"பள்ளி எழுந்தருளாயே" - 2 [22]
"பள்ளி எழுந்தருளாயே" - 2 [22]
அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே !
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே !
இந்திரன் திசையாம் கிழக்கில் அருணோதயம் அணுகியது.
விடியலின் செந்நிறம் படர்கிறது.
இருளும் அகன்று சென்றுவிட்டது.
உன் திருமுகமாம் உதயகிரியில் உந்தன் கருணை எனும்
சூரியனின் உதயமும் எழுகின்றது
அதே சமயத்தில் மலர் போன்ற உன் கண்களும்
மணமுள்ள மலர் போல மலர்கின்றன.
அவைகளைக் கண்டு பரவசமுற்று ஆனந்தத்தால்
தேனினை நாடும் வண்டுகள் போல
அடியவர்களின் கூட்டம் திரளாக வந்து
தோத்திர முழக்கம் செய்கின்றனர்.
இதனை உணர்வீர்! திருப்பெருந்துறையில் எழுந்தருளி
திருக்கோயில் கொண்டருளும் சிவபெருமானே!
அருளெனும் செல்வத்தை தருவதற்கென மலை போலும்
ஆனந்தத்தை ஓயாது வந்து கொண்டிருக்கும்
அலைகடல் போல் தருபவனே! எம்மீது
கருணை கொண்டு திருப்பள்ளி எழுந்தருள்வாயே!
அருஞ்சொற்பொருள்:
அருணன் - சூரியனின் தேர்ப்பாகன் (காலையில் சூரியன் தோன்றும் முன்
தோன்றும் செந்நிறம் அருணோதயம் எனப்படும்); இந்திரன் திசை - கிழக்கு;
நயனம் - கண்; கடி - மணம்; அறுபதம் - வண்டு.
4 பின்னூட்டங்கள்:
இரண்டு தினங்களுக்கான பதிவுகளை சேர்த்துப்படித்தேன்....நன்றி
//இந்திரன் திசையாம் கிழக்கில் அருணோதயம் அணுகியது.
விடியலின் செந்நிறம் படர்கிறது.
இருளும் அகன்று சென்றுவிட்டது.
உன் திருமுகமாம் உதயகிரியில் உந்தன் கருணை எனும்
சூரியனின் உதயமும் எழுகின்றது
அதே சமயத்தில் மலர் போன்ற உன் கண்களும்
மணமுள்ள மலர் போல மலர்கின்றன.//
ஞாயிறு எழுவதை ஞயமுடன் செப்பி அதைத் தொடர்ந்து ஞான ஞாயிறு சிவனின் கண்கள் மலர்வதை செப்பிய பாடல் ஞாயிறு எழுவதற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.
:)
அருமையான விளக்கம் பாராட்டுக்கள் எஸ்கே ஐயா !
எப்படிப் படித்தாலும் இனிக்கும் பாடல்கலளை, எப்படிப் படித்தாலும் இனிக்குமே!
இல்லையா, மதுரையம்பதியாரே!:)
நன்றி!
இதை எழுதுகையில் மாணிக்கவாசகரின் ஒப்புமைத் திறனை வியந்துதான் எழுதினேன், கோவியாரே!
நன்றி!
Post a Comment