Thursday, July 21, 2011

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 22

'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 22
21.

'ம்ம்..அடுத்த பாட்டைப் படி' என்றான் மயிலை மன்னார்.

கருதா மறவா நெறிகா ணவெனக்
கிருதாள் வனசந் தரவென் றிசைவாய்
வரதா! முருகா! மயில்வா கனனே!
விரதா சுரசூ ரவிபா டணனே!

என நான் படிக்க, அதைப் பதம்பிரித்துச் சொன்னான் மயிலை மன்னார்.

கருதா மறவா நெறி காண எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா! முருகா! மயில் வாகனனே!
விரத அசுர சூர விபாடணனே!

'ரொம்ப ரொம்ப எளிமையா இந்தப் பாட்டுல உருகியிருக்காரு அருணகிரியாரு!
அதே சமயம் கேக்கவேண்டியதை, சொல்லவேண்டிய முறையுல சொல்லிக் கேட்டுமிருக்காரு! அதான் இந்தப் பாட்டோட விசேசம்!

"கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய்?"

முருகனைப் பார்த்ததுக்கப்புறமா இவுருக்கு வேற எதுவுமே கேக்கத் தோணலை!
ஒண்ணே ஒண்ணுதான் மனசுல திரும்பத் திரும்ப வருது !

போறும்ப்பா இந்த ஒலக வாள்[ழ்]க்கை! எனக்கு முத்[க்]தியக் குடுப்பான்னு மட்டுந்தான் கேக்க வருது!

எதுக்கு முத்தி?
முத்தின்னா இன்னா?

சொர்க்கத்துல போயிக் குந்திக்கறதா?
அதான் இல்ல!

முத்தின்னா, முருகனோட காலடியுலியே கெடக்கறது!
ஆருக்குக் கெடைக்கும் இந்த பாக்கியம்?
எப்பவுமே அவனோட காலடியுல விளு[ழு]ந்து கெடக்கறதுன்னா சும்மாவா?
அதுக்கு எம்மாங் குடுத்து வைச்சிருக்கணும்?
அதான் 'கருதா மறவா நெறி'!


அதுக்கப்புறமா எதையுமே கருத வேண்டியதில்ல!
அத்தப் பாத்ததுக்கப்புறமா, அதை வுட்டு வேற நெனைப்பும் இருக்காது!
எப்பவுமே மறக்கவுமே மறக்காது!
அதுக்குள்ளாறயே கெடக்கறப்போ, வேற இன்னா சொகம் வோணும் ஒனக்கு?


எதையுமே கருதாம, எப்பவுமே மறக்காத நெ[நி]லைக்கு இன்னாத்த உதாரணமாச் சொல்லலாம்?


மனுசனாப் பொறந்தா இந்த ரெண்டுமே இருக்கும்!
ஒண்ணுமில்லாத விசயத்தைப் போயி நெனைச்சு நெனைச்சு மருகிக்கினே இருப்போம்!
அதே சமயத்துல, ஒர்த்தன் நமக்குப் பண்ணின நல்லதை மறந்திட்டு, கெட்டத மட்டும் மறக்காமலும் இருபோம்.
மனுசனே இப்பிடின்னா, சூரனைப் போல அசுரனைப் பத்திக் கேக்கவா வோணும்?


தனக்கு வரங்குடுத்த சிவனோட புள்ளதானே இப்ப நமக்கு நல்லது சொல்ல வந்திருக்கான்றத மறந்திட்டு, முருகனோடயே சண்டைக்குப் போனவந்தானே சூரன்!
அப்பிடியாப்பட சூரன் பண்ணின தப்பை மனசுல கருதாம, அவனுக்கும் நல்லது பண்ணினாரு முருகன்!
இத்தத்தான் அடுத்த ரெண்டு வரியுல வைச்சுப் பாடுறாரு அருணையாரு!


அதுக்காவ இன்னாத்தக் கேக்கறாருன்னு பாரு!


முத்தி வோணும்னா, எனக்கு வேற ஒண்ணுமே வேணாம்ப்பா!
ஒரு ரெண்டு தாமரைப் பூவ மட்டும் குடுப்பான்னு கெஞ்சறாரு!
அதென்னா ரெண்டு தாமரைப் பூவு?
அதான் முருகனோட ரெண்டு பாதமும்!
'இருதாள் வனசம்'

'வனசம்'னா தாமரைப்பூ!
ஐயரைக் கேட்டியானா, வனஜம்ன்ற சமஸ்கிருத வார்த்தைன்னு சொல்லுவாரு!


அதுவும் சும்மா லேசுல கெடைச்சிராது!
அதுக்கு அந்த கந்தந்தான் மனசு எ[இ]ரங்கணும்!


எனக்கு முத்தி குடுப்பான்னு இங்க கேக்கல!
தாமரைப்பூ மாரி க்கீற ஒன்னோட ரெண்டு பாதத்தையும் தர்றதுக்கு எப்பப்பா மனசு வைக்கப் போறே! அப்பத்தானே எனக்கு முத்தி கெடைக்கும்னு கெஞ்சறாரு!


எப்பிடிக் கெஞ்சறாருன்னு கெவனி!


'வரதா'ன்றாரு!
வரதன்னா கேட்ட வரத்தத் தர்றவன்!
முருகனை வுட்டா வேற ஆரு கேட்டதுமே குடுக்கறவங்க!
"கந்தா"ன்னா "இந்தா"ன்றுவான் அந்தக் குமரன்!


அடுத்தாப்புல 'முருகா'ன்னு அன்பாக் கூப்புடறாரு!
முருகன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும்!
அதுனால, அதிகமா சொல்ல வேண்டியதில்ல!


சீக்கிரமாவே வந்து கேட்டதயெல்லாம் குடுத்துருவான்னாலும், இவுருக்கு
இன்னும் அவசரம்!


அதுனால, 'மயில் வாகனனே'ன்னு சொல்லிக் காமிக்கறாரு!
அப்பத்தானே 'சட்டுன்னு' கெளம்பி வந்திருவான்னு ஒரு ஆசை இவுருக்கு!


அதுக்கு அப்பால சொல்ற வார்த்தைதான் இதுல உச்சம்!


'விரதாசுர சூர பயங்கரனே'ன்னு ஒரு சொல்லு வுடறாரு!


நான் முந்தி சொன்னேனே அதேதான் இது!


விரதம்னா நாளு கெளமைக்கு நாம இருக்கோமே அந்த விரதமில்ல இது!
ரதம்னா அள[ழ]குன்னு அர்த்தம்~!
விரதம்னா, அளகில்லாததுன்னு புரிஞ்சுக்கணும்!


தனக்குக் கெடைச்ச வரத்தைக் குடுத்தவரோட புள்ளைன்றத மறந்ததுனால, இவனோட பெருமையெல்லாம் போயிருச்சுன்றாரு!
அதுனால, வெறும அசுரனா இருந்தவன், இப்ப விரத அசுரனாயிட்டானாம்!


அதாவது, நல்ல கொணமே இல்லாத ராட்சசன்னு பொருளு!

அந்த சூரனையும் கொல்லாம, ரெண்டாப் பொளந்தாரு முருகன். விபாடணம் பண்றதுன்னா ஒரே போடுல ரெண்டாப் பொளக்கறது! அத்தப் பண்ணினதால விபாடணனேன்னு கூப்புடறாரு! எப்பிடிப் பொளந்தாரு?


மயிலும், சேவலுமா! ஒளியும் ஒலியுமா!


அவனுக்கும் நல்லதுதான் செஞ்சாரு முருகன்!


அதும்போல, கொஞ்சங்கூட நல்லதே இல்லாத எனக்கும், என்னோட இந்த நெனைப்பு,மறப்புன்ற ரெண்டையும் பொளந்து, ஒன்னோட ரெண்டு பாதகமலத்தை எப்பப்பா தரப் போறேன்னு கெஞ்சிக் கேக்கறதுதான் இந்தப் பாட்டுல சொல்லியிருக்கற பெரிய சங்கதி!'
என ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மயிலை மன்னார்!

அவன் சொன்ன வேகத்தில் பிரமித்துப் போய் நாயர், மன்னாரையே பார்த்துக் கொண்டிருந்தான்!


சாஸ்திரிகள் துண்டை எடுத்து, தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக் கொண்டார்!
***********
வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்! அருணகிரியார் புகழ் வாழ்க!
*******************
[ஆர்வமுடன் படித்து, ஆசி வழங்கும் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கங்கள்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP