மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 16
15.
முருகன் குமரன் குகனென் றுமொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங் கவஎண் குணபஞ் சரனே.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ எண்குண பஞ்சரனே.
ரொம்ப ரொம்ப கஷ்டமான பாட்டு! மேலாக்கப் பார்த்தா, இது ஒண்ணுமே இல்லாதமாரி இருக்கும்!
ஆனா, கொஞ்சம் உள்ளே பூந்து பார்த்தியானா, இதுக்குள்ள எத்தினி சங்கிதி சொல்லியிருக்காருன்னு புரிஞ்சு, அப்பிடியே மலைச்சுப் பூடுவே!
"தேவருக்கும் குருவான முருகா, குமரா, குகா, ஒன்னிய நெனைச்சு நெனைச்சு உருகற உணர்வை என்னிக்குப்பா எனக்குத் தரப் போறே, எட்டு கொணமும் ஒனக்குள்ளியே வைச்சிருக்கற என்னோட முருகா!"ன்றதுதான் இதோட அர்த்தம்.
இத்தப் படிச்சாலே போறும்! மனசெல்லாம் உருகிப் போயிரும்!
இதுக்கும் மேல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லைன்னு தோணும்!
ஆனாக்காண்டிக்கு, இன்னும் கொஞ்சம் ஆள[ழ]மாப் பார்த்தியானா, ஒனக்கு ரொம்ப விசயம் புரியும்!
என்ன அள[ழ]கா இந்தப் பாட்டை குடுத்திருக்காருன்னு பாரு!
முருகுன்னா, அள[ழ]கு, இளமைன்னு அல்லாருக்குமே தெரியும்.
குமரன்னா, சிவனோட புள்ளைன்னு புரியும்
குகன்னா, மனசுன்ற குகைக்குள்ல இருக்கறவன்!
இப்பிடியாப்பட்ட முருகனை நெனைச்சு உருகற நெலை எப்பப்பா தருவேன்னு சொல்லிட்டு,
அடுத்த ரெண்டு வரியுல,
சம்பந்தமே இல்லாம, 'சண்டை போடற தேவருங்களுக்கும், எல்லா ஒலகத்துக்கும் எல்லாப் பொருளையும் உணரச் செய்யும், குருவே, எட்டு கொணத்தியும் உள்ளே வைச்சிருக்கற தலைவனே'ன்னு அடுத்த ரெண்டு வரியுல சொன்னதுக்கு இன்னா அர்த்தம்?' என நிறுத்தினான் மயிலை மன்னார்.
'நான் சொல்லட்டுமா?' எனச் சிரித்தார் சாம்பு சாஸ்திரிகள்!
'சொல்லுங்க சாமி! நீங்க எப்போ வருவீங்கன்னுதான் காத்திருந்தேன்!' என்றான் மன்னார்.
'நீ சொல்றமாதிரியெல்ல்லாம் என்னால சொல்ல முடியாதுறா மன்னார்! ஆனாலும், இப்ப சொல்லணும்னு தோணறது. அதுனால சொல்றேன்.
'இது ரொம்ப தத்வமான பாடல்!
கடைசி ரெண்டு வரியைப் பார்த்தியானா,
அதுல ஒரு எட்டு குணத்தைப் பத்தி சிலாக்கியமாச் சொல்றார்.
அதென்ன எட்டு குணம்னு கேழ்க்கிறியா?
1.அடியார்களைக் கை கொடுத்து தூக்கறது
2.கருணையோட பார்க்கறது
3.அன்புக்குக்குள்ள அகப்படறது
4.அடியார்களோட இஷ்டத்துக்கெல்லாம் ஆடறது
5.மனசுக்குள்ளே லீலைகள் செஞ்சு ஆனந்தப்பட வைக்கறது
6.நீ என்ன தப்பு பண்ணினாலும் பொறுமையா இருக்கறது
7.நீ பாக்கற எல்லாத்துலியும் தன்னைக் காட்டிக்கறது
8.ஒன்னோட சுக துக்கம் எல்லாத்துலியும் தன்னைப் பிணைச்சிண்டு, நீ படற அத்தனையுலியும் தானும் இருக்கறது
இது புரியுறது கொஞ்சம் கஷ்டம்.
இப்போ, நீ ஒரு வேதனையை அனுபவிக்கறேன்னு வைய்யி! இல்லை, ஒரு சுகத்தை அனுபவிச்சாலும், அவனும் ஒரு கொழந்தையாட்டமா, தன்னையும் இணைச்சுண்டு, தானும் அதை அனுபவிப்பான்.
இது ஒரு மஹா தத்வம்!
அப்படி அவனை அனுபவிக்க நீ விடலாமோ?
கொஞ்சம் புரிஞ்சுண்டியானா, அவன் உனக்காக எவ்வளவு கீழே இறங்கி வரான்னு தெரியும்!
அப்போ, அவனுக்காகவது நீ சரியாப் பண்ண ஆரம்பிப்பே!
இந்த எட்டு குணத்தியும் வைச்சிண்டு இருக்கறவன் தான் குரு!
அவனாலதான் தேவர்களையும் காக்க முடியும்! பூமியையும் ஆள முடியும்!
அவன் தான் முருகன்!
என்னைக்கும் இளமையா இருக்கறவன்
அவன் தான் குமரன்!
அப்பாவான சிவனோட அஞ்சு முகத்தோட கூட, ஒரு ஆறாவது முகத்தையும் கொண்டவன்!
அவன் தான் குகன்!
ஒன்னோட மனசையும் அடக்கி ஆள்றவன்!
ஆக மொத்தம் எட்டாச்சா?
இளமையான முருகன் ஒண்ணு
ஆறுமுகன் ஆறு
மனசை அடக்கற குகன் ஒண்ணு
மொத்தம் எட்டு!
இந்த எட்டையும் ஒரு கூட்டுக்குள்ளே, ஒரு பஞ்சரத்துக்குள்ளே வைச்சு அடக்க ஆள்றவனை, அந்த முருகனை, குமரனை, குகனை அன்போட சொல்லி அனவரதமும் அவனோட திருப்பெயரைச் சொல்லி என்னோட மனசு உருக சொல்ற தன்மையை எப்போப்பா எனக்கு நீ தரப் போறேன்னு கதர்றார் அருணகிரியார்! இதான் இந்தப் பாட்டு சொல்றது' எனத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாஸ்திரிகள்!
நாங்களும்.
************
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
5 பின்னூட்டங்கள்:
எனக்கு மிகவும் பிடிச்ச பாட்டு! ஏன்-ன்னா ரொம்ப தத்துவம் அடுக்காம, ஆரம்பத்துலேயே என்னவன் பேரைச் சொல்லுறாரே! அதுவும் டைப் டைப்பா! முருகன்-குமரன்-குகன்-அவன்-வன்-ன்னு அவன் பேரை நைசா சொல்லிப் பாத்துக்குறதுல ஒரு தனி கிக்:) தனி இன்பம்!:)
ஹேய் முருகா குமரா குகா என்று மொழிந்து
உனக்காக உருகும் செயல் தந்து...
உணர்வு "என்று அருள்வாய்"?
ரவி: "நோ நோ! நிப்பாட்டு நிப்பாட்டு! டேய் செல்லம் முருகா, "என்று அருள்வாய்?"-ன்னு கொஸ்டின் மார்க் போட்டா நல்லாவா இருக்கு? நீ தான் எனக்குன்னு எப்பமே அருள்கிறாயே முருகா!"
முருகன்: "சரி டார்லிங், இப்போ என்ன, பாட்டை மாத்தணுமா?" :)
ரவி: "ஹிஹி! ஆமாம் முருகா! தப்பா?"
முருகன்: "சேச்சே! நீ சொல்லு டார்லிங், உனக்காக மாத்தறேன்"!
ரவி: "என்று அருள்வாய்?"-என்னிக்கி கொடுப்பியோ-ன்னு நான் உன்னைக் கேட்பேனா? நீ தான் கூடவே இருக்க! கொடுத்துக்கிட்டே இருக்கியே!
So, அது என்று அருள்வாய் இல்ல! உணர்வென்று அருள்வாய்!"
முருகன்: "அடிப் பாவி, கள்ளி"
ரவி: "ஆமாம்!
1. முருகா, குமரா, குகா, என் அவனே என்று...
2. உனக்காக உருகும் செயல் தந்து...
3. அந்த உருகுதலையே என்னோட உணர்வென்று அருள்வாயாக!"
முருகன்: "ஆகா!"
ரவி: "ஆமாண்டா, உனக்காக மனசுக்குள்ளேயே உருகி உருகி, அந்த உருகுதலே எனக்கு உணர்வா ஆயிறணும்! உருகலே உணர்வென்று அருள்வாய்!"
முருகன்: "ஹேய்...."
ரவி: "போதும் போதும்! கிட்ட வராத..சொல்லிட்டேன்...அடி விழும்...போடா" :))))
Sorry SK! ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முருகனா! அதான் மனசுல இருக்கிறதை அப்படியே எழுதிட்டேன்! :)
நல்ல பதிவு! எண் குணம் பற்றிய விளக்கங்களும் அருமை! நன்றி!
//ரவி: "ஆமாண்டா, உனக்காக மனசுக்குள்ளேயே உருகி உருகி, அந்த உருகுதலே எனக்கு உணர்வா ஆயிறணும்! உருகலே உணர்வென்று அருள்வாய்!"
முருகன்: "ஹேய்...."
ரவி: "போதும் போதும்! கிட்ட வராத..சொல்லிட்டேன்...அடி விழும்...போடா" :))))//
இது....இது...இதைத்தானே எதிர்பார்த்துக்கினு இருந்தேன்.இப்பிடில்லாம் சொன்னா அடி விழாது!
அப்பிடியே அணைச்சுக்குவேன்' என மன்னார் சொல்லச் சொன்னான்.
நல்ல கருத்து ரவி!
அருணையார் பாடிட்டாரு. அதை நாம் விரும்பும் வகையில், அறியும் வகையில் புரிவதே இன்பம்!
மு மு.
//ரொம்ப புடிச்ச பாட்டா? ரொம்ப புடிச்ச முருகனா! அதான் மனசுல இருக்கிறதை அப்படியே எழுதிட்டேன்! :)//
இதைதானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! அடிக்கடி வாங்க ரவி.
Post a Comment