"அ.அ.திருப்புகழ்--17 [தொடர்ச்சி] "சீரான கோலகால"
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]
"சீரான கோலகால நவமணி"
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.
[முதல் பகுதியை இங்கு பார்க்கவும்]
"சீரான கோல கால நவமணி
மாலா அபிஷேக பார"
அறுமுகனுக்கு முடிகள் ஆறு.
சீறான சிறப்பு மிக்கதும்
கோலாகலமானதும் ஆன
நவமணிகளால் வரிசையாக
இழைக்கப்பட்ட திருமுடிகளைத்
தாங்கி நிற்கும் முகங்களை உடையதும்,
[கோலாகலம் எனும் சொல் சந்தத்திற்காக கோலகால என மாறியது.]
"வெகுவித தேவாதி தேவர் சேவை செயு முகமலர் ஆறும்"
முப்பத்து முக்கோடி அமரர்களும்
அவர்களின் தலைவர்களும் சேர்ந்து வங்து
அடிபணிந்து சேவித்து வணங்கி நிற்கும்
தாமரை மலர் போலும் முகங்கள் ஆறும்
"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"
பெருமைமிகு வீரஇலக்குமி தேவி
எப்போதும் நீங்க நிற்கும் வீரமுடை
"ஆறிரு தடந்தோள் வாழ்க" என
முதல் வரியால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் போற்றிப் புகழும்
சீர்மிகு பன்னிரு தோள்களும்
"நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்"
நீள்வரிகளால் கோடிழைத்து
ரீங்காரம் செய்கின்ற வண்டினங்கள்
ஸ்ரீராகம் என்னும் பண்னைப்பாடி
மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்
அலங்கரிக்கப்பெற்ற மணமிகுந்த
சிவந்த இரு பொற்பாதங்களும்
"ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இட முறைவாழ்வும்"
தணியாக் காதல் கொண்டு தான் தேடி மணந்த
வேடக்குறமகளாம் வள்ளிநாச்சியாரும்,
மேகத்தை வாகனமாகக் கொண்டு
அதன் மீது ஏறி உலா வருபவனும்,
வலன் எனும் நிருதன் எனும் அரக்கனை
வதம் செய்தவனுமான இந்திரனின்
மற்றவர் கூறுகின்ற நல்ல குணங்களைக்
கொண்டதும் பட்டென்று பற்றிக்கொள்ளும்
'கொளுத்தியது விடாமை' என்கின்ற 'மடம்' என்னும்
குணம் நிறைந்த தெய்வயானை அம்மையும்
உலகங்கட்கு ஆதார சக்தியாக வலமும் இடமுமாக
உறைகின்ற உத்தம வாழ்வினையும்
[மட சாம்பிராணி எனும் சொல் இப்போது நன்கு புரியுணுமே!]
"ஆராயு நீதி வேலு மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்"
நல்லது செய்யவே செலுத்தப்படும்
நீதி புரியவே நாட்டப்படும் ஞானவேலும்
அதற்கெனவே காத்திருக்கும் மயில் வாகனத்தையும்,
மெய்யென்னும் 'சத்', ஞானமென்னும் 'சித்'
அழகின் மிகுதியால் விளையும் 'ஆனந்தம்'
இது மூன்றும் நிறைந்திருக்கும் நின் திருவுருவையும்
"ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்"
நற்குணங்கள் ஏதுமில்லா கொடியோனாய யான்
நாள்தோறும் நினைந்து, நினைந்து உருகும்
தன்மையினைப் பெற்று எவருக்கும் கிட்டா
பேறு பெற்று உய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.
அருஞ்சொற்பொருள்:
அபிஷேகபார= அலங்கரிக்கப்பட்ட முடிகளை உடைய
மருவிய= தழுவி வாழ்கின்ற
நீளும்= நீண்ட
சீராகம்= ஸ்ரீராகம்
நீப பரிமள= கடப்ப மலர்களால் மணமிகுந்த
அபிராம தாபம்= அழகின் மிகுதி
ஆபாதனேன்= கொடியவனாகிய நான்
ஏர் ஆரும்= அழகு நிறைந்த
ஏழ் ஏழ் பேர்கள்= நாற்பத்தொன்பது புலவர்கள்
ஊமர்= ஊமை
ஆலவாய்= மதுரை
விசார= ஆராய்ச்சி உடையவர்
வீய= சபதம் செய்தல்
ஆழி= சக்கரப்படை
பாநு= ஆதவன், சூரியன்
கோடாமல்= குறைவின்றி
[இன்று மாத சஷ்டி பூஜை செய்ய வேண்டியிருந்ததால் இருபகுதிகளாக வெளிவர நேரிட்டது! இப்பாடலை ஸ்ரீராகத்தில் பாடுதல் உகந்தது எனச் சொல்லுவர்.]
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!
21 பின்னூட்டங்கள்:
மீதிப்பகுதிக்கான விளக்கம் இங்கே!
:))
நற்குணங்கள் யாவினையும் 'கொளுத்தியதும் பற்றிக்கொண்டு அவைகளை விடாது இருப்பவன்' என என்னையும் நீங்கள் கருதி அழைத்தது மகிழ்வாக இருக்கிறது, கோவியாரே!
அது தேவயானியின் மருஉ அல்ல!
வடமொழியில் அன்னைக்கு தேவஸேனா எனப் பெயர்.
தெய்வானை, தேவானை என்பது தூய தமிழ்ப்பெயர்.
காரணப்பெயர்.
ஐராவதம் என்ற தேவேந்திரனின் யானை வளர்த்த பெண் என்பதால்.
இது பற்றி முன்னமொரு திருப்புகழில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
நன்றி.
இருவர் பெயருமே குறிப்பாகத்தானே இப்பாடலில் வந்திருக்கிறது கோவியாரே!
இதில் ஒருவர்க்கு மட்டும் கேள்வி எழுவது ஏன்?
"ஆராத காதல் வேடர் மடமகள்' என வள்ளியையும்,
"ஜீமூத வலாரி மடமகள்" என தெய்வானையையும் குறித்திருக்கிறார் அருணையார்.
என்ன தூக்கக் கலக்கமா?
:))
கோவி. கண்ணன் அண்ணா. திருப்புகழில் எங்காவது தெய்வயானை அம்மையின் பெயர் 'தெய்வயானை' என்று நேரடியாகச் சொல்லப் பட்டிருக்கிறதா என்ற கேள்வியைப் பார்த்தவுடன் கூகுளாரைக் கேட்டேன். இந்தத் திருப்புகழைத் தந்தார்.
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்
அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும்
தரித்த ஊரும் மெய்யென மன நினைவது நினையாது உன்
தனைப்பராவியும் வழிபடும் தொழிலது தருவாயே
எருத்திலேறிய இறையவர் செவிபுக உபதேசம்
இசைத்த நாவின் இதணுறு குறமகள் இருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரும் தெய்வயானை
பதிக்கொள் ஆறிரு புய பழனியில் உறை பெருமாளே
மகபதி தரவரு தெய்வயானை - தேவர்களின் தலைவனின் திருமகளான தெய்வயானை
இன்னும் தேடினால் நிறைய கிடைக்கும். உங்கள் ஐயம் தீர்ந்ததா கண்ணன் அண்ணா.
இராகவனின் இந்த இடுகையைப் பாருங்கள். அவர் இந்த இடுகையைத் தொடங்கும் போதே 'கற்பு மணம் தெய்வயானை; களவு மணம் வள்ளி.' என்று தான் தொடங்குகிறார்.
http://iniyathu.blogspot.com/2006/04/13.html
ஆத்திகம் தீர்த்து வைக்காத கோவிய்யரின் ஐயத்தைத் தனியொரு மனிதராக வந்து தீர்த்து வைத்த குமரரே!
உங்களுக்கு நன்றி!
[திருவிளையாடல் முத்துராமன் ஸ்டைலில் படிக்கவும்!:))]
இரு பின்னூட்டங்களுக்கும் சேர்த்தே சொல்லிவிடுகிறேன், கோவியாரே!
அதற்கு முன், இந்தப் பதிவுக்கு வந்து கருத்து சொன்ன[கேட்ட??] ஒரே பதிவர் என்ற முறையில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
//செய்யுளில் ஏன் நேரடியாக குறிப்பிடாமல் இந்திரன் மகள் என்பது போல் குறிப்பாகவே வருகிறதென்று.//
இச்செய்யுளில் என்று நான் நினைத்தேன்.
இப்போது திருப்புகழ் மொத்தத்திலும் எனச் சொல்லுகிறீர்கள்.
எனக்கு எல்லாத் திருப்புகழும் தெரியாது.
ஆனால், வள்ளி, தெய்வானை இருவரையும் பல இடங்களில் குறிச்சொற்களாலும், நேராகவும் குறிப்பிட்டிருக்கிறார் அருணையார்.
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.
பார்த்துச் சொல்லுகிறேன்.
சரி, இத்தோடு இதை இப்போதைக்கு விடுவோம்.
:))
//மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்//
கடம்ப மலர்கள் என்றீருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நீப மலர் - நீலோத்பல மலர்?.
கடம்பமலர் என்பது வேறு. சற்றே திரும்பிப்பாரும் விஎஸ்கே.
கடம்ப மலர், கடப்ப மலர் எனவும் இசைநயத்துக்காக வழங்கப்படும், மதுரையம்பதியாரே!
நீப மலருக்கு நான் கண்ட உரைகளில் கடம்பம் என்றே போட்டிருக்கிறது.
முருகனுக்கு உகந்ததும் அதுவே என்பதால் அதில் எனக்கு 'திரும்பிப் பார்க்கத்' தோன்றவில்லை, ஐயா!
அகராதியிலும் அப்படியேதான் போட்டிருக்கிறது.
"nipam" (p. 619) [ nīpam ] {*}, s.== a flower tree sacred to Skanda, katampu; 2. the 26th lunar asterism, uttirattati.
நன்றி.
:))
"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"
விளக்கம் சரியாப் புரியலை. ஒருவேளை இங்கேயும் தெய்வயானையைக் குறிச்சுச் சொல்லப் பட்டிருக்குமோ?
மரம் என்று ஒரு கவிதை படித்திருப்பீர்கள் இணையத்தில் என நினைக்கிறேன், தலைவி.
மரம் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு அதற்கு அடைமொழியாய் வருகின்ற பல பொருள்களை வைத்து ஒரு சொற்சிலம்பம் ஆடியிருப்பார் அந்தக் கவிஞர்.
[உ-ம்] அரச மரம், அரசன், புரவி, வேங்கை இப்படி.
அதுபோல மாது என்றசொல்லின் கூட வீர மாது என வருவதைக் கவனியுங்கள்.
இதில் மாது என்பது ஒரு பெண்தெய்வத்தைக் கூறிக்கிறது.
வீர மாது எனும் போது அது வீர லக்ஷ்மியாகிறது.
திருமுருகனின் திருத்தோள்களில் வீர லக்ஷ்மி குடி கொண்டிருக்கிறாள்... அவனது பன்னிரு தோள்களிலும் என்பதையே அருணையார் உருவகமாகக் குறித்திருக்கிறார்.
கச்சியப்பரும் கந்தபுராணத்தில் முதல் வரியாக இந்தப் பன்னிரு தோள்களையும் போற்றியே முதல் வரியை வைத்திருக்கிறார் [ஆறிரு தடந்தோள் வாழ்க!] என்னும் கருத்தையும் அதில் இணைத்தேன்.
நன்றி.
இரண்டாவது போட்டதைச் சொல்லவே இல்லையே!!
போன பதிவில் அருஞ்சொற்பொருள் இல்லாததைக் கவனிக்கவே இல்லை. எளிமையாகப் பொருள் சொல்லி இருந்ததால் தேவை இல்லை என தோன்றியதோ என்னவோ.
நன்றி மீண்டும்.
அய்யா பதிவு சிறப்பாக உள்ளது!
கோவியார் இங்கேயும் வந்து ரகளை
பண்ணுவதாகத் தெரிகிறது:-))
தெய்வானை என்பதும்
வள்ளியம்மை என்பதும்தான் தூய தமிழ்ச் சொற்கள்
பிற மாநிலங்களில்
தேவசேனா என்றும் தேவயானி என்றும்
சொல்வார்கள்
கோவியார் செய்வது ரகளை அல்ல ஆசானே!
தெய்வானை அம்மை அவரை ஆட்கொண்டிருக்கிறார்.
அதன் விளைவே இதெல்லாம்!
:))
// "சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்" //
இந்த வரிகளுக்குச் சரியாகச் சொல்லியிருக்கின்றீர்கள். வீரமாது என்றதும் அது வள்ளியோ என்பர் சிலர். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது திருமகள். அதை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். மிக அருமையான விளக்கம்.
// குமரன் (Kumaran) said...
இராகவனின் இந்த இடுகையைப் பாருங்கள். அவர் இந்த இடுகையைத் தொடங்கும் போதே 'கற்பு மணம் தெய்வயானை; களவு மணம் வள்ளி.' என்று தான் தொடங்குகிறார்.
http://iniyathu.blogspot.com/2006/04/13.html //
உண்மைதான் குமரன். நான் எழுதிய பதிவுதான் அது. அநுபூதிக்குப் பொருள் சொல்கையில் அதைக் குறிப்பிட்டேதானே ஆகவும் வேண்டும்.
வள்ளியோடும் தெய்வயானையோடும் முருகப் பெருமானை வணங்கவோ தொழவோ துயர் நீக்க அழவோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதையும் அறிக. :-)
வல்லிமாரிருபுறமாக வள்ளியூறை பெருமானே! (விஎஸ்கே, இந்தத் திருப்புகழுக்கும் விளக்கம் சொல்லுங்களேன்.)
'தொடர்ச்சிப் பகுதியையும்" படித்து கருத்தளித்தமைக்கு நன்றி, ஜி. ரா.
வல்லிமார் இருபுறமாக வள்ளியூர் உறையும் பெருமானைக் கண்டு வருகிறேன்!
:))
Post a Comment