"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]
"பள்ளி எழுந்தருளாயே!" - 3 [23]
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே ! [3]
அழகிய குயிலகள் இனிமையாகப் பாடின;
கோழியினங்களும் கூவிவிட்டன;
சிறகடித்துப் பறக்க பறவைகளும் சலசலத்தன;
திருக்கோயிலில் சங்குகளும் ஒலித்தன;
வானத்து விண்மீன்களும் தம்மொளி குன்றின;
உதயக் கதிரொளியும் ஒன்று சேர்ந்தன;
தேவனே! எம்மீது விருப்பம் கொண்டு
நல்ல வீரக்கழல் அணிந்த உனது இரு
திருவடிகளையும் எங்களுக்குக் காட்டுவாயாக!
எவராலும் அறிந்துகொள்ள அரிதானவனே!
அடியவராம் எங்களுக்கு மட்டும்
அனுபவித்தற்கு எளிமையானவனே!
திருப்பெருந்துறையில் சீரோடு உறையும்
சிவபெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக!
அருஞ்சொற்பொருள்:
குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்; ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.
9 பின்னூட்டங்கள்:
//எவராலும் அறிந்துகொள்ள அரிதானவனே!
அடியவராம் எங்களுக்கு மட்டும்
அனுபவித்தற்கு எளிமையானவனே!//
அரிதான் அவனே ! அரிதான் அவனா ?
வார்த்தை விளையாட்டு !
:))
குமரனுக்காக !
அதானே!
அறிந்தால் அரி!
அறிய முடியாதது சிவம்!
மிக நல்ல கருத்து, கோவியாரே!
ஐயா,
பாடலைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டேன்... நிற்க
முதல் வரி இளையராஜவின் இசையில்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு என்ற அனுபல்லவி பாடலுக்கு பல்லவியாக கேட்டு இருக்கிறேன்.
விடியலின் நிகழ்வுகளை அழகாக படம் பிடித்த இப்பாடலும் பொருளும் அழகென்றால் அது மிகையல்ல.
பாராட்டுக்கள் எஸ்கே ஐயா !
"யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !எம்பெருமான்"
பக்தர்களுக்கு எளியவர் எம்பெருமான் என்ற வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளன
ஆமாம், ஆசானே!
என்ன ஒரு உரிமை பாருங்கள்!
மிகவும் கவித்துவம் நிறைந்த பாவை இது. மிகவும் ரசிக்கத்தக்கதும் கூட.
ஒரு சிறிய முரணைக் கொண்டு பெரிய பொருளைச் சொல்லியிருக்கிறார் மாணிக்கவாசகர். யாவரும் அறிவரியாய்....எமக்கெளியாய். எல்லாருக்கும் புரியலையே...எனக்குப் புரியுதப்பான்னு சொல்ற மாதிரி.
நான் சொல்ல வந்ததைக் கோவி சொல்லி விட்டார். அரிதாவனைப் பற்றி அல்ல. இந்தப் பாடல் திரைப்படத்தில் ஒலித்ததைப் பற்றி.
எஸ்.கே...ஏன் இப்படி சுருக்கமா விளக்கம் சொல்லத் தொடங்கீட்டீங்க. நிறைய எழுதுங்க.
//எஸ்.கே...ஏன் இப்படி சுருக்கமா விளக்கம் சொல்லத் தொடங்கீட்டீங்க. நிறைய எழுதுங்க.//
முதல் பதிவிலேயே,
பாடலுக்கான பொருளை நானும், விரிவான விளக்கங்களை, நீங்கள் எல்லாரும் வந்து சொல்ல வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம், ஜிரா!
மறந்துவிட்டதா? :)
தினம் ஒரு பதிவு எழுதுவதால், விரிவான விளக்கம் கொடுக்க முடியவில்லை.
அப்படியும் மனது கேட்காமல், 13,20 பாடல்களுக்கு இரு பதிவு போட்டேன்.
ஒன்று செய்யலாமே!
இந்த 30-ம் முடிந்த பின்னர், வாரம் ஒரு பாடலாக எடுத்துக் கொண்டு அவரவர் அறிந்த விளக்கங்களை விரிவாகப் பதியலாமே!
அடுத்த மார்கழி வரும் வரை!
என்ன சொல்லுகிறீர்கள்!
// SK said...
//எஸ்.கே...ஏன் இப்படி சுருக்கமா விளக்கம் சொல்லத் தொடங்கீட்டீங்க. நிறைய எழுதுங்க.//
முதல் பதிவிலேயே,
பாடலுக்கான பொருளை நானும், விரிவான விளக்கங்களை, நீங்கள் எல்லாரும் வந்து சொல்ல வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம், ஜிரா!
மறந்துவிட்டதா? :) //
ஆகா...ஆகாகா! அதுவும் சரிதான்.
// தினம் ஒரு பதிவு எழுதுவதால், விரிவான விளக்கம் கொடுக்க முடியவில்லை.
அப்படியும் மனது கேட்காமல், 13,20 பாடல்களுக்கு இரு பதிவு போட்டேன்.
ஒன்று செய்யலாமே!
இந்த 30-ம் முடிந்த பின்னர், வாரம் ஒரு பாடலாக எடுத்துக் கொண்டு அவரவர் அறிந்த விளக்கங்களை விரிவாகப் பதியலாமே!
அடுத்த மார்கழி வரும் வரை!
என்ன சொல்லுகிறீர்கள்! //
செய்யலாம்தான். கந்தரநுபூதி விரைவில் நிறைவு பெறுகிறது. அடுத்துக் கொஞ்சம் முருகனருளிலும் தமிழ்ச்சங்கத்திலும் (நீங்களும்தான்) செலவிடலாம் என நினைத்தேன். அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. யோசிக்கிறேன்.
யோசித்தாலே போதும்; முடிந்தது போலத்தான்!
"முருகனருள் முன்னிற்கும்!"
"திருச்சிற்றம்பலம்!"
Post a Comment