Friday, March 27, 2009

”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”

”கோவியார் கேட்ட கொண்டைக்கடலை வற்றல் குழம்பு!”


வழக்கம் போல் சமைத்து முடித்து, என் மனைவியும், நானும் சாப்பிட்டு முடித்துவிட்டு, கணினி பக்கம் வந்தேன்!

திடீரென கோவியார் ‘அரட்டையில்’ வந்தார்!

என்றுமில்லாத் திருநாளாக 'இன்னிக்கு என்ன சமையல்?' எனக் கேட்டார்!

‘கொண்டைக்கடலை வற்றல் குழம்பு, வாழைக்காய் கறி, அரிசி அப்பளம், தயிர் சாதம்' என நான் சொல்ல,
'அடடே! விருந்து சமையல் மாதிரி இருக்கே!' எனப் பாராட்டி [கேலி??!!] விட்டு, உடனே ‘இதை எப்படி செய்வது?’ என ஒரு பதிவு போடுங்க எனக் கட்டளையிட்டார்!

இன்னிக்கு என்ன எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்த எனக்கு இது ஒரு உற்சாகத்தைத் தர, இதோ! முதன் முதலாக என்னிடமிருந்து ஒரு சமையல் செய்முறை பதிவு!

செஞ்சு பாருங்க! அட்டகாசமா இருக்கும்!

”கொண்டைக்கடலை வற்றல் குழம்பு”

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த கொண்டைக்கடலை ஒன்றரை கப்
வற்றல் மிளகாய் 8 முதல் 10 வரை
வெந்தயம் அரை டீஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு [ஒரு கப் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்]
சிறிய வெங்காயம் 10 [பாதியாக நறுக்கி வைக்கவும்]
நல்லெண்ணை 4 டீஸ்பூன்
காரப்பொடி ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை 10-15 இலைகள்
தண்ணீர் 1 கப்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணையை விட்டு, சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் இவற்றைப் போடவும்.
கடுகு வெடித்ததும், மிளகாய் வற்றல், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இவற்றோடு சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, ஊற வைத்த கொண்டைக்கடலையைப் போட்டு,
காரப்பொடி, உப்பு இவற்றைப் போட்டு கொதிக்கவைத்து, பிறகு ஒரு கப் தண்ணீரையும் ஊற்றி,
நன்றாகக் கொதிக்க விடவும்.
இப்போது மீதமிருக்கும் 2 டீஸ்பூன் எண்ணையை விடவும்.
2 அல்லது மூன்று கொதி ஆனதும் அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே சற்று நேரம் வைத்த பின்னர்,
வடித்த சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.

சுட்ட அப்பளம் இதற்கு சூப்பரா இருக்கும்.


வாழைக்காய் கறி:

தேவையான பொருட்கள்:

1 பெரிய வாழைக்காய் [சிறு சிறு துண்டங்களாக நறுக்கி, தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்]
நல்லெண்ணை 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
கடலைப் பருப்பு ஒரு டீஸ்பூன்
உப்பு ஒன்றரை டீஸ்பூன்
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
துறுவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு சில இலைகள்
பெருங்காயம் ஒரு சிமிட்டா


செய்முறை:

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகை வெடிக்க விடவும்.
கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றைப் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்த வாழைக்காய் துண்டங்களுடன் புளியைக் கரைத்து, தண்ணீரை முக்கால் பாகம் வடித்துவிட்டு,
மீதித் தண்ணீருடன் இதில் போட்டு,வதக்கவும்.
தண்ணீர் சுண்டியதும், மீதமிருக்கும் எண்ணையை ஊற்றி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு,
பெருங்காயத்தைக் கரைத்து ஊற்றி, தேங்காய்த் தூளைத் தூவி, 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கிளறு கிளறி பரிமாறலாம்.

அப்பளம் எப்படி சுடறது, தயிர் சாதம் எப்படி பிசையறதுன்னு கேக்காதீங்க மக்களே!


யாராவது செஞ்சு பார்த்து சொல்லுங்க சாமி!:)))

[குறிப்பு: இதில் கூறப்பட்டிருக்கும் அளவு 2 அல்லது மூன்று பேருக்கு சரியாக இருக்கும்.]

6 பின்னூட்டங்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி Friday, March 27, 2009 1:18:00 AM  

கோவியாருக்கு கடலை மட்டும் இல்லை
குழம்பும் கூட...!

Unknown Friday, March 27, 2009 3:13:00 AM  

அய்யா. இதுவரை டீ தவிர வேறெதும் ஆர்வமாக சமைத்ததில்லை. ரொம்ப இலகுவாகத் தெரிகிறதே. சட்டியுடன் ஒரு கை பார்த்திடவா?

VSK Friday, March 27, 2009 9:02:00 AM  

//கோவியாருக்கு கடலை மட்டும் இல்லை
குழம்பும் கூட...!//

அதே! அதே!! :)))

VSK Friday, March 27, 2009 9:04:00 AM  

//அய்யா. இதுவரை டீ தவிர வேறெதும் ஆர்வமாக சமைத்ததில்லை. ரொம்ப இலகுவாகத் தெரிகிறதே. சட்டியுடன் ஒரு கை பார்த்திடவா?//

ஆமாம், திரு. சுல்தான் அவர்களே,

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு, அரிசியைக் குக்கரில் வைத்தால், சாதம் ரெடி ஆவதற்குள், இவற்றையும் செய்து விடலாம்!

ஒரு கை பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

கோவி.கண்ணன் Saturday, March 28, 2009 11:40:00 PM  

ஆகா, மணக்க மணக்க எழுதி இருக்கிறீர்கள், செய்து பார்த்துட வேண்டியது தான்.

ஊறவைத்த கொண்டைக் கடலை, மிதமாக வேகவைத்து அதன் பிறகு குழம்பில் பயன்படுத்தினால் குழம்பின் சுவை கூடும்.

அல்லது லேசாக வறுத்து அதன் பிறகு ஊறவைத்து பயன்படுத்தினாலும் கூடுதல் சுவை கிடைக்கும்

VSK Sunday, March 29, 2009 12:46:00 AM  

//ஆகா, மணக்க மணக்க எழுதி இருக்கிறீர்கள், செய்து பார்த்துட வேண்டியது தான்.

ஊறவைத்த கொண்டைக் கடலை, மிதமாக வேகவைத்து அதன் பிறகு குழம்பில் பயன்படுத்தினால் குழம்பின் சுவை கூடும்.

அல்லது லேசாக வறுத்து அதன் பிறகு ஊறவைத்து பயன்படுத்தினாலும் கூடுதல் சுவை கிடைக்கும்//

நீங்க சொல்றது சரிதான்! ஆனால், இது வற்றல் குழம்பு என்பதால், ஊறவைத்த கடலையைப் போட்டாலே நன்றாக இருக்கும்!
அந்த கொதிப்பிலேயே பதமாக வெந்துவிடும்!

செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க!:))

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP