"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]
"பள்ளி எழுந்தருளாயே" - 8 [28]
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [8]
முதல் எனச் சொல்வதற்கும் முந்தையவனே!
இடைநிலை எனச் சொல்லப்படும் இடையவனே!
அனைத்தும் ஒடுங்கும் இறுதியானவனே!
இம்மூன்றையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லும்
பிரமன், திருமால், உருத்திரன் இவர்
மூவராலும் அறிய முடியாதவனே!
உன்னை வேறு எவரால் அறிந்திடல் ஆகும்?
இத்தகைய அருமை உடையவனாகிய நீயோ
இப்பூவுலகையே ஒரு பந்து போன்று
தன் விரல்களில் அணிந்திருக்கும் உமையுடன் சேர்ந்து
உன் அடியவர் வாழும் பழங்குடிசைகளில்
எழுந்தருளி அருள் புரிகின்றனை! பரம்பொருளே!
செக்கச் சிவந்த தழல் போலும் உன் திருமேனித்
தரிசனம் எங்களுக்குத் தந்து, கூடவே
திருப்பெருந்துறையினில் நீ அமர்ந்திருக்கும்
கோயில் தரிசனமும் விரைவினில் காட்டி,
சத்குருமூர்த்தியாய், அறிவுப் பிழம்பாய் நீயிருக்கும்
வேடமும் வலியவே வந்து காட்டி,
என்னையும் உன் அடிமையாக ஏற்றுக் கொண்டாய்!
எங்கும் நிறை அமுதமே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.
18 பின்னூட்டங்கள்:
எஸ்கே! பள்ளிஎழுந்தருளாயே படித்துவருகிறேன். எளியதமிழில் அழகாக இருக்கிறது. சிவபெருமானுக்கும் பல்லாண்டு உண்டு அல்லவா? சேந்தன் கதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
சேந்தன் பாடியதும்தான் திருச்சிற்றம்பலத்து இறையனின் தேர் நகர்ந்ததாக. அதுபற்றி விவரம் எழுத இயலுமா?
ஷைலஜா
எங்கும்நிறை அமுதமே எம்பெருமானே சிவனே
ப்ங்கமின்றி உம்திருவடி பற்றினோம் - மங்கை
உமைபாகனே உயிரே உலக நாதனே
எமைக் காப்பீர் என்றும்!
//இம்மூன்றையும் நிகழ்த்துவதாய்ச் சொல்லும்
பிரமன், திருமால், உருத்திரன் இவர்
மூவராலும் அறிய முடியாதவனே!//
மூல முதல்வனாம் ஈசன் (சிவன்) மூன்று தொழில் செய் கடவுள்களின் அதிபதியாக இருக்கிறார் என்று பல்வேறு சமய இலக்கியங்களில் படித்துள்ளேன். அதை எடுத்து இயம்பும் இப்பாடல் மிகச்சிறப்பு.
திருவிளையாடல் புராணங்களுக்கு பிறகு 'புரிதல்' குழப்பத்தில் ஈசனும் உத்திரனும் ஒன்றாக நினைக்க ஆரம்புத்துவிட்டனர்.
ஈசனுக்கு உருவமில்லை அவரை சிவலிங்கமாக பூஜிக்கிறோம்.
அழிக்கும் கடவுன் ருத்திரன் வேறு அனைத்திற்கும் இறைவனான சிவன் வேறு என்ற உண்மை மறைந்துவிட்டது !
எஸ்கே ஐயா,
குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
//பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !//
அப்படியே சுவாமி வீதி உலா வருவதைப் பாடுவது போலவே உள்ளது SK ஐயா!
நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளும் ஈசன் - அவன் அடியார் தரும் அன்பும் ஆரத்தியும் ஏற்று, தானே வந்து ஆண்டான்!
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !
//எங்கும் நிறை அமுதமே!//
எல்லாமே அதற்குள் அடக்கம்.
//முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்;//
முதல் = பிறப்பு
நடு = வாழ்க்கை
இறுதி = மரணம்
மூவர் = மும்மலங்கள்
என்று கூறுதலும் உண்டு.
நான் சொல்ல வந்ததைக் கோவியும் சொல்லி விட்டார். சிவனை உருத்திரன் என்று சைவ சித்தாந்தன் ஒத்துக் கொள்வதில்லை. கிருபானந்தவாரியாரும் இது பற்றி பல சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் "மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!" வரியும் நல்ல சான்று.
மிக்க நன்றி ஷைலஜா அவர்களே!
திருவெம்பாவை முடிக்கும்வரை வேறெந்த பதிவும் போடுவதில்லை என இருப்பதினாஅல், ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்!
சேந்தனார் கதையைப் பதிகிறேன்!
திருப்பல்லாண்டுடன்!
"எமைக் காப்பீர் என்றும்"" என மிகச் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைத்தமைக்கு மிக்க நன்றி ஆசானே!
உருத்திரன் வேறு; சிவம் வேறு என்பதைப் "புரிந்து" மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள், கோவியாரே!
நன்றி
47. திருவெண்பா - அணைந்தோர் தன்மை
மேலும் ஈசன் வேறு மாசான புத்திரன் உருத்திரன் வேறு என்று இயம்பும் மற்றோரு திருவாசகப் பாடல் இங்கே
திருப்பெருந்துறையில் அருளியது - நேரிசை வெண்பா
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும். 625
எங்கு நினைப்பினும் அங்கு வந்து அருள்பவன் அவன்!
பழன்ங்ஊடில் வர என்ன தயக்கம்!
எந்தை அடி போற்றி!
நன்றி ரவி
ஔம்மலாங்கள் என்பதும்வர்ரும் ஐயா!
ஆனால் இங்கு இந்த முத்தொழில்களும் அறியமாட்டா!
அதைச் செய்பவரும் அறிய மாட்டார் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கிறது எனக் கருதுகிறேன்.
ஆதியாம் சிவனின் பல நிலைகளில் இம்மூவரும் அடங்குவர் என்றே சைவ சித்தாந்தம் சொல்லுகிறது ஜிரா!
உருத்திரனும், சிவனும் வேறு என்பதே என் கருத்தும்!
இதைப் பற்றி, விரைவில் சைவ சித்தாந்த விளக்கம் என ஒன்று எழுத நீண்ட நாள் ஆசை!
முருகனருள் முன்னிற்க!
திருஉத்தரகோச மங்கைத் தலத்தையும், இப்பாடலில் கொண்டு வந்தமைக்கு சிறப்புக் காரணம் என ஒன்று இருப்பதாக என எனக்குத் தெரியவில்லை, திரு.ரவி.
கேட்டுச் சொல்கிறேன்.
ஒருவேளை, திருப்பெருந்துறை மன்னந்தான் உத்தரகோச மங்கையை ஆட்கொண்டானோ?
தலபுராணம் பார்த்துச் சொல்கிறேன், விரைவீல்!
சான்றுடன் இம்மூவரை விளக்கும் தேவாரப்பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி, கோவியாரே!
:))
அனைவருக்கும் போகி நல்வாழ்த்துகள்!
அழகு தமிழில் திருப்பள்ளியெழுச்சி தரும் எஸ்.கே அவர்களுக்கும், பொருத்தமாகப் பாடல் இயற்றி அளிக்கும் ஆசான் அவர்களுக்கும் தேவாரப் பாடலை அளித்த கோவி. கண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அனைவருக்கும் என் மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
மூவருக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில்,
மற்ற த்வறாது தொடர்ந்து படித்து வரும் அந்த "முப்பத்து மூவர்க்கும்"
நன்றி!
:)
தங்களது மேலான பொங்கல் நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.ஜெயஸ்ரீ!
எஸ்கே, பல வேலைகளினால் உங்கள் பதிவை தொடர்ந்து படிக்க முடியவில்லை. மொத்தமாக படித்துக் கொள்கிறேன். என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சங்கர் குமரன் சைவத் திருப்பணி
பொங்கலைப் போலவே பொங்கட்டும் -இங்கு
முதலிடை மற்றும் முடிவும் சிவனே
இதையுரைத்தார் வாழ்கவே நீடு.
Post a Comment