Thursday, March 08, 2007

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16--சரவணஜாதா நமோ நம

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!



9 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Friday, March 09, 2007 10:11:00 AM  

எஸ்கே ஐயா,

மணிபவள நடைப் பாடல்கள் எப்படி இருக்கும் என்று தெரியாமல் இருந்தது. அதனை இங்கு போட்டு உங்கள் அழகு தமிழில் விளக்கம் சொல்லுவது எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.

செங்கிருதச் சொற்களுக்கு தாங்கள் தரும் அரும் சொற்பொருள் விளக்கம் மிகவும் பயன்படும்.

நன்றி !

VSK Friday, March 09, 2007 11:09:00 AM  

இது புதுப் பதிவு!

முழுப்பாடலுக்கும் பொருள் சொல்லி இருக்கிறேன்.

போட்ட பதிவையே திரும்பப் போட்டு விட்டேன் என நினைத்து யாரும் வரவில்லை போல என நினைத்தேன்.

வந்து, படித்து, கருத்தும் சொன்னதற்கு நன்றி, கோவியாரே!

//செங்கிருதச் சொற்களுக்கு தாங்கள் தரும் அரும் சொற்பொருள் விளக்கம் மிகவும் பயன்படும்.//

என்ன ஸொல்றீங்க?
அப்ப இதையும் 'சொல் ஒரு சொல்'லில் சேர்த்துரலாங்கறீங்களா?
:))

G.Ragavan Friday, March 09, 2007 12:05:00 PM  

எஸ்.கே, ஒரு ஐயம்.

மரகத ஆகார ஆயனும்-பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்

இரணிய ஆகார வேதனும்-பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்

வசு எனும் ஆகார ஈசனும்-நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்

இது நீங்கள் சொல்லியிருக்கும் பொருள். முதல் ஆகாரம் மீன் என்று தெரிகிறது. மற்ற இரண்டு ஆகாரங்களும் புரியவில்லையே. கொஞ்சம் விளக்குங்களேன்.

G.Ragavan Friday, March 09, 2007 12:07:00 PM  

// "விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே! //

இங்கும் ஒரு ஐயம். சென்ற பதிவிலேயே கேட்க நினைத்தது. விட்டுப் போய்விட்டது. பிள்ளையார்பட்டி கோயில் என்பது நானறிந்த வரை புதிய கோயில் என்று நினைக்கிறேன். அருணகிரியின் காலத்தில் இருந்ததா என்ன? தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.

ஷைலஜா Friday, March 09, 2007 12:09:00 PM  

சலசலஎன்ற நீரோடையில் நிற்கிற மாத்ரி இருக்கிறது! அர்த்தம் தெரிந்து பின் பாடுவதும் ஓர் அழகுதான்.பதம்பிரித்து விளக்கமும் கொடுத்திருப்பது நன்று எஸ்கே!

VSK Friday, March 09, 2007 1:06:00 PM  

மால், பிரமன், உருத்திரர் இவர் மூவரும், காத்தல், படைத்தல், அழித்தல் எனும் மூவகைத் தொழில்களையும் செய்பவர்.

பரம்பொருளாம் முருகப்பெருமானின் அருளானையாலேயே இவர்கள் செய்வதாக ஒரு கருத்து உண்டு.

சிவமும், சக்தியும் சேர்ந்தளித்த அண்ணல் எனும்போது இதுவும் சரியாகவே வருகிறது.

ஆகாரம் என்பது வண்ணத்தைக் குறிக்கும் ஒரு சொல்.

மரகத ஆகாரன் திருமால்.
பிரமனுக்குப் பொன்னிறமானவன், ஹிரணியன் எனும் ஒரு பெயருண்டு.
எனவே, இரணிய ஆகாரன் பிரமன்.
உருத்திரன், சதாசிவன், மஹேஸ்வரன் எனும் சிவனின் அம்சங்களில் ஒருவனான உருத்திரனுக்கு சிவந்த வண்ணம் -- நெருப்புருவம்
எனவே வசு எனப்படும் வசு ருத்திர ஆகாரன் ஈசன்.

இவர்கள் அனைவரும் முருகனின் திருவடியை வணங்கிட விரும்பிக் காத்திருக்கின்றனர் எனச் சொல்லுகிறார் அருணையார்.

இது என்னளவிலான விளக்கம், ஜி.ரா.

அடுத்து,
பிள்ளையார்பட்டியில் இருக்கும் பிள்ளையர் சுயம்பு.
பன்னெடுங்காலமாய் இருந்து வருகிறது.
உள்ளே சென்று பார்த்தால் தெரியும்.
கோவில் வேண்டுமானால் இப்போது பிரஸித்தம் அடைந்த பின்னர் விரித்துக் கட்டியிருக்கக் கூடும்.

இந்த ஊருக்கு விநாயகர்மலை எனவும் ஒரு பெயருண்டு.

இங்கு ஒரு வேலன் சந்நிதியும் இருக்கிறது.

VSK Friday, March 09, 2007 1:12:00 PM  

//ஷைலஜா said...
சலசலஎன்ற நீரோடையில் நிற்கிற மாத்ரி இருக்கிறது! அர்த்தம் தெரிந்து பின் பாடுவதும் ஓர் அழகுதான்.பதம்பிரித்து விளக்கமும் கொடுத்திருப்பது நன்று எஸ்கே!//


அட! மணிபவள நடைக்கு இவ்வளவு அழகிய தமிழ்ப்பெயரைச் சத்தமில்லாமல் சொல்லி இருக்கிறீர்களே, ஷைலஜா!

தரளம் என்றால் பவழம்.
"மணிதரளம் வீசி அணியருவி சூழ" என ஒரு சில பாடல்களுக்கு முன்னர் ஒரு கதிர்காமத் திருப்புகழில் ஒரு வரி வரும். [திருமகள் உலாவும் எனும் பாடல்]

அதற்கு நல்ல விளக்கம் கொடுத்திருக்கிறீகள் நீங்கள்!

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து" என மாணிக்கவாசக ஸ்வாமிகளும் சொல்லியிருப்பதைப் போல், நாமும் பொருளுணர்ந்து சொல்லலாமே எனத்தான்.

மிக்க நன்றி!

குமரன் (Kumaran) Friday, March 09, 2007 2:34:00 PM  

மிக நல்ல பாடல் எஸ்.கே. முதன்முறையாக இன்று தான் இந்தப் பாடலைப் படிக்கிறேன். பாடலைப் படிக்கும் போதே இதற்கு என்ன பொருள் இருக்கும் என்று ஆராய்வது சுவையாக இருந்தது. :-)

மரகத ஆகார ஆயனும்
இரணிய ஆகார வேதனும்
வசுவெனும் ஆகார ஈசனும்

என்ற மூன்று அடிகளைப் படிக்கும் போது முதல் இரண்டு அடிகளுக்குப் பொருள் புரிந்தது. வசுவெனும் ஆகாரம் என்று ஏன் ஈசனைச் சொல்லியிருக்கிறார் என்று புரியவில்லை. வசுவென்றால் நெருப்பு என்ற பொருளும் உண்டு என்பதை உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு அறிந்து கொண்டேன்.

ஆகாரம் என்றால் நிறம் என்பதைவிட உடல், உருவம் என்பதே பொருத்தமான பொருளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
மரகதம் போன்ற உடலையுடைய ஆயனும் (இங்கே எங்கே மச்சாவதாரக் குறிப்பு வந்திருக்கிறது?), தங்கம் போன்ற உடலினைக் கொண்ட வேதனும் (ஹிரணியகர்ப்பனும்), நெருப்பு போன்ற உடலைக் கொண்ட ஈசனும் என்று பொருள் கொள்ளலாம்.

இறைவனுக்கு உருவம் உண்டு; இல்லை என்று விவாதிக்கும் போது சாகாரி (ச + ஆகாரி); நிராகாரி (நிர் + ஆகாரி) என்று தானே ஆன்மிக நூல்கள் சொல்கின்றன?

நிராகாரி அல்லா என்று தொடங்கும் சாயி பஜனும் உண்டே.

VSK Friday, March 09, 2007 2:53:00 PM  

ஆகாரன் என்றால் உரு, நிறம் என இரு பொருளும் வரும், குமரன்.

இந்த இடத்தில், அந்தந்த நிறங்களை வைத்து இன்னின்னார் எனச் சொல்லியிருந்ததால், அதைப் பின்பற்றியே பொருளும் சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் கருத்தும் பொருந்தும்

மச்சாவதாரக் குறிப்பு இப்பாடலில் இல்லை.
அது நானாகச் சேர்த்தது நான்கு சீருக்காக!

அஷ்டவஸுக்கள் எனப் படித்திருப்பீர்களே, அவர்கள்தாம் உருத்திரர்கள்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP