Tuesday, July 12, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 21


20.

‘என்னமோ புது ரூட்டுன்னு சொன்னியே! ஒரே ஆர்வமா இருக்கு மன்னார்!’ என்றேன் நான்!

‘அதே! ஞானும் விளிக்க நெனைச்சு!’ என்றான் நாயர்.

‘அது ஒண்ணுமில்லேப்பா! இதுவரைக்கும் மனசைப் பாத்து தனக்குக் கிடைச்ச அநுபுதியைப் பத்திச் சொல்லி, இனிமே எப்பிடி ஒயு[ழு]ங்கா இருக்கணும்னு சொல்லிக்கினு வந்தாரில்ல? இப்ப போன ரெண்ட பாட்டுலியும், முருகனோட பெருமையைப் பத்தி சொன்னதும், அப்பிடியே இவரோட நெனைப்பெல்லாம் அந்தக் கந்தன் மேல திரும்பிரிச்சு! ‘நீ இன்னான்னால்லாம் எனக்குக் குடுத்தே கந்தா’ன்னு இப்ப வரப்போற சில பாட்டுங்கள்ல சொல்லப் போறாரு, விசயம் இன்னாமோ ஒண்ணேதான்! ஆனாக்காண்டிக்கும், முருகனைப் பாத்தே பேசற மாரி இந்தப் பாட்டுங்க இருக்கும். அத்தத்தான் சொன்னேன். சரி, சரி, டயத்த வேஸ்ட் பண்ணாம அடுத்த பாட்டைப் படி’ என்றான் மயிலை மன்னார்.

ஆர்வம் இன்னும் அதிகமாக, நானும் படிக்கலானேன்.

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா வுபதே சமுணர்த் தியவா
விரிதா ரணவிக் ரமவே ளிமையோர்
புரிதா ரகநா கபுரந் தரனே.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.

மொதல்ல கடைசி ரெண்டு வரியச் சொல்லிட்டு, மொத ரெண்டு வரியப் படிச்சேன்னா, ஒனக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் புரியலாம். ஆனாலும், இது கொஞ்சம் அபூர்வமான பாட்டு. ஒரு பெரிய சமாச்சாரத்த ரொம்ப அஸால்ட்டாச் சொல்லிட்டுப் பூட்றாரு அருணகிரியாரு!

இப்ப, கடைசி ரெண்டு வரையப் பாப்பம்.

”விரிதாரண விக்கிரம வேள் இமையோர் புரிதாரக நாக புரந்தரனே”

இதுல ஒரு ரெண்டு விசயம் சொல்லி க்கீறாரு அருணகிரியாரு.
“விரிதாரண விக்கிரம வேள்;” “ இமையோர் புரிதாரக நாக புரந்தரனே.”

இந்த விரிதாரண விக்ரம வேளுன்றத, ஆளாளுக்கு ஒருவிதமா அர்த்தம் சொல்றாங்க. விரிஞ்ச தோளைக் கொண்ட வீரனேன்னு சிலபேரு, விரிஞ்ச தோளுல மாலையைப் போட்டுக்கினு க்கீற வீரனேன்னு சிலபேருங்க சொல்ல நான் கேட்டிருக்கேன்! ஆனா, இதோட மெய்யான அர்த்தம் இன்னான்னு இப்ப சொல்றேன் கேட்டுக்க!


விரி தாருன்னா, வெற்றிக்கு அடையாளமா சூட்டற வாகை மாலை.

எப்ப இதும்மாரி மாலை போடுவாங்க?
எதுனாச்சும் சண்டையுல கெலிச்சா, இப்பிடி ஒரு மாலை வந்து ஒன் களு[ழு]த்துல விளு[ழு]ம்.

அதான் அந்த அடுத்த வார்த்தை, ‘ரண’
‘ரணம்’னா சண்டை, போரு.
விக்ரமன்னா வெற்றி அடையுறது.
வேளுன்னா வீரன்.
ஆகக்கூடி, இது விரி-தார்-ரண-விக்ரம-வேள்!

சரியா? இப்ப அடுத்த சொல்லைப் பாப்பம்.
’இமையோர் புரி தாரக நாக புரந்தரனே’

தேவருங்க கண்ணு எப்பவுமே இமைக்காதாம்! அதுனால, அவங்களுக்கு இமையோருன்னு ஒரு பேரு உண்டு.

‘புரி’ன்னா ஊரு.
தர்மபுரின்னு ஒரு ஊர்ரு க்கீதுல்ல, அதுமாரி!

இமையோருங்களோட புரி எது?
தேவலோகம். அதுக்கு ‘நாகம்’னு ஒரு பேரும் க்கீது.

’தாரக’ன்னா, கஸ்டத்தயெல்லாம் போக்கறவன்னு அர்த்தம். சர்த்தானே சாமி’ என சாம்பு சாஸ்திரிகளைப் பார்க்க, அவரும், ‘ஆஹா! அப்படித்தான்!’ என்பதுபோல் கண்ணைக் காட்டினார்.

’புரந்தரன்’ன்னா காப்பத்தறவன்.

இப்ப இந்த வரி இன்னா சொல்லுது?
’இமையோர் நாகபுரி தாரக புரந்தரனே’ இதுக்கு இன்னா அர்த்தம் சொல்லு’ என என்னைப் பார்த்தான் மன்னார்.

தேவர்களோட கஷ்டங்களையெல்லாம் போக்கி, அவர்களுடைய இருப்பிடமான தேவலோகத்தையும் காத்தருள் செய்தவனே’ எனப் புரிகிறது என்றேன்.

கரீட்டு! அப்பிடிப் பண்ணதாலத்தான், இவுரு ‘விரி தார் ரண விக்ரம வேளு!’ வெளங்குதா?’ என்றான்.

சந்தோஷமாகத் தலையாட்டினான் நாயர்!

ரெண்டே வரியுல ஒரு பெரிய கதையையே சொல்லிட்டாரு! ஆனாக்க, இதுக்குள்ளியும் ஒரு அர்த்தம் க்கீது! அத அப்பாலிக்கா சொல்றேன். இப்ப மொத ரெண்டு வரியப் பாக்கலாம்.

’அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்திய ஆ’

கெடைக்கவே கெடைக்க முடியாத ஒரு பெரிய உண்மைப் பொருளு... அதான் அநுபூதி! கந்தனோட அநுபூதி!... கந்தரநுபூதி!

அம்மாம்பெரிய மெய்யான தத்துவத்த, கொஞ்சங்கூடத் தகுதியில்லாத, என்னை, அதக் கேக்கறதுக்கு தகுதியுள்ளவனா மாத்தி, ஒ[உ]பதேசம் பண்ணினியே சாமி! இது எம்மாம் பெரிய அதிசியம்னு ஆச்சரியப்படுறாரு அருணகிரியாரு!

இதுல இன்னா விசேசம்ன்றியா?

பொதுவா, ஒரு பொருளை ஒர்த்தன் கையுல குடுக்கறதுன்னா, நாமள்லாம் ஒண்ணுக்கு ஆயரம் தபா யோசிப்போம். இத்த இவங்கையுல குடுக்கலாமா? குடுத்தா ஒயு[ழு]ங்கா காபந்து பண்ணுவானா? இத்தக் குடுக்கறதால இன்னா லாபம்? இப்பிடில்லாம் யோசிப்போம். அப்பவும் ஒரு ‘டவுட்டோடவேதான் குடுப்போம்! இல்லேன்னா, இவன் இதுக்கு லாயக்கில்லைன்னு சொல்லிட்டு, நீ போயிட்டு வாப்பான்னு அனுப்பிருவோம்.

கொஞ்சங்கூட தகுதியே இல்லாதவன் கையுல போயி ஒரு பத்து லட்ச ரூவாயைத் தூக்கிக் குடுத்துருவோமா? மாட்டோமில்ல?

ஆனாக்க, முருகனோட கருணை எப்பிடியாப்பட்டுதுன்னா, குடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாருன்னா, இவனோட தகுதியப் பார்த்துக்கினு காலங்கடத்தாம, ஒன்னிய அதுக்குத் தகுந்தவனா மாத்தி, ஒன்னாண்டை குடுத்துருவாரு! புரியுதா நான் சொல்றது?

அதாவது, நீ இன்னாமாரி ஆளா இருந்தாலும் சரி! அதப் பத்தியெல்லாம் கவலியே படாம, ஒன்னை அதுக்கு ஏத்த ஆளாவும் மாத்திட்டு, ஒனக்கு குடுத்திருவாரு!

இதான் இந்தப் பாட்டுல சொல்லாம சொல்லி க்கீற சமாச்சாரம்!


இப்ப இந்த தேவருங்கள எடுத்துக்கோ!

இன்னாமா ஆணவம் பிடிச்சு அலைஞ்சாங்க!

அந்த ஆணவத்தையெல்லாம் அடக்க இவங்களைவுட ஆணவம் பிடிச்ச ஒர்த்தன் வந்து அல்லாரியும் ஜெயில்ல தள்ளிட்டான்.

அப்பத்தான் புரிஞ்சுது தாங்க செஞ்ச தப்பு!

முருகந்தான் வந்து நம்மளையெல்லாம் காப்பாத்தப் போறார்னு தெரிஞ்சதும், ‘கந்தா அபயம்! கதிர்வேலா அபயம்’னு இந்திரன்லேர்ந்து அல்லாரும் வந்து காலுல விளு[ழு]ந்தாங்க! அவங்க மேல எ[இ]ரக்கப்பட்டு, அவங்களுக்கு புத்தியக் குடுத்து, சூரனை கெலிச்சு, அவங்க ஊரை அவங்களுக்கே மீட்டுத் தந்தாரு வடிவேலன்!

அதும்மாரியே, பண்ணாத அக்ரமம்லாம் பண்ணிட்டு, இனிமே வேற கெதியில்ல முருகான்னு சொல்லிட்டு கோபுரத்துலேர்ந்து குதிச்சவரைக் காப்பாத்தி, அவருக்கு ஆருக்குமே கெடைக்க முடியாத மெய்ப்பொருளை சொல்லிக் காமிச்சாரு முருகன்!

அதுனால, அந்த இந்திரன் பண்ணினமாரி, "ஓம் சரவணபவ"ன்னு வுடாம செபிச்சுக்கினே இருந்தியானா, ‘யாமிருக்க பயமேன்’னு அந்தக் கந்தன் வந்து அல்லாத்தியும் குடுப்பாருன்னு இதுக்குள்ள ஒரு பெரிய ரகசியத்தச் சொல்லாம சொல்லிட்டுப் பூட்டாரு அந்தப் புண்ணியவான்! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!’ எனச் சொல்லி எழுந்தான் மயிலை மன்னார்!

‘ஓம் சரவணபவ’ என ஜெபிக்கத் தொடங்கினான் நாயர்!

வங்கக் கடலின் வாடைக் காற்று இதமாக வீசத் தொடங்கியது!
*********************
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP