Wednesday, August 09, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!"

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்!"

"இன்னாபா! நா நட்பை பத்தி சொன்னது புடிச்சுதா ஒன் ஃபிரன்டுங்களுக்கு?" என்ற பழக்கமான குரல் கேட்டு தெற்கு மாடவீதியில் போய்க்கொண்டிருந்த நான் திரும்பிப் பார்த்தால்...மயிலை மன்னார் ஒரு டீக்கடை வாசலில் நின்று கொண்டு ஒரு பீடியை வலித்துக் கொண்டிருந்தான்.

"உன்னைப் பாக்க இன்னிக்கு சாயங்காலம் வரலாம்னு இருந்தேன்! நீ இங்கேயே இருக்கியே" என்று அவன் அருகில் சென்றேன்.

" உன்னுடைய குறள் விளக்கம் ரொம்பப் பேருக்குப் பிடித்துத்தான் இருந்தது; ஆனால்,....." என்று இழுத்தேன்.

"இன்னா: இன்னா விசயம்? ஏன் பம்முற?" என்று அதட்டினான் மன்னார்.

"தயக்கம் எல்லாம் ஒன்றுமில்லை. நட்பைப் பற்றி நல்லாத்தான் சொன்னே நீ! இப்போ சில மக்களுக்கு ஒரு சந்தேகம். நட்பின் பெருமை எல்லாம் சரிதான். நல்ல நட்பு எது? தீய நட்பு எது? என்று எப்படி இனம் கண்டு கொள்வது? என்று கேட்கிறார்கள்" என்றேன்.

" இம்புட்டுதானே! இத்த சொன்ன அய்யன் அத்த சொல்லாமப் பூடுவாரா என்ன? அந்த புக்குல எம்பதாவது அதிகாரத்தை பொரட்டு! ஒண்ணொண்ணா ஒயுங்கா படி. நா சொல்றத எய்திக்கோ!" என்று அதிகாரமாய்ச் சொன்னான்.

நான் ஒன்றொன்றாகக் குறள்களைப் படிக்க அவன் சொன்னது பின் வருவது!


"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]


இதான் நீ மொதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது. கவனமாக் கேட்டுக்கோ!
இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும்.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும். [792]


மேல சொன்ன மாரி, யோசிக்காம ஃப்ரென்சிப் வெச்சுக்கிட்டியோ, அது ஒன்னை சாவற வரைக்கும் வுடாது. ஒன்னியே போட்டுத்தள்ளாம போவாது! சொல்லிப்புட்டேன்...ஆமாம். அதுனால, நல்லா ஆராஞ்சு பாக்கணும்கறது ரொம்ப முக்கியம்.

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு. [793]


சரி! அப்பிடி இன்னாத்த ஆராயணும்னு கேக்கிறியா? அவன்ட்ட இருக்கற கொணம் இன்னா?, அவன் பொறந்த எடம் எப்பிடியாப்பட்டது?, அவன்ட்ட இன்னென்னா கெட்ட கொணம் இருக்குது, அவன் கூட இருக்கற சொந்தத்துல எவனாச்சும் கேப்மாரி இருக்கானா? இத்தெல்லாம் நல்லா விசாரிச்சுப் பாத்து அப்பாலதான் அவனோட தோஸ்தாவணும்!

குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. [794]


நல்ல குடும்பத்துல ஒர்த்தன் பொறந்துருக்கான்னு வெச்சுக்க, அவன் இந்த பளி, பாவத்துக்கெல்லாம் அஞ்சறனா;..... அவனை கப்புன்னு புடிசுக்கோ! அதுக்கோசறம், அவன் இன்னா கேட்டாலும் மறுப்பு சொல்லாம கொட்த்துட்டு அவனோட சேந்துக்கோ! அவன் சிகரட் புடிக்கக் கூடாதுண்றானா, இல்ல, தெனம் கொறளைப் படிக்கணும்றானா, இது மாரி வேற எதுனாச்சும் கேக்கறனா, அல்லாத்துக்கும் சரி, சரின்னு சொல்லி செஞ்சிடு!

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். [795]


நீ எதுனாச்சும் ராங்கா செய்யணும்னு அவன்ட்ட போய் சொன்னவொடனே ஒன்னை பளாருன்னு அறைஞ்சி, ஒன் மொவத்துல காறித்துப்பி, "அடப் பேமானி! ஒனக்கு ஏன் இப்பிடி புத்தி எத்தையோ திங்கப் போவுது"ன்னு சொல்லி ஒன்னிய அள வெச்சுட்டு, கூடவே, ஒன் மோவாயப் புடிச்சுக்கிட்டு, "கண்ணூ! இத்தச் செஞ்சியின்னா இன்னா ஆவும் தெரியுமா? போலீஸ்காரன் வந்து அப்பிடியே கொத்தா அள்ளிக்கினு பூடுவான்"ன்னு ஒனக்கு நல்லதும் சொல்றானா ஒர்த்தன்! வுடாதெ அவனை! சும்மா கொரங்குக்குட்டி கணக்கா கெட்டியாப் புடிச்சுக்கோ!

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். [796]


இல்லியா; ஒன்னை கெட்ட வளிக்குத் திருப்பி ஒன்னிய மாட்டி வுட்டுட்டு அவன் அம்பேல் ஆயிட்டானா? கவிலிய வுடு! ஒண்ணுமில்லையின்னாலும் இப்ப அவன் யாரு, எப்பிடிப்பட்டவன்னாவுது தெரிஞ்சு பூடிச்சுல்ல! அந்த மட்டும் லாபம்னு எடுத்துக்க! வுடு ஜூட்டு அவன்ட்டேந்து!

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். [797]


அப்பிடிப்பட்ட ஒரு சோமாரிய, 'சனியன் வுட்டுது'ன்னு ஓடறெல்ல? அதான் ஒனக்கு அட்ச்ச லாட்டரி பிரைசுன்னு நெனச்சுக்கொ!

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. [798]


ஒன்ன ஒர்த்தன் சதா மட்டம் தட்டிக்கினே இருக்கானா? இன்னாடா இவன் இப்பிடி நம்மள பேஜார் பண்ணிக்கினே இருக்கானேன்னு நெனைக்க வெக்கிறானா ஒன்ன? அவனோட சேராத! அதேமாரி, ஒனக்கு ஒரு கஸ்ட காலம் வர்றப்ப, கண்டுக்காம அபீட்டு ஆறான் பாரு; அவுனையும் லிஸ்டுலேந்து தூக்கிடு!

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும். [799]


அப்பிடி ஒன்னோட கெட்ட நேரத்துல வுட்டுட்டு ஓடினான் பாரு, அவன் நெனப்பு நீ சாவற காலத்துலகூட வந்து ஒம்மனசைப் போட்டு வாட்டிரும். அப்ப வர்ற, அந்த நெனப்பு இருக்கே, அது அந்த சாவ வுட கலீஜா இருக்கும், மவனெ, ஒனக்கு!

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. [800]


இப்ப இதுவரைக்கும் சொன்ன கெட்ட கொணம் அல்லாம் இல்லாதவனாப் பாத்து அவங்கூட ஃப்ரென்ட்சிப் வெச்சுக்க! அப்பிடி இல்லியா! இன்னா துட்டு செலவானாலும் சரி; இல்ல அவன் இன்னாக் கேட்டாலும் சரி அந்தக் கஸ்மாலத்தக் குடுத்தாவுது, "ஆள வுடுப்பா சாமி"ன்னு அவனக் கட் பண்ணிரு!

இப்பப் புரிஞ்சுதா? ஆர சேத்துக்கணும்? ஆர வெட்டணும்னு?

சரி, சரி, நம்ம கோவாலபொரம் கோயிந்தன் "ஏதோ பிரச்சின மாமூ"ன்னு தகவல் சொல்லி அனுப்பிச்சிருந்தான். நீயும் வா! இன்னான்னு கேட்டுட்டு வருவோம்' என்று சொல்லி உரிமையுடன் என் தோளில் கை போட்டு அணைத்தவாறு வெள்ளையாகச் சிரித்தான் மயிலை மன்னார்!

பெருமையுடன் நானும் அவன் தோளில் என் கையைப் போட்டுக்கொண்டு கூட நடந்தேன்!

போங்க! நீங்களும் உங்கள் நண்பர்களைப் பற்றி ஒரு திறனாய்வு செய்யுங்கள் ஐயன் சொன்னபடி!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP