மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11
மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 11
"கந்தரநுபூதி" -- 11
10.
'மனசைப் பார்த்து இம்மாம் விசயம் சொன்னவரு, இப்ப அதுக்கு கொஞ்சம் தெகிரியம் குடுக்கலாமின்னு பாக்கறாரு. அத்த வுடு, இத்த வுடுன்னு வரிசியா சொல்லிக்கினே வந்தா அந்த பாளாப்போன மனசு பயந்துருமோன்னு நெனைச்சவரு 'நீ ஒண்ணும் கவலைப்படாதே'ன்னு தெம்பு குடுக்கறாரு' என்று ஆரம்பித்தான் மயிலை மன்னார்.
நாங்கள் சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையில் கூடியிருந்தோம். இன்று புதன் கிழமை! இன்னைக்கு ஒண்ணும் வேலையில்லை! வாப்பா' எனச் சொன்னதால், நாயரையும் கூட்டிக்கொண்டு சென்றேன்.
அப்படி என்ன சொல்லியிருக்கார் அருணகிரியார் என பாட்டை உரக்கப் படித்தேன்.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார் பவலா ரிதலா ரியெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
கார் மாமிசை காலன் வரின் கலபத்து
ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே.
'எமன் வரும்போது, மயில் மேல வாப்பா'ன்னு சொல்றவரைக்கும் புரியுது. அதுக்கப்புறமா, என்னமோ வலாரி, தலாரின்னுல்லாம் ஏதோ சொல்றாரே...அதான் புரியலை மன்னார்' என்றேன் நான்.
'அப்ப, அந்த மொத ரெண்டு வரியும் புரிஞ்சிருச்சுன்ற!' எனக் குறும்பாகச் சிரித்தான் மன்னார்.
'ஞானும் அதே சோதிச்சு!' என என்னைப் பார்த்தான் நாயர்.
'நீ சொன்ன அர்த்தம் கரீட்டுத்தான்பா. ஆனா, அதுக்குள்ள ஒரு சின்ன சமாச்சாரம் க்கீது. அத்தச் சொல்றேன் கேட்டுக்கோ'
"கார் மாமிசை காலன் வரின் கலபத்து ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்"
கார் மான்னா, கறுப்பா பெருசா க்கீற மாடு.... எருமை மாடு.. காலன்னா எமராசா. கால்னா காத்து. காத்துமாரி வேகமா வந்து உசிரை பிடுங்கிகிட்டு போயிருவான். அதான் காலன்னு பேரு. ஆனாக்காண்டிக்கு, அந்தாளு வர்றதோ மெதுவாப் போற எருமை மாட்டும் மேல.
பொதுவாவே முருகனடியாருன்னா, எமன் வர்றதுக்கே பயப்படுவான். ஒருவேளை அப்பிடியே வந்தாலும், நீ ஒடனே பெருசா, அளகா, தோகையை விரிச்சுக்கினு க்கீற மயில்மேல ஏறி வெரசலா வந்து என்னைக் காப்பாத்துப்பா, முருகா'ன்னு கேட்டுக்கறாரு.
கலபம்னா தோகை. கலாபம்ன்றத அப்பிடிச் செல்லமா சொல்றாரு. ஏருன்னா, அளகு. மயிலு தோகையை விரிச்சா அளகாத்தானே இருக்கும்?
மெதுவா எருமைமாட்டு மேல எமன் வர்றதுக்குள்ள, வேகமா மயில்மேல நீ வந்திருன்னு சொல்லி, மனசுக்கு ஒரு தெம்பைக் குடுக்கறாரு.
சரி, இதுக்கும் அடுத்தாப்புல வர்ற ரெண்டு வரிக்கும் என்னா சம்பந்தன்றதுதானே ஒன்னோட கேள்வி?
இதுல இன்னா சொல்லியிருக்காருன்னு மொதல்ல பாப்பம்.
"தார்மார்ப வலாரி தலாரி எனும் சூர்மா மடியத் தொடு வேலவனே."
'தார் மார்ப'ன்னு மொதல்ல சொல்றாரு! நல்ல வாசனையான கடம்பமலரால ஆன மாலையைப் போட்டுக்கீனு க்கீறவனேன்னு!இத்த எதுக்காவ சொல்றாருன்னா, முருகனோட வேலு வர்றதுக்குள்ள, அவனோட மயிலு பறந்து வேகமா வர்றதுக்குள்ள, இந்த மாலையோட வாசனை வந்து சொல்லிரும், கவலைப்படாதே! முருகன் வந்துக்கினு க்கீறான்னு! "ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே"ன்றமாரி, முருகனுக்கு முன்னாடியே, இந்த பூவாசம் வந்து ஒரு தெகிரியம் குடுத்துரும்னு தெம்பா சொல்றாரு!
இப்ப இந்த வலாரி ஆருன்னு சொல்றேன் கேளு. வலன், வலன்னு ஒரு ராட்சசன் இருந்தான். அவனுக்கும் இந்திரனுக்கும் பகை. அரின்னா எதிரின்னு அர்த்தம். தங்கிட்ட இருந்த வஜ்ஜிராயுதத்தால அந்த அசுரனை இந்திரன் கெலிச்சுட்டான். அதுனால, இந்திரனுக்கு வலாரின்னு ஒரு பேரு.
அடுத்துது 'தலாரி'! தலம்னா இன்னான்னு ஒனக்கே தெரியும். இருக்கற எடத்துக்கு தலம்னு சொல்லுவாங்க. இங்கியும், அதே 'அரி'தான். வலாரி தலாரின்னா, இந்திரன் இருந்த எடத்தையே அழிச்ச எதிரின்னு பொருளு. ஆரு அப்பிடிப் பண்ணினாங்க. அவந்தான் சூர்மா. மான்னா ரொம்பப் பெருசுன்னு அர்த்தம். சூரன் எப்போ பெருசா நின்னான்? சமாதானமாப் போப்பான்னு சொல்ல வந்த முருகனை எதிரியாப் பாத்து, அவனோட சரமாரியாச் சண்டை போட்டு, சமாளிக்க முடியாமப் போயி, கடல்ல போயி ஒளிஞ்சுகிட்டான். வேலை விட்டெறிஞ்சாரு கந்தன். கடலே வத்திப் பூடுச்சு. இன்னாடா பண்றதுன்னு நேரா தேவலோகத்துல போயி ஒளிஞ்சுக்கறான். அவனுக்கு முன்னாடியே மயிலு அங்க நிக்குது! நல்லாக் கெவனி! மயிலு.... இவன் வேகத்துக்கும் முந்தியே அங்க போயிருச்சு! அவ்ளோ ஷ்பீடு அதுக்கு. அதுக்குத்தான் எமன் எருமையுல வர்றப்ப, மயில்மேல வந்து காப்பாத்திருவான் நம்ம முருகன்னு தெகிரியம் குடுக்கறாரு மனசுக்கு!
ம்ம்ம்... இப்ப மிச்சக் கதையும் கேளு. இன்னா பண்றதுன்னு புரியாம சூரன் ஒரு பெரிய்ய்ய்ய மாமரமா நின்னுடறான். பார்த்தாரு முருகன். இது இனிமே வேலைக்காவுதுன்னு, தன்னோட கையுல க்கீற வேலை எடுத்து வுடறாரு. மாமரம் ரெண்டாப் பொளந்து, சேவலும், மயிலுமா மாறிட்டான்னு கந்த புராணம் சொல்லுது. அதான் 'தொடு வேல் அவன்!' தொடுன்னா எறியுறது!
நாயர் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அவனைக் கையமர்த்தி, சும்மா இருக்கச் சொல்லிவிட்டு, மன்னார் தொடர்ந்தான்.
நீ இன்னா கேக்கப்போறேன்னு தெரியும்! அதான் ஏற்கெனவே மயிலு ஒண்ணு க்கீதே, அப்போ இந்த மயிலு இன்னா ஆச்சுன்னுதானே? சூரனோட ஒரு பாதி சக்தி, மயிலோட ஐக்கியமாயிருச்சுன்னு எடுத்துக்கணும்! மீதி சக்தி அவருக்கு கொடியா மாறிடுது.
எதுத்து நிக்கற சக்தில்லாம் வேலும், மயிலுமா முருகன் வந்தா ஒண்ணுமில்லாமப் போயிறும். அதுனால நீ எதுக்கும் கவலைப்படாதேன்னு தட்டிக் குடுக்கறாரு அருணகிரி.
இனிமே அடுத்தாப்புல வரப்போற மூணு பாட்டும் ஒரு செட்டு. அதை சனிக்கிளமையன்னிக்குப் பாக்கலாம். இன்னா அப்பிடிப் பாக்கறே. இனிமே அடிக்கடி நானு உங்களையெல்லாம் பாக்கப்போறேன்'எனச் சொல்லி மகிழ்வுடன் சிரித்தான் மயிலை மன்னார்.
****************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க! வேலும் மயிலும் துணை! முருகனருள் முன்னிற்கும்!
8 பின்னூட்டங்கள்:
வலனை வென்றவன்=வலாரி
வலாரியின் தலத்தை வென்றவன் =வலாரி தலாரி
வலாரி தலாரியான சூரனை வென்றவன் =சூராரி?
வெற்றிவேல்!வீரவேல்!!பற்றியவரைப் பாதுகாக்கும் வேல்!!!
எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அவன் வருவான் அம்மா!:))
தார்மார்பன்னு எதுக்கு சொன்னார்ன்னு மன்னார் சொல்லலையே?!
(நக்கீரரைக் கண்டுக்காதீங்க. அவரும் முருகபக்தர் தான். :-))
சொல்லிட்டேன் குமரன்! பதிவிலும் சேர்த்துட்டேன்! நக்கீரருக்கு நன்றியுடனான வணக்கம்!
'தார் மார்ப'ன்னு மொதல்ல சொல்றாரு! நல்ல வாசனையான கடம்பமலரால ஆன மாலையைப் போட்டுக்கீனு க்கீறவனேன்னு!
இத்த எத்துக்காவ சொல்றாருன்னா, முருகனோட வேலு வர்றதுக்குள்ள, அவனோட மயிலு பறந்து வேகமா வர்றதுக்குள்ள, இந்த மாலையோட வாசனை வந்து சொல்லிரும், கவலைப்படாதே! முருகன் வந்துக்கினு க்கீறான்னு! ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேன்றமாரி, முருகனுக்கு முன்னாடியே, இந்த பூவாசம் வந்து ஒரு தெகிரியம் குடுத்துரும்னு தெம்பா சொல்றாரு!
நன்றி மன்னார் சார். :-)
:))
மன்னாரை மறந்திட்டீங்களோ என்று நினைத்தேன்..வந்திட்டார்.
அதெப்படி மறப்பேன்? என் நண்பர்களை நான் மறப்பதேயில்லை எனதருமை நண்பரே!:))
Post a Comment