"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]
"பள்ளி எழுந்தருளாயே!" - 4 [24]
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !
இனிய நாதம் ஒலிக்கும் வீணையும், யாழும்
ஏந்தி இன்னிசைக்கும் கூட்டம் ஒரு புறம்;
வேத மந்திரங்களுடன் பல்வேறு
துதிப்பாடல்களை ஓதிடும் கூட்டம் ஒரு புறம்;
நெருங்கித் தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை
கையில் ஏந்தி நின்றிடும் கூட்டம் ஒரு புறம்;
அன்பு மிகக்கொண்டு அழுது கண்ணீர்விடுபவரும்
மெய்மறந்து தள்ளாடுபவரும் கூட்டம் ஒரு புறம்;
இருகை கூப்பி தலை மேல் உயர்த்தி அரகரவென
அஞ்சலி செய்திடும் கூட்டம் ஒரு புறம்;
அருள்மிகு திருப்பெருந்துறையினில்
அழகுற வீற்றிருக்கும் சிவபெருமானே!
இவ்வண்ணம் பெருமை வாய்ந்த அடியவர்
உன் திருச்சந்நிதி முன் கூடியுள்ளார்!
தகுதி சிறிதேனும் இலாத நானும்
இவர்கள் நடுவே நின்றிருக்கிறேன்!
என்னையும் ஒரு பொருட்டாக அருள் செய்து
ஆட்கொண்ட எந்தன் பெருமானே!
பள்ளி எழுந்தருள்வாயே!
['தகுதி சிறிதும் இலாத நான்' எனச் சொல்லி, அதே கையோடு, இத்தனை தகுதி வாய்ந்தவரையும் புறந்தள்ளி, எனக்காக எழுந்திரு எனக் கேட்கும் உரிமை! இவனன்றோ 'எமக்கெளியன்!']
அருஞ்சொற்பொருள்:
துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.
12 பின்னூட்டங்கள்:
சிவபெருமான் அதிகாலை வேலை எழுந்தருள வேண்டி அவருக்காக இசையும், பாடலும், மலர்மாலகளையும் வைத்துக் கொண்டு காத்திருப்பவர்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்ற பாடல். படிக்கும் போது அதிகாலை வேலை சந்நிதியில் கூடவே நின்று பார்பது பொன்று உணர்கிறேன்.
எஸ்கே ஐயா ! இனிய காலையை இந்த பாடலில் விழிக்க வைத்ததற்கு
பாராட்டுக்கள் !
தகுதி இல்லா பலருக்கும் நடுவே, நானும் போடுகின்ற இப்பதிவுக்குத் தவறாது வந்து,
என்னையும் ஆதரிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன், கோவியாரே!
உங்களைப் போன்றோரின் வரவே என்னையும் ஊக்குவிக்கிறது!!
மிக்க நன்றி!
//உங்களைப் போன்றோரின் வரவே என்னையும் ஊக்குவிக்கிறது!!
மிக்க நன்றி!//
எஸ்கே ஐயா,
காலை வேலையில் உங்கள் பதிவு இல்லையென்றால் வெறுமையாக இருக்கும்... ஏமாற்றமாக இருக்கும்... இவற்றை தவிர்க்க எழுதும் உங்களுக்கும் பாராட்டுக்கள் !
நானும் வந்து படித்துவிட்டு போனேன் என்று "மட்டும் " எப்படி சொல்வது?
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
நீங்க ஒருத்தராவது இப்படி சொல்றீங்களே!
நெகிழ்ச்சியாய் இருக்கிறது!
நீங்க ஒருத்தராவது இப்படி சொல்றீங்களே!
நெகிழ்ச்சியாய் இருக்கிறது!
நீங்க ஒருத்தராவது இப்படி சொல்றீங்களே!
நெகிழ்ச்சியாய் இருக்கிறது!
புரிந்து கொள்ள "முயற்சிக்க" வேண்டாம்!
அதுவே புரியும், திரு.குமார்!
சிவனே போற்றி!
அன்பு SK,
//தகுதி இல்லா பலருக்கும் நடுவே, நானும் போடுகின்ற இப்பதிவுக்குத் தவறாது வந்து,
என்னையும் ஆதரிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்,//
தன்னடக்கம்தான் புலனடக்கத்தின் தொடக்கம்.
அடங்கியபின் மவுனம்தான்.
வாழ்க! வளர்க!!
மௌனம் விரைவில் வர அருளுக வெட்டியானே!
//தகுதி சிறிதேனும் இலாத நானும்
இவர்கள் நடுவே நின்றிருக்கிறேன்!
என்னையும் ஒரு பொருட்டாக அருள் செய்து
ஆட்கொண்ட எந்தன் பெருமானே!//
நெகிழ வைக்கும் விளக்கம்
மிக நன்றாக உள்ளது அய்யா!
//நெகிழ வைக்கும் விளக்கம்
மிக நன்றாக உள்ளது அய்யா!//
நெகிழ்ந்தாரைக் கண்டு, நெகிழ்ந்து எழுதிய, நெகிழ்ந்தவரின் பாடலுக்கே இப்பெருமையெல்லாம் போய்ச் சேரும் ஆசானே!
நெகிழ்பவரான நீங்கள் நெகிழ்ந்ததில் வியப்பென்ன !
நெகிழச் செய்பவனே போற்றி!
மிக்க நன்றி!
Post a Comment