மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 15
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 15
14.
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழிநா சியொடுஞ் செவியாம்
ஐவாய் வழிச்செல் லுமவா வினையே .
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழிநாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே .
இந்தப் பாட்டு க்கீதே.... ரொம்பவே சுளுவான பாட்டு. படிக்கறதுக்கும் சரி, கேக்கறதுக்கும் சரி; புரிஞ்சுக்கறதுக்குங்கூட ஈஸியான பாட்டு.
ஒரு பச்சப்புள்ளைக்குகூடப் புரியுறமாரி, இதுல தெளிவா சொல்லிடுறாரு அருணகிரியாரு.
போன பாட்டுல விட்ட எடத்துலேர்ந்து இந்தப் பாட்டைத் தொடங்கறாரு.
போன பாட்டுல இன்னா சொன்னாரு?
குருவா அந்த முருகனே வந்தாலொளி[ழி]ய, இந்த அனுபூதி சமாச்சாரமெல்லாம் புரியவே புரியாதுன்னு பயங்காட்டினாரா?.... இப்ப அதுக்கு இன்னா வளி[ழி]ன்னு காட்டுறாரு.
"கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய்"
முருகனோட காலைப் போயிக் கெட்டியாப் பிடிச்சுக்கினியானா, ஒனக்கு கெதிமோட்சம்னு சொல்றாரு.
நீயாப் போயிப் பிடிச்சுக்கறதுன்றது அவ்ளோ சாதாரணமான சமாச்சாரம் இல்ல. அது நடக்கவே நடக்காது.
அவரா குருவா வந்தாத்தான் உண்டுன்னு போன பாட்டுல சொன்னதுமாரி, அவரா வந்து தன்னோட காலைக் காமிச்சு, 'இந்தா, கெட்டியா பிடிச்சுக்கோ'ன்னு சொல்லணும்! அப்பத்தான் இது நடக்கும்.
அதென்ன கைவாய் கதிர்வேல் முருகன்?
முருகன் தெரியும்!
கதிர்வேல் முருகனைக் கூட ஒருமாரி 'குன்ஸா' தெரியும்னு சொல்லலாம். சூரியனோட கதிருமாரி வர்ற வேலுன்னு!
ஆனா, 'கைவாய்'னா?
கையுலதான் முருகன் அந்த கதிர்வேலை வைச்சிருப்பாரு. வாய் எங்கேருந்து வந்திச்சு, இந்த எடத்துலன்னு ஒரு டவுட்டு வரும்.
இந்த எடத்துலதான் அருணகிரியாரு கொஞ்சம் தமிளோ[ழோ]ட வெள்ளாடறாரு.
அடுத்த மூணு வரிங்கள்லியும், உய்வாய், மெய்வாய், ஐவாய்னு போட்டதால, இந்த எடத்துல கொஞ்சம் இலக்கணத்தைச் சேர்த்து, 'கைவாய்'னு போட்டிருக்காரு.
'வாய்'னா இந்த எடத்துல நாம சாப்புடற வாயி இல்லை. பொருந்தறதுன்னு ஒரு அர்த்தம் க்கீது. கையுல பொருந்தி நிக்கற கதிர்வேலுன்னு சொல்றாரு.
சின்ன வயசுல நம்ம வாத்தியாரு நம்மளையெல்லாம் முட்டிபோட வைச்சு எலக்கனம்லா சொல்லிக் குடுத்தாரே... நெனைப்பு க்கீதா? ஒனக்கு எங்கே இருக்கப் போவுது? ஒனக்குத்தான் அது எப்பவுமே தகராறாச்சே' எனச் சொல்லிச் சிரித்தான் மயிலை மன்னார்!
'சரி, சரி, இப்ப எதுக்கு அதெல்லாம் சொல்லிக்கிட்டு? நீ மேலே சொல்லு' என்றேன் அவசர அவசரமாக. நாயர் என்னைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
'ஆமாண்டா! இவனைப் பத்தித்தான் நன்னாவே தெரியுமே. நீ மேல சொல்லு' என்றார் சாம்பு சாஸ்திரிகள்.
அதுக்கில்ல சாமி. இந்த ஏளா[ழா]ம் வேத்துமைன்னு சொல்லுவாங்களே, இன்னாது அது?.... 'இல், இடம், கண்'ணுன்னு. அதோட இந்த வாயும் பொருந்தும். அதுக்குத்தான் சொல்லவந்தேன்'
'அட! இதுலியும் 'வாய்' 'பொருந்துதே' என அவனது சிலேடையை ரசித்தார் சாஸ்திரிகள்.
'அப்ப, 'கைவாய்'னா, கையுல பொருந்தி க்கீற வேலுன்னு அர்த்தம், சரியா?' என மேலும் தொடர்ந்தான் மன்னார்.
'கையுல வேலைப் பிடிச்சுக்கினு வந்து ஒன்னெதுத்தாப்புல வந்து நிக்கறப்ப, 'டபக்'குன்னு அவரோட காலைப் பிடிச்சுக்கோ! அதான் நீ பொளை[ழை]க்கறதுக்கான வளி[ழி]'ன்னு மொத ரெண்டு வரியுல சொன்னவரு, எப்ப, எத்தப் பண்ணினா இந்தமாரி நடக்கும்னு மேல சொல்றாரு.
"மனனே ஒழிவாய் மெய்வாய் விழிநாசியொடும் செவியாம் ஐவாய் வழி செல்லும் அவாவினையே ஒழிவாய்"
மொதக் காரியமா இந்த மனசைத் தொலைக்கணும்னு சொல்லிட்டு, அது எப்பிடித் தொலைக்கறதுன்னு பின்னாடியே சொல்லிட்றாரு.
மனசை ஒளி[ழி]க்கறதுன்றது சாமான்யப்பட்ட வேலை இல்ல. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, இல்லை, தொன்னைக்கு நெய்யி ஆதாரமான்றமாரி, இந்த மனசும், நம்மளோட அஞ்சு பொறிங்களும்....கண்ணு, வாயி, மூக்கு, காது, ஒடம்புன்ற அஞ்சும்.... மொதல்ல தொலையணும். இந்த அஞ்சும் சேர்த்துப் படுத்துற பாடு க்கீதே, தாங்க முடியாது! மனசுதான் இதுங்களைத் தூண்டி விடுதா? இல்லைன்னா, இந்த அஞ்சாலியுந்தான் மனசு கெடந்து அல்லாடுதான்னு ஆருக்கும் தெரியாது.
'நாம்பாட்டுக்கு சும்மாத்தான் கெடந்தேன், இந்தக் கண்ணுதான் பாத்துச்சு, காதுதான் கேட்டுச்சுன்னு மனசு பொலம்பும்.
எங்களுக்குன்னு எது தெரியும்? அல்லாம் இந்த மனசுதான் தூண்டி விட்டுச்சுன்னு இதுங்கள்லாம் பிராது குடுக்கும்!
பார்த்தாரு அருணகிரியாரு!
ஒங்க சண்டையைத் தீர்த்துவைக்கறது என்னோட வேலை இல்லை. உங்க ரெண்டு பேரையுமே தொலைச்சாத்தான் நிம்மதி. அப்பத்தான் என்னோட முருகன் எனக்கெதுத்தாப்புல வந்து நிப்பாரு. அப்பத்தான் காலைப் பிடிச்சுக்க முடியும்னு சொல்லிக் குடுக்கறாரு. அதுக்குங்கூட முருகனோட அருள் இருந்தாத்தான் நடக்கும். 'பொறிவாயில் ஐந்தவித்தான்'னு நம்ம ஐயன் சொல்லுவாரே, அந்தாளுதான் வந்து சரிபண்ண முடியும்' எனக் கண் சிமிட்டினான் மயிலை மன்னார்.
'அட! இவ்விடயும் ஒரு வாயா?' என வாயைப் பிளந்தான் நாயர்.
' ஓ! அதுக்குத்தான் ரெண்டு தடவை 'ஒழிவாய்'னு சொல்றாரா? எனக் கேட்டேன்.
சிலபேருங்க மனசைப் பார்த்துத்தான் சொல்றாருன்னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கென்னமோ, இப்பிடித்தான் படுது' என்ற மன்னார், 'சரி, இனி அடுத்த பாட்டு!' என ஜரூரானான்!
**********
[தொடரும்]
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
3 பின்னூட்டங்கள்:
புரிஞ்சிக்க சுளுவாத்தான் இருக்கு மன்னாரு!ஆனா புலன்களையும் மனசையும் தொலைக்கிறது சுளுவா??????
pl do visit 'kannanpaattu'on may
eightth for my 'sankara jeyanthi'
post!
சுளுவாக்கிக்கணும்.... அவனைக் கேட்ட அவனே ஒரு வழி காண்பிப்பான்னு என்னோட குருநாதர் சொல்லுவார். உன்னைக்கூட உன்னால வெல்லமுடியலைன்னா உன்னால எதுவுமே சாதிக்க முடியாது.... உனக்கு ஒரு செயல் மீது குறிப்பிட்ட பயிற்சியைப் பண்றதுக்கு உள்ளுக்குள்ள உன் புத்தி சபலத்தால இடம் கொடுக்க மறுக்குது. அதைக் கண்டுபிடி. எல்லாமே சுளுவாயிரும்'னு சொல்லுவார். அதற்கு.... முருகனருள் முன்னிற்கும்!
Post a Comment