Friday, November 09, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 37

முந்தைய பதிவு இங்கே!


35.

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று." [678]

அந்தக் காட்டை ஊடுருவி அவன் பார்வை சென்றது.

ஒவ்வொரு மரமும், செடியும், கொடியும், பறவையும், மிருகமும் அவனுக்குப் புலப்பட்டது.

இதுவரை தன் வாழ்வில் குறுக்கிட்ட அத்தனை மனிதர்களும்..... செல்லி, குறிசொன்ன கிழவி, தங்கமாலை அணிந்த பெரியவர், வழிப்பறி செய்த இளைஞன், அண்ணாச்சி, ராபர்ட், காத்தான், பொன்னி, முத்துராசா, மாயன் பூசாரி, இன்னும் எல்லாருமே கண்ணில் தெரிந்தார்கள்.

'ரெண்டு நாளா என்னையே தானே பாத்துகிட்டு இருக்கே! பத்தலியா? இன்னும் என்ன அப்படி ஒரு பார்வை!' காடு பேசியது அவனுக்குக் கேட்டுத் திடுக்கிட்டான்.

'உன்னைத் தாண்டித்தான் நான் விரும்பற அன்பு எனக்காக காத்துகிட்டு இருக்குது. அவளைக் கூட என்னால பார்க்க முடியுது இப்ப! அவகிட்ட நான் போகணும்னா, உன்னோட உதவி எனக்குத் தேவை. இப்ப நான் ஒரு காத்தா மாறி அவகிட்ட போகணும்' கந்தன் தன்னையுமறியாது காட்டுடன் பேசினான்.

'அன்பா? அப்படீன்னா என்ன?' காடு கேட்டது.

இங்க இருக்கற எல்லா ஜீவராசிகிட்டயும் நீ காட்டறதுக்குப் பேருதான் அன்பு. உன்னோட ஒவ்வொரு மூலை முடுக்கும் அதுங்களுக்கு தெரிய வைக்கறே. அததுக்கு வேளா வேளைக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணறே. இங்கே சண்டை கிடையாது. எல்லாருக்கும் சமமா உன்னோட அன்பைப் பங்கு போட்டுக் கொடுக்கறே. எலிக்கு கிழங்கு, பாம்புக்கு எலி, புலிக்கு மான், .... இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது ஒண்ணு ஏற்பாடு பண்ணியிருக்கே. எல்லாரும் அதை ஒத்துகிட்டு, தன்னைக் காப்பாத்திக்கப் பாத்துக்குது. அடுத்தவங்க விஷயத்துல தலையிடறதில்லை.'

'அதுக்குப் பேருதான் அன்பா?' என்றது காடு.

'ஆமாம், தன்னைக் கொடுத்து அடுத்தவங்களை வளக்கறதுக்குப் பேருதான் அன்பு. இங்க அதான் நடக்குது. மரத்தால மிருகம், மிருகத்தால மனுஷன், மண்ணிலேருந்து உலோகம், ஏன்.....தங்கம் கூட! எதுவும் தனக்குன்னு வைச்சுக்காம கொடுக்கறதுக்குப் பேருதான் அன்பு.'

'நீ சொல்றது எதுவும் எனக்குப் புரியலை, போ!'

'எதுவும் புரியலேன்னாலும், எனக்காக ஒரு பொண்ணு காத்துகிட்டு இருக்குது. அதுகிட்ட போறதுக்கு நான் ஒரு காத்தா மறணும். அதுக்கு நீதான் உதவி பண்ணனும்! இது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். உன் உதவி எனக்குக் கிடைக்கும்! ' என்றான் கந்தன்.

காடு சிறிது நேரம் ஒண்ணும் சொல்லாமல் யோசித்தது.

'வேணும்னா இங்க இருக்கற மரங்களை அசையச் சொல்லி காத்தை வரச் சொல்றேன். நீ அதுகிட்டயே கேட்டுக்க. எனக்கு வேற ஒண்ணும் தெரியாது' என்ற காடு, மரங்களை அசையச் செய்தது. ஒரு சிறிய தென்றல் வீசத் தொடங்கியது.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் மெதுவாகச் சிரித்தார்.
--------
காற்று மெதுவாக வந்து அவனைத் தொட்டது! அவன் முகத்தை வருடியது.

காற்று ஒன்றுதான் எங்கும் இருக்கும் ஒன்று. அதனால், காற்றுக்கு எல்லாமே தெரியும் என்பதால், காட்டோடு இவன் பேசியதும் காற்றுக்கு தெரிந்துதான் இருந்தது.

எங்கு பிறந்தோம், இறப்போம் என்ற ஒன்றும் இல்லாத காற்று, எல்லாமுமே அறியும்!

'நீதான் எனக்கு உதவி செய்யணும்' என்றான் கந்தன்.

'இப்படி எங்களோடெல்லாம் பேச எப்படி உனக்குத் தெரிஞ்சுது?' என்றது காற்று.

'என் மனசு!'

'நீயும் நானும் வேற வேற! நீயெல்லாம் காத்தா மாறுவதெல்லாம் ஆவற கதையில்லை!'

'அதெல்லம் பொய்யி. எனக்கு ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்திருக்காரு.
எனக்குள்ளேயே இந்த பஞ்சபூதங்களும் இருக்கு. அதனால உண்டான எல்லாவிதப் பொருள்களும் ஏதோ ஒரு விதத்துல.... அது கடலோ, மலையோ, இல்லை காத்தோ..... எதுன்னாலும் சரி, என்கிட்டயும் இருக்கு. எல்லாமே ஒரே ஒரு பரம்பொருளாலத்தான் படைக்கப் பட்டிருக்கு. அதனால, நம்ம எல்லாருக்குள்ளேயும் ஒரே ஆத்மாதான் இருக்கு. இப்ப எனக்கும் உன்னைப் போலவே ஆகனும்னு ஆசையா இருக்கு.எல்லா இடத்துக்கும் போகணும், அந்த வேகத்தால என்னோட புதையலை மறைஞ்சிருக்கற இடத்தைக் கண்டுபிடிக்கணும். என்னை விரும்பற பொண்ணுகிட்ட போகணும். அது
முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!'
என்று ஒரு புதுவிதத் தைரியத்துடன் சொன்னான் கந்தன்.

'அவர் சொன்னதை நானும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன். அவர் இன்னொண்ணும் சொன்னாரே! எல்லாத்துக்கும் ஒரு விதி இருக்கு அதை மீற முடியாதுன்னு! அதைக் கேக்கலியா நீ? நீ காத்தா மாறறது முடியாத காரியம். ' எனச் சொல்லிச் சிரித்தது காற்று.

'ஒரு கொஞ்ச நேரத்துக்காவது நான் காத்தோட காத்தா இருக்கறது எப்படின்னு கத்துக் கொடு. மனுஷனும், காத்தும் சேர்ந்தா, என்னவெல்லாம் பண்ணலாம், பண்ணமுடியும்னு நான் உனக்கு சொல்றேன்' என அதன் ஆவலைத் தூண்டினான்.

காற்றுக்கும் ஆவல் அதிகமாகியது. 'தன்னால் ஒரு பெரிய காட்டையே வீசி சாய்க்க முடியும்; ஆழ்கடலில் ஒரு பெரிய கொந்தளிப்பை உண்டுபண்ணி, பெரிய பெரிய கப்பல்களையெல்லாம் கூட சின்னாபின்னமாக்க முடியும்; எங்கேயோ பாடற இசையை, இன்னொரு நாட்டுல கேக்கவைக்கமுடியும்; இன்னும் என்னென்னவோ செய்ய முடியும்! ஆனா, இவன் புதுசா என்னமோ சொல்றானே. ஆனா, அதுக்காக இவனைக் காத்தா மாத்துன்றானே. அது முடியாத காரியமாச்சே' என அவனை இரக்கத்துடன் பார்த்தது.




அது யோசிக்கத் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த கந்தன் இன்னும் கொஞ்சம் அதை அசைக்க எண்ணி, மேலும் பேசினான்!

'இதான்... இதான்! இதான் அன்புன்னு சொல்றது! இவனுக்கு எதுனாச்சும் செய்யணுமேன்னு நினைக்கறியே, அதான் அன்பு! ஒருத்தரை நேசிக்கறப்ப, எதுவுமே முடியாத காரியம் இல்லை! ஏன்னா, அப்போ அந்த உள்ளம் உருகுது. எல்லாமே உள்ளுக்குள்ளியே நடக்கத் தொடங்குது. அப்போ அதால எதையும் பண்ணமுடியும்னு ஒரு தீவிரம் வரும்.'அன்பின் வழியது உயிர்நிலை'ன்னு எங்க ஆளுகூட ஒருத்தர் பாடியிருக்காரு!' பேசிக்கொண்டே இருந்தவன் கொஞ்சம் அதிகமாப் பேசிட்டோமோ என நினைத்து, சட்டென,


' ஆனா எல்லாத்துக்கும் காத்தோட தயவு இருந்தாத்தான் நடக்கும்'
என முடித்தான்.

காற்றுக்கு திடீரெனக் கோபம் வந்தது. ஒரே ஊதாய் ஊதி இவனை அப்படியே ஒரு தூக்கு தூக்கிடலாமான்னு நினைத்தது! 'சே! அப்படி பண்ணினாக் கூட என்ன பிரயோஜனம்? அதுக்குப் பதிலா இவன் சொல்ற மாதிரி செஞ்சா என்ன? இப்ப, இவனை எப்படி காத்தா மாத்தறது, அன்புன்னா என்ன? இதெல்லாம் நமக்கு தெரியலியே' என எண்ணியது. கோபம் இன்னும் அதிகரித்தது.

'நான் சுத்தாத இடம் இல்லை இந்த உலகத்துல. எந்த மூலை முடுக்குக்குப் போனாலும், எல்லா இடத்துலியும், இந்தக் காதல், அன்பு, பாசம்னு பேசறாங்க! பேசிட்டு அப்படியே அண்ணாந்து வானத்தைப் பாக்கறாங்க! ஒருவேளை, வானத்தைக் கேட்டா அதுக்குத் தெரியுமோ என்னமோ!' என்று எண்ணியது!, 'சே! தனக்கு இது தெரியலியே; அதையும் இவனிடம் ஒப்புக் கொள்ளும்படியாப் போச்சே!' என்ற அவமானத்தில் மிகுந்த கோபத்துடன் கத்தியது!

காற்று பலமாக வீசியது அங்கு!

'அப்படீன்னா ஒண்ணு பண்ணு! நீ இப்ப ஒரு பெரிய காத்தா மாறி, வீச ஆரம்பி! அதுல கிளம்பற புழுதில, இந்த சூரியனோட வெளிச்சம் என் கண்ணை மறைக்காது! என்னாலியும் வானத்தை நல்லாப் பார்க்க முடியும்!' என்றான் கந்தன்!

'இது நல்ல யோசனையாய் இருக்கே' என்று மகிழ்ந்த காற்று தன் தீவிரத்தைக் கூட்டியது! வெகு வேகமாகத் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு ஒரு சூறாவளியாய் மாறியது! 'ஹோ'வென்ற சத்தத்துடன்,
பேரிரைச்சலைக் கிளப்பி வீசத் தொடங்கியது!

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தர் வாய் விட்டு சிரிக்கத் துவங்கினார்!

[தொடரும்]
************************************

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று." [678]




அடுத்த அத்தியாயம்

20 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் Sunday, November 18, 2007 6:12:00 PM  

காற்றில் வரும் கீதமே......

(மூச்சுக்)காத்துப்போனா எல்லாமே போச்சு.

துளசி கோபால் Sunday, November 18, 2007 6:13:00 PM  

காற்றில் வரும் கீதமே......

(மூச்சுக்)காத்துப்போனா எல்லாமே போச்சு.

திவாண்ணா Sunday, November 18, 2007 6:25:00 PM  

ம்ம்ம்ம்.
மூனு நாள் ஆச்சே இன்னும் சூறாவளி வரலையே ஏடாகூடமா ஏதாச்சும் ஆயிடப்போகுதுன்னு பயந்தேன். பரவாயில்லை வந்தாச்சு.
திவா

VSK Sunday, November 18, 2007 7:13:00 PM  

காத்துப் போனா இந்த உடலுக்குத்தான் எல்லாமே போச்சு டீச்சர்!
:))

VSK Sunday, November 18, 2007 7:14:00 PM  

இந்தக் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் இருக்காதுன்னு முதல் பதிவுலியே சொல்லியிருக்கேனே திவா!
:))

இலவசக்கொத்தனார் Sunday, November 18, 2007 8:05:00 PM  

காற்றே கந்தன் வாசல் வந்தாய்,
மெதுவாகக் அவன் மனக் கதவு திறந்தாய்,
காற்றே நீ பெரிதாய் மாறி காப்பாற்றினாய்.
காட்டில் வரும் காற்றே காட்டில் வரும் காற்றே
சித்தர் மொழி பேசு....

cheena (சீனா) Sunday, November 18, 2007 9:11:00 PM  

//' அதெல்லாம் நீங்க கேட்டதுமே வந்திராது! அவருக்கு அதுக்கு ஒரு மூணு நாளு தேவைப்படும். ஏன்னா, அவர் தன்னையே ஒரு பெரிய காத்தா மாத்திகிட்டு வருவாரு. அப்படி அவர் பண்ணலேன்னா, எங்களை என்ன வேணுமின்னாலும் பண்ணிக்கலாம்' என பதில் சவால் விடுத்தார் சித்தர்.//

கந்தன் சித்தராகி ( MBA - IIM ahamedabad - First rank )- காற்றையே கட்டுப் படித்திவிடான். பஞ்ச பூதங்களில் ஒன்றை அடக்கி விட்டான். வெற்றி நிச்சயம்.

காடு - காற்று - வானம் என ஒவ்வொன்றாய் வசப்படுத்துகிறான்.

VSK Sunday, November 18, 2007 10:56:00 PM  

//காற்றே கந்தன் வாசல் வந்தாய்,
மெதுவாகக் அவன் மனக் கதவு திறந்தாய்,
காற்றே நீ பெரிதாய் மாறி காப்பாற்றினாய்.
காட்டில் வரும் காற்றே காட்டில் வரும் காற்றே
சித்தர் மொழி பேசு....//

நிலம் நீரை அடக்கிய பின்னே
பெருங்காற்றைக் கேட்டிருக்கின்றான்
அது என்ன சொல்லப் போகின்றதோ
[இது பல்லவி ட்யூனில்!]:))

நாளை பார்க்கலாம், கொத்ஸ்!

VSK Sunday, November 18, 2007 10:58:00 PM  

//காடு - காற்று - வானம் என ஒவ்வொன்றாய் வசப்படுத்துகிறான்//

அப்பத்தானே சீக்கிரம் 'கனவு மெய்ப்படும்' [முடியும்!!] :)

நீங்கள் சொன்னதைச் சரி செய்துவிட்டேன், சீனா! நன்றி!!

வல்லிசிம்ஹன் Monday, November 19, 2007 5:03:00 AM  

தங்கமாலைக்காரரோடு சேர்ந்து,
அவர் ஆசீர்வாதத்தால்,
வாயு வரை வந்துட்டான்
கந்தன்.
இன்னும் எதையெல்லாம் ஜெயிக்கணுமோ.

நாகை சிவா Monday, November 19, 2007 7:41:00 AM  

சூடானில் வீசும் மணற்புயலை விட பெரும் புயலாக போகுதே உங்கள் கதை. :)

வசீகரா Monday, November 19, 2007 4:26:00 PM  

Namma Sithar alichtiyam pandraar.. aana ellame nanmaikudhaan... story nalla pogudhu.. aana innum kaatukullaye irukkurome... innum vegama pona interesting a irukkum..

VSK Monday, November 19, 2007 6:20:00 PM  

//இன்னும் எதையெல்லாம் ஜெயிக்கணுமோ.//

புதையல்?? பொன்னி??

VSK Monday, November 19, 2007 6:22:00 PM  

//சூடானில் வீசும் மணற்புயலை விட பெரும் புயலாக போகுதே உங்கள் கதை. :)//

இந்த வாரத்தில் கரை கடந்திரும் நாகையாரே!:))

VSK Monday, November 19, 2007 6:24:00 PM  

//innum vegama pona interesting a irukkum..//

கதையே முடியப் போகுது வசீகரா!
:))

குமரன் (Kumaran) Monday, November 19, 2007 8:17:00 PM  

//

"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று." [678]

//

அப்பாடா. முதல் தடவையா ரொம்ப கஷ்டப்படாம இந்தக் குறளுக்கும் இந்த கதைப்பகுதிக்கும் தொடர்பு புரிஞ்சது. :-)

இப்படி ஒவ்வொன்னா பேசி காரியம் சாதிக்கிறது ஏமாத்துற மாதிரி ஆகாதா?

VSK Monday, November 19, 2007 9:44:00 PM  

//இப்படி ஒவ்வொன்னா பேசி காரியம் சாதிக்கிறது ஏமாத்துற மாதிரி ஆகாதா?//

இங்கு யாரையும் ஏமாற்றவில்லையே கந்தன்!

தன் நிலையை எடுத்துச் சொல்லிக் கேட்கிறான்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!

இல்லையா குமரன்!:))

மங்களூர் சிவா Thursday, November 22, 2007 7:20:00 AM  

லேட் கமர். படிச்சிட்டேன். அடுத்த அத்தியாயத்துக்கு போறேன்

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP