"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]
"பள்ளி எழுந்தருளாயே" - 7 [27]
"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே ! [7]
அமரரும் அறியா அப்பரம்பொருளின் தன்மை
"பழம் போல சுவை மிக்கது" எனவும்
அது "அமுதம் போல இனிதானது" எனவும்
"அறிந்து கொள்ள அரிதானது" எனவும்
இல்லை அது "மிக மிக எளிதானது" எனவும்
விண்ணகத் தேவரும் அறிய மாட்டார்கள்!
ஆனால், "இதுவே அப்பரம்பொருளின் திருவுருவம்!"
"இவனே நாம் வணங்கும் சிவபெருமான்!" என
நாங்கள் சரியாக அறியும் வண்ணம் அருள் கொண்டு
எளிவந்த கருணையுடன் எங்கள் முன்னே வந்து
எங்களையும் அடிமையாக ஏற்றுக் கொண்டு
இந்த மண்ணிலே எழுந்தருளி இருக்கின்றாய்!
தேன் சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த
திரு உத்தரகோச மங்கைத் திருத்தலத்தில்
எழுந்தருளி இருப்பவனே! சிவனே!
திருப்பெருந்துறை தலத்திற்கு அரசனே!
நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது?
அதனைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
மது - தேன்; ஆறு - வழி/முறைமை.
5 பின்னூட்டங்கள்:
எஸ்.கே சார்,
ஆகக்கூடி சொல்லிச் செய்யும் சிறியவராக இருந்தாலே போதும் என்கிறாரா.
சொன்ன வண்ணம் செய்த மானிடம் பிழைக்க அதுதான் வழி.
ராகவனுக்கு நீங்கள் சொன்ன பின்னூட்டம் படித்தேன்.
இப்படி நடந்தால் நன்றாகத்தான் இருக்கும்
//எது எமைப் பணிகொளுமாறு அதைக்கேட்போம்:
என்ற வரியை விளக்குமுகமாக
நீங்கள் எழுதியுள்ள வரிகள் சிறப்பாக உள்ளன அய்யா!
"நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அதனைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்!எங்கள் பெருமானே!"
ஆமாம்! நாம் இறைவனின் ஏவலாளிகள்தானே! அவன் இடும் பணிகளுக்கு அதுதான் (ஏவல்) சரியான சொல்!
நன்றி உரித்தாகுக!
எஸ்கே ஐயா,
விளக்கம் நன்று !
நன்றி கோவியாரே!
SK ஐயா!
இந்தப் பாடலில் இரண்டு ஊர்களை நேரடியாகக் குறிக்கிறாரே மணிவாசகர்!
உத்தர கோச மங்கை ராமநாதபுரம் அருகே உள்ளது!
திருப்பெருந்துறை புதுக்கோட்டைக்கு அருகே என்று நினைக்கிறேன்!
இரண்டையும் சேர்த்துக் குறிப்பிடுவதற்கு சிறப்புக் காரணம் ஏதாவது உளதா? தாங்கள் அறியத் தர வேண்டும்!
Post a Comment