"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]
"பள்ளி எழுந்தருளாயே" - 9 [29]
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே ! [9]
[இன்றைய விளக்கம் ஜி.ரா.வுக்காக!]
விண்ணுலகில் வாழ்ந்திடும் தேவர்கள் எவரும்
மன்னவன் உன்னைக் காண விரும்பினாலும்
பூதகணங்களைத் தாண்டி வாயிலை அடைய வேண்டும்!
வாயிலில் காவலிருக்கும் நந்தியை அணுகி
முறையிட வேண்டும் முதலில் அனுமதி கேட்டு!
அவர் சென்று உள்ளே பார்த்து சிவனிருக்கும்
சூழ்நிலை கண்டறிந்து, அவரிடம் விண்ணப்பித்து
பின்னரே உள்ளே செல்ல முடியுமா, முடியாதா
என்பதைத் தீர்மானிக்க முடிந்திடும்!
இப்படி அரியதாகிய மேலான மெய்ப்பொருளே!
அப்படிப்பட்ட நீயோ எங்களை உன் அடிமையாகக்
கொண்டு எங்களை வாழச் செய்திருக்கின்றாய்!
வளமான திருத்தலமாம் திருப்பெருந்துறையினில்
வாகாய் அமர்ந்திருப்பவனே!
எப்படி அமர்ந்திருப்பினும் அடிமைகளாம் எங்களை
எப்போதும் மறவாமல் எங்களின் கண்களுக்குள்ளேயே
நின்று, காணும் பொருள்களில் எல்லாம் உன் வடிவினைக்
காட்டிக் களிப்பினை வழங்கி அருளும் தித்திக்கும் தேனே!
பரந்தாமன் அன்று பாற்கடலில் தோற்றுவித்த
ஆலகால விடத்தை யாரும் தொட அஞ்சியபோது
பரிவுடன் அதனை வாங்கி தன்னுள் செலுத்திய பின்னர்
மீண்டும் அமுதமாய்த் தோன்றியவனே!
நினைத்தாலே நெஞ்சினில் இனிப்பாய் இனிக்கும்
திருவுருவ அழகினை உடைய கரும்பே!
உன்னை விரும்பி அன்பு செய்திடும் அன்பர்கள்
எண்ணங்களில் நீக்கமற நிறைந்தவனே!
இவ்வுலகம் யாவினுள்ளும் உறையும் அனைத்து
ஜீவராசிகளுக்கும் உயிராக உள்ளவ்னே!
தீதில்லா எங்கள் பெருமானே!
பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.
அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் !
முருகன் அருள் முன்நிற்கும் !!!
12 பின்னூட்டங்கள்:
//வாயிலில் காவலிருக்கும் நந்தியை அணுகி
முறையிட வேண்டும் முதலில் அனுமதி கேட்டு!
அவர் சென்று உள்ளே பார்த்து சிவனிருக்கும்
சூழ்நிலை கண்டறிந்து, அவரிடம் விண்ணப்பித்து
பின்னரே உள்ளே செல்ல முடியுமா, முடியாதா
என்பதைத் தீர்மானிக்க முடிந்திடும்!
//
இதற்கு தான் சிவன் கோவில் நந்தி மாதிரி குறுக்கே நிற்காதேன்னு முட்டுக்கட்டை போடுறவங்களைப் பற்றி கிண்டலாக சொல்லுவாங்களா ?
:)
எஸ்கே ஐயா,
எங்கேயோ படித்திருக்கிறேன்,
கருவறையிலுள்ள சிவனை நோக்கி இருப்பது நந்தி. அது சிவனின் வாகனம்.சிவன் பரமாத்மா என்றால் நந்தி ஜீவாத்மா. பரமாத்மாவை நோக்கி அதில் கலக்கவே அல்லது பிறப்பென்னும் கட்டுதளைகளிலிருந்து விடுபடவே ஜீவாத்மா அதை நோக்கியுள்ளது. கோயிலுக்குச் செல்வோர் நந்திக்கும், சிவனுக்கும் குறுக்கே செல்லலாகாது.
கோயிலுக்குள் போகும்போது நந்தி தேவனை வழிபட்ட பின்னரே உள்ளே உள்ள சந்நிதிகலுக்குள் செல்ல வேண்டும்.
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே, கண்ணா!
நந்தி, சிவனுக்கு நல்ல தொரு விளக்கத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி, கோவியாரே!
எனது உளங்கனிந்த தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
நன்றி. நன்றி. நன்றீ. இலக்கணம் மீறாமல் மூன்று முறை சொல்லி விட்டேன். நான்காம் முறை சொன்னால் இலக்கணம் மீறுமே என்று திரும்பச் சொல்லும் ஆவலில் ஒரு மாத்திரை கூட்டிவிட்டேன். :-)
நல்ல விளக்கம்.
இந்தப் பாடலின் சிறப்பு கண்ணகத்தே நின்று களிதரு தேனே என்ற வரிதான். அதென்ன கண்ணகத்தே நின்று? கண்ணுக்குள் ஏதாவது விழுந்தால் உறுத்தலாகத்தானே இருக்கிறது. கண்ணீர் வருகிறது. உடம்பும் மனதும் வேறெதையும் மறந்து கண்ணையும் துரும்பையும் மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறது அல்லவா. அப்படி நோக்குமிடமெங்கும் நீக்கமற நின்ற இறைவனை எங்கும் கண்டால்...அந்தக் காட்சி கண்ணில் விழுந்து நெஞ்சில் உறுத்தி கண்ணீர் பெருகி...அந்த உறுத்தலுக்குக் காரணமான இறைவனையே உடம்பும் மனமும் ஒன்றாய் நினைக்கிறது என்று சொல்ல வருகிறார் மாணிக்கவாசகர். சரிதானா எஸ்.கே, கோவி?
இது போன்ற சிறப்பான விளக்கங்களைத்தான் உங்களைப் போன்றோரிடமிருந்து இந்த மாதம் முழுதும் எதிர்பார்த்தேன், ஜிரா!
இது தொடர்பாக நானும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
நீங்கள் சொல்லிய உதாரணம் பொருத்தமாக இருப்பினும், எனக்கு வேறொரு கருத்து இருக்கிறது.
"கண்ணை உறுத்தும் துரும்பு" உவமானம் இந்த இடத்தில் சரியாக வராதோ எனத் தோன்றுகிறது.
இப்போது நமக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்புப் பண்டம் இருக்கிறது. அதை நினைக்கும் போதெல்லாம், அது நம் கண்முன்னே வந்து ஒரு மகிழ்வைத் தரும்.
அதற்கும் மேலாக, ஒரு அழகிய பெண்ணின் முகம் அடிக்கடி நாம் நினைக்காத போது கூட வந்து ஒரு இனிய அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆனால், இறைவனின் உருவமோ, கண்ணையும், நெஞ்சையும் விட்டு எப்போது நீங்காமல், "களிதரு தேனாக" இனிக்கிறது என்னும் பொருளில் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.
"கண்ணகத்தே நின்று களிதரு தேன்" எனச் சொல்லியிருக்கிறர்.
கண்ணகத்தே நின்று உறுத்தும் பொருளே" எனச் சொல்லாததால் நான் இப்படி நினைக்கிறேன்.
பொங்கல் நல்வாழ்த்துகள்!
ஐயா,
//கண்ணகத்தே நின்று களிதருதேனே"//
இறைவனை உணர்வால் உணர்ந்திடக் கண்தான் நுழைவாயில். அதற்குள்ளே நின்று உள்ள களிதரும் தேனே எனப் பொருள் கொண்டால் நல்லது.
ஆஹா! இது இன்னும் நன்றாக இருக்கிறது ஐயா!
////கண்ணகத்தே நின்று களிதருதேனே"//
விண்ணில் வாழ்வதால் சிலருக்கு விண் அகம் ஆகிற்று!
மண்ணில் வாழ்வதால் சிலருக்கு மண் அகம் ஆகிற்று!
அதே போலத் தான் கண்ணகம்!
இறைவன் நம் கண்ணில் வந்து வாழ்ந்து விடுகிறான்!
கண்ணை விட்டு வெளியே நின்றால் தானே, சிறிது நேரம் அவனைக் கண்டு, மற்ற நேரங்களில் கண்டவற்றைக் கண்டு இன்பமோ துன்பமோ அடைகிறோம்!
அவனே கண்ணில் வந்து நின்று விட்டால், வேறு காட்சி ஏது?
எப்போதுமே அவன் தானே!!
அதனால் எப்போதும் களிப்பு தானே!!
அதான் மணிவாசகப் பெருந்தகை கண் அகத்தே நின்று களி தரு என்கிறார்!
சரியா SK ஐயா, கோவி ஐயா, ஞானம் ஐயா, ஜிரா?
இன்னுமொரு குறிப்பு இங்கே!
அவன் கண்ணுள் நின்றதால் பொங்கும் ஆனந்தக் கண்ணீரை, ஆனந்த பாஷ்பத்தை, தேனே என்றும் சொல்கிறார்! உவர்க்கும் கண்ணீரும் இனிக்கும் தேன் ஆகி விடுகிறது!
பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனின் கண்ணீரையும் தேன் என்றே சொல்கிறார்!
இதுவே இறைவனைத் தமிழால் துதிக்கும் நயமும் நலமும் ஆகும்!
ஒரு கண்ணகத்தேக்கு இவ்வளவு விளக்கமா?
கண்ணிற்கு உள்ளேன்னு சொல்லியாச்சு, கண்ணே அகம்ன்னும் சொல்லியாச்சு.
ஆனால் கண்ணகத்தே என்பதை அகக்கண்ணாலேயே எனவும் சொல்லலாமே. வெளியில் இருப்பதைப் பார்க்கும் கண்ணால் தேடாமல் அகக்கண்ணால் தேடினால் அங்கு நின்று நீ அருளும் காட்சியானது எனக்குத் தேனே எனவும் பொருள் கொள்ள முடியுமல்லவா?
அன்புடையீர்,
திருமூலர் :
“ஒண்ணா நயனத்திலுற்ற வொளி தன்னை
கண்ணாரப் பார்த்து கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட வோடிப்
பண்ணாம நின்றது பார்க்கலுமாமே.”
ஒண்ணா நயனம் = ஞானக் கண். விண்ணாறு = ஆநந்தக் கண்ணீர்.
பண்ணாமல் நின்றது = தானாகிய தூய சிவம்.
பார்க்கலும் = உணர்த்த உணர்ந்து வழிபடுதல்.
புருவ நடுவினை ஊசிப்பார்வையால் உற்று நோக்கி, முக்கலைகளையும் கலந்து நினைவினில் நிற்க, யோக ஊற்று திறந்து யோகக் கண்ணீராம் ஆநந்தக் கண்ணீர் வெளி வந்து ஓடும். மெய்யுணர்வு வெளிப்படும். தூய சிவமாகிய சீவனைக் கண்டு வழிபட இயலும்.
ஓளவை கூறிய பிண்டமும், நெறிப்பட வுள்ளே எனத் திருமூலர் கூறியதும் பிரிவைக் காட்டும் இரு கண்களே. இதைவிடத் தெளிவாகப் பிரும்ம இரகசியத்தை வெளிப்படுத்த இயலாது.
இன்னும், மாணிக்கவாசகப் பெம்மான் :
“சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினைநின் றிருப்பாதப்
போதுக்காக்கி
வந்தனையு மமலர்க்கே யாக்கிவாக்குள்(ஆதத்துடைய - சூரத்துள்) மணி வார்த்தைக் காக்கியும் புலன்களார
வந்தனை யாடகொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையேயுன்னைத்
தந்தனை செந்தாமரைக் காடனையமேனித் தனிச் சுடரே யிரண்டுமிலிதனிய னேற்க்கே.”
ஈண்டு, இரண்டுமிலை யென்பதை இம்மெய், மறுமெய் எனவும், தூல சூக்குமமெனவும் கொள்ளலாமென்பர் ஆன்றோர்.
இது போன்ற விலக்கங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன், ரவி, உங்களிடமிருந்தும், இன்னும் மற்றவரிடமிருந்தும்!
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பழைய பதிவுகளுக்குள் சென்று இன்னும் முத்தெடுத்துத் தாருங்கள்!
கண்ணே அகம்! மிக நல்ல பொருள்!
உள்ளும் புறமும் அவனே!
கண்ணகமே, அகக்கண்ணே அவந்தான்!
இது கொத்தனாரின் விளக்கம்!
இத்தனை நாள் இங்கு வராமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் கொத்ஸ்!?
அகக்கண்ணிலேயே இதனையெல்லாம் படித்து மகிழ்ந்து கொண்டிருந்தீர்களோ!
முத்தாய்ப்பாய் ஞானவெட்டியான் ஐயாவின் கவினுறு விளக்கம்.
கண்ணகத்துக்குச் சொன்னது
எண்ணகத்தெல்லாம் இனிக்கிறது!
பண்ணகத்தே பொருள் சொல்ல
விண்ணகத்தோனும் மகிழ்ந்திடுவான்!
நன்றி ஐயா!
Post a Comment