Thursday, June 14, 2007

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

மயிலை மன்னாரின் குறள் விளக்கம் -- 14 "கண் விதுப்பழிதல்"

பார்த்து கொஞ்ச நாள் அதிகமே ஆயிடுச்சு! இன்னிக்கு எப்படியும் பார்க்காமல் போகக்கூடாது என முடிவு செய்து, வழக்கமான மயிலை கபாலி குளத்தருகே இறங்கி, நேராக
நாயர் கடை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல், எதிரில் நம்ம மயிலை மன்னார்!

சில நண்பர்களோடு ஏதோ சீரியசாகப் பேசிக்கொண்டு வந்தவன், என்னைப் பார்த்ததும், "அட! இன்னாபா, அதிசயமா இருக்கு! இப்பல்லாம் அடிக்கடி வர்றதில்லியே நீ! எங்க இம்மாந்தூரம்?" என்று நக்கலாகக் கேட்டான்.

"அதெல்லாம் இல்லேப்பா; கொஞ்சம் வேலை மும்முரம். அதான், அடிக்கடி வர முடியலை" என அசடு வழிந்தேன்.

"தா! இன்னாத்துக்கு பொய் ஸொல்றே? அதான் ஒன் கண்ணே ஒன்னியக் காட்டிக் கொடுக்குதே!" என்று அதட்டினான் மன்னார்.

'கண்' என்றதும் சட்டென ஒரு பொறி தட்ட, உடனே அவனைப் பார்த்து அவசரமாகக் கேட்டேன்; " ஆமா, இந்தக் கண்ணு பேசுமா? எப்பிடி காட்டிக் கொடுக்குதுன்னு சொல்கிறாய்?"

"கண்ணு எப்பிடி பேசும்? வாய்தான் பேசும். ஆனா ஒரு ஆளைப் பாத்ததும் அவங்க மூஞ்சி காட்ற சில விஷயங்களைக் காட்டிக் கொடுத்திரும். அதுல இந்தக் கண்ணும் ஒண்ணு. இது மௌனமா சில சேதிகளைச் சொல்லும்.
ரொம்பப் பேரு இத மட்டுமே பார்த்திட்டு, இது என்னமோ பேசுதுன்னு நினச்சுகிட்டு, மத்த விஷயங்களைக் கோட்டை விடறாங்க. மொத்தமா கவனிச்சா, மத்த உறுப்புங்க செய்யற சேட்டைகளைப் பாக்கலாம். ஆனா, இவங்கதான் இந்தக் கண்ணு மேல
மொத்தமா நம்பிக்கை வெச்சிட்டாங்களே! மிஸ் பண்ணிடறாங்க! இது மாரி நம்பி மோசம் போனவங்கள்ல பொண்ணுங்கதான் டாப்பு. இப்பிடி நம்பி ஏமாந்து போனதுக்கப்பறம் கண்னை நம்பி ஏம்மாந்திட்டோமேன்னு புரிஞ்சுக்கறவங்களும் இவங்கதான்!
இந்த விஷயத்தைப் பத்தி ஐயன் ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. அது என்னான்னு சொல்றேன். வா. கடையாண்ட போய் வடையைக் கடிச்சுக்கினே கேளு" என்று அன்புடன் தோள் மீது கை போட்டு இழுத்துக் கொண்டே சென்றான்.

இனி வருவது குறளும், மயிலை மன்னாரின் விளக்கமும்!

அதிகாரம் 118. "கண் விதுப்பழிதல்"

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. [1171]

நான் உண்டு என் படிப்பு, உண்டு, என்னோட வீடு உண்டுன்னு இருந்த என்னை, 'ஏய்! அந்தாளைப் பாரு! இன்னா ஷோக்கா கீறான் பாரு!
அவன் கலரும், ஒசரமும், பாடியும் ! அவன் கண்ணைப் பாரேன்! எப்பிடி சிரிக்கறான் பாரு"ன்னு அவனைப் பாக்கச் சொல்லி, காட்டி, மனசுல பிடிச்சு வெச்சது நீங்கதான்!
இப்ப அதுனாலதான் எனக்கு இந்த தீராத நோவு வந்துது! இப்ப அவன் பூட்டான்! இத்தினியும் பண்ணின நீங்கதான் இப்ப பொலபொலன்னு கண்ணீர் வுடறீங்க! ஏ கண்ணுங்களா! இது இன்னா நாயம்?"

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். [1172]

"வெறும் அளகை மட்டுமே பார்த்திட்டு, பேச்சை மட்டுமே நம்பிட்டு, பின்னாடி இன்னா ஆவும்ன்றதைப் பத்தி துளிக்கூட யோசிக்காம,
இது சரிப்பட்டு வருமா? இது ஆவுற கதையா?ன்னுல்லாம் சிந்திச்சுப் பாக்காம, அவனையே மொறச்சு மொறச்சு பாத்த, ஏ, மை தீட்டின கண்ணுங்களா! இப்ப இன்னாத்துக்கு இப்பிடி வருத்தப்பட்டுகிட்டு அளுவுறீங்க?


கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்கது உடைத்து. [1173]

"அந்த ஆளைப் பாத்தப்போ, நல்லா அகலமாத் தொறந்து வெச்சு பாத்தீங்களே, கண்ணுங்களா, இப்ப அவன் பூட்டானேன்னு துக்கப்பட்டுக்கினு அளுவுறீங்களே, ரொம்ப நல்லாருக்குடிம்மா
நீங்க செய்யுறது! எனக்கு உங்களைப் பார்த்தா, சிரிப்புதான் பொத்துகிட்டு வருது! நல்லா அளுவுங்க!"

செயலற்றார் நீருலந்த உண்கண் உயலற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. [1174]


" இப்பிடி அளுது, அளுது, நான் தெனமும் அளகா மைதீட்டி வளத்த இந்த கண்ணுங்க, இப்ப எனக்கு நான் பொளைக்க முடியாதபடி ஒரு நோவைக் கொடுத்திட்டு,
அதுங்களும் அளமுடியாம வத்திப் போய் நிக்குதுங்க பாரேன்! வோணும் இதுங்களுக்கு!"

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். [1175]


"இப்ப அவரு என்னிய விட்டுப் போனதால, எனக்கு வந்திருக்கற இந்த துன்பம்ங்கற நோவு எம்மாம் பெருசுன்னா, இத்தோட பாக்கறப்ப,
தோ, எதுத்தாப்பல இருக்கே சாந்தோமாண்டை, அந்த கடல் கூட இத்த விட சின்னதுங்கலாம்!
இத்தக் கொணாந்ததே இந்தக் கண்ணுங்கதான். இப்பப் பாரு! அதுங்க தூங்கக் கூட முடியம தவிக்கற தவிப்பை!"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. [1176]

"இப்பிடி எனக்கு இந்த நோவைக் கொடுத்ததுக்கு முக்கிய காரணமே இதுங்க தான்!
இந்தக் கண்ணுங்கதான்!
இப்பம் பாரு, அதுங்களும் தூங்காம தவிக்குதுங்க.
ஹைய்யா, எனக்கு ஜாலி! இது ரொம்ப நல்லாருக்கு!"


உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்கண்ட கண். [1177]

"பாரு, பாருன்னு என்னியத் தூண்டிவிட்டு, ஐயோ! இவரைப் போல வருமான்னு அவருக்காவ உருகி, உருகி,
அவரையே பாத்துகிட்டிருந்த இந்தக் கண்ணுங்க ரெண்டும் இப்போ அளுது, அளுது, தன் பண்ணின தப்புக்காவ வருந்தி, வருந்தி,
கண்ணுல தண்ணியே இல்லாமப்போவட்டும்!
நல்லா வோணும் இதுங்களுக்கு!"


பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். [1178]


" இப்ப அவரு என்னிய வேணாமின்னு சொல்லிட்டு பூட்டாரு. மன்சால கூட என்னை விரும்பாதவராயிட்டாரு.
ஆனாலும், அவர் பேரை கேட்டாலே
இப்பவும் கிளுகிளுங்குது.

இந்த வெக்கங்கெட்ட கண்ணுங்க மட்டும், பொறுமையே இல்லாம, இன்னமும் அவரைப் பாக்கணுமின்னு துடியாத் துடிக்குது! சீச்சீ! இன்னா பொளப்பு இது?"

வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். [1179]

" இந்தப் பொல்லாத கண்ணுங்க இருக்கே, ரொம்ப மட்டம்! அவரு வரலேன்னாலும் தூங்க மாட்டேங்குதுங்க.
வந்தாக்காண்டியும் தூங்காதுங்க! அவரையே பாத்துக்கினு இருக்கும்!
இப்பிடி, வந்தாலும் தும்பம், வரலேன்னாலும் தும்பம்னு அலையுதுங்க!"


மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து. [1180]


அளுது அளுது, அவரையே நினைச்சுகிட்டு இருந்து வீங்கிப் போயிருக்கற
இந்தக் கண்ணு ரெண்டையும் பாரேன்.
பட படன்னு தம்பட்டம் அடிச்சு ஊருக்கு சேதி சொல்ற டமாரம் மாரி,
இதுங்க ரெண்டுமே என் மனசு இன்னமும் அவரையேதான் நினைச்சுகினு இருக்குன்றத,
ஊருக்கெல்லாம் காட்டிக் கொடுத்துகிட்டு அலையுதுங்க!"

இப்ப இதுவரைக்கும் சொன்னதிலேர்ந்து இன்னா வெளங்குது ஒனக்கு?
கண்ணுங்க வேலை பாக்கறதும், அளறதுந்தான்!
மூல காரணமா நின்னுகிட்டு, ஆசையைத் தூண்டி வுடறதும், அப்பால, அத்தயே நெனச்சுகிட்டு அளுவறதுந்தான் இதோட வேலை!
புரியுதா?
ஆராச்சும், கண்ணு பேசுது, சொல்லாத சொல்லெல்லாம் சொல்லுதுன்னு ரீல் வுட்டாங்கன்னா நம்பாதே!
காட்டிக் கொடுக்கும்; கஸ்டப்படுத்தும்!
அவ்ளோதான்!
ஆச்சா?"
என்றவாறே டீயை உறிஞ்சினான் மன்னார்.

"புரியுது மன்னார். இந்த 'உண்கண்' அப்படீன்னு சொல்றாறே, அப்பிடீன்னா என்ன?" எனக் கேட்டேன்.

பெரிதாகச் சிரித்தான் மன்னார்!
'நெனச்சேன்! நீ கேப்பேன்னு நெனச்சேன்! இந்தப் பொண்ணு கண்ணுக்கு மை தீட்டுதில்ல? அதெல்லாத்தையும் இந்தகண்ணு ரெண்டும்
நல்லா தின்னுதுங்களாம்! அதான் உண்கண், மையைத் தின்ன கண்ணுங்கன்னு ஐயன் சொல்லி சிரிக்கறாரு' என்றான்!

நானும் சிரித்துக் கொண்டே, பைதல்னா? என்று இழுத்தேன்.

'இது அடிக்கடி ஐயன் யூஸ் பண்றதாச்சே! பைதல்னா தும்பம்[துன்பம்].

சரி, சரி, தலீவர் படம் இன்னிக்கு ரிலீஸ்! இப்பத்தான் கொஞ்சம் காசு பாக்கலாம். தியேட்டராண்டை நம்ம பசங்க காத்துகினு இருப்பாங்க. நா வர்ட்டா! ஒனக்கு எதுனாச்சும் டிக்கட் வேணுமின்னா, ஆல்பர்ட் தியேட்டர் பக்கம் வந்து கண்டுக்கோ!
சரியா!" என்றவாறே அந்தப் பக்கம் வந்த ஆட்டோவில் தாவினான் மயிலை மன்னார்!

"அட, இருப்பா! நானும் வரேன்!" என்றவாறு நானும் ஆட்டோவில் தொற்றிக் கொண்டேன்!

14 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Thursday, June 14, 2007 12:41:00 AM  

ஆட்டோவில் ஏறினா பிரச்சனை இல்லை,வராமல் தான் இருக்கவேண்டும்.:-))

நாமக்கல் சிபி Thursday, June 14, 2007 12:50:00 AM  

கண் பேசும் வார்த்தைகள் புரிவதிலை!
:)

VSK Thursday, June 14, 2007 12:50:00 AM  

முதல் பின்னூட்டமாக வந்தமைக்கு நன்றி!

"சிவாஜி" ஜுரத்தில் மொத்த தமிழ் கூறும் நல்லுலகமுமே துடித்துக் கொண்டிருக்கும் இந்நேரம் யார் வந்து குறள் படிக்கப் போகிறார்கள் என நினைத்தேன்.

என் மனத்தில்[கட்-அவுட்டில் அல்ல!] பால் வார்த்தீர்கள்!

ஒரு ஐயம்!

இத்தனை வரிகளில், அந்தக் கடைசி வரிதான் விமரிசிக்க தகுதியானதா, திரு.குமார்!

:)))

நன்றி!!

VSK Thursday, June 14, 2007 12:52:00 AM  

அதேதாங்க, சிபியாரே!

கரீட்டா பாயிண்ட்டைப் புடிச்சுட்டீங்க!

:))

வெங்கட்ராமன் Thursday, June 14, 2007 1:35:00 AM  

ஒரு சந்தேகம் இது போன்ற காதல் சொல்லும் குறள்கள் எல்லாம் பெண் சொல்வது போலவே அதிகமாக இருக்கிறதா. . . . . ?

மேலும் உங்கள் குரள் விளக்க பதிவுகளை தனி பகுதியாக கொடுத்தால் நன்றாக இருக்குமே. . .

Geetha Sambasivam Thursday, June 14, 2007 7:19:00 AM  

"கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.".

VSK Thursday, June 14, 2007 8:50:00 AM  

இந்தக் குறள்ல கூட என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

கண்ணோட வேலை நோக்கறது மட்டும் தான்.
வாயோட வேலை சொற்களை வுடறதுதான்!

அதது அததோட வேலையை ஒழுங்கா செஞ்சா, நோ ப்ராப்ளம்னு சொல்றாரு.

நோக்கறது, அதுலியும், ஒக்க நோக்கறது..... ரெண்டு பேர் பார்வையும் ஒரே உணர்வோட இருந்தா,....பிரச்சினை இல்லேன்றாரு! பேசக்கூட வேணாம்ன்றாரு!

நன்றி, தலைவி!

வல்லிசிம்ஹன் Thursday, June 14, 2007 9:25:00 AM  

இந்தக் குறள் விளக்கமெல்லாம் நான் எப்பவோ படிச்சிருக்க வேண்டும்.
இப்போது கண்கெட்டபிறகு
சூரிய நமஸ்காரமா.:)))

சிவாஜி வரும்போது சிவந்தகண்களா.
நன்று நன்று.:)

VSK Thursday, June 14, 2007 12:08:00 PM  

ஏங்க?
டிக்கெட் கிடைக்கலியா?
இல்லை அருமை மகன் கூட்டிகிட்டு போகமாட்டேன் எனச் சொல்லிட்டாரா?

ஏன் சிவந்த கண்கள்?
:))

வருகைக்கு நன்றி அம்மா!

அன்புத்தோழி Thursday, June 14, 2007 5:26:00 PM  

அய்யொ, நீங்க இப்படியெல்லாங்கூட எழுதுவீங்களா? கலக்கியிருக்கீங்க....
குறளையும் மன்னாரையும் போட்டு கிண்டு கிண்டி ஒரு கண் உப்புமா செஞ்சிட்டீங்க போங்க.

VSK Thursday, June 14, 2007 6:52:00 PM  

இது 14-வது பதிவுங்க!

இந்த பூவிலேயே தேடினா, மத்ததும் கிடைக்கும்.

இதையெல்லாம் ஒழுங்கு பண்ணித் தரேன்னு சொல்லி ஒருத்தர் இன்னும் சூடானிலேயே உட்கார்ந்திருக்கிறார்!

என்ன சூடோ அங்கே தெரியலை!
:))

வடுவூர் குமார் Thursday, June 14, 2007 8:36:00 PM  

அப்படியில்லை ஐயா,
கண்ணை பற்றி ஏதோ சொல்ல நினைத்து,எழுதி அது சரியாக பிரதிபலிக்காத்தால்,தூக்கிட்டேன்.
மனசில் நினப்பதை எழுத்துவடிவில் சொல்வது இன்னும் சரியாக வரமாட்டேன் என்கிறது,என்ன பன்ன?
கண்ணுக்குள் இவ்வளவு விஷயம் இருப்பதால் தான் இப்போதெல்லாம் பாதுகாப்புக்காக கூட இதை கண்காணிக்கிறர்கள் போலும்.

VSK Friday, June 15, 2007 12:30:00 AM  

நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன், திரு. குமார்!


:))

குமரன் (Kumaran) Tuesday, July 17, 2007 6:06:00 PM  

இது வரை படிக்காத குறள்கள் எஸ்.கே. பொருள் சொன்ன மன்னாருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP