அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"
சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்
ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்
ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா
கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.
எப்போதும் போல, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!
"ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடும் இறையவர்"
ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகளிலும்
நன்குணர்ந்த மதுரையம்பதியின் மன்னனாம்
இராஜசேகர பாண்டியன் அரசவைக்கு வந்தவொரு
புலவனன்று, சோழமன்னன் கரிகால் வளவனின்
திறமைதனைப் புகழ்ந்தங்கு சொல்லிடவே
தானும் மீதமுள்ள ஓர் கலையாம் பரதம் பயின்றிட,
தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"
என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!
அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,
"ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
லீலாவிசார தீர வரதர குருநாதா"
பின்னொருகாலம் மதுரையை ஆண்ட
வம்சசூடாமணி எனும் பாண்டிய மன்னன்
சண்பகமலர் கொண்டு சோமசுந்தரக்கடவுளை
அர்ச்சித்து வந்தமையால் சண்பக பாண்டியன்
எனும் பெயர் பெற்று முறையரசு செய்யும்வேளை,
காலத்தின் கூற்றால் பஞ்சம் தலை விரித்தாடியது.
பஞ்சத்தால் வாடிய பலநூறு புலவர்களை
சண்பக மன்னனும் பரிவுடன் ஆதரித்து
'நம்மிடையே தங்கி நன்நூல் படைத்து
நம்மையும் மகிழ்விக்க' என வேண்ட,
புலவோரும், 'பொருள்நூலின்றி பா இயற்றல்
இயலாதே' எனச் சொல்ல, அரசனும்
ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம்
தன் பீடத்தின் கீழ் வைத்து அருளினார்.
'பொருளுக்குப்' பொருள் சொல்ல புலவரை வேண்ட
ஆளொருவராய் அதற்குப் பொருளுரைத்து
தத்தம் விளக்கமே சிறந்ததென வாதாட
மீண்டும் இறைவனையே தஞ்சமடைந்து
கலகத்தை நீக்கி நல்வழி காட்ட வேண்ட,
இறைவனும் அசரீரியாக வந்து,
"உப்பரிகுடிகிழாரின் மகனாம் உருத்திரசன்மனை
அழைத்து வந்து பொருளுக்கு உரை கேட்கச் செய்"
என நல்லுரை சொல்லவே, அவ்வண்ணமே
உருத்திரசன்மனை, செட்டிப் பாலகனை,
பாலறியா மணத்தினனை, வாய் பேசா ஊமையினை
அழைத்துவந்து புலவோரின் உரை கேட்க வேண்ட,
முகக்குறிப்பாலேயே பலர் உரையினையும் கேட்டு
சிலரதை உவந்து, சிலரதை வெறுத்து,
சிலரதை புகழ்ந்து, சிலரதை இகழ்ந்து,
கபிலர், பரணர் உரைகேட்டு ஆங்காங்கு மகிழ்ந்து
நக்கீரர் உரை கேட்டு ஒவ்வொரு சொல்லுக்கும்
மகிழ்ந்து, கண்ணீர் சொரிந்து இதுவே உண்மையுரை
எனப்பாராட்டி குமரனே உருத்திரசன்மனய்
வந்து விளக்கமளித்ததைக் குறிப்பால் காட்டி
தமிழுக்குப் புகழ் சேர்த்த திருவிளையாடல்
தரணிக்குக் காட்டிய லீலா விநோதரே!
தீரம் மிகுந்தவரே! வரங்களை அருள்பவரே!
எனக்கும் இவ்வுலகுக்கும் குருநாதரே!
"கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திருமருகோனே"
தன்மகனைக் கொன்ற ஜயத்ரதனை பகல் பொழுதுக்குள்
கொன்றழிப்பேன் என சபதமிட்ட அருச்சனனுக்காக
பாரதப் போரில் பதினான்காம் நாளதனில்
ஆழிவிட்டு ஆதித்தனை மறைத்து
உள்ளிருந்த ஜயத்ரதனை வெளிக்கொணர்ந்து
ஆழியை திரும்ப வாங்கி பார்த்தனுக்கு உதவிட்ட
கோபாலராயன் என உலகம் போற்றும்
கண்ணபிரான் மனம் மகிழும் திருமருகனே!
[மேல் விளக்கம் வேண்டுவோர் இங்கு பார்க்கவும்!]
"கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே."
எக்காலமும் குறைவின்றி ஆரவார அலை வீசி
பெருக்கெடுத்து ஓடுகின்ற காவிரி நதி பாய்ந்து
வளம் கொழிக்கும் "வயலூர் எனும் திருத்தலத்திலும்,
கோனாடு எனப்புகழ் பெறும் "விராலிமலை"என்னும்
திருத்தலத்திலும் எந்நாளும் வீற்றிருந்து
அருள் சுரக்கும் இன்னமுதே! எம் தலைவனே!
[மீதிப் பகுதியும், அருஞ்சொற்பொருளும் இன்றிரவு வரும்!]
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!!!
16 பின்னூட்டங்கள்:
கூடலில் நடந்த திருவிளையாடல்கள் பலவற்றை திருவிளையாடல் புராணத்தில் படித்திருக்கிறேன். இன்று இந்த இரு திருவிளையாடல்களைப் படித்து மகிழ்ந்தேன். கால் மாறி ஆடியது மிகப் பிரபலமானது. செட்டிப்பிள்ளையாய் வந்து அகப்பொருள் உரையை விதிசெய்த திருவிளையாடலை மறந்திருந்தேன்.
கோபாலராயன் - புதிய பெயர். இராமராயன் தெரியும். கோபாலராயன் என்று படித்தது இது தான் முதல் தடவை.
///தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"
என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!
அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,///
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற் கடவுளான் சோமசுந்தரனாரின் வெள்ளியம்பலத்திற்கு என்னதொரு விளக்கம்
படிக்கும்போது மனம் நெகிழ்ந்து விட்டது!
நன்றி அய்யா, அறியத்தந்தமைக்கு!
திருப்புகழ் "குமரனை" இழுக்கும் என்பது எவ்வளவு உண்மை!!
தவறாமல் வந்து மொழியிடுவது மகிழ்வாக இருக்கிறது.
எழுதும் போதே மனம் நிறைந்தது.
இப்போது நீங்களும் வந்து சொல்லுகையில் இன்னும் நிறைகிறது ஆசானே!
செட்டிப்பயல் ஏன முருகனை எழுதுகையில், சத்தியமாக உங்கள் நினைவுதான் வந்தது!
உடனே நீங்களும் வந்திருக்கிறீர்கள்!
எல்லாம் முருகனருள்!
கண்நுதற் கடவுள் யாருன்னு கேட்டு இருப்பேன். ஆனா உங்களுக்கு முன்னாடியே குமரன் வந்து சொல்லிக் குடுத்துட்டாரு.
ரொம்ப எளிமையானா விளக்கம். நல்ல அழகா வந்திருக்கு, எஸ்கே. (இப்படி சொல்லலாம்தானே. இல்லை விஎஸ்கே தானா?)
குமரன், ராமராயன் சொன்னீங்க, நம்ம கணபதி ராயனை விட்டுடீங்களே!! அவனிரு பாதம் பணிந்திடுவோம். இப்படி எல்லாருக்கும் ராயன் போட்டு கூப்பிடறதைப் பார்த்தால் அதுக்கு விரைவில் சொல் ஒரு சொல் போடணும் போல இருக்கே!
இப்படிச் சொல்லப்போனா ரங்கராயன், செங்கல்வராயன், காத்தவாராயன் எனச் சொல்லிக்கொண்டே போகலாம் கொத்ஸ்!
அதான் ஸொல்லிட்டேனே!
எனக்குத்தான் இந்த வீயெஸ்கே .
உங்களுக்கெல்லாம் நீங்க விரும்பும் வரை எஸ்கேதான்!!
:))
எளிமையா வந்திருக்குன்னு எழுதியதற்கு நன்றி.
மணிப்பவள பாடல்களின் இருப்பு தீர்ந்துவிட்டதா ?
:))
பதிவுக்கு தொடர்பற்றதைக் கேட்காதேன்னு சொல்றிங்க ?
:)))))
//ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
//
தமிழுக்கு குறையென்றால் தாண்டவனே எழுந்து இயற்றி தமிழுக்கு பொலிவு சேர்த்திருக்கிறான். குறை சொல்பவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பானோ அச்சமாக இருக்கிறது.
பாடல்களின் கருத்து வகையைத் தான் நான் பார்க்கிறேன், கோவியாரே.
வகைக்கு ஒன்றாகப் பதிகிறேன்.
//குறை சொல்பவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பானோ அச்சமாக இருக்கிறது.//
தமிழுக்குக் குறையென்றால், நீங்கள் சொன்னது போல், பொலிவுதான் சேர்ப்பானே இறைவன் அன்றி, "தண்டனை எல்லாம்" தரமாட்டான்.
அதெல்லாம் பக்குவமில்லா மனிதர் செய்வது!
அஞ்சாதீர்கள்!
:)
வைதாரையும் வாழ வைப்பவன் அவன்!
முமு
அருமை அருமை. அள்ளிப் பருகியும் திகட்டாத தெள்ளிய தமிழமுதைச் சொல்லிச் சொல்லி முருகனை நினைத்திடும் தங்களது திருப்புகழ் விளக்கங்கள் அருமையோ அருமை. எப்படி இந்தப் பதிவு என் கண்களில் இருந்து தப்பியது! தப்பித்தாலும் திரும்ப வந்து முருகன் அருளை என்னிடம் எப்படி ஒப்பித்தது. தப்பித்ததும் ஒப்பித்ததும் முருகன் எண்ணம் என்று எடுத்துக் கொண்டு பதிவுக்கு வருகிறேன்.
எனக்குப் பிடித்த திருப்புகழ்களில் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அதிலும் ஏராரு மாடகூட மதுரையில் மீதேறி மாறியாடும் இறையவர் என்ற வரிகள் மிகவும் பிடிக்கும். பாலதேசிகன் என்பவர் பாடிய பாடலும் கேட்டுள்ளேன். பித்துக்குளி பாடிய பாடலும் கேட்டுள்ளேன். என்னை மயக்கி முருகனோடு இயக்கிச் சிறப்பிக்கும் அருமையான திருப்புகழ்.
வழக்கமாக கவிதை வடிவில் சுருங்கச் சொல்லும் நீங்கள்...இந்த முறை அழகாக விரிவாக ஆடற்கதைகளைச் சொல்லிய பாங்கு சிறப்பு. மிகச் சிறப்பு. முருகனருள் முன்னிற்கட்டும்.
////செட்டிப்பயல் ஏன முருகனை எழுதுகையில், சத்தியமாக உங்கள் நினைவுதான் வந்தது!
உடனே நீங்களும் வந்திருக்கிறீர்கள்!
எல்லாம் முருகனருள்!///
அந்தக் காலத்தில் கடல் வாணிபமாக
எங்கள் பகுதி மக்கள், பர்மா, மலேயா, சைகோன் என்று தூர தேசங்களுக்குப் போகும்போது
"செட்டிக் கப்பலுக்குச் செந்தூரானே துணை" என்று நம்பிச் செல்வார்களாம்.
அதோடு தாங்கள் சென்ற தேசங்களில் எல்லாம, இலங்கை, பினாங், சிங்கப்பூர் உட்பட அனைத்து ஊர்களிலும் செந்தூரானுக்காக பெரும்
கோவில்களையும் கட்டி வைத்தார்களாம்
கேள்விப்பட்டிருக்கிறேன்
பதிவு எழுதும் போது உங்களுக்கு என் நினைவு வந்தது அவன் செயல்!
உங்களுடைய
பின்னூட்டத்தை தாமதமாகப் பர்ர்த்தது மட்டும் என் செயல்!:-)))
கண்ணில் படாமல் தப்பித்ததும்
பின்னை எண்ணம் ஒன்றி ஒப்பித்ததும்
இன்னம் முருகனருள் சித்தித்ததும்
என்னுள்ளம் இன்றும் தித்திக்குதே!
நன்றி, ஜி.ரா.!
செட்டிக்கப்பலுக்கு துணையாம் செந்திலாண்டவனே! என்னும் பாடலை நான் முருகனருளில் இட்டிருந்தேனே ஐயா!
VSK ஐயா,
அருமையான பதிவு. அற்புதமான விளக்கம். இன்னும் தொடருங்கள். மிக்க நன்றி.
தொடர்ச்சியும் பத்து நாட்களுக்கு முன்பே பதிந்து விட்டேன், திரு. வெற்றி!
http://aaththigam.blogspot.com/2007/03/17_24.html
வருகைக்கு நன்றி!
:)
மிக மிகத் தித்திக்கும் விளக்கங்கள் SK!
எனக்கு இதில் மிகவும் பிடித்த வரிகள்
கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
அப்படியே காவிரி ஆறு அலை எறிவது போலப் பாடி இருப்பாரு நம்ம சந்தக்கவி!
இப்ப தான் இந்தியப் பயணம் விராலிமலை தரிசனம் முடிந்து, இங்கு வந்தவுடனேயே மறு முறையும் விராலிமலையனைக் காட்டி அகங்குளிரச் செய்து விட்டீர்கள்!
ராம ராயன், கோபால ராயன் தானா?
கொத்ஸ் சொன்ன கணபதி ராயன்
இன்னும் சண்முக ராயன் கூட உண்டு!
கொம்மல தலோ நெல கொன்ன கோனேரி ராயுடு வாடு என்று தெலுங்கிலும் ராயன் தான்! அன்னமய்யாவின் கீர்த்தனை!
//ராம ராயன், கோபால ராயன் தானா?
கொத்ஸ் சொன்ன கணபதி ராயன்
இன்னும் சண்முக ராயன் கூட உண்டு!//
மிகச் சரியே ரவி!
ஆனால், கோபால ராயன் ராம ராயன் தான் இதில்!
கணபதிராயன், ஷண்முகராயன்.... ஏன் சங்கரராயன்,சுப்பராயன், கூட உண்டு!:))
Post a Comment