”அப்பளம் செய்வது எப்படி?”
”அப்பளம் செய்வது எப்படி?”
தலைப்பைப் பார்த்ததும், தொடர்ந்து இன்னொரு சமையல் பதிவா என மலைக்க வேண்டாம்!
அதெல்லாம்,சும்மா, அப்பப்ப வரும்!
பகவான் ரமணர் வழக்கம் போல ஒருநாள், ஆஸ்ரமத்தில் இருக்கும் சமையலறைக்குச் சென்றார்.
மதிய உணவுக்காக சமையல் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
ரமணரின் தாய் ஓர் ஓரமாக அமர்ந்து, அப்பளம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
பகவான் அவர்கள் செய்வதையே சற்று நேரம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
திடீரெனக் கடகடவெனச் சிரிக்க ஆரம்பித்தார்!
“என்ன சிரிக்கறே? வந்து கூடமாட கொஞ்சம் ஒத்தாசை பண்ணக் கூடாதா” எனத் தாய் கேட்க,
‘அதெல்லாம் முடியாது! நீங்களெல்லாம் உற்சாகமாக இருக்க வேணும்னா ஒரு பாட்டுப் பாடறேனே?’ எனச் சொன்னாராம்!
அதுதான் இந்த “அப்பளப் பாட்டு”!!
பல்லவி
அப்பள மிட்டுப் பாரு - அத்தைச்
சாப்பிட்டுன் னாசையைத் தீரு.
அனுபல்லவி
இப்புவி தன்னி லேங்கித் திரியாமற்
சற்போ தசுக சற்குரு வானவர்
செப்பாது சொன்ன தத்துவ மாகிற
வொப்புயர் வில்லா வோர்மொழி யின்படி -- [அப்பள]
சரணங்கள்
தானல்லா வைங்கோச க்ஷேத்ர மிதில்வளர்
தானென்னு மானமாந் தான்ய வுளுந்தை
நானாரென் ஞான விசாரத் திரிகையி
னானல்ல வென்றே யுடைத்துப் பொடித்து -- [அப்பள]
சத்சங்க மாகும் பிரண்டை ரசத்தொடு
சமதம மாகின்ற ஜீரக மிளகுட
னுபரதி யாகுமவ் வுப்போ டுள்ளநல்
வாசனை யாம்பெருங் காயமுஞ் சேர்த்து -- [அப்பள]
கன்னெஞ்சி னானா னென்று கலங்காம
லுண்முக வுலக்கையா லோயா திடித்து
சாந்தமாங் குழவியாற் சமமான பலகையிற்
சந்ததஞ் சலிப்பற சந்தோஷ மாகவே -- [அப்பள]
மோனமுத் ரையாகு முடிவில்லாப் பாத்ரத்தில்
ஞானாக்னி யாற்காயு நற்பிரம்ம நெய்யதி
னானது வாகவே நாளும் பொரித்துத்
தானே தானாக புஜிக்கத் தன்மய -- [அப்பள]
பதம் பிரித்து:
பல்லவி
அப்பளம் இட்டுப் பாரு - அத்தைச்
சாப்பிட்டு உன் ஆசையைத் தீரு.
அனுபல்லவி
இப்புவி தன்னில் ஏங்கித் திரியாமல்
சற்போத சுக சற்குரு ஆனவர்
செப்பாது சொன்ன தத்துவம் ஆகிற
ஒப்பு உயர்வில்லா ஓர் மொழியின்படி -- [அப்பள]
சரணங்கள்
தான் அல்லா ஐங்கோச க்ஷேத்ரம் இதில் வளர்
தான் என்னும் ஆனமாம்[ஆன்மா] தான்ய உளுந்தை
நான் ஆர் என்[னும்] ஞான விசாரத் திரிகையில்
நான் அல்ல என்றே உடைத்துப் பொடித்து -- [அப்பள]
சத்சங்கமாகும் பிரண்டை ரசத்தொடு
சமதமம் ஆகின்ற ஜீரக மிளகுடன்
உபரதி ஆகும் அவ் உப்போடு உள்ள நல்
வாசனையாம் பெருங்காயமும் சேர்த்து -- [அப்பள]
கல் நெஞ்சில் நான் நான் என்று கலங்காமல்
உள் முக உலக்கையால் ஓயாது இடித்து
சாந்தமாம் குழவியால் சமமான பலகையில்
சந்ததம் சலிப்பற சந்தோஷ மாகவே -- [அப்பள]
மோன முத்[தி]ரையாகும் முடிவில்லாப் பாத்[தி]ரத்தில்
ஞான அக்னியால் காயு[ம்] நற்பிரம்ம நெய்யதில்
நான் அதுவாகவே நாளும் பொரித்துத்
தானே தானாக புஜிக்கத் தன்மய -- [அப்பள]
பதம் பிரித்துப் படித்தால் சற்று எளிதாக விளங்கக் கூடிய இந்தப் பாடலுக்கு
விளக்கம் சொல்லும் தகுதி எனக்கில்லை!
இதற்கிடையில், ரமணாசிரமம் இந்தப் பாடல் குறித்து வெளியிட்டிருக்கும் விளக்கத்தை ஒட்டி
ஒரு சில வரிகள் சொல்ல விழைகிறேன்.
அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!
இவ்வுலகில் பிறந்து அல்லல்பட்டு அலைவதை விடுத்து,
‘நான் அதுவாக இருக்கிறேன்’ என்னும் சொல்லாமொழி சொல்கின்ற
தத்துவத்தின்படி உன் வீட்டிலேயே அப்பளம் இட்டுப் பாரு!
மொழியால் விளங்கவைத்துப் புரியவைக்க முடியாது
ஆன்றோர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து சென்றால்
இந்த வித்தை உனக்கும் விளங்கும்!
அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!
அப்பளம் இட முதல் தேவை உளுந்து!
இதன் மேலிருக்கும் கறுப்புத் தோலை முதலில் நீக்கணும்!
ஐந்து கோசங்களால் நன்றாகக் கொழுத்து வளர்ந்திருக்கும்
உடம்பென்னும் உளுந்தை மூடியிருக்கும்
ஆணவம் என்னும் தோலை நீக்கணும்!
அதற்கு,
கல்லால் ஆன எந்திரத்தில் வைத்து
உளுந்தை நன்றாக இடிக்கணும்!
’நான் யார்?’ என்னும் ஆன்மவிசாரக் கேள்வியை
அறிவுடன் புரிந்து இந்தக் கல்லில் வைத்து அரைத்திட
இடித்துப் பொடித்திடும் வேளையில்
நான் விடுதலை ஆகித் தெளியும்!
மூடியிருக்கும் ஆணவம் விலக கட்டுகள் தளரும்!
அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!
இடித்துப் பொடித்த மாவை இப்போது கலக்கணும்!
பிரண்டைச் சாறுகொண்டு சேர்த்துக் கலக்கணும்!
நன்மக்கள் கூட்டம் என்னும் சத்சங்கம் இப்போது
பிரண்டை ரசமாகி நானுடன் கலக்கச் செய்யணும்!
கலவையில் சேர்க்கணும் ஜீரகம்!
மனக்கட்டுப்பாடு என்னும் ஜீரகம் சேர்க்கணும்!
மிளகைப் பொடி செய்து அடுத்துக் கலக்கணும்!
அலையும் மனதை அடக்கிடும் மிளகுத்தூளைச் சேர்க்கணும்!
கலந்தது தெரியாமல் தன்மயமாகும் உப்பு சேர்க்கணும்!
உலகினில் வாழ்ந்தும் அதனால் அசையா உப்பைச் சேர்க்கணும்!
வாசனைக்காக பெருங்காயம் சேர்க்கணும்!
உலகோடு ஒன்றிவாழ்ந்து தன் வாசனையைச் சேர்க்கணும்!
அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!
கலந்து சேர்த்த இந்த மாவை உரலிலிட்டு
உலக்கையால் மாறி மாறிக் குத்தணும்!
உலகபந்தங்களில் ஆட்படாமல் கல்மனதாகி
‘நான், நான்’ என்னும் உணர்வு நீங்கும்வரை
உலக்கையாக மனதை உள்நிறுத்திக் குத்தணும் !
மனம் இப்போது சஞ்சலங்கள் அடங்கி நிலைபெறும்!
இடித்துக் குத்திய மாவைச் சிறுசிறு உருண்டைகளாக்கணும்!
ஒரு மரப்பலகையில் வைத்து, அயராது அதனையொரு
குழவியால் உருட்டி வட்டவட்ட அப்பளங்களாக்கணும்!
அமைதி என்னும் சிறுசிறு உருண்டைகளாய்ச் செய்து
பிரஹ்மன் எனும் சமமான பலகையில் இட்டு
சற்றும் உற்சாகம் குன்றாமல் சலிப்பில்லாமல் இட்டு வா!
அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!
இட்டுக் காய்ந்த அப்பளங்கள் இப்போது பொரிக்கத் தயார்!
பொறுமையாக வெயிலில் காய்ந்த அப்பளங்கள் பொரிக்கத் தயார்!
பேசா நிலை என்னும் அநுபூதி சித்திக்கும் வெயிலில்
காய்ந்து நிறைந்த ‘நானும்’ இப்போது பொரிக்கத் தயார்!
அடுப்பை எரியவைத்து ஒரு பாத்திரத்தை வைத்து
நெய்யூற்றி ஒவ்வொன்றாக இட்டு பொரித்துச் சாப்பிடலாம்!
மோன முத்திரை எனும் முடிவில்லாப் பாத்திரத்தை
ஞானம் எனும் நெருப்பில் வைத்து உயரிய பிரம்மம்
எனக் காயும் நெய்யில் இந்த ‘நானை’ இட்டு
தானே அதுவாகத் தினமும் பொரித்து தன்மயமாகிடவே
அப்பளம் உன் வீட்டில் இடு! பின் அதை
எண்ணையில் பொரித்து ஆசைதீரச் சாப்பிடு!
****************************************************
10 பின்னூட்டங்கள்:
பகவான் ரமணரின் அப்பளக் கவி அதி அற்புதம்! மொறு மொறு! :)
ஆசு கவி தான் தெரியும்!
அப்பளக் கவி இன்று தான் அறிந்தேன்! :)
நன்றி, ரவி!
நல்லாப் [பு]பொரிஞ்சுது போல
:))
மொழியால் விளங்கவைத்துப் புரியவைக்க முடியாது
ஆன்றோர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து சென்றால்
இந்த வித்தை உனக்கும் விளங்கும்!
இது தான் சாராம்சம்.
இன்றைய தலைமுறையினருக்கு இரமணரை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீங்கள் அரிய சேவையை செய்கிறீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துகளும் நன்றியும். அவருடைய உரைகள் ம்ட்டுமல்ல அவருடைய வாழ்க்கை நிகழ்வுகள்கூட நமக்கு சிறந்த தத்துவ விளக்கங்களாய் இருக்கின்றன. அத்தகைய நிகழ்வுகள் இரமணரைப்பற்றீய நூல்களில் நிறைய உள்ளன. நாகம்மாவினுடைய இரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள் அத்தகைய நூலகளில் ஒன்று. நீங்கள் உங்கள் இனிய நடையில் அச்சம்பவங்களை எடுத்து வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன் த. துரைவேல்
அருமை!
அழகாய் வழங்கி, அவற்றுக்கு விளக்கமும் ஈந்தமைக்கு மிக்க நன்றிகள்!
அரும் பெரும் தத்துவமாம் அத்வைதத்தை
பாமரரும் பரவசமாகும் வண்ணம்
அப்பள ரெசப்பியினூடே அருள் வழி காட்டும்
மகானின் பெருமை தான் என்னே!
அப்பளம் இடுவோமா! ஆனந்தமயம் ஆவோமா!!
மிக்க மிக்க நன்றி ஐயா.
/மொழியால் விளங்கவைத்துப் புரியவைக்க முடியாது
ஆன்றோர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து சென்றால்
இந்த வித்தை உனக்கும் விளங்கும்!
இது தான் சாராம்சம்.//
”எல்லா மறவென்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே.”
நன்றி, திரு. குமார்!
//....நாகம்மாவினுடைய இரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள் அத்தகைய நூலகளில் ஒன்று. நீங்கள் உங்கள் இனிய நடையில் அச்சம்பவங்களை எடுத்து வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அன்புடன் த. துரைவேல்//
ஒரு சில படித்திருக்கிறேன் ஐயா!
குருவருள் கூடிவரின் எழுத முயல்கிறேன்.
நன்றி.
//அருமை!
அழகாய் வழங்கி, அவற்றுக்கு விளக்கமும் ஈந்தமைக்கு மிக்க நன்றிகள்!//
நன்றி, திரு. ஜீவா.
//அரும் பெரும் தத்துவமாம் அத்வைதத்தை
பாமரரும் பரவசமாகும் வண்ணம்
அப்பள ரெசப்பியினூடே அருள் வழி காட்டும்
மகானின் பெருமை தான் என்னே!
அப்பளம் இடுவோமா! ஆனந்தமயம் ஆவோமா!!
மிக்க மிக்க நன்றி ஐயா.//
அப்படியே ஆகட்டும்!
யாவினும் நலம் சூழ்க!
நன்றி, அனானியாரே!
Post a Comment