Sunday, December 31, 2006

ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]

ஆடேலோர் எம்பாவாய் - 7 [17]

[இறையை நினைந்ததும், இறைவன் நினைவுக்கு வருகிறான்! மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது! குளியாட்டமும்தான்!]


செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்


கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17


தாமரை போலும் சிவந்த கண்களையுடைய திருமாலிடத்திலும்,
திசைக்கு ஒன்றென தலைகளையுடைய நான்முகனிடமும்,
இவரைப் பணிந்து நிற்கும் தேவர்களிடமும்
வேறெங்கினுமெ இலாத இன்பப்பெருவெள்ளம்

நமக்கே ஆகுமாறு நலமுடன் நல்கி
ஏ! தேன் உண்ணும் கூந்தலுடைய பெண்ணே!
நாம் செய்திடும் குற்றங்களெல்லாம் போக்கி
நாம் அனைவரின் இல்லங்களிலும் எழுந்தருளி

செந்தாமரை போலும் சிவந்த பொற்பாதங்களை
நமக்கெல்லாம் தந்தருள் செய்யும் பெருங்கருணை
உடையவனை, அழகிய கண்கள் உடைய நம் அரசனை
அடிமையாம் நமக்கெல்லாம் இனிய அமுதமானவனை

நம்முடைய இறைவனாம் சிவனைப் பாட
நல்வளம் பெருகி விளங்கிட எண்ணி
தாமரை மலர் நிறைந்த இத்தடாகத்தில்
பாய்ந்து நீந்தி ஆடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

செங்கணவன் - செங்கண் அவன், திருமால்; திசைமுகன் - பிரமன்; கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; அங்கண் - அழகிய கண்கள்; பங்கயம் - தாமரை.

********************************************************

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

தேன்கூடு போட்டி வெற்றிக்கென வாழ்த்தியவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி!

*******************************************************



Read more...

Saturday, December 30, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

"ஆடேலோர் எம்பாவாய்" - 6 [16]

முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்


மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

[குளத்து நீரின் குளுமை போதவில்லை இந்தப் பெண்களுக்கு! கூடவே மழையும் வேண்டுமாம்! அந்த மழையை அழைக்க மாயவளை உவமை சொல்லி அழைக்கின்றனர்! இன்னொரு தமிழ்ச்சுவைப் பாடல்! வாங்க அனுபவிக்கலாம்! இறுதியில் எழுதி இருப்பதையும் படியுங்கள்!]

நீலக்கடலினை நெருங்கி அதனை முகர்ந்து
கடலினைக் குறைத்து கார்மேகமாய் எழும்பி
மலைமகளாம் உமையவளை ஒத்த மேகம் போல் திகழ்க!

எங்களை ஆட்கொண்டு அருள் பாலிக்கும்
பார்வதியின் சிற்றிடையைப் போல
மெலிதாய் மின்னும் மின்னலாய்ப் பொலிக!

திருப்பிராட்டியின் திருவடியில் பொலிவாய்
திகழ்ந்திருந்து, திருநடனத்தின் போது பேரொலிபோல்
முழங்கிடும் சிலம்பு போன்ற இடிபோல் ஒலிக்க!

பிறைநுதல் போல வளைந்து நிற்கும்
வில்லென விளங்கிடும் எம் தாயின் புருவம் போல
பொலியும் வானவில்லாய் வளைந்திடு!

எம்மை விட்டு என்றும் விட்டகலா எந்தாயோடு
என்றும் இணைந்திருப்பதால் அவரன்பும் கூட்டி
நம்போன்ற அன்பர்க்கெல்லாம் விரைந்து வந்து

நாம் கேளாமலே, கேட்கும் முன்னே நம்மீது
அருள் புரியும் அன்னையவள் அருள் போல எம்மீது
பொழிக மழையே! எனச் சொல்லி ஆடடி என் பெண்ணே!

[மேகத்தை, மின்னலை, இடியை, வானவில்லைப் பார்க்கையிலும், அன்னையையே காணும் இவர் நிலை நமக்கெல்லாம் வர இன்னும் எத்தனை பிறவி எடுக்க வேண்டுமோ!]

அருஞ்சொற்பொருள்:
இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

Read more...

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

"ஆடேலோர் எம்பாவாய்" - 5 [15]

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர


நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15


{"இதோ இப்படி இழுத்துப் பிடித்து, எழுப்பி அழைத்து வந்திருக்கிறோமே, இந்தப்பெண்! இவள் எத்தன்மையாயவள் தெரியுமா" எனச் சொல்லி மற்றவர்க்கு உரைக்கும் பாடல்!}

எம்பெருமான், எம்பெருமான் எனச் சொல்லி எப்போதும்
நம்பெருமானின் பெருமையினை வாய் ஒயாமல்
உள்ளமெல்லாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருப்பவள்!

அவனையே நினைத்திருந்து விடாது வழிந்திடும்
தாரை தாரையென கண்ணீரில் தோய்ந்து
இவ்வுலக நினைப்பினையே மறந்தவள் இவள்!

வேறோர் தேவரையும் பணிவதில்லை இவள்!
பேரரசனாம் நம் சிவனாரின் மேல் இவ்வாறு
பித்துப் பிடிக்கின்ற தன்மையினையும் செய்ய வல்ல

அவ்வாறு செய்ய வைக்கும் சிவனாரின் திற்ம் மிக்க
சிவந்த திருப்பாதங்களையும் நம் வாயாரப் பாடி
அவர்தம் திறனை வியந்திங்கே போற்றிப் போற்றி

கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்களே!
நேர்த்தியான மலர்கள் நிறைந்த இப் பைங்குளத்தில்
ஆட்டிடுவோம் நீயும் ஆடடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

ஓவாள் - ஓயமாட்டாள்; தாரை - கண்ணீர்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்; வார் உருவப் பூண் முலையீர் - கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்டிர்.

Read more...

Friday, December 29, 2006

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

""ஆடேலோர் எம்பாவாய்"- 4. [14]"

[தமிழ்மணம் சென்ற பதிவில் இன்னும் தொடரட்டும்!
திருவெம்பாவையை நாம் தொடரலாம்!]


காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்


சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி


சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்


பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

{ஆட்டமும், பாட்டமும் இன்னும் தொடர்கிறது!!}

காதில் பூட்டியிருக்கும் குழைகள் ஆட,
மார்பில் தவழும் பொன் அணிகலன்கள் ஆட,
பூமாலை அணிந்த கூந்தல் ஆட,
பூவில் தேனைக் குடிக்க வரும் வண்டினம் ஆட,


நாமெல்லாரும் இக்குளிர்நீரில் களித்தாடி,
இறைவனின் சிற்றம்பலத்தைப் பாடி,
வேதங்களின் மூலப்பொருளாம் சிவனாரைப் பாடி,
எவ்வண்ணம் அவன் வேதங்களின் பொருளாவான் எனப் பாடி,


சோதிவடிவானவனின் பெருமையைப் பாடி,
அவன் தலையில் அணியும் கொன்றை மலர்க் கொத்தினைப் பாடி,
அனைத்திற்கும் முதலாகும் அவன் வல்லமையைப் பாடி,
அவனே அனைத்திற்கும் இறுதியும் ஆவதை வியந்து பாடி,


மும்மலம் அழித்து,பின் நம்மை வளர்த்தெடுத்த,
இறைவனின் சக்தியின் பாதத் திறத்தினையும்
போற்றிப்பாடியே நீயும் நீராடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

13-ம் பாடலில் சொன்ன பத்து "பொங்குமடு"க்களுக்கும் விளக்கத்தை சென்ற பதிவில் காணலாம்!

Read more...

Thursday, December 28, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"இரண்டாம் பகுதி

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]" இரண்டாம் பகுதி

அடுத்த திருவெம்பாவைப் பாடல் எழுதி முடித்தாலும், இந்த 13-ம் பாடலை விட்டு மனம் இன்னும் அகல மறுக்கிறது!

என்னவொரு கவி நயம், இலக்கியநயம், தமிழ்மணம்!

உங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளாமல் அடுத்த பாடலுக்கு செல்லப் போவதில்லை!

தமிழறிந்த நல்லோர் இங்கிருக்கும் வேளையில், இதையும் கொஞ்சம் கேட்டு, எனக்கும் விடையளித்து...... ஆம்... இதற்கு நீங்கள்தான் முதலில் சொல்ல வேண்டும்!... பிறகு 14-ம் பாடலுக்கு நாளை செல்லுவோம்! சரியா!

பாடலை முதலில் மீண்டும் ஒரு முறை பார்ப்போம்!

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"பைங்குவளைக் கார்மலரால், செங்கமலப் பைம்போதால்,
அங்கம் குருகினத்தால், பின்னும் அரவத்தால்,

தங்கண் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்,
எங்கள் பிராட்டியும், எங்கோனும், போன்று இசைந்த

பொங்குமடு"
வில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.


முதல் 5 வரிகளில்தான் இந்த விளையாட்டை மாணிக்கவாசகர் செய்திருக்கிறார்!

அவற்றைக் கீழே தருகிறேன்.

ஒவ்வொருவரும் வந்து கருத்து சொல்ல வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

1. பைங்குவளைக் கார்மலரால், எங்கள் பிராட்டி போன்று இசைந்த பொங்குமடு.

2. செங்கமலப் பைம்போதால், எங்கோன் போன்று இசைந்த பொங்குமடு.

3. அங்கு அம் குருகு இனத்தால் பொங்குமடு.

4. அங்கம் குருகினத்தால் எங்கள் பிரட்டி போன்று இசைந்த பொங்குமடு.

5. அங்கு அங்கு உருகு இனத்தால், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

6. அங்கு அம் குருகு இனத்தால், பின்னும் அரவத்தால், தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

7. பின்னும் அரவத்தால், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.


8. அங்கு அம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் பொங்குமடு.

9. தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் பொங்குமடு.

10. தம் கண்மலம் கழுவுவார், எங்கள் பிராட்டியும், எங்கோனும் போன்று இசைந்த பொங்குமடு.

[இவற்றை விளக்குவதுதான் உங்கள் வேலை! எத்தனை கற்பனைகள் விரிகின்றன எனப் பார்த்து மகிழலாம்!]

இவை அனைத்தாலும் பொங்குகின்ற பொங்கு மடுவில், இப்பெண்களும் பாய்வதால், இவர்களின், சங்குகளாலும், சிலம்புகளாலும், கொங்கைகளாலும் மேலும் இந்தப் பொங்குமடு பொங்க, அதனால் இப்புனல் பொங்க, இப்பங்கயப் பூம்புனலில் பாய்ந்தாடும் காட்சியினை சற்று கண்களை மூடிய வண்ணம் எண்ணிப்பாருங்கள்!

ஆகா! தமிழே! நீ வாழி!

Read more...

Wednesday, December 27, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

"ஆடேலோர் எம்பாவாய்"- 3. [13]"

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்


தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த


பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்


கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13




[[காலைக் கருக்கலில், இன்னும் பொழுது விடியா நேரத்தில், இப்பெண்கள் குளத்தைக் காண்கின்றனர். அது சிவனாரும், உமையவளும் வீற்றிருக்கும் இடமாகத் தெரிகிறது இவர்களுக்கு! மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும். இப்போது ஆட்டமும், ஆரவாரமும் சற்று அதிகமாகிறது!! இப்பெண்களின் கற்பனையும் விரிகிறது!!]

கருத்த குவளை மலர்க் கூட்டம் ஒரு பக்கம்
சிவந்த தாமரை மலர்க் கூட்டம் இன்னொரு பக்கம்


இவற்றினை நாடி வந்து தேன் அருந்த வரும்
சிறிய உடலை உடைய வண்டுகள் எழுப்பிடும் ஒலிகள் நிறைய,


தங்கள் குறைகளை, குற்றங்களை நீக்க வேண்டி
ஆலயம் சென்று தொழும் அடியாரும் ஒரு பக்கம்


இப்போது இவ்விடமே எம் தலைவியாம் உமையவளும்
எம்பிரானாம் சிவனாரும் வீற்றிருக்கும் ஆலயமோ இத்திருக்குளம்!

அத்தகைய நீர் நிறை மடுவில், உட்புகுந்து,
பின்னர் வெளிவந்து, பரவி, அளைந்து இதன் வேகத்தால்,


நாம் அணிந்திருக்கும் சங்குகளும் சலசலக்க,
அவற்றுடன் இணைந்து கால்களில் இருக்கும்


சிலம்புகளும் கலகலக்க, நீரின் ஓட்டத்தால்
நம் மார்பகங்கள் விம்மித் தணிய, அதனைத் தாளாது


இக்குளத்து நீரும் மேலும் விம்மி மேற்பொங்க,
இவ்வண்ணம் களிப்புடனே தாமரை மலர்கள்


நிறைந்திருக்கும் இத்திருக்குளத்தில்
விரைந்து, பாய்ந்து நீராடடி என் பெண்ணே!



அருஞ்சொற்பொருள்:

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இதே பாடலுக்கு இன்னுமொரு அருமையான விளக்கம் படித்தேன். முடிந்தால் அதனை இன்றிரவு இடுகிறேன்!

Read more...

Tuesday, December 26, 2006

"ஆடேலோர் எம்பாவாய்"- 2. [12]

"ஆடேலோர் எம்பாவாய்" - 2. [12]

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்


கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

ஊழிக்காற்றினைப் போல நம்மை இப்படியும் அப்படியுமாய்
அலைக்கழிக்கும் இந்தப்பிறவித்துன்பம் கெட்டழிந்து போவதற்கு
நாம் விரும்பி வழிபடும் நீர்த்தன்மையன்!

இவ்வுலகினைக் காப்பதற்கென தில்லைச் சிற்றம்பலத்தில்
கையில் தீச்சட்டி ஏந்தி ஆட்டம் நிகழ்த்தும் ஆனந்தக்கூத்தன்!

மேலிருக்கும் வானுலகையும், நாம் வாழும் நிலமான இப்பூமியையும்
ஒரு விளையாட்டுப் போலவே காத்தும், படைத்தும், பின்னர்
கவர்ந்தும் இயக்கம் நிகழ்த்தி வருபவன்!

அவனது இத்தகைய புகழினை சொற்களால் பாடிப் போற்றியும்,
கைத்தாளம் போடுவதாலும், நீரில் துழாவுவதாலும்


கைவளைகள் ஒலிக்கவும், இடுப்பினில் கட்டிய மணிகளால் ஆன
மேகலைகள் கலகலவென ஒலிக்கவும், நீரின் மேல் தெரியும்


கூந்தலின் மேல் வண்டுகள் வந்து ரீங்காரமிடவும்,
மலர்களால் நிறைந்த இக்குளத்தில் கைகளாலும்,


கால்களாலும் குடைந்து, குடைந்து, நம் ஈசனின்
பொற்பாதங்களைப் பணிந்து, புகழ்ந்து, வியந்து,


வாழ்த்தியபடியே நீராடடி என் பெண்ணே!

[காற்று, நீர், நெருப்பு, வான், நிலம் என ஐம்பூதங்களும் இப்பாடலில் இடம் பெற்றிருப்பது இப்பாடலின் சிறப்பு!
மேலும், இப்பாடலின் மூலம், பலவித நிகழ்வுகளால் ஏற்படும் இனிய ஆரவாரத்தையும் உணர்ந்து அனுபவியுங்கள்! ]

அருஞ்சொற்பொருள்:

ஆர்த்தல் - ஆரவாரம் செய்தல்; குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; வார்கலைகள் - இடுப்பில் அணியும் மேகலைகள்; குழல் - கூந்தல்.

Read more...

Monday, December 25, 2006

"ஆடேலோர் எம்பாவாய்" [11]

"ஆடேலோர் எம்பாவாய்" [11]

திருப்பாவை 30 பாடல்கள்; ஒரு மாதம் சரியாக வரும். ஆனால், திருவெம்பாவை 20 தானே! எப்படி மார்கழி முழுதும் வரப்போகிறது எனக் கேட்டார்கள்.
தோழியரை எழுப்ப முதல் 15ம், பின்னர் அரங்கனையும், அவன் சுற்றத்தையும் எழுப்பியும், போற்றியும், அடுத்த 15ம் ஆண்டாள் பாடியருளியிருக்கிறார்.

மாணிக்க வாசகரோ, ஒரு படி மேலே போய்,
தோழியரை எழுப்ப முதல் 10, அவன் பெருமை பாடி குளத்தில் நீராடி அடுத்த 10,[இரண்டும் சேர்த்து திருவெம்பாவை] பின்னர் திருக்கோயிலுக்குச் சென்று, சிவனாரையே எழுப்பிப் போற்றும் அடுத்த 10 [திருப்பள்ளி எழுச்சி] என 30 பாடல்கள் பாடித் தந்திருக்கிறார்!!

அந்த வகையில், "பூம்புனல் பாய்ந்து ஆடும்" அடுத்த பத்து பாடல்களைப் பார்க்கலாம்!!

இவை "ஆடேலோர் எம்பாவாய்" எனும் தலைப்பில் வரும்!


"ஆடேலோர் எம்பாவாய்" [1]

11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி


ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்

மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

11.
மலர் நிறைந்ததால் வண்டுகள் மொய்க்கின்ற தடாகத்தில் இறங்கி
முகம் மேலே தெரியக் கைகளால் துழாவித் துழாவி நீராடுகையில்
உன் திருவடிதடங்களைத் தேடுவதாய் எண்ணி, அக்கழல்களின்
பெருமையினைப் பாடி வழிவழியாய் வணங்கிட்ட உன் அடியவராம்
நாங்கள், பெறற்கரிய வாழ்வினைப் பெற்றோம் என் ஐயனே!

சுடர்விட்டு எரிகின்ற செந்தழல் போல் சிவந்தநிறமுடையானே!
திருநுதலில் வெண்ணீறு பூசி நிற்கும் செல்வனே
சிற்றிடையும், மை பூசிய அகன்ற விழிகளையும் உடைய
உமையவளின் அழகிய மணவாளனே! எங்கள் ஐயனே!

எங்களையும் ஒரு பொருட்டாக எண்ணி திருவிளையாடல் புரிந்து
நீவிர் ஆட்கொண்ட திறத்தால், உமது அடியவர்கள்
அடைகின்ற சிவாநுபவத்தை யாமும் அடைந்து போனோம்!
இதன் விளைவால் நாங்கள் தளர்ச்சியுறா வண்ணம்
எங்களைக் காத்தருள்வாய்! எனப் பாடடி என் பெண்ணே!

[குளிக்கையில், கைகளை அசைத்து அசைத்து நீந்துகையில், அவன் கழல்களைத் தேடுவதாக உணர்கின்றனர் இவர்கள்! அதில் மெய்மறந்தோ, அல்லது, உலகியல் வழியாகவே, நீந்துவதால் ஏற்படும் களைப்பு தெரியாமல் இருக்கவும், அதற்கும் சிவனையே வணங்கும் இவர்கள் அநுபவம்தான் எத்தகையது!]

அருஞ்சொற்பொருள்:
மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

Read more...

Sunday, December 24, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [10]

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10



10.
[மேலும் சிவனாரின் பெருமையை வியந்து, அனைவரும் பாடுவது, திருக்கோயில் பணி செய்யும் பெண்டிரிடம் வினாவுவது:]

பாதாளம் எனப்படும், பூமிக்குக் கீழிருக்கும் ஏழு உலகங்களையும் தாண்டி
சிவனாரின் திருப்பாத கமலங்கள், சொல்லுதற்கும் எட்டா தூரத்தில் உள்ளன;

கொன்றை மலர்களால் நிறைந்துள்ள கட்டிய சடைமுடியும் எல்லாப்
பொருள்களின் எல்லையையும் தாண்டி விரிந்து பரந்திருக்கின்றன;

மலைமகளாம் உமையினை தன் ஒருபாகம் வைத்தவன் அவன்;
அவனது திருவுருவங்களோ ஒன்றிரண்டு எனச் சொல்லவொண்ணாது;

நான்மறைகளும், விண்ணவரும், மண்ணிலுள்ளோரும் வணங்கித் துதித்தாலும்
இத்தன்மையானவன் எனச் சொல்ல முடியாத பேரருளாளன்;

என்றும் நம் துணைவன்; நண்பன்; அவன் இருக்கும் இடமோ அவனது
திருத்தொண்டர்களின் உள்ளமெனும் கோயிலிலே!

சொல்லொணா குணமுடைய சிவனது திருக்கோயிலில் அருட்தொண்டாற்றி வரும்
குற்றமொன்றும் இல்லாத குலப்பெண்களான பணிப்பெண்களே!

அவன் வசிக்கும் ஊர் எது? அவனது பெயர்தான் என்ன?
எவர் அவனது உறவினர்கள்? யாரெல்லாம் உறவினர் ஆகமாட்டார்?

அவனை முறைப்படி வாழ்த்தி வணங்கிப் பாடும்
வழிமுறைதான் என்னே? சொல்லுங்களேன் பெண்டிரே!

அருஞ்சொற்பொருள்:
சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.

Read more...

Saturday, December 23, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [9]

"பரிசேலோர் எம்பாவாய்" [9]

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

[ஒருவழியாக, அனைவரையும் எழுப்பிச் சேர்த்த பின்னர், அவன் பெருமையைப் பாடியவண்ணம்.....] அனைவரும்:

பழமையென இவ்வுலகில் சொல்லும் அனைத்துப் பொருள்களுக்கும்
பழமையாக முந்தி நிற்கும் பெரும் பொருளாம் சிவபரனே

பின்னர், புதுமையென ஒவ்வொன்றாய்த் தோன்றி வருகின்ற
அனைத்திற்கும் இன்னும் புதுமையினை அளிப்பவனே!

உன்னை எங்கள் தலைவனாகப் பெறும் பேறு பெற்ற
உன்னடியவரான நாங்கள் என்றும் உன் அடியார்களை
வணங்கிடுவோம்! அவர்களை எம் உற்றவராகக் கொள்வோம்!
அத்தகைய அடியாரையே நாடி மணம் புரிவோம்!
அவர்கள் சொல் கெட்டு அவர்களுக்கு அடியவராகி
அவர் இடும் பணியினையும் செய்திடுவோம்!

இவ்வாறே எங்கட்கு எம்பிரானாகிய நீவிர் அருள் செய்தால்
ஏதாகிலும் குறையுமுண்டோ! சொல்லடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை

Read more...

Thursday, December 21, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [8]

"பரிசேலோர் எம்பாவாய்" [8]


கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்


கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ


வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ


ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

8.
தோழியர்: கோழிகள் கூவிட, பறவைகள் கீச்சிட எங்கும் ஒலிமயம் !
ஏழுசுரங்களாலான இசைக்கருவிகளும் ஒரே சுருதியிலான
வெண்சங்கும் சேர்ந்து ஒலித்திட, எங்கும் இசைமயம்!

தனக்குவமை இல்லாத அருட்பெரும் சோதிவடிவானவனையும்
அப்பெருமானின் தனிப்பெருங்கருணையினையும் , ஒப்பில்லாமணியின்
மேன்மைப் பொருட்களையும் போற்றிப் புகழ்ந்து பாடினோமே

அது உன் செவிகளுக்குக் கேட்கவில்லையா? அதென்ன உன் கூடவே வாழும்
உறக்கமோ, அதை உன் வாய் திறந்து சொல்வாயடி!
ஆழ்கடலில் அரவம் குடைபிடிக்க ஆழ்துயிலில் அயர்ந்தது போல்
நடிக்கும், ஆயினும் அனவரதமும் அரனைத் துதிக்கும்
சக்கரதாரியாம் அரங்கனது அன்பு போன்றதோ உன் பக்தியும்!

ஊழிக்காலங்கள் அனைத்திற்கும் முன் தோன்றி,
இன்னும் அழிவின்றி நிற்கின்ற,
சக்தியாம் மாதொரு பாகம் உடையானைப்
பாடடி என் பெண்ணே!!

அருஞ்சொற்பொருள்:

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

Read more...

Tuesday, December 19, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [7]

"பரிசேலோர் எம்பாவாய்" [7]

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்


சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்

என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

தோழியர்: அடி பெண்ணே! அலுப்பாய் இருக்குதடி உன்னோடு! இதுவும் நீ கொண்ட
குணங்களில் ஒன்றோ? எத்தனையோ பல தேவர்களால் நினைப்பதற்கும் கூட
அரிதானவனாம், பண்பாளனாம் சிவபெருமானின் சங்கொலிகள் முதலான
சிவச் சின்னங்களைக் கேட்ட மாத்திரமே 'சிவ சிவ" எனச் சொல்லிடுவாய்!

"தென்னாடுடைய சிவனே" எனும் சொல் சொல்லி முடிக்கும் முன்னரே
தீயிலிட்ட மெழுகு போல உருகிடுவாய்!


எங்கள் பெருமானை, "என் அரசே! அமுதம் போலும் இனியவனே!"
என்றெல்லாம் ப்ல்வேறு விதமாய்ப் போற்றிச் சொல்லுகிறோம்!

இன்னமும் எழுந்திராமல் தூங்குகிறாயே! வீம்பாக கண்ணை மூடிக்கொண்டு
தூங்குவது போல் நடிக்கும் கடுநெஞ்சம் கொண்டவர் போன்று
ஓரசைவும் இன்றிக் கிடக்கின்றாயே! அப்படியாகிய உன் தூக்கத்தின்
தன்மைதான் என்னவோ? சொல்லடி என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

Read more...

"பரிசேலோர் எம்பாவாய்" [6]

"பரிசேலோர் எம்பாவாய்" [6]


மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6


6.
தோழியர்: மான் போலும் அழகிய பெண்ணே! நேற்றையதினம் நீ, "நாளைக்கு
நானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன்" எனச் சொல்லிவிட்டு,
சிறிதும் வெட்கமின்றி இன்று எங்கே நீ சென்றுவிட்டாய்?
உனக்கு பொழுது இன்னமுமா விடியவில்லை?

வானகமும், மண்ணகமும், பிறவுலகும் அறியவும்
அரிதான நம் பெருமான் நமக்கென இரங்கி, தானே வந்திங்கு
கருணையுடன் நோக்குகிறான்! விண்ணுக்கும், மண்ணுக்குமாய் விரிந்து கிடக்கும்
அவனது சீர்ப்பாதங்களைப் பாடி வந்த எங்களுக்கு பதில் சொல்லவாவது
உன் பவளவாயைத் திறப்பாய்! உடலும் உருகாமல் நிற்கின்றாய்!
இந்நிலை உனக்குப் பொருத்தமே! எமக்கும், மற்ற அனைவர்க்கும் தலைவனாம்
பேரரசனாம் சிவனாரைப் பாடடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.

Read more...

Monday, December 18, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [5]

"பரிசேலோர் எம்பாவாய்" [5]

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: திருமாலும், பிரமனும் காணாமல் தவித்த மாமலையினை
நாமெல்லாம் நன்கறிவோம் எனப் பொய்யாகப் பிதற்றும்,
பாலும், தேனும் குழைத்தது போலும் இனிய சொல் பேசிடும்
ஏமாற்றுக்காரியே! கதவைத் திறந்திடுவாய்!


இவ்வுலகும், விண்ணுலகும்,பிறவேறு உலகங்களும், அறிவதற்கும்
அரிதான சிவனாரின் திருக்கோலத்தையும், நம்மையெல்லாம்
ஆட்கொண்டு குற்றங்களை அழித்திடும் பெருமையினையும், பாடி
"சிவனே சிவனே" என்று இங்கு நாங்கள் ஓலமிட்டுக் கதறுவதைக்
கேட்ட போதிலும், உணர்வொன்றும் நெகிழாமல், உணர்ச்சியற்று
இருப்பது எப்படியோ? மணம் நிறை கூந்தலுடையாளே !
இதுவோ உன் தன்மை? சொல்லடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.

Read more...

Sunday, December 17, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [4]

"பரிசேலோர் எம்பாவாய்" [4]

4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ


எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

தோழியர்: முத்துப் போன்ற ஒளிவீசும் புன்னகை உடைய பெண்ணே!
உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?

படுத்திருப்பவள்: கிள்ளை மொழி பேசும் நம் தோழியர் அனைவரும்
வந்து சேர்ந்தனரோ? கொஞ்சம் எண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்!

தோழியர்: உள்ளவரை உள்ளபடி எண்ணித்தான் சொல்கின்றோம்
ஏதேதோ கள்ளம் சொல்லி வீணாகக் காலத்தைப்
போக்காமல் எழுந்திடுவாய் அவ்வளவினிலே!
விண்ணவரும் தம் துயருக்கு மருந்தெனவே போற்றிடும்
அனைத்து வேதங்களுக்கும் மேன்மையாய் விளங்கிடும்
முழு முதற் பொருளாகி, காட்சிக்கு இனியவனாம் சிவனாரை
முறையாகப் பாடி, கண்ணீர் மல்கி, எங்கள் உள்ளம் உருகிடப்
பாட வந்திருக்கும் நாங்களோ இது போலும் கள்ளமெலாம் செய்வோம்!
எங்கள்மேல் நம்பிக்கை இல்லையெனில், எழுந்து வந்து நீயே
எண்ணிப் பார்த்துக் கொள்! அப்படி எண்ணிக்கை குறைந்திருப்பின்
மீண்டும் உன் மலர்ப்படுக்கை சென்று வேண்டுமானால்
திரும்பவும் தூங்கச் செல்லடி! என் பெண்ணே!

அருஞ்சொற்பொருள்:
ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்); அவமே - வீணாக

Read more...

Saturday, December 16, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [3]

"பரிசேலோர் எம்பாவாய்" [3]


3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

தோழியர்: முத்தையொத்த ஒளியுடைய புன்னகையை வீசும் பெண்ணே!
அனைவர்க்கும் முன்பாக எழுந்திருந்து வாயினிக்க
"அப்பன், ஆனந்தமளிப்பவன், இனிப்பவன் என்று இனிக்கப் பேசுவையே
இன்றென்ன ஆயிற்று உனக்கு? வந்து உன் வாசல் திறப்பாய்!


படுத்திருப்பவள்: பத்து குணம் உடைய என் தோழியரே! இவற்றினால் இறைவனின்
அடியவராய் ஆனவரே! என்னிடம் அன்புடையீரே!
பாவை நோன்புக்குப் புதியவளாம் என்னிடம் குற்றமிருப்பின்
என்னையும் அடியவாராக்குதல் உமக்கு சம்மதமில்லையோ?


தோழியர்: எம்மிறைவன் மேல் உனக்குள்ள அன்பெமக்குத் தெரியாதோ?
பத்தும் நிறைந்த சித்தம் உள்ள உன் போன்ற அழகியர்
பாடாமல் போவாரோ சிவானாரை? எங்களுக்கு இதுவும் வேண்டும்
இன்னமும் வேண்டும்! சரிதானே என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:
அத்தன் - அப்பன்; பத்து - தசகாரியம்[விளக்கம் மேலே காண்க!]; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.

Read more...

Friday, December 15, 2006

"பரிசேலோர் எம்பாவாய்" [2]


"பரிசேலோர் எம்பாவாய்" [2]


2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி

ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2


தோழிகள்: "பாசமென்னும் எனது உணர்வெல்லாம் பரஞ்சோதியாம் சிவனாருக்கே"என
இரவும் பகலும் எப்போது சொல்லித் திரிவாயே, ஏ சீரான உடல் கொண்ட பெண்ணே!
பேசியதெல்லாம் மறந்துபோய் இப்போது இந்த மணம்தரும் மலர்ப் படுக்கைக்கே
உன் அன்பையெல்லாம் காட்டி ஆசையும் வைத்துவிட்டாயோ நேரிழையே!

படுத்திருப்பவள்: ஏ பெண்களே! சீ! சீ! இவையெல்லாமா நீவிர் பேசுவது?

தோழியர்: விளையாடி உன்னை பழிப்பதற்கோ நாங்கள் வந்தோம்? அதற்கான இடம்
இதுவோ?
விண்ணவரும் கண்டு தம் சிறுமையும் இதன்தன் பெருமையும் எண்ணி
வணங்கிடக் கூசுகின்ற மலர்ப்பாதங்களை நமக்குத் தந்தருளிட வருகின்ற
ஒளியுருவான, சிவலோகத்தை ஆளுகின்ற தில்லைச் சிற்றம்பலத்தே ஆடுகின்ற
ஈசனுக்கு அன்பு செலுத்துவது எவர்? இங்கே உறங்கும்,
உறங்கும் உன்னை எழுப்பும் நாமெல்லாம் யார்? சொல்லடி என் பெண்ணே!


அருஞ்சொற்பொருள்:

நேரிழை - சீரான உடல் கொண்ட பெண்; போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

Read more...

"பரிசேலோர் எம்பாவாய்" [1]



"பரிசேலோர் எம்பாவாய்" [1]

வழக்கம் போல நண்பர் ரவி கண்ணபிரானின் பதிவிற்குச் சென்றபோது மாதங்களில் சிறந்த மார்கழி பிறப்பதை முன்னிட்டு, தனது சுப்ரபாதம் தொடரை சற்றே நிறுத்தி, கோதை புகழ் பாடப் போவதாகச் சொல்லியிருந்தார்!

அதைப் படித்ததும் நாம் ஏன் சிவனாரை எழுப்பும் திருவெம்பாவையைப் பதிவிடக்கூடாது என ஒரு எண்ணம் எழுந்தது!

இது சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அருளியது.

தினம் ஒரு பாடல் என்னால் முடிந்த அளவு விளக்கத்துடன் வரும்!
இனி பாடலைப் பார்ப்போம்!

1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். !

முதலும் முடிவும் இல்லா அரிய பெரிய
சோதியை நாங்கள் பாடுவதைக் கேட்டும் வாள் போலும் அழகிய கண்ணுடைய
நீ இன்னும் தூங்குகிறாயே! உணர்வற்றுப் போனதோ உன் செவிகள்?
சிவபெருமானின் சீரடிகளை வாழ்த்துகின்ற வாழ்த்தொலிகள் வந்து
வீதியின் துவக்கத்தில் கேட்டபோதிலேயே விம்மி விம்மி தன் உணர்விழந்து
தானிருக்கும் மலர்ப் படுக்கையிலேயே புரண்டும் எழுந்தும் அதிலே
ஏதொன்றும் செய்வதறியாது தன்னை மறந்து கிடப்பவளின் திறம்தான் என்னே!
என் தோழியே!இதுவோ நீ செய்வது? அதை எமக்குக் கூறுவாய்!


அருஞ்சொற்பொருள்:


மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;
அமளி - படுக்கை.

Read more...

Wednesday, December 13, 2006

அ.அ.திருப்புகழ் -- 15 - " செகமாயை உற்று"

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 15 " செகமாயை உற்று"

குழந்தை வரம் வேண்டும் என ஏங்குவோர் தவறாது படிக்க வேண்டிய ஒரு பாடல் இது!

சுவாமிமலை குருநாதன் மீது பல பாடல்கள் அருணையார் பாடியிருக்கிறார். இதுவே நான் பதியும் முதல் ஏரகப் பாடல்!

-------------------பாடல்-------------------------

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
********************************************************

------------------- பொருள் ----------------------

[வழக்கம் போல் பின்பாதி பார்த்து முன் பார்க்கலாம்.]

"முகமாயம் இட்ட குறமாதினுக்கு முலைமேல் அணைக்க வரும் நீதா"

அழகுறு முகவசீகரம் கொண்ட
குறவள்ளிதனை அணைத்து
இகசுகம் அருளிட எண்ணியே
தினைப்புனம் வந்த நீதியரசே!

"முது மாமறைக்குள் ஒரு மா பொருட்கு
உள் மொழியே உரைத்த குருநாதா"

வேதநாயகனை அன்றொருநாள்
வேதத்தின் பொருள் கேட்க
ஓமெனத் துவங்கிய பிரமனை நிறுத்தி
பிரணவத்தின் பொருள் கேட்க,
தயங்கிய பிரமனை உதைத்து,
தலையில் குட்டி, சிறையில் தள்ள,
தடுத்துக் கேட்ட தந்தை சிவனாரை
பொருளுரைக்க துணிந்து கேட்டு
அவரறியாப் பிரணவப் பொருளை
பணிந்து நின்ற சிவனாரின் காதில்
ஓம எனும் சொல்லுக்குப்

பொருளுரைத்த என் குருநாதா!

"தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே"

கடவுளர்க்கு அளித்திட்ட
சிரமங்கள் ஏதுமின்றி,
ஒருவிதத் தடையுமின்றி
அடியவனான எனக்கு
தங்கத் திருவடி தரிசனம்
காட்டி அருளிச் செய்த
ஏரகம் எனும் சுவாமிமலையில்
விருப்புடன் வீற்றிருக்கும்
திருமுருகப் பெருமானே!

"தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேல் எடுத்த பெருமாளே"

சூரனை மாய்த்திட அருள் கொண்டு
வீரனாம் மகனுக்கு சக்திவேலை
தாயவளும் வழங்கிடவே,
காவிரிக்கு வடபுலத்தில்
ஏரகமெனும் திருத்தலத்தில்
போர்புரிய ஆயத்தமாகி
வீரவேலைத் தாங்கிய
பெருமைக்கு உரியவரே!

"செகமாயை உற்று, என் அக வாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்பம், உடல் ஊறித்,
தெசமாதம் முற்றி, வடிவாய் நிலத்தில்
திரம் ஆய் அளித்த, பொருளாகி,"


உலகெனும் மாயையில் சிக்குண்டு
இல்லறமெனும் கட்டில் அகப்பட்டு
அவளுடன் உறவாடி அவள் கருவுறவும்
பத்து மாதம் நிறைவாய்ச் சுமந்து
குறையா அழகுடன் புவியில் உதித்த
மகவு போல பெருமானே நீவிரும்
எம் குலத்தில் அருளிச் செய்து,

"மக அவாவின் உச்சி, விழி, ஆநநத்தில்,
மலைநேர் புயத்தில் உறவாடி,
மடிமீது அடுத்து விளையாடி"

தேவரீரே எனக்கு உதிக்க
அவா மிகுதியினால் நானும்
குழந்தைப் பாசம் மிகுந்திடவே
கண்களில் எடுத்து ஒத்தியும்,
முகத்தோடு முகம் சேர்த்தும்,
மலை போலும் புயங்களில்
உம்மைத் தவழவிட்டும்,
என் மடி மீது அமர்ந்து
விளையாடி மகிழ்ந்தும்,

"நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்!"

ஒவ்வொரு நாளிலும்
உம் மணிவாயினால்
எனக்கு முத்தம் தந்து
அருளிடல் வேண்டும்!
---------------------------------------------------

---------அருஞ்சொற்பொருள்---------------


தெச மாதம் = பத்து மாதங்கள்
திரம் ஆய் = சிறந்த குழந்தை
ஆநநத்தில் = முகத்தோடு முகத்தில் [அநம் என்றால் முகம்][அநம்+அநம்=ஆநநம்]
முத்தி = முத்தம்
முக மாயம் = முக வசீகரம்
முது மா மறை = ஆதி வேதம்
ஒரு மா பொருட்குள் மொழி = ஓம் என்னும் பிரணவம்
தகையாது = தடையின்றி
ஏரகம் = சுவாமி மலை
பாரிசம் = பக்கம் [side]
சமர் = போர்
--------------------------------------------------


வேலும் மயிலும் துணை!

முருகனருள் முன்னிற்கும்!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
---------------------------------------------------

Read more...

Monday, December 11, 2006

"குறும்பெல்லாம் குறும்பா?" [தேன்கூடு]

குறும்பென்னும் தலைப்பளித்து
விரும்பும்படி எழுதெனவே
சிறிலும் ஆணையிட்டார்!
நானும் முயலுகிறேன்!

அறியாத வயதினிலே
பெற்றவர்க்குப் போக்கு காட்டி
உண்ணாமல் உறங்காமல்
பண்ணியது ஒரு குறும்பா?

வாய்நிறைய சோறூட்டி
காய்நிலாவைத் தான் காட்டி
தாயங்கு ஊட்டியதை
தூவெனவே துப்புவேனாம்!

குறும்பைப் பாரெனவே
விருப்புடனே தாயவளும்
சோறூட்டி மகிழ்ந்திடுவாள்
என்பசியைப் போக்கிடுவாள்.

பள்ளியிலே படிக்கையிலே
பக்கத்து மாணவனை
நச்சென்று கிள்ளிடுவேன்
ஓவெனவே அவன் அழுவான்!

குறும்பா செய்கிறாய் எனவே
ஆசானும் அடித்திடுவார்
பெஞ்சின் மேல் ஏற்றிடுவார்
கொஞ்சம் நான் சிரித்திருப்பேன்!

குறும்புகள் செய்த காலம் முடிந்து
அரும்பெனவே மீசை முளைத்திட
அடுத்தொரு ஆசை வளர்ந்தது
அடுத்தவளைப் பார்க்கச் சொன்னது!

கல்லூரி செல்லுகையில்
கவினாக முடி ஒதுக்கி
கன்னியர்பால் பார்வை செலுத்தி
கட்டாக நின்றிடுவேன்!

பேருந்தில் பயணிக்க
அவளங்கு வந்திருக்க
அளவோடு பார்வையிட்டு
அரைக்கண்ணால் பார்த்திடுவேன்!

தெரியாமல் பக்கம் சென்று
அறியாமல் அவளை உரசி
கோபத்தில் அவள் முறைக்க
அரைக்குறும்பாய்ச் சிரித்திடுவேன்!

மருத்துவமும் பயிலுகையில்
ஒருத்தருமே அறியாமல்
அசைன்மெண்டை மாற்றி வைத்து
அடுத்தவனை விழிக்க வைப்பேன்!

காதலித்த பெண்ணவளும்
எனக்கெனவே காத்திருப்பாள்
என்பதனைத் தானுணர்ந்து
தவிக்க விட்டேன் சில காலம்!

இந்தியாவில் சில வருடம்
ஜாம்பியாவில் சில வருடம்-மீண்டும்
இந்தியாவில் சில வருடம் -பின்னர்
அமெரிக்காவில் சில வருடம்

இப்படியே குறும்பாக
மனம் போன போக்கினிலே
தினம் இங்கு கழித்த பின்னர்
கேள்வியொன்று எழுகிறது!

குறும்பென நான் நினைத்ததெல்லாம்
உண்மையிலே குறும்பாமோ?
வெறும் போக்காய் வாழ்ந்ததன்றோ!
வீணாளைக் கழித்ததன்றோ?

அப்போது பொறியொன்று தட்டிற்று!
தப்பல்ல! நிஜமென்று சொல்லிற்று!
வாழ்நாளைக் களிப்பாகக் கழித்ததெல்லாம்
வீணாளல்ல! வாழ்ந்த நாளே!

இருக்கும்வரை இனிப்பாக வாழ்ந்திடு!
அடுத்தவரை அன்பாக வைத்திரு!
தொடுக்கின்ற செயலை முடித்திடு!
படுக்கும் வேளையில் பாங்காய்ச் சென்றிடு!

குறும்பென நீ நினைப்பதெல்லாம் குறும்பல்ல!
வெறுப்பின்றிச் செய்திடலே குறும்பு!
அடுத்தவரை அழச்செய்தல் குறும்பல்ல!
தொடுத்தவரும் சிரித்திடலே குறும்பு!

Read more...

Friday, December 08, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 10 -- "இனியவை கூறல் [2]

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 10 -- "இனியவை கூறல் [2]

"மண்சிகோப்பா! நேத்து அவசரமாப் பூட்டேன் பாதியிலியே வுட்டுட்டு! இப்போ மிச்சமும் சொல்றேன், எளுதிக்கோ" என்றான் மயிலை மன்னார்.

இனிமையாக அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டதும், மேலே பேச மனமின்றி அவன் சொன்னதைக் கீழே தருகிறேன்!


அதிகாரம் 10 -- "இனியவை கூறல்" [இரண்டாம் பகுதி]

முதல் 5 குறள்களுக்கான விளக்கத்தை இங்கே படிக்கவும்!

"அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்." [96]

93-வது கொறள்ல அறம்னா அடுத்தவன்கிட்ட இன்பமாப் பேசறதுதான்னு ஸொன்னாரு இல்லியா? இங்கே அந்த அறம் எப்படி வளரும்னு ஸொல்றாரு. இன்னா பேசினா அடுத்தவனை தும்பப்படுத்தாம இருக்கும்னு யோசிச்சு, தன்மையா, அன்பா சொன்னியானா, ஒங்கிட்ட இருக்கற கெட்டதெல்லாம் போயி, நல்லது மட்டும், .....அதாங்காட்டி, அறமே ஒங்கிட்ட ஜாஸ்தியாவுமாம்!

"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்." [97]

இப்பிடி அல்லார்கிட்டயும் அன்பா, இனிமையா பேசறதுனால ஒனக்கு இன்னா கெடைக்கும்ன்றே? ஒம்மனசு சுத்தமாயிருக்கும்; வாள்க்கை நேர்மையாயிருக்கும்; ஒரு நிம்மதியான வாள்க்கை ஒனக்கு அமையும்! இத்தெல்லாம் நான் ஸொல்லலை கண்ணு! ஐயன் ஸொல்றாரு!

"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்." [98]

அடுத்தவனுக்கு தும்பம் கொடுக்காத நீ ஸொல்ற ஸொல்லுங்க இன்னும் இன்னால்லாம் தரும்ன்றாரு பாரு!
இந்த சென்மத்துல மட்டும் இல்லியாம்; அடுத்த பொறவிலியும் ஒனக்கு அது நல்லதே பண்னுமாம்!

இதுக்கு மேல இன்னா வோணுன்ற நீ? ஒன்னிய எப்பிடியாவது இனிப்பா பேச வைக்கணுன்றதுக்கோசரம், இன்னால்லாம் ஆசை காட்றாரு பாரு ஐயன்!

ஆனா, இத்தெல்லாம் பொய்யின்னு நெனச்சுராத நீ! அவரு பெரிய சித்தரு. கரீட்டாத்தான் ஸொல்லிருக்காரு.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது." [99]

இப்ப ஒன்னியப் பாத்து 'அட ஏண்டா வாராவாரம் இப்பிடி தொந்தரை பண்ற நீ? வேற வேலை இல்லியா ஒனக்கு?' அப்பிடீன்னு நான் வுளுந்தேன்னு வெச்சுக்க? நாளைக்கொண்டு இங்க வருவியா நீ?

அதே, "வாய்யா என் ராசா! ஏன்யா ஒன் மொகம் வாட்டமா இருக்கு"ன்னு நான் கேட்டதாக்காண்டியும்தானே நீ இம்மா நேரம் எனக்காவ காத்திருந்து நான் ஸொல்றதையெல்லாம் எளுதிக்கினு போற!

அப்பிடி நான் ஒன்னியப் பார்த்து சொல்றது ஒனக்கு இனிப்பா இருக்கையில, அப்பிடியே நீ பேச இன்னா கசக்குது ஒனக்கு? இன்னா கொறஞ்சி பூடுவே நீ?

இப்ப நீ ஸொன்னதியே எடுத்துக்குவோம். எவனோ ஒர்த்தன் எத்தியோ பத்தி ஏதோ கஸ்மாலமா எளுதிட்டான்றதுக்காவ, நீயும் வேகப்பட்டு வார்த்தையைக் கொட்டினேன்னு வெய்யி. அதுல இன்னா சொகம் ஒனக்கு? அத்தோட ஒன் அரிப்பு தீந்து போச்சா? அதுக்கு அவன் இன்னொண்ணு எளுதப் போறான். இப்பிடியே வளந்துகினே பூறதுல ஆருக்கு லாவம் ஸொல்லு!
அத்த வுட்டு, 'தம்பி, நீ இப்பிடி எளுதறது நல்லாயில்ல. நீ இன்னா ஸொல்லணுமோ அத்த தன்மையா நாலு பேரு படிக்கற மாரி ஸொல்லிட்டுப் போயேம்ப்பா"ன்னு சொல்லிப் பாரு. அந்த ஆளுகிட்டயே ஒரு மாத்தம் தெரியும். வெளங்கிச்சா?" என்றான் மன்னார். நானும் புரிஞ்ச மாரி தலையாட்டி வைத்தேன்!

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று." [100]

என் நைனா ஒரு கத சொல்லும். ஒரு ஆளு வெத்தலை ஒரு கவுளி வாங்கினானாம். வூட்டுக்கு வந்ததும் தண்ணில அத்த அலம்பி வெச்சனாம். அப்போ ஒரு 3 - 4 வெத்தலை கொஞ்சம் வாடின மாரி இருந்திச்சாம். சரி, மத்ததெல்லாம் நல்லா இருக்கே. இத்த எதுக்கு தூக்கி எறியணும்னு சொல்லிட்டு அந்த வாடின வெத்தலையை அப்போதைக்கு போட்டுகிட்டானாம். அடுத்த தபா அந்த வெத்தலைப் பொட்லத்தை பிரிச்சப்போ, இன்னும் ஒரு 4 - 5 வெத்தலை அளுகற மாரி இருக்கச்சொல்லி, அத்த அன்னிக்கு போட்டானா. இப்பிடியே அந்த ஒரு கவுளி வெத்தலையையும் அளுகின வெத்தலையாவே போட்டு தீத்தானாம் அவன்!

மொதல்லியே அந்த 4 வெத்தலையை தூக்கி கடாசிருந்தான்னா, முளுக் கவுளியையும் நல்ல வெத்தலையாவே போட்டு துப்பியிருப்பான். ஆனா, செய்யலை.

அதுமாரி, ஒங்கிட்ட நல்லா பளுத்த பளமா, இனிப்பா, கனிஞ்சு இருக்கறப்ப, அத்த வுட்டுட்டு, காயைப் போயி தின்னேன்னு வெய்யி. அது எப்பிடி இருக்கும்னா, தன்மையா பேசறதுக்கு ஒங்கிட்ட நல்ல வார்த்தையெல்லாம் இருக்கச்சொல்ல, கேக்கறவன்கிட்ட கடு கடுன்னு பேசறது இம்மாம் மோசமோ, அப்பிடீன்றாரு ஐயன்.

இதுக்கு மேல இன்னா சொல்லணுங்கற நீ? இந்த பத்து கொறள்லியும் வரிக்கு வரி ஒனக்கு வரம் கொடுக்கற மாரி , ஒனக்குப் புடிச்ச மாரி, இனிப்பா சொல்லிருக்காரு. இத்தக் கேட்டாச்சும், இனிமேலியாச்சும் நல்லபடியா பேசி பொளைக்கற வளியைப் பாரு. சர்த்தானே கண்ணு!"
என்று கேட்டுவிட்டு,

அது சரி; நேத்து இன்னா வெறும் டீ மட்டும் சாப்ட்டு பூட்டியாமே? நம்ம நாயரு ரொம்ப வர்த்தப்பட்டாரு. நா இல்லேன்னா இன்னா? நீ வளக்கமா சாப்பிடறத சாப்ட்டுட்டு போவ வேண்டிய்துதானே? வா. இன்னிக்கி முளுஸா கட்டிருவோம்!" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துச் சென்றான் மயிலை மன்னார்!

என்ன என் இனிய பதிவர்களே! இனிக் கொஞ்சம் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா உங்கள் எழுத்துகளில்? நிச்சயம் செய்வீர்கள் என நம்புகிறேன்!

இதோ என் மன்னார் கூப்பிடுகிறான். பிறகு பார்க்கலாம்!

Read more...

Thursday, December 07, 2006

"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" --10 -- "இனியவை கூறல்"





"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்" -- 10 -- "இனியவை கூறல்"

"என்ன ரொம்ப சோகமா வரே?" என விசாரித்தான் மயிலை மன்னார்.

"யார் வம்புக்கும் போகாம நல்ல பதிவுகளை எழுதிக்கிட்டிருந்த ஒரு பதிவர் தன்னைப் பத்தியும், தன் குடும்பத்தைப் பத்தியும் தரக்குறைவா எழுதறாங்கன்னு தமிழ்மணத்தை விட்டு விலகறாராம்.
சொல்றது அவர் மனசுக்குப் பிடிச்சதா இருந்தாலும், கொஞ்சம் காட்டம் அதிகமா சொல்றார்னு இன்னொரு பதிவரை விலக்கியிருக்காங்க.
இதெல்லாம் ஒண்ணும் மனசுக்கு சமாதானமா இல்லை. அதான் கொஞ்சம் டல்லா இருக்கேன்." என்றேன்.

"இது ரொம்ப முக்கியமான விசயம். இதைப் பத்தி ஐயன் ரொம்ப தீர்மானவாவே சொல்லியிருக்காரு. இன்னிக்கு அத்தப் பத்தி சொல்றேன். எளுதிக்கோ. ஆனா ஒண்ணு! நான் கொஞ்சம் அவசரமா போவணும். அதனால இன்னிக்கு கொஞ்சம் நாளைக்கு கொஞ்சமாத்தான் சொல்வேன், சரியா? ஒனக்கு வசதிப்படுமா?" என்றான் மன்னார்.

ஏற்கெனவே என் பதிவுகள் ரொம்ப நீளமா இருப்பதாக சக வலைப்பதிவர்கள் குறிப்பிடுவது நினைவுக்கு வர, சட்டென்று,
"அதனாலென்ன? அப்பிடியே செய்துவிடலாம்" என்று உற்ச்சாகமாய்த் தயாரானேன்!

இனி வருவது முதல் ஐந்து குறளும், அதற்கு மன்னாரின் விளக்கமும்!


அதிகாரம் 10 -- "இனியவை கூறல்"

"இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ்
செய்பொருள் கண்டார்வாய்ச் சொல்." [91]

இனிய சொல்லுன்னா இன்னா? அதுக்கு இன்னா அளவு? ரெண்டு விசயம் அதுக்கு முக்கியமா இருக்கணும். 'படிறு இலவாம்'- வஞ்சனை இருக்கக் கூடாது நீ சொல்றதுல. அடுத்தவனைத் திட்றதா இருக்கக் கூடாது.அது நேரடியா இருந்தாலும் சரி; இல்லை சில படிச்சவங்க அப்பிடியே தேனொளுகற மாரி பேசி, ஆனா, அத்தினியும் விசம் வெச்சதா இருக்குமே அத்தையும் சேத்துத்தான் சொல்றேன்; ரெண்டுமே தப்பு.
அடுத்தது, 'ஈரம் அளைஇ'- அன்புல தோச்சதா இருக்கணும் அது. இன்னாமோ சொல்ல வரே! சரி. அத்த நல்லபடியா, தன்மையா, அன்பா சொல்லிட்டுப் போயேன். ஒனக்கு இன்னா நஸ்டம் அதுல? அன்பில்லாம, வஞ்சனையா பேசினேன்னு வெச்சுக்க, நீ சொல்ல வந்தது அல்லாமே அடிபட்டுப் போயிரும்.
இது ஆருக்கு வருண்றே! சொல்றதைப் புரிஞ்சிகிட்டு, உணர்ந்து சொல்றான் பாரு அவனால தான் இப்பிடி பேச முடியும். வெறுப்புல பேசறவனுக்கோ, அடுத்தவனைத் திட்டணும்னு நினைக்கறவனுக்கோ இது சொல்ல வராது!


"அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல னாகப் பெறின்." [92]

ஒங்கிட்ட ஒரு ஒதவி கேட்டு வர்றவனுக்கு, முளு மனசோட நீ அள்ளிக் கொடுக்கறதைக் காண்டியும், அவன் மூஞ்சியைப் பார்த்து நீ தன்மையா பேசறது இருக்கு பாரு, அதுவே ஒசந்தது! இந்த வாயால சொல்ற சொல்லு இருக்கு பாரு; அதுக்கு அத்தினி பவரு இருக்கு. நெனைப்புல வெச்சுக்கோ!

"முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்." [93]

இந்த கொறளு அறத்துப்பால்ல வருது. அறம்னா இன்னா? அதுக்கு ஒரு வெளக்கம் கொடுக்கறாரு ஐயன் இதுல.
தருமம் பண்றதோ, நல்லபுள்ளையா நடந்துக்கறதோ, குடும்பத்தைப் பாத்துக்கறதோ ஒரு வகையான அறம்னு சொன்னாலும், உண்மையான 'அறம்' இன்னா தெரியுமா?
மொகம் சிரிச்சு, அடுத்தவன் மூஞ்சியை நேராப் பாக்க சொல்ல, ஒனக்குள்ள ஒரு சந்தோசம் வருதா? அத்த அப்பிடியே வாய்க்கு கொணாந்து அவன்ட்ட ஒரு நாலு நல்ல வார்த்தை இனிப்பா பேசுறியா? அவ்ளோதான்! அதான் அறமாம்!

"துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல வர்க்கு." [94]

அல்லார்கிட்டயும் எப்பவும் இனிப்பா, தன்மையா பேசத் தெரியுமா ஒனக்கு? அப்பிடீன்னா, ஒனக்கு எந்தக் கொறவும் வராது. நீ தும்பப்பட மாட்டே! ஒனக்கு வறுமைன்றதும் வராதாம். ஆரைப் பாத்தாலும் காட்டமா பேசினீன்னா, ஒங்கிட்ட ஆரும் அண்டமாட்டாங்க! தெரிஞ்சுக்கோ!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற." [95]

நீ இன்னாதான் தங்கத்திலியும், வைரத்திலியும் மாலையும், மோதிரமும் போட்டுக்க, அத்தெல்லாம் ஒனக்கு ஒரு நகையே ஆவாது.
அதே, பெருசுங்களைப் பார்த்தா ஒரு மரியாதை, ஆரைப் பார்த்தாலும் தன்மையா பேசறது அப்படீன்னு இருந்தேன்னு வெச்சுக்கோ, அத்த விட இந்த தங்கம் வைரம்லாம் ஒண்ணும் பெருசாகாது!
இதான் ரொம்ப முக்கியம்."

என்றவன் சட்டென்று மணியைப் பார்த்துவிட்டு,
"சரி, மிச்சமெல்லாம் நாளைக்கி. சாயந்தரமா வந்துடு" எனச் சொல்லிவிட்டு பறந்து விட்டான்.

அவனில்லாமல், மசால் வடை சாப்பிட மனமின்றி, டீயை மட்டும் குடித்துவிட்டு, நானும் விரைந்தேன்!

மிச்சம் நாளை வரும்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP