Monday, May 11, 2009

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!


அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குரல் இப்போது வெளிப்படையாக ஒலிக்கத் துவங்கியிருக்கிறது!
எழுபதுகளின் இறுதிக் காலத்திலிருந்து ஈழப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்னும் முறையில் ஒரு சில கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இது முற்றிலும் சரியான கணிப்பு எனச் சொல்ல மாட்டேன்.
ஆனால், எனக்குத் தெரிந்த அளவிலான உண்மைகளை மட்டுமே இங்கு சொல்ல விழைகிறேன்.

இப்போது எல்லா நாடுகளிலிருந்தும் நல்ல வாய்ப்புகளைத் தேடி அயல்நாடுகளுக்குச் செல்வதைப் போலவே, மேற்படிப்புக்காகவோ, அல்லது வேலை வாய்ப்பைத் தேடியோ, இலங்கையிலிருந்தும் பலர் 50, 60-களில் அயல்நாடுகளுக்குச் சென்று ஒரு நல்ல நிலைமையில் இருந்து வந்தார்கள்.

எழுபதின் ஆரம்பத்தில், தமிழருக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்க்க ஈழத்தில் பல தமிழ் அமைப்புகள் தோன்றின.
இவர்களது பாதுகாப்பில் சற்று தைரியமாக உலாவிய ஈழத் தமிழர்கள் மேலும் கொடுமைக்கும் வன்முறைக்கும் சிங்களவரால் ஆட்படுத்தப்பட்டபோது, பலர் அகதிகளாகத் தமிழகத்துக்குக் கள்ளத்தோணி மூலம் வரத் தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் அவர்களின் முழு ஆதரவும் இருந்ததால், அவர் அப்போது மத்திய அரசுக்கும் தோழனாக இருந்ததால், அவரால் இந்த அகதிகளை தமிழகத்தில் குடிவைக்க முடிந்தது.
இப்போது, தமிழ் அமைப்புகளின் வீரர்களும் தமிழகத்துக்குள் தாராளமாக வந்து, பயிற்சிகளும் கூடப் பெற முடிந்தது!

இந்தக் கால கட்டத்தில், இதில் யார் பெரியவன் என்னும் போட்டி வலுக்கவே, அதன் காரணமாக பல சண்டைகளும் தமிழக எல்லைக்குள் நடந்தன!

இதன் எதிரொலி இலங்கையிலும் தெரிய, அதன் காரணமாக அச்சுறுத்தப் பட்ட, அல்லது அச்சப்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் செல்ல முனைந்தனர்.
இந்த நிலையில், சிங்கள அரசும் பல தமிழ் கிராமங்களில் சிங்களவரைக் குடியேற்ற, அதன் கொடுமையிலிருந்து தப்பிக்கவே பல லட்சம் மக்கள் வெளிக் கிளம்பினர் அகதிகளாக!


இதில் பலர் போராளிகளாகவும் மாறி, போராட்டத்தைத் தொடங்க, தங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிய மனமில்லாத சொந்தங்களில் பலர் அங்கேயே தங்கி புலிகளின் பாதுகாப்பில் வாழத் தொடங்கினர்.
அகதிகளாகச் சென்றவரை அலட்சியமாகப் புலிகள் இகழவில்லை என்பதே நான் அறிந்த செய்தி.
மாறாக அவர்களிடமிருந்து பண உதவி, நிலையை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பணி போன்ற உதவிகளை மட்டும் எதிர்பார்த்து, வாங்கிக் கொண்டனர்.
ஒரு சில அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தன என நான் அறிவேன்.

ஆனால், கடந்த 8 மாதங்களாகக் காட்டிவரும் தீவிரத்தை அதற்கு முன்னால் சரியாக இவர்கள் செய்யவில்லை என்பது என் கணிப்பு! கிளிநொச்சி விழும்வரை, புலிகளிடமே அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் எப்படியும் வென்றுவிடுவார்கள் என எண்ணிக்கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே இவர்களின் செயல்பாடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட!

இப்படி அகதிகளாகச் சென்றவர்கள் ஐரோப்பிய, பிரித்தானிய, அமெரிக்க கானடா நாடுகளால் அரவணைக்கப்பட்டு, அவர்களுக்குக் குடியேற்ற உரிமைவரை வழங்கப் பட்டன!

அந்தந்த நாடுகளின் சீதோஷ்ணம், பண்பாடு, வாய்ப்பு, வசதி அனைத்துமே இவர்களுக்குக் கிடைக்க வழி செய்த அந்தப் பெருந்தன்மைக்கு இடையே, இவர்களை வேற்று கிரக மனிதர்போல், தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.

இதற்கு முழுப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்! தமிழக முதல்வர் தட்டிக் கேட்டால் இது நடக்கும். செய்யவில்லை... எம்.ஜி.ஆர். தவிர!

மேலைநாடுகளுக்குச் சென்ற அகதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு வசதிகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே சுகமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரு சிலர் நல்ல நிலையில் இருந்தாலும், இவர்களில் பலர் இன்னமும் அடிமட்ட வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்பதே உண்மை!

ஆம்! இவர்களிடம் நம்மவர் கண்ணுக்குப் பகட்டாகத் தெரியும் ஆடைகள் இருக்கின்றன! ஏனென்றால் அது குளிர் நாடு! அங்கு 'ஜாக்கெட்' என்னும் கம்பளி ஆடை அணியாவிட்டால் விறைத்துப்போய் விடுவார்கள்!
ஆம்! இவர்களிடம் 'கார்' இருக்கிறது! அது ஓட்டைக் காராக இருந்தாலும் அதுதான் இவர்களை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவும் சாதனம் என்பதால்!
இதையெல்லாம் வசதி என எண்ணாதீர்கள்!
அத்தனையும் கடன் கணக்கில்!!
பலர் உணவு விடுதிகளிலும், பெட்ரோல் பங்குகளிலும், சாதாரண வேலை செய்து கொண்டு தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்.

இவர்கள் உடல் அங்கே வாழ்ந்தாலும், அநேகம் பேர் இன்னமும் ஈழக் கனவில்தான் இருக்கிறார்கள்!
தொலைக்காட்சிகள் மூலமாக மட்டுமே தகவல்களைக் கண்டு, தினமும் அழுதுகொண்டிருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்!
அதனாலதான், அங்கு ஏதாவது ஒன்று என்றால் இங்கே வீதிகளில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்!
அதற்கு இந்த நாடுகளின் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதால்!

இவர்கள் ஏன் திரும்பவும் ஈழத்துக்கே சென்று போராடக் கூடாது என ஒரு கேள்வி எழலாம்!

இன்றைய நிலையில் அங்கு கால் வைத்த அடுத்த கணமே கைது செய்யப்பட்டு அழிக்கப்படும் பட்டியலில்தான் இவர்களில் பலர் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இதைத் தவிர, அரசினால் ஆபத்தில்லை என்றாலும், பணத்துக்காக ஆட்கடத்தும் கும்பல்களினால் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து வருமோ எனவும் அச்சப்படுகிறார்கள்.

இறங்கியவுடன், கையில் ஆயுதம் கொடுத்து, நீ போய் உன் உரிமைக்காகப் போராடு எனச் சொல்ல அவர்களுக்கு அங்கே ரத்தினக் கம்பளம் விரித்திருக்கவில்லை.
இந்த நிலையில் அவர்களை அங்கே போகச் சொல்வது விளக்கைத் தேடி விட்டில் பூச்சியை அனுப்புவது போலத்தான் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்!

இன்னொன்றும் எனக்குத் தெரிந்த ஒரு தகவல்!

இவர்களில் 80% பேர் நாளை ஈழம் பிறந்தால் அங்கு செல்ல மாட்டார்கள்!
இந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்த்து வரும் இவர்களில் பெரும்பாலோனோர் என்னிடம் சொல்லிய கருத்து இதுதான்!
அங்கிருக்கும் மக்கள் நன்றாக வாழ இங்கிருந்து என்ன உதவிக்ள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்ய இவர்கள் தயார்! ஆனால் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.

இதுதான் யூதர்கள் நிலையிலும் நடந்தது!

இவர்கள் துரோகிகளா?
நிச்சயம் இல்லை!
தப்பி பிழைத்தவர்களா?
ஆம்!
அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது!

எனவே, இவர்களைத் தூற்றுவதை விடுத்து, இந்தப் பிரச்சினைக்கு என்ன விதத்தில் ஒரு தீர்வு நம்மால் தர முடியும் எனப் பாடுபடுவோம்.
முடியவில்லை என்றால் சும்மாவாவது இருப்போம்!
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் சொல்கிறேன்! இவையெல்லாம் நானறிந்த செய்திகளை வைத்து எனக்குப் பட்ட கருத்தே! இது சரியா, தவறா என மற்றவர் வந்து சொன்னால் மகிழ்வேன்!
நன்றி, வணக்கம்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP