Sunday, August 17, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3




முந்தைய பதிவு இங்கே!

17.
எந்த ஒன்றால் விழித்தல், கனவு காணுதல்,
ஆழ்துயில் என்கிற மூன்று நிலைகளிளும்
ஒளியூட்டப் படுகின்றனவோ
அந்த ப்ரஹ்மன் "நான்" என அறிவாய்
இப்படி அறிந்தவர் எல்லா துயரிலிருந்தும்
விடுபடுகின்றார்

18.
"நானே" சாட்சியும், தூய்மையான தன்னிலை உணர்வும்
என்றும் புனிதமான சதாசிவமாய் இருக்கிறேன்
மகிழ்பவன், மகிழ்வு, மகிழ்வின் பொருள் என்னும்
மூன்றுமாய் மூன்று நிலைகளில் இருப்பதிலிருந்து
வேறுபட்டு இருப்பதுவும் "நானே"!

19.
எல்லாம் பிறந்தது என்னில் இருந்தே
எல்லாம் இருப்பதும் என்னுள் மட்டுமே
எல்லாம் ஒடுங்குவதும் என்னுள்தானே
பன்மை இல்லாத ப்ரஹ்மன் "நானே"!

20.
அணுவிலும் சிறியவன் "நான்"
பிரபஞ்சத்தை விடவும் பெரியவன் "நான்"
மிகவும் அதிசயத் தக்கவன் "நான்"
மிகவும் பழைமையானவன் "நான்"
'புருஷன்' எனச் சொல்லப்படும் ஆண்மை "நான்"
பொன்னார் மேனியனான "நானே" சிவனின் வடிவும் ஆவேன்!

21.
கைகளும் இல்லை; கால்களும் இல்லை எனக்கு!
ஆயினும், எனது சக்தியோ அளப்பரியது!
கண்கள் இல்லாமல் பார்ப்பவன் "நான்"
செவிகள் இன்றியே கேட்பவனும் "நான்"
எல்லாம் தெரிந்தவன் "நான்"
வடிவே இல்லாதவன் "நான்"
எப்போதும் தூய்மையான தன்னிலை உணர்வு "நான்"!

22.
எத்தனையோ மறைகள் இருப்பினும்
அவற்றுள் உணரும் பொருள் "நானே"!
உபநிடதங்களை எழுதியவன் "நானே"!
மறைகளின் பொருளும் "நானே"
மஹிமையோ, இழிவோ "என்னை" ஒன்றும் செய்வதில்லை!
அழிக்க முடியாதவன் "நான்"
பிறப்பு, இறப்பு, உடல், உணர்வு, புத்தி
இவை எதுவுமே "நான்" இல்லை!

23.
நிலம், நீர், தீ, காற்று, வெளி
இவை எதுவுமே "நான்" இல்லை!
இதயக் குகைக்குள் உலாவுகின்ற
அழுக்குகள் எதுவும் இல்லாத,
இரட்டைத்தன்மை இல்லாத,
பிரபஞ்சத்தின் சாட்சியாய்,
இருப்பும், இல்லாததும் இல்லாத,
உயரிய ப்ரஹ்மனை இப்படி அறிவோர்
'அதனை" அடைகிறார்

24.
இப்படி இதனை அறிவதால்,
அடுக்கடுக்காக அலைகடல்போல் வரும்
பிறப்பு, இறப்பு என்னும் துயரம் களைந்து,
"தனியே.. தன்னந்தனியே" என்பதை உணரலாம்!

கைவல்ய உபநிடதம் முற்றிற்று.
****************************

ஜாக்3ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யாதி3
ப்ரபஞ்சம் யத் ப்ரகாஷதே
தத்3ப்ரஹ்ம அஹம் இதி ஞாத்வா
ஸர்வ ப3ந்தை4: ப்ரமுச்யதே [17]

த்ரிஷு தா4மஸு யத்3 போ4க்3யம்
போ4க்தா போ4க3ஷ்ச யத்3ப4வேத்
தேப்4யோ விலக்ஷண: ஸாக்ஷீ
சின்மாத்ரோஹம் ஸதா3ஷிவ: [18]

மய்யேவ ஸகலம் ஜாதம்
மயி ஸர்வம் ப்ரதிஷ்ட்டி2தம்
மயி ஸர்வம் லயம் யாதி
தத்3ப்3ரஹ்மாத்3வயம் அஸ்ம்யஹம் [19]

'த்2விதீய க2ண்ட3:'

அணோரணீயான் அஹம் ஏவ தத்3வன்
மஹானஹம் விஷ்வம் அஹம் விசித்ரம்
புராதனோஹம் புருஷோ ஹமீஷோ
ஹிரண்மயோஹம் ஷிவரூபம் அஸ்மி [20]

அபாணிபாதோ3 அஹம் அசிந்த்ய ஷக்தி:
பஷ்யாம்ய சக்ஷு: ஸ ஷ்ருணோம்ய கர்ண:
அஹம் விஜானாமி விவிக்தரூபோ
ந சாஸ்தி வேத்தா மம சித்ஸதா3ஹம் [21]

வேதை3ர் அனேகைர் அஹம் ஏவ வேத்3யோ
வேதா3ந்தக்ருத்3 வேத3 விதே3வ சாஹம்
ந புண்யபாபே மம நாஸ்தி நாஷோ
ந ஜன்ம தேஹேந்த்ரிய பு3த்3தி4ர் அஸ்தி [22]

ந பூ4மிர் ஆபோ ந ச வஹ்னிர் அஸ்தி
ந சாநிலோ மேஸ்தி ந ச அம்பரம் ச
ஏவம் விதி3த்வா பரமாத்மரூபம்
குஹாஷயம் நிஷ்கலம் அத்விதீயம் [23]

அனேன ஞானம் ஆப்னோதி ஸம்ஸாரார்ணவ நாஷனம்
தஸ்மாதே3வம் விதி3த்வைனம் கைவல்யம் பத3மஷ்னுதே
கைவல்யம் பதமஷ்னுத இதி [24]

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

இதி அத2ர்வ வேதே3 கைவல்யோபநிஷத் ஸமாப்தா
*****************************************************

Read more...

Wednesday, August 13, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 2

முந்தைய பதிவு

7.
தொடக்கமும் நடுவும் இறுதியும் இல்லா
ஒன்றேயாகி, எங்கும் நிறைந்து
ஆனந்தமான அற்புத நிலையாய்
உருவம் என்று எதுவும் இலாதாய்
உமையுடன் இணைந்து அமர்ந்திருக்கும்
உயரிய கடவுளாம், எவர்க்கும் அரசனாம்,
மூன்று கண்களும், நீலநிறக் கழுத்தும்,
எப்பொழுதும் அமைதியாய் இருக்கும்
'அவனை' மனதில் கொண்டே முனிவரும்
படைப்பின் ரகசியத்தை அறிவரோ,
எது எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருப்பதோ
எல்லா இருளுக்கும் அப்பால் இருப்பது "அது"!

8.
'அது'வே ப்ரம்மா, 'அது'வே சிவனும், 'அது'வே இந்திரனும்,
அழிவில்லாதது, எதனினும் உயர்ந்தது, ஒளிமிகு தெய்வம்,
'அது'வே திருமால், 'அது'வே உயிரளிக்கும் மூச்சு,
'அது'வே காலமும், தீயும், நிலவும் ஆகும்.

9.
'அது'வே இருப்பதும், இருந்ததும், இருக்கப்போவதும்,
இனி என்றுமிருப்பதும் ஆகும்
'அது'வை அறிபவன் மரணத்தை வெல்கிறான்
விடுதலைக்கு 'அதை'த் தவிர வேறு வழி இல்லை.

10.
தன்னில் அனைத்தையும் கண்டு
அனைத்திலும் தன்னைக் கண்டே
அனைத்தையும் கடந்த ப்ரஹ்மனை அடைவர்
வேறெந்த வழியிலும் அல்ல!

11.
"தான்" எனும் ஆத்மாவை மத்தாகவும்
"ஓம்" எனும் பிரணவத்தை அதன் தடியாகவும் கொண்டு
"ஞானம்" எனும் அறிவைக் கடைவதன் மூலம்
பிறக்கும் தீயில் ஞானியர் பந்தம் துறக்கின்றனர்.

12.
இதையறியா மயங்கிய "தான்" மாயையின் வசப்பட்டு
உலகியல் இனபத்தில் அடிமைப்படுகிறது
விழிப்பின் நிலையில் பெண், உணவு, கள் இவற்றால்
அது எல்லாம் பெற்றதாய் மகிழ்கிறது.

13.
தானே உருவாக்கிய மாயையின் உலகில்
தானே எழுப்பும் உணர்வின் வழியே
'தான்" எனும் ஜீவன் தூங்கும் நிலையில்
கனவில் மகிழ்வையோ, துயரையோ உணர்கிறது.
ஆழ்நிலை உறக்கத்தில், எல்லாம் இழந்த நிலையில்,
இருளெனும் ஒன்றில் ஆழ்ந்த ஜீவன்
சுகமெனும் அனுபவம் ஒன்றில் [தற்காலிகமாக] ஆழ்கிறது.

14.
முன்பிறப்பு நிகழ்வுகளால் ஆட்பட்ட ஜீவன்
மீண்டும் மீண்டும் இந்த விழித்தல், உறங்குதல்
என்னும் செயல்களில் ஈடுபடுகிறது
விழித்தல், கன்வு நிலை, ஆழ்துயில் என்னும்
முப்பெரும் நகரில் வாசம்செய்து மகிழ்கிறது
இதனிடம் இருந்தே எல்லாப் பிறழ்வும் பிறக்கிறது
இதுவே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகி.
எல்லா மகிழ்வையும் தனக்குக் கொடுத்து,
பிரிக்கவொண்ணா தன்னிலை உணர்வைக் கொண்டதாய்
தன்னுள்ளே இந்த மூன்று நிலைகளையும் கலக்கிறது

15.
இதனின்றே மூச்சுக்காற்றும், மனமும், எல்லாப் புலன்களும்
ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் என்னும் துணைகளும் பிறக்கின்றன.

16.
உன்னில் ஒளிரும் ஒரு பொறி
இவ்வுலகுக்கே ஆதரமான அந்தப் பொறி
அணுவுக்கும் சிறிதாய் விளங்கும் பொறி
அந்தப் பொறியே உயரிய ப்ரஹ்மன்
'அது'வே நீ! நீயே 'அது'வென அறிவாய்

*****************************

“கைவல்ய உபநிஷத்” [தொடர்ச்சி]

உமாஸஹாயம் பரமேஷ்வரம் ப்ரபு4ம்
த்ரிலோசனம் நீலகண்ட2ம் ப்ரஷாந்தம்
த்4யாத்வா முனிர்க3ச்ச2தி பூ4தயோனிம்
ஸமஸ்தஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் [7]

ஸ ப்3ர-ம்மா ஸ ஷிவ: ஸேந்த்3ர:
ஸோக்ஷர: பரம: ஸ்வராட்
ஸ ஏவ விஷ்ணு: ஸ ப்ராண:
ஸ காலோக்3னி: ஸ சந்த்ரமா: [8]

ஸ ஏவ ஸர்வம் யத்3பூ4தம்
யச்ச ப4வ்யம் ஸனாதனம்
ஞாத்வா தம் ம்ருத்யுமத்யேதி
நான்ய: பந்தா2 விமுக்தயே [9]

ஸர்வபூ4தஸ்த2மாத்மானம்
ஸர்வபூ4தானி சாத்மனி
ஸம்பஷ்யன் ப்3ரஹ்ம பரமம்
யாதி நான்யேன ஹேதுனா [10]

ஆத்மானம் அரணிம் க்ருத்வா
ப்ரணவம் சோத்தராரணிம்
ஞான நிர்மத2னாப்4யாஸாத்
பாஷம் த3ஹதி பண்டித: [11]

ஸ ஏவ மாயா பரிமோஹிதாத்மா
ஷரீரமாஸ்தா2ய கரோதி ஸர்வம்
ஸ்த்ரியன்னபானாத்3 விசித்ரபோ4கை3:
ஸ ஏவ ஜாக்3ரத் பரித்ருப்திமேதி [12]

ஸ்வப்னே ஸ ஜீவ: ஸுக2து3:க்க2 போ4க்தா
ஸ்வ மாயயா கல்பித ஜீவலோகே
ஸுஷுப்திகாலே ஸகலே விலீனே
தமோபி4 பூ4த: ஸுக2ரூபமேதி [13]

புனஷ்ச ஜன்மாந்தர கர்மயோகா3த்
ஸ ஏவ ஜீவ ஸ்வபிதி ப்ரபு3த்3த4:
புரத்ரயே க்ரீடதி யஷ்ச ஜீவஸ்
ததஸ்து ஜாதம் ஸகலம் விசித்ரம்
ஆதா4ரம் ஆனந்தம் அக2ண்டபோ3த4ம்
யஸ்மின் லயம் யாதி புரத்ரயம் ச [14]

ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ
மன: ஸர்வேந்த்ரியாணி ச
க்க2ம் வாயுர் ஜ்யோதிர் ஆப:
ப்ருதி2வீ விஷ்வஸ்ய தா4ரிணீ [15]

யத்பரம் ப்3ரஹ்ம ஸர்வாத்மா
விஷ்வஸ்யா யதனம் மஹத்
ஸூக்ஷ்மாத் ஸூக்ஷ்மதரம் நித்யம்
தத்வமேவ த்வமேவ தத் [16]

**********************

[அடுத்த பதிவில் முடியும்]

Read more...

Monday, August 11, 2008

"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1

"தனியே... தன்னந்தனியே!"
"கைவல்ய உபநிஷத்" - 1

[உபநிடதங்களைப் பற்றிய இரண்டாவது பதிவு இது! முதல் பதிவான "கேனோபநிடதத்தை" மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு இதைப் படித்தால், இன்னும் நன்றாகப் புரியுமென நம்புகிறேன்! நான்கு பதிவுகளாக இது வரும்! இதன் மூலநூலை இறுதியில் அளிக்கிறேன்.]

"தன்னை எழுப்பும் துதி"

எனது கைகால் உறுப்புகள் வலிமை பொருந்தியதாகட்டும்!
எனது சொற்கள் வலிமை மிகுந்து சக்தியுடன் வெளிவரட்டும்!
எனது நாசி, கண்கள், செவிகள் மற்றும் இதர அவயவங்களும்
சக்தியடைந்து வலிமை பெற்றதாகட்டும்!
உபநிடதங்கள் யாவும் ப்ரஹ்மனைப் போன்றதே
அளப்பரிய உண்மை!
ப்ரஹ்மனை நான் மறவாதிருப்பேனாக!
ப்ரஹ்மன் என்னை மறக்காதிருக்கட்டும்!
நான் என்றுமே மறக்கப்படாதவனாகக் கடவன்!
ப்ரஹ்மனில் உறைந்து, உபநிடதங்களில் மிகவும் உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கும், இயற்கையானதும், இவ்வுலகின் அழியாக்கட்டளையாகிய அறத்தை நான் உணரக் கடவேனாக!
ஓம்! அமைதி! அமைதி! அமைதி!
*************************************


நூல்

1.
முனிவரில் பெருந்தகை அஷ்வலாயனன்
அடக்கத்துடன் நெருங்கி மிகப்பெரும் தேவனாம்
பிரமனைக் கேட்கலானார்:

"மிகப்பெருந்தேவனே! பிரமனே!
மிகவும் உயரியதும், மறைபொருளாய் இருப்பதும்,
அறிவிற் பெரியோரால் எப்போதும் பின்பற்றப்படுவதும்,
எந்த ஒன்றால் தங்களது பாவங்களைக் கழுவி
உயர் நிலையை அடைகிறார்களோ அந்த
ப்ரஹ்மனைப் பற்றிய அறிவை எனக்கு உபதேசிக்க வேண்டும்!

2.
அவரைப் பார்த்து மிகப்பெரும் தந்தையான
பிரமன் சொல்லலானார்:

உயரிய உண்மையை உணர்ந்திட
நம்பிக்கை, ஈடுபாடு, தியானம், யோகம்
இவற்றின் தேவை வேண்டும்.
செயல்களோ, பிள்ளைகளோ, பணமோ உதவாது
இவைகளைத் துறப்பதன் மூலமே
அழியாநிலை அடையக்கூடும்!

3.
சுவர்க்கத்தையும் விட உயர்ந்தது
ஒரு குகையில் மறைந்திருப்பது
மறைந்தும், ஒளிர் வீசி இருப்பது
அதிக முயற்சி எடுப்பவரே
இதனில் நுழைவார்!

4.
அனைத்தையும் துறந்தவர் எவரோ
உண்மை அறிவைத் தேடுபவர் எவரோ
அவரே விடுதலை என்னும் உயரிய நிலையை
துறத்தல், யோகம் என்பதன் மூலம்
அழியாநிலையினை அடைகின்றார்.

"5.
யாருமில்லா தனித்தொரு இடத்தில்
உடலினைத் தளர்த்தி எளிமையுடனே
வசதியாய் அங்கே அமர்ந்தபடி,
தூய்மை ஒன்றைத் துணைக்கொண்டு,
சிரசு, கழுத்து, உடல் மூன்றும்
ஒருநிலைப்பாடாய் வைத்தபடி,
அனைத்தையும் துறந்த இறுதிநிலையிலே,
புலன்கள் யாவையும் ஒருநிலைகொண்டு,
நம்பிக்கை, உறுதி கொண்டமனத்துடன்
குருவைவணங்கி, தனிநிலை கொள்வாய்.

6.
இதய நடுவினில் மலரும் கமலம்
அதனைத் தேடி அதனுள் ஆழ்ந்தால்
தூய்மையானதும், ஆசையற்றதும்,
துன்பமற்றதும், எண்ணமுடியாததும்,
படைப்பையும் தாண்டிய பரம்பொருள் ஒன்றை,
முடிவேயிலாது வடிவுமிலாது
புனிதமானதும், அமைதியானதும்
என்றுமிருப்பதும் எங்குமிருப்பதும்
அனைத்துக்கும் காரணமான
ப்ரஹ்மனை உள்ளில் இருத்திடுவாயே.
************************************
“கைவல்ய உபநிஷத்”

‘ப்ரத2ம க2ண்ட3:’

ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஷ்ருணுயாம தே3வா:
ப4த்3ரம் பஷ்யேமா க்ஷபி4ர் யஜத்ரா:
ஸ்தி2ரைர் ரங்கை3ர் துஷ்ட்டுவாக்3ம் ஸஸ்தனூபி:4
வ்யஷேம தே3வஹிதம் யதா3யு:
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஷ்ரவா:
ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா3:
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர் த3தா4து:
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி:

ஓம் அதா2ஷ்வலாயனோ ப4க3வந்தம் பரமேஷ்டினம் உபஸமேத்ய உவாச --

அதீ4ஹி ப4க3வன் ப்3ரஹ்மவித்3யாம் வரிஷ்ட்டா2ம்
ஸதா3 ஸத்3பி4: ஸேவ்யமானாம் நிகூ3டா4ம்
யயாசிராத் ஸர்வபாபம் வ்யபோஹ்ய
பராத்பரம் புருஷம் யாதி வித்3வான் [1]

தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹஸ்ச
ஷ்ரத்3தா4 ப4க்தி த்4யான யோகா3த3வைஹி
ந கர்மணா ந ப்ரஜயா த4னேன
த்யாகே3னைகே அம்ருதத்வ மானஷு: [2]

பரேண நாகம் நிஹிதம் கு3ஹாயாம்
விப்4ராஜதே யத்3யதயோ விஷந்தி
வேதா3ந்த விஞ்ஞான ஸுநிஷ்சிதார்தா2:
ஸந்யாஸ யோகா3த்3யதய: ஷுத்3த4ஸத்வா: [3]

தே ப்3ரஹ்மலோகேஷு பரான்தகாலே
பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே
விவிக்த தே3ஷே ச ஸுகா2ஸனஸ்த2:
ஷுசி: ஸமக்ரீவஷிர: ஷரீர: [4]

அத்யாஷ்ரமஸ்த2: ஸகலேந்த்3ரியானி
நிருத்4ய ப4க்த்யா ஸ்வகு3ரும் ப்ரணம்ய
ஹ்ருத்புண்டரீகம் விரஜம் விஷுத்3த4ம்
விசிந்த்ய மத்4யே விஷத3ம் விஷோகம் [5]

அசிந்த்யம் அவ்யக்தம் அனந்தரூபம்
ஷிவம் ப்ரஷாந்தம் அம்ருதம் ப்3ரஹ்மயோனிம்
ததா2தி3 மத்3யாந்த விஹீனமேகம்
விபு4ம் சிதா3னந்த3ரூபம் அத்3பு4தம் [6]
*********************************
[தொடரும்]

Read more...

Thursday, August 07, 2008

"என்னுள்ளே வா!"

"என்னுள்ளே வா!"

ஆடிவெள்ளி நாளன்று அம்மாஉனை நினைத்தேன்!
தேடிவந்து தரிசிக்க திருக்கோயில் ஓடினேன்
கூடிவரும் பக்தர்கூட்டம் வீதிவரை நின்றது
நாடியுனைக் கண்டிடவே கூட்டத்தில் கலந்தேன்!

நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியது
ஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்தது
விருப்புடனே நின்னைக் காண என்னால் முடியாமல்
வெறுப்புடனே விலகிவந்து வியர்வை துடைத்தேன்!

காணவந்த என்னை நீயும் மறுத்தல் நியாயமா
மோனமொழி பேசிநிற்கும் தாயே சொல்லம்மா
நாணமில்லையோ உனக்கு இந்தச் செய்கையால்
ஏனோ என்னைநீயும் புலம்பிடவே செய்தாய்!

என்றெல்லாம் நினைத்தபடி சன்னதி நோக்கினேன்
முன்நின்ற மக்கள்தலை அதனை மறைத்தது
என்னெதிரே அப்போதொரு குழந்தை வந்தது
என்னைப் பார்த்துச் சிரித்தபடி அருகில் நின்றது!

பெண்ணழகைப் பார்த்துநின்றேன் கண்நிறைந்தது
வண்ணமுக வடிவினிலே உளம் நிறைந்தது
மீன்விழிகள் தேனிதழ்கள் பட்டுக்கன்னம்
பால்போலும் சிரிப்பலைகள் பட்டுப்பாவாடை!

அலைபாயும் கூந்தலையே அளவாக முடிந்திருந்து
விலையில்லாப் பொன்நகைகள் கைகளிலே அணிந்திருந்து
பிஞ்சுமலர்ப்பாதங்களில் கொஞ்சுகின்ற கொலுசணிந்து
வட்டநிறைப் பொட்டிட்டு கைகட்டி எதிரில்நின்றது!

தேவமகள் இவள்தானோ என்றொருகணம் நினைத்திட்டேன்
பூவினைப்போல் பொலிந்தவளைப் பார்த்தே சிரித்திட்டேன்
'சாமி பாக்கப் போகலியா'வென எனைப் பார்த்துக் கேடது
'கூட்டம் சற்று குறைந்தபின்னர்..' என இழுத்தேன்! பெண் சிரித்தாள்!

'உள்ளேயா? வெளியிலா?' என்றவளின் சொல்கேட்டு அதிர்ந்துபோனேன்
'என்னவிங்கு சொல்லுகிறாய்?' என ஒன்றும் புரியாமல் கேட்டேன்
'கூட்டமிங்கு குறையாது! நீதான் குறையணும்' என்று மேலும் சொன்னாள்
'நானெப்படிக் குறைவது?' மீண்டும் அவளைப் பார்த்துக் கேட்டேன்!

'பார்க்கணும்னு ஆசைவைச்சா, கூட்டமெல்லாம் ஒண்ணுமில்ல!
நோக்கமிங்கு ஒண்ணானா பாக்கறதும் ஒண்ணாயிடும்!
சேர்த்ததெல்லாம் தொலைச்சுபுட்டு சீக்கிரமா வந்துசேரு!'
சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்தாள்! விக்கித்து நின்றேன் நான்!

எனைத் தேற்ற என்னன்னை என்முன்னே வந்தாளா?
எனைக் காட்டி எனைக் காட்ட என்னையேதான் தந்தாளா?
எனைக் குறையச் சொல்லியிவள் என்னவிங்கு சொல்லிப்போனாள்?
பிறர்குறையைப் பார்ப்பதிங்கு உனக்கெதுக்கு என்றாளா?

ஆசைகளைத் தொலைத்துவிட்டு நேசமெல்லாம் அவளில்வைத்து
வேசமேதும் போடாமல் வீம்பெதுவும் செய்யாமல்
அசையாத மனத்துள்ளே அவளை வைத்திருந்தால்
பூசனைகள் தேவையில்லை தேவியவள் வந்திருப்பாள்!

ஆடிவெள்ளி நன்நாளில் அன்னையவள் அருள்வேண்டி
ஆலயத்துள் செல்லுகையில் அனைத்தையுமே மறந்திருப்போம்
அடிமனத்தில் அன்போடு அனுதினமும் நினைத்திருந்தால்
ஆலயமும் செல்லவேண்டா! அன்னையிவள் ஓடிவருவாள்!

படித்ததெல்லாம் பயிற்சியினால் மட்டுமே பயனாகும்
படித்ததுவும் பிடித்ததுவும் இத்தோடு போதுமிங்கு
படித்ததெல்லாம் பயின்றிடுவோம் நலிந்தவரை வாழவைப்போம்
அவரெல்லாம் சிரிக்கையிலே அங்கேநாம் அன்னையைக் காண்போம்!

ஏதோ ஒன்று புரிந்ததுபோல் இருந்தது
தலையைத் திருப்பி சன்னதியைப் பார்த்தேன்
கூட்டம் குறைந்திருந்தது! கர்ப்பக்கிரகம் தெரிந்தது!
அன்னை சிரித்திருந்தாள்! அன்போடு எனைப்பார்த்து!

அனைவருக்கும் [நாலாம்] ஆடிவெள்ளி வாழ்த்துகள்!

[பலநூல் படித்து நீயறியும் கல்வி
பொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்!]
இந்த வரிகளின் உந்தலே இக்கவிதை!

********************

Read more...

Wednesday, August 06, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] 3


முந்தைய பதிவு

காட்சி - 6

[சவேரா ஹோட்டல். மூர்த்தி, சுகுமார், சங்கர் ஒரு டேபிளில் முகத்தை மறைத்தபடி! கண்ணன் தனியே உட்கார்ந்திருக்கிறான். கதிரவன் இன்னும் வரலை!]

ச: அவன் எப்போ டயத்துக்கு வந்திருக்கான். இப்பிடித்தான் லேட்டா வருவான். அதான் அவன் வழக்கமா செய்யற வேலை.

க: அப்பிடில்லாம் சும்மா பேசக்கூடாது. ஏதோ ஒரு தடவை உன் வீட்டுக்கு லேட்டா வந்ததை வைச்சுகிட்டு இப்பிடில்லாம் பேசாதேடா!

ச:: என் வீட்டுக்கு மட்டுமா? அவன் வீட்டுக்குப் போனபோதும்தான் அவன் இல்லை! திருடன்! திருடன்! சரி, சரி! எங்களைப் பார்க்காதே! அதோ அவன் வர்றான்! எங்களைக் கண்டுக்காத! விஷயத்தை ஒழுங்காப் போட்டு வாங்கு!

[கதிரவன் வந்து அமர்கிறான்.]

க: சொல்லுடா! எப்படி அந்த பொம்மை உன் வீட்டுக்கு வந்திச்சு?

கதி: எந்தப் பொம்மை! ஓ! அதுவா! ஒரு கடையில பார்த்தேன். பிடிச்சுது. வாங்கிட்டேன்.

சுகு: [மெல்லிய குரலில்] புளுகிறான். புளுகிறான்!!

க: எந்தக் கடை? எப்போ வாங்கினே?

கதி: அது... அது.. சௌக்கார்பேடையில ஒரு கடை.

க: அட்ரெஸ் கொடு.

கதி: எதுக்கு? நான் சொல்றதுல நம்பிக்கை இல்லியா?

க: அதுக்கில்லைப்பா. இதே மாதிரி ஒரு பொம்மையை நான் இன்னொரு இடத்துல பார்த்தேன். அதான்.

கதி: அப்போ என்ன? நான் அங்கேருந்து சுட்டுட்டேன்றியா? நல்லாருக்குடா! இவ்ளோதானா நீ என்னை நம்பறது? எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

க: இதுக்குப் போயி நீ ஏண்டா வருத்தப் படணும்? அட்ரெஸைக் கொடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்தானே! அதுல உனக்கு ஏன் தயக்கம்?

கதி: அதில்லேடா. அட்ரெஸ் மறந்துபோயிடுச்சு. கடையும் ஞாபகம் இல்லை. இதுக்காகவா என்னை வரச் சொன்னே! நல்ல ஆளுப்பா நீ! சரி, நான் கிளம்பறேன்.
[எழுந்து விரைகிறான்]

[பின் டேபிளில்]
மூ: செமத் திருடன்ப்பா இவன்! ஊரையே முழுங்கி ஏப்பம் விட்டுருவான் போலிருக்கே!

ச: எனக்கும் அப்பிடித்தான் தோணுது. இப்ப என்ன செய்யறது? இது என்னுதுதான்னு என்னால நிரூபிக்க முடியாது. அவன் சொல்லுதான் நிலைக்கும். போலீஸுக்கும் போக முடியாது.

மூ: நானே விட்டுக் கொடுத்த பொம்மை, இப்ப நம்ம யாருக்குமே இல்லாமப் போயிருச்சேன்னு நினைச்சா ரொம்ப சங்கடமா இருக்குப்பா. எதுனாச்சும் பண்ணனும்.

சு: என்ன பண்ண முடியும்? எனக்கு கிடைச்சது அவ்ளோதான். ஏதோ இப்ப கிடைச்ச இந்த பொம்மையை வைச்சு ஒப்பேத்தாலாம்னு பார்த்தேன்! எங்க அப்பனை இந்த ஜென்மத்துல நான் திருப்தி பண்ணப் போறதில்ல.

[சுகுமார் முகம் வருத்தமாக மாறுவதைப் பார்த்து நண்பர்களும் வருந்துகிறார்கள்.]

மூ: கவலைப்படாதேடா! எதுனாச்சும் பண்ணுவோம்! டேய் சுகு! அந்த பொம்மை உனக்குத்தான்!

[திரை]

காட்சி - 7


[கதிரவன் வீடு. கதவு தட்டும் ஓசை. கதிரவன் மனைவி எழுந்து சென்று திறக்கிறார். வெளியே ஒரு காவல்துறை அதிகாரி!]

கா.அ.: இது கதிரவன் வீடுதானே!

கதி.ம.: [பதறியபடி]ஆமாம். அவர் என்ன தப்பு பண்ணினாரு? எதுக்கு அவரைத் தேடுறீங்க? என்னங்க... இங்க வாங்களேன்!

கதி: யாரது? எதுக்கு இப்படி அலர்றே? யார் சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?

கா.அ.: ஓ! நீங்கதன் கதிரவனா? சத்தம் போடாதீங்க! உங்களை நான் கைது செய்யப் போறேன்.

கதி: ஏன்?... எதுக்கு... வாரண்ட் இருக்கா? என்ன காரணம்?

கா.அ.: அதெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசிக்கலாம். கொள்ளையடிச்ச, திருட்டுப்போன, பொருள்களை எல்லாம் நீங்க பதுக்கி வைச்சிருக்கறதா எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. இதோ.. இந்தக் கடிகாரம். அதோ.. அந்த தந்தப் பதுமை.... ஆ..ஆ! இதோ.. இந்தப் பொம்மை! இதே! இதே! இதுவேதான். இதைப் பத்தின விவரமான வர்ணனையோட எங்களுக்குத் தகவல் வந்திருக்கு! கொலை கிலையெல்லாம் கூட பண்ணுவீங்களோ! ரொம்பப் பயங்கரமான ஆளுப்பா நீ! இதுக்குள்ளா ஏதாவது வெடிகுண்டு வைச்சிருக்கியா நீ? உன்னை ஜெயில்ல தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினாத்தான் உனக்கு புத்தி வரும்.

கதி.ம.: ஸார் ஸார்! ஸார்! கொஞ்சம் தயவு பண்ணுங்க. இவரு அப்படிப் பட்டவர் இல்லை. ரொம்ப நல்லவருங்க. அவரை விட்டிருங்க ஐயா! கெஞ்சிக் கேட்டுக்கறேன் உங்களை! என் அண்ணாவாட்டம் நினைச்சுக் கேக்கறேன் அண்ணா!

கா.அ.: என்னம்மா! இப்படி ஸெண்டிமெண்ட்டாப் போட்டுத் தாக்கறீங்க! சரி, நீங்க சொல்றீங்களேன்னு விடறேன். சரி! இந்தப் பொம்மையை மட்டும் நான் எடுத்துக்கறேன். மத்ததுக்கெல்லாம் இன்னும் ஆதாரம் இல்லை. உங்களுக்கு ஆட்சேபணைன்னா சொல்லுங்க. இல்லியா...ஸ்டேஷனுக்குப் போயி தீர்த்துக்கலாம்.

கதி.: சரிங்க! அதை நீங்களே எடுத்துக்கோங்க! எங்களை விட்டுருங்க!

கதி.ம.: ஆமாங்க! அதை எடுத்துகிட்டு எங்களை விட்டிருங்க!

கா.அ.: உங்களைப் பார்த்தா பரிதாபமா இருக்கு. நல்லவங்க மாரி தெரியுது. உங்க முகத்துக்காக விடறேன். இனிமேலாவது ஒழுங்கா இருங்க!

[பொம்மையை லாவிக்கொண்டு செல்கிறார் காவல் துறை அதிகாரி]


[திரை]

காட்சி - 8

[சங்கர் வீடு. சங்கர், சுகுமார் உட்கார்ந்திருக்கிறார்கள். கதவைத் திறந்துகொண்டு மூர்த்தி போலீஸ் உடையுடன் உள்ளே நுழைகிறான். அவன் கையில் அந்தப் பொம்மை!!]

மூ: டட்டடைய்ங்கேய்!

சு:[ஆவலுடன் எழுந்து] டேய்! எப்பிடிடா!!!!!!!!!!!!!!

மூ: அதான் மூர்த்தி வேலை! சொல்ல மாட்டான்! செஞ்சிருவான்!

ச: சொல்லுடா! எப்பிடிடா இந்த பொம்மை கிடைச்சுது?

மூ: [சந்த்ரமுகி ரஜினி குரலில்] என்னைப் பார்! என் ட்ரெஸ்ஸைப் பார்! போலீஸா மாறியிருக்கும் மூர்த்தியைப் பார்! லக்கலக்கலக்கலக்கலக்கா!

ச: புரியுதுடா! புரியுது! அட்டகாச வேலைடா இது! எப்பிடிடா இதை செய்ய முடிஞ்சுது?

மூ: அதுக்கு..... உங்க தாத்தாவுக்கு நீ நன்றி சொல்லு! அவரோட ட்ரெஸ்தான் இதுக்கு உதவி செஞ்சுது! அவரோட ஆத்மா இன்னிக்குத்தான் சாந்தி அடைஞ்சிருக்கும்!

சு: [பொம்மையை மூர்த்தி கையில் இருந்து வாங்கியபடி] உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைடா! நண்பன்னா நீதாண்டா நண்பன்!

மூ: அட! இதுக்குப் போய் இப்படிப் பாராட்டறேயேடா! உனக்கு ஒண்ணுன்னா நாங்க விட்டுருவோமா?

[சொல்லியபடியே சுகுமார் முதுகில் பலமாகத் தட்டுகிறான்! சுகுமார் கையில் இருந்த பொம்மை அவன் கையில் இருந்து தவறி கீழே விழுந்து நொறுங்கி உடைகிறது!]

பெரிய நிசப்தம்!~ அனைவர் முகத்திலும் திகைப்பு!

[திரை]

---------------


இந்த நாடகத்தை உங்கள் தமிழ்ச் சங்கத்தில் நடிக்க விரும்பினால், எனக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, தாராளமாக நடியுங்கள் எனச் சொல்லிக் கொள்கிறேன்]

Read more...

Tuesday, August 05, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [2]
முன் பதிவு இங்கே!

காட்சி - 2

[சனிக்கிழமை காலை. மணி 8.10. சங்கர் பரபரக்கிறான். ரயிலைப் பிடிக்கணும் அவனுக்கு. இன்னும் கண்ணனும் அவன் நண்பனும் வரவில்லை. கிளம்ப நினைக்கிறான். அப்போது கண்ணன் இன்னொரு ஆளுடன் நுழைகிறான்.]

ச: [சற்று கோபத்துடன்] என்னடா, இவ்ளோ லேட் பண்ணிட்டே! சரி, சரி, இந்தா சாவியைப் பிடி. இதான் உன் ஃப்ரெண்டா? வீட்டை ஒழுங்கா பார்த்துக்கோங்க ஸார்.

மூ: மன்னிச்சுக்கோடா. இவனைக் கூட்டிகிட்டு வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இவன் பேரு கதிரவன். என்னமோ சிறுதொழில்னு சொல்றாங்களே! அதைப் பண்ணிகிட்டு இருக்கான். சேலையூர் தாண்டி இருக்கு இவன் வீடு. நாளைக்கு ஒரு ரெண்டு மூணு பேரை இங்கே சென்னையில பார்க்கணுமாம். அதுக்குத்தான் இங்கியே ஒரு இடம் இருந்தாத் தேவலைன்னு சொன்னான். நீதான் ஊருக்குப் போறியேன்னு தான் உன்னைக் கேட்டேன். கதிரவன், இவந்தான் சங்கர். என்னோட நெருங்கிய நண்பன். இதை உங்க வீடாட்டமே நீங்க நினைச்சுக்கலாம்.

ச: [மனத்துக்குள்] அடப் பாவி! விட்டா, வீட்டையே எழுதிக் கொடுத்திருவான் போலிருக்கே!]
[முகத்தில் ஒரு சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு]
அ..அ.. ஆமாம். தாராளமாத் தங்குங்க. உங்க வீடாட்டமே நினைச்சுக்கோங்க, கதிரவன்.

கதி: உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க கவலையே படாதீங்க. கண்ணன் சொன்னான். நான் இங்க தங்கறதோட மட்டுமில்லாம, போறப்ப, உங்க வீட்டையும் சுத்தப் படுத்தி திங்கள்கிழமை நீங்க வரும்போது பளபளன்னு வைச்சிடறேன்.

ச: அதெல்லாம் தேவையில்லை. எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம். எனக்கு இப்பிடி அலங்கோலமா இருந்தாத்தான் பிடிக்கும்!

கதி: ஹ!ஹ! நல்லா ஜோக் அடிக்கறீங்க ஸார்! எவ்ளோ பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. நான் என்னால முடிஞ்ச உதவியைச் செய்துதான் ஆகணும். எனக்கும் இதெல்லாம் செய்யப்பிடிக்கும்.

ச: சரி! உங்க இஷ்டம். இந்தாங்க சாவியைப் பிடிங்க.

கதி: நம்ம வீட்டுக்கு ஒரு நாளு நீங்க சாப்பிட வரணும். உங்களுக்கு வேற ஒண்ணும் ப்ரொக்ராம் இல்லேன்னா, வர்ற செவ்வாய்கிழமை வாங்களேன். கண்ணன் நீங்க உங்க நண்பரைக் கூட்டிகிட்டு வாங்க. இது என்னோட அன்புக் கட்டளை. சரியா?

க: அவ்ளோதானே! கவலையை விடு. நான் கூட்டிகிட்டு வரேன்.




ச: அப்போ நான் வர்ட்டா! பாக்கலாண்ண்டா கண்ணா! வறேன் மிஸ்டர் கதிரவன்!

[சங்கர் கிளம்புகிறான்.]

[திரை]

காட்சி - 3

[சங்கர் வீடு. திரும்பி வந்தவன், ஒவ்வொரு பொருளாய்ப் பார்த்து அதிசயிக்கிறான். சுகுமார் உடன் இருக்கிறான்.]

ச: டேய்! என் வீடா இது? அந்த ஸோஃபாவைப் பாரேன். எவ்ளோ சுத்தமா இருக்கு? இந்த சமையலறையைப் பாரேன்! இது என்னுதான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!

சு: ஆமாண்டா! ஃப்ரிட்ஜ் கூட சுத்தமா இருக்கு! வேண்டாதையெல்லாம் தூக்கியெறிஞ்சு, ரொம்ப நல்லா அடுக்கி இருக்கு! என்னாலியே நம்ப முடியலை. கதிரவன் ரொம்......ப நல்லவண்டா!

ச: வீட்டை இது மாதிரி அப்பப்ப கொடுக்கறது கூட நல்லதுதான்னு நினைக்கற மாதிரி பண்ணிட்டுப் போயிட்டாண்டா கதிரவன்! நீங்களும் இருக்கீங்களே!

சு: உலகத்துல எங்களைப் போல நல்லவங்களும் இருக்காங்கன்றதுக்கு உதாரணம் நம்ம கண்ணனோட கதிரவன்.

ச: நீ!...... நீ சொல்றே.... நல்லவன்னு! மேல ஒரு வார்த்தை பேசினே, கொலை விழும் இங்க! ஒரு துரும்பை எடுத்துப் போட்டிருப்பீங்களாடா நீங்கள்லாம்! சரி, சரி! செவ்வாய்கிழமை சாப்பிட வரச் சொல்லி இருக்கான் அவன்! கண்டிப்பா போய் நன்றி சொல்லணும். அதுக்காகவே போகணும்.

சு: போயிட்டு வாடா! இது மாரி ஆளுங்க ரொம்பவே அபூர்வமாத்தான் கிடைப்பாங்க! விட்டுராதே! [மனசுக்குள்] சீக்கிரமா அந்த ஆளைத் திருத்தணும். இதெல்லாம் நல்லால்லே! நம்ம பொழைப்பைக் கெடுத்துருவான் போலிருக்கே! ஏதாவது பண்ணனும்.


[திரை]

காட்சி - 4

[கதிரவன் வீடு. கண்ணனும் சங்கரும் நுழைகிறார்கள். கதிரவன் மனைவி அவர்களை வரவேற்கிறார்]

கதி.மனைவி: வாங்க வாங்க! உங்களைப் பத்தித்தான் அவர் சொல்லிக்கிட்டிருந்தாரு. நீங்க செஞ்ச உதவியை எங்களால மறக்கவே முடியாது. இந்தக் காலத்துல யாருங்க தன்னோட வீட்டை அப்டி 'டக்'குன்னு கொடுப்பாங்க! நீங்க கொடுத்தீங்களே! ரொம்பப் பெரிய மனசுங்க உங்களுக்கு!

ச: [சற்று கூச்சத்துடன்] அப்படி என்னங்க நான் செஞ்சிட்டேன்? என் நண்பன் சொன்னான். நான் சரின்னேன். இதுக்குப் போயி இவ்ளோ புகழறீங்களே! கதிரவன் எங்கே காணும்?

கதி.ம: இல்லீங்க! இதுக்கெல்லாம் ரொம்பப் பெரிய மனசு வேணும்! அவரு இப்ப வந்திருவாரு. சரி, உட்காருங்க. நான் போய் டீ போட்டு கொண்டு வரேன்.
[கதிரவன் மனைவி செல்கிறார். சங்கர் எழுந்து வரவேற்பறையைப் பார்வையிடுகிறான். அவன் பார்வை ஒரு இடத்தில் குத்திடுகிறது! அங்கே......... அதே பொம்மை!!!!!!!!!!!!!!]

ச: கண்ணா!........... இதோ பார்த்தியா?

க: என்னடா? என்ன ஆச்சு? மறுபடியும் எதுனாச்சும் அதிசயம் நிகழ்ந்திருக்கா? எதுக்கு இப்படி குதிக்கறே!

ச: அதோ... அதோ... பார்த்தியா? அதே பொம்மை!

க: எந்த பொம்மை? எனக்கு ஒண்ணும் புரியலை நீ சொல்றது!

ச: ஓ! நீ அப்ப இல்லேல்ல! அதான் உனக்குத் தெரியலை! இந்தப் பொம்மையைத்தான் சுகுமார் தனக்கு வேணும்னு சொன்னான். நானும் ஒரு தப்பாட்டம் ஆடி, மூர்த்தி கிட்டேருந்து பிடுங்கி, அதை அவனுக்குக் கொடுத்தேன். இப்போ அது இங்க! இரு.. இரு! இதுதான் அதுவான்னு இப்பவே செக் பண்ணிடறேன்.

[அலைபேசியை எடுத்து மூர்த்தியை அழைக்கிறான்.]

ச: ஹலோ! மூர்த்தி???

மூ: என்னடா? என்ன விஷயம்?

ச: நீ இப்பவே என்னோட வீட்டுக்குப் போய்....

[கதிரவன் மனைவி தேநீர்த்தட்டுடன் உள்நுழைகிறார்! சங்கர் பேச்சை மாற்றுகிறான்]

ச: சரிடா! நாளைக்குப் போகலாம் சினிமாவுக்கு. இப்ப நான் கதிரவன் வீட்டுல கண்ணனோட இருக்கேன். அப்புறமாப் பேசலாம் சரியா! என்ன? சரி. சரி. அம்மாவைக் கேட்டதாச் சொல்லு. நாளைக்குப் பேசலாம். பை!

[அவசர அவசரமாக அணைக்கிறான் அலைபேசியை!]

கதி.ம: யாருங்க?

ச: ஒண்ணுமில்லை. என்னோட நண்பன் மூர்த்தி. இப்ப பிஸியா இருக்கேனு சொல்லிட்டேன். இந்த டீயை மிஸ் பண்ண முடியுமா? [அசடு வழிகிறான்!]

: [கண்ணனிடம் மெலிய குரலில்] இதேதாண்டா! திருடிட்டாண்டா உன்னோட நண்பன்!

க: பிரச்சினை பண்ணாதேடா~! உண்மையைத் தெரிஞ்சுக்காம எதுவும் சொல்லாதே! எனக்கு அவனால கொஞ்சம் காரியம் ஆக வேண்டியிருக்கு. ஏதாவது சொல்லி கெடுத்துறாத.

கதி.ம: சாப்பிட வாங்க! எல்லாம் தயாரா இருக்கு!

ச: இல்லீங்க! எனக்கு ஒரு அவசர வேலை வந்திருச்சு. நான் உடனே போகணும். மன்னிச்சுக்கங்க. இன்னொரு நாளைக்கு வரேன்.

[கண்ணன் தடுத்தும் கேளாமல் விரைவாக வெளிச் செல்கிறான் சங்கர். கண்ணனும் கூடவே செல்கிறான்!]

[திரை]

காட்சி - 5

[சங்கர் வீடு. சுகுமார், மூர்த்தி, கண்ணன் எல்லாரும் இருக்கிறார்கள்.]

ச: திருடிட்டான்யா..... திருடிட்டான்! வேணும், வேணும். .வீட்டை அவங்கிட்ட கொடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! ச்சே! இப்பிடிப் பண்ணுவான்னு நினைக்கலியே நான்.

க: எதையும் ஆராயாம சட்டுன்னு ஒரு முடிவுக்கு வரக் கூடாது!

சு: என்னடா நீ! இங்க இருந்திச்சு ஒரு பொம்மை. நானும் மூர்த்தியும் அதுக்காக ஆக்கு பாக்கு ஆட்டம் கூட ஆடினோம்! இப்ப அது இங்க இல்லை! அது அங்க இருக்குன்றான் சங்கர்! இதுக்கு என்னடா அர்த்தம்?

க: ஒரு அர்த்தமும் இல்லை. இங்க இருந்திச்சுன்னுதுக்கு என்ன ஆதாரம்? இதுக்கு முன்னாடி நான் இங்க ஒரு பொம்மையும் பர்த்ததில்லை. அது அங்க எப்படி இருக்குன்னு அவனைக் கேட்காம நாமளா எப்படி ஒரு முடிவுக்கு வர்றது? எதுக்கும் ஒரு நியாயம் வேணாமா?

மூ: நீ சொல்றது நல்லா இருக்குடா! நானும் சுகுவும் ஆக்கு பாக்கு போட்டதெல்லாம் உனக்கும் இப்பத் தெரியுந்தானே! நானே பெரிய மனசா விட்டுக் கொடுத்தது இப்ப அங்கே இருக்குன்னா அதுக்கு என்னடா அர்த்தம். சங்கர் சொல்றது சரிதான். இது ஒரு அப்பட்டமான திருட்டு. வீட்டுல தங்க வந்தவன், வீட்டைக் க்ளீன் பண்றேன்னு சொல்லிட்டு, இப்ப க்ளீனே பண்ணிட்டுப் போயிட்டான்னுதானே அர்த்தம்?

க: அப்படியெல்லாம் அபாண்டமா ஒருத்தன் மேல பழி போடக்கூடாது. அவன் ரொம்ப நல்லவன். இப்படியெல்லாம் செஞ்சிருப்பான்னு எனக்குத் தோணலை!

ச: ஓ! உனக்குத் தோணலைல்லை? அவனுக்கு ஒரு ஃபோன் போடு! என்னன்னு கேட்டுருவோம்!

[கண்ணன் ஒரு வருத்தமான முகத்துடன் கதிரவனைக் கூப்பிடுகிறான்]

க: ஹலோ! கதிரவன்!

கதி: என்ன கண்ணன்? என்ன விசேஷம்?

க: ஒண்ணுமில்லை. உன்னை ஒரு கேள்வி கேட்கணும்.

கதி: கேளுப்பா!

க: உங்க வீட்டுல ஒரு பொம்மை ஷோகேஸுல புதுசா இருக்கே. அதைப் பத்தித்தான்.

கதி: ஓ! அதுவா! நானே சொல்லணும்னு நினைச்சேன். நாம இதைப் பத்தி தனியாப் பேசலாமா! நாளைக்கு சவேராவுக்கு வாயேன். சொல்றேன்.

க: சரி. நாளை மாலை 6 மணிக்கு சவேராவுல சந்திக்கலாம். சரியா.

கதி: சரி. பை.

க: பை

க: [சங்கரைப் பார்த்து] நாளைக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு சவேராவுக்கு வரச் சொல்றான். இதைப் பத்திச் சொல்லுவானாம்.

சு: [ஆவேசத்துடன்] நாங்களும் வருவோம். என்ன சொல்றான்னு ஒளிஞ்சிருந்து கேப்போம்!

க: எனக்கென்னப்பா இதுல? தாராளமா வாங்க! ஏன் சுகு இப்படி ஆவேசப்படறான்னு எனக்குப் புரியலை!

ச: நீ ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதே கண்ணா! அவனுக்கு அந்தப் பொம்மை மேல ஒரு கண்ணு. அதுல ஒரு பெரிய கதை இருக்கு. அதான் இப்படில்லாம் பேசறான்.

மூ: எனக்கென்னவோ இது திருட்டுன்னுதான் தோணுது.

ச: எல்லாம் நாளைக்குத் தெரிஞ்சிடப் போவுது. எல்லாம் என் தலைவிதி! எனக்குன்னு வந்து வாய்ச்சீங்களே!

[திரை]
*******************

[நாளை நிறைவடையும்!]

Read more...

Monday, August 04, 2008

"பொம்மலாட்டம்" -- [நகைச்சுவை நாடகம்] [1]

"பொம்மலாட்டம்"
[நகைச்சுவை நாடகம்]
[முதல் பகுதி]


"பிரவாகம்" ஆண்டு மலருக்காக நான் எழுதிய நாடகத்தை இங்கு அளிக்கிறேன்.

காட்சி-1

[இடம்: சங்கர் வீடு]

[சங்கர் உட்கார்ந்திருக்கிறான். அவனது நண்பன் சுகுமார் எதையோ கொறித்துக் கொண்டிருக்கிறான். இருவரும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதவு தட்டும் ஓசை கேட்டு சுகுமார் எழும் முன், தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்துகொண்டு, மூர்த்தி வேகமாக உள்ளே நுழைகிறான்!]


மூ: டேய், சங்கர், என்னடா இது? இப்படி நீ பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை.

ச: [ஒன்றும் புரியாமல்] என்ன பண்ணினேன் நான்? ரெண்டு நாளா வேலைக்கே போகாம இங்கியே வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கேனே, அதையா சொல்றே?

மூ: அதான் நீ வழக்கமா செய்யற வேலையாச்சே! உனக்கு போய் இவ்ளோ சம்பளம் கொடுத்து ஒருத்தன் வேலை கொடுத்தானே! அவனை நினைச்சா எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்குடா! சிலைதான் வைக்கணும் அவனுக்கு.

ச: போறும், போறும், நிறுத்து! விட்டா ஒரேயடியா அளந்துகிட்டே போவியே! இப்ப நான் என்ன பண்ணினேன்? அதைச் சொல்லு சொல்லு.

மூ: மேட்ச் நடக்குதில்ல. ஏற்பாடா எல்லாம் தயார் பண்ணிட்டு, சுகுவை மட்டும் கூப்பிட்டு ரெண்டுபேரும்.... தோ.. தோ பாரு! முந்திரிப்பருப்பு, சிப்ஸ், பியர்... அடுக்குமாடா இது!.... என்னை ஏண்டா கூப்பிடலை!

[அவன் பார்வை ஒரு ஓரத்தில் இருக்கும் ஒரு அட்டைப்பெட்டி மேல் விழுகிறது.]

மூ: இதென்ன பெட்டி? இதுல என்ன இருக்கு?

சு: ஓ! அதுவா? அதுல சில பழைய துணிங்க இருக்கு. எங்க தாத்தா காலத்துது அது! தூக்கிப் எறியப் போறேன். உனக்கு எதுனாச்சும் வேணும்னா எடுத்துக்கோ! தொந்தரவு பண்ணாதே! டெண்டுல்கர் பேட்டிங்!

[மூர்த்தி அவைகளை அலசுகிறான். அந்தக்கால போலீஸ் உடை ஒன்றை எடுக்கிறான்!]

மூ: அட! இது ரொம்ப நல்லாருக்கே! நான் எடுத்துக்கறேன்.

ச: [அவனைப் பார்க்காமலே] சரி, எடுத்துக்கோ! இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் பண்ணினே! இந்த ஆட்டத்தைப் பாருடா! அதை விட்டுட்டு...!

மூ: ஏன் சொல்ல மாட்டே! புது மாதிரியா பழைய ட்ரெஸ் போட்டு எவ்ளோ நாளாச்சு! ரொம்ப நன்றிப்பா!

[இன்னும் கிளறுகிறான். ஒரு பழைய பொம்மை கிடைக்கிறது. ஆவலுடன் அதை கையில் எடுக்கிறான். ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுகுமார் தற்செயலாக அதைப் பார்க்கிறான்.]

சு: ஆ.......! டேய்! அதைக் கொடு! நான் பார்க்கிறேன்.

மூ: [அவனிடம் கொடுக்காமல், தன் கையில் வைத்தபடியே] கொடுக்க மாட்டேன்! இதோ இப்பிடியே நல்லா பாத்துக்கோ!

சு: என்னால நம்பவே முடியலை! அதே மாதிரி இருக்கே!

[சொல்லியபடியே அதை மூர்த்தி கையில் இருந்து பிடுங்கி அதைப் பார்க்கிறான்]

ச: எதே மாதிரி? நீ ஜொள்ளு விடற எத்தனையோ பொண்ணுங்கள்ல ஒண்ணு மாதிரியா? சொல்லித் தொலைடா!

சு: இல்லைடா. சின்ன வயசுல எங்க வீட்டுல இதே மாதிரி ஒரு பொம்மை இருந்திச்சு. ஒருநாளு நான் அதை எடுத்து விளையாடிக்கிட்டிருந்தேன். அப்போ கைதவறி கீழே விழுந்து அது உடைஞ்சு போச்சு. அதுக்கு என்னை எங்க அப்பா அடிச்ச அடி இருக்கே... அப்பப்பா... இப்ப நினைச்சாலும் வலிக்குதுடா! என்னமோ வீனஸ் சிலைய நான் உடைச்ச ரேஞ்சுக்கு என்னை இப்பவும் குத்திக் காட்டுவாரு. டேய்! டேய்! எனக்கு அதைக் கொடுறா! எங்க அப்பா மூஞ்சியில அதை விட்டெறிஞ்சு என் ஆத்திரத்தைத் தீர்த்துக்கணும். இதை நான் எடுத்துக்கறேன்.

[மார்போடு அணைத்துக் கொள்கிறான். மூர்த்தி பதறுகிறான்.]

மூ: அதெல்லாம் நடக்காது. நான்தான் முதல்ல பார்த்தேன். எனக்குத்தான் அது!

[சுகுமார் கையிலிருந்து பிடுங்க முயற்சிக்கிறான்.]

சு: தர மாட்டேன்! எனக்குத்தான் இது ரொம்பவே வேணும்.

மூ: தாடா!

சு: முடியாது!

மூ: தாடான்னா! [தள்ளுகிறான்]

சு: முடியாதுடா! [திமிறுகிறான்]

ச: [அலுப்புடன்] டேய்! டேய்! என்னடா இது சின்னப் புள்ளைங்க மாதிரி! கொஞ்சம் விவேகமா உங்க வயசுக்குத் தகுந்த பெரிய ஆளுங்க மாதிரி நடங்கப்பா!

மூ: அப்போ சரி! உனக்கும் எனக்கும் பந்தயம்! ஈனா மீனா டீக்கா வரியா?

ச: வெளங்கிருவேடா நீ~!

சு: அதெல்லாம் வேண்டாம்! ஆக்கு பாக்கு வேணா ஆடலாம்!

ச: நீ அவனை விட ரொம்பவே மோசம்ண்டா! எனக்கென்ன! ஏதோ ஒரு முடிவுக்கு வாங்க! உங்களைத் திருத்தவே முடியாது! இதன் பெரிய ஆளுங்க ஆடற விளையாட்டா? உங்களைத் திருத்தவே முடியாது! இதோ சிக்ஸர் அடிச்சுட்டான் டெண்டுல்கர்!

[மேட்சைப் பார்க்கிறான்]

மூ: சொல்லு! நான் ரெடி! கையை நீட்டு! ஆனா, ஒரு கண்டிஷன்! என் கையிலதான் முதலில் நீ தட்டணும்! சரியா!

சு: நான் ரெடி!

ச: அட! இது இந்த மேட்ச்சை விடவும் நல்லாயிருக்கே! நான் தன் அம்ப்பையர்! என் முடிவுதான் ஃபைனல்! தொடங்குங்கடா!

சு: சரி! [மூர்த்தி கையைத் தொட்டு] ஆக்கு

மூ: [சுகுமார் கையைத் தொட்டபடியே] பாக்கு

சு: வெத்திலை

மூ: பாக்கு

சு: டாம்

மூ: டூம்

சு: டைய்யா

மூ: இஸ்கனக்கற

சு: கோக்கனக்கற

மூ: ஹைய்யா

[சுகுமாரின் கையில் தட்டுகிறான்! குதிக்கிறான்!]

மூ: ஹைய்யா! நான் தன் கெலிச்சேன்! எனக்குத்தான் பொம்மை!

[சுகுமாரின் தேவையையும், அவன் முகம் வாடுவதையும் பார்த்த சங்கர், தனது 'நடுநிலைமை'த்தன்மையை நிலை நாட்டும் விதமாக]

ச: இங்கே நான் தான் அம்ப்பையர் என்பதை ரெண்டு பேரும் மறந்திட்டு ஆளாளுக்கு என்னமோ சொல்லிகிட்டு இருக்கீங்களே! டேய்! மூர்த்தி, நீ யார்கிட்ட முடிச்சே?

மூ: 'ஹைய்யா'ன்னு சுகு கையில.

ச: அப்ப, அவன் தான் ஜெயிச்சான். பொம்மை அவனுக்குத்தான். இதான் நாட்டாமை தீர்ப்பு!

மூ: [பரிதாபமாக] இது அளுகுணி ஆட்டம். யார்கிட்ட முடியுதோ, அவங்கதானே அவுட்டு? அப்பிடித்தானே இந்த ஆட்டம் நாங்க ஆடுவோம்.

ச: அது எங்கே ஆடுவேன்னு எனக்குத் தெரியாது. இங்க... இந்த வீட்டுல... இதான் தீர்ப்பு. நீ இதுக்கு அப்புறம் வரவேண்டிய மூணு வார்த்தையைச் சொல்லலை.கொடுறா பொம்மையை அவன்கிட்ட!

மூ:என்னடா அது?

ச: "என்... பேரு.... கொய்யா"...! அதை நீ சொல்லலை. அதும்படி பார்த்தா அது உன்கிட்ட தான் முடியுது. சுகுதான் ஜெயிச்சான். நீ அவுட்டு!

மூ: ரெண்டு பேரும் சேர்ந்து என்னமோ தப்பாட்டம் ஆடுறீங்க! சரி, சரி, இதோ, எடுத்துகிட்டு ஒழி!

[பொம்மையை வீசுகிறான் சுகுமாரிடம். கீழே விழுந்து உடையப்போகும் முன், சுகுமார் அதை லாவகமாகப் பிடித்து, மூர்த்தியை கோபத்துடன் பார்க்கிறான்.]

சு: திரும்பவும் உடைக்கப் பார்த்தியேடா! நல்லவேளை தப்பிச்சுது. மறுபடியும் எங்க அப்பாகிட்ட போய் கொடுக்கலாம்னு இருந்ததை, கெடுக்கப் பார்த்தியே!

ச: சரி விடு! என்னமோ தனக்குக் கிடைக்கலியேன்னு ஒரு ஆத்திரத்துல செஞ்சுட்டான். அதான் உடையலியே!
[மூர்த்தியை சமாதானப்படுத்தும் விதமாக] சரிடா, மூர்த்தி, பொம்மைக்குப் பதிலா, இன்னும் வேற எதுனாச்சும் வேணும்னாலும் எடுத்துக்கோ. நான் எப்படியும் அதையெல்லாம் தூக்கித்தான் போடப்போறேன். என்னை கொஞ்சம் மேட்ச் பார்க்கவிடுறீங்களா, இப்பவாவது? நல்லா விளையாடினீங்கடா ரெண்டு பேரும், பெரிய ஆளுங்க விளையாட்டு... ஆக்கு பாக்கு! வேற அறிவுபூர்வமா ஒண்ணுமே கிடைக்கலியா உங்க ரெண்டு பேருக்கும்!

[சிரிக்கிறார்கள் மூவரும்.]

ச: [சுகுமாரைப் பர்த்து மெல்லிய குரலில்] போனாபோவுதுன்னு உனக்கு சரி பண்ணினேன். மறந்துறாதே!

சு: தெரியுண்டா! ரொம்ப நன்றிடா!

[மீண்டும் கதவு தட்டும் ஓசை. கண்ணன், இன்னொரு நண்பன், நுழைகிறான்.]

க: என்னடா? வீடு இவ்ளோ களேபரமா இருக்கு! துணிமணில்லாம் சிதறிக் கிடக்குது! க்ளீன் பண்ணமாட்டியோ! நீங்கள்லாம் பார்த்துகிட்டுத்தானெ இருக்கீங்க? எடுத்து வைக்க மாட்டீங்களாடா?

[சொல்லியவாறே, துணிகளை எடுத்து வைக்கிறான்.]

ச: பார்த்தீங்களாடா! எவ்ளோ பொறுப்பா பண்றான். நீங்களும் இருக்கீங்களே, தண்டத் தடிமாடாட்டம்.

சு: [பொறாமையுடன்] உன் வீடுதானே! நீயே செய்யலாமே! கண்ணன் ஏன் இப்பிடிப் பண்றான்னு கொஞ்சம் விசாரி. சும்மானாச்சும் எவனும் இப்படிச் செய்யமாட்டான்! டேய்! இன்னாடா சமாச்சாரம்? எதுக்கு இப்போ திடீர்னு இவ்ளோ அக்கறை உனக்கு? எத்தினி தபா இங்க வந்திருப்பே? எப்பவாவது இப்டி பண்ணியிருக்கியாடா? எதுக்கு இந்த ஐஸ் வைக்கறே?

க: [அசடு வழிந்தபடியே] அதெல்லாம் ஒண்ணுமில்லை, மாம்ஸ்!. ம்ம்,... எதுக்கு நீ எல்லாத்துக்கும் என்னையே சந்தேகப்படறே ? அதிருக்கட்டும், சங்கர்... நீ இந்தவாரம் சனி, ஞாயிறு எங்கியோ வெளியே போறேன்னு சொன்னியே! போறேதானே!

சு: அதானே பார்த்தேன்! சோழியன் குடுமி சும்மா ஆடாதே! மச்சி, இதுல ஏதோ விவகாரம் இருக்கு! நிதானமா ஆடு!

ச: நீ சும்மா இருடா! எல்லாத்துலியும் எதாவது சொல்லிகிட்டு! [கண்ணனைப் பார்த்து] ஆமாம். திருச்சி வரைக்கும் ஒரு வேலையப் போகவேண்டியிருக்கு. திங்கள்கிழமைதான் வருவேன். அதுக்கென்ன இப்ப?

: [தயங்கியபடியே] இல்லை. உன்னோட வீடு காலியாத்தானே இருக்கும்?

ச: [சற்றே எரிச்ச்சலுடன்] ஆமா. உனக்கு என்ன வேணும்? சொல்லித் தொலைடா.

க: என்னோட நண்பன் ஒருத்தனுக்கு இந்த வாரம் தங்கறதுக்கு ஒரு இடம் தேவைப்படுதாம். என்னைக் கேட்டான். உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா....!!!

சு: அப்டி வா வழிக்கு! எனக்குத் தெரியும் இவன் நுழைஞ்சவுடனேயே ரொம்ப ஜரூரா க்ளீன் பண்றானே, என்னடா ஏதுன்னு! . சும்மா ஆடமாட்டியே நீ! அதுக்குத்தான் வீடு சுத்தமா இல்லைன்னு பீலா விட்டியா? உன் நண்பன் தங்கறதுக்காக இப்பவே க்ளீன் பண்றியா? [சிரிக்கிறான்]

[கண்ணன் அசடு வழியச் சிரிக்கிறான்]

ச: தப்புதண்டா பண்றதுக்கு இல்லைதானே!?

க: சேச்சே! அதெல்லாம் இல்லைடா! அப்படியெல்லாம் செய்ய நான் விடுவேனா? அவனுக்கு கல்யாணம்லாம் ஆகி, ஒரு அழகான மனைவியும் இருக்காடா! அவன் அப்பிடில்லாம் பண்ற ஆளு இல்லை. இல்லை. என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா? அது மாதிரி ஆளுங்களைத்தான் இங்க அழைச்சுகிட்டு வருவேனா? ரொம்ப நல்லவண்டா அவன்! வேணும்னா, அவனை விட்டே இந்த வீட்டையும் சுத்தம் பண்ணிவைக்கச் சொல்றேன்... வாடகைக்குப் பதிலா. எனக்கு அவனால ஒரு காரியம் ஆகவேண்டி இருக்கு. அதுக்குத்தான் கேட்டேன்.

ச: நீங்கள்ல்லாம் கேட்டு என்னிக்கு நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன். சரி, சரி, நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நான் கிளம்புவேன். அதுக்கு முன்னால உன்னோட நண்பனைக் கூட்டிகிட்டு வா. நானும் அவனை ஒரு தடவை பார்த்திடறேன்.

க: ரொம்ப நன்றிடா! நாளைக்கு அவனையும் இங்கே வரச் சொல்றேன்.

ச: சரி. இப்ப கிளம்புறீங்களா? நான் சாப்பிடப் போகணும்.

சு: நானும் வரேன்!

ச: [சுகுமாரிடம்] உன் பொம்மையை எடுத்துக்கோ!

சு: இப்ப வேணாம். இங்கியே இருக்கட்டும். 2 நாள் கழிச்சு வந்து எடுத்துகிட்டு போறேன். ஊருக்குப் போறப்ப எடுத்துகிட்டுப் போறேன். திடீர்னு கொண்டுபோய் அவரை ஸர்ப்ரைஸ் பண்ணனும்.

ச: சரி, அப்ப கிளம்பு.

க: நானும் வரேன்!

மூ: நான் வரலை. எனக்கு கொஞ்சம் வெளிவேலை இருக்கு.

[கிளம்புகிறார்கள்.]

[திரை].
*****************

[அடுத்த பகுதி வியாழனன்று வரும்]

Read more...

Friday, August 01, 2008

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"




அன்புள்ள ரஜினி அவர்களுக்கு,

வணக்கம்!
நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.
முதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே!


உங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும் எனக்குப் பிடிக்கும்.


இப்போதெல்லாம் உங்க படங்கள் அடிக்கடி வருவதில்லை.
அதுவே என்னைப் போன்ற பல கோடி ரசிகர்களுக்கு, உங்க படம் வந்தவுடனேயே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலையும், ...ஏன்?...சிலருக்கு வெறியையே!.... உண்டாக்குகிறது என்பது உங்களுக்கும் தெரியும்.


அதற்காக எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்
உங்களோட ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் பரிசு தந்த இந்த அப்பாவி, மடத்தனமான ரசிகர்களை, ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என நினைக்கிறீர்களா?
"குசேலன்" பார்த்துவிட்டு இப்பத்தான் வந்தேன்.

இதன் மூலமான 'கத பறையும் போள்' என்ற மலையாளப் படத்தையும் பார்த்திருக்கிறேன்.
இதில் நீங்கள் நடிக்கிறீர்கள் எனக் கேட்டபோது இது இன்னமும் சிறப்பாக வரும் என நம்பினேன்.
ஏனென்றால், இது ஒரு கெடுக்க முடியாத கதை.
அப்படி எதுவும் கிடையாது... மனது வைத்தால் அதுவும் முடியும் என டைரக்டர் பி. வாசு நிரூபித்திருக்கிறார்.
உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர, வேறு எதைப் பற்றியும் நீங்களோ, அவரோ கவலைப்படவில்லையோ எனத் தோன்றுகிறது!

படமா சார் இது?
நீங்க நடிக்கிறீங்களேன்னு பார்க்க வரும் அத்தனை பேரையும் மனதில் வைத்தாவது, நீங்கள் இதன் தயாரிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதை ஆலோசனையாக அல்ல; ஒரு குற்றச்சாட்டாகவே உங்கள் மீது சுமத்துகிறேன்!

தயாரிப்பாளர், இயக்குநர் சம்பந்தப்பட்ட விஷயம் இது என நீங்கள் ஒதுங்கிக் கொள்ள முடியாது.
உங்களுக்கு கொட்டித்தரக் காத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமை இது.
அதை செய்யத் தவறி விட்டீர்கள், ரஜினி சார்!

நீங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
அதுவும் அந்தக் கடைசி பதினைந்து நிமிடங்கள்!!
அடடா! மிகச் சிறந்த நடிப்பைக் காட்டி, இதற்காகவே ஒரு விருது கொடுக்கலாம் என்னும் அளவுக்கு நடித்திருக்கிறீர்கள்.
ஸ்டைலிலும் ஒன்றும் குறைவு வைக்கவில்லை!
அசத்தியிருக்கிறீர்கள்!

ஆனால், இது மட்டும் போதுமா?
வருவதே வெறும் அறுபது நிமிடங்கள் என முன்னரே சொல்லி விட்டதால், என்னைப் போன்றவர்கள் அதிகமாக உங்களிடமிருந்து எதிர்பாக்கவில்லை.
ஆனால், நீங்கள் இல்லாத நேரங்களுக்கான கதையமைப்பில் சுத்தமாக சொதப்பி விட்டார் பி.வாசு!

அவரவர் கடமையை அவரவர் செய்யவேண்டும், என் வேலையை ஒழுங்காக நான் செய்துவிடுகிறேன் என நினைக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படுவதா, இல்லை, என்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு, என் நடிப்புக் காலம் முடியப்போகிற இந்த நேரத்தில் பெருமைப்படும் விதமாய் படம் கொடுக்கணும் என்ற நினைப்பு துளியும் இல்லாத உணர்வை... அதை அலட்சியம் என்றும் சொல்லலாம்... எண்ணிக் கோபப்படுவதா எனப் புரியவில்லை.

படம் முடித்து வெளியே வரும்போது கனத்த இதயத்தோடு வெளிவந்தேன்.
அந்தக் கடைசி காட்சிகளில் நீங்கள் காட்டிய நடிப்பால் மட்டுமல்ல!
இப்படி ஏமாற்றி விட்டீர்களே என்ற ஆதங்கத்தாலும்!

ஏதோ கொஞ்ச நேரம் சொதப்பலாக இருந்தால் பரவாயில்லை.
இரண்டரை மணி நேரப் படத்தில், முதல் இரண்டு மணி நேரத்துக்கா இப்படி பாழாக்குவது! ? :(


நட்பைப் போற்றும் ஒரு கதையை எப்படியெல்லாம் சொல்லியிருக்க முடியும்!

இல்லை, அது வேண்டாம் என்றால், ஒரு காட்சி எடுக்க எவ்வளவு உழைக்க வேண்டும் திரைப்படங்களில் என்ற செய்தியைக் காட்டி இருக்கலாமே!

செய்யாமல் விட்டுவிட்டார்களே!

சம்பந்தமே இல்லாத காட்சிகள், திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வை அரைத்த மாவை அரைப்பது போல வரும் நிகழ்வுகள், செயற்கையான நடிப்பு, 'என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்கப்பா! ரஜினி இருக்கார் படத்துல! போட்ட பணம் கிடைச்சிரும்'ன்னு விட்டுவிட்டது போன்ற இயக்குநரின் அலட்சியம், கே. பாலச்சந்தர் போன்ற அனுபவம் மிக்க ஒருவரின் தயாரிப்பா இது! என்ன செய்து கொண்டிருந்தார் அவர் எனக் கேட்க வைக்கும் கோபம், எரிச்சல் வரவழைக்கும் நகைச்சுவை எல்லாமாகச் சேர்ந்து இப்படி ஒரு மோசமான படத்தைப் பார்த்ததே இல்லை எனச் சொல்லவைத்துவிட்டது என்பதை வருத்தத்துடனும், கோபத்துடனும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இசை, ஒளிப்பதிவு எல்லாம் தரமாக இருந்தது. பசுபதி ஏமாற்றினாரா? ஏமாற்றப் பட்டாரா? மீனா, நயன்தாரா, வடிவேலு,விஜயகுமார், லிவிங்ஸ்டன், சந்தானம், பாஸ்கர், என ஒரு நட்சத்திரப் பட்டாளம்! வடிவேலு சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கும் அந்த ஒரு காட்சியில் அசத்தி இருக்கிறார்! என்ன பிரயோஜனம்? எல்லாம் விழலுக்கிறைத்த நீராய்ப் போயிற்று.


கடைசியாக ஒரு வேண்டுகோள்!
இன்னமும் உங்கள் படங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்!

ஆனால், இது போலத்தான் படம் தருவீங்கன்னா, ...வேண்டாம் சாமி! பேசாம இமயமலைக்கே போயிடுங்க! ஒருதுளிக்கு ஒரு பவுன் கொடுக்கும் உங்கள் தமிழ் ரசிகர்களை வாழவிடுங்கள்!

இறுதியாக, படத்தைப் பற்றி ஒரு வரி விமரிசனம்!
"மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேளுங்கள், ரஜினி சார்! இந்தமுறை தமிழ் ரசிகர்களிடம்!"

நன்றி.

இப்படிக்கு,
மனம் நொந்த
உங்கள் ரசிகன்.

[இதை யாராவது ரஜினிக்கு அனுப்பி வைத்தால் நன்ன்றியுடையவனாக இருப்பேன்!!]

Read more...

Monday, July 28, 2008

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 4

"எவரால்?" " "கேன உபநிஷத்" -- 4


முந்தையப் பதிவு இங்கே!

நான்காம் பகுதி:
1.
'அதுவே ப்ரஹ்மன் என்றே அறிக' என்றாள் உமையாள்
'ப்ரஹ்மன் செய்த உதவியால்தான் நினக்கு வெற்றியும் பெருமையும் வந்தது என்பதை அறிவாய் நீயும்!'
அதன்பின் இந்திரன் தானும் அறிந்தான் வந்தது ப்ரஹ்மன் என்னும் உண்மையை.

2.
ப்ரஹ்மனின் அருகில் சென்றடைந்தமையாலும்,
இவரே ப்ரஹ்மன் என்றுணர்ந்த முதன்மையினாலும்
அக்கினி, காற்று, இந்திரன் மூவரும்
மற்றோரை விடவும் மேலோராயினர்

3.
மிகவே அருகினில் சென்றதினாலே
முதலில் இவரை அறிந்ததினாலே
இவருளும் இந்திரன் முதன்மையாயினான்

4.
இதுவே அவர்கள் பிற கடவுளர்க்கு ப்ரஹ்மனைப் பற்றி சொல்லிய கருத்து:
'மின்னலைப் போலும் தன்மையது "இது";
கண் இமைப்பதுபோலும் அரியது "இது"'.

5.
'தான்'எனும் தன்மைக்கு ப்ரஹ்மனைப் பற்றிச் சொல்லிய அறிவுரை இது:
'மனம்'எனும் ஒன்று இயல்பாய்த் தானே ப்ரஹ்மனைச் சென்று அடைகிறது
அறிந்திட விரும்பும் பயிற்சியாளர் மனதின் வழியே ப்ரஹ்மனை நெருங்கி
அதனுடன் அடிக்கடி பேசிட முடியும்
மனதின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இதுவும் நிகழும்.

6.
அப்படி மனதால் உணரும் 'ப்ரஹ்மன்' "தத்வனன்' என்று அழைக்கப்படுவார்
'போற்றப்படும் அனைத்துக்கும் மேலாய்ப் போற்றப்படுவது' என்பது இதனின் பொருளாம்
'தத்வனன்' என்னும் பெயரால் இதனைப் போற்றிட வேண்டும்
மண்ணில் இருக்கும் எவரும் ப்ரஹ்மனைப் போற்றுதல், இப்படியே நிகழ்ந்திட வேண்டும்.

7.
சீடன் கேட்டான்:
'உபநிடதப் பொருளை எனக்கு உபதேசிக்க வேண்டும்'
ஆசிரியர் அவனைப் பார்த்து இப்படிச் சொன்னார்:
'ஏற்கெனவே நான் உனக்கு உபநிடதம் சொல்லிவிட்டேன்
ப்ரஹ்மனைப் பற்றிச் சொன்னதே 'அது'வென உணர்வாய் நீயும்'.

8.
எளிமை, சுயக் கட்டுப்பாடு, மற்றும் தியாகச் செயல்கள்
இவையே ப்ரஹ்மனின் கால்கள் ஆகும்,
மறைகள் எல்லாம் கைகள் ஆகும்
உண்மை அதனின் உறைவிடம் ஆகும்.

9.
இதுவரை இந்த உபநிடதம் சொல்லிய உண்மையை
உணர்ந்தவர் பாவம் களையப்படுமே
மேலும் அவர்கள் எல்லையில்லாப் பேரானந்தத்தில்
உறுதியுடனே நிலைபெறுவாரே.
ஆம்... மிகவும் உயரிய பேரானந்தம்!


10.
ப்ரஹ்மன் நம்மை [ஆசிரியர், சீடன்] பாதுகாக்கட்டும்!
அறிவின் பொருளை அந்தப் ப்ரஹ்மன் நமக்கு அருளட்டும்!
அறிவை அடையும் திறனை நாமிருவரும் பெறுவோமாக!
நீயும் நானும் படித்ததின் பயனாய் உண்மை எமக்குப் புலப்படட்டும்!
ஒருவருக்கொருவர் தீய உணர்வுகள் எமக்குள் இங்கே வாராதிருக்கட்டும்!
ஓம்! அமைதி, அமைதி, அமைதி!

கேன உபநிடதம் முற்றிற்று.
************************************
[அடுத்து "தனியே.....தன்னந்தனியே!" [கைவல்ய உபநிடதம்] விரைவில்!]

Read more...

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 3


முந்தையப் பதிவு இங்கே!

மூன்றாம் பகுதி:
1.
கதையொன்று சொல்கிறேன் கேள்!
ப்ரஹ்மன் ஒருமுறை கடவுளர்க்கு வெற்றி ஈட்டித் தந்தது
ப்ரஹ்மன் தந்த வெற்றியால் கடவுளர் மனமகிழ்ந்தனர்
'உண்மையில் இவ்வெற்றி எம்முடையது; புகழெல்லாம் எமக்கே'
எனத் தங்களைத் தாங்களே மெச்சிக்கொண்டனர்

2.
அனைத்தும் அறிந்த ப்ரஹ்மன் அங்கே அவர்கள் முன்னே தோன்றியது
வல்லமைவாய்ந்த அப்பேரொளியை அவர்களால் அறியமுடியவில்லை

3 - 6.
ஒளியின் தேவனை அவர்கள் அழைத்தனர்
'அக்கினித் தேவனே! நீ சென்று அது எவரெனக் கேட்டுவா!'
'அப்படியே!' எனச் சொன்ன தீயின் கடவுள் அதனிடம் விரைந்தான்
'யாரடா நீ?' என ப்ரஹ்மன் வினவியது


'அக்கினியென அழைப்பர் என்னை! அனைத்தையும் எரிப்பவன்'[ஜாதவேதன்] என்றான் அக்கினி
'அனைவரும் அறியும் நின்னின் செயல்திறன் என்ன?' என ப்ரஹ்மன் கேட்டது
'பூமியில் இருக்கும் எதையும் எரித்துச் சாம்பலாக்கிடுவேன்' என பதில் வந்தது சருகொன்றை எடுத்து அவன் முன்னே போட்டு,'இதனை எரித்துக் காட்டு' என ப்ரஹ்மன் சொன்னது
தன் திறனனைத்தும் ஒன்றுகூட்டி அக்கினி அதனை எரிக்கமுயன்று முடியாமல் திரும்பியது
அப்பேரொளியிடமிருந்து விலகி கடவுளரை அடைந்தான்
'என்னால் இதனை யாரென அறிந்திட இயலவில்லை' எனச் சொன்னான்.


7 - 10.
காற்றுதேவனை அழைத்த கடவுளர், 'யாரது அதுவென விடைகண்டுவா' என அனுப்பினர்
'அப்படியே!' எனச் சொன்ன காற்றின் கடவுள் அதனிடம் விரைந்தான்
'யாரடா நீ?' என ப்ரஹ்மன் வினவியது
'மாதரிச்வன்' என்னும் காற்றுத்தேவன் என என்னை அழைப்பர்' என்றான் வாயு 'அனைவரும் அறியும் நின்னின் செயல்திறன் என்ன?' என ப்ரஹ்மன் கேட்டது
'பூமியில் இருக்கும் எதனையும் எங்கே வேண்டினும் கொண்டுசெல்பவன் யான்' பதிலிறுத்தான் காற்றுத்தேவன்
சருகொன்றை எடுத்து அவன் முன்னே போட்டு,'இதனை எடுத்துச் செல்' என ப்ரஹ்மன் சொன்னது
தன் திறனனைத்தும் ஒன்றுகூட்டி வாயு அதனை தூக்கமுயன்று அசைக்கக்கூட முடியாமல் திரும்பினான்
அப்பேரொளியிடமிருந்து விலகி, கடவுளரை அடைந்தான் காற்றுத்தேவன்
'என்னால் இதனை யாரென அறிந்திட இயலவில்லை' எனச் சொன்னான்.

11 12.
கடவுளர் அனைவரும் இந்திரனைப் பார்த்து,
'மகவான் என்னும் இந்திரனே! அப்பேரொளி எவரெனக் கண்டுவருக!' என்றனர் 'அப்படியே!' எனச் சொன்ன இந்திரன் அதனிடம் விரைந்தான்
ஆனால் பேரொளி சட்டென மறைந்து சென்றது


ஏதுமறியா இந்திரன் உடனே அங்கே வசிக்கும் அனைவரும் போற்றும் ஒரு பெண்ணிடம் சென்றான்
அவளே உமையாள் ; இமவான் பெற்ற எழில்நிறைச் செல்வி
'என்முன் இருந்து சட்டென மறைந்த அப்பேரொளி எதுவென இயம்பிட வேண்டும்' என வேண்டினான்.

____________________-


[வளரும்]

Read more...

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 2

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 2


முதல் பகுதி இங்கே!

இரண்டாம் பகுதி:
1.
ஆசிரியர் மேலும் உரைக்கலானார்:
"யானறிவேன் நன்றாக ப்ரஹ்மன் எதுவென்று"எனவிங்கு நீ நினைத்தால்
அப்போதே நீயதனின் சிறுதுளியும் அறியவில்லை என்றுணர்வாய்
மனிதனோ, கடவுளோ 'இது'வென்று சொன்னதையே நீயும் அறிவாய்
எனவே யான் சொல்லுகிறேன், 'ப்ரஹ்மனை இன்னமும் நீயே தேடு!'

2.
சீடன் சொன்னான்:
'ப்ரஹ்மன் என்பதை இங்கே அறிவேன் என்றே யானும் நினைக்கின்றேன்'
ஆசிரியர் கூறலுற்றார்:
'அதனை நன்கே நானும் அறிவேன் என்றே யானும் எண்ணவும் இல்லை
எனக்கு அதனை அறியாதெனவும் யானும் இங்கு எண்ணவுமில்லை
"அறியவும் இல்லை; அறிந்தும் உளது" என்றே இங்கே எம்மில் எவரோ
தான் உணர்வாரோ, அவரே ப்ரஹ்மனை அறிந்தவர் ஆவார்.

3.
எவரால் ப்ரஹ்மனை அறியாதுளதோ, அவரே அதனை அறிந்தவர் ஆவார்
எவரிதை இங்கு அறிந்தவர் என்பரோ, அவரே அதனை அறியாதவராம்
அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை
அறியாதவரோ அனைத்துமே அறிவார்!


4.
எவ்வொரு நிலையிலும் ப்ரஹ்மனை உணர்வோர் இதனை நன்கே அறிந்தவர் ஆவார்
அவ்வொரு நிலையில் அவரும் இங்கே அழியாநிலையும் அடைவார்
ஆத்மா என்னும் தன்னை உணர்வதால் தைரியம் இங்கே பிறக்கிறது
அதனைப் பற்றிய அறிவை அடைவதால் அழியாநிலையே கிடைக்கிறது

5.
தன்னை ஒருவன் இங்கே அறிந்தால், வாழ்வின் உண்மை புரிந்துவிடும்
இங்கே இதனை அறியாவிட்டால், பேரழிவே வந்து எதிர்கொள்ளும்
தன்னைஇங்கே அனைத்திலும் உணர்ந்து எல்லாம் தானே என்பதை அறிந்து
உலகியலை விட்டுத் துறக்கும் அறிஞர் அழியாநிலையே அடைந்திடுவார்
______________

[வளரும்]

Read more...

"எவரால்?" ["கேன உபநிஷத்"] -- 1

""எவரால்?" ["கேன உபநிஷத்"] -- 1



வேதங்களின் சாரம் உபநிடதங்கள் எனச் சொல்லுவார்கள்! 'உப நிஷத்' என்றால் 'அருகில் வந்து அமர்' எனப் பொருள். அப்படிப் படித்து வருகையில், என்னை மிகவும் கவர்ந்த உபநிடதம் இது! 'கேன' என்றால் "எவரால்?" எனப் பொருள். "எவரால் [அ] எதுவால்" இந்த உலக இயக்கம் நிகழ்கிறது என்பதை விளக்கும் வேதசாரம் இதில் சொல்லப்படுகிறது. அதைத் தமிழில் இங்கு நான்கு பகுதிகளாக அளிக்கிறேன். பல உண்மைகளை இது புரிய வைக்கும்..... புரிய விழைபவர்க்கு. புரியாதவர்கள் புரிய முற்படலாம்!! நன்றி! எங்கும் மங்கலம் சூழ்க! தன்னைத் தான் அறிக!

ஓம்!ஓம்!ஓம்!
[இதை ஒரு கற்றறிந்த, நான் மதிக்கும் ஞானிக்கு அனுப்பி அவரது ஒப்புதல் பெற்றே இங்கு அளிக்கிறேன்!]

முதல் பகுதி:
1.
சீடனெழுந்து கேட்கின்றான்:
ஓம்
மனமிங்கு தானெண்ணும் செயல்நோக்கிச் செல்லுவது எவரிட்ட கட்டளையால்?
மூச்சிங்கு தன்செயலை முறையாகப் புரிவதுவும் எவரிட்ட கட்டளையால்?
பேச்சென்னும் செயலொன்றை மக்களெல்லாம் உரைப்பதுவும் எவரிட்ட கட்டளையால்?
கண்களையும் செவிகளையும் வழிநடத்தும் பரம்பொருளும் எவரெனச் சொல்வீரோ?

2.
ஆசிரியர் பதிலுற்றார்:
செவிகளின் செவி,, மனங்களின் மனம், பேச்சுகளின் பேச்சு
உயிர்களின் உயிர்,கண்களின் கண் இவையெல்லாம் செய்கிறது!
'தான்'என்னும் பொருளறிந்து,புலன்மீது பற்றறுத்து
உலகின்பம் விடுவோரே அழிவின்றி நிலைக்கின்றார்!

3 - 4.
கண்ணாலும், சொல்லாலும், மனத்தாலும் செல்லவொண்ணாப் பேரிடமது
நாமறியாப் பொருளதுவே!
எவரிங்கு உணர்த்திடுவார் என்றெவர்க்கும் தெரியாது
யாமறிந்த எதற்குள்ளும் இதையறிய முடியாது
தெரியாத பொருளுக்கும் மேலிருக்கும் பொருளிதுவே
இதையறிந்த அறிவோர்கள் இப்படித்தான் எமக்குணர்த்திச் சென்றார்!


5.
எதுவொன்றை சொல்லாலும் விளக்கிடவே முடியாதோ
எதன்மூலம் சொல்லிங்கு எம்மிடையே வெளிப்படுகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]


6.
எதுவொன்றை மனமிங்கு தானுணர மாட்டாதோ
எதுவொன்றால் மனமிங்கு புரியப்படுகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]

7.
எதுவொன்றை கண்களிங்கு தான் காண்பதில்லையோ
எதுவொன்றால் கண்களிங்கு பார்வையென உணர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]

8.
எதுவொன்றைச் செவிகளிங்கு தான் கேட்கமுடியாதோ
எதுவொன்றால் செவிகளிங்கு கேட்பதினை உணர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]

9.
எதுவொன்றை மூச்சிங்கு தான் நுகர முடியாதோ
எதுவொன்றால் மூச்சிங்கு வாசனையை நுகர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன் என்று நீ உணர்ந்திடுவாய்;
மக்களிங்கு வழிபடும் வேறெதுவுமல்ல! [வேறு எந்த தெய்வமும் அல்ல!]
__________


[வளரும்]

Read more...

Friday, July 25, 2008

"என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!"

"என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!"
எனைச் சேர்ந்து என்னை என்றும் நீ மகிழ்ப்பாய்
எனைவிட்டு என்றும் நீ அகலாது இருப்பாய்
நான் என்ன செய்தும் என்னை நீயும் மறவாய்
என்றும் என்னைக் காக்கும் எந்தன் துணைவி நீயே!

பிழையாவும் செய்தே தினம்வாழும் பேதை
திசைஏதும் அறியாமல் அலைகின்ற கோழை
மழைமேகம் போல எனக்காக வந்து
உழல்கின்ற என்னுன் அருள்தந்து காப்பாய்!

என்பாடல் கேட்டு தினம் மகிழ்ந்திருப்பாய்
நின்பெருமை யாவும் நான் பாட நீ கேட்பாய்
நின்னருளை எனக்குத் தரத் தாமதம் ஏன்
எனைநீயும் மறந்தால் நினக்கேது புகழே!

உனைப் பாடிப்போற்றி தினம் வாழ்ந்திருப்பேன்
நின்புகழைப் பாடி நிதம் என்னை மறப்பேன்
நான் வாழ்வதுந்தன் அருட்கருணையாலே
எனைநீயும் மறந்தால் நான் என்ன செய்வேன்!

நான் வாழ்வதிங்கு உந்தன் அருளினாலே
என்நாளும் இங்கு நிறைவ துன்னருளே
நினை நம்பி வாழும் என்றன் நிலையுணர்ந்து
எனைக் காக்க இங்கு விரைந்தோடி வருவாய்!

மௌனம் ஏனோதாயே மனம் என்ன கல்லோ
ஏது செய்திடினும் நீயே என்றன் புகலே
கவனம் வைத்துக் காப்பாய் கடன்தீர்த்தருள்வாய்
காப்பதுந்தன் கடமை நானும் உந்தன் சேயே!

நாகம் தலைக்கணிந்து நகையாவும் பூட்டி
மேகம் குளிரவைத்து மழைதன்னைக் காட்டி
தாகம் யாவும் தீர்த்து தயையாவும் புரிந்து
மோகம்தவிர்த்து என்னில் நின்னைக்காணச் செய்வாய்!

ஆடிமாதம் வெள்ளி உன்னை நாடி வந்து
தேடியுந்தன் புகழை தினம் பாடி நின்று
நாடிவந்த எந்தன் குறையாவும் தீர்த்து
விடிவெள்ளியாக வெளிச்சங்கள் தருவாய்!

அனைவருக்கும் ஆடி இரண்டாம் வெள்ளி வாழ்த்துகள்!

[என் இனிய நண்பர் திரு. ரவி கண்ணபிரான் சொன்னபடியே இரண்டாம் ஆடி வெள்ளிப் பதிவை "அம்மன் அருளில்" பதிந்திருப்பதால், எனது படைப்பை இங்கே இடுகிறேன்!]

Read more...

Monday, July 07, 2008

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்" - 2

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்" - 2

நான் அடுத்த நாள் பார்த்த படம் "யங் அட் ஹார்ட்" [Young at Heart]
Add Image
ஆம்! "மனதில் இன்னும் இளமை"

இது ஒரு அபூர்வமான திரைப்படம்!

நம்புங்கள்! இதில் வரும் முக்கிய நடிகர்களின் சராசரி வயது 80-க்கும் மேல்!

இவர்களை மேய்க்கும் இயக்குநருக்கு மட்டும் வயது 60-க்குள்.




இசை மேலுள்ள ஆர்வத்தினால், குரல்வளம் சற்று குறைந்திருந்தாலும், முதியோர் இல்லங்களுக்குச் சென்று, தங்களது இசைத்திறமையைக் காட்டிவரும் ஒரு வயதான இசைக்குழு!

இந்தக் குழுவின் பெயர்தான் 'யங் அட் ஹார்ட்"!

இவர்கள் பெருமை ஊருக்குத் தெரியவர, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வரை இவர்கள் புகழ் பரவுகிறது.

இப்போது ஒரு பெரிய வாய்ப்பு!

அமெரிக்காவில் ஒரு பெரிய, புகழ் பெற்ற இசை அரங்கில் இவர்களது இசை நிகழ்ச்சி நடத்தச் சொல்லி ஒரு வாய்ப்பு... அழைப்பு.

ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

படத்தின் முதல் காட்சி, ஒரு பெரிய கரவொலியுடன் துவங்குகிறது.

'நான் பாடட்டுமா... வேண்டாமா' என்ற வரிகளுடன் ஒரு 90 வயது மூதாட்டி அருமையாகப் பாடுகிறார்!

அதில் தொடங்கி, இவர்கள் இதற்கு முன் சிறு அளவில், முதியோர் இல்லங்களில் இவர்கள் பாடிய நிகழ்ச்சிகள் காட்டப் படுகின்றன.

அங்கிருந்து பல ஊர்களுக்கு இவர்கள் பயணிக்கிறார்கள்!

அப்போதுதான் இந்த அரிய வாய்ப்பைப் பற்றி இவர்களின் இயக்குநர் கூறுகிறார்.

ஆரவாரத்தோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மொத்தம் ஒரு 7 அல்லது 8 பாடல்கள்.

'ஆம்! எங்களால் முடியும், முடியும், முடியும்,' என்ற வரிகள் அடங்கிய ஒரு கடினமான, பல்லை உடைக்கும் பாடலும் இதில் இருக்கிறது.

அவற்றுக்கான பயிற்சி தொடங்குகிறது.

இதில் இருவர் உயிருக்கு ஊசலாடுபவர்கள்.

துணிவுடன் இறங்குகிறார்கள்.

பயிற்சி அநேகமாக முடிந்த நிலையில் தங்கள் திறமையைப் பரிசோதனை செய்ய ஒரு களத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அது ஒரு சிறைச்சாலை!

ஆம்! கைதிகளின் முன்னால் தங்கள் திறமையைக் காட்ட முடிவு செய்து நாளும் குறிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் ஒரு சோகம்!

முக்கியப் பாடகர்களில் ஒருவர் இறந்து போகிறார்.

தளராமல், இந்த முதியவர்கள்..... 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.... சிறைச்சாலைக்கு வருகிறார்கள்.

நெகிழ வைக்கும் நிகழ்ச்சி அது!

கடைசிப் பாடலாக, இறந்த தங்கள் நண்பரைப் போற்றி ஒரு பாடலையும் பாட, மொத்த கைதிகளும் அழுகிறார்கள்.

நாமும் தான்!

பயிற்சி தொடர்கிறது.

இயக்குநர் எல்லாருக்கும் உறசாகமளிக்கிறார்.

இப்போது இன்னொரு சோகம் இவர்களைத் தாக்குகிறது.

இன்னொரு முக்கியப் பாடகரும் மரிக்கிறார்.

நிகழ்ச்சியை இனித் தொடர்வதில் அர்த்தமே இல்லை என இயக்குநர் அறிவிக்கிறார்.

நிகழ்ச்சியை ரத்து செய்தால், உன்னையே நீக்கி விடுவோம். நிகழ்ச்சி நடக்கும். 'யெஸ் வீ கேன் கேன்' [ஆம் எங்களால் முடியும், முடியும்] என இவர்கள் சொல்ல பயிற்சி தொடர்கிறது.

நிகழ்ச்சி நாள்!

கூட்டம் அலை மோதுகிறது.

எதற்கு வருகிறார்கள்?

இவர்கள் பாடப்போகும் பாடலை, இவர்களை விடச் சிறப்பாகப் பாடக்கூடிய நிகழ்ச்சிகளைக் கண்டவர்கள்தான் இவர்கள்!

இருந்தும் வருகிறார்கள்.

இந்த வயதிலும், மனதில் இளமையாக இருக்கும் இவர்களைப் போற்ற.... நாமும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்னும் ஒரு உத்வேகத்தில்!

நிகழ்ச்சி ஆரம்பம் ஆகிறது.

ஒவ்வொருவராக வந்து பாடுகிறார்கள்.
கூட்டமாகவும் பாடுகிறார்கள்.
பல வரிகள் சொதப்பப் படுகின்றன.
ஆனால், தாளம் தவறவில்லை.

மக்கள் ஆரவாரிக்கிறார்கள்!
அழுகிறார்கள் சில வரிகளுக்கு.
நம்மையும் அழ வைக்கிறார்கள்!

கடைசிப் பாடலைப் பாட ஒரு மிகவும் வயதான முதியவர் வருகிறார்.
மூக்கில் செருகிய ஆக்ஸிஜன் குழாயுடனும், கையில் ஒரு ஆக்ஸிஜன் ஸிலிண்டருடனும்!!




'கண்டம் கண்டமாகச் சுற்றினேன், இந்தக் குழுவுடன்... இறுதியில் நான் என் சிறுநீரைத் தக்கவைக்க முடியாத வரையில்' எனச் சொல்லிச் சிரிக்கிறார். ["We went continent to continent until I became incontinent ..."]

அவர் பாடத் துவங்கும் பாடல் ஒரு ஆண்-பெண் ஜோடிப் பாடல்.
ஆனால் அவரே பாடுகிறார்.... இறந்த தன் நண்பர்களைப் போற்றி!

மீண்டும் ஒரு நெகிழ வைக்கும் காட்சி.

கூட்டம் எழுந்து நின்று இடைவிடாமல் கை தட்டுகிறது.

படம் பார்த்த பலரும் எழுந்து நின்று அதைச் செய்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வு!

மிக உன்னதமான இசை அனுபவம் இந்தப் படம்!

பாருங்கள் இந்தப் படத்தை!
மனித நேயம் என்னவெனத் தெரிய வேண்டுமெனில்!!

வாழ்வதற்கு,....தன்னால் மற்றவரை மகிழவைக்க வேண்டுமெனில்..... வயது ஒரு வரம்பல்ல எனச்சொல்லும் இப்படம் ஒரு நெகிழ வைக்கும் படம்!

இது ஒரு உண்மைக் கதை!!

http://www.moviefone.com/movie/young-heart/32265/photos/5?sortType=&timePeriod=


Read more...

Sunday, July 06, 2008

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!"-1

"என்னைக் கவர்ந்த இரு படங்கள்!" -1

"இது ஒரு கொலைக் கதை" என ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வழக்கமாக, ஒரு தொடர் பதியும்போது, மற்ற எதுவும் எழுதுவதில்லை நான்.

ஆனால், அந்த கோட்பாடை முறியடிக்கும் விதமாக, இந்த அமெரிக்க சுதந்திர தின வாரத்தில், 'கல் எண்ணை' [பெட்ரோல்] விலை அதிகமாக இருப்பதால், எங்கும் போகாமல் இருந்ததால், வேறு வழியின்றி, என் நண்பர் ஒருவர் அழைத்ததினால், என் மனைவியுடன் இரண்டு திரைப்படங்கள் பார்க்க நேரிட்டது.

ஆஹா! என்ன ஒரு அனுபவம்!

அதை உங்களுடன் பகிரவே, என் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தி, இந்தப் பதிவை இடுகிறேன்.

நேற்றும் இன்றுமாக இரண்டு படங்கள்.

இரண்டும் இருவித அனுபவங்கள்!

முதல் படம்...!

"தி விஸிட்டர்" [The Visitor]

கண்டிப்புக்குப் பெயர் போன ஒரு பேராசிரியர்.
சமீபத்தில் தன் மனைவியை இழந்தவர்.
அவள் ஒரு திறமையான பியானோ கலைஞர்.
அவளைப் போற்றும் விதமாக, இத்தனை நாளாய், தான் கற்றுக்கொள்ளாத அந்தப் பியானோவை கற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார்.
அவருக்கோ அது வரவில்லை.
நாலு ஆசிரியர்களிடம் பாடம் கற்றும், அது பிடுபடவில்லை.
வகுப்பிலும் கண்டிப்பாக இருப்பவர் அவர்.
ஒரு மாணவன் காலம் தவறி சமர்ப்பித்த ஒரு ஆய்வறிக்கையைக் கூட ஏற்க மனமில்லாது நிராகரிக்கும் அளவுக்குக் கண்டிப்பானவர்.
கன்னெக்டிக்கட்டில் பணி புரியும் அவர், ஒரு வேலை நிமித்தமாக நியூயார்க் நகரத்துக்கு வர நேரிடுகிறது.
அங்கு அவருக்கென ஒரு வீடு இருக்கிறது.
வருகிறார்.
வீட்டின் அமைப்பே மாறியிருக்கிறது.
யாரோ அங்கு இருக்கிறார்கள்!
'யாரடா நீ?' என ஒரு கரம் அவர் கழுத்தை நெருக்குகிறது!
'இது என் வீடு! நீ யார்?' என இவர் கேட்க உண்மை வெளிப்படுகிறது.
ஆம்!
இவர் இங்கு வருவதே இல்லை என அந்த வீட்டை ஒரு தம்பதிகளுக்கு அபார்ட்மெண்ட் உரிமையாளர் உபரி வாடகைக்கு இவர்களுக்கு விட்டிருக்கிறார்.
நிலைமை புரிந்த தம்பதிகள், மன்னிப்பு கோரி வெளியேறுகிறார்கள்.
'இந்த இரவு நேரத்தில் எங்கே போவீர்கள் எனச் சொல்லி அவர்களை அங்கேயே தங்கச் சொல்லுகிறார் அந்தப் பேராசிரியர்.
அந்தத் தம்பதிகள் குடியுரிமை இல்லாது இருக்கின்ற இருவர்!
ஆண் ஒரு சிரியா நாட்டுக் குடிமகன். பெண் செனெகல் நாட்டைச் சேர்ந்தவள்.
அந்தப் பையன் ஒரு திறமையான ட்ரம் வாசிக்கும் கலைஞன்.
கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு அவன் திறமையின் மீது ஒரு பிடிப்பு வந்து, இவரும் அவனிடம் ட்ரம் கற்றுக் கொள்ளத் துவங்குகிறார்.
நியூயார்க் நகரத் தெருக்களில், இவரும் அவனோடு ட்ரம் வாசிக்கும் அளவுக்கு ஈடுபாடு உண்டாகுகிறது!
இந்த நிலையில், அந்தப் பையன் குடியுரிமை அதிகாரிகளிடம் துரதிர்ஷ்டவசமாகச் சிக்கிக் கொள்கிறான்.
இந்தத் தம்பதிகளிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அந்தப் பேராசிரியர், இவனைக் காப்பாற்றப் பாடுபடுகிறார்.
மிச்சிகனில் இருக்கும் அந்தப் பையனின் தாய், தன் மகனிடமிருந்து ஒரு செய்தியும் சில நாட்களாக வரவில்லையே என்பதால், இந்த வீட்டுக்கு வருகிறார்.
பேராசிரியர் அவரிடம் நிலைமையைச் சொன்னதும், அந்தத் தாய், தன் மகனைப் பார்க்காமல் இந்த ஊரை விட்டுப் போகப் போவதில்லை எனச் சொல்லி வெளியேறும் போது, அவருக்கும் குடியுரிமை இல்லை என்பதை அறிந்த பேராசிரியர் தன் வீட்டிலேயே அவரைத் தங்கச் சொல்லி வேண்ட, முதலில் மறுத்தாலும், மகன் மீதுள்ள பாசத்தால், அங்கேயே தங்குகிறார்.
இவர் செய்கின்ற உதவியைக் கண்டு, மனம் நெகிழ்கின்ற அந்தத் தாய், இவர் மேல் ஒர்விதப் பாசம் கொள்கிறார்.
அது காதலா?

தெரியவில்லை.
தன் மகன் காதலித்த அந்த செனெகல் பெண்னைச் சந்தித்து, தன் மகன் அவளுடன் இருந்த நாட்களை அந்தத் தாய் நினைவு கூருகிறார். அந்த இடங்களுக்கும் அவளுடன் செல்லுகிறார்.அவளையும் ஏற்றுக் கொள்ளுகிறார்.
இதற்குள், ஒரு தவறும் செய்யாத.... ஆனால், குடியுரிமை இல்லாத...அந்தப் பையன் சிரியாவுக்கே திருப்பி அனுப்பப் படுகிறான்.
தனது ஒரு தவற்றினால்தான்..... குடியுரிமை அதிகாரிகளிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை மறைத்த செயலால்தான்.... இது நிகழ்ந்தது எனப் புலம்பும் அந்தத் தாய், தானும் சிரியாவுக்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார்....... இனித் திரும்பி வர முடியாதெனத் தெரிந்தும்!
செல்லும் முதல் நாள் இரவு, அவர் அந்தப் பேராசிரியரை அவரது படுக்கையறையில் சந்தித்து, அவரைக் கட்டியணைத்து, அவருடன் படுக்கிறார்.
எந்தவொரு தவறும் நிகழ்வதாகக் காட்டவில்லை.
மறுநாள் அவர் கிளம்பி சிரியா செல்லுகிறார்.
பேராசிரியர் வழியனுப்பி வைக்கிறார்.

'வந்துவிடு என்னுடன்' என அந்தத் தாயோ, 'வரட்டுமா' என பேராசிரியரோ கேட்கவில்லை!
மறுநாள், எந்த சப்வே ரயில் நிலையத்தில் அந்தப் பையன் கைது செய்யப்பட்டானோ, அங்கே அந்தப் பேராசிரியர் அவனது ட்ரம்மை எடுத்துக் கொண்டு போய், ஆவேசமாக வாசித்துக் கொண்டிருக்கிறார்.
படம் முடிகிறது.

எதைச் சொல்லுவதற்காக இயக்குநர் இதை எடுத்தாரோ, அதை விட்டு ஒரு இம்மியும் அகலாமல், ஒரு 100 நிமிடங்கள் நம்மையும் அவர்களோடு பயணிக்க வைத்த இயக்குநரை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.

சிரிக்கிறோம், மகிழ்கிறோம், நெகிழ்கிறோம், அழுகிறோம், ஆத்திரப் படுகிறோம், நிகழ்வின் நிலைமையையும் புரிந்து கொள்கிறோம்!

எவர் மீதும் குறை சொல்ல முடியாமல், ஒரு அநீதி நிகழ்ந்து விடுகிறது. சம்பந்தப்பட்டவர்க்கே அந்தச் சோகம் புரியும்... பாதிக்கும்.

அதை நம்மையும் உணரச் செய்வதில்தான் இயக்குநர் வென்றிருக்கிறார்.

துளிக்கூடத் தேவையில்லாத காட்சிகளோ, வசனங்களோ, நடிகர்கள் தேர்வோ எதிலும் சோடை போகாமல் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது, 'உலகத்தரம்' என பீற்றிக் கொள்ளும் நம் படங்களை நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகிறது.

தவறாமல் பாருங்கள் இந்தப் படத்தை!

அடுத்த படம்...... நாளை!

[இ.ஒ.கொ.க. வும் இன்று வரும்!!]

Read more...

Tuesday, July 01, 2008

"இது ஒரு கொலைக் கதை" - 10

"இது ஒரு கொலைக் கதை" - 10

முந்தையப் பதிவு

ஜப்பார் சொல்லத் தொடங்கினார்!

'சத்யன் ஒரு நேர்மையான சிப்பி வியாபாரி.


நியாயமான விலைக்கு சிப்பிங்களை வாங்கி, அதை அடுத்த வியாபாரிகிட்ட விக்கற இடைத் தரகர்.

கிடைக்கற லாபத்துல ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருந்த ஆளு.

அவரு கையில இந்த சிப்பிங்க கொத்தா கிடைச்சிருக்கு ஒருதரம்~
அது இந்தப் பசங்களுக்கும் தெரிஞ்சதுதான் அவரோட துரதிர்ஷ்டம்.


எப்படியாவது அதை அடிச்சறணும்னு திட்டம் போட்டாங்க!

வெள்ளிக்கிழமை ராத்திரி.
மூணு பேரும் நல்லா தண்ணி அடிச்சிட்டு, அவங்களோட ஓட்டை ஜீப்புல பெட்ரோல் போட்டுகிட்டு, சத்யன் வீட்டுக்குப் போறாங்க.


சத்யன் மட்டும் டி.வி பார்த்துகிட்டு இருக்காரு.

காசி, மாரி, ராசையன் மூணு பேரும் சத்தம் போடாம உள்ளே நுழைஞ்சு, சத்யனை மடக்கறாங்க.

சிப்பி எங்கேன்னு மிரட்டறாங்க!

தன்கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னு சத்யன் சொல்றாரு.

பொய் சொல்லாதே! எனச் சொல்லி சத்யனை அடிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.

சத்யனின் அலறல் சத்தம் கேட்டு மாடியில் இருந்த கலா கீழே இறங்கி வந்திருக்கிறார்.

என்னவெனத் தெரிந்ததும், தடுக்க முயற்சித்திருக்கிறார்.

அப்போதுதான், ஆத்திரத்தில் அறிவிழந்த மாரி இருவரையும் காசியின் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளி இருக்கிறான்.


நிலைமை மோசமாகிப் போனதை உணர்ந்த மற்ற இருவரும் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி வீட்டை எரித்துவிட்டுத் தப்பித்து விடலாம் என ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

தடயங்கள் எல்லாம் அழிந்துவிடும் என நம்பினார்கள்.


ராஜேஷின் காரில் இருந்த சிப்பிகளைக் கைப்பற்றி அதை முத்தண்ணனிடமும் விற்றிருக்கிறார்கள்.


குற்றத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை, காசி கடலில் சென்றபோது வீசி எறிந்திருக்கலாம்.

இன்னும் சரியா, விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, அதுவும் தெரியவரும்!

மாரியோட காதலி மட்டும், அந்தத் துப்பாக்கி குண்டு பதிஞ்ச மரத்தைப் பத்தி சொல்லலைன்னா, இவங்களை இதுல சம்பந்தப் படுத்தி இருக்கவே முடியாது.

அதே மாரி, சொர்ணத்தம்மாவோட தோழியும் உண்மையைச் சொன்னது நல்லதாப் போச்சு.

இப்படித்தான்! எவ்வளவோ கவனமா இருக்கறதா நினைச்சு செஞ்சாலும், எங்கியாவது ஒரு சின்ன விஷயத்துல கோட்டை விட்டுட்டு மாட்டிப்பாங்க. மாரி மட்டும் தன் ஆளுகிட்ட பந்தா பண்றதுக்காக தோட்டா வீசிக் காமிக்கலைன்னா இந்த சாட்சியம் கிடைச்சிருக்காது நமக்கு!

சரி, இப்ப போயி அந்த மூணு பேரையும் பிடிச்சுகிட்டு வாங்க' எனச் சொல்லிச் சிரித்தார் ராஜேஷ்.


'அதுக்கு முன்னாடி, இதெல்லாம் எப்படி இவ்ளோ சரியாச் சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா' என்றார் பொன்னுசாமி.

ரொம்ப ஈஸிங்க! அதான் முன்னாடியே சொன்னேனே! கார் டயர் அடையாளம், பெட்ரோல் பங்க்காரர் சொன்னது, முத்தண்ணன் வாக்குமூலம், ரோஸி, சொர்ணத்தம்மா சொன்னது, அந்த குண்டு அடையாளம் இதை வைச்சு நான் அனுமானிக்கறது இது! சரி போங்க! கொண்டு வாங்க அவங்களை' என்றார் ஜப்பார்
************

மாரி தப்பிச்சுட்டானுங்கய்யா! அவன் மேலத்தான் கொலைப்பழி விழும்னு ஆரோ சொல்லியிருக்காங்க போல. பட்சி பறந்திடுச்சு.' என வந்தார் பொன்னுசாமி.

'தேடுங்க! நல்லாத் தேடிப் பிடிங்க. மாரி இல்லாம இந்தக் கேஸு ஜெயிக்காது. அவந்தான் சுட்டான்றதை நிரூபிச்சாத்தான் மத்தவங்க இதுக்கு உடந்தையா இருந்தாங்கன்னு காட்ட முடியும். ' எனப் பரபரத்தார்.

பதினெட்டு மாதம் சென்று, திருவனந்தபுரத்தில், ஒரு லாட்ஜில் மாரி கைது செய்யப்பட்டான்.

மரியதாஸ் எனப் பெயர்மாற்றம் செய்துகொண்டு, ஒரு கார் மெக்கானிக்காக இருந்திருக்கிறான் இத்தனைக் காலம்!

வழக்கு நடந்து மூவரும் குற்றவாளிகள் என சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், குற்றமிழைத்த ஆயுதம் கிடைக்காததனால், மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
********************

[இது ஒரு உண்மைக்கதை. கருவை எடுத்துக் கொண்டு நம் நடையில் எழுத முயற்சித்திருக்கிறேன். நன்றி ட்ரூ டி.வி. விரைவில் அடுத்த கதையுடன் சந்திக்கிறேன்!]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 9

"இது ஒரு கொலைக் கதை" - 9

[முந்தைய பதிவு இங்கே]

வெள்ளிக்கிழமை ராத்திரி அந்த மூணு அண்ணன் தம்பிங்களும் வந்து பெட்ரோல் போட்டாங்களா' என அந்தப் பெட்ரோல் பங்கின் உரிமையாளரை விசாரித்தார் பொன்னுசாமி.

'எந்த மூணு அண்ணன் தம்பிங்க? என்ன சொல்றீங்க?' எனப் பரிதாபமாக விழித்தார் அவர்.

'மன்னிச்சுக்கோங்க! நான் காசி, மாரி, ராசையன் பத்திக் கேட்டேன்' எனச் சமாளித்தார் பொன்னுசாமி.

'ஓ! அவங்களா! எப்பவும் இங்கதானே போடுவாங்க. அதுல என்ன விசேஷம்?' என அசுவாரசியமாகச் சொன்னார் உரிமையாளர்.

'எப்பவும் போடறதைப் பத்தியா இப்பக் கேட்டேன்? கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லணும். அன்னைக்கு.... அதாவது போன வெள்ளிக்கிழமை ராத்திரி, .... இவங்க வந்து பெட்ரோல் போட்டாங்களா? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அத்தோட, அன்னிக்கு ராத்திரி இவங்க நடத்தையில எதுனாச்சும் வித்தியாசம் தெரிஞ்சுதா?' என அதட்டினார் பொன்னுசாமி [612]

'ஆமாங்க! நீங்க சொல்றது சரிதான். ஆனா, அன்னிக்கு அவங்க நடத்தையில ஒரு பரபரப்பு தெரிஞ்சுது. அது மட்டுமில்லாம அவங்க சொன்ன ஒரு வார்த்தை என்னால மறக்க முடியாதுங்க.; என அவர் சொன்னதும் சுறுசுறுப்பானார் கண்ணன்.

'என்ன சொன்னாங்க அப்படி?' என்றார்.

'இன்னிக்கு ஒரு வேட்டை இருக்கு'ன்னு சொல்லிட்டு, வண்டியில போட்டது போக, தனியா ரெண்டு 'கேன்'ல வேற பெட்ரோல் பிடிச்சாங்க' என்றார் உரிமையாளர்.

'ஓ அப்படியா? நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சீங்களா' என்றதும், 'அதெல்லாம் எங்க வேலை இல்லீங்க' எனச் சொல்லிச் சிரித்தார் அவர்.

'ரொம்ப நன்றிங்க' என விடை பெற்றார் கண்ணன்.
********************

'நமக்குத் தேவையான எல்லாத் தடயங்களும் கிடைச்சாச்சு. குற்றவியல் அதிகாரிங்களும் மரத்துல இருந்த குண்டும், மண்டையோட்டுல இருந்த குண்டும் ஒரே துப்பாக்கியிலேருந்துதான் சுட்டிருக்குன்னு உறுதிப் படுத்திட்டாங்க. கைது பண்ணிறலாமா?' எனக் கேட்டார் ராஜேஷ்.

'இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கு. இந்தப் பசங்க வைச்சிருக்கற ஜீப்புதான் அந்த இடத்துல இருந்துச்சான்னு உறுதிப் படுத்தணும்' என்றார் ஜப்பார்.

'அதெல்லாம் அப்பவே பண்ணியாச்சே! அந்த இடத்துல இருந்த டயர் அடையாளமும் இந்தப் பசங்க ஜீப்போட டயரும் ஒத்துப் போகுதுங்க.'

'வெரி குட்! இவங்க முத்தண்ணன்கிட்ட வித்த சிப்பி பத்தி என்ன தகவல் கிடைச்சது?;'

'அதான் அப்பவே விசாரிச்சாச்சே! இந்தப் பசங்க வித்த சிப்பிங்கல்லாம், கொஞ்ச நாளானாலும் ஒரே தரத்துல இருந்திச்சுன்னு!' என்று சலிப்புடன் சொன்னார் ராஜேஷ்.

'அப்போ சரி! அண்ணன் தம்பி மூணு பேரையும் கைது பண்ண வாரண்ட் வாங்குங்க' என உத்தரவு பிறப்பித்தார் ஜப்பார்.

'ஐயா! ஒரு கேள்விங்க! எப்படி இவங்கதான் குத்தவாளின்னு முடிவு பண்ணினீங்கன்னு சொல்லுங்க ஐயா! அதுவும் ரொம்ப சுளுவா கண்டுபிடிச்சிட்டீங்களே ஐயா!' எனப் பணிவுடன் கேட்டார் கண்ணன்[404]

சொல்றேன் கேளுங்க! என ஆரம்பித்தார் ஜப்பார்.

**************

[அடுத்த பதிவில் முடியும்!]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 8

"இது ஒரு கொலைக் கதை" - 8

'எலே! காசி! உன்னோட துப்பாக்கியை எடுத்துகிட்டு ஐயா உடனே வந்து பாக்கச் சொன்னாரு!'

'எந்த ஐயா? எந்த துப்பாக்கி?' என்றான் காசி.

'தோ பாரு! சும்மா விளையாடாதே! இப்ப வந்திருக்கற அதிகாரி ஒண்ணும் சாதாரண ஆளுல்ல. ரொம்பவே குடையறாரு. ஒன் பேருல ஒரு துப்பாக்கி பதிஞ்சிருக்கு. அது எங்க இருக்குன்னு சொல்லு, போதும். இல்லேன்னா உன் கதை அவ்ளோதான்' என்றார் 612 என்கின்ற பொன்னுசாமி.

'துப்பாக்கியா? என்கிட்டயா? இருந்துது சாமி ஒரு காலத்துல. அது இப்ப என்கிட்ட இல்லை' என்றான் காசி.

'அப்படீன்னா, உன் கதை கந்தல்தான்! என்ன ஆச்சுன்னு விலாவாரியா சொல்லு' என்றார் பொன்னுசாமி.

'அது எங்ககிட்ட இருந்ததென்னவோ உண்மைதான். அது ஒரு ஆறு மாசத்துக்கு முந்தி கைதவறி கடல்ல விழுந்திடுச்சு. இப்ப அது என்கிட்ட இல்லை. இதான் உண்மை. நம்புங்க.' என்றான் காசி சிரித்தபடியே!

'அப்படீன்ற! சரி. அப்ப ஏன் அதை உடனே ஸ்டேஷன்ல வந்து ஒரு புகாராக் கொடுக்கலை? ' என மடக்கினார் பொன்னுசாமி.


'அப்படீங்களா? அப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியாதுங்களே! வைச்சிருந்தாத்தான் சொல்லணும். இல்லேன்னாலும் சொல்லணுமா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் காசி.

'என்னமோசொல்றே! இது ஒண்ணும் நல்லதாப் படலை. ஜாக்கிறதைப்பா! போலீஸ் விசாரிப்பெல்லாம் வேற மாதிரி இருக்கும். இப்ப நான் வந்து தன்மையாக் கேட்ட மாரி இருக்காது.சரி, நான் வர்றேன்' என எழுந்தார் பொன்னுசாமி.

'சரீங்க ஐயா! எப்ப வேணும்னாலும் வாங்க! என்னாலானதை செய்யறேன். இப்பல்லாம் நான் ரொம்ப திருந்திட்டேங்க' என வழியனுப்பி வைத்தான் காசி.

'போறதுக்கு முந்தி ஒரு கேள்வி. போன வெள்ளிக்கிழமை ராத்திரி எங்க இருந்தே நீ' என்றார் பொன்னுசாமி.

'அதான் பசங்க சொல்லிட்டாங்களே! எங்க அம்மா வூட்டுக்குத்தான் போயிருந்தோம்' எனச் சிரித்தான் காசி.

'நெனைச்சேன்! இதான் சொல்லுவேன்னு! சரி. நான் வரேன்' எனச் சிரித்தவாறு கிளம்பினார்.
************

'துப்பாக்கியும் இல்லை. இவங்க சொல்றதையும் ஒதுக்க முடியலை. இப்ப என்ன பண்றது?' என்றார் ராஜேஷ்.

'இந்தப் பசங்களைப் பத்தி இன்னும் எதாவது தீவிரமா விசாரிக்கணும்' என்றார் ஜப்பார்.

'என்ன சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் புரியலியே?' என வினவினார் ராஜேஷ்.

'இவங்களுக்குத் தெரிஞ்சவங்க இவங்களைப் பத்தி என்ன சொல்றாங்கன்னு விசாரிங்க ராஜேஷ்' என நகர்ந்தார் ஜப்பார்.
**************

'உன் பேரு என்னம்மா?' என்றார் ராஜேஷ்.

'ரோஸிங்க' என ஒருவிதப் பயத்துடன் சொன்னாள் அந்தப் பெண்.

கருப்பானாலும் நல்ல களையான முகம்!

இளம் பெண்! வாலிபம் தவழ்ந்தோடியது அவளிடம்!

வாயில் புடவையிலும் இளமையின் எழில் துள்ளிக் குதித்தது.

'மாரியை உனக்கு எவ்வளவு நாளாத் தெரியும்?' என அதட்டினார் ராஜேஷ்.

'இப்பத்தாங்க. ஒரு ரெண்டு வருஷமா' எனத் தயங்கியபடியே சொன்னாள் ரோஸி.


'ரொம்பவே பழகிட்டீங்களோ?' எனக் கேட்டதும் பதறினாள் ரோஸி.

'என்னங்கையா சொல்றீங்க. எதுக்கு இப்படியெல்லாம் கேக்கறீங்க' என ஒரு கண்டிப்புடன் கேட்டாள்.

'சரி. நேரடியா விஷயத்துக்கு வர்றேன். உங்க மாரி எதுனாச்சும் துப்பாக்கி வைச்சுப் பார்த்திருக்கியா?' என்றார்.

'துப்பாக்கியா? ஆமாங்க! அப்பப்ப என்கூட இருக்கறப்ப, ஒரு துப்பாக்கியைக் காமிச்சிருக்காருங்க. சில சமயம் சுட்டுக்கூட காமிச்சிருக்காருங்க, என்னை... என்னை விட்டுருவீங்கதானே!' என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் ராஜேஷ்.

'எங்கே? எங்கே சுட்டுக் காமிச்சான்' என ஆவலுடன் கேட்டார்.

'தோப்புலதானுங்க. ஒரு மரத்துல கூட சுட்டுக் காமிச்ச தடயம் இருக்குங்க' என வெள்ளந்தியாகச் சொன்னாள் ரோஸி.

'எந்த மரம்? காட்டு அதை' என இன்னமும் தீவிரமானார் ராஜேஷ்.

'காட்டறேன் சாமி. அதுக்கப்புறம் என்னை விட்டுருவீங்கதானே? நான் ஒரு அறியாப் பொண்ணுங்க!' என்றவாறே அவரை அழைத்துச் சென்று ஒரு தென்னை மரத்தைக் காட்டினாள் ரோஸி.

என்ன ஆச்சரியம்!

ஒரு குண்டு அதில் பாய்ந்திருந்தது தெரிந்தது!

மிக மிகக் கவனமாக அந்தக் குண்டு தோண்டி எடுக்கப் பட்டது.

பரிசோதனைக்கு அதை அனுப்பி வைத்தார்.

ஜப்பாரிடம் சொன்னபோது மிகவும் பாராட்டினார்.


'இந்தக் கேஸ் முடிஞ்சதும் உங்களுக்கு ப்ரமோஷன் காத்திருக்கு'
*****************************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை" - 7

"இது ஒரு கொலைக் கதை" - 7

[முன் பதிவு இங்கே]

'எனக்கென்னமோ அந்தக் கிழவி பொய்தான் சொல்றான்னு தோணுது' என்றார் ராஜேஷ். 'இப்ப என்ன பண்றது?' எனக் கையைப் பிசைந்தார்.

'அவ பொய் சொல்றான்னா, அவளுக்குத் தெரிஞ்சவங்களை விசாரிங்க. அது எப்படீன்னு நான் சொல்லியா தரணும்' எனச் சொல்லிச் சிரித்தார் ஜப்பார்.

'அட! இது சட்டுன்னு எனக்குத் தோணாம போயிருச்சே என ஒரு கணம் திகைத்த ராஜேஷ், 'என்ன இருந்தலும், புலனாய்வுத்துறைப் போலீஸ்னா தனி ட்ரெய்னிங்தான்' என மனதுக்குள் சிலாகித்தவாறே கிளம்பினார்.

வேற எதுனாச்சும் ரிப்போர்ட் வந்திருக்கா?' என 404-ஐ வினவினார் ஜப்பார்.

'வந்திருக்குங்க ஐயா! துப்பாக்கிக் குண்டு பத்தின ரிப்போர்ட்' என ஒரு தாளை நீட்டினார் 404.

வாங்கிப் படித்தார் ஜப்பார்.

'இந்தக் குண்டு ஒரு .35 மில்லிமீட்டர் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒருவித தனி அடையாளங்கள், கீறல்கள், இதற்கான துப்பாக்கி கிடைத்தால், அதனுடன் ஒப்பிட்டுச் சொல்லமுடியும்'

'சம்பவம் நடந்த இடத்துல, எதுனாச்சும் துப்பாக்கி கிடைச்சுதா?' எனக் கேட்டார் ஜப்பார்.

'இல்லீங்க ஐயா! அங்க எதுவும் அப்படி கிடைக்கலை' எனப் பதிலிறுத்தார் 404.

'அப்போ இன்னும் அது கிடைக்கலை. இந்தப் பசங்க மூணு பேருல யாராச்சும் துப்பாக்கி வைச்சிருந்தா, அது ஸ்டேஷன்ல பதிவு செஞ்சிருக்கணுமே. அப்படி ஏதாவது இருக்கான்னு பாருங்க' என ஆணையிட்டார்.

'சரீங்க ஐயா' எனச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிய 404, திடீரெனப் பிரகாசமானார்.

'இருக்குங்க! காசிப் பய ஒரு .35 துப்பாக்கியை பதிவு பண்ணி இருக்கான்' எனக் கூவினார்!

'சரி. காசியைக் கூப்பிட்டு விசாரிங்க. அது கிடைச்சா[!!] வாங்கி பரிசோதனைக்கு அனுப்புங்க' என உத்தரவிட்டார்.

'இதோ பண்றேன் ஐயா' என ஜரூரானார் 404.
*****************

'ஏம்மா! உங்களுக்கு சொர்ணத்தம்மாவை எவ்வளோ நாளாத் தெரியும்?' ராஜேஷ் அந்தப் பெண்மணியைப் பார்த்துக் கேட்டார்.

'ரொம்ப வருஷமாத் தெரியுமுங்க. எதுக்குக் கேக்கறீங்க?' என பவ்யமாக பதில் சொன்னார் அந்தப் பெண்மணி.

'அடிக்கடி பார்ப்பீங்களோ' எனத் தூண்டில் போட்டார்.

வாராவாரம் பார்ப்போமுங்க. இப்ப போன வெள்ளிக்கிழமை கூட பார்த்தேனே!' என்ற பெண்மணியை சற்று உற்சாகத்துடன் பார்த்தார் ராஜேஷ்.

'வழக்கம்போலக் காலையில்தானே!' என நோட்டம் விட்டார்.

'காலையிலியும் பார்த்தேனுங்க. ராத்திரி கூத்து கட்டறப்பவும் பார்த்தேனுங்க' என்றார் அந்தப் பெண்மணி.

'ஓ! ராத்திரி கூத்தும் நடந்துச்சா?' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் ராஜேஷ்.

'விடிய விடிய நடந்துச்சுங்க. சொர்ணத்தம்மாவும் நானும் முழுக்க முச்சூடும் பார்த்தோமுங்க'

'அப்போ அவங்க பசங்களும் இருந்தாங்கதானே' என மீண்டும் கொக்கி போட்டார்.

'அந்தத் தறுதலைப் பசங்க எங்கங்க இங்கெல்லாம் வர்றாங்க. எம் பசங்களைப் பார்த்து எம்புட்டு நாளாச்சுன்னு சொர்ணம் கூட ரொம்பவே பொலம்பிச்சுங்க. ஏங்க ஏன் இதையெல்லாம் கேக்கறீங்க' என்ற பெண்மணியின் கேள்வியைப் பொருட்படுத்தாது, அவரது பெயர், விலசத்தைக் குறித்துக் கொண்டு கிளம்பினார் ராஜேஷ்.

நேராக ஜப்பாரிடம் சென்று தகவலைச் சொன்னார்.

ஜப்பாரின் முகம் பிரகாசமாகியது.

'அப்போ சொர்ணத்தம்மா எதையோ மறைக்கறாங்க. இல்லைன்னா யாருக்காகவோ பொய் சொல்றாங்க. முத்தண்ணன்கிட்டப் போயி, அந்த சிப்பி வித்த விஷயத்தை மறுபடியும் கேக்கணும்; அப்படியே, காசியோட துப்பாக்கியையும் விசாரிங்க' என்றார் ஜப்பார்.

'சரிங்க ஐயா!' என்றபடி அடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார் ராஜேஷ்.
*************

[தொடரும்]

Read more...

"இது ஒரு கொலைக் கதை!" - 6

"இது ஒரு கொலைக் கதை!" - 6

[முந்தையப் பதிவு இங்கே]

'வாங்க வாங்க! எதுனாச்சும் துப்பு கிடைச்சுதா என வரவேற்றார் முத்தண்ணன்.

'நீங்கதான் கொடுக்கணும். அதுக்குத்தான் வந்திருக்கோம்.' என அமர்ந்தார் ராஜேஷ்.

'சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?'

'காசி வித்த சிப்பி பத்தித்தான்! என்ன தரம் அதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?' என்றார் ஜப்பார்.

நல்ல தரமான சிப்பிங்க! எல்லாம் ஒரே குளிச்சல்ல எடுத்த மாரி அசலா இருந்துது. ஆனா, கொஞ்ச நாளு காஞ்ச சிப்பிங்க. இருந்தாலும் பழுதில்லை' என்றார் முத்தண்ணன்.

'கொஞ்சம் விவரமாச் சொல்லுங்களேன்' என ஆவலானார் ஜப்பார்.

'அது வந்துங்க, அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா திருடிச் சேகரிச்ச சிப்பிங்கன்னா, பலதும் கலந்த மாரி இருக்கும். ஒரே குளிச்சல்ல எடுத்ததுன்னா, ஒரே மாரி இருக்கும். காசி கொண்டு வந்தது ஒரே மாரி இருந்தாலும், கொஞ்ச நாளு கழிச்சு கொண்டு வந்த மாரி காஞ்சு போயிருந்தது. இருந்தாலும் தரமா இருந்ததால அப்படியே மறுபேச்சு சொல்லாம வாங்கிகிட்டேன். அவங்களுக்கும் எங்களை விட்ட யாரு இருக்காங்க சொல்லுங்க' என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் முத்தண்ணன்.

'ரொம்ப நன்றிங்க உங்க உதவிக்கு' என எழுந்தார் ஜப்பார்.
*********

'என்னைய்யா, 612! காசி அம்மா வீடு எங்கே இருக்குன்னு கண்டு பிடிச்சீங்களா?' எனச் சலிப்புடன் கேட்டார் ராஜேஷ்.

'தெரியுமைய்யா! அண்ணா தெருவுல 112-ம் நம்பர் வீடுங்க' என்றவுடன், நிமிர்ந்தார் ராஜேஷ்.

அடுத்த சில நிமிடங்களில், அவரது ஜீப் அங்கே நின்றது.

'இங்க சொர்ணம்மான்றது யாருங்க?'

'யாரது? போலீஸா? என்ன வேணும் உங்களுக்கு? என் பசங்க மறுபடியும் எதுனாச்சும் தப்புத்தண்டா பண்ணிட்டாங்களா?' எனக் கேட்டவாறே ஒரு வயதான மூதாட்டி வெளியே வந்தாள்.

'அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! உங்ககிட்ட சில கேள்வி கேக்கணும். போனவாரம் வெள்ளிக்கிழமை ராத்திரி உங்க பசங்க மூணு பேரும் இங்கே இருந்ததாச் சொல்றாங்க! அது உண்மையான்னு விசாரிக்கத்தான் வந்திருக்கோம்' எனச் சொன்னவுடன், சொர்ணத்தம்மாவின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது.

'எங்க பசங்க அடிக்கடி இங்க வந்து போறதுதான். ஆத்தாவைப் பாக்க வருவாங்க; போவாங்க. இதிலென்னங்க விசாரணை?' என சற்று கேலியாகக் கேட்டவுடன் சற்று கோபமானார் ராஜேஷ்.

'ஏய் கிழவி! கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லணும். உங்க பசங்க போன வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க வந்தாங்களா?' எனச் சற்று கடுமையுடன் கேட்டதும் நடுங்கிப் போனார் சொர்ணத்தம்மாள்.

'போன வெள்ளிக்கிழமையா?' என நெற்றியைச் சுருக்கி சற்று யோசித்தவர், ' ஆங்! வந்தாங்களே! வந்து, கோழிக்கொழம்பு வைக்கச் சொல்லி இருந்து சாப்பிட்டுட்டு கருக்காலைதான் கெளம்பிப் போனாங்க!' எனச் சற்று படபடப்புடன் சொன்னார்.

'நல்லா நினைவு படுத்திச் சொல்லுங்க. அது போன வெள்ளிக்கிழமை ராத்திரிதானா?' என சாந்தமாகக் கேட்டார் ஜப்பார்.

'ஆமாங்க. நான் ஏன் பொய் சொல்லப் போறேன். காசி, மாரி, ராசையன் மூணு பேரும் வந்து இருந்து, சாப்புட்டுட்டு, விடியறப்பத்தான் போனாங்க' எனத் தீர்மானமாகச் சொன்னார் சொர்ணத்தம்மா.


'அப்ப சரி. நாங்க கிளம்பறோம்' என எழுந்தார் ராஜேஷ்.
***********************
[தொடரும்]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP