Friday, March 23, 2012

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]

"மயிலை மன்னாரின் கந்தரநுபூதி விளக்கம்" -- – - 58 [51-3]
51. [3]

'மொத மூணு வரியும் மத்தவங்க புரிஞ்சுக்கறதுக்காவ சொன்னது!

ஆனாக்காண்டிக்கு, அந்தக் கடைசி வரி மட்டுந்தான் இவரு பாத்தத, பாத்து அனுபவிச்சுத, அனுபவிச்சு ஒணர்ந்ததச் சொல்ற வரி!

‘குருவாய் வருவாய் அருள்வாய் குகனே’ன்னு கதர்றாரு.

இந்த ஒருவரிதான் அநுபூதி !

குஹந்தான் கந்தன்!!

அந்தக் கந்தன் குடுத்த அனுபவத்தை, அனுபூதியைச் சொல்றதுதான் மத்த மூணு வார்த்தையும்!

இதைப் புரிஞ்சுக்கணும்னா, திரும்பவும் அந்த மொத ரெண்டு வார்த்தைக்குத்தான் போவணும்!

‘உருவாய், அருவாய்!

ஆமா!

‘உருவாய் அருவாய் குருவாய் வருவாய்! அருள்வாய்!’

போதுண்டா இந்த வாள்க்கைன்னு கோபுரத்து உச்சிலேர்ந்து குதிச்சவரைக் கை குடுத்து ஒர்த்தன் தாங்கினான்!

ஆர்ராது, சாவறதுக்குக்கூட வுட மாட்டேன்றானேன்னு ஒரு கோவத்தோடத்தான் அந்த ‘உரு’வைப் பாத்தாரு அருணையாரு!

இந்த உருவைப் பத்தியே பாடிக்கினே இத்த மறந்துட்டு, இந்த உரு இல்லாத ஒரு நெலைக்கு நீ வந்து என்னிய சேருன்னு சொல்றமாரி, ‘சொல்லற, சும்மாயிரு’ன்னு சொல்லிட்டு, அருவமாயிட்டாரு கந்தன்!

கண்ணெதிர்க்கத் தெரிஞ்ச உருவைத் தவற வுட்டுட்டேனேன்னு, கோயில் கோயிலாப் போயி, ஆயிரக்கணக்குலப் பாட்டுப் பாடி, தன்னோட நெலையைச் சொல்லிப் பொலம்பித் திருப்புகளா[ழா]க் கொட்டினாரு அருணகிரியாரு.

அப்பிடியாப்பட்ட ஒரு நேரத்துல கெடைச்சதுதான் இந்த அநுபூதி!

உருவமாத் தெரிஞ்சவரு, அருவமா வந்து,, மலரோட மருவா, மணியோட ஒளியா, கருவோட உசிரா, கெதியோட விதியா இவருக்குள்ளாற குருவா வந்து அருள் பண்ணினப்ப இவருக்குக் கெடைச்ச பரவசந்தான் கந்தன்!’ என்றான் மயிலை மன்னார்.

சொல்லிக் கொண்டே வந்தவனை இடைமறித்து, ‘அப்ப எதுக்கு குகனேன்னு சொல்லி முடிச்சாரு?’ என நான் வினவினேன்!

‘இத்த நீ கேட்டதுதான் எனக்கு ரொம்பப் பிடிசிருக்கு! ‘ என அன்புடன் என் தோள்மீது கைபோட்டு அணைத்துக் கொண்டான் மன்னார்.

ஏளனமா, அது பாராட்டா எனத் தெரியாமலேயே அவன் அணைப்பில் சிக்குண்டபடியே, முன்பு கேட்ட கேள்வியை அவன்மீது வீசினேன்!

‘குஹன்’னா ஆரு? எத்தினியோ வார்த்தைங்க அவனைப் பத்திச் சொல்றதுக்கு இருக்கக்கொள்ள, இத்தச் சொல்லி ஏன் முடிக்கணும் அருணகிரியாரு? என பதில் கேள்வியை என்னைப் பார்த்தபடியே கேட்டான் மயிலை மன்னார்.

பதில் சொல்ல நான் எத்தனிக்கும் முன்னரே, மீண்டும் தொடர்ந்தான்.

'இருளோன்னு கெடக்குற குகைக்குள்ளார ஒரு வெளிச்சம் வந்தா எப்பிடி இருக்கும்? ரெண்டாவுது பாட்டுலேர்ந்த்து அம்பதாவுது பாட்டு வரைக்கும் அருணகிரியாரு பொலம்பினதெல்லாத்தியும் பாத்தீன்னா, இந்த சொத்து, சொகம், வூடு, பொஞ்சாதி, கொளந்தை, குட்டிங்க, பெருமை, பேரு இதெல்லாத்தியும் எப்பிடி ஒண்ணொண்ணா வுட்டுத் தள்ளணும்ன்றதப் பத்தியே பாடினது புரியும்!

இதுங்க அத்தினியும் மொத்தமா சேர்ந்து ஒண்ணு மேல ஒண்ணா ஒரு போர்வை மாரி அடுக்கடுக்கா போர்த்திக்கினு, உள்ளார க்கீற அந்த வெளிச்சத்தை….. அந்த ஜோதியை மறைக்குதுங்க!

இதெல்லாத்தியும் வெலக்கினா, மனசுன்ற குகைக்குள்ள க்கீற இருட்டெல்லாம் படிப்படியா வெலகி ஒனக்குள்ளாறியே ஒரு பெரிய வெளிச்சம் தெரியவரும்! அந்த வெளிச்சந்தான் குஹன்! அதான் அனுபூதி!’

‘இங்க ‘வருவாய், அருள்வாய்’ன்னு அருணகிரியாரு சொல்றதுல்லாம் ‘வருவியோ, அருள் தருவியோ?ன்னு கேக்கறது இல்லை! நீ வருவே, நிச்சியமாத் தருவே!’ன்ற உத்தரவாதம்! உள்ளாரயேத் தேடுங்கப்பா அந்த குகனை! குருவருளால....அந்தக் கந்தக்குருவருளால.... கண்டிப்பாக் கிடைப்பான்!!’ எனச் சொல்லி, மௌனத்தில் ஆழ்ந்தான் மயிலை மன்னார்!

‘தேடித் தேடி எங்கோ ஓடுகின்றார் – உன்னைத்
தேடிக் கண்டு கொள்ளலாமே – உள்ளே
தேடிக் கண்டு கொள்ளலாமே’
எனும் பாடல் கபாலி கோயிலின் ஒலிபெருக்கி வழியே வந்து, எங்களையெல்லாம் ஆட்கொண்டது!

ஓம் சரவணபவ’ எனும் மந்திரம் அனைவரின் உதடுகளிருந்தும் கிளம்பிப் பலமாக ஒலித்தது.
************************
பொறுமையோடும், பக்தியோடும் படித்து ஆசி வழங்கிய அனைவருக்கும் கந்தன் நலம் சேர்ப்பான்!
அறியாது உரைத்த இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஓம் சரவணபவ.
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
*******************************

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே!

[கந்தரநுபூதி நிறைவு.]

11 பின்னூட்டங்கள்:

MURUGANANDAM Friday, March 23, 2012 10:59:00 AM  

Detailed explanation for a poem of Kandar Anuputhi.

கோவி.கண்ணன் Friday, March 23, 2012 11:58:00 AM  

//அறியாது உரைத்த இவற்றில் ஏதேனும் குறை இருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.//

ஒரு தவம் போல் 58 பகுதிகள் எழுதியமைக்கு பாராட்டுகள், நல்ல விளக்கங்கள்.

நன்றி எஸ்கே ஐயா

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, March 24, 2012 8:45:00 PM  

நிறைந்தது!
நிறைந்தேலோ ரெம்பாவாய்!

கந்தர் அநுபூதி = நிறைந்து, ஏல் ஓர் எம்பாவாய்!

இத்தொடரை இட்டமைக்கு மிக்க நன்றி SK ஐயா!
இனிய வாழ்த்துக்கள் உமக்கு உரித்தாகுக!

இந்தத் தொடரில், சில பதிவுகளில், உங்களிடம் உரையாடல்-விவாதமும் செய்துள்ளேன்! அதையும் இந்தச் சமயத்திலே மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

செறிவான தொடர்...செழிக்க வாழி!

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, March 24, 2012 8:45:00 PM  

நான், என் சார்பாகவும்-இராகவன் சார்பாகவும் சில கருத்துக்கள் எடுத்து வைக்கலாமா?:)

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, March 24, 2012 8:50:00 PM  

//பொஞ்சாதி, கொளந்தை, குட்டிங்க = இதெல்லாத்தியும் எப்பிடி ஒண்ணொண்ணா வுட்டுத் தள்ளணும்ன்றதப் பத்தியே பாடினது புரியும்!//

:)
அருணகிரி, அவர் தம் நிலைமைக்குச் சரி! ஆனால் அனைவருக்கும் இது பொருந்துமா?-ன்னு தெரியலை!

இப்படி விட்டுத் தள்ளினாத் தான் அநுபூதி கிடைக்கும் என்பதும் அன்று!

எதையும் தள்ள வேணாம்!
எதைக் கொள்ள வேணும்?
அதைக் கொண்டால் = அநுபூதி!

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, March 24, 2012 8:54:00 PM  

முக்கியமா, ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! மனசுக்குத் தோனிச்சி!

* அநுபூதி ஆரம்ப வரிகள் = "நெஞ்சக்" கன கல்லும்....
* அநுபூதி முடிப்பு வரிகள் = வருவாய் அருள்வாய் "குகனே"

குகன் என்பதே நெஞ்சக் குகையில் வாழ்பவன் என்று தான் பொருள்!

அருணகிரி, நெஞ்சு-ன்னு ஆரம்பித்து, குகனே என்று முடிப்பது கண்டு வியப்பிலும் வியக்கிறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, March 24, 2012 8:57:00 PM  

தற்கொலையில் ஆரம்பித்த ஒரு காதல் உள்ளம்...

அது சும்மா இரு, சொல்லற-ன்னு இருந்து...

பின்பு, தலம் தலமாப் போய்ப் பாடி, கதறி, முருகா என்று உருகி...

கந்தர் அலங்காரம் செய்து, அழகு பார்த்து...

கடைசியில், தனக்கே தனக்காய் ஒரு முருகனை, தன்னுள்ளேயே கண்டு அநுபூதி கொண்டது!
--------

ஐயா, அருணகிரி
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) Saturday, March 24, 2012 9:19:00 PM  

உருவாய்-அருவாய், உளதாய்-இலதாய்
மருவாய்-மலராய், மணியாய்-ஒளியாய்
கருவாய்-உயிராய், கதியாய்-விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய் குகனே!

------

தண்ணி
= கடல்ல இருக்கும் போது உருவாய்
= அதே கடலில் ஆவியாகும் போது அருவாய்
= மீண்டும் பொழியும் போது உருவாய்
= உருவாய்-அருவாய்

யானைப் பொம்மை
= மரமாய் இருக்கும் போது இலதாய்
= மரமே பொம்மையான பின் உளதாய்
= உளதாய்-இலதாய்

மருவாய்-மலராய்
= வாசனையும் நீ
= அந்த வாசனை என்னும் இன்பத்தைக் கொடுப்பவனும் நீ
= நீயே வழியும் ஜீவனுமாய் இருக்கிறாய்

மணியாய்-ஒளியாய்
= மாணிக்கமும் நீ
= அதன் ஒளியும் நீ
= நீயே பொருளாகவும் இருக்கிறாய், அதன் குணமாகவும் இருக்கிறாய்
-----------

கருவாய்-உயிராய்
= பெண் முட்டையின் கருவும் நீ தான்
= ஆண் விந்தின் உயிரும் நீ தான்
= நீயே உன்னையும் என்னையும் புணர்ந்து கொள்கிறாய்
-----------

கதியாய்-விதியாய்
ஒருவனே எப்படி விதியும், கதியும் ஆவான்?
விதி போல் விளையாடிய இராஜபக்ஷே ,நம் கதி ஆக முடியுமா?
= முடியாது!

ஆனால் முருகன் ஆக முடியும்!
= நான் செய்த வினைகளுக்கு விதிக்கப்பட்ட விதி; அதை வகுப்பவனும் நீயே
= வினையால் வந்த விதி ஆனாலும், என் கதியும் நீயே தான்!
= அடிச்சாலும் அம்மா, அணைச்சாலும் அம்மா
= அடிச்சவளே வந்து அணைக்கும் வரை, குழந்தை அழுகையை நிறுத்தாது!
-----------

குருவாய் வருவாய்!
= அப்படி நீயே தான் எனக்கு வரணும் முருகா!
= என்னால் உன்னிடம் வரமுடியாது!
= உன்னால் என்னிடம் வரமுடியும்!
= எனவே "வருவாய்"

அருள்வாய் குகனே, நெஞ்சக் கன கல்லும் உனக்கே!
-----------

டேய்....
நான் பிறந்த வீடு வேற!
ஆனா என் புகுந்த வீடு நீ தான்!
என் காதல் உனக்கே!
என் முருகவா, என்னை உன்னிடம் சேர்த்துக் கொள்!

செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

VSK Monday, March 26, 2012 11:17:00 AM  

அன்பான கருத்துகள் இந்தப் பதிவிற்கு மேலும் வளமூட்டின ரவி. மிக்க நன்றி. விவாதம் செஞ்சதுல ஒரு வருத்தமும் இல்லை. மன்னிப்புல்லாம் கேக்க வேணாம்!:))

எல்லாத்தையும் விடறதுன்னா, சாமியாராப் போறதுன்ற அர்த்தம் இல்லை. அதுங்க மேல வைச்சிருக்கற பாசத்தையும், ஆசையையும் கொஞ்சம் கொஞ்சமா இல்லாமப் பண்ணிக்கறது. பழக்கத்தால் மட்டுமே வரும்! கடமையை மட்டும் செய். பலனை எதிர்பாராமல்னு கீதையுல சொன்னதும் இதைத்தான்!

என்னால வர முடியாதுன்றத விடவும், இப்பிடில்லாம் பண்ணினா, இடைவெளி இல்லாமப் போயி, அவனே வந்து ஒடுங்குவான் உள்ளேன்ற அநுபூதி ஞானம் தான் இதுல அவர் சொல்ல வந்ததுன்னு நினைக்கிறேன்.

Lalitha Mittal Tuesday, March 27, 2012 10:08:00 PM  

ஒவ்வொரு பதிவின் ஒவ்வொரு எழுத்தையும் ரொம்ப ரசிச்சிப்படித்தேன் ;

இந்த த்தலைமுறையில் இவ்வளவு எளிமையான நடையில் உயர்ந்த கருத்துக்களை புரிய வைக்ககூடியவர்கள் இருப்பதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன்; இப்படிப்பட்டவர்களை படைத்த ஆறுபடையானுக்கு
அனந்தகோடி நமஸ்காரங்கள் !

VSK Wednesday, March 28, 2012 8:41:00 AM  

தொடக்கம் முதல் இறுதிவரை என் முருகனுடன், நீங்களும் உறுதுணையாய் வந்து ஆர்வத்துடன் என்னை உற்சாகப்படுத்திய மாண்பை எண்ணி மிகவும் பெருமையாக உணர்கிறேன் அம்மா. முருகனருள் முன்னிற்கும்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP