Monday, May 18, 2009

"சாதனையாளர் தாமு!" [உண்மைக் கதை!]

"சாதனையாளர் தாமு!"
[ஒரு உண்மைக் கதை!]

அந்தச் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

காலை 5 மணிக்கு வேலைக்குச் செல்லும் தந்தை இரவு 8 மணிக்கு மேல்தான் திரும்புகிறார்.

கூடப் பிறந்த இரு சகோதரர்களும் பள்ளிக்குச் செல்லாமல் கூலிவேலைக்குச் சென்று வருகிறார்கள்.
இருக்கும் ஒரு மாட்டைப் பார்த்துக் கொண்டு, வீட்டுவேலைகளும் செய்துவரும் தாய் மட்டுமே 'கீழ்சாதியில பொறந்து தொலைச்சிட்டோண்டா! பாவப்பட்ட சென்மமின்னு ஊரே இளக்காரமாப் பாக்குது. நீ ஒருத்தனாவது படிச்சுக் கரையேறணும் என் ராசா!' எனச் சொல்லித் தன்னை மட்டும் ஏன் பள்ளிக்குத் துரத்துகிறாள்?


அம்மா கட்டித்தரும் கட்டுசோற்றை போகிற வழியில் தந்தை வேலை செய்யும் இடத்திற்குச் சென்று கொடுத்துவிட்டு, பள்ளிக்குச் சென்று, மாலை திரும்பிவரும்போது, மீண்டும் அப்பா வேலை செய்யுமிடத்துக்குப் போய், அவருக்குத் துணையாக இருந்துவிட்டு, அவருடன் வீடு திரும்பி, சாப்பிட்டுவிட்டு, கொஞ்சநேரம் படித்துவிட்டுப் பத்து மணி வாக்கில் படுக்கச் செல்வது வாடிக்கையாகப் போயிற்று தாமுவுக்கு.

விழுப்புரம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் தாமு என்கிற தாமோதரன்.

ஒருவேளை சோற்றுக்கே வகையில்லாத வசதியில்லாத குடும்பம்.

கூலிவேலை செய்தால்தான் ஒருவேளைச் சோற்றுக்காவது வழி கிடைக்கும்.
இதற்கிடையில் படிக்கச் சொல்லி அம்மா வற்புறுத்துகிறாளே என தாமுவுக்கும் சற்று எரிச்சல்தான்! இருந்தாலும், அவள் மேல் கொண்ட ஆசையினால் அரை மனதோடு படித்தும் வந்தான்.

அதன் விளைவு பத்தாம் வகுப்புத் தேர்வில் கணக்குத் தாளில் தெரிய வந்தது!


12 மதிப்பெண்கள் எடுத்து அந்த ஆண்டு தோல்வியடைந்தான்.


இதுதான் சாக்கு எனக் காத்திருந்த தந்தையோ, 'போறும் இவன் படிச்சுக் கிளிச்சது! நம்ம தலையில என்ன எளுதியிருக்கோ அதான் நடக்கும். நாளையிலேருந்து இவனும் வேலைக்குப் போகட்டும்' எனக் கண்டிஷனாகச் சொல்லிவிட்டார்.

அங்கேயே கூலிவேலை செய்தால் சற்று அவமானம் என நினைத்த தாமு கேரளாவுக்கு வேலை தேடிக் கிளம்பினான்.
அவனது சாதியில் ஆண்டுக்கு ஒரு எட்டு மாதங்கள் இப்படி வெளிவேலைக்கு என அண்டை மாநிலங்களுக்குச் செல்வது வாடிக்கை என்பதால், அதற்கு யாரும் எதிர்ப்பு சொல்ல வில்லை.


அம்மா மட்டுமே இடிந்து போனாள்!

'இவன் ஒருத்தனாவது தலையெடுப்பான்னு பார்த்தேன்! இப்படி ஆய்ப்போச்சே' என வருத்தம் கொண்டாள்.
ஆனால், அவளால் வேறொன்றும் செய்ய முடியவில்லை...... அழுவதைத் தவிர!

செங்கல் சுமக்கும் வேலை கிடைத்தது கேரளாவில்.
காலை எட்டு மணிக்குத் துவங்கி, உச்சி வெய்யில் தலைக்கு மேலே வரும்வரை மாறி மாறி சுமந்து செல்லணும்.

ஒரு ஒருமணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் மாலை ஐந்து வரையிலும் மீண்டும் இதுவே தொடரும்.
இப்படியாக, திங்கள் முதல் சனி வரை!

ஞாயிற்றுக் கிழமை முழுக்க அடித்துப் போட்டது போல் ஓய்வெடுத்தால்தான் மீண்டும் அடுத்த வாரம் வேலை செய்யத் தெம்பு வரும்!
எழுபது ரூபாய் தினக்கூலி.

சாப்பாடு, சினிமா எனச் செலவு செய்தது போக ஒரு இருபது ரூபாய் மிஞ்சும் தினமும்.
ஆண்டுக்கு ஒரு 5,000 ரூபாய் வரை மிச்சம் பிடித்து அம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம் எனக் கணக்கு போட்டான் தாமு!


இரண்டு ஆண்டுகள் இப்படியே ஓட்ட, அசதியும், அலுப்பும் மிகுதியாகி, மீண்டும் ஊருக்கே திரும்பினான்.

'இருக்கற வேலையை விட்டுட்டு வந்துட்டான் பாரு' என, வருமானம் குறைந்துபோன கடுப்பில் அப்பா முணுமுணுக்க, 'அந்தக் கணக்கு பேப்பரை மட்டும் முடிச்சிரு என் ராசா' என அம்மா கெஞ்சினாள்!

வீட்டில் தங்க இது ஒரு நல்ல சாக்காக இருக்கே என மகிழ்ந்து மீண்டும் படிக்க முயன்றான் தாமு.... உள்ளூரிலேயே ஏதோ கூலிவேலையும் பார்த்துக் கொண்டே!


மார்ச்சில் 18, செப்டெம்பரில் 20, மார்ச்சில் 22, செப்டெம்பரில் 30 மீண்டும் மார்ச்சில் 36 என அந்த பாஸ்மார்க் 35 என்னும் மந்திரப் புள்ளியைத் தாண்டி ஐந்தாம் முறையில் கணக்கைத் தாண்டினான் தாமு!


பள்ளியில் போராடி மகனை ப்ளஸ் டூ-வில் சேர்த்து மகிழ்ந்தாள் அம்மா.

தாமுவும் அக்கறையோடு படிக்கத் தொடங்கினான்.

அப்போதுதான் அந்தப் பேரிடி!


ஜீவனத்துக்கு உறுதுணையாய் இருந்துவந்த மாட்டை மேய்ச்சலுக்குப் பின் இழுத்து வரும் மாலை வேளை ஒன்றில், திடீரென மாடு மிரண்டு ஓட, கயிற்றைப் பிடித்திருந்த தாய், கழுத்து எலும்பில் அடிபட்டு, மயக்கமாகி, நினைவிழந்து ஒரு ஆழ்குழிக்குள் ஓரிரவு முழுவதும் கிடந்திருக்கிறார்.


இருட்டிவிட்டதால், எங்கேயென்று தேடவும் முடியவில்லை.... மின்சார வசதி இல்லாத அந்தக் கிராமத்தில்!

அழைத்த குரலுக்கு பதில் கொடுக்க முடியாமல் நினைவிழந்த நிலையில் தாய்!

கனவுகளைக் குரலில் ஊட்டியே வளர்த்த தாயின் குரல் கேட்கமுடியாமல் போன சோகம்!


நரம்புகளில் அடிபட்டதாலும், இரவு முழுவதும், எலி, பூச்சி போன்றவற்றால் கடிக்கப்பட்டதாலும், மீளமுடியாத மயக்கநிலையில் கிடந்த தாயை மறுநாள் காலையில்தான் மீட்டெடுக்க முடிந்தது.


கனவுகளுடன் கிடந்த நினைவு மீண்டுவராமலேயே, 30 நாட்கள் மயக்கத்தில் கிடந்த தாய் தாமுவை விட்டுப் பிரிந்துபோனார்.


தாயின் மரணம் ஒரு மாற்றத்தை தாமுவின் மனதில் ஏற்படுத்தியது எனக் கதைகளில் வருவதுபோல் நான் இங்கு சொல்லப் போவதில்லை!

ஆனால், இது அவரைப் பாதித்தது உண்மை.

பனிரெண்டாம் வகுப்பில் தேர்வு பெற்றதும், உள்ளூரிலேயே படிப்புக்குத் தக்க ஒரு வேலையைத் தேடுமாறு சொன்ன தந்தைக்கு தாமு சொன்ன பதில் அதிர்ச்சியைத் தந்தது!

[நாளை தொடரும்!]

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP