Monday, July 16, 2007

"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"


"ஆடிக்கூழ் குடிக்க வாங்க!"

செல்வி விஜி ஒரு சிந்திக்க வைக்கும் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.
//ஆடியில் ஏன் கூழ் காய்ச்சுகின்றார்கள்? அறிந்தவர்கள் சொல்லுங்களேன்....
அறியும் பேராவலோடு...//


இதோ என் கருத்து!

தை மாதம் !

அறுவடை முடிந்து அனைவரும் மகிழ்வோடு இருக்கும் காலம்.

இதில் வந்த வளம் வைத்து அடுத்த 3 மாதம் ஓடுகிறது.

சித்திரை பிறக்குது.

இன்னும் கொஞ்சம் அரிசி இருக்கு.

வைகாசி, ஆனி....

மிச்சம் மீதி குருணை வைத்து காலம் ஒட்டியாச்சு.

ஆடி பிறக்குது.

ஆடிப்பெருக்கு வர இன்னும் 18 நாள் இருக்கு.

அதன் பின்தான் நிலம் ஈரமாகும்.

உழவே முடியும் அப்போதுதான்!

சம்பா விதைக்கமுடியும்.

ஆடிப்பட்டம் தேடி விதைக்க முடியும்.

இங்கோ....!

வெயில் கொளுத்துது.

வீட்டில் தண்ணீர் கூட இல்லை.

ஒரு பிள்ளைக்கு அம்மைநோய் வேறு!

வீட்டில் தாளிக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு வேறு.

சோறும் கிடையாது.

இருக்கும் சில மணி அரிசிகளோ மூட்டை மூட்டையாய் பணம் படைத்தவர் வீட்டில்.

பார்த்தாள் அம்மன்!

அருள் வந்து ஆடினாள்.

அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊத்துடா! அம்மன் கேக்கறா! எல்லாருக்கும் ஊத்து! அப்பதான் என் மனம் குளிரும்!

அரிசி யாரிடம் இருந்ததோ?

அவன் பயந்தான்.

கொண்டுவந்தான் கோயிலுக்கு.

கூழ் காய்ச்சினான்.

அல்லாரும் வாங்கடேய்! அம்மன் கூழ் குடிங்கடேய்!


வீட்டில் தண்ணி கூட கிடைக்காத ஏழைமக்கள் கோயிலுக்கு பாத்திரம் ஏந்தி வந்தனர்.

அம்மன் ஊற்றிய கூழைப் பிரசாதமெனப் பெற்று பசியாறினர்!

அம்மனும் மகிழ்ந்தாள்...... அல்லல் படுவோரைக் காப்பாற்றிய மகிழ்வில்!

மடை திறந்த வெள்ளமாய்ப் பிறந்தாள்!

ஆடிப்பெருக்கு !
ஆடிப்பட்டம் !
ஆடிச் சம்பா !

அதன் பின்னர் தை வரைக்கும் ஆட்டம் தான்! பாட்டம்தான்!!

அம்மன் அருள் எங்கும் பொலிக!

ஆடி வெள்ளி அன்றாவது மாரியம்மன் தாலாட்டு படியுங்கள்!அதெல்லாம் சரி!

இந்தக் கூழை எப்படி காய்ச்சுவது?

இதோ அதன் பக்குவம்!ஈழத்துப்பாடல் ஒன்று!!

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

-நவாலி சோமசுந்திரப்புலவர்

ஆடிக்கூழ்:

தேவையானவை

ஒரு கைப்பிடி வறுத்த பயறு
கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது
ஒரு பேணி - பச்சரிசி மா
அரைமூடித்தேங்காய்ப்பால்
பனங்கட்டி (கருப்பட்டி)...-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு
மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

முதலில் சுத்தமாக கழுவிய வாணலியில் அல்லது பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))...


கலவை 1
இன்னொரு பாத்திரத்தில் அரைமூடித்தேங்காய்ப்பால், கருப்பட்டி, பச்சரிசி மா மூன்றையும் கலந்து வைக்கவும் கருப்பட்டி கரையும் வரை கலந்து கொள்ளவும்.


பயறும், தேங்காய்ச்சொட்டும் வெந்தவுடன் அதற்குள் கலவை ஒன்றைச் சேர்த்து அவிய விடவும்.

எல்லாம் கரைந்து மேலே கொதிக்கும் நிலையில் வந்ததும்

அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்...

! காரம்+இனிப்பு சேர்ந்த இனிய கலவையில் மணக்கும்!!

சுவை மிகச்சுவை எனக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்வும் பிடிக்கும்...

கொழுக்கட்டையும் உண்டு!!..:))

34 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Monday, July 16, 2007 11:53:00 PM  

அவ்வளவாக குடித்ததில்லை.
நல்ல பசியோடு இருக்கும் போது..சாப்பிட்டு பார்க்கனும்.
"தேவாமிர்தம்"

VSK Tuesday, July 17, 2007 12:01:00 AM  

அவ்வளவாகக் குடிக்கலைன்னாலும், முதலாவதாக வந்து பின்னூட்டமிட்டு கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி, திரு.குமார்.

குடிச்சிட்டு சொல்லுங்க!
:))

வல்லிசிம்ஹன் Tuesday, July 17, 2007 12:34:00 AM  

ஆடியைக் கூழோடு படிக்கத் தந்ததற்கு நன்றி எஸ்.கே. சார்.

சமயபுரத்தில் கூழ் ஊற்றுவதாக வேண்டிக்கொள்ளச் சொல்லுவார்கள்.
நீங்கள் சொல்லி இருக்கும் கூழ் அமிர்தமாக இருக்கும் போல் தெரிகிறது.

மிக நல்ல படைப்பு.நன்றி.

வெற்றி Tuesday, July 17, 2007 1:06:00 AM  

உங்களின் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இலங்கையில் பள்ளியில் படித்த பாடல். அதைச் சொல்வோம் என்று வந்தால், நீங்கள் அப்பாடலையும் பதிவில் இணைத்துள்ளீர்கள். :-))

எத்தனையாம் திகதி ஆடிப்பிறப்பு?

ரவி Tuesday, July 17, 2007 2:08:00 AM  

பதிவை அருமையாக ஆர்கனைஸ் செய்திருக்கீங்க...

ஈழத்துப்பாடல் அருமை....!!! கூழ் எங்கே கிடைக்குதுன்னு தகவல் சொல்லுங்க....கிளம்பி போய் குடிக்கலாம் போலிருக்கு பதிவை படிச்சவுடன்.

VSK Tuesday, July 17, 2007 9:21:00 AM  

நீங்கதான் நிமிஷமா செஞ்சிடுவீங்களே, வல்லியம்மா!

செய்து, குடித்துப் பர்த்து, எப்படி இருக்குன்னு இங்க வந்து சொல்லுங்களேன்!

அப்படியே, எனக்கும் ஒரு கப் பார்சல்!

:))

VSK Tuesday, July 17, 2007 9:22:00 AM  

அந்தப் பாடல்தான் இந்தப் பதிவையே எழுதத் தூண்டியது, திரு.வெற்றி!

ஆடி இன்று[17] பிறந்தது.

சென்ற பதிவைப் பாருங்க.

நன்றி!

VSK Tuesday, July 17, 2007 9:26:00 AM  

ஆடி மாசம் பூரா, வெள்ளி, ஞாயிறு ந்னைக்கு எந்த அம்மன் கோயிலுக்கு போனாலும் கிடைக்கும் செந்தழலாரே!

குறிப்பா, திருவேற்காடு, மாங்கடு, மயிலை முண்டக்கண்ணியம்மன், இது போன்ற கோயிலாப் பாத்து போனீங்கன்னா, கண்டிப்பா கிடைக்கும்.

கிடைக்கலைன்னா என்ன?
அதான் செய்முறை இருக்கே!

செஞ்சு பாக்க வேண்டியதுதானே!
:))

அப்படியே ஒரு 10 பேருக்கும் ஊத்துங்க!

Unknown Tuesday, July 17, 2007 9:44:00 AM  

//அரிசி யாரிடம் இருந்ததோ?
அவன் பயந்தான்.
கொண்டுவந்தான் கோயிலுக்கு.
கூழ் காய்ச்சினான்.//

நீங்கள் எழுதிய மேற்சொன்னதை படிக்கும்போது, எனக்கு அதை அப்படியே ஆமோதிக்கும் நபிகளார் வார்த்தை நினைவுக்கு வந்தது.

இறைவனுக்கு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் ஊக்குவிப்பதில்லை. எனினும், யார் இறைவனுக்காக நல்ல காரியங்களில் நேர்ச்சை செய்தாரோ, அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். ஏனெனில் நேர்ச்சை கஞ்சனிடமிருந்து பொருளை வெளிக் கொணர்ந்து எல்லோருக்கும் பயன்படுத்தச் செய்கிறது என நபிகளார் அறிவுறுத்தினார்கள்.

(இப்பதிவில் பிரசுரிக்க ஏற்றதெனில் மட்டும் அனுமதிக்க)

Anonymous,  Tuesday, July 17, 2007 9:51:00 AM  

அருமையான பதிவு
செய்முறைக்கு நன்றி

VSK Tuesday, July 17, 2007 9:52:00 AM  

//(இப்பதிவில் பிரசுரிக்க ஏற்றதெனில் மட்டும் அனுமதிக்க)//

என்னங்க இப்படி சொல்லீட்டீங்க, திரு. சுல்தான்!

அற்புதமான மெய்சிலிர்க்கவைக்கும் பொருத்தமான நபிகள்நாயகத்தின் உபதேசத்தைக் கேளாமலேயே இங்கு வந்து தந்திருக்கிறீர்கள்!

இதை இடாமல், வேறு இதை இடுவது?

இப்படி ஒரு கருத்தை இங்கு வந்து சொல்லலாம் எனத் தாங்கள் எண்ணியதே எனக்கு பெருமையாக இருக்கிறது!

நேர்ச்சை, "நாயகம் அவர்கள்" சொன்னதுபோல, கஞ்சனிடமிருந்து வெளிக்கொணர இறைவன் நிகழ்த்தும் ஒரு உத்தியே!

நட்புணர்வுக்கும், தங்களது பெருந்தன்மைக்கும் என் நன்றி!

VSK Tuesday, July 17, 2007 9:54:00 AM  

செய்முறை எப்படி வந்தது எனவும் மீண்டும் வந்து சொல்வீர்கள்தானே, தூயா அவர்களே!
:))

நன்றி.

வி. ஜெ. சந்திரன் Tuesday, July 17, 2007 10:29:00 AM  

தமிழ்நாட்டிலும் ஆடி கூழ் காய்ச்சும் வழக்கம் இருக்கிறதா?

நான் சந்தித்த தமிழ் நாட்டு நண்பர்களிடம் கேட்ட போது அப்படி ஏதும் இல்லை என்பது போல் சொன்னார்கள்.

என்னுடைய ஆடி கூழ் படம் படம்
http://viriyumsirakukal.blogspot.com/2007/06/blog-post_277.html


கானா பிரபாவின் பதிவு
http://kanapraba.blogspot.com/2007/06/blog-post_25.html

வி. ஜெ. சந்திரன் Tuesday, July 17, 2007 10:39:00 AM  

http://viriyumsirakukal.blogspot.com/2007/06/blog-post_277.html

மங்கை Tuesday, July 17, 2007 10:53:00 AM  

இங்க வந்த அப்புறம் நான் ரொம்ப மிஸ் செய்யறது ஆடி மாச ஃபீலிங்க் தான் எஸ் கே ஐயா..ஹ்ம்ம்ம்

நம்ம ஊர்ல இந்த 30 நாட்களும், முக்கியமா ஆடிப் பூரம்..ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்திற்கு நாங்க பெருசா கொண்டாடுவோம்...

நன்றி

வல்லிசிம்ஹன் Tuesday, July 17, 2007 1:55:00 PM  

செய்து , அம்மாக்குக் கை காண்பித்துவிட்டு, சாப்பிடுப் பார்த்துட்டு
உங்க ஊருக்கு அனுப்பிடறேன்.:)))

வவ்வால் Tuesday, July 17, 2007 5:15:00 PM  

எஸ்.கே அய்யா,

கூழ் ஏன் ஊற்றுகிறார்கள் என்று அருமையாக சொன்னிங்க , ஆனா இப்தார் கஞ்சிக்குடிக்க போகும் அரசியல்வாதிகள் ஆடிக்கூழ் குடிக்க போவதில்லையே அதற்கும் காரணம் தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புத்தோழி Tuesday, July 17, 2007 6:00:00 PM  

நான் நிறைய கோவிலுக்கு போயிருக்கேன் ஆனால் இதுவரைக்கும் கூழ் குடிச்சதே இல்லை. பார்க்கலாம் நீங்கள் சொன்ன செய்முறை வச்சு பண்ணி பார்த்துர வேண்டிதான்.

உங்களுடைய கற்பனை கதை அருமை. தெய்வத்திற்கு நெய்வேதினம் செய்து அதை எல்லோரும் உண்ணுவது, இதை பார்க்கும் போது திருக்குறள் தான் ஞாபகம் வருது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் ஓடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்.

ஜே கே | J K Wednesday, July 18, 2007 6:47:00 AM  

நீங்க சொன்ன கூழ் விளக்கம் தான் உண்மைனு நினைச்சேன்.

அன்புத்தோழி வந்து கற்பனை கதை அப்படினு சொல்லிட்டு போயிருக்காங்க.

எப்படியோ விளக்கம் சூப்பர்.

VSK Wednesday, July 18, 2007 8:07:00 AM  

தமிழகம் முழுதும் இந்த ஆடிக்கூழ் ரொம்பவுமே பிரசித்தம் தான் திரு. சந்திரன்.

பெரியபாளையத்தம்மன், மாங்காடு காமாக்ஷி, திருவேற்காடு கருமாரி, மயிலை முண்டக்கண்ணியம்மன் தொடங்கி, எல்லா மாரியம்மன் கோவில்களிலும், வெள்ளி, ஞாயிறு அன்று இது மிகவும் பிரபலமாக நடக்கும்.

கோடைத் திருவிழா, கோடை அம்மன் திருவிழா என ஊருக்கு ஊர் அல்லோலகல்லோலப்படும்.

படங்கள் அளித்தமைக்கும், உங்கள் பதிவில் இதற்கு சுட்டி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

VSK Wednesday, July 18, 2007 8:09:00 AM  

ஆடி மாதம் வந்தாலே அம்மன் பக்தர்களுக்குக் கொண்டாட்டம்தானே மங்கை அவர்களே!

சிலவற்றை இழந்தது எப்போதுமே வருத்தமளிக்கு செய்திதான்.

வருகைக்கு நன்றி.

VSK Wednesday, July 18, 2007 8:16:00 AM  

எனக்குக் காரணம் தெரியாது, திரு.வவ்வால்.

வேறு எவரையாவது கேட்டு எனக்கும் சொல்லவும்.
பாராட்டுக்கு நன்றி.

VSK Wednesday, July 18, 2007 8:18:00 AM  

தபால்காரரின் வருகைக்காகக் காத்திருக்கிறேன், வல்லியம்மா!

நன்றி [முன்னதாகவே!:)]

VSK Wednesday, July 18, 2007 8:19:00 AM  

இப்படித்தான் நடந்திருக்கும் என நான் நினைத்த கருத்து உங்களுக்கு கற்பனையாகப் பட்டிருக்கிறது.

இருக்கலாம்.

குறள் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

நன்றி, அன்புத்தோழி!

VSK Wednesday, July 18, 2007 8:22:00 AM  

இப்படித்தான் நடந்திருக்கும் என நான் நினைத்த கருத்து அவருக்கு கற்பனையாகப் பட்டிருக்கிறது.

ஆனால், இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் இது.

அம்மன் அருள் வந்து இது போல சொன்னதை நானே கண்டிருக்கிறேன்.

பாராட்டுக்கு நன்றி, திரு.ஜே.கே.!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, July 18, 2007 10:57:00 AM  

//அம்மன் ஊற்றிய கூழைப் பிரசாதமெனப் பெற்று பசியாறினர்!//

பொதுவாகப் பிரசாதங்கள் சிறிதளவே வழங்கப்படும்!
அள்ள அள்ள ஊற்றிக் கொடுக்கும் அருமையான பிரசாதம் கூழ் ஒன்று தான், SK!

அப்படியே கூழோடு, அரிசி உருண்டையை வெல்லம் கலந்து, வேப்பிலையில் வைத்து உண்ணத் தருவார்கள்! அமிர்தம் அமிர்தம்!

ஆடிக் கூழ் ஊற்றினமைக்கு நன்றி SK!
ஈழத்துப் பாடலுக்கு அதை விட நன்றி!

//கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்து//
சூடாக இது வரை குடித்ததில்லை! நல்லாத் தணிந்து தான் பொதுவா ஊத்துவாங்க! சூடாக ஒரு முறை ட்ரை செய்து பார்க்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, July 18, 2007 11:16:00 AM  

திரு. சுல்தான் சொன்ன நேர்ச்சை நலம் என்னை மிகவும் கவர்ந்தது!

//நல்ல காரியங்களில் நேர்ச்சை செய்தாரோ, அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும்//

உண்மை! உண்மை!
இறைவன் நம்மிடம் ஏதும் கேட்பதில்லை! நாம் தான் அவன் பொருளை எடுத்து அவனுக்கே கொடுக்கிறோம்!

உயிர் கொடுத்து, உணவையும் கொடுத்த தாயும் தந்தையும்...
குழந்தையின் எச்சில் உணவை ருசி பார்த்து மகிழ்வது போல் அவனும் அதை ஏற்கிறான் - அதில் அன்பு இருந்தால்!

//நேர்ச்சை கஞ்சனிடமிருந்து பொருளை வெளிக் கொணர்ந்து எல்லோருக்கும் பயன்படுத்தச் செய்கிறது என நபிகளார் அறிவுறுத்தினார்கள்//

சொன்ன சொல்லைக் காக்கப் போய், நேர்ச்சை அனைவரையும் காக்கும் நற்பணியாக முடிகிறது!

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு

கொடிறு உடைப்பதை மனிதன் செய்தால் வன்முறை!
இறைவன் செய்தால் தடுத்தாட் கொளல்! கஞ்சனைத் தடுத்து அனைவரையும் ஆட் கொளல்! :-)

VSK Wednesday, July 18, 2007 11:46:00 AM  

பொதுவாகவே பொறுமையான ஆள் நீங்க!

எல்லாரையும் முன்னுக்குப் போகவிட்டு, வரிசையில் கடைசி ஆளா நின்னு வாங்கிக் குடிச்சிருப்பீங்க!

அதான் ஆறின அடிக்கூழ் [ஆடிக்கூழ் இப்போ அடிக்கூழ் ஆகிவிட்டது!:))] குடிச்சிருக்கீங்க!

மொத ஆளா நின்னு வாங்கி சுடச்சுட குடித்து மகிழ அம்மன் விரைவிலேயே அருளட்டும்!
:)))))

திரு.சுல்தான் சொன்ன நேர்ச்சை உங்களையும் கவரும் என நினைத்தேன்.

மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

பகைவர்க்கும் அருளும் நெஞ்சல்லாவா அம்மாவின் நெஞ்சு!

நானானி Wednesday, July 18, 2007 1:18:00 PM  

ஆடிக்கூழின் மகிமையும் அம்மா கூழ் ஊத்தச்சொன்ன காரணமும் அருமை!
தன் பிள்ளைகளின் பசியாற்றிய அந்தத்
தாயின் கருணையே கருணை!!
நானும் இங்கே அருகிலுள்ள பெரியபாளையத்தம்மன், எல்லம்மன் கோயில்களில் ஆடிக்கூழ் ஊற்றியிருக்கிறேன். நாம் போகும்போது கூட்டமே இருக்காது கொஞ்ச நேரத்தில் எங்கிருந்துதான்
வருமோ? கூட்டமாக வந்து நம்மிடமிருந்து கூழ் வாங்கிக்குடித்துவிட்டு நம் மனமும் வயிறும் குளிரச்செய்துவிடுவாள் அன்னை!! நாங்கள் செய்வது கேள்வரகுக்கூழ், நீங்கள் செய்யும் கூழ் செய்து பார்த்து சுவைக்க ஆசை!
இந்தமுறை இந்த்துகூழையே அம்மாவுக்குப் படைக்கலாமென்றிருக்கிறேன். நன்றி

VSK Wednesday, July 18, 2007 3:13:00 PM  

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே, திரு. நானானி!

தமிழகத்தில் பெரும்பாலும் கேழ்வரகுக்கூழ்தான் ஊற்றுகிறார்கள்!

அதே போல, எங்கிருந்தோ வந்து கூழ் பெற்றுச் சொல்லும் கூட்டமும் மனதுக்கு இதம்.

வருகைக்கு நன்றி!

இந்தக்கூழுக்கு வரவேற்பு எப்படி இருந்தது எனச் சொல்லுங்கள்!

G.Ragavan Thursday, July 19, 2007 5:00:00 PM  

வருடந்தோறும்
ஆடி வரும்
ஆடி வரும்
வந்தாலே அம்மன் கூழ்
தேடி வரும்
அம்மன் அருள்
கூடி வரும்

சமயபுரத்தாளின் படம் பார்த்தாலே பரவசந்தான்.

ஆயீ மகமாயி
ஆயிரம் கண்ணுடையா
நீலி திரிசூலி
நீங்காத பொட்டுடையா
சமயபுரத்தாளே
சாம்பிராணி வாசகியே
சமயபுரத்து எல்லைய விட்டு
சடுதியிலே வாருமம்மா

தஞ்சை மாரியம்மன் கோயிலுக்குப் போயிருக்கிறேன். ஆகா....புன்னைநல்லூர்க்காரியை பார்த்தால் பார்க்க முடியவில்லை. பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அந்த நினைப்பைத் திரும்பவும் உங்கள் பதிவு கொண்டுவந்துவிட்டது.

VSK Thursday, July 19, 2007 9:08:00 PM  

சென்ற ஆண்டு சபரிமலை போகும்போது சமயபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோயிலுக்குள் நாங்கள் நுழையும் போது என்னைப் பார்க்க அவளே வந்தாள்!

ஆம், வெளிக் கோபுர வாசலை நாங்கள் மிதிக்கும் போது, தங்கரதத்தில் என் முன் அவள்!!

கண்னில் நீர்வழிய அவள் கருணையை எண்ணியபடி கரங்குவித்தேன்!

அப்போது வாங்கிய நூல், இன்று என் ஆசை நிறைவேறும் வண்ணம் இப்போது வலைப்பூவில்!

மனம் முழுதுமாய் நிரம்பி இருக்கிறது ஜி.ரா.

உங்கள் பாடல் மேலும் சுவை கூட்டுகிறது!

மிக்க நன்றி!

நாமக்கல் சிபி Friday, July 20, 2007 1:19:00 PM  

ஆயி மகமாயி!
ஆயிரங்கண்ணுடையாள்
அந்த ஆதிபராசக்தி!

உடுக்கையொலி கேட்டிருவாள்!
உலகையெல்லாம் காத்திடுவாள்!
பம்பை சத்தம் கேட்டிடுவாள்!
பாரெல்லாம் காத்திடுவாள்!

ஆத்தா வேப்பிலைக்காரி!
ஆதி கருமாரி!
அண்டியவர்க்கருள் மாரி!

எனக்கென மாரியம்மன் தாலாட்டை தொடர்ந்து பதிவிட்டு, ஆடி மாதத்தில் அதுவும் ஆடி வெள்ளியிலே முழுவதாய்ப் படிக்க தொகுத்து ஒரு தனிப் பதிவும் இட்ட வீ.எஸ்.கே அவர்களுக்கு நன்றி

நாமக்கல் சிபி Friday, July 20, 2007 1:32:00 PM  

ஏழைகள் வாங்கிக் குடிக்கும் கூழில் அம்மன் வயிறு நிறையும் என்பார்கள்!

அம்மன் மனம் நிறைந்தால் ஆனந்தம் கொண்டு அருள் புரிவாள்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP