Sunday, June 03, 2007

"மௌனம் ஒரு பாஷை"

மௌனம் ஒரு பாஷை -- மீண்டும் ஒரு டிவி கதை!!

படிகள் என்னும் தொடரைப் பற்றி எழுதியது நினைவிருக்கலாம்.

அதே போல் நேற்று ஒளிபரப்பான ஒரு சின்னத்திரை படத்தைப் பற்றிய ஒரு பதிவு.

முதலில் கதைச் சுருக்கம்.....!

5 பிள்ளைகள் பெற்ற ஒரு வயதான தம்பதியினர்.
கடைக்குட்டிக்கு இப்போது வயது 16.
முதல் பெண் விதைவையாகி,... இப்போது வீட்டில்.
அடுத்த மூன்று ஆண் பிள்ளைகளும் கல்யாணம் முடித்து, கூட்டுக் குடித்தனம்.

ஒரே ஒரு திருத்தம்!
கடைசிப் பிள்ளை மட்டும் சென்னையில்..... தந்தையால் தள்ளி வைக்கப்பட்டு ..... கூடப்படித்த வெள்ளைக்கார டாக்டர் பெண்ணைக் காதலித்ததால்.
இப்போது அவன் சென்னையில்.....தனியாக குடும்பம் நடத்துகிறான்.

கடிதப்போக்குவரத்து கூட கிடையாது.
கணவனின் கல்லாய்ப்போன மனம் கண்டு உள்ளுக்குள்ளேயே புழுங்கும் தாய்.

இந்நிலையில், தந்தை கைப்பட எழுதிய கடிதம் ஒன்று டாக்டர் மகனுக்கு வருகிறது.
தாய் திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என.
வரச்சொல்லி அல்ல!

பதறி அடித்துக் கொண்டு இவன் ஓடி வருகிறான்.
5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்க்காத சந்தோஷத்தில், அனைவரும் மகிழ்கின்றனர்.....
தன் மனைவியின் புகைப்படத்தை அனைவருக்கும் காட்டுகிறான்.
இன்னும் மகப்பேறு அடையாத இரண்டாவது அண்ணியை சென்னைக்குக் கூட்டிச் சென்று பரிசோதனை செய்ய வாக்களிக்கிறான்
தந்தை மட்டும் இன்னமும் முருங்கை மரத்தில்!!
இவனைக் கண்டாலே, முகத்தைத் திருப்பிக் கொண்டு நகர்ந்து விடுகிறார்.
தாய் இன்னும் மயக்கமாகத்தான் இருக்கிறார்.

கண் விழித்ததும், கதறுகிறார், 'என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? இவனை ஏன் வரவழைத்தீர்கள்?' என.
மகனைப் பார்க்காததால்தான் இச்செயல் செய்ய முயற்சித்தார்; இப்போது மகனைப் பார்த்ததும் மனமகிழ்வார் என எண்ணிய மற்ற பிள்ளைகளுக்கு ஒரே அதிர்ச்சி.

டாக்டர் மகன் மட்டும், தாயின் கை [நாடி] பிடித்துப் பார்க்கிறான்.
அவன் முகம் மலர்கிறது!
"இதற்காகவா அம்மா இப்படி செய்யத் துணிந்தாய்?" என மலர்ச்சியுடன் கேட்கிறான்.

"ஊர் உலகம் என்ன சொல்லும்? என் முகத்தில் காறித் துப்புவார்களே! அந்த மனுஷனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி? அவரை என் முகத்திலேயே காட்டாதே!" எனப் புலம்புகிறார்.

ஆம்! அவர் இப்போது 16 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயாகியிருக்கிறார்! .

"ஓ! தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது! இதற்காக நீ வருந்தாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என சொல்லிவிட்டு, வெளியே வந்து, அனவரிடமும் [தந்தையைத் தவிர!!] இதைப் பகிர்கிறான்.

அவ்வளவுதான்! அங்கே ஒரு பூகம்பமே வெடிக்கிறது!

அம்மாவுக்கு என்ன ஆசை இந்த வயதில் எனப் பெரியவன் குமுற, இதுக்கொண்ணும் குறைச்சலில்லை எனப் பெரிய அண்ணி முகம் நொடிக்க, விவஸ்தை இல்லாமல் இப்படி ஒரு காரியம் செஞ்சாளே இவ, என தமக்கை முகம் சுளிக்க, தனக்கே இன்னும் குழந்தை பிறக்கா நிலையில், மாமியார் கருவுற்றதை சகிக்க முடியாமல் சிறிய அண்ணி மனம் வெதும்பிப் பொறாமை கொள்ள, அவமானத்தால் அவள் கணவன் தலைத் திருப்பிக் கொள்ள.......

எல்லாரும் தாயையும், தந்தையையும் இப்போது ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றனர்.


கடைசிப் பெண் மட்டும் எனக்குத் தம்பிப்பாப்பா வரப்போகிறான் எனக் குதூகலிக்கிறாள்.

டாக்டருக்கு ஒரே அதிர்ச்சி!

வரும் கோபத்தில், அவர்களை எல்லாம் பார்த்து ஒரு நீண்ட கூப்பாடு போடுகிறான்.முற்றத்தில், கொட்டும் மழையில் நனைந்து கொண்டே....

"என்ன மனிதர்கள் நீங்கல்லாம்? கொஞ்சங்கூட மனிதத்தன்மையே இல்லாம இருக்கீங்களே! தாய்மை என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம். அதை இன்னும் வழங்க இங்கே இரு ஜீவன்கள் இருக்கின்றனர் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம். அதைக் கண்டு மகிழாமல், அதனைப் போற்றாமல் கேலி பேசும் உங்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கு. பெற்றவருக்கு ஆதரவா இருக்க வேண்டிய நீங்க இப்படி நடக்கலாமா?"
எனக் கூச்சலிட்டுவிட்டு, நகர்கிறான்.... சொட்டச் சொட்ட நனைந்தபடியே!

மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டபடியே இருந்த தந்தை, தன் மேல்துண்டை திண்ணையின் மேல் போட்டுவிட்டுச் செல்கிறார்......, வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே,........ இவனையும் தலையைத் துவட்டிக்கொள்ளச் சொல்கிற மாதிரி!

மறுநாள், தந்தையிடம் சென்று பேசுகிறான்...... அவர் இவனைப் பார்க்காமல் திரும்பி நின்றாலும்!
தாயின் மனநிலை, உடல்நிலை கருதி, தன்னுடன் கொண்டு சென்று வைத்துக் கொள்ளப் போவதாய்.

அவ உனக்கும் அம்மாதான். வந்தா கூட்டிகிட்டுப் போகலாம் என சொல்லிய வண்ணம் நகர்கிறார்!

சற்று தூரம் சென்ற மகன் சட்டெனத் திரும்புகிறான்........ கண்ணைக் குறுக்கியபடியே தன்னைப் பார்க்கும் தந்தையைப் பார்க்கிறான்!
இவன் திரும்பியதும், பொய்வீறாப்பாக, தந்தை முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.!!!

அம்மாவைச் சமாதானப் படுத்தி, தன் மனைவியைப் பற்றிய அவரது சந்தேகத்திற்கு பதில் சொல்லி, சென்னைக்குக் கூட்டிச் செல்கிறான்.

தந்தை இன்னமும் மௌனமாக வாசல் வரை வந்து, பார்த்தும், பாராதது போல் நின்று, வழியனுப்பி வைக்கிறார்.

அந்த மௌனம் எத்தனையோ மொழி பேசுகிறது.

மகனுக்கு நன்றி, புரிதலில் நிம்மதி, மனைவியைப் பிரியும் வருத்தம், அவளுக்கு சற்று அமைதி கிடைக்கப் போகிறதே எனும் மகிழ்ச்சி, இனித் தனியாக இவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம்...... இப்படி இன்னும் பல!!

அனைவரும் கார் நகர்ந்ததும் உள்ளே செல்லுகின்றனர்.

கடைக்குட்டி மட்டும், தயங்கியபடியே அப்பாவின் அருகில் வந்து, வெள்ளிக்கார அண்ணியின் புகைப்படத்தை அப்பாவின் சட்டைப்பையில் செருகிவிட்டு, சிட்டாகப் பறக்கின்றாள்.

யாரும் பார்க்காத தனி இடமாக வந்து, சுற்றுமுற்றும் பார்த்தபடியே, சட்டைப்பையிலிருந்து எடுத்து அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.

தூரத்தே கிளுகிளுவென யாரோ சிரிக்கும் சத்தம்!

ஒரு 70 வயதுக் கிழவர், தென்னை மரத்தடியில் அமர்ந்து, தன் ஆசை மனைவிக்கு 'இந்தா சாப்பிடு!' என்றபடியே அல்வா ஊட்டுகிறார். அந்தக் கிழவியும் திருப்பி ஊட்டுகிறார்!

சிங்காரம்பிள்ளையும் சிரிக்கிறார்!

70-களில் வந்த அருமையான குறுநாவல்.
எழுதியவர் சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்!!!

இந்தக் கதையை மிக மிக அற்புதமாக ஒரு 2 மணி நேரக் குறும்படமாக வழங்கினார்கள் நேற்று, விஜய் டி.வி.யில்.

தந்தையாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன்; தாயாக வெண்ணிற ஆடை நிர்மலா!

அதிக வசனங்கள் இருவருக்கும் இல்லை.
ஆனால், தங்களது அனுபவ முதிர்ச்சியை, பண்பட்ட நடிப்பின் மூலம் நமக்கெல்லாம் காட்டி நடித்திருந்தனர்.


மற்ற கதாபாத்திர தேர்வுகளும் கச்சிதமாயிருந்தது.
கதை நிகழ்வதாகக் காட்டிய கிராமமும் கொள்ளை அழகு!
இயற்கை எழில் பூத்துக் குலுங்கியது.

மொத்தத்தில் ஒரு நிறைவான படைப்பு.

வழங்கிய விஜய் டி.விக்கு எனது நன்றியும், வாழ்த்துகளும்.

இதில், சிம்பாலிக்காக, வேரில் காய்த்துத் தொங்கும் ஒரு பலாமரமும் சிறப்பாக நடித்திருந்தது என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது!!

6 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Sunday, June 03, 2007 4:21:00 PM  

நல்ல கதைதான். விஜய் டீவி வராத எங்களைப் போன்றோருக்கு நீங்கள் எழுதியது நேரில் டீவியைப் பார்த்தது போல் இருந்தது.

(க்ளிஷேவான பின்னூட்டம் போட்டாச்சு, யாரு வேணாலும் கட் பேஸ்ட் பண்ணிக்குங்க.) :))

VSK Sunday, June 03, 2007 4:58:00 PM  

பாராட்டும் போது கூட சக பின்னூட்ட அன்பர்களைப் பற்றி அக்கறைப்படும் உங்கள் உயர்ந்த உள்ளம் கண்டு புல்லரிக்குதுங்க கொத்ஸ்!

:))

கோவி.கண்ணன் Sunday, June 03, 2007 9:18:00 PM  

//மகனுக்கு நன்றி, புரிதலில் நிம்மதி, மனைவியைப் பிரியும் வருத்தம், அவளுக்கு சற்று அமைதி கிடைக்கப் போகிறதே எனும் மகிழ்ச்சி, இனித் தனியாக இவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமே என்ற ஆதங்கம்...... இப்படி இன்னும் பல!!//

இதில் விடுப்பட்டது...இன்னும் ஒரு குழந்தைக்கு தந்தையாகிறோம் என்ற பெருமகிழ்ச்சி ?

:)))))))

VSK Sunday, June 03, 2007 11:15:00 PM  

அதைத்தான் ஒரு ஒரூமதகாலமாகவே பட்டிருக்கிறாரே!

இது இன்றைய வெளிப்படு மட்டுமே!

அதுவும் சொல்லலாம்தான்.கோவியாரே!
:))

Geetha Sambasivam Wednesday, June 13, 2007 7:28:00 AM  

கதையும் படித்திருக்கிறேன், இந்தக் குறிப்பிட்ட தொடரும் பார்த்திருக்கேன். முன்னால் தூர்தர்ஷன் சென்னையில் வந்ததுன்னு நினைக்கிறேன். உண்மையில் நல்ல கருத்துள்ள படம். நல்ல காட்சி அமைப்புடன் எடுத்திருப்பார்கள். ஆனால் கதைப்படி பையன் வெளிநாட்டில் இருப்பதாயும், இங்கே எல்லாரும் எதிர்ப்பதால் தாயை வெளிநாட்டுக்கு அழைத்துப் போக ஏற்பாடுகள் செய்வதாயும் படித்த நினைவு! இங்கேயும் விஜய்தான் (நல்லவேளையாக) வருது! :)

வல்லிசிம்ஹன் Saturday, June 23, 2007 1:06:00 AM  

விஜய் டிவியா.அப்படி எல்லாம் அமெரிக்கால நீங்க பார்க்கிறீங்களா.
இது பொறுமல்.

நீங்க பார்த்து ரசித்து எங்களுக்கும் சொன்னதுக்கு மகிழ்ச்சி .

இந்தக் கதை ஜயகாந்தனின் மற்ற கதைகளைப் போலவே சில் என்று ஒரு புது உணர்ச்சித்தாக்கம் ஏற்படுத்தும்.
யாருமே யோசிக்கத் தயங்கும் கோணத்தில் பளிச்சென்று எழுதிவிடுவார்.
எஸ்.எஸ்.ஆரும் நிர்மலாவுமா.
நல்லாவே நடிச்சிருப்பாங்க.
பார்க்க முடியாத வருத்தத்துடன்....

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP