"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]- 3
"அ.அ.திருப்புகழ்" - 33 "ஓருருவாகிய" [திருவெழுக்கூற்றிருக்கை]- 3
மூன்றாம் பகுதி [இரண்டாம் பகுதி]
12345654321
ஒருவகை வடிவினில் இருவகைத்து ஆகிய
மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்தும்
முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு
ஒரு குரு ஆயினை
ஒருவகையில் பார்த்தால் யானையெனச் சொன்னாலும்
இளயானை கிழயானை என இருவகையில் வரக்கூடியதும்,
கன்னமதம், கைமதம், வாய்மதம் என்னும்
மும்மதநீரும் பெருகிவரும் கிழயானைக்கே!
இளயானை மதம் பிடிப்பதில்லை!
ஆனாலும் முருகா! நீயோ! .....
நினக்குப்பின்னே நின்னண்ணன் கிழயானையாய் வந்ததனால்
கிழயானைக்கே மூத்த சகோதரன் ஆகிப்போனாய்
வாயினின்று தொங்கிடும் துதிக்கையை உடையவனும்
ஐங்கரன் எனவழங்கும் விநாயகக் கடவுளும்
அறுகம்புல்லை ஆசையுடன் தன்தலையில் சூடிக்கொள்ளும்
கணபதிக்கு இளைய சோதரனாய் விளங்குகிறாய்
நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலமாய்
நான்கு வேதங்களாலும் இறையென உணர்த்தப்பட்டு
சூரிய,சந்திர,அக்கினி என்னும் முச்சுடரையும் கண்களாய் உடையவரும் நல்வினை, தீவினை இரண்டிற்கும் மருந்தாக அமைபவராம்
சிவனுக்கே ஒரு குருநாதனாய் விளங்கினாய்!
[கந்தபுராணம் சொல்லும் கதை]
வள்ளியைத்தேடித் தினைப்புனம் அலைந்து
வேடனாய் வந்து வள்ளியை அணைக்க
ஓலமிட்ட குரல்கேட்டு சோதரர் ஓடிவர
வேங்கைமரமாய் உருமாறி நின்று
அண்ணனை மதியாமல் தனியே வந்த
தவறுணர்ந்து அவரை வேண்டிட,
அனுக்கிரகம் புரிந்த அண்ணனும்
துணைக்கு வருவதாய் வாக்களித்தான்!
நாயகியைக் காணவேண்டி விருத்தனாக வேடமிட்டு
வேண்டுகின்ற போதினிலே நீயங்கு வரவேணும்
என்றதற்குச் சம்மதித்த வேழமுகக் கடவுளும்
சுனையருகே வள்ளியினை விரட்டிடவே
மதம்கொண்ட கிழயானையாய் உருவெடுத்து வந்தான்
கிழவனுக்கும்பின்வந்த காரணத்தால் கணபதியும்
முருகனுக்கு இளையோன் ஆனான்!
ஆனாலும் முருகனென்றும் கணபதிக்கு இளையவனே!
பிரணவத்தின் பொருளறியாப் பிரமனைச் சிறையிட்டு
விடுக்கவேண்டி முறையிட்ட சிவனாரை எதிர்கொண்டு
பிரணவத்தின் பொருள்சொல்ல அப்பனையே பணியவைத்து
தகப்பன்சாமியாய்த் திகழ்ந்திட்ட சுந்தரக் குழந்தையிவன்!
[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்!]
ஓருருவாயினும் இருவகைக் களிறாய்மிளிரும்
முத்தமிழ் முதல்வோன் முருகனுக்கிளையன்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துண்ணும் ஐங்கரன் கணபதி
அறுமுகன் தனக்கு மூத்தவன் இவனே!
நமசிவயவெனும் ஐந்தெழுத்ததிபன்
நான்மறை வேதியன் முக்கண் முதல்வோன்
இருவினை அறுத்திடும் சிவனுக்கருளிய
ஒருகுருநாதன் என்னவன் முருகன்!
அருஞ்சொற்பொருள்:
மும்மதன்= மூன்று வகையான மதநீரைப் பெருக்கும் யானை
நால்வாய்= தொங்குகின்ற வாய், தும்பிக்கை
அறுகு= ஒரு வகைப் புல், விநாயகனுக்கு உகந்தது
ஐந்தெழுத்து= நமசிவய என்னும் 5 எழுத்து மந்திரம்
**********************************
1234567654321
ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி
முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென
எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்
டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை
அன்றொருநாள் சீர்காழியில்
அருமைக் குழந்தையைக் குளிப்பாட்டிக்
கரையில் இட்டபின் பெற்றவர் குளத்திலிறங்க
பசியின் கொடுமையால் சிசுவும் அலற
வானில் உலவிய அன்னையிறங்கி
சிசுவை எடுத்து இருமுலை அழுத்தி
ஞானப்பாலை அன்புடன் புகட்டி
முத்தமிழ்ச் சுவையும் உடனே புகட்டி
ஆசுகவி, மதுரகவி,சித்திரகவி, வித்தாரகவி
என்னும் நால்வகைக் கவியின் நாயகன்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
என்னும் ஐவகை நிலத்தின் அதிபதியாம்
ஆறுமுகன் இவனெனவே எழிலுடன் விளங்கி
சீர்காழிஎன்னும் கழுமலத்தில் சம்பந்தனாய்
நீயும் அவதரித்தாய்!
கார்த்திகைப் பெண்டிர் ஆறு தாரகைகளின்
பாலினை உண்டதால் அவர்க்கு மகனானாய்
கற்பகம் மந்தாரம் பாரிஜாதம் சந்தானம் அரிசந்தனம்
என்னும் ஐவகை மரங்கள் திகழும் தேவலோகம்
அதற்கே அதிபதியாய் நீயும் சிறந்தாய்!
நான்மறைகள் போல ரகசியமானதும்
மூன்று சிகரங்களை முடிப்பாய்க் கொண்ட
கிரவுஞ்சமெனும் பெயர்கொண்ட
அன்றில்பறவைப் பெயர்கொண்ட மலையை
இருகூறாய்ப் பிளக்குமாறு வலிமைபொருந்திய
ஒரு வடிவேலினை நீ விடுத்தாய்!
[கந்தபுராணம் சொல்லும் கதை]
சிவனின் மூன்றாம் கண்ணினின்றுப்
புறப்பட்ட ஆறுபொறிகளை வாயுவும் தீயும்
தாங்கிடமுடியாமல் கங்கையில் விடவும்
தீப்பொறி வெப்பம் தாங்கிடவொண்ணா
கங்கையும் வறளச் சரவணப் பொய்கையில்
ஆறுகமலங்களில் அதனை விடவும்
ஆறுகுழவிகள் அதனில் மலர
கார்த்திகைப் பெண்டிர் எனவே வழங்கும்
ஆறு தாரகைகள் குழவியை எடுத்து
முலைப்பால் கொடுத்து முகிழ்நகை பருகி
மகனெனக் கொஞ்சிட மகிழ்வுடன் சிறந்தாய்!
தேவரை வதைத்த சூரனின் இளவல்
கிரவுஞ்சம் என்னும் மலையாய் மாறி
பூதப்படைகளை மாயம் செய்திட
தனிவேல் விடுத்து மலையைப் பிளந்து
தாரகன் மடியும் தீரமும் செய்தாய்!
சூரனைக் கொன்று தேவரைக் காத்து
இந்திரன் மகளை மணம் செய்ததனால்
தேவலோகத்தின் அதிபதி ஆனாய்!
[திருவெழுகூற்றிருக்கை- நமது பாணியில்]
ஒருநாள் அழுத குழவியின் பசியை
இருமுலைப் பாலால் உமையவள் தீர்க்க
முத்தமிழ்ப் பாலைப் பருகிய சிசுவும்
நாற்கவி சிறக்க ஐம்புலம் ஆள
ஆறுமுகன் என எழிலுடன் திகழ்ந்தாய்
ஆறுதாரகைப் பெண்டிரின் மகனாய்
ஐவகை மரங்கள் விளங்கும் உலகாம்
தேவலோகத்தின் அதிபதி ஆனாய்
நான்குமறைகளின் ரகசியம்போல
மூன்று சிகரம் கொண்டதாம் அந்த
கிரவுஞ்சம் என்னும் தாரகமலையை
இரண்டு கூறாய்ப் பிளந்திட விடுத்த
தனியொரு வேலைத் தான் விடுத்தவனே!
அருஞ்சொற்பொருள்:
விரகன்= வல்லவன்
கிழவன்= உரிமையாளன்
கழுமலம்= சீர்காழிக்கு இன்னொரு பெயர்
அறுமீன்= ஆறு தாரகைகளான கார்த்திகைப் பெண்டிர்
ஐம் தரு= தேவலோகத்தில் காணப்படும் ஐந்து வகை மரங்கள்
செஞ்சூட்டு= சிவந்த கொண்டைகள், சிகரங்கள்
அன்றிலங் கிரி= அன்றில் பறவையின் பெயர் கொண்ட கிரவுஞ்ச மலை
*****************************************
காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே.
[திருவெழுகூற்றிருக்கை -முடிப்பு]
வளமை பொங்கிடும் காவிரி நதியின்
வடகரை அதனில் திகழ்ந்திடும் குருமலை
என்னும் பெயர்கொண்ட சுவாமிமலையினில்
சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை
ஓதிடும் அடியவர் உன் பாதங்கள் போற்றிட
திருவேரகத்தின் இறைவன் எனநீ அருள்கின்றாயே!
அருஞ்சொற்பொருள்:
குருகிரி= அப்பனுக்குப் பாடம் சொன்னதால் குருமலை என வழங்கப்படும்
சுவாமிமலை
ஆறெழுத்து= சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரம்
ஏரகம்= சுவாமிமலைக்கு இன்னொரு பெயர்
******************************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
--------------------------------
21 பின்னூட்டங்கள்:
இந்தத் திரு எழுக் கூற்று இருக்கைத் திருப்புகழை,
அடியேன் வேண்டுகோளை ஏற்று, இட்டமைக்கு மிக மிக நன்றி SK ஐயா!
நான் உங்களிடம் வேண்டுகோளாக வைத்தாலும்...
உண்மையைச் சொல்லணும்-ன்னா இது ஒரு வேண்டுதல்! நேர்த்திக் கடன்-ன்னு கூடச் சொல்லலாம்!
என் ஆருயிர் நண்பனின் உடல்நலம் பற்றிய அதீத கவலை அண்மையில்! ஒரு கட்டத்துக்கு அவன் நெருங்க நெருங்க, இந்தப் பிணி மட்டும் தீராது தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தது அவனை! அதை மாற்றி அமைக்க ஒரு வேண்டுதல்!
பிணிமுகம் ஏந்துபவன் பிணி தீர்க்க முடியாதோ?
எனக்கு நனி சேர்க்க முடியாதோ?
கனிவாய்க் கந்தன் கனிவு காட்டல் ஆகாதோ?
தேர் ஓடும் போது உப்பும் மிளகும் தூவி வேண்டிக் கொள்வார்கள்!
கோ ரதம் அல்லது விசாகத் தேர் இழுத்து வேண்டிக் கொண்டால், நன்மை சேரும், நம்மைச் சேரும் என்று சொன்னார்கள்!
இங்கு அமெரிக்காவில் எங்கு போவேன் தேர் இழுத்து வடம் பிடிக்க? அதுவும் இப்போ?
அப்போ தான் ரதக்கவி என்னும் திருவெழுக் கூற்றிருக்கை ஞாபகம் வந்தது! அதை ஓட விட்டு இழுப்போமே என்று எனக்கு ஒரு அல்ப ஆசை!
அடியேனே பதிவாய் இட்டிருப்பேன்! ஆனால் வடம் பிடிக்கணுமே!
அதான் உங்களிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன்!
அதை ஏற்றுக் கொண்டு, மூன்று திருச்சுற்றுகளாய், தேரினை ஓட விட்டு, வடம் பிடித்து இழுக்க அடியேனுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள்! சுவாமி மலை முருகனுக்கு அரோகரா!
பிரணவப் பொருள் சொன்னவனுக்கு அரோகரா!
நோய்நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று!
குறை தீர வந்து குறுகாயோ? முருகா, குறை தீர வந்து குறுகாயோ?
//ஐந்தெழுத்து அதனில்
நான்மறை உணர்த்தும்
முக்கட் சுடரினை
இருவினை மருந்துக்கு
ஒரு குரு ஆயினை//
ரொம்ப அழகா வந்திருக்கு! ரொம்ப அழகாக் கோர்த்து இருக்காரு!
இருவினை மருந்து தரும் மருத்துவன்,
அவன் ஒரு குரு, ஒரு மருத்துவன் ஆயினான்!
அது என்ன ஒரு குரு, ஒரு மருத்துவன்? = ஆயிரம் மருத்துவர் இருந்தாலும் ஃபேமிலி டாக்டர்-ன்னு "ஒருத்தர்" இருப்பாரு-ல்ல? அதான் "ஒரு" குரு!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
//கிழவனுக்கும் பின் வந்த காரணத்தால் கணபதியும்
முருகனுக்கு இளையோன் ஆனான்!
ஆனாலும் முருகனென்றும் கணபதிக்கு இளையவனே//
பின் வந்த காரணத்தால் இளையோன்-ன்னு ஒரு விளையாட்டா? அருணகிரி நல்லாவே விளையாடி இருக்காரு! :)
உடையவர் இராமானுசரை இளையாழ்வார்-ன்னு சொல்லுவாய்ங்க! அவர் மூத்தவர் தான்! ஆனாலும் இலக்குவன் அம்சமாய் வந்த இளைய ஆழ்வார்!
அது போல மூத்தவன் இளையோன் ஆனான் போலும்! :)
//
நோய்நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று!
குறை தீர வந்து குறுகாயோ? முருகா, குறை தீர வந்து குறுகாயோ?//
கூவி அழைத்தால் வாராது போவானோ குன்றாடும் குமரன்.
தங்கள் நண்பருக்கு மருத்துவனாய் அவனே வந்து பிணி தீர்ப்பான் ரவி!
விரைவில் அவர் நலம் பெற வேண்டுகிறேன்.
மு மு !!
//அது என்ன ஒரு குரு, ஒரு மருத்துவன்? = ஆயிரம் மருத்துவர் இருந்தாலும் ஃபேமிலி டாக்டர்-ன்னு "ஒருத்தர்" இருப்பாரு-ல்ல? அதான் "ஒரு" குரு!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!//
நல்ல விளக்கம் ரவி! அந்த குடும்ப மருத்துவன் விரைந்தோடி வந்து குறை தீர்ர்ப்பான்!
முமு!
//சீர்காழிஎன்னும் கழுமலத்தில் சம்பந்தனாய்
நீயும் அவதரித்தாய்//
சீர்காழி என்னும் கழுமலமா? அப்படி என்றால் என்ன SK?
//
அடியேனே பதிவாய் இட்டிருப்பேன்! ஆனால் வடம் பிடிக்கணுமே!
அதான் உங்களிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன்!//
எனக்கு அந்த பாக்கியத்தைத் தந்தமைக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் ரவி!!
பின் வந்த காரணத்தால் இளையோன்-ன்னு ஒரு விளையாட்டா? அருணகிரி நல்லாவே விளையாடி இருக்காரு! :)
உடையவர் இராமானுசரை இளையாழ்வார்-ன்னு சொல்லுவாய்ங்க! அவர் மூத்தவர் தான்! ஆனாலும் இலக்குவன் அம்சமாய் வந்த இளைய ஆழ்வார்!
அது போல மூத்தவன் இளையோன் ஆனான் போலும்! :)//
இதுவும் நல்லதொரு கோர்வை ரவி!!
மிகச் சிறப்பு!
:))
//கிரவுஞ்சமெனும் பெயர்கொண்ட
அன்றில்பறவைப் பெயர்கொண்ட மலையை
இருகூறாய்ப் பிளக்குமாறு வலிமைபொருந்திய
ஒரு வடிவேலினை நீ விடுத்தாய்!//
ஓ... கிரெளஞ்ச பர்வதம் என்பது பறவை மலையானது போலா?
தாராகாசுரன் என்பவன் பறவை முகமா SK?
சூரன் தம்பிகளில் சிங்கமுகன் சிங்க முகம்! தாருகனைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை!
இன்னொன்னு...
கிரெளஞ்சம் கொடூரமான பறவையாச்சே! அது எப்படி அன்றில் பறவை ஆகும் SK?
//
சீர்காழி என்னும் கழுமலமா? அப்படி என்றால் என்ன SK?//
சீர்காழித் தலத்துக்கு 12 பெயர்கள் இருக்கு. அவை அத்தனையையும் வைத்து சம்பந்தர் பாடியிருக்கிறார்.
ப்ரம்மபுரம், வேணுபுரம், தோணிபுரம், கழுமலம், புகலி, சீர்காழி அவற்றுள் பிரசித்தமானவை.
நமது மும்மலங்களையும் கழுவுகின்ற திருத்தலம் இது என்னும் பொருளில் கழுமலம்.
Brahmapuram,Venupuram,Thonipuram, Kazhumalam, Pugali, Shri Kali
//காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த//
குட காவேரிக்கு வடபாலார்
திருவேரகத்தில் உறைவா-ன்னு இன்னொரு திருப்புகழ் நினைவுக்கு வருது!
//ஏரகத்து இறைவன் என இருந்தனையே//
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே! என்று சிலப்பதிகார வரி போல் முடிக்கிறாரு போல அருணகிரி!
அருணகிரிநாதர் குடந்தை-சுவாமிமலை முருகனுக்கு மட்டும் தான் இப்படி ரதக்கவி பாடி இருக்கிறார்!
அதே போல் திருமங்கையும் குடந்தை-சாரங்கனுக்கு மட்டும் தான் ரதக்கவி பாடியுள்ளார்!
முருகன் குட காவேரிக்கு வட பாலார்! சாரங்கன் குட காவேரிக்கு தென் பாலார்!
இப்படி குடந்தைக்குத் தான், ரதக்கவிகள் அமையணும்-ன்னு இருக்கு போல! :)
இந்தத் தேர்த்தட்டுப் பதிவை இட்டு,
அடியேன் நேர்த்தியை,
நடாத்திக் கொடுக்க வைத்த உங்களுக்குத்
தலை அல்லால், கைம் மாறு இலனே!
முருகஆஆஆ என்று ஓதுவார் முன்!
//ஓ... கிரெளஞ்ச பர்வதம் என்பது பறவை மலையானது போலா?
தாராகாசுரன் என்பவன் பறவை முகமா SK?
சூரன் தம்பிகளில் சிங்கமுகன் சிங்க முகம்! தாருகனைப் பற்றிச் சரியாகத் தெரியவில்லை!
இன்னொன்னு...
கிரெளஞ்சம் கொடூரமான பறவையாச்சே! அது எப்படி அன்றில் பறவை ஆகும் SK? //
அன்றில் பறவைக்கு கொண்டை அழகாக இருக்கும் எனப் ப்[அடித்திருக்கிறேன். பனை மரத்தில் வாழும் இப்பறவை தன் ஜோடி இறந்தால் நிலத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ளுமாம்.
தாரகன் ஒரு மாயாவி.
தானே ஒரு மலையாகி, அறிய மு்டியாத பல சிகரங்களையும், இடுக்குகளையும் கொண்டு, பூதப்படைகளை மயங்கச் செய்தான். வீரபாகுவும் இதில் சிக்கிக் கொண்டார்.
முருகன் தனிவேல் விடுத்து, மலையைஇருகூறாகப் பிளந்து அனைவரையும் காத்தான். தாரகனும் மடிந்தான்.
இது புராணம்.
கொண்டைகளை உதாரணமாக வைத்து அருணையார் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன், ரவி!
////காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த//
குட காவேரிக்கு வடபாலார்
திருவேரகத்தில் உறைவா-ன்னு இன்னொரு திருப்புகழ் நினைவுக்கு வருது!
//ஏரகத்து இறைவன் என இருந்தனையே//
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே! என்று சிலப்பதிகார வரி போல் முடிக்கிறாரு போல அருணகிரி!//
வடகரை ஏரகம் என சுவாமிமலைத் திருப்புகழில் பல இடங்களில் பாடியிருக்கிறார் அருணையார்.
நன்றி ரவி!
திரு எழுக் கூற்று இருக்கைத் தேர் வடம் இழுத்துக் கொண்டே...
சுவாமிமலை முருகனுக்கு அரோகரா!
எங்கள் சரவண பவனுக்கு அரோகரா!
தேர் நிலைக்கு வந்த போது, மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
தேர்க்கால்களில் உப்பும் மிளகும் தூவிச் சரும நோய்கள் தீர வேண்டி
தேர்க் கால் மற்றும் சக்கரங்களுக்கும்,
தேர்த் தட்டுக்கும்
தேர் பீடத்துக்கும்
தேர் விமானத்துக்கு
தேர் கொடிக்கும்
தீபம் காட்டி
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம
அருள் தாராய்! அருள் தாராய்!
என்னாசை முருகப் பெருமானுக்கு கண்ணேறு கழித்து,
கும்ப ஆரத்தி என்னும் திருவந்திக் காப்பினைக் காட்டி,
செல்வனைத் திருத்தேரில் இருந்து, மீண்டும் சுவாமி மலை ஆலயத்துக்குள் ஏளப் பண்ணினோம்!
குருகிரி வாழும் குகப் பெருமாள் பராக் - எச்சரிகை!
ஞான பண்டித சுவாமிகள் பராக் - எச்சரிகை!
சுவாமி நாத சுவாமி அப்பன் பராக் - எச்சரிகை!
பெருமானை திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி, விபூதி சுற்றி விட்டு, திருஷ்டிகள் கழித்து,
முகத்தில் அப்பிய சந்தனத்தை, அந்த அழகிய வாயோரம் துடைக்கும் போது....
அவன் குறுநகை கண்டார், குறுநகை கண்டார், குறை காணாரே! குறை காணாரே!
முருகாஆஆஆ!
திருஞானசம்பந்தப் பெருமான் செய்தருளியதாயினும் அருணகிரிநாதர் திருப்பாடலாயினும் திருவெழுகூற்றிருக்கையை விளக்குவது எளிதன்று. அரிய செயலைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.
திருவெழுக்கூற்றிருக்கை - தவறு; வலிமிகாது.
//அரிய செயலைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.வாழ்த்துகள்.//
நன்றி ஐயா!
//திருவெழுக்கூற்றிருக்கை - தவறு; வலிமிகாது.//
வலி மிகாதுதான். கவனக் குறைவாக தலைப்பில் அந்தப் பிழையைச் செய்துவிட்டேன். பின்னர் மாற்ற இயலவில்லை.
மன்னிக்கவும்!
உங்களது சிறப்பான நடையை என் பதிவுக்குள்ளும் கொண்டு வந்து மேலும் சிறப்பிக்கச் செய்தீர்கள் ரவி!
சுவாமிநாதனை நிலைக்குக் கொண்டுவந்து, இறக்கி, உள்ளழைத்து, ஆரத்தி காட்டி, வாயைத் துடைத்து, அழகன் முருகனின் அருட்சிரிப்பை அனைவருக்கும் காட்டி சிலிர்க்க வைத்தீர்!
நன்றி.
முமு.
ஏரகத்து எம் ஐயனின் தேர் அருமையாக அசைந்து ஆடி நிலைக்கு வந்து சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
//கன்னமதம், கைமதம், வாய்மதம் என்னும் மும்மதநீரும்//
//சூரிய,சந்திர,அக்கினி என்னும் முச்சுடரையும்//
//ஆசுகவி, மதுரகவி,சித்திரகவி, வித்தாரகவி
என்னும் நால்வகைக் கவியின் நாயகன்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
என்னும் ஐவகை நிலத்தின் அதிபதியாம்//
என்று அனைத்து விளக்கங்களும் அருமை. வாழ்க தங்கள் தொண்டு.
//ஏரகத்து எம் ஐயனின் தேர் அருமையாக அசைந்து ஆடி நிலைக்கு வந்து சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா
//கன்னமதம், கைமதம், வாய்மதம் என்னும் மும்மதநீரும்//
//சூரிய,சந்திர,அக்கினி என்னும் முச்சுடரையும்//
//ஆசுகவி, மதுரகவி,சித்திரகவி, வித்தாரகவி
என்னும் நால்வகைக் கவியின் நாயகன்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
என்னும் ஐவகை நிலத்தின் அதிபதியாம்//
என்று அனைத்து விளக்கங்களும் அருமை. வாழ்க தங்கள் தொண்டு.//
முருகானந்தம்! முருகானந்தம்!
இதைவிட வேறேது ஆனந்தம்!
மிக்க நன்றி ஐயா!
Post a Comment