மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 12
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 12
11.
இனிமே சொல்லப்போற மூணு பாட்டையும் ஒண்ணாப் பார்த்தா நல்லாருக்கும். ஒண்ணுக்கொண்ணு தொடர்பா ஒரு சங்கதியச் சொல்லுற பாட்டுங்க. பதிணொண்ணாம் பாட்டைப் படி!' என ஆரம்பித்தான் மயிலை மன்னார்.
கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகா சலவே லவநா லுகவித்
தியாகா சுரலோ கசிகா மணியே
'அத்த இப்பிடிப் பிரிச்சுப் பாக்கணும்' என்றான்.
கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை மெய்ப் பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே
'பாட்டெல்லாம் படிக்கக்கொள்ள ரொம்பவே ஈஸியாத்தான் இருக்கும். அர்த்தம் புரியுறதுகூட ஒண்ணும் பெரிய கஸ்டம்லாம் இல்லை. ஆனா, அதுக்குள்ளாற இன்னா பொடி வைச்சிருக்காருன்றதப் புரிஞ்சுக்கறதுலதான் க்கீது சூட்சுமம்'
இப்ப இந்தப் பாட்டையே எடுத்துக்க. மொத ரெண்டு வரியுல அந்தக் 'கிளை'ன்ற வார்த்தைதான் கொஞ்சம் தடுக்கும். கிளைன்னா சொந்தபந்தமின்னு புரிஞ்சிருச்சின்னா, அப்பாலிக்கா, மிச்சமெல்லாம் புரிஞ்சிரும்.
கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா
நான் செத்துப் போனேன்னா, என்னோட சொந்தக்காரங்கல்லாம் 'கா' 'கூ'ன்னு அதாவுது, 'காச்சுமூச்சு'ன்னு, 'லபோதிபோ'ன்னு கத்திக்கினு மாருல அடிச்சுக்கினு அளா[ழா]தபடிக்கா, எனக்கு நீ 'குன்ஸா' ஒரு பெரிய விசயத்தச் சொல்லிக் குடுத்தியே முருகா!ன்னு இதுல சந்தோசப் படுறாரு அருணகிரியாரு.
இதுல இன்னா புரியுது? ஆராவுது செத்துப் போனா, சொந்த பந்தம்லாம் இப்பிடி அளுவுறது சகஜந்தான். அதுல ஒண்ணும் பெருசா இல்லை. ஆனா, இவுருக்கு இன்னா நடந்திச்சுன்னு கோடி காட்டுறாரு அருணையாரு.
இவுருக்கு சாவே வரலைன்னு ஒரு சங்கிதிய 'டமார்'னு போட்டு ஒடைக்கறாரு!
அதுக்குக் காரணம் இன்னான்னும் சொல்றாரு! அதான் இவுருக்குக் கெடைச்ச அநுபூதி!
முருகன் வந்து இவுருக்கு இன்னாமோ சொல்லிக்குடுக்க, இவுருக்கு மரணபயமே போயிருச்சுன்றத சும்மா, அப்டி 'டகால்ட்டியா' சொல்லிக் காட்டுறாரு.
அப்பிடீன்னா, இது மட்டும் கெடைச்சிருச்சுன்னா, ஒனக்கு சாவே இல்லைன்னு ஒரு போடு போடறாரு இவுரு!
அப்பிடியாப்பட்ட கந்தனை அடுத்த ரெண்டு வரியுல பெருமையாப் பேசறாரு.
நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே
நீ நாகாசலன் வேலவன், நாலு கவியும் கொடுக்கற தியாகி, தேவலோகத்துக்கே ராசாவா மகுடம் சூட்டிக்கினு க்கீற பெரிய ஆளுப்பா நீ!'ன்னு இன்னான்னமோ சொல்லிப் பாடறாரு!
சரி, இதுக்கும், மொத ரெண்டு வரிக்கும் இன்னா சம்பந்தம்னு பாப்பம்!
சாவே இல்லாமப் பண்றதுன்னா, இன்னா சும்மா சாதாரணக் காரியமா அது?
அப்பிடியாப்பட்ட ஆளு இன்னா பெரிய தருமவானா இருக்கணும்? இன்னா ஒரு கருணை இருந்தா அப்பிடி ஒரு கொணம் வரும் ஒர்த்தருக்கு?
இப்ப,... சாவே இல்லாதவங்க ஆரு?
தேவருங்க! தேவலோகத்துல க்கீற தேவருங்க!
அவங்களுக்கே ஒரு நாளு ஆபத்து வந்து சூரபத்மன் அவங்களையெல்லாம் புடிச்சு ஜெயில்ல போட்டு வாட்டி எடுத்தான் ரொம்ப நாளைக்கு!
நீயும் நானும்னாக் கூடப் பரவாயில்லை. தோ, நீ க்கீறியே... ஒன்னிய ஒரு ரெண்டு தட்டு தட்டினாப் படுத்துருவே! அப்பாலிக்கா, ஒன்னோட 'பாடி'யத்தான் போட்டு அடிக்கணும்! ஆனா, தேவருங்க பாடு ரொம்பவே கொடுமை சாமி! எவ்ளோ வாட்டியெடுத்தாலும் சாவு மட்டும் வராது! வலிதான் கிடைக்கும்!
ஒன்னியும் என்னியும் விட, அப்பிடியாப்பட்டவங்களைக் காப்பாத்துறது இன்னும் பெட்டெர் தானே!
அத்தான் பண்ணினாரு முருகன்!
தன்னோட வேலை எடுத்து வீசி, சூரனைப் பொளந்து போட்டு, தேவருங்களுக்கு மறுபடியுமா, அவங்க ஒலகத்த வாங்கிக் குடுத்தாரு.
அதுக்காவ, இவங்கல்லாமாச் சேர்ந்து, முருகனுக்கே ராசாவாப் பட்டம் கட்டி, இந்திரன் தன்னோட பொண்ணியும் குடுத்தருன்றதுல்லாம் ஒனக்கும் தெரியும்.
அப்பிடி, தேவருங்க மாரி இவரையும் ஆக்கிட்டாராம் கந்தன். அதத்தான் அப்டி சொல்லிக் காட்றாரு.. சுரலோக சிகாமணியேன்னு! சிகைன்னா தலைமயிரு. மணின்னா மகுடம்.
அடுத்தப்புல, 'நாலு கவி தியாகா'ன்றாரு.
நாலு கவின்னா இன்னான்னு ஒனக்கே தெரியும். எங்க சொல்லு?' என்றான்.
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி. இதைப் பற்றி முன்பே ஒரு திருப்புகழில் விவரமா எழுதியிருக்கேன்' எனப் பதில் சொன்னேன்.
'அதேதான்! அல்லாராலியும் இந்த நாலையுமே பாடறதுன்றது கொஞ்சம் கஸ்டமான சமாச்சாரம். ஒண்ணு இருந்தா, ஒண்ணு நல்லா வராது. ஆனாக்காண்டிக்கு, அருணகிரியாருக்கு இதெல்லாம் கைவந்த கலையா வந்திச்சு. இப்பிடி நாலு விதமாப் பாடறதுக்கெல்லாம் காரணம் நம்ம முருகந்தான்! அவந்தானே தமிள்[ழ்]க் கடவுளு. அப்பிடி கொடுக்கற வள்ளலேன்னு சொல்றாரு. இப்பிடி ஆருக்கு எது வேணும்னு பாத்துப் பாத்துக் குடுக்கறமாரி இவுருக்கும் குடுத்துட்டாராம். அதுனால, நீ பெரிய வள்ளலுப்பா'ன்னு கூத்தாடுறாரு.
கடைசியா நாகாசலனேன்னு ஒரு வார்த்தை!
இந்த நாகாசலம்ன்றது எந்த எடம்?
திருப்பதின்னு சிலபேரு சொல்லுவாங்க. திருச்செங்கோடுன்னு சிலபேருங்க சொல்லுவாங்க!
ரெண்டுத்துக்குமே இந்தப் பேரு க்கீது.
திருப்பதியுல க்கீற ஏளு[ழு] மலையுல ஒரு மலைக்கு சேஷாசலம்னு பேரு.
திருச்செங்கோட்டுல ஆதிசேஷனே வந்து தன்னோட சாபம் தீர்றதுக்காவ பூசை பண்ணினான் முருகனைன்னும் சொல்லுவாங்க.
இந்த திருச்செங்கோட்டு முருகனைப் பத்தி ரொம்பப் பாட்டு பாடிக் கீறாரு அருணையாரு.
அதுனால, இத்த அந்த ஊரு முருகனைப் பத்திச் சொல்ற பாட்டாவே வைச்சுக்கலாம்!
வெஷம் இருக்கற ஆதிசேஷனையே காப்பாத்தி அருள் செஞ்சமாரி, என்னியும் காப்பாத்தினியேன்னு, அத்த மொதல்ல வைச்சு, வேலெடுத்து சூரனைப் பொளந்தியேன்னு சொல்லி, கேட்டவங்களுக்குக் கேட்டதெல்லாம் கொடுக்கற வள்ளல்ப்பா நீன்னு பெருமையாப் பாடி, சாவா வரத்த எனக்கும் கொடுத்த தேவலோக ராசாவேன்னு கொண்டாடறாரு இந்தக் கடைசி ரெண்டு வரியுல!' எனப் பேசிவிட்டு, அருகிலிருந்த நீரை எடுத்து மடமடவெனக் குடித்தான் மயிலை மன்னார்!
சாஸ்திரிகள் கண்ணிலிருந்து 'கரகர'வெனக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அடுத்தவாரம் புதங்கிளமை பாக்கலாம்' எனச் சொல்லியபடியே, அங்கு வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மன்னார்.
சொல்லமுடியாத சந்தோஷத்துடன் நானும் நாயரும் சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்!
****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
7 பின்னூட்டங்கள்:
அடியேனுக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.
அப்பனோ வையம் உய்ய விடமுண்டவன்;அவனுடைய நுதல் விழிச்சுடரான இந்தப்பிள்ளை நச்சுடைய நாகத்துக்கும் கருணைபுரியும்
'நாகாசலன்' !"ஐயோ!இவன் 'கருணை 'என்பதோர் வரம்பற்ற கடலோ?''
என்று கம்பன் ஸ்டைலில் கூவணும்போல தோணுதே!
இந்தப்பதிவில் மரணம்பற்றிப் படிக்கறப்போ ஏனோ எனக்கு 'வெள்ளரிப்பழ முக்தி' என்ற தலைப்பில் பரமாச்சார் எழுதிய கட்டுரை நினைவுக்குவந்தது;படிச்சிருப்பேன்னு நினேக்கிறேன். இல்லேன்னா(ர.கணபதியின் 'தெய்வத்தின் குரல்)ஒருமுறை கட்டாயம் படிக்கவேண்டியது.மரணத்தைப் பற்றிய நமது கருத்தைமுழுவதுமாக மாற்றிவிடக்கூடிய கட்டுரை!
//அடியேனுக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.//
இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது!:)) நன்றி.
//அடியேனுக்கு ரொம்ப பிடித்த பாடல் இது.//
இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது!:)) நன்றி.
//!"ஐயோ!இவன் 'கருணை 'என்பதோர் வரம்பற்ற கடலோ?''
என்று கம்பன் ஸ்டைலில் கூவணும்போல தோணுதே!//
அதான் கூவிட்டீங்களே அம்மா ரொப ரொப அழகா! ரா. கணபதி கட்டுரையை நானும் படித்திருக்கிறேன் அம்மா!
'பட்'ட்டுனு விட்டுறணும்!:)
முமு!
Please visit
http://asthigasamajam.blogspot.com/
for Coimbatore Namaprachara Vaibhavam Updates
Radhe Krishna
Post a Comment