"பள்ளி எழுந்தருளாயே" - 6 [26]
"பள்ளி எழுந்தருளாயே!' - 6 [26]
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே ! [6]
இவ்வுலக வாழ்வின் பரபரப்பை விட்டொழித்து
ஒருமையான மனத்துடன், உட்காட்சியில்
உன்னையே கண்டுணர்ந்த மெய்ஞ்ஞானியர் எல்லாரும்,
இம்மண்ணுலகில் பிறந்தாலும், தம் பந்தக் கட்டுகளை
அறுத்தெறிந்த சிவயோகிகள் எல்லாரும்,
மனித இயல்பிலே நின்று, மையணிந்த கண்ணுடைய
பெண்களைப் போலவே தங்களை நினைந்து
தம் தலைவனாக உனைக் கொண்டு வணங்குகின்றனர்!
தலை மகளாம் மலைமகள் உமையின் மணவாளனே!
செந்நிறம் பொருந்திய தாமரைகள் மலர்கின்ற
வயல்கள் சூழ்ந்த திருநகராம் திருப்பெருந்துறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!
இந்தப் பிறவியினை நீக்கி எங்களுக்கு அருள்செய்து
எங்களை ஆட்கொண்டு அருள் புரியும்
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
பப்பு - பரப்பு; அணங்கு - பெண்; செப்புறு - செம்மை உடைய.
14 பின்னூட்டங்கள்:
கற்றூணை பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே
சிவாய நமஹ
மூசு வண்டரை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே!
நமசிவாய!
இந்தப் பிறவியினை நீக்கி
எங்களுக்கு அருள்செய்வதோடு
எங்களையும் ஆட்கொள்வாய்
அன்புமிகுந்த எம்பெருமானே!
SP.VR.சுப்பையா
பப்பு என்பது ஒரு கொஞ்சும் சொல் என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன்.
இதற்கு பரபரப்பு என்ற பொருள் வேறு உள்ளதா? நன்றி SK ஐயா.
//இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே //
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
//இம்மண்ணுலகில் பிறந்தாலும், தம் பந்தக் கட்டுகளை
அறுத்தெறிந்த சிவயோகிகள் எல்லாரும்,
மனித இயல்பிலே நின்று, மையணிந்த கண்ணுடைய
பெண்களைப் போலவே தங்களை நினைந்து
தம் தலைவனாக உனைக் கொண்டு வணங்குகின்றனர்!//
எஸ்கே ஐயா,
இங்கு சிவனடியார்கள் தங்களை (அவர்களை) நாயகியாக நினைத்துக்கு கொள்கிறார்களா ? உருவக வழிபாட்டுமுறை சைவ-வைணவம் இரண்டிற்கும் பொதுவா ?
ஆட்கொண்டாலே பிறைப்பிணி தீர்ந்திடுமே ஆசானே!
"இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!"
பப்புதல் என்றால் இங்குமங்குமாய் அலைதல், பரபரப்பாய் இருத்தல் எனப் பொருள் போட்டிருக்கிறது, ரவி.
இனி, "என்னடா, பப்பறே!" என்றால் புரியும்தானே!:))
"சீராப் பெருந்துறை நம் தேவனடி போற்றி!"
இறைவனைப் பல நிலைகளில் பார்ப்பது அடியவரின் வழக்கம்.
நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், நாயகியாய், செவகனாய், தலைவனாய், தெய்வமாய் இன்னும் எப்படியெப்படி வேண்டுமோ அப்படியெல்லாம்!
இதில் சைவம், வைணவம் என்று பேதமில்லை கோவியாரே!
எப்படி நினைப்பினும் அவன் அப்படியே வருவான்!
இல்லை,.... எப்படியும் வருவான்!
"ஆராத இன்பமருள் மலை போற்றி!"
//எப்படி நினைப்பினும் அவன் அப்படியே வருவான்!
இல்லை,.... எப்படியும் வருவான்!//
ரஜினி மாதிரி சொல்றிங்க ... "எப்ப வருவான் எப்டி வருவான்னு தெரியாது வரவேண்டிய நேரத்தில கரெக்டா வந்துடுவான்"
:)
உங்களுக்கு ரஜினி சொன்னதுதான் நினைவில் இருக்கிறது!
ஆனால், இது "அவனே" சொன்னது!
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்."
திருச்சிற்றம்பலம்.
//"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்."
திருச்சிற்றம்பலம். //
அருணாசலம் !
நான் சிவன் பெயரைத்தான் சொன்னேன்.
நீங்கள் சொன்னாலும், சொல்லாவிடினும், இது சிவன் பெயர்தான், கோவியாரே!
:)
"சீலமும் பாடிச் சிவனே! சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!"
நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமை பொழுதும் என்னெஞ்சம் நீங்காதான் தாழ் வாழ்க!
Post a Comment