Monday, October 10, 2011

மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம் -- 30:

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- 30
29.

'இப்பிடி ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குதேன்னு பொலம்பினதும் லேசாக் கோவம் வருது அருணகிரியாருக்கு' எனத் தொடர்ந்தான் மயிலை மன்னார்.

'எதுக்குக் கோபம் வரணும்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன் மன்னார்' என்றேன் நான்.

'சொல்றேன், சொல்றேன்! அதுக்கு முன்னே நீ பாட்டைப் படி' என்றான்.

29.
இல்லே யெனுமா யையிலிட் டனைநீ
பொல்லே னறியா மைபொறுத் திலையே
மல்லே புரிபன் னிருவா குவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே


இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.

ம், ... இப்ப சொல்லு. ஏன் கோபம் வருது அருணையாருக்கு? என்றேன் ஆவலுடன்!

"நீயே நெனைச்சுப் பாரு. ஒரு நல்ல அனுபவத்தைக் காமிச்சாரு கந்தன். இப்பபாட்டைப் பத்திச் சொல்லலாம்னா, சுத்தமா ஒரு நெனைப்பும் வரமாட்டேங்குது. இதுக்கு இன்னா காரணம்னு யோசிக்கறாரு. நெனைப்பு, மறப்பு, நல்லது, கெட்டது, மெய்யி, பொய்யின்னு பலானாது பலானதுல்லாம் ஒரு நாடகம் போல நெறைஞ்சு கெடக்கற இந்த வாள்[-ழ்]க்கையுல சிக்கிக்கிட்டு க்கீறதாலதானே, இப்பிடியில்லாம் எனக்கு நடக்குதுன்னு புரியுது அவுருக்கு!

இத்தப் பண்ணினது ஆருன்னா ... தோ.... மாருல மாலையைப் போட்டுக்கினு சிரிச்சுக்கினு க்கீறானே.... இந்த முருகந்தான்னு தெரிய வருது!

பண்றதெல்லாம் பண்ணிட்டு, கள்ளமா சிரிக்கறான் பாருன்னு ஒரு கோவம் வருது! அதே கோவத்துல இந்தப் பாட்டு வருது!' என்றான் மன்னார்.

'இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே'

இந்த 'இல்'லுன்ற வார்த்தையை ரெண்டு விதமாப் பாக்கலாம்.

இல்லை'ன்ற பொய்யான வாள்[ழ்]க்கைன்னு சொல்லலாம். இப்பிடி ஒரு மாயையுல என்னிய தூக்கிக் கடாசிட்டியே முருகா! சரி, பண்ணினதுதான் பண்ணினே, அதியும் நீதானே செஞ்சே...... அப்ப, நான் பண்ற அயு[ழு]ம்புக்குல்லாம் நீதானே காரணம்! பின்ன, எதுக்காவ என்னியத் தண்டிக்கறே முருகா? இது இன்னா நாயம்? நாந்தான் அறியாதவன்னு தெரியுமில்ல? அத்தக் கொஞ்சங்கூட நெனைப்புல வைச்சுக்காம, இன்னாமோ அல்லாமே நாந்தான் செஞ்சேன்றமாரி, எனக்கு தண்டனை குடுக்கறியே முருகா!'ன்னு சொல்றதா வைச்சுக்கலாம்.

இன்னோரு வாட்டி அந்த 'இல்'லைப் பாத்தின்னா, வீடு, பொண்ஜாதின்னும் ஒரு அர்த்தம் வரும். நாம்பாட்டுக்கு சும்மா 'தேமே'ன்னு கெடந்தவனைப் பிடிச்சு இட்டாந்து இப்பிடி ஒரு மாயாவலையுல சிக்கவைச்சுட்டு, இப்ப அதுல நான் ஏதோ அறியாம பண்ற தப்புங்களுக்கெல்லாம் என்னிய கோவிச்சுக்கறியே, பொறுத்துக்க மாட்டேன்றியே முருகா'ன்னு கேக்கறமாரியும் புரிஞ்சுக்கலாம்.

அதான் இவரோட சொல் விளையாட்டோட மகிமை! இப்ப அடுத்த வரிக்கும் இதுக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பமா?

" மல்லே புரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே"

இதுல இன்னா சொல்லிருக்காரு?

சும்மா மல்யுத்தத்துக்குப் போற ஆளோடதுமாரி க்கீற ஒன்னோட பன்னண்டு தோளுலியும் என்னோட இந்தப் பாட்டுக்களை வைச்சுப் பண்ணின பாமாலையை போட்டுகிட்டு அள[ழ]கு பாக்கற ஜோதிமாரி ஜொலிக்கற வேலவனேன்னு சொல்றாரு!

இது எப்பிடி மேலே சொன்னதோட பொருந்தும்னு யோசி!' என்று நிறுத்தினான்.

'இது தனக்கில்லை; இவனுக்கு வைச்ச பரிட்சைதான்'என்னும் சந்தோஷத்துடன், நாயரும், சாஸ்திரிகளும் என் முகத்தை ஒரு பார்வை பார்த்தார்கள்!

அவர்களது எண்ணத்தைச் சிறிதும் பொய்யாக்க விரும்பாத நான், சட்டென்று, 'அதுல்லாம் தெரிந்தால் நான் ஏன் உன்னைத் தொந்தரவு பண்ணப்போறேன் மன்னார்!' எனப் பரிதாபமாகச் சொன்னேன்!

ஒரு பெரிய சிரிப்பலை அங்கே எழுந்தது!

ஆதரவுடன் என் தோளைத் தட்டிக் கொடுத்தபடி மன்னார் தொடர்ந்தான்.
'மேலாக்கப் பார்த்தா, இது வெறும் ஒரு அலங்கார வார்த்தையாத்தான் தெரியும்.

ஆனாக்காண்டிக்கு , இது ஏதோ வரியை ரொப்பறதுக்காவப் போட்டதில்லை. இதுக்குள்ளாரையும் ஒரு அர்த்தம் இருக்கு.
எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். இது இப்பிடித்தான்னு சொல்லலை. ஆனா, இப்பிடியும் பாக்கலாம்னுதான்....... கேளு'

'முருகா! ஒன்னோட தோளைப் பாத்தியா? மல்லுச்சண்டை, குஸ்தியுல ஜெயிக்கற பெரிய வீரன்மாரி சும்மா 'திண்'ணுனு க்கீது! ஒனக்கு எத்தினி மாலை போட்டாலும் அது தாங்கும்போல!

ஒன்னோட அருளால, ... நீ கொடுத்த வரத்தால... நீ அடியெடுத்துக் கொடுத்துத்தான் நான் இத்தினி பாட்டுங்களை ஒம்மேல பாடித் தள்ளிக்கினு க்கீறேன். அல்லாமே நீ குடுத்த பெருமை! அத்த வைச்சுக்கினு நானும் இன்னான்னாமோ பாடறேன். அதுல்லாம் சரியா, தப்பான்னு கூடப் பாக்காம, நான் பாடுற பாட்டுங்களையெல்லாம், இன்னாமோ பெரிய மாலைங்கமாரி நீ சந்தோசமா வாங்கிக்கினு, அல்லாத்தியுமே ஒன்னோட இந்தக் கட்டுமஸ்த்தான தோளுங்க...... ஒண்ணா, ரெண்டா, பன்னண்டு தோளுங்க... மேல சிரிச்சுக்கினே வாங்கிப் போட்டுக்கறே! குத்தம், கொறை எதுவுமே பாக்காம!

அப்பிடிப் பண்ணற நீ, ஏம்ப்பா இதும்மாரி இந்த மாயையுல என்னை நீயே சிக்கவைச்சு, அதுல நான் பண்ணற குத்தத்துக்காவ, தண்டனையும் குடுக்கறே! ? இது நாயமாப் படுதா ஒனக்கு? ஞானவேலைக் கையுல 'ஜம்'முன்னு வைச்சுக்கினுக்கீறியே,' ன்னு செல்லமா ஒரு சண்டை போடறாரோன்னு படுது' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!

சற்று முன்னர் சிரித்த அனைவரும் மௌனமாகி, இதன் பொருளை உணர்ந்ததுபோல், தலை கவிழ்த்து, 'ஓம் சரவணபவ' என முணுமுணுக்கத் தொடங்கினர்!
**************
[தொடரும்]

வாழ்க சீரடியாரெல்லாம்! முருகனருள் முன்னிற்கும்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP