Saturday, April 22, 2006

"இரண்டு கூட்டணிகளும் தோற்க வேண்டும் என ஏன் சொல்லுகிறேன்?"

"இரண்டு கூட்டணிகளும் தோற்க வேண்டும் என ஏன் சொல்லுகிறேன்?"


சமீப காலமாக இந்தத் தலைப்பில் கண்ட வாக்கியத்தை நான் சொல்லி வருவது கண்டு,

சிரிப்பவர் சிலர்!
சீண்டிப் பார்ப்பவர் சிலர்!
சீறுபவர் சிலர்!
சிணுங்குபவர் சிலர்!
சிந்திப்பவர் சிலர்?

இதை ஏன் சொல்லுகிறேன்?

கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல இரண்டில் ஏதாவது ஒரு கூட்டணியை ஆதரித்து விட்டுப் போவதுதானே என கேலியும், கிண்டலும், கும்மாளமுமாக தமிழ்மணம் ரொம்பவே மணக்கிறது!

முப்பதாண்டுகளுக்கும் மேலாக, தமிழ் மக்கள் கடந்த 55 ஆண்டு கால குடியரசு ஆட்சிக் காலத்தில், இந்த இரு கழகங்களையும் நம்பி,
"இவர்கள் நமது நலனை மட்டுமே கருத்தில் கொண்டவர்கள்,
பிராந்தியக் கட்சியை ஆதரித்தால், நமக்கும், நம் சந்ததியருக்கும், பயன் இருக்கும்"
என மனப்பூர்வமாக நம்பி, மாறி, மாறி, இவ்விரு கழகங்களையும் நம்மை ஆளவைத்ததில், நாம் கண்ட நன்மைகள் என்ன, தீமைகள் என்னென்ன என்று பார்த்தால்,தீமைக்கணக்கே விஞ்சி நிற்கிறது!

அரிசியைக் காட்டியே ஆட்சிக்கு வந்த இந்த கபடவேடதாரிகள், இன்றும், ... 2006-இலும், ...அதே அரிசியை இன்னமும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்,
எந்தப் பிரச்சினையைக் காட்டி வந்தனரோ, அந்தப் பிரச்சினை இன்னமும் சரி செய்யப் படாமல் இருக்கிறது என்றுதானே உணரப்பட வேண்டும்?

40 விழுக்காடுக்கும் மேற்பட்ட மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே வைத்திருப்பது ஒன்றே நாம் திரும்பத் திரும்ப , மாறி, மாறி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வழி என்னும் ஒரு எழுத்தில் இல்லா, இரகசிய உடன்படிக்கையாகவே இவ்விரு கழகங்களும் கொண்டுள்ளன என்று தெரிய வில்லையா?

மாநிலத்திலும், மத்தியிலும் தொடர்ந்து ஆட்சி, மற்றும் அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றும், சொந்த தமிழ் மக்களை முன்னேற்றாமல், சொந்த மக்களை மட்டும் முன்னேற்றத் துடிக்கும் இவர்களை நம்பி மீண்டும் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்க எப்படி நம் மனசாட்சி இடம் கொடுக்கும்?

10 பைசாவுக்கு வக்கில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் எல்லாம், இன்று பல கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டுகிறார்களெ; இதெல்லாம் எப்படி வெறும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் சம்பளத்தில் சாத்தியமாகும் என தமிழ்கமே, இப்போதாவது சிந்திக்க ஆரம்பி!

இலவசங்களைக் காட்டி, உன்னை பிச்சைக்காரனாய்ப் பார்க்கும் இந்த கேடு கெட்ட கழகங்களின் கோரப்பிடியினின்று நீ விடுபடும் நேரம் வந்துவிட்டது!

தனியாய் நிற்பவனும் இலவசங்களைக் காட்ட வில்லையா என , உடனே ஒரு கூட்டம் வால் பிடித்து ஓடி வரும்!
அவர்களுக்கு இதோ என் பதில்!

VK 15 கிலோ அரிசி இலவசம் என்றதும் சிரித்த அதே கூட்டம்தான் இன்று பொருளாதார ரீதியில் இது சாத்தியமே என்று கூறுவதை கேட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம்!
இது சாத்தியம் என்பது உண்மையானால்,
ஏன் இன்றுவரை அ.தி.மு.க. அதைச் செய்யவில்லை?

ஏன் இந்த ஆலோசனையை, ப.சி.யும், மு.க.வும் இதுவரை கொடுக்க வில்லை?எப்படி அய்யா இது மே 9-ம் தேதிக்குப் பிறகு சாத்தியமாகும்.....இதுவரை ஏன் செய்யவில்லை?

நீங்கள் இருவரும் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருப்பவர்தாமே?
ஓட்டுக்காக இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை?
கட்சி ஆரம்பித்த 2-ம் நாளிலிருந்தெ கேப்டன் சொல்லிவருவது இதைதானே?இது முடியும் என்று சொன்னவர்தான், இப்போது ஆட்சிக்கு வந்தால் நடத்திக் காட்டுவேன் என்கிறார்.

"அளகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"
என்று அப்போது ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்தவர்களைப் பார்த்துக் கேட்கிறேன்...

"கலைஞரே! ஆண்டது போதாதா? மக்கள் காய்ந்தது போதாதா?"
"அம்மாவே! ஆண்டது போதாதா? மக்கள் அலைந்தது போதாதா?"

இவர்களொடு வால் பிடித்து வளர்ந்து விட்டு, இவர்கள் தயவால் ஒரு வளர்ச்சியைப் பெற்ற பின்னர், இன்று ஆலவட்டம் ஆடும் உதிரிக் கட்சிகளுக்கு இருக்கும் வெட்கம், மானம் பற்றி யாரும் சொல்லித் தரத் தேவையில்லை.
இந்த அடிவருடிகளை மிதியடியாக்குங்கள்!

ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு நல்லவராவது இருப்பர், வேட்பாளராக!கூடியமட்டில், கட்சி வித்தியாசம் பார்க்காமல் அந்த நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள்!
என்னடா! கடைசியில் இப்படி சொல்லுகிறானே என்று வியக்காதீர்கள்!நிச்சயமாக, அந்த நல்லவர் இவ்விரு கழகங்களிலும் 'பொதுவாக' இருக்க அதிகம் வாய்ப்பில்லை என்ற துணிவில் தான் அப்படிச் சொல்லுகிறேன்!

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாளெடுத்தவனுக்கு வாளாலேதான் மரணம்!
அது போல,அரிசியால் ஆட்சிக்கு வந்தவர்கள்,
அதே அரிசியால் இந்தத் தேர்தலில், வீழ்வது உறுதி!

வீழ்வது இவ்விரு கழகக் கூட்டணிகளாக இருக்கட்டும்!
வெல்வது தமிழக மக்களாக இருக்கட்டும்!

10 பின்னூட்டங்கள்:

செந்தழல் ரவி Monday, April 24, 2006 8:39:00 AM  

//வீழ்வது இவ்விரு கழகக் கூட்டணிகளாக இருக்கட்டும்!
வெல்வது தமிழக மக்களாக இருக்கட்டும்!///

சரி அண்ணா...வேற யாருக்கு ஓட்டு போடரது அப்படின்னு சொல்லிட்டீங்கண்னா கொஞ்சம் வசதியா இருக்கும்...விஜய காந்த்க்கு போடலாம் னா அவரும் 15 கிலோ அரிசி தர்ரேன் னு சொல்லி புட்டாரே...

SK Monday, April 24, 2006 9:07:00 AM  

வருகைக்கு நன்றி, திரு.கோபாலன் ராமசுப்பு, மற்றும் ரவி.

ரவி, மீண்டும் ஒருமுறை என் பதிவைப் படியுங்கள்.

அரிசி ஒரு பிரச்சினை அல்ல.

இலவச அரிசி போடுவது சாத்தியமே என இப்போது மத்தியிலிருந்து, மாநிலம் வரை அனைவரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஆக, இந்த 'முடியக்கூடிய' ஒரு நல்ல காரியத்தை ஆட்சிப் பொறுப்பில் இருந்த இரு கழகங்களும், இத்தனை நாளாய் ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி.

இதுவரை அதைச் செய்யாதவர்க்ளை நம்பி, மீண்டும் பொறுப்பைக் கொடுப்பது என்ன நியாயம் எனத்தான் கேட்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பில் இல்லாமலே, இந்த விஷயத்தை நமக்குச் சொன்னவர் VK.

அதன் பிறகுதான், மற்றவர்களும் நீ-நான் என முந்தி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தவிர, யாருக்கு ஓட்டு போடுவது என்பதையும் கடைசி பத்தியில் சொல்லியிருக்கிறேனே!

மீண்டும் நன்றி.

ஆப்பு Tuesday, April 25, 2006 3:55:00 AM  

வெப்பில் பிலிம்
ஓவராய் காட்டுபவர்க்கும்
ஊர்வதை ஊதி பெரிதாக்கி
பறப்பதாய் சொல்பவர்க்கும்
சான்ஸ் தேடித்தேடி
சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும்
இலக்கிய சுக்கை
இடித்து குடித்துவிட்டதாய்
இறுமாந்து இருப்பவர்க்கும்
இலக்கண பேய்பிடித்து
தலைகனம் ஏறியவர்க்கும்
ஆரிய திராவிட மாயையில்
அல்லலுற்று உழல்பவர்க்கும்
தலித்தை சுரண்டியபடி
தலித்தியம் பேசுபவர்க்கும்
பெண்டாட்டியை மதிக்காமல்
பெண்ணியம் பாடுபவர்க்கும்
ஜால்ரா அடித்தபடி
ஜோரா கைதட்டுபவர்க்கும்
தமிழ் வாந்தி
தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும்
முற்போக்கு பேசுகிற
பிற்போக்குவாதிக்கும்
இலவசமாய் எமது பிராண்ட்
'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்.

ராம்கி Tuesday, April 25, 2006 4:49:00 AM  

நிச்சயமாக, அந்த நல்லவர் இவ்விரு கழகங்களிலும் 'பொதுவாக' இருக்க அதிகம் வாய்ப்பில்லை என்ற துணிவில் தான் அப்படிச் சொல்லுகிறேன்!

:-) correctthaan!

SK Tuesday, April 25, 2006 7:34:00 AM  

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, திரு. ரஜினி ராம்கி!

திரு.'ஆப்பு', வருகைக்கு நன்றி. தங்கள் கருத்தும் , கிட்டத்தட்ட இவ்விரு கழகங்களுக்கும்பொருந்துவதால், 'மாடரேட்' செய்யாமல் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Gopalan Ramasubbu Tuesday, April 25, 2006 8:51:00 AM  

S.K,

நீங்க சொல்வதெல்லாம் நடக்கனும்னா தோக்கறவனுக்கு ஏன் ஓட்டுப்போடனும்ங்கற usual mentality லிருந்து நம்ம மக்கள் மாறனும்.மாறுவாங்களா?

SK Tuesday, April 25, 2006 9:56:00 AM  

அன்பு 'கோபாலன் ராமசுப்பு',

அவங்களா மாற நேரமாகும்.
நாமதான் விடாம இதை சொல்லிக்கொண்டிருக்கணும்.
மக்கள் ஒண்ணும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை.
ஒதுங்கி இருக்கும் 30% வாக்காளர்களை இந்தச் செய்தி சென்றடைந்தாலே போதும்;
காரியம் பழமான மாதிரிதான்!

நன்றி

செல்வன் Wednesday, April 26, 2006 3:49:00 PM  

நடுநிலையோடு எழுதியுள்ளீர்கள் எஸ்.கே சார்,

விஜய்காந்துக்கு ஒரு வாய்ப்பு தரலாமென்று தான் தோன்றுகிறது.அவருக்கு கிட்டத்தட்ட 12 முதல் 15% ஆதரவு இருப்பதாக சொல்கிறார்கள்.இது அடுத்த தேர்தல்களில் 25% மாறினால் 2011லாவது இந்த இரு கழகங்களிடமிருந்து தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும்.கோவைக்கு சென்று வந்த என் நண்பர் அங்கு அதிமுக,திமுகவுக்கு சமமாக விஜய்காந்த் கொடிபறப்பதாக சொல்கிறார்

SK Wednesday, April 26, 2006 11:50:00 PM  

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, திரு. 'செல்வன்',

இன்றைய செய்தி நிலவரப்படி, எந்தக் கட்சிக்கும் 'அலை' வீசாத சூழ்நிலையில், மூன்றாவது அணி மட்டும் கொஞ்சம் முனைப்புடன் செயல்பட்டால், சந்தர்ப்பம் வய்க்கும் என்றே தோணுகிறது!

ஒன்றைக் கவனித்தீர்களா?

தேர்தலுக்கு முன்னால் கொடுக்கப்படும் 'ராப்-பணம்' எல்லாம் போய், இப்போது 'எனக்கு ஓட்டுப் போட்டால், இதெல்லாம் வரும் என்ற இலவச அறிவிப்புகள்' வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், கேபடனுக்கும் சரிநிகர் சந்தர்ப்பம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

ஆயிற்று; இன்னும் பத்தே நாள்!

யெல்லாம் இறைவன் அருள்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP