Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 41


முந்தைய பதிவு இங்கே!


39.
"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

கந்தன் அந்தப் பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்தான்!

இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

புளியமரம் அவனைப் பார்த்து 'இத்தனை நாளா எங்கே போயிருந்தே! வா! வா!' என்பது போல் தன் கிளைகளை ஆட்டியது!

தன்னோட ஆடுகள் அதனடியில் படுத்துறங்கும் காட்சி அவன் மனத்துள் விரிந்தது.

அந்தக் கனவு மட்டும் வராமல் இருந்திருந்தால்....!!!!!!!!!!!

இப்போது ஆடுகள் இல்லை. அவன் கையில் ஒரு கடப்பாறை!

அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனத்துக்குள் இதுவரையில் அவன் கடந்து வந்த காட்சிகள் ஒரு நிழற்படம் போல ஓடியது.
திரும்பத் திரும்ப வந்த அந்த கனவு, அந்த குறி சொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த கிழவர், பணத்தைத் திருடிக் கொண்டு ஓடிய திருடன், அண்ணாச்சி......
இப்படியே அனைவரும் அவன் கண்முன் வந்தனர். எல்லாமே ஒரு காரண காரியத்தோடத்தான் நடந்திருக்கு. எப்படி தவறாக முடியும்? அவன் எண்ணம் இன்னமும் தொடர்ந்தது.

கடைசியாக, மஹாபலிபுரத்தில் அந்தத் திருடன் சொன்ன சொல் அவன் காதில் மீண்டும் ஒலித்தது!

"தெற்கு கோடியில கடலோரத்துகிட்ட இருக்கற ஒரு ஊருல ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூடமேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவன் அவ்ளோதூரம் போவான்!"

சிரித்துக் கொண்டே எழுந்து, கடப்பாறையை எடுத்து அந்த மரத்தடியில் ஒரு போடு போட்டான்!

'பெரிய கில்லாடிய்யா நீ!' வானத்தைப் பார்த்துக் கத்தினான் கந்தன்! 'எல்லாமே உனக்கு அப்பவே தெரியும்! அதான் அந்த துறவிகிட்டக் கூட ஒரு கட்டித் தங்கத்தைக் கொடுத்து வைச்சிட்டுப் போனே! நான் ரத்தம் வழிய, வழிய, அவர் மடத்துக் கதவைத் தட்டினப்ப, அவர் என்னைப் பார்த்து சிரிச்ச சிரிப்பு இருக்கே, அது ஆயுசுக்கும் மறக்காது! என்கிட்ட முன்னேயே சொல்லியிருக்கலாம்ல! ரொம்பவே குசும்புதான்யா உனக்கு!'

"இல்லை! நான் அப்பவே சொல்லியிருந்தா நீ அந்தக் கல்லுக்கோவிலைப் பார்த்திருக்க மாட்டே! அழகா இருந்திச்சுல்லே அது! கூடவே எத்தனை அனுபவங்கள்! " என ஒரு குரல் வானத்திலிருந்து கேட்டது!

நிமிர்ந்து பார்த்தான்! ஒரு அழகிய வெண்புறா தன் சிறகுகளை விரித்தபடி அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது!

'ரொம்பவே லொள்ளுதான் உங்களுக்கு!' எனச் சிரித்தபடியே சொல்லிக் கொண்டே மீண்டும் கடப்பாறையைப் போட்டான் கந்தன்!

ஒரு அரைமணி நேரத்தில் 'ணங்'கென்று எதுவோ தட்டுப் பட்டது!

சிறிது நேரத்தில், ஒரு இரும்புப்பெட்டி தெரிந்தது! அதைத் திறந்தான்! உள்ளே, தங்க நாணயங்கள், நகைகள்!!

தன் கைப்பையில் இருந்து பெரியவர் கொடுத்த அந்த இரு கற்களை எடுத்தான்.

இதற்கு முன் ஒரே ஒரு தடவைதான் அவைகளை எடுத்திருக்கிறான். இவைகளை எடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் அவனுக்கு சகுனங்கள் உதவி விட்டன!

அந்தக் கற்களை மார்போடு அணைத்துக் கொண்டான்.

இப்போது அவைகள்தான் "இதெல்லாம் கனவல்ல; நிஜம்தான்!" எனச் சொல்லிய அந்த தங்கமாலை அணிந்த பெரியவரின் நினைவாக இருப்பவை! அதுவே அவரை மீண்டும் அவன் கண்முன்னே நிறுத்தின,,.... அவரை இனி பார்க்க முடியாதெனினும்!

'இதெல்லாம் கனவல்ல! நிஜம்தான்! வாழ்க்கை எப்போதுமே தான் கண்ட கனவை விடாமல் தொடர்ந்து செல்பவர்க்கு நல்லதையே செய்கிறது!' கந்தனின் மனது துள்ளியது!

குறி சொன்ன கிழவிக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டுமே என்று நினைவுறுத்தியது!

காற்று ஒன்று மெல்ல வீசியது!

ஊழிக்காற்றல்ல அது!

இதமான ஒரு மலைவாசம் அதில் வீசியது!

மூலிகைகளின் மணம் அதில் கலந்து வந்தது!

அதனின்று ஒரு தனி மணம் கமழ்ந்து அவன் இதழ்களில் வந்து முத்தமிட்டது!

கந்தன் சிரித்தான்.

இதுதான் முதல் தடவையாக அவள் அனுப்புவது!

'இதோ வருகிறேன் பொன்னி!' உரக்கக் கத்தினான்!


[முற்றும்]
***********************************************************************************

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நனிய துடைத்து." [353]

****************************************************************

ஒரு மண்டலகாலம் இந்தக் கதை வந்தது ஒரு எதிர்பாராத நிகழ்வு!

தனது 82-ம் பிறந்தநாளைக் கொண்டாடும் "சித்தருக்கெல்லாம் பெரிய சித்தரின் " பிறந்தநாளன்று நிறைவுறுவது இன்னும் சிறப்பு!

இக்கதையை இதுகாறும் தொடர்ந்து படித்து, பின்னூட்டம் அளித்த அனைவர்க்கும் எனது நன்றி.

முன்னமே சொன்னதுபோல இது என் கற்பனையில் உதித்த கதை அல்ல. என்னை மிகவும் பாதித்த 'தி அல்கெமிஸ்ட்' என்னும் கதை இதற்கு ஆதாரம்.

அத்துடன் இன்னும் சில பெரியவர்கள் சொன்ன ஆன்மீகக் கருத்துகளையும் சேர்த்து, நம்மவர்க்குப் புரியும் வகையில் புதிய களம் அமைத்து, நமது தமிழ்க்களத்தில் உலவ விட்டிருக்கிறேன். இதை ஊகித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு என் நன்றி.

உங்கள் கனவுகளைத் தொடர்ந்து தீவிரமாகச் செல்லுங்கள் ! கனவுகள் மெய்ப்படட்டும்!

அன்புவழி அனைவரும் செல்ல வாழ்த்துகள்!

நன்றி தெரிவிக்கும் இந்நாளில் [Thanks giving Day] அனைவர்க்கும் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்!









Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 40

முந்தைய பதிவு இங்கே!

38.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]

"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு." [426]



அக்கம் பார்த்துக் கொண்டே, பயமின்றி நடந்தான் கந்தன்.

கூட சித்தரும் இல்லாததால், தன் மனது என்ன சொல்லுகிறதெனக் கவனிக்கத் தொடங்கினான். புதையல் இருக்குமிடத்தை அதுதான் இனிக் காட்டும் எனவும் நம்பினான்.

"புதையல் எங்கே இருக்குதோ, அங்கேதான் உன் மனசு உன்னை இட்டுச் செல்லும்!' சித்தரின் குரல் உள்ளே கேட்டது.

ஆனால், அவன் இதயம் வேறென்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தது.

'உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு கந்தா! ஒரு சாதாரண சின்னப் பையனா ஆடு மேய்ச்சுகிட்டு இருந்த நீ, எதையெதையெல்லாமோ கடந்துவந்து, இப்ப அநேகமா புதையல் எடுக்கற இடத்துகிட்ட வந்துட்டே! பெரிய கில்லாடிதான் நீ! காத்தாக் கூட மாறிக் காமிச்சிட்டே!' என்று புகழ்ந்தது.

'அதெல்லாம் கிடக்கட்டும். அது நடந்து முடிஞ்ச கதை. அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? நீதான் எனக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கணும் இப்ப' என அதட்டினான்.

'உன் கண்ணுலேருந்து தண்ணி வர்ற அளவுக்கு எங்கே, எந்த இடத்துல உனக்கு ஒண்ணு நடக்குதோ அங்கே நான் இருப்பேன். உன் புதையலும் தான்!' என்று கிசிகிசுத்தது.

மெதுவாக நடந்தான் கந்தன். இரவு தொடங்கி முழுநிலவு வெளிவந்து வெளிச்சத்தைக் கூட்டியது. குளிர்ந்த காற்று இதமாக வீசியது!

ஒரு சின்ன குன்று எதிர்ப்பட்டது. அதன்மீது ஏறினான். அவன் கண்ட காட்சி அவனைப் பரவசப்படுத்தியது!

அழகிய கருங்கடல் அலைகளோடு ஆரவாரித்தது. அதன் கரையருகே அழகிய கற்பாறைகளால் குடைந்தெடுத்த கோவில்கள்! நிலவுவெளிச்சத்தில் எல்லாமே பளபளத்தன.

கந்தனின் கால்கள் தானாக மண்டியிட்டன. தரையை முத்தமிட்டு வணங்கினான்.


கண்களிலிருந்து கரகரவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது!
'எனக்கு ஒரு கனவைக் காண்பித்து, அதை ஒரு பெரியவர் மூலமா உறுதிப்படுத்தி, ஒரு வெள்ளைக்காரன் மூலமா ஆதாரம் கொடுத்து, ஒரு சித்தர் மூலமா அதை அடையவைத்ததற்கும், இறைவா! உனக்கு என் நன்றி! அது மட்டுமா! காதல் நிரம்பிய ஒருவனால் அவன் நினைத்ததை அடைய முடியாமல் போகாது எனத் தனக்குக் காட்டிய ஒரு பெண்ணை எனக்குக் கொடுத்ததற்கும் சேர்த்தே நன்றி!'

மனமார, வாய்விட்டுக் கதறினான் கந்தன்!

இப்படியே திரும்பிவிடலாமா என யோசித்தான்.


'கனவில் கண்டது உண்மைதான் எனத் தெரிஞ்சாச்சு.இப்படியே திரும்பி, பொன்னிகிட்ட போயிறலாம். இருக்கற தங்கத்தை வித்து, கொஞ்சம் ஆடுமாடு வாங்கி, அதை வைச்சு தொழில் பண்ணி மானமா வாழ்ந்திறலாம். இப்ப சித்தருக்குத் தெரியாத வித்தையா? அவர் தங்கம் பண்றதுகூடத் தெரிஞ்சு
வைச்சிருக்காரு. அதுக்காக இதை என்ன, எல்லார்கிட்டயும் போயிக் காமிச்சுகிட்டாரா என்ன? இதைப் பாக்கறதுக்குள்ள, என்னெல்லாம் தெரியணுமோ, அதையெல்லாம் தெரிஞ்சுகிட்டாச்சு. இப்ப புதையலுக்கு என்ன தேவை?' இப்படியெல்லாம் எண்ணம் ஓடியது.

'இவ்வளவு தூரம் வந்தாச்சு. கனவு மெய்ப்படும் நேரம் வந்தாச்சு! இதோ இன்னும் கொஞ்ச தூரம் போனா, எதுக்காக வந்தோமோ அது கிடைக்கப் போகுது. அதில்லாம திரும்பினா, இதுவரைக்கும் பட்ட பாடெல்லாம் வீண்!'என நினைத்துக் கொண்டே கண்களைத் தாழ்த்தி தான் மண்டியிட்ட இடத்தைப் பார்த்தான்.

அவன் கண்ணீர் பட்ட இடம் கண்ணில் பட்டது! ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி எங்கிருந்தோ இந்த நேரத்தில் பறந்து அவன் தோளில் வந்து உட்கார்ந்தது! வண்ணத்துப்பூச்சி பறப்பது ஒரு நல்ல சகுனம் என அவன் மனது சொல்லியது!

சுற்று முற்று பார்த்தான். யாருமில்லை என உறுதிப்படுத்திக் கொண்டபின், அந்த இடத்தைக் கைகளால் பரபரவெனத் தோண்டத் துவங்கினான். அருகில் கிடந்த ஒரு கம்பையும் வைத்துக் கிளறினான். மண் பிரதேசமாக இருந்ததால் தோண்டுவதும் எளிதாகவே இருந்தது!


தோண்டத் தோண்ட மண்ணும், சிறு பாறைகளும் வந்ததே தவிர புதையல் எதுவும் தென்படவில்லை!

அவன் கைகள் வலித்தன. நகமும், சதையும் பிய்ந்து ரத்தம் வர ஆரம்பித்தது.இனியும் தோண்டணுமா என நினைத்தான். மனம் சொல்லியது நினைவுக்கு வரவே, விடாமல் தோண்டினான். ஒரு பாறை ஒன்று கையில் தட்டியது. முனைப்புடன் அதை அகற்றலானான்.

பின்னால் ஏதோ காலடி சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நிலவொளியின் பின்னே வந்ததால் அவர்கள் முகம் சரியாகத் தெரியவில்லை.

'என்ன தோண்டிகிட்டு இருக்கே இங்கே?' ஒரு குரல் அதட்டியது.

பயத்தால் அப்படியே உறைந்தான் கந்தன். பாறைக்குக் கீழே புதையல் இருக்கிறதென நிச்சயமாக ஒரு உணர்வு சொல்லியது. இதை எப்படிச் சொல்வதென மனம் அஞ்சியது.

'என்ன சும்மா இருக்கே? என்னத்தை மறைச்சு வைக்கறே?' அதட்டல் மேலும் அதிகமாகியது.

'நான் எதையும் மறைக்கலை.' கந்தன் சற்று தைரியத்துடன் சொன்னான்.

அவன் பேசியதைக் காதில் வாங்காமல் அவர்களில் ஒருவன் அவனைத் தள்ளிவிட்டு, ஒரு டார்ச் வெளிச்சத்தில் அவன் தோண்டிக் கொண்டிருந்த குழியை ஆராய்ந்தான்.
இன்னொருவன் கந்தனிடம் இருந்த பையைப் பிடுங்கி, அதில் துழாவினான்.

கையில் தங்கக்கட்டி அகப்பட்டது!

'ஏய்! இவன்கிட்ட தங்கம் இருக்குடோய்!' எனக் கூவினான்! கவனமாக அதைத் தன் மடியில் பத்திரப் படுத்திக் கொண்டான்!

'அதான் அந்தக் குழிக்குள்ள மறைச்சு வைக்கறான் போல! தேடுறா' என ஒருவன் ஆணையிட்டான்.

கந்தனையே மீண்டும் தோண்டச் செய்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. கந்தனை அடிக்கத் துவங்கினார்கள், உண்மையைச் சொல்லச்சொல்லி.

ரத்தம் வழிய கந்தன் கீழே சரிந்தான். சாவு நிச்சயம் என நடுங்கினான்.

'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணத்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என சித்தர் சொன்னது நினைவுக்கு வந்தது.

'ஒரு புதையலுக்காகத்தான் இங்கே தோண்டிகிட்டு இருந்தேன்' என உரத்த குரலில் கத்தினான். ' எனக்குக் கனவுல இந்த இடம் தெரிஞ்சுது. குறி சொல்ற ஒரு ஆத்தா கூட இது சரியான இடம்தான்னு சொன்னாரு. அதான் யாருமில்லாத நேரமா வந்து தோண்டிகிட்டு இருக்கேன்'.



அவர்களில் ஒருவன் இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தான்!
'அட, விடுங்கப்பா அவனை. செத்துத் தொலைக்கப் போறான். இவனை மாரி அலையற ரொம்ப ஆளுங்களை நான் பார்த்திருக்கேன். இவங்கிட்ட வேற ஒண்ணும் இல்லைன்னுதான் தோணுது. அந்தத் தங்கந்தான் இவன்கிட்ட இருந்த ஒரே பொருள் போல. அதைக் கூட அவன் திருடினாலும் திருடியிருப்பான். வாங்கடா போவலாம்'
என்று அவர்களில் ஒருவன் சொல்ல, அடிப்பதை நிறுத்தினார்கள்.

அப்படியே தரையில் சாய்ந்தான் கந்தன் அநேகமாக மயங்கிய நிலையில்!

'நீ சாக மாட்டே! பொழைச்சுப்பே! ஆனா, இனிமே உசிரோட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் இப்படி ஒரு முட்டாளா இருந்திட்டோமேன்னு நினைச்சு நினைச்சு புலம்பப் போற! ஏன் சொல்றேன்னா, கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னே,இதே இடத்துல.... நீ நிக்கறியே... அதே இடந்தான்... இந்த இடத்துல எனக்கும் ஒரு கனவு வந்திச்சு! தெற்கு கோடியில கடலுக்குப் பக்கத்துல ஏதோ ஒரு ஊருல இருக்கற ஒரு பாழடைஞ்ச கோயிலுக்கு தெற்கு சுவருக்குப் பின்னால ஒரு பெரிய புதையல் உனக்காக காத்திருக்குன்னு! அங்கே ஆடுல்லாம் கூட மேய்ப்பாங்களாம்! சாமி சிலை கூட அங்கே இருக்காதாம்!அங்கே இருக்கற புளியமரத்துக்கு அடியில தோண்டினா, ஒரு பெரிய புதையல் கிடைக்கும்னு அந்தக் கனவுல சொல்லிச்சு! புத்தி கெட்டவந்தான் இது மாரி கனவையெல்லாம் நம்பிக்கிட்டு அவ்ளோ தூரம் போவான். சும்மனாச்சும் ஒரு கனா வந்திச்சுன்னு எவனாச்சும் அவ்ளோதூரம் போவானா!
அதுமாரித்தான் நீயும்! உன்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கு. எப்பிடியோ போய்த் தொலை!'

அவர்களில் ஒருவன் சொல்லியது அவன் காதுகளில் அரைகுறையாக விழுந்தது.

அவர்கள் மறைந்தனர். கந்தன் தள்ளாடியபடியே எழுந்தான்.

தூரத்தில் கற்கோயில் அவனைப் பார்த்துச் சிரித்தது. அலைகள் சந்தோஷமாக ஆரவாரித்தன!

கந்தன் அதைப் பார்த்து பலமாகச் சிரித்தான்!


மீண்டும் அவன் கண்களில் கண்ணீர் வந்தது..... சந்தோஷத்தால்!

அவனுக்கு தான் தேடிவந்த புதையல் இருக்குமிடம் தெளிவாகத் தெரிந்தது!!

[நாளை "கனவு மெய்ப்படும்!"]!
************************************

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." [423]


"எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு." [426]



அடுத்த அத்தியாயம்




Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 39

முந்தைய பதிவு இங்கே!

37.

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

"நான் கேட்டதுக்கும் மேலேயே நீங்க நிரூபிச்சிட்டீங்க! இனிமே, நீங்க எங்கே வேண்டுமானாலும் போகலாம். உங்களைத் தவறா நினைச்சதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. நீங்க இந்தக் காட்டை விட்டு பத்திரமாப் போக சில ஆளுங்களை உங்களோட அனுப்பறேன். எங்களை ஆசீர்வதிங்க!" என்றான் தலைவன்.

' அப்பாவி மனிதர்களைப் பலி வாங்காத எந்தக் காரியமும் வெற்றி பெறும். அதுக்கு ஆசீர்வாதம்கூடத் தேவையே இல்லை. எங்களுக்கு துணையாக யாரும் வேண்டாம். நீங்க கவனமா இருங்க. இறையருள் எப்பவும் கூடிவரும்!' எனச் சொல்லி சித்தர், கந்தனுடன் கிளம்பினார்.

காட்டைக் கடந்து, வாலாஜாபாத் என்னும் ஒரு ஊரின் எல்லையில் இருந்த ஒரு மடத்தின் வாசலை அடைந்தனர்.

'இதோட என் துணை முடிஞ்சுது. இனிமே நீ தனியாத்தான் போகணும். இங்கேருந்து மஹாபலிபுரம் ஒரு மூணு, நாலு மணிநேரம்தான்' என்றார் சித்தர்.

'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. எத்தனையோ உண்மைகளை எனக்குப் புரிய வைச்சீங்க!' என்று தழுதழுத்தான் கந்தன்.

'உனக்குள்ளே இருந்ததை உனக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர நான் வேற ஒண்ணும் பண்ணலை'என்று சிரித்தார் சித்தர்.

மடத்தினுள் சென்றனர். உள்ளே இருந்த ஒரு துறவி இவர்களை வரவேற்றார். அவருடன் ஏதோ தனியாகப் பேசினார் சித்தர்.

அந்தத் துறவி இவர்களை உள்ளே வரச் சொல்லி, நேராக சமையற்கட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அடுப்பை மூட்டி, ஒரு கடாயை அதன் மீது வைத்துவிட்டு, இவர்களைத் தனியாக விட்டுவிட்டு அகன்றார்.

ஒரு ஈயத்துண்டை எடுத்து அதில் வைத்தார்.

நன்றாக அது சூடாகி, உருகி, ஒரு திரவமாக ஆனபின்னர்,தன் தோளில் மாட்டியிருந்த பையிலிருந்து, ஒரு பளிங்கு போன்ற ஒரு கல்லை எடுத்து, ஒரு கத்தியால் அதிலிருந்து ஒரு சிறு பகுதியை செதிளாக வெட்டி அதில் இட்டார்.

அடுப்பிலிருந்த திரவம் சிவப்பாக மாறியது!

இன்னும் சற்று நேரம் கொதித்த பின்னர், கடாயை அடுப்பிலிருந்து கீழிறக்கி வைத்தார்.

சிறிது நேரத்தில் திரவம் இறுகி ஒரு கட்டியாக மாறியது. ஆனால் ஈயம் அங்கில்லை! தங்கம் மின்னியது!

கந்தன் புன்முறுவல் பூத்தான்.

'என்னாலும் இதுபோல ஒருநாள் செய்ய இயலுமா?' ஆவலுடன் கேட்டான் கந்தன்.

'இது எனக்கான விதி! உன்னுடையது இதுவல்ல! இப்படியும் செய்யமுடியும் என்பதை உனக்குக் காட்டவே இதை நான் உன்னெதிரில் செய்துகாட்டினேன்' எனச் சொல்லியபடியே அதை நான்கு கூறாக வெட்டினார்.

'இடம் கொடுத்து உதவிய உங்களுக்கு இது' என ஒரு பகுதியை அந்தத் துறவியிடம் கொடுத்தார்.

'அப்படி என்ன நான் செய்துவிட்டேன்? இதெல்லாம் ரொம்பவே அதிகம்' எனத் துறவி மறுத்தார்.

'மீண்டும் ஒருமுறை அப்படிச் சொல்லாதீர்கள். இந்த உலக ஆத்மா அதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்தமுறை கிடைப்பது குறையலாம்' சட்டென்று சூடானார் சித்தர்!

துறவி பதிலேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

இன்னொன்றைக் கந்தனிடம் கொடுத்தார்.'இது உனக்கு. நீ இழந்த பணத்துக்கு ஈடாக!' கந்தனும் இது அதிகம் எனச் சொல்ல வாயெடுத்தவன் சட்டென அடக்கிக் கொண்டான்!!
துறவியிடம் சித்தர் சொன்னதை நினவில் கொண்டான்!

'இது எனக்கு! திரும்பிச் செல்ல உதவியாய் இருக்கும்' எனச் சொல்லியபடி அதைத் தனது பைக்குள் வைத்தார்.

நான்காவது பகுதியைக் துறவியிடம் கொடுத்தார். 'இதை வைத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் இந்தப் பையன் இங்கே வந்தால் அவனிடம் கொடுங்கள்!'என்றார்.

'எனக்குத் தான் புதையல் கிடைக்கப் போகுதுன்னு சொன்னீங்களே!' எனக் குழம்பினான் கந்தன்.

'அது நிச்சயம் கிடைக்கும் உனக்கு!'

'அப்படீன்னா இது எப்படி எனக்குத் தேவைப்படும்?'

'ஏற்கெனவே நீ இரண்டு முறை உன்னுடைய பொருளையெல்லாம் தொலைச்சிட்டே! மதுரையில ஒரு திருடன்கிட்ட, இன்னொரு தடவை அந்தக் காட்டுல! ஒரு தடவை நிகழ்ந்தா, அது மறுபடியும் நடக்க வாய்ப்பில்லை; அதுவே, இரண்டு தடவை நடந்தா, கண்டிப்பா மூணாவது தடவையும் நடக்கும்னு எனக்குள்ள ஒரு நம்பிக்கை!' என ஒரு அர்த்தமுள்ள சிரிப்புடன் சொல்லியபடியே கிளம்பினார் சித்தர்!

கந்தனும் பின் தொடர்ந்தான்.

'இனிமே உன் வழி அந்தப் பக்கமா! என் கூட இல்லை. ஒண்ணை மட்டும் நினைவில் வைச்சுக்கோ. என்ன ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் சரி,ஒருத்தொருத்தர் செய்யற ஒவ்வொரு காரியமும் இந்த உலகத்தோட சம்பந்தப்பட்டிருக்கு. சில பேருக்கு இது புரியும். ரொம்பப் பேருக்கு புரியாமலே போயிடுது.

ஒரு காகிதத்தை குப்பைத்தொட்டியில போடாம தெருவுல எறியறதுலேர்ந்து, அதையே பொறுக்கி அந்தக் குப்பைத் தொட்டியில் ஒழுங்க போடறவரைக்கும், எத்தனையோ இப்படி உலகத்தைப் பாதிக்கிற, மேம்படுத்தற காரியங்களைச் செய்யறோம். என்ன செய்யறோம் என்பதில் கவனமா இருந்தா, நடக்கறதுல்லாம் நல்லதா நடக்கும். போய் வா!'

அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.

"நான் திரும்பவும் உங்களைப் பார்ப்பேனா?" கேட்கும் போதே அவன் குரல் தழுதழுத்தது.

"இறையருள் இருந்தால் எதுவுமே நடக்கும்! இனிமேல் என் துணை தேவையில்லை உனக்கு. நீதான் கத்துகிட்டதை தொடர்ந்து விடாம செஞ்சு வரணும். எனக்காக ஒரு ஜீவன், அதான் உங்க நண்பன் ராபர்ட், அங்கே காத்துகிட்டு இருக்கான். அவனுக்கு ஒரு வழி காமிச்சிட்டு அடுத்ததைப் பார்க்கப் போகணும். இருக்கும்வரை கடமைகள் தொடர்ந்து வரும்.
எது விதிக்கப்படுதோ, அதைச் செய்ய மட்டும் மறந்திடாதே! நல்லபடியா போயிட்டுவா!"

அவரை ஒருமுறை விழுந்து வணங்கினான் கந்தன்.

நிமிர்ந்து நன்றாக உள்வாங்கினான் அவர் திருவுருவை.

திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான்.

[தொடரும்]
***************************************
"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." [26]

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38

முந்தைய பதிவு இங்கே!


36.

"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]

காற்றின் வேகம் தாங்க முடியாமல், காடு தவித்தது.

மிருகங்கள் பதுங்கின.

இந்த திடீர் மாற்றத்தை உணரமுடியாமல், வழக்கமாகப் பறந்துவிடும், பறவையினங்கள் ஒடுங்கின.

தலைவனின் கூட்டமும் இதன் வேகத்தைக் கண்டு மிரண்டது.

'இதை நிறுத்தச் சொல்லலாமே' என ஒருவன் கத்தினான்.

'ஆமாம். அதான் சரி. சித்தரை நிறுத்தச் சொல்லுங்க!' என இன்னொருவன் ஆமோதித்தான்.

'நம்ம சவாலே அந்த சித்தர் தன்னையே காத்தா மாத்திக் காட்டணும்ன்றதுதான்! இப்ப வீசறது காத்துதான். சித்தரில்லை! அவர், அதோ, அங்கே நிக்கறாரு. என்ன என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!'


தலைவன் மட்டும் உறுதியாக நின்றான். அதே சமயம் அவன் கண்கள் முன்பு பேசிய அந்த இரண்டு பேரையும் குறித்துக் கொண்டன.

'இது முடிஞ்சதும் முதல் வேலையா, இவனுக ரெண்டு பேரையும் கவனிக்கணும். பயப்படற ஆளுங்க நம்ம இயக்கத்துக்கு லாயக்கில்லை' என எண்ணிக் கொண்டான்!
----------------

'காத்து சொல்லுது,... உனக்குத்தான் அன்பைப் பத்தி நல்லாத் தெரியுமின்னு! அது தெரியும்னா, உனக்கு இந்த உலகத்தோட ஆத்மாவையும் தெரியணுமே! ஏன்னா, அதுவும் அன்புதான்'


என்று காற்று எழுப்பிய புழுதியில், சற்றே மங்கலாகத் தெரிந்த சூரியனைப் பார்த்துக் கேட்டான், கந்தன், தன் கண்களை இடுக்கியபடி!

'நான் இருக்கற இடத்திலேர்ந்து என்னால அந்த ஆத்மாவைப் பார்க்க முடியுது.

என் மூலமாத்தான் அது இந்த உலகத்தைப் பாதுகாக்குது!

மரம், செடி, கொடி, பறவை, மிருகம், மனுஷன், வெயிலு,நிழலு எல்லாமே எங்களாலதான் வருது.

எவ்வளவோ தூரத்துல நான் இருந்தாக் கூட,எனக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு இருக்கு.

இப்ப நான் இருக்கற இடத்துலேர்ந்து கொஞ்சம் கிட்ட வந்தாக்கூட, இந்த பூமியில இருக்கற எல்லாமே வெந்து சாம்பலாயிடும்.

அந்த ஆத்மாவும் அழிஞ்சிடும்.

ஆனாலும், எங்களுக்குள்ள ஒரு பரஸ்பரம் அன்பு இருக்கு.
அதுக்காக நான் இந்த உலகத்துக்கு வெப்பத்தையும், உயிரையும் கொடுக்கறேன்; அது எனக்கு நான் வாழறதுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்குது'
என்று சூரியன் பேசியது!

'அப்படீன்னா, உனக்கும் அன்பைப் பத்தித் தெரியும்னு சொல்லு!' என்றான் கந்தன்.

'நானும் இந்த உலக ஆத்மாவும் இதைப் பத்தி நிறையவே பேசியிருக்கோம். அதோட கவலை என்னான்னா, இந்த உலோகங்களையும், தாவரங்களையும் தவிர மத்த எல்லாருமே, தாங்கள்லாம் ஒண்ணுதான்னு புரிஞ்சுக்கலியேன்னுதான்.

ரொம்ப வருத்தம் அதுக்கு!

இரும்பு இரும்பா இருக்கு, வெள்ளி வெள்ளியா இருக்கு, தங்கம் தங்கமாவே!
எதுவும், தான் இன்னொண்ணா மாறணும்னு ஆசைப்படறதில்லை.


'நீரளவே ஆகுமாம் நீராம்பல்'னு, தாவரங்களும் அதே மாதிரிதான்!

இந்த மனுஷங்களும், மிருகங்களும்தான் இன்னும் அதைப் புரிஞ்சுக்காம, ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு,.. ஒத்துமையா இருக்க மறுக்கறாங்க....' என சற்று வருத்தத்துடன் பேசியது சூரியன்.

'அப்படியே இருந்தா என்ன பயன்? எல்லாத்துக்குமே ஒரு விதி இருந்தாக்கூட, எல்லாரும் அதுவே போதும்னு இருந்திடக்கூடாது. அடுத்த நிலை என்னன்னு அதுக்குப் போக முயற்சி பண்ணனும். விதியை மாத்தணும்!எல்லாரும் ஒண்ணாகணும்! இந்த உலக ஆத்மாவோட ஒண்ணாப் போகணும்! அதுதான் சித்துவேலை!

ஒவ்வொருத்தரும் ஒரு தேடலை எடுத்துக்கணும்; முயற்சி பண்ணி அதைக் கண்டுபிடிக்கணும்; போன ஜன்மத்துல இருந்ததைவிட, இன்னும் கொஞ்சம் மேல் நிலைக்கு வர தொடர்ந்து முயற்சிக்கணும். தன்னோட தேவைகளை குறைச்சுகிட்டு, ஒண்னுமில்லாம ஆகி, 'சரி, இனிமே இப்படியே இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. நாம அடுத்த நிலைக்குப் போகணும்னு உழைக்கணும். அதைத்தான் சித்தருங்க நமக்குக் காட்டறாங்க!

இப்ப இருக்கறதை விட உசர ஆரம்பிக்கறப்ப, நாம மட்டும் இல்லை,
கூட இருக்கறவங்களும் நம்மளோட சேர்ந்து உசருவாங்க'ன்னு புரிய வைக்கறாங்க. இப்ப நான் உன்கிட்ட நின்னு பேசறதுக்குக் கூட அதான்.... அந்த அன்புதான் காரணம்!'

கந்தன் சொன்னதைக் கேட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தது சூரியன்.

'எனக்கு எப்படி அன்புன்னா தெரியாதுன்னு சொல்றே?' எனக் கேட்டது.

'ஒரே இடத்துல இருக்கற காடோ, கண்ட இடமெல்லாம் சுத்தற காத்தோ, இல்லை உன்னை மாதிரி எல்லாத்தையும் தொலைதூரத்துலேருந்து பாக்கற உனக்கோ அன்பு, காதல் இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை!


அன்புன்றது, இந்த உலகத்தோட ஆத்மாவுக்கு ஏதாவது நல்லது பண்றதா இருக்கணும்.


நானும் இந்த ஆத்மாவைப் பாத்திருக்கேன்!

என்னமோ அது ரொம்ப சுத்தமானதுன்னு நினைச்சிருந்தேன்.

ஆனா, அதுக்கும் சராசரி ஆசா பாசங்கள் எல்லாம் இருக்குது!

அதுக்கு தீனி போடறது யாருன்னு பார்த்தேன்.

அது வேற யாருமில்லை!

நாங்கதான்!

எங்க நடத்தையைப் பொறுத்துதான் அதோட நல்லது, கெட்டது எல்லாமே நடக்குது.

இங்கதான் அன்போட சக்தி தெரிய வருது.

நாங்கள்லாம் அன்புவழியுல நடந்தா, இந்த உலகமும் அப்படியே மாறிடும்.'

'அப்போ, என்கிட்ட என்னதான் எதிர்பார்க்கற?' சூரியன் புரியாமல் விழித்தது!

'என்னை ஒரு காத்தா மாத்த உதவி பண்ணனும்!' தைரியமாகக் கேட்டான் கந்தன்!

'எல்லாமே தெரிஞ்சவன்னு என்னை சொல்லுவாங்க. ஆனா, எனக்குக் கூட உன்னை காத்தா மாத்தறதுக்கு என்ன வழின்னு தெரியலியே'

'அப்போ யாரைக் கேக்கணும்?'

காற்று இவர்களின் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது! 'எல்லாம் வல்ல' என இன்றுவரை நினைத்திருந்த சூரியனாலும் கூட முடியாதது என ஒன்று இருக்கிறதே! இதை இப்படியே மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கணுமே !' எனக் கவனித்தது.

'படைச்சவனைத்தான் கேக்கணும்!' என்றது சூரியன்.

காற்றுக்கு ஒரே குஷி! இன்னும் பலமாக வீசியது! கீழிருந்த கூட்டம் அஞ்சி நடுங்கியது. மரங்களின் அடியில் சென்று பதுங்கினார்கள்.

கந்தன் தன் பார்வையை "படைத்தவனை" நோக்கித் திருப்பினான். இந்த உலகமே அமைதியானதை உணர்ந்தான். அவனாலும் பேச முடியவில்லை.


இனம் புரியாத ஒரு அன்பு ஊற்று அவன் இதயத்தில் இருந்து கிளம்புவதாக உணர்ந்தான். அப்படியே அவனை அறியாமல் விழுந்து கும்பிட்டான். இதுவரையிலும் அவன் செய்யாத பிராத்தனை அவனுள்ளில் இருந்து புறப்பட்டது. வார்த்தைகள் இல்லை அதிலே! தனது ஆடுகளுக்காகவோ, அண்ணாச்சிக்காகவோ... ஏன்.... பொன்னிக்காகவோ கூட அவன் பிரார்த்தனை அமையவில்லை.அந்தப் பிரார்த்தனையின் போது அவனுக்குஒன்று புலப்பட்டது..

"இந்தக் காடு, காற்று, சூரியன் இன்னும் எல்லா ஜீவராசிகளுமே தனக்கென விதிக்கப்பட்ட வழியில் செல்ல முயற்சிக்கிறது என்ற உண்மை அவனை பலமாகத் தாக்கியது.
அந்த வழியெங்கிலும் பல்வேறு நற்சகுனங்கள் அவரவர்க்குத் தெரிகிறது. அதை எடுத்துக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்துகிறவர்கள் சிலரே!தனது படைப்பின் ரகசியம் என்னவென எவருக்குமே தெரியவில்லை. படைத்தவன் ஒருவன் மட்டுமே இதையெல்லாம் தீர்மானிக்கிறான். அவனால் மட்டுமே அதிசயங்கள் நிகழ்த்த முடியும்.
கடலைப் பாலைவனமாக்க முடியும்; மனிதனைக் காற்றாக்க முடியும்! இந்த உலத்தின் ஆத்மாதான் அந்தப் "படைத்தவனிடமும்" வியாபித்திருக்கிறது. அதுதான் தன்னுள்ளும் நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்தால், தன்னாலும் அதிசயங்கள் நிகழ்த்த முடியும்"
என!

அவன் எழுந்தான்!
காற்றானான்!
அனைவரும் இதைக் கண்டனர்!
காற்று பலமாக வீசியது!
சிறிது நேரம் கழித்து அது குறைய ஆரம்பித்தபோது, கந்தன் ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தனர்.


அவர்களால் இந்த மாயத்தை... சற்றுமுன் காற்றோடு காற்றாக எழுந்தவன், இப்போது தனியே நின்றுகொண்டிருக்கும் அதிசயத்தை... நம்பவே முடியவில்லை!

சித்தர் மட்டும் வாய்விட்டு ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்!

தான் தேடிக்கொண்டிருந்த சீடன் கிடைத்துவிட்டான் என்ற திருப்தி அவர் சிரிப்பில் வெளிப்பட்டது!


[தொடரும்]
*************************************
"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]



அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

முந்தைய பதிவு இங்கே!


35.

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]

அந்தக் காட்டை ஊடுருவி அவன் பார்வை சென்றது.

ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், பறவையும், மிருகமும் அவனுக்குப் புலப்பட்டது.

இதுவரை தன் வாழ்வில் குறுக்கிட்ட அத்தனை மனிதர்களும்..... செல்லி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த பெரியவர், வழிப்பறி செய்த இளைஞன், அண்ணாச்சி, ராபர்ட், காத்தான், பொன்னி, முத்துராசா, மாயன் பூசாரி, இன்னும் எல்லாருமே கண்ணில் தெரிந்தார்கள்.

'ரெண்டு நாளா என்னையே தானே பாத்துகிட்டு இருக்கே! பத்தலியா? இன்னும் என்ன அப்படி ஒரு பார்வை!' காடு பேசியது அவனுக்குக் கேட்டுத் திடுக்கிட்டான்.

'உன்னைத் தாண்டித்தான் நான் விரும்பற அன்பு எனக்காக காத்துகிட்டு இருக்குது. அவளைக் கூட என்னால பார்க்க முடியுது இப்ப! அவகிட்ட நான் போகணும்னா, உன்னோட உதவி எனக்குத் தேவை. இப்ப நான் ஒரு காத்தா மாறி அவகிட்ட போகணும்' கந்தன் தன்னையுமறியாது காட்டுடன் பேசினான்.

'அன்பா? அப்படீன்னா என்ன?' காடு கேட்டது.

இங்க இருக்கற எல்லா ஜீவராசிகிட்டயும் நீ காட்டறதுக்குப் பேருதான் அன்பு. உன்னோட ஒவ்வொரு மூலை முடுக்கும் அதுங்களுக்கு தெரிய வைக்கறே. அததுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணறே. இங்கே சண்டை கிடையாது. எல்லாருக்கும் சமமா உன்னோட அன்பைப் பங்கு போட்டுக் கொடுக்கறே. எலிக்கு கிழங்கு, பாம்புக்கு எலி, புலிக்கு மான், .... இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கே. எல்லாரும் அதை ஒத்துகிட்டு, தன்னைக் காப்பாத்திக்கப் பாத்துக்குது. அடுத்தவங்க விஷயத்துல தலையிடறதில்லை.'

'அதுக்குப் பேருதான் அன்பா?' என்றது காடு.

'ஆமாம், தன்னைக் கொடுத்து அடுத்தவங்களை வளக்கறதுக்குப் பேருதான் அன்பு. இங்க அதான் நடக்குது. மரத்தால மிருகம், மிருகத்தால மனுஷன், மண்ணிலேருந்து உலோகம், ஏன்.....தங்கம் கூட! எதுவும் தனக்குன்னு வைச்சுக்காம கொடுக்கறதுக்குப் பேருதான் அன்பு.'

'நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியலை, போ!'

'எதுவும் புரியலேன்னாலும், எனக்காக ஒரு பொண்ணு காத்துகிட்டு இருக்குது. அதுகிட்ட போறதுக்கு நான் ஒரு காத்தா மறணும். அதுக்கு நீதான் உதவி பண்ணனும்! இது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். உன் உதவி எனக்குக் கிடைக்கும்! ' என்றான் கந்தன்.

காடு சிறிது நேரம் ஒண்ணும் சொல்லாமல் யோசித்தது.

'வேணும்னா இங்க இருக்கற மரங்களை அசையச் சொல்லி காத்தை வரச் சொல்றேன். நீ அதுகிட்டயே கேட்டுக்க. எனக்கு வேற ஒண்ணும் தெரியாது' என்ற காடு, மரங்களை அசையச் செய்தது. ஒரு சிறிய தென்றல் வீசத் தொடங்கியது.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் மெதுவாகச் சிரித்தார்.
--------
காற்று மெதுவாக வந்து அவனைத் தொட்டது! அவன் முகத்தை வருடியது.

காற்று ஒன்றுதான் எங்கும் இருக்கும் ஒன்று. அதனால், காற்றுக்கு எல்லாமே தெரியும் என்பதால், காட்டோடு இவன் பேசியதும் காற்றுக்கு தெரிந்துதான் இருந்தது.

எங்கு பிறந்தோம், இறப்போம் என்ற ஒன்றும் இல்லாத காற்று, எல்லாமுமே அறியும்!

'நீதான் எனக்கு உதவி செய்யணும்' என்றான் கந்தன்.

'இப்படி எங்களோடெல்லாம் பேச எப்படி உனக்குத் தெரிஞ்சுது?' என்றது காற்று.

'என் மனசு!'

'நீயும் நானும் வேற வேற! நீயெல்லாம் காத்தா மாறுவதெல்லாம் ஆவற கதையில்லை!'

'அதெல்லம் பொய்யி. எனக்கு ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்திருக்காரு.
எனக்குள்ளேயே இந்த பஞ்சபூதங்களும் இருக்கு. அதனால உண்டான எல்லாவிதப் பொருள்களும் ஏதோ ஒரு விதத்துல.... அது கடலோ, மலையோ, இல்லை காத்தோ..... எதுன்னாலும் சரி, என்கிட்டயும் இருக்கு. எல்லாமே ஒரே ஒரு பரம்பொருளாலத்தான் படைக்கப் பட்டிருக்கு. அதனால, நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரே ஆத்மாதான் இருக்கு. இப்ப எனக்கும் உன்னைப் போலவே ஆகனும்னு ஆசையா இருக்கு.எல்லா இடத்துக்கும் போகணும், அந்த வேகத்தால என்னோட புதையலை மறைஞ்சிருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கணும். என்னை விரும்பற பொண்ணுகிட்ட போகணும். அது
முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!'
என்று ஒரு புதுவிதத் தைரியத்துடன் சொன்னான் கந்தன்.

'அவர் சொன்னதை நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். அவர் இன்னொண்ணும் சொன்னாரே! எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு அதை மீற முடியாதுன்னு! அதைக் கேக்கலியா நீ? நீ காத்தா மாறறது முடியாத காரியம். ' எனச் சொல்லிச் சிரித்தது காற்று.

'ஒரு கொஞ்ச நேரத்துக்காவது நான் காத்தோட காத்தா இருக்கறது எப்படின்னு கத்துக் கொடு. மனுஷனும், காத்தும் சேர்ந்தா, என்னவெல்லாம் பண்ணலாம், பண்ணமுடியும்னு நான் உனக்கு சொல்றேன்' என அதன் ஆவலைத் தூண்டினான்.

காற்றுக்கும் ஆவல் அதிகமாகியது. 'தன்னால் ஒரு பெரிய காட்டையே வீசி சாய்க்க முடியும்; ஆழ்கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டுபண்ணி, பெரிய பெரிய கப்பல்களையெல்லாம் கூட சின்னாபின்னமாக்க முடியும்; எங்கேயோ பாடற இசையை, இன்னொரு நாட்டுல கேக்கவைக்கமுடியும்; இன்னும் என்னென்னவோ செய்ய முடியும்! ஆனா, இவன் புதுசா என்னமோ சொல்றானே. ஆனா, அதுக்காக இவனைக் காத்தா மாத்துன்றானே. அது முடியாத காரியமாச்சே' என அவனை இரக்கத்துடன் பார்த்தது.




அது யோசிக்கத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கந்தன் இன்னும் கொஞ்சம் அதை அசைக்க எண்ணி, மேலும் பேசினான்!

'இதான்... இதான்! இதான் அன்புன்னு சொல்றது! இவனுக்கு எதுனாச்சும் செய்யணுமேன்னு நினைக்கறியே, அதான் அன்பு! ஒருத்தரை நேசிக்கறப்ப, எதுவுமே முடியாத காரியம் இல்லை! ஏன்னா, அப்போ அந்த உள்ளம் உருகுது. எல்லாமே உள்ளுக்குள்ளியே நடக்கத் தொடங்குது. அப்போ அதால எதையும் பண்ணமுடியும்னு ஒரு தீவிரம் வரும்.'அன்பின் வழியது உயிர்நிலை'ன்னு எங்க ஆளுகூட ஒருத்தர் பாடியிருக்காரு!' பேசிக்கொண்டே இருந்தவன் கொஞ்சம் அதிகமாப் பேசிட்டோமோ என நினைத்து, சட்டென,


' ஆனா எல்லாத்துக்கும் காத்தோட தயவு இருந்தாத்தான் நடக்கும்'
என முடித்தான்.

காற்றுக்கு திடீரெனக் கோபம் வந்தது. ஒரே ஊதாய் ஊதி இவனை அப்படியே ஒரு தூக்கு தூக்கிடலாமான்னு நினைத்தது! 'சே! அப்படி பண்ணினாக் கூட என்ன பிரயோஜனம்? அதுக்குப் பதிலா இவன் சொல்ற மாதிரி செஞ்சா என்ன? இப்ப, இவனை எப்படி காத்தா மாத்தறது, அன்புன்னா என்ன? இதெல்லாம் நமக்கு தெரியலியே' என எண்ணியது. கோபம் இன்னும் அதிகரித்தது.

'நான் சுத்தாத இடம் இல்லை இந்த உலகத்துல. எந்த மூலை முடுக்குக்குப் போனாலும், எல்லா இடத்துலியும், இந்தக் காதல், அன்பு, பாசம்னு பேசறாங்க! பேசிட்டு அப்படியே அண்ணாந்து வானத்தைப் பாக்கறாங்க! ஒருவேளை, வானத்தைக் கேட்டா அதுக்குத் தெரியுமோ என்னமோ!' என்று எண்ணியது!, 'சே! தனக்கு இது தெரியலியே; அதையும் இவனிடம் ஒப்புக் கொள்ளும்படியாப் போச்சே!' என்ற அவமானத்தில் மிகுந்த கோபத்துடன் கத்தியது!

காற்று பலமாக வீசியது அங்கு!

'அப்படீன்னா ஒண்ணு பண்ணு! நீ இப்ப ஒரு பெரிய காத்தா மாறி, வீச ஆரம்பி! அதுல கிளம்பற புழுதில, இந்த சூரியனோட வெளிச்சம் என் கண்ணை மறைக்காது! என்னாலியும் வானத்தை நல்லாப் பார்க்க முடியும்!' என்றான் கந்தன்!

'இது நல்ல யோசனையாய் இருக்கே' என்று மகிழ்ந்த காற்று தன் தீவிரத்தைக் கூட்டியது! வெகு வேகமாகத் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு ஒரு சூறாவளியாய் மாறியது! 'ஹோ'வென்ற சத்தத்துடன்,
பேரிரைச்சலைக் கிளப்பி வீசத் தொடங்கியது!

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தர் வாய் விட்டு சிரிக்கத் துவங்கினார்!

[தொடரும்]
************************************

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று." [678]




அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 36

முந்தைய பதிவு இங்கே!


34.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]



ஒரு நாள் சென்றது.

ஒன்றுமே நடக்காதது போல், சித்தர் அங்கிருந்த ஆட்களுடன் கதையடித்துக் கொண்டிருந்தார்! கந்தனைக் காட்டி வேறு எதையோ சொல்லிச் சிரித்தார். அவர்களில் ஒருவன் ஒருசமயத்தில் கந்தனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடக் கூட செய்தான்.

தியானம் செய்வது போல உட்கார்ந்திருந்த கந்தனுக்கு, ஆத்திரமும், அழுகையும் பொத்துக் கொண்டு வந்தன!

சற்று நேரம் பொறுத்து சித்தர் அவன் பக்கமாய் வந்த போது, ' ஒருநாள் ஆயிப்போச்சு! இன்னும் ஒருவழியும் தெரியலியே' என ஆதங்கத்துடன் பகிர்ந்தான்.

'நான் சொன்னது நினைவிருக்கில்ல?
கண்ணுக்கு எதுத்தாப்பல தெரியற இந்தப் பரந்த உலகம் கடவுளோட ஒரு அம்சம். ஒரு சித்தன் என்ன பண்ணறான்னா, இந்த அம்சத்தை, கண்ணுக்குத் தெரியாத தெய்வீக நிலையோட பார்த்து, அப்படியே ரெண்டையும் ஒரே தட்டுல கொண்டுவந்து அனுபவிக்க ஆரம்பிப்பான்!'

சொல்லியவாறே, தன் தோளில் வந்து உட்கார்ந்த கழுகைத் தடவிக் கொடுத்தார்.

'என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க. இங்க நான் உசிருக்குப் போராடிகிட்டு இருக்கேன். நீங்க ஒண்ணுமே நடக்காத மாரி, கழுகோட கொஞ்சிகிட்டு இருக்கீங்களே? இன்னும் ரெண்டு நாளுல நாம ரெண்டு பேரும் உசிரோட இருப்போமான்னே சந்தேகம்! அதைப் பத்தி யோசிங்க' என கோபமாகக் கத்தினான்.

'உஸ்ஸ்ஸ்ஸ்! மெல்லப் பேசு! அநேகமா நீதான் செத்துப் போவேன்னு நினைக்கறேன்' என்றார் விஷமமாகச் சிரித்தபடி!

'ஏன் அப்படி?' என பயம் கிளம்பி நெஞ்சை அடைக்கக் கேட்டான் கந்தன்.

'ஏன்னா,....எனக்கு எப்படி காற்றா மாறுவதுன்னு தெரியும்!' எனச் சொல்லியபடியே கழுகை எடுத்துப் பறக்க விட்டார் சித்தர்!
---------------

இரண்டாம் நாள்!


கந்தனின் பயம் அதிகரிக்கத் தொடங்கியது. அவன் மனசும் கூடச் சேர்ந்து கொண்டது அவனது பயத்தில்!

உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல், மெதுவாக எழுந்து நடந்தான்.

இரண்டு ஆட்கள் அவன் போவதைப் பார்த்து அவனைப் பின் தொடர ஆரம்பித்தனர்.

சித்தர் அவர்களை ஒரு பார்வைபார்த்து, அவன் எங்கியும் போகமாட்டான் என்பது போல சைகை செய்ய அவர்கள் சித்தரின் அருகில் அமர்ந்தனர்.

கால் போன போக்கில் என்னென்னவோ யோசித்தபடியே நடந்தான்.
ஒரு வழியும் புலப்படாமல், கந்தன் திரும்பி வந்தான்.


மொத்தக் காடும் அவன் பயத்தை எதிரொலிப்பது போல் அவனுக்குத் தோன்றியது.

சித்தர் கண்களை மூடி தியானத்தில் இருந்தார்.


காவலாளிகள் தொலைவில் இவன் வந்ததைக் கவனித்துவிட்டு, ஒருவிதத் திருப்தியுடன் வேறேதோ பேச ஆரம்பித்தார்கள்.

இவன் வந்ததும் கண்களைத் திறந்து, 'என்ன?' என்பது போல் பார்த்தார்.

'நீங்களும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்றீங்க! இந்தக் கடவுளும் என்னைக் கை விட்டுட்டாரே!' எனக் கலங்கிப் போய் கேட்டான்.

'கடவுள் எப்படி கைவிடுவாரு?' எனத் திருப்பிக் கேட்டார்.
'எனக்கு எப்படி தெரியும்? நீங்கதான் பெரிய சித்தராச்சே! நீங்களே சொல்லுங்க! கடவுள்னா யாரு?' என்றான்.

'எல்லாத்துலியும் இருக்கற வேறுபாடுகளைத் தெரிஞ்சுகிட்டும், ஒரு வேற்றுமையும் பார்க்காதவரே கடவுள்! பார்க்கப் போனா நீ கூட ஒரு கடவுள்தான்!'

'விளையாடாதீங்க! இப்ப தமாஷ் பண்ற நிலையில நான் இல்லை' என விரக்தியாகப் பேசினான் கந்தன்.

'நெசமாத்தான் சொல்றேன். இப்ப உன்னையே எடுத்துக்க. இது கையி, இது காலு, கண்ணு, மூக்கு காது, தலைன்னு உன் உடம்புல இருக்கற எல்லா வேறுபாடும் உனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக இதான் உசத்தி, காலை விட கண்ணுதான் உசத்தி, இது மட்டம்னு பிரிசுப் பாக்கறதில்ல நீ. அதது செய்ய வேண்டிய வேலகளும் உனக்குத் தெரியும்.எதெது என்னென்ன பண்ணும்னும் உனக்குத் தெரியும். அதுக்கு மட்டும்தான் அதைப் பயன்படுத்துவே!


எனக்கு மட்டும் செருப்பு, கையிக்கு மட்டும் தங்க கடிகாரமான்னு காலு நினைக்காது.

நான் எடுத்துத்தான் கொடுக்கறேன்; வாயிதான் தினம் சாப்பிடுதுன்னு கை பொறாமைப்படாது.

உள்ளுக்குள்ள இருக்கற ஒரு சக்தி மனசு மூலமா வெளிப்பட்டு, அது கண்ணு வழியா வெளிப்படும்போது, கண்ணு பாக்குது. அதே சக்தி காது வழியா வெளிப்படும் போது காது கேக்குது. இப்படித்தான் ஒவ்வொண்ணும்!

உள்ளே இருக்கற சக்திதான் இப்படி பல ரூபமா வெளிப்படுதுன்றதைப் புரிஞ்சுகிட்டு, அந்த சக்தி என்னான்னு பார்க்க ஆரம்பிக்கறப்ப உனக்குள்ல இருக்கற கடவுள் உனக்குத் தெரியவரும். அந்த தெய்வீக நிலையைப் புரிஞ்சுகிட்டியானா, அப்புறம் எல்லாமே சுளுவா வந்திரும். இதைப் பத்தி யோசிக்க ஆரம்பி!' எனச் சொல்லிவிட்டு,

'இன்னும் ஒரு நாளுதான் இருக்கு, கடவுளே!' என ஒரு குண்டையும் போட்டுவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார் சித்தர்!

ஏதோ ஒரு நம்பிக்கை உள்ளத்தில் பிறக்க, கந்தனும் அவரருகில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.
---------------------

மூன்றாம் நாளும் விடிந்தது!

'என்ன உங்க சித்தர் தயாரா? போய் என்ன ஏதுன்னு பார்க்கலாமா?' எனத் தலைவன் வந்து கேட்டான்.

'ஓ! பார்த்துறலாமே' எனத் தெம்பாகச் சொல்லிய சித்தர், கந்தனைப் பார்த்தார்.

கந்தன் ஒன்றும் பேசாமல் எழுந்து நின்று அவர்களைப் பார்த்தான்.

மானசீகமாக சித்தரை வணங்கினான். சித்தர் அவனைப் பார்த்துச் சிரித்தார்.

ஏதோ ஒரு சக்தி தனக்குள் இருந்து இயக்குவதை உணர்ந்தான்.

'எல்லாரும் அப்படியே உட்காருங்க. கொஞ்ச நேரம் பிடிக்கும் இதுக்கு' என்றான்.

'எங்களுக்கு ஒரு அவசரமும் இல்லை. இந்தக் காடு எங்களுக்கும் பழக்கமானதுதான்' என அமர்த்தலாகச் சொல்லியபடியே, உட்கார்ந்தான் தலைவன்.

மற்றவர்களையும் உட்காரச் சொல்லி கை காட்டினான்.

கந்தன் சற்று தள்ளிச் சென்று, அந்த காட்டையே உற்று நோக்கினான். மிகவும் பழக்கப்பட்ட இடம் போல உணர்ந்தான். காட்டைத் தாண்டி அவன் பார்வை விரிந்தது!

[தொடரும்]
*******************************


"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து." [596]


அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 35

முந்தைய பதிவு இங்கே!


33.
"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]

ஒரு அடர்ந்த காட்டுவழியாகச் சென்று கொண்டிருந்தனர்.ஏதோ அபாயம் வரப்போகுதுன்னு அவன் மனசு அலறியது.ஒருவித அச்சத்துடன், சித்தரைப் பார்த்தான் கந்தன்.

அவரோ அமைதியாக நடந்து கொண்டிருந்தார்.

சற்று தூரம் சென்றதும், யாரோ தங்களைக் கவனிப்பது போல உணர்ந்தான். ஒரு சில நொடிகளில் திபு திபுவென ஒரு கூட்டம் அவ்விருவரையும் சூழ்ந்தது.

ஒரு கேள்வியும் கேட்காமல், அவர்கள் கைகளும், கண்களும் கட்டப்பட்டன. கைத்துப்பாக்கி ஒன்று முதுகை அழுத்த இருவரும் நடத்திச் செல்லப்பட்டனர்.
கந்தனின் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. 'நான் தான் சொன்னேன்ல!' எனக் குத்தியும் காட்டியது.

சிறிது நேரம் நடந்தபின், நிறுத்தப்பட்டார்கள்.

கண்கட்டு மட்டும் அவிழ்க்கப்பட்டது.

'யார் நீங்க? சி.ஐ.டி. தானே?' என அவர்களின் தலைவன் போல இருந்த ஒருவன் கேட்டான்.

'நாங்க கோவில், குளம்னு கால்நடையா சுத்தறவங்க' என்றார் சித்தர்.

'யாருகிட்ட காது குத்தறீங்க! நீங்க ரெண்டு பேரும் போலீஸ்காரங்களோட பேசினதை நாங்கதான் பார்த்தோமே' என மடக்கினான் தலைவன்.

'எனக்கு இந்த காடுங்கல்லாம் அத்துப்படி. இந்தப் பையனுக்கு வழி காட்டறதுக்காக கூட வந்தேன். வேற ஒண்ணும் எங்களுக்குத் தெரியாது' சித்தர் விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

'இந்தப் பையன் யாரு? உனக்கு எப்படி தெரியும் இவனை?'

'இவரு பாக்கறதுக்குத்தான் சின்னப்பையன் மாதிரி இருக்காரே தவிர, ரொம்பப் பெரிய மகான்! பெரிய சித்தரும் கூட!' என்று சித்தர் சொன்னதும்,


'ஆஹா! வசமா மாட்டி விடறாரே, சமயம் பார்த்து, தான் தப்பிச்சுக்கறதுக்காக' எனக் கந்தன் நடுங்கினான்.

'அது மட்டுமில்ல! பஞ்சபூதமும் இவர் சொன்னாக் கேக்கும். வேணுமின்னா சொல்லுங்க. நிரூபிச்சுக் காட்டச் சொல்றேன்!' என்று மேலும் அவர் சொன்னதும், கந்தனுக்கு சப்தநாடியும் ஒடுங்கியது.

'இந்தப் பக்கமா ஏன் வந்தீங்க?' என அவர் சொல்வதை நம்பாமல் தலைவன் குடைந்தான்.

'மனுஷங்க கஷ்டப்பட்டா இவருக்குப் பொறுக்காது. இந்தப் பக்கமா வந்துகிட்டு இருக்கறப்ப, இந்தமாதிரி, இங்கியும் சில ஆளுங்க ஒளிஞ்சு இருக்காங்களாம்னு தெரியாத்தனமா சொல்லிட்டேன். அவ்ளோதான்! அவங்களைப் பார்த்து அவங்களுக்கு எதுனாச்சும் உதவி பண்ணணுமேன்னு துடிச்சுப் போயிட்டாரு. நான் எவ்வளவோ சொல்லியும் கேக்காம சரசரன்னு உள்ளே புகுந்திட்டாரு. இதோ அவரு உங்களுக்காக கொடுக்கக் கொண்டுவந்த பணம்' எனச் சொல்லிக்கொண்டே, கந்தனின் தோளில் மாட்டியிருந்த பையை வாங்கி, அதிலிருந்த ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஒரு மஞ்சள் பையை எடுத்து தலைவனிடம் கொடுத்தார்.

'போச்சு! இருந்த பணமும் போச்சு! இனிமே நீ அதோகதிதான். நல்லா சிக்கவைச்சிட்டாரு உன்னை' என இதயம் ஓலமிட்டது!

மிகுந்த ஆவலுடன் அதை வாங்கி உடனே இடுப்பில் சொருகி பத்திரப்படுத்திக் கொண்டான். கைக் கட்டுகளை அவிழ்த்துவிடச் சொன்னான்.

'சித்தர்னா என்ன மாதிரி சித்தர்?' எனக் கேட்டான்.

'அதான் சொன்னேனே! இவருக்கு இந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு டக்கு டக்குன்னு தெரியும்.பஞ்ச பூதமும் இவர் சொல்றதைக் கேக்கும். இப்ப நினைச்சார்னாக் கூட ஒரு பெரிய சூறாவளியைக் கொண்டுவந்து இந்த இடத்தையே ஒண்ணுமில்லாமப் பண்ணிடுவாரு! '


இவர் அடுக்கிக் கொண்டே போக, 'இன்னிக்கு தீர்ந்தோம்!' என நடுங்கினாலும்
முகத்தில் ஒன்றையும் காட்டாமல், சாதாரணமாக வைத்திருந்தான் கந்தன்.


"சுத்தி நடக்கறதைக் கவனி!" தங்கமாலை அணிந்த பெரியவர் சொன்னது ஏனோ நினைவில் வந்தது!

சுற்றி இருந்த ஆட்கள் எல்லாரும் சித்தர் சொன்னதைக் கேட்டு பலமாகச் சிரித்தார்கள். அதே சமயம் அவர்களுக்குள்ளும் இது ஒருவேளை உண்மையாயிருக்குமோ என ஒரு அச்சம் பிடித்துக் கொண்டது.


ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

'எங்கே செய்யச் சொல்லு பார்க்கலாம்?' என தலைவன் சவால் விட்டான்.

நேற்று பார்த்த கூட்டத்திலிருந்து தங்களைக் கவனித்த ஆள்தான் இவன் எனச் சட்டெனப் புரிந்தது கந்தனுக்கு.

' அதெல்லாம் நீங்க கேட்டதுமே வந்திராது! அவருக்கு அதுக்கு ஒரு மூணு நாளு தேவைப்படும். ஏன்னா, அவர் தன்னையே ஒரு பெரிய காத்தா மாத்திகிட்டு வருவாரு. அப்படி அவர் பண்ணலேன்னா, எங்களை என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கலாம்' என பதில் சவால் விடுத்தார் சித்தர்.

'சரி. அப்படியே வைச்சுக்கலாம். ஆனா, அதுவரைக்கும் எங்களைத் தாண்டி எங்கியும் போகக்கூடாது. தப்பிச்சுப் போக முயற்சி பண்ணினீங்கன்னா தீர்ந்தீங்க!' எனச் சொல்லி தன் ஆட்களுக்கு அவர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி உத்தரவிட்டான்.

'பயந்த மாதிரி காட்டிக்காதே. முகத்துல ஒரு சிரிப்பைக் கொண்டுவா! அவங்கள்லாம் பார்க்கறாங்க' என மெதுவாக அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் சித்தர்.

கந்தனால் ஒன்றும் பேச இயலவில்லை. சித்தரை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே தனியே சென்று உட்கார்ந்தான்.


அவன் கண் முன்னே அவனது கனவுகள் எல்லாம் பொலபொலவென நொறுங்கிப் போவதை உணர்ந்தான். சற்று முன் வரை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்த இந்தக் காடு இப்போது ஒரு மீளமுடியாத ஒரு விலங்காய் தன்னைப் பிணைப்பதாகத் தோன்றியது.

'இருந்த பணத்தையும் அவங்க கையில தூக்கிக் கொடுத்திட்டீங்க! இனிமே என் வாழ்க்கையில அவ்ளோ பணத்தை நான் எப்பப் பார்க்கப் போறேன்!' எனப் பொருமினான்.

'அதாவது நீ உசிரோட இருந்தேன்னான்னு சொல்லு!' எனக் கிண்டல் அடித்தார் சித்தர்.


'நாளைக்கு சாகப் போறேன்னும் போது பணம்த்தை வைச்சுகிட்டு என்ன லாபம்? பணமா ஒரு உசுரைக் காப்பாத்திரும்?' என அவர் சொன்னதும், இந்த நேரம் போய் தத்துவம் வேற பேசறாரே என ஒரு கோபம் வந்தது.

காவலாளி ஒருவன் சூடாக டீ கொண்டுவந்து கொடுத்தான். திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த கந்தன் கைகளில் கொஞ்சம் தேநீரை ஊற்றவும், கந்தன் திடுக்கிட்டு, சுயநினைவுக்கு வந்தான். சித்தர் அவனுக்குப் புரியாத ஒரு மொழியில் ஏதோ முணுமுணுத்தார்.

'பயத்துக்கு அடிமையாகாதே! பயந்துட்டீன்னா, உன்னால உன் மனசோட பேச முடியாமப் போயிடும் என்றார்.

'அதெல்லாம் சரிதான்! இப்ப நான் எப்படி மூணு நாளைக்குள்ள ஒரு காத்தா மாறப் போறேன்?' சற்று கிண்டலாகவும், கோபமாகவும், பயத்துடனும் கேட்டான்.

'ஏதேனும் ஒரு லட்சியத்தை அடைய தீவிரமா முயற்சி பண்றவன், எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டாலும், தோத்துருவோமோன்னு பயந்திட்டான்னா, அப்புறம் அவனால எதுவுமே பண்ண முடியாது. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும்.'

'இப்ப யாரு பயந்தாங்களாம்? எப்படிங்க காத்தா மாறப் போறேன்னுதான் கேக்கறேன்' என்றான் வீராப்பாக.

'நீதானே மாறப்போறே! அப்போ, நீதான் அதைக் கத்துக்கணும்! இப்ப உன் வாழ்க்கையே அதுலதான் இருக்கு!!' என அவனை மேலும் சீண்ட,


'என்னால முடியலேன்னா?' எனக் கந்தன் கேட்டான்.

'முடியலேன்னா, உன் லட்சியத்தை நீ அடையாமலியே செத்துப் போயிடுவே! தன் லட்சியம் என்னன்னே தெரியாம சாகற எத்த்னையோ கோடிப் பேருக்கு, நீ எவ்வளவோ மேலு! ஆனாலும், பயப்படாதே! செத்திருவோமேன்ற பயம், ரொம்பப் பேருக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வைக்கும். உக்காந்து தியானம் பண்ணு.'எனச் சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளிச் சென்று அமர்ந்தார் சித்தர்.

கண்களை மூடிக் கொண்டார். அவர் வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

[தொடரும்]
*********************************


"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [648]

அடுத்த அத்தியாயம்

Read more...

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 34

முந்தைய பதிவு இங்கே!


32.

"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. " [725]



'நகராதீங்க! அப்படியே நில்லுங்க!' ஒருவன் கத்தினான்.

"நாங்க சாமி பாக்கறதுக்காக கால்நடையா போறவங்க! எங்களை ஏன் தடுக்கறீங்க" என்றான் கந்தன்.

'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது! இந்தப் பக்கம யார் வந்தாலும் சோதனை பண்ணச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. தீவிரவாதிங்க எந்த வேஷத்துலியும் வரலாம்.'

வந்த போலீஸ்காரர்கள் அவர்களைச் சோதனை செய்தனர்!

'உன்கிட்ட ஏது இவ்ளோ பணம்? யாருக்குக் கொடுக்கறதுக்காக எடுத்துக்கிட்டு போறே?' கந்தன் பையைப் பரிசோதித்த போலீஸ் கேட்டது.

'நான் உழைச்சுச் சம்பாதிச்ச பணம் அது. சென்னையில செலவெல்லாம் அதிகமா ஆகும்னு சொன்னாங்களே' என அப்பாவியாகச் சொன்னான் கந்தன்.

'இதென்ன குப்பியில மருந்து? இதென்ன கல்லு?' சித்தரை மிரட்டலாகக் கேட்டார் அடுத்த போலீஸ்காரர்.

'ஓ அதுவா! அதுதான் மாயக்கல்லு! அதை வைச்சு எவ்வளவோ கிலோ தங்கம் பண்ணலாம். அந்த மருந்தைக் குடிச்சா ஒரு நோயும் அண்டாது!'

நாலு காவல்காரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு வாய் விட்டு சிரிக்கத் தொடங்கினர்! சித்தரும் கூடவே பெரிதாகச் சிரித்தார். அவரிடம் அவைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, 'போங்க! இப்படி சொல்லிகிட்டு ரொம்பப்பேரு திரியறாங்க! நீங்களும் அது போல ஆளுங்கதானா! நாங்க என்னவோன்னு நினைச்சிட்டோம். உங்ககிட்டேயும் வேற சந்தேகப்படும்படியா ஒண்ணும் இல்லை. பத்திரமாப் போங்க! நீங்க போற வழியில நிறைய தீவிரவாதிங்க சுத்தறதாத் தகவல். ஜாக்கிரதை!' என எச்சரித்து அனுப்பினர்.

'என்னங்க! இப்படி அவங்க கிட்ட உண்மையைப் பட்டுன்னு போட்டு உடைச்சுட்டீங்க!' என சற்று கோபத்துடன் கேட்டான் கந்தன்.

'இந்த உலகவாழ்க்கையோட ஒரு அடிப்படை உண்மையை உனக்குப் புரிய வைக்கறதுக்காகத்தான்!' சித்தர் சிரித்துக் கொண்டே சொன்னார்!



'உன்கிட்ட ஒரு பெரிய ஐஸ்வர்யம் இருக்க்குன்னு வைச்சுக்க. அதைப் போயி அடுத்தவர்கிட்ட சொன்னியானா, உன்னை ஒரு பைத்தியமாத்தான் பார்ப்பாங்க! சுத்தமா நம்ப மாட்டாங்க!'


கந்தன் அவர் சொன்னதையே அசை போட்டுக் கொண்டு நடந்தான்.

இப்போதெல்லாம் அவன் மனசு ஒன்றுமே பேசுவதில்லை. அமைதியாக இருந்தது. எப்போதாவது பேசினாலும், அவனை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தது.
அவனிடம் இருக்கின்ற நல்ல குணங்களை எல்லாம் பட்டியல் போட்டுக் காண்பித்தது!


'ஆடுகளை எல்லாம் விற்றுவிட்டு எப்படி இப்போது ஒரு பெரிய லட்சியத்தைத் தேடிக்கொண்டு தைரியமாக இவ்வளவு தூரம் வந்திருக்கே! நிஜமாவே நீ ஒரு பெரிய ஆளுதான்!'னு அவனை சிலாகித்தது.

அது மட்டுமில்லாமல், எப்படி சில கெட்ட சமயங்களிலும் அவனுக்கு உதவியது எனவும் சொல்லியது!


ஒரு நாள் காலையில ஆடுங்களை மேய்ச்சுகிட்டு போறப்ப, வாந்தி எடுத்து அவன் மயக்கமா விழுந்தது தன்னாலதான் என ஒப்புக் கொண்டது.

'கொஞ்ச தூரம் தள்ளி ரெண்டு திருட்டுப்பயலுக உன்னை வெட்டிட்டு, உன் ஆடுங்களை அபேஸ் பண்ணக் காத்திருந்தாங்க. அதான் வழியில தெரிஞ்ச செடியிலேருந்து சில இலைகளை உன்னைத் திங்க வைச்சு அப்பிடி ஒரு வாந்தி!' எனச் சொல்லி 'ஹோ'வெனச் சிரித்தது.

கேட்கக் கேட்க கந்தனுக்கு ஆச்சரியம் மிகுந்தது.

'இப்படியெல்லாம் கூடச் செய்யுமா மனசு?' சித்தரிடம் கேட்டான்.

'எல்லாரோட மனசும் இப்படி செய்யும்னு சொல்ல முடியாது. ஆனா, சின்னப் புள்ளைங்க, வயசானவங்க, குடிகாரங்க இவங்களைப் பார்த்தா உனக்குப் புரியும்!


தவழ்ந்துகிட்டே கிடுகிடுன்னு ஒரு பள்ளத்துல விழற வரைக்கும் போயிரும் ஒரு குழந்தை! 'டக்'குன்னு நின்னு திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்கும்!


நல்லா குடிச்சிட்டு நிதானமே இல்லாம வண்டியை ஓட்டிகிட்டு வருவான்! எப்படியோ, வீட்டு வாசல் வரைக்கும் சரியா வந்து சேர்ந்திடுவான்!

'கண்ணு மங்கிப் போய், திண்ணையில உட்கார்ந்துகிட்டே, 'ஆரது? காமாட்சி பய கணேசனா போறது? சித்தே இங்கே வா!' என ஒரு பெரியவர் அழைத்து ஒரு உதவி கேட்கும்போது 'இவருக்கு எப்படி தெரிஞ்சுது?'ன்னு ஒரு வியப்பு வரும்!

இந்த மனசோட உதவியில்லாம இவங்களால அந்த சமயத்துல தப்பிச்சிருக்க முடியாது! கொஞ்சம் யோசிச்சியானா புரியும்!'

'அப்போ எனக்கு ஒரு ஆபத்தும் வராதுன்றீங்க!' என வினவினான்.

'மனசால ஒரு அளவுக்குத்தான் உதவ முடியும். அதை வைச்சு, அதைப் புரிஞ்சுகிட்டு, நிலைமையைச் சமாளிக்கறது அவங்க அவங்க சாமர்த்தியம்.'

'அதெல்லாம் இல்லை! என் மனசை வைச்சு நான் எல்லாத்தையும் சமாளிச்சிருவேன்! இதுவரைக்கும் அது என்னைக் கைவிட்டதில்லை!'

கந்தன் அலட்சியமாகச் சொன்னான்.

சித்தர் கோபமாக உறுமினார்!


' மனசைக் கேக்கத்தான் சொன்னேன். அப்படியே நம்பச் சொல்லலை. நீ இருக்கற இடத்தை எப்பவும் கவனத்துல வையி. இங்கே நடக்கறது ஒரு சண்டை. உனக்கு அதுல சம்பந்தம் இல்லாம இருக்கலாம். ஆனா, நீ இப்ப அந்த இடத்துல இருக்கே. அது நீயா விரும்பி, ஒரு புதையலைத் தேடி வந்ததால நடந்திருக்கு. அதைப் புரிஞ்சுக்கோ! உன்னோட இதயத்தின் மூலமா, இந்த உலக ஆத்மா இந்த சண்டையெல்லாம் வேணாமேன்னு கதறுவதைப் புரிஞ்சுக்கோ!'

சித்தர் சொன்னது உண்மையாயிற்று!

ஆயுதம், துப்பாக்கி தாங்கிய ஒரு கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

'இதுக்கு மேல நீங்க போகமுடியாது! இந்த வழியில உங்களை யாரு வரச் சொன்னது?' என்றான் அவர்களில் ஒருவன், மிரட்டலாக.

'நாங்க போக வேண்டிய தூரம் ரொம்ப இல்லை. இன்னும் கொஞ்சம் தான். எங்களைப் போகவிடு!' எனச் சொல்லியபடியே சித்தர் அவனை தீர்க்கமாகப் பார்த்தார்.

சிறிது நேரம் நான்கு விழிகளும் இமைக்காமல் சந்தித்தன.

தலைவன் தன் பார்வையைத் தளர்த்தினான்.

'சரி, சரி! பத்திரமாப் போங்க' என வழி விட்டான்.

'நீங்க பார்த்த பார்வையை நானும் பார்த்தேன். என்ன ஒரு தீட்சண்யம்!' என அவரிடம் சொன்னான், சிறிது தூரம் சென்றதும்.

'ஒருத்தரோட கண்ணுதான் அவங்களோட உள்பலத்தைக் காட்டுது' என அமைதியாகச் சொன்னார் சித்தர்.

அவர் சொன்னது உண்மைதான் எனக் கந்தன் எண்ணினான். ஏனெனில், இவர்கள் இருவரின் பார்வைகள் சந்தித்த போது, அந்தக் கூட்டத்தில் இருந்த வேறொருவரின் பார்வையை கந்தன் பார்க்க நேரிட்டது. அந்த ஆளின் முகம் சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆனால், அவர் இவ்விருவரையும் கவனித்ததை இவன் பார்த்தான்.
************


'சித்து வேலைன்னா என்ன?' பேச்சை மாற்றி கந்தன் கேட்டதும் சித்தர் அவனைப் பார்த்தார்.

'உலத்துக்குன்னு இருக்கற ஒரு ஆத்மாவைப் புரிஞ்சுகிட்டு, அது மூலமா, உனக்குன்னு விதிச்சிருக்கற புதையலை நீ தேடிக் கண்டுபிடிக்கறதுதான் சித்து வேலை!'

'இப்படி மழுப்ப வேண்டாம்! நான் அதைக் கேக்கலை! இந்த தங்கம் செய்யறது எப்படின்னு.....' என இழுத்தான்.

சித்தர் சற்று நேரம் மௌனமாயிருந்தார்.

'இந்த உலகத்துல இருக்கற எல்லாமே ஒண்ணொண்ணா வளர்ந்ததுன்னு உனக்கு சொன்னேன் முன்னாடி. அதோட கடைசி நிலைதான் இந்த தங்கம்ன்ற ஒண்ணு.
எப்படி ஏதுன்னு என்னைக் கேட்காதே. அப்படித்தான் பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதை நானும் நம்பறேன்.


ஆனா, இதை தவறா புரிஞ்சுகிட்ட மனுஷங்க, இதுதான் ஒவ்வொருத்தனும் வைச்சிருக்க வேண்டிய ஒண்ணுன்னு நம்பிகிட்டு, இதுக்காகவே சண்டை போடறாங்க.
இந்த உலகம் பல விஷயங்களை நமக்கு சொல்லிகிட்டே இருக்கு.


எப்படி, ஒரு நாய் குலைக்கறது யாரோ ஆளுங்க வர்றாங்கன்னு காட்டுதோ அது மாதிரி. அது குலைக்கற வரைக்கும் நமக்கு அது தெரியறதில்லை. ஆனா, குலைச்சதும் உடனே, 'ஆரது?'ன்னு ஒரு குரல் விடறோம். அப்படித்தான் இதுவும்.
இதைப் புரிஞ்சுக்காம, பெரிய பெரிய தவம் பண்ணினவங்க கூட இந்த தங்கத்தோட மோகத்தால அதல பாதாளத்துல விழுந்திருக்காங்க. அதை நானும் பார்த்திருக்கேன்.
சில பேரு புரியாம, ....... சில ஆளுங்க புரிஞ்சுகிட்ட பின்னாலும்!
சரி, அதை விடு! நீ வந்த வேலையைப் பாரு. இன்னும் அனேகமா ஒரு நாளுதான்!' என்றார் சித்தர்.

தன்னையுமறியாமல், ஏதோ ஒரு பரவசத்துடன், அவரை கை கூப்பி வணங்கினான் கந்தன்!



[தொடரும்.]
****************************

"ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு. " [725]


அடுத்த அத்தியாயம்

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP