"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]
"பள்ளி எழுந்தருளாயே" - 10 [30]
"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! [10]
"தேவராலும், வேறு எவராலும் நெருங்கவும் முடியா
சிவனை, இப்பூவுலகில் வாழ்ந்திடும் அடியவரோ
மிக எளிதில் அடைதலைக் கண்டு, மண்ணுலகின்
வழியாகவே இவரை அடைதல் கூடும்" என உணர்ந்து
பூதலத்தில் பிறக்காமல் நாட்களை வீணாகக்
கழிக்கிறோமே என ஏங்கி, மீண்டும், மீண்டும்
திருமாலும் இப்பூவுலகில் அவதரித்து வருகின்றார்!
நான்முகனும் அவ்வண்ணமே ஆசைப் படுகின்றார்!
[மீனாகவும், ஆமையாகவும்,வராகமாகவும், வாமனனாகவும்,
நரசிம்மமாகவும், பரசுராமனாகவும், இராமனாகவும்,
பலராமனாகவும், கண்ணனாகவும் ஒன்ப்தவதாரம் எடுத்து
பாரிதனில் மீண்டும் மீண்டும் பிறந்தும், பக்தரை உய்வித்தாலும்,
மீண்டும் ஒருமுரை கல்கியாய் அவதரிக்க
எண்ணம் கொண்டிருப்பதும் இதனாலோ! ]
மிகவும் மலர்ந்திருக்கும், அளவற்ற மெய்க்கருணையுடன்
உமது திருமுகத்துடன் இம்மண்ணுலகில் வந்து
எம்மையெல்லாம் ஆட்கொள்ள வல்லமை படைத்தவனே!
எங்கும் நிறைந்திருக்கும் இனிய அமுதமே!
திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்
நிறைவாய் வீற்றிருக்கும் சிவபெருமானே!
பள்ளியினின்றும் எழுந்தருள்வாயே!
அருஞ்சொற்பொருள்:
புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.
[திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]
"திருச்சிற்றம்பலம்"
5 பின்னூட்டங்கள்:
எஸ்கே ஐயா,
30 நாட்கள் நாள் தோறூம் பதிவிட்டு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையை ஒரு தவம் போல படித்து உறை எழுதி நிறைவு செய்திருக்கிறீர்கள்.
இந்த வருடம் மார்கழியில் ஐயப்பனுக்கும் மாலை போடாத தங்களின் குறை இதன் மூலம் நிறைவுற்றதாக நான் கருதுகிறேன்.
தோழியை எழுப்பியதில் தொடங்கிய பாடல், பின்பு நீராடுதல், கோவிலை நோக்கி செல்லுதல், ஆலயத்தில் ஆண்டவன் கண் திறப்புக்காக காத்திருத்தல், பின்பு திருவடியை தரிசிச்த்து கருணை பார்வையை பெற்று பேறு பெறுதலுடன் இனிதாக முடிவடைந்திருக்கிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை
என்று ஆரம்பித்து ...
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !
என்று முடிந்துள்ளது...!
மாணிக்க வாசகரின் மணியான பரிசேலோர் எம்பாவாய், ஆடேலோர் எம்பாவாய்
பள்ளி எழுந்தருளாயே பாடல்களுக்கு சங்கர் குமாரின் சத்தான பொருள் விளக்கம் நன்று. பொருள்விளக்கம் இல்லாவிட்டால் இத்தகைய பாடல்கள் கண்ணில் பட்டாலும் கருத்தில் பட்டிருக்காது. அருமையான 30 ஆக்கங்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய உங்களை மனமாரப் பாராட்டி நண்பர் என்பதால் நானும் அதன் வழிமகிழ்கிறேன்.
வளர்க்க உங்கள் இறை இலக்கிய செல்வம் ... பகிர்க அதனை தமிழார்வர்களுக்கும், இறை உணர்வாளர்களுக்கும்.
எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வாழ இனிய இந்நன்னாளில் இன்புற்று வாழ்த்துகிறேன்
நன்றி
கோவியார்
மிகவும் மலர்ந்திருக்கும், அளவற்ற மெய்க்கருணையுடன்
உமது திருமுகத்துடன் இம்மண்ணுலகில் வந்து
எம்மையெல்லாம் ஆட்கொள்ள வல்லமை படைத்தவனே!
எங்கும் நிறைந்திருக்கும் இனிய அமுதமே!
திருப்பெருந்துறைத் திருத்தலத்தில்
நிறைவாய் வீற்றிருக்கும் சிவபெருமானே!
பள்ளியினின்றும் எழுந்தருள்வாயே!
[திருவெம்பாவை-திருப்பள்ளி எழுச்சி முற்றிற்று!]
நிறைவுற்றுவிட்டதே என்ற ஆதங்கம்தான் மேலிடுகிறது அய்யா!
ஆனால் இன்னும் ஒரு பதினோரு திங்கள் மனதில் ஒலிக்கும்படியாக
பதிவுகள் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி உரித்தாகுக அய்யா!
"திருச்சிற்றம்பலம்"
நிறைவுப் பதிவுக்கு ஒரு நல்லதொரு பொருள் பொதிந்த பின்னூட்டம் இட்டு இதனைச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி, கோவியாரே!
ஆடேலோர், பாடேலோர் எம்பாவாய், பள்ளி எழுந்தருளாயே என்பதின் பொருளுணர்ந்து நீங்கள் இட்ட பதிவு மனதை நிறைக்கிறது!
நன்றி!
ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு நிறைவான பாடல் இட்டு இதனை மேலும் பெருமை படுத்திய உங்கள் கருணைக்கு எப்படி நன்றி சொல்வேன், ஆசானே!
நல்லதொரு பதிவு. பிறப்பு என்று ஒன்று வருகையிலேயே அத்தோடு இலவச இணைப்பாக வருவது இறப்பு. அதிலிருந்து நம்மைக் காக்க இறைவனே பொறுப்பு. தனக்கே கடன் இல்லாதவந்தான் அடுத்தவனுக்குக் கடன் கொடுக்க முடியும். அப்படி பிறப்பும் இறப்புமற்ற பெருமானே நமது பிறப்பையும் இறப்பையும் அறுக்க முடியும் என்பதில் மாணிக்கவாசகருக்கு மட்டுமல சைவ நெறி தழைத்தோங்கச் செய்த அனைத்து அறிஞர்களும் ஏற்றுக் கொண்ட கருத்து. அருணகிரியும் கூட பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்றுதானே சொல்கிறார்.
Post a Comment