"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]
"பள்ளி எழுந்தருளாயே!" - 5 [25]
"பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !
"எல்லாம் வல்ல இறைவன் பஞ்ச பூதங்கள் எனும்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இவைதனில்
நீக்கமறக் கலந்துள்ளான்; அவனுக்கு இறப்பெனும்
போக்கும் இல்லை; பிறப்பெனும் வரவும் இல்லை!" எனவே
கற்றறிந்த ஞானியர் அனைவரும் கூறுவர்.
அவர்கள் இவ்வண்ணம் பாடியும் ஆடியும் போற்றிடும்
துதிகளை விருப்பமுடன் பாடுதல் அன்றி
உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி நாங்கள்
காதினாலும் கேட்டுத் தெரிந்ததில்லை!
இவ்வாறு எங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனாய்
நீ இங்கு அரிதாய் நிற்கின்றாய்!
எங்கள் "கண்முன்னே எழுந்தருளி", நாங்கள்
அறிந்தும் அறியாமலும் செய்கின்ற குற்றங்கள்யாவினையும்
அறுத்தெறிந்து, எம்மையும் உன் அடியவர்களாக்கி
ஏற்று அருள் புரிந்திட அன்புடன் வேண்டுகிறோம்!
எங்கள் பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
சீதம் - குளிர்ச்சி; ஏதம் - குற்றம்/துன்பம்.
15 பின்னூட்டங்கள்:
எம்மையும் உன் அடியவர்களாக்கி
ஏற்று அருள் புரிந்திட அன்புடன் வேண்டுகிறோம்!
//உனைக் கண்டறிந்தவர்களைப் பற்றி //
இறைவனைப் பற்றிய சிறப்பியல்புகளை சொல்லும் பாடலும் பொருள்விளக்கமும் நன்று !
பாராட்டுக்கள் !
கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞானியா ? இது நீங்கள் சொல்லும் விளக்கமா ?
"சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னவனே!சிந்தனைக்கும் அரியவனே!எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரிய வேண்டும்! எம்பெருமானே!"
அற்புதமான வரிகள் அய்யா!
சிறப்பான பாடல்!
தந்தமைக்கு மிக்க நன்றி!
//கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞானியா ? இது நீங்கள் சொல்லும் விளக்கமா ? //
இது இப்பாடலின் விளக்கம் கோவியாரே!
எல்லாம் கற்று அறிந்து விட்டோம் எனும் ஞானியர் சிலர் இருக்கிறர்களே, அவர்களைப் பற்றி சொல்லுகிறார் இதில்!
உங்களுக்கு ஏன் உறைக்கிறது!
:))
// கற்றறிந்த ஞானியர் - கற்றறிந்தவர் மட்டும் தான் ஞானியா ? இது நீங்கள் சொல்லும் விளக்கமா ?//
கற்றறிந்தவர் என்பது நூலகளைப் படித்து
வரும் அறிவோடும், வாழக்கை அனுபவங்களை - நல்லது கெட்டதை உணர்ந்து அறிந்து கொளவதாலும் ஏற்படும் அறிவு - கற்றதனால் மட்டும் ஏற்படும் அறிவு அல்ல - கற்றதை உள்வாங்கிக் கொள்வதனால் - கற்றுணர்வதால் ஏற்படும் ஞானம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் கோவியாரே!
என்ன சரிதானே எஸ்.கே அய்யா?
தந்தவர் வாதவூரார்!
பெருமை எல்லாம் அவர்க்கே!
நன்றி ஆசானே!
மிகச் சிறப்பாக பதில் சொல்லியமைக்கு மிக்க நன்றி,ஆசானே!
புரிபவர்க்கு புரியும்!
:)
கற்றறிந்தல் - கற்றல் + அறிந்தல் இரண்டும் வேண்டும்...
தற்காலத்தில் படித்ததால் மட்டுமே அறிஞயராகின்றனர்...
ஆனால் ஆன்மிகத்திற்கு, படித்த்றிதலுடன், இறையுடன் கலந்து அந்த அனுபூதி ஏற்படுதலும் வேண்டும் என்கிறார்....
சரியா எஸ் கே சார்?
// "பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" //
எஸ்.கே, இந்த வரிகளைப் படிக்கையில் செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.
திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் எழுத்தில் அடிக்கடி காணலாம். சீரார் பெருந்துறை வாழ் நம் தேவரடி போற்றி!
ஏதம்...மிகவும் அழகான சொல். இன்று அது எந்த வகையிலும் பயன்படுத்தப்படுகிறதா என்று தெரியவில்லை.
நல்ல எளிய விளக்கம்.
ஏதங்கள் அறுத்து,
இதுதான் எனக்குப் பிடித்த வார்த்தை.
குறைஒன்றுதான் நிறைந்த மானிடப்
பிறவிக்கு அவைகளைத் தூக்கி எறிந்து
உள்ளே இருக்கும் ஜீவனைக் காப்பாற்ற அவனல்லால் யாருக்கு முடியும்.
அவனும் வேண்டாம் என்றால் வேறு யார் காப்பாற்றப் போகிறார்கள்.
எஸ்.கே.சார் மார்கழி முடிகிறதே என்று கவலைப் பட்டேன்.
உங்கள் பதிவுகளை மீண்டும் படித்தால் அது பறந்துவிடும்.
நன்றி.
கசடறக் கற்றால் மட்டும் போதாது
அதன்படி நடக்கவும் வேண்டும்
என வள்ளுவன் சொல்லியிருக்கிறான்!
அவரே கற்றறிந்தவர் என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள், மதுரையம்பதியாரே!
நன்றி!
எங்கும் எதிலும் முருகனைத் தேடும் உங்கள் உள்ளம் கண்டு மகிழ்வாய் இருக்கிறது, ஜிரா!
ஏதம் என்ற சொல் நெல்லை மாவட்டத்தில் வசித்த போது கிராமங்களில் கேட்டிருக்கிறேன்!
'பொறவு எதுனாச்சும் ஏதம் வந்துரும் புள்ள'
'எலேய்! எதினாச்சும் ஏதங் கீதம் பண்ணிப்புட்டு வந்து நிக்கக் கூடாது! ஆமா, சொல்லிப்புட்டேன்!'
என !
இன்னும் பல உண்டு!
நெல்லைக்காரர்கள் வந்து சொல்லலாமே!
இந்த 'ஏதங் கீதம்' தான் மருவி பின்னர் 'ஏடா கூடம்' ஆயிற்றோ!
'
//எஸ்.கே.சார் மார்கழி முடிகிறதே என்று கவலைப் பட்டேன்.
உங்கள் பதிவுகளை மீண்டும் படித்தால் அது பறந்துவிடும்.//
நீங்கள் சொன்னது மனதுக்கு இதமாய் இருக்கிறது, வல்லியம்மா!
இப்ப போகும் வேகத்தைப் பார்த்தால், இது மார்கழி தாண்டி, தைக்குள்ளும் செல்லும் போலத் தெரிகிறது!
23-ம் பாடல் பதிவில், திரு. ஜீராவிடம் ஒரு யோசனை கேட்டிருக்கிறேன், பாருங்கள்!
:)
//இந்த 'ஏதங் கீதம்' தான் மருவி பின்னர் 'ஏடா கூடம்' ஆயிற்றோ!//
அழகான சொல்லாராய்ச்சி SK ஐயா!
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
என்ற குறளிலும் ஏது, ஏதம் வருவதைப் பாருங்கள்!
இன்னொரு குறள்:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து
மீதிக் குறட்பாக்களுக்கு, மயிலை மன்னாரே துணை! :-)
அழகுற இரு குறட்பாக்களைப் போட்டு அசத்தி விட்டீர்களே, ரவி!
தை பிறக்கட்டும் என்றுதான் மன்னாரும் காத்துக் கொண்டிருக்கிறான்!
:)
Post a Comment