விளக்கம் -- 5

"கந்தர் அனுபூதி" -- 5

வளை பட்டகை மாதொடு மக்களெனுந்
தளை பட்டழியத் தகுமோ தகுமோ
கிளை பட்டெழுசூ ருரமும் கிரியும்
தொளை பட்டுருவத் தொடு வேலவனே

வளைபட்ட கை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே!

'அல்லாத்தியும் தொலைச்ச நலத்தைக் குடுப்பா'ன்னு கேட்டவரு, அது இன்னான்னு அடுத்த பாட்டுல சொன்னாரு. 'சண்முகா! ஆறுமுகா!' நீதான் அது'ன்னு ஒரு குன்ஸா' சொல்லிட்டாரு' எனத் தொடங்கினான் மயிலை மன்னார்!.

இப்ப இந்தப் பாட்டுல, இப்பிடி அல்லாத்தியுமே தொலைச்சிட்டாலும், ஆரு அதுன்னு தெரிஞ்சுகிட்டாலும், அத்தச் சேரவுடாம தடுக்கற ரெண்டு கைவெலங்கைப் பத்திச் சொல்றாரு!

'எங்கிட்ட இருக்கறது அல்லாத்தியுமே ஒண்ணொண்ணா களட்டி வுட்டுட்டேனே... ஆனாக்க, ... இந்த ரெண்டு வெலங்கை மட்டும் என்னால களட்டவே முடியிலியேப்பா! இப்பிடி என்னியப் பண்ணிட்டியே! இது அடுக்குமா? சரியா? மொறையா?'ன்னு பொலம்பறாரு... இந்தப்
பாட்டுல!

அப்பிடி இன்னாது அந்த ரெண்டு வெலங்கும்? அதைத்தான் 'தளை'ன்னு சொல்றாரு!

மொதத் தளை, தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி! பொதுவா 'மாது'ன்னு சொல்லாம, 'வளைபட்ட கை மாது'ன்னு சொல்றாரு,..... கெவனி!

வளைன்னா கையுல போட்டுக்கற வளைன்னு பொதுவாப் புரியும்! ஆனாக்காண்டிக்கு, இப்ப நேத்திக்கு ஒன்னோட 'பெருசு'..அதாம்ப்பா... அடிக்கடி கொளந்தை, கொளந்தைன்னு நீ கொஞ்சுவியே அந்தப் பெருசைத்தான் சொல்றேன்!!.... அவுரு சொன்னாருன்னு ஒண்ணைப் படிச்சுக் காமிச்சியே! .......பெரியவங்க சொல்ற சொல்லுக்கு நாமளா புரிஞ்சுக்கறதுன்னு ஒரு அர்த்தம் இருக்கும்! அவங்களா சொன்னது இன்னான்னு ஒரு பொருளு இருக்கும்னு! அதே கதைதான் இங்கியும்!!

வளைன்னு இங்க சொல்றது தன்னோட அன்பால ஒன்னிய வளைச்சுப் போட்டுருக்கே... அந்தப் வூட்டுக்காரியை! அவங்கதான் 'வளை பட்ட கை மாது'! வெளங்கிச்சா? ஒன்னிய நம்பி, நீயே சதமின்னு வந்தவங்களை எப்பிடி வுடறது? நீ பாட்டுக்கு 'சர்த்தான் போம்மா'ன்னு 'டொப்'புன்னு கெளம்பிற முடியுமா? முடியாதுதானே?

சரி, இப்ப அடுத்த தளை இன்னான்னு பாப்பம்!

இவங்களைக்கூட.... வூட்டுக்காரியக் கூட, ஏதோ ஒரு ஆத்தர அவசரத்துல வுட்டுட்டுப் போறவங்க இருக்காங்க! ஆனாக்காண்டிக்கு, பெத்த மக்களை எப்பிடி வுடறது? 'அப்பா'ன்னு அது வந்து காலைக் கட்டிக்கக்கொள்ள, அப்பிடியே பாசம் பொத்துக்கினு வருதுல்ல?


அதுங்களுக்கு ஒண்ணுன்னா, ஒம் மனசு எப்பிடி பதறித் துடிச்சுத் தவிக்குது? அதுங்க ஒன்னிய மதிக்குதா, பாசமா க்கீதான்றதப் பத்தி, துளிக்கூடக் கவலயே படாம, 'ஐயோ! என்னோட பசங்க'ன்னு உள்ளுக்குள்ள கெடந்து அடிச்சுக்குது இல்ல? அந்த 'மக்கள்'தான் இவுரு சொல்ற ரெண்டாவது தளை!

இந்த ரெண்டு வெலங்குமேவோ, இல்லாங்காட்டிக்கு இதுல ஏதோ ஒண்ணோ, ஒரு ஆளைப் பாடாப் படுத்தி அலையவைக்குது! இன்னா நான் சொல்றது? இன்னா அப்பிடிப் பாக்கறே?' என்றான் மன்னார்!

அதில்லை மன்னார்! மனைவி, மக்களை 'அம்போ'ன்னு தவிக்கவிட்டுட்டுப் போற சில 'நல்லவங்களும்' இருக்காங்கதானே? அப்போ எப்படி இது சரியாகும்?'.... என்று இழுத்தேன்!

'ஊரு ஒலகத்துல பொதுவா க்கீற கதையைத்தான் அருணகிரியாரு சொல்றாரு! நீ சொல்றமாரி, அல்லாத்துக்குமே அங்கங்க ஒரு விதிவெலக்கு இருக்கலாம்! ஆனா, அத்த வுட்டுட்டு, பொதுவாப் பார்த்தியானா, இதான் அல்லா எடத்துலியும் நடக்கறது!

இந்த தளைங்கல்லேர்ந்து எப்பிடி வெளியே வர்றதுன்னு யோசிக்கறாரு! இம்மாம் பெரிய மாயையுல மாட்டிக்கினோமே! எப்பிடிரா தப்பிக்கறதுன்னு மயங்கிப் போயி ஒக்காந்துடறாரு!

ஒடனே உள்ளுக்குள்ள ஒரு 'பல்பு' எரியுது அவருக்கு!

ரெண்டு சமாச்சாரம் நெனைப்புக்கு வருது!
கேக்கறது ஆரை? நம்ம முருகனை!
அவுரு இன்னா பண்ணினாரு?
சூரனையும், ஒரு மலையையும் அளிச்சாருன்னு புரியுது! எப்பிடி இத்தப் பண்ணினாருன்னு ஒக்காந்து யோசிக்கறாரு!

தாரகாசுரன்னு ஒர்த்தன்! சூரனோட தம்பி!
வீரவாகுத்தேவரு தாம் போயி அளிச்சுர்றேன்னு வீராப்பாச் சொல்லிட்டு, ஒரு பெரிய படையோட அங்க போறாரு! கந்தன் சிரிச்சுக்கினே "போய்ட்டு வாப்பா! அவனைப் பார்த்து மயங்கிராதே!'ன்னு அனுப்பி வைக்கறாரு!
அங்க போனா, அந்த ராட்சசன் ஒரு பெரிய மலையா...கிரவுஞ்ச மலையா.... உருவம் எடுத்துக்கினு நிக்கறான்! அல்லாரையும் மாயமா வளைச்சுப் போட்டுர்றான்!


உள்ளார போன ஆளுங்கல்லாம், நாம எங்க க்கீறோம்னே தெரியாம மயங்கறாங்க! சுத்திச் சுத்தி வராங்க! வெளியே வர வளியே தெரியலை!
ஆரோ ஒர்த்தர், ரெண்டு பேரு மட்டும் இதுல சிக்காம தப்பிச்சு வந்து முருகன் கையுல விசயத்தச் சொல்றாங்க!
இது ஒரு கதை!

அடுத்தாப்புல, இந்த ஆணவம் புடிச்ச சூரன் !
தங்கூட இருந்த மொத்தப் பேரும் காலியானதுக்கு அப்புறமுங்கூட, தன்னோட ஆணவத்த வுடாம, தனக்குத்தான் அல்லாமுந் தெரியும்னு கிறுக்குப் புடிச்சு, மாயாரூபமா, ஒரு பெரிய மாமரமா நிக்கறான்! தன்னை ஆரும் கண்டுபுடிக்கவே முடியாதுன்னு அவன் மனசுல ஒரு நெனைப்பு!
பெரிய்ய்ய்ய்ய சூரன்ல இவன்! அதான்! பூனை கண்ண மூடிக்கினு பூலோகமே இருட்டாயிருச்சுன்னு நெனைச்சமாரி!
நம்மாளு கண்ணுலேர்ந்து எதுனாச்சும் தப்பிச்சுப் போவ முடியுமா?
இது ரெண்டாவது கதை!

இந்த ரெண்டுலியுமே இன்னா ஆச்சுன்னு யோசனை பண்றாரு அருணகிரியாரு!
ரெண்டு கேஸுலியுமே, முருகன் ஒண்ணுமே பண்ணலை!
சும்மா கையுல க்கீற வேலைத் தொட்டாரு!
அவ்ளோதான்!
மலை பொடிப்பொடியாப் போச்சு! மாமரம் ரெண்டாப் பொளந்திருச்சு!
அன்னிக்கு 'சிவக்குறளுக்கு' சொல்றப்ப சிவன் வில்லை எடுக்காமலியே, அம்பு வுடாமலியே, அம்மாவைப் பார்த்து லேசா சிரிக்கக்கொள்ளியே, அந்த மூணு லோகமும் எரிஞ்சு போச்சுன்னு பார்த்தோமே, அதும்மாரி, இவுரு வேலைத் தொட்டதுமே, இப்பிடில்லாம் நடந்திருச்சு!

அப்பிடியாப்பட்ட சக்தி முருகன் கைவேலுக்கு க்கீதுன்னு புரிஞ்சுபோச்சு இவுருக்கு!
அத்தயெல்லாம் பண்ணினவருக்கு, அம்மாம் பெரிய மாயாசக்தியையே ஒண்ணுமில்லாமப் பண்ணினவருக்கு, இந்தக் துக்கினியூண்டு மாயையை தொலைக்கறதா பெரிய காரியம்னு ஒரு தெம்பு வருது!

ஒடனே, அடுத்த ரெண்டு வரியுல, 'கிளைபட்டெளு[ழு] சூரரும் கிரியும் தொ[து]ளை பட்டுருவத்..... தொடு.... வேலவனே!'ன்னு கெஞ்சறாரு!

தொடு வேலவனேன்றதுல இத்தினியையும் சொல்லிட்றாரு! இதுல இன்னொரு விசேசம் இன்னான்னா, மாயை மட்டுந்தான் தொலைஞ்சுது ரெண்டு எடத்துலியும்! மலைக்கு உள்ள இருந்த ஆளுங்களுக்கும் ஒண்னும் ஆவலை; சூரன்.... சேவலும், மயிலுமா மாறிட்டான்! அதேமாரி, ஒன்னிய இந்த மாயைலேர்ந்து வெளியே கொணார்றப்போ, மத்தவங்களுக்கும் [மனைவி, மக்கள்] ஒரு கெடுதியும் வராதுன்னு சூசகமா சொல்லிப் புரியவைக்கறாரு அருணகிரியாரு!

'இப்பப் புரியுதா? எதுனால இந்த மூணு பாட்டையும் சேர்த்தே படிக்கணும்னு சொன்னேன்னு? மொதப் பாட்டுல எனக்கு சொல்லித் தாப்பான்னு, கொஞ்சலாக் கேக்கறாரு!
ரெண்டாவது பாட்டுல இன்னாது அதுன்னு தெரிஞ்சுக்கின ஒரு சந்தோசம்!
இப்ப, இந்த மூணாவது பாட்டுல ஒரு கெஞ்சலு!

எப்பிடி முருகன்கிட்ட சரணாகதி பண்றதுன்ற அனுபூதிய இந்த மூணு பாட்டுலியும் வைச்சு சொல்லிக்கீறாரு அந்த மகாப் பெரியவரு! இத்தப் படிச்சு, அவுரு காலுல நாம வுளுந்தாலே போறாதா?' என்றான் மயிலை மன்னார்!

'அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்! வேலாயுதப் பெருமானே சரணம்! கொஞ்சிடும் மழலையின் மலர்த்தாள் சரணம்!' என்று உரத்த குரலில் சொல்லிக் கை கூப்பினார் சாஸ்திரிகள்!
நாங்கள் மூவரும் அதை அப்படியே திருப்பிச் சொன்னோம்!

கபாலி கோவில் மணியும் 'ஓம்! ஓம்' என்பதுபோல் ஒலித்தது!
**********
[தொடரும்]

9 பின்னூட்டங்கள்:

Lalitha Mittal Monday, February 07, 2011 4:50:00 AM  

"unniye intha maayayilarnthu veliye konnaarappo maththavangalukkum[manaivi,makkal] oru keduthiyum varaathunnu soosagamachchollip puriyavakkiraaru arunagiriyaru"
avanathu karunaikku oru ellaiyundo?

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, February 07, 2011 7:56:00 AM  

நல்ல விளக்கங்கள் SK ஐயா!

தகுமோ? தகுமோ? என்று இரண்டு முறை கேட்பது ஏனோ?

//மலைக்கு உள்ள இருந்த ஆளுங்களுக்கும் ஒண்னும் ஆவலை; சூரன்.... சேவலும், மயிலுமா மாறிட்டான்!//

மலைக்கு (தாரகனுக்கு) என்னவாயிற்று?

VSK Monday, February 07, 2011 9:29:00 AM  

//மலைக்கு (தாரகனுக்கு) என்னவாயிற்று?//


சொல்லியிருக்கேனே ரவி!

//மலை பொடிப்பொடியாப் போச்சு! மாமரம் ரெண்டாப் பொளந்திருச்சு!//

மலையைப் பொடியாக்கியது உள்ளிருக்கும் அடியாரைக் காப்பாற்ற! அது ஒரு மாயை!
சூரனைப் பிளந்தது அவனுக்கு வாழ்வளிக்க! அது இரண்டாவது மாயை!

இந்த இரு மாயைகளையும் நீக்கி வாழ்வளித்தான் முருகன்!
அதை நிகழ்த்தியது அவன் கை வேல்!

கந்தபுராணத்தில் சூரனே முக்கிய எதிரி. அவனைச் சுற்றியே மற்ற அசுரர்கள் எல்லாம்.
முக்கியமான சூரனுக்கு என்ன செய்தார் என்பதே கந்தபுராணம் சொல்வது.

அடுத்து ராமாயணத்தில், இந்திரஜித்தை , கும்பகர்ணனை ஏன் 'இன்று போய் நாளை வா'ன்னு ராமன் சொல்லலைன்னு கேப்பீங்களோ!:))

VSK Monday, February 07, 2011 9:30:00 AM  

//avanathu karunaikku oru ellaiyundo?//

எல்லையில்லாக் கருணை வள்ளல் அவனே என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க அம்மா! நன்றியுடன் வணங்குகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, February 07, 2011 12:28:00 PM  

//அடுத்து ராமாயணத்தில், இந்திரஜித்தை , கும்பகர்ணனை ஏன் 'இன்று போய் நாளை வா'ன்னு ராமன் சொல்லலைன்னு கேப்பீங்களோ!:))//

:)
ஒன்றுமே இல்லாதவனுக்குத் தான் போரில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள காலம் தரப்படுகிறது! கும்பகர்ணனுக்குப் பின்னும் பல படைகள் வந்தன! ஆனால் இராவணன் அனைத்தும் இழந்து நின்றான்! அதனால் இன்று போய் நாளை வா!

கும்பகர்ணன் மீண்டும் எம்பெருமானின் வாயிற் காப்போனாகவே (துவார பாலகனாக) போய் நின்றான்! அதுவும் கையில் இறைவனுக்கே உரிய சங்கு சக்கரங்களோடு! பிற்பாடு இராவணனும் அப்படியே போய் நின்று கொண்டான்!

இங்கு நான் கேட்டது உங்களுக்கு விளங்கவில்லையா?
சூரன் வேலும் மயிலுமாய் ஆனது போல், தாருகன் என்ன ஆனான் என்பதே கேள்வி! அவன் பொடிப்பொடியாப் போனான்! அவ்வளவு தானா? அவனும் ஒரு வாகனம் ஆனான் என்பதல்லவோ கந்த புராணம் சொல்வது?

VSK Monday, February 07, 2011 1:11:00 PM  

எனக்குத் தெரிந்ததை இதில் சொன்னபின்னர், மேலதிக விளக்கம் தெரிந்தவர் கேள்வியாகக் கேளாமல், எப்போதும்போல, நேரடியாகச் சொன்னால் பதிவுக்கு மேலும் சுவைகூட்டுமே ரவி!

மேலும் இந்தப் பதிவு தாரகன் என்ன ஆனான் என்பதைப் பற்றியது அல்லவே!
பிள்ளைகளுக்கு உதாரணமாக மயங்கிநின்ற பூதப்படையையும், மனைவிக்கு சூரனையும் உதாரணமாகச் சொல்ல விழைந்தேன்.

நான் ஒன்றும் புனிதப் புதிர் போடவில்லையே!

எப்படியோ, ராமனாயினும் சரி, கந்தனாயினும் சரி, அழிப்பதில் ஆக்கமே விளையும் எனும் கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி! :)) அதுவே நான் சொல்ல வந்ததும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, February 07, 2011 8:48:00 PM  

தாருகன் ஆடாக மாறி, முருகனிடமே வாகனமாய்ப் போனான்!
சிங்கமுகன் அன்னைக்கு ஊர்தியாகப் போனான்!

//அழிப்பதில் ஆக்கமே விளையும் எனும் கருத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி!//

:)
நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே SK ஐயா!
அழிப்பதில் ஆக்கம் இல்லை! Energey caan neither be created or destroyed! Only transformed! My Murugan knows this and transformed :)

VSK Tuesday, February 08, 2011 9:33:00 AM  

//நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே SK ஐயா!
அழிப்பதில் ஆக்கம் இல்லை! Energey caan neither be created or destroyed! Only transformed! My Murugan knows this and transformed :)//

நீங்க "அப்பிடியே" சொன்னீங்கன்னு நானும் சொல்லலியே, ரவி! 'கருத்து' அதானே! அதைத்தான் சொன்னீங்கன்னு சொன்னேன்.

தங்கத்தை அழித்துத்தான் நகை செய்வாங்கன்னு சொல்வாங்க. அதுபோலத்தான், இந்த அழித்தலும்.
மெய்யான அழித்தல் இல்லை. ஆனால் அழிதல் நிகழ்கிறது. ஏனெனில் இப்போது அந்தத் தங்கம் அதன் மூல வடிவில் இல்லாமல் ஒரு நகையாக!
அந்தக் கருத்தைத்தான் சொன்னீங்கன்னு சொன்னேன்.

VSK Tuesday, February 08, 2011 10:30:00 AM  

//தாருகன் ஆடாக மாறி, முருகனிடமே வாகனமாய்ப் போனான்!
சிங்கமுகன் அன்னைக்கு ஊர்தியாகப் போனான்!//

இதான் சமர்த்து ரவி! இப்படி மேலதிகத் தகவல் அளிப்பது கைவந்த கலையாச்சே உங்களுக்கு! மிக்க நன்றி, ரவி! :))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP