Monday, November 24, 2008

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6

"கந்தன் கருணை" - [இரண்டாம் பாகம்] -6
"மனவேடன் காதல்"



'வனவள்ளி கூற்று':

நடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித்தபின்னும், வனவேடன் திருமுகமே மனக்கண்ணில் மிளிர்கிறதே!

மாயமென்ன செய்துவிட்டான்! ஏனவனை மறக்கவில்லை! ஏனிந்தக் குழப்பமென சிந்தித்து அமர்ந்திருக்க,
கையினிலே கூடையுடன், மறுகையில் கோலேந்தி, வாய்மணக்கும் தாம்பூலம் செந்தூரமாய்ச் சிவந்திருக்க
மலைகுறத்தி எனைநோக்கி, குறிசொல்லுமொரு மலைக்குறத்தி ஒயிலாக நடந்து வந்து, 'மனம்விரும்பும் மணவாளன் மடிதேடி வரப்போகும் குறியொண்ணு சொல்லவந்தேன்! இடக்கையைக் காட்டென்றாள்'!
'குறி சொல்லியின் கூற்று':

காடுமலை வனமெல்லாம் எங்க பூமி அம்மே!
கந்தனெங்க குலதெய்வம் காத்திடுவான் அம்மே!
கோலெடுத்து கைபாத்து குறிசொல்லுவேன் அம்மே!
சொன்னகுறி தப்பாது பொய்யொண்ணும் கிடையாது அம்மே!

பூமியிலே பொறந்தாலும் நீ தேவமக அம்மே!
சாமியின்னு கும்பிடலாம் தங்கக்கையி அம்மே!
மலைக்குமரன் மனசுக்குள்ள குடியிருக்கான் அம்மே!
வலைவீசி தேடுறே நீ வந்திடுவான் அம்மே!

இதுக்கு முன்னே நீயவனைப் பாத்திருக்கே அம்மே!
வேசம்கட்டி வந்திருந்தான் புரியலியா அம்மே!
வந்தவனை விரட்டிப்புட்டே அறியாத பொண்ணே!
மறுபடியும் வந்திருவான் சத்தியமிது அம்மே!

கைப்புடிச்சு கூப்புடுவான் மறுக்காதே அம்மே!
தைமாசம் கண்ணாலம் குறிசொல்லுது அம்மே!
வந்தாரை வாளவைக்கும் சாமியவன் அம்மே!
சொந்தமாக்கித் தூக்கிருவான் தங்கமே அவன் உன்னை!

வாக்குசொன்னா தப்பாது வரங்கொடுத்தா பொய்க்காது
நாவெடுத்து நான் சொல்லும் குறியிங்கு அம்மே!
கஸ்டமெல்லாம் தீருமடி களுத்துமாலை ஏறுமடி!
இஸ்டம்போல எல்லாமே சுகமாகும் அம்மே!


'வனவள்ளி கூற்று':

குறிசொன்ன குறத்தியவள் சொன்ன சொல்லில் மனம்மகிழ்ந்து, கழுத்துமாலை ஒன்றெடுத்து கைகளிலே கொடுத்துவிட்டேன்!
எனை வாழ்த்திப் பாடிவிட்டு அவள் சென்ற பின்னாலே, நடந்ததெல்லாம் நினைத்திருந்து மனதுக்குள் அசைபோட்டேன்!

'வந்திருந்தான்' எனச் சொன்ன சொல்லங்கு வாளாக மனக்கதவை அறுத்தங்கு வாட்டிடவே, 'அறியாத சிறுமகளாய் அநியாயக் கோபம் கொண்டு, ஆசையுடன் வந்தவரை ஏசிவிட்டுத் துரத்தினேனே!
மீண்டுமெனைக் கண்டிடவே வருவானோ வடிவேலன்?' என்றெண்ணிக் கலங்கையிலே, வந்தானே வளைச்செட்டி!

'கைப்பிடிச்சு வளையடுக்க, கன்னிக்கெல்லாம் மணமாகும்! ராசியான வளைக்காரன்! சோசியமும் சொல்லிருவேன்!'
மான்போல நீயிருக்க மச்சானும் தேடிவர கைமுழுக்க வளையடுக்கக் கையைக் கொஞ்சம் காட்டு தாயி!
'
என்று சொல்லி கட்டிவைத்த மூட்டையினைக் கவனமாகப் பிரித்தபடி, கட்டாந்தரையினிலே அவனமர்ந்தான்!
உரிமையொடு வலக்கையை ஆதரவாய்ப் பற்றியவன், உள்ளங்கை ரேகை கண்டு உதட்டினிலே முறுவலித்தான்!

'கல்யாண ரேகையொண்ணு கச்சிதமா ஓடுதிங்கு! கட்டப்போகும் மணவாளன் கிட்டத்தில் தானிருக்கான்!
கைநிறைய வளையடுக்கி கன்னி நீ வீடு போனா, கட்டாயம் அவன் வந்து கலியாணம் கட்டிடுவான்!'

என்றங்கே சொல்லியபடி கை முழுதும் வளையலிட்டான்! வளைக்காரன் கைபட்டு வல்லிக்கொடி நான் சிலிர்த்தேன்!
'இந்தமுறை ஏமாற நானிங்கு விடமாட்டேன்! வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க!'

என்று சொன்ன மறுகணமே வளையல்செட்டி தான் மறைந்தான்! வடிவேலன் எதிரில் நின்றான்! வஞ்சிநான் மெய்சிலிர்த்தேன் !

'திருமாலின் மகளாக எமக்காகப் பிறந்திட்ட அழகான கன்னியுன்னை உரிய நேரம் வந்திருந்து முறையாக மணம் முடிப்போம் எனச் சொல்லி அனுப்பிவைத்தோம்!
சொல்லெடுத்துக் கொடுக்கின்ற சுந்தரவல்லி நீயும், பூவுலகில் வள்ளியென நம்பிக்கு மகளாகப் பிறந்திருந்தாய்!
நினைவேண்டி யாமிங்கு வனவேடம் தரித்திருந்து நின்மேனி எழிலெல்லாம் கண்ணாரக் கண்டு களித்தோம்!

'வனவேடன், வேங்கைமரம், வயோதிகனும் யாமேதான்! வஞ்சியுன்னைக் கண்டிடவே பலவேடம் யாம் தரித்தோம்!
வேழமுகன் என்னண்ணன் கரியாகி எதிர் வந்தார்! கன்னியுனைச் சீக்கிரமே கலியாணம் செய்திடுவோம்!
இச்சைக்கு அதிபதியாய் என்றுமுன்னைத் தொழுதிருந்து இச்சகத்தில் இணையில்லாப் புகழோடு யாமிருப்போம்!
கவலையின்றி இல்லம் சென்று காத்திருப்பாய் எமக்காக!'

எனச் சொல்லி மறைந்துவிட்டான்! கன்னி நான் மூர்ச்சையானேன்!

இனி என்ன?

***********************
[நாளை வரும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP