Tuesday, May 20, 2008

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

"பாரதி" -- சில காட்சிகள் -- 7

முந்தைய பதிவு இங்கே!

'சரி, எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறான் பாரதி?

அப்படி என்ன வரம் கேட்கப் போகிறான்?
[அடுத்த பதிவில்]'...................


மணக்குள விநாயகனை நெருங்குகிறான்.
தான் கேட்கப்போகும் வரத்தின் சுமை அவனுக்குப் புரிகிறது.
ஆகவே, சற்றுத் தயங்குகிறான்!

என்ன! பாரதிக்குத் தயக்கமா? எதற்கும் அஞ்சாதவனுக்கும் தயக்கமா! வியக்கிறார் கணபதி!

என்ன விஷயம் என்பதுபோலப் பார்க்கிறார்! மெதுவாக ஆரம்பிக்கிறான்.....,

'யாரும் இதுவரைக்கும் உன்னிடம் சொல்லாத ஒன்றைச் சொல்லப் போகிறேன், விநாயகரே! இதுவரை யாரும் உன்னிடம் கேட்டுகூட இருந்திருக்க மாட்டார்கள்!' எனத் துவங்குகிறான்.

விநாயகர் புருவங்களை உயர்த்தியபடியே வியப்பு கலந்த சிரிப்புடன் பாரதியை மேலும் சொல்லத் தூண்டுகிறார்!

"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்" என்கிறான் பாரதி.

அப்படி என்னதான் கேட்கப் போகிறான் பாரதி? பொன்னா?.. பொருளா? இல்லை வேறு ஏதாவதா?..... அதையெல்லாம் என்னிடம் கேட்கமாட்டானே! வழக்கமாக என் அம்மாவிடம்தானே கேட்பான்! இப்போது என்னிடம் வந்து 'ஏதேதோ சொல்லத் துணிகிறேன்' என வேறு சொல்கிறானே என கணபதிக்கு இப்போது மெய்யாகவே வியப்பு மேலோங்குகிறது.

'மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், யாவும் "என் வினையால்" இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவதேவா!' என ஒரு போடு போடுகிறான்!

அதாவது, இவன் செய்யப்போகும் செயல்களின் மூலமாகவே இந்த அனைத்துச் செயல்களும் நிகழ வேண்டுமாம். அதையும் தான் எப்படிச் செய்வேன் என, விநாயகரிடம் நிபந்தனை போடுகிறான்!

'ஞான ஆகாசத்து நடுவே நின்று நான், "பூமண்டலத்தில் அன்பும், பொறையும் விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க" என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி, "அங்ஙனே ஆகுக" என்பாய் ஐயனே!'

எப்போது இது நிகழ வேண்டுமாம் இவனுக்கு?

இப்போது முழுத் தைரியமும் திரும்ப வந்துவிட்டது! தயக்கம் விடை பெற்றுச் சென்றுவிட்டது! கேட்கிறான்!

'இந்நாள் இப்பொழுது எனக்கு இவ்வரத்தை அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த சக்தி குமாரனே! சந்திர மவுலீ நித்தியப் பொருளே! சரணம் சரணம் சரணம் இங்கு உனக்கே' என கணபதி தாளில் வீழ்கிறான்!

என்ன ஒரு உள்ளம் பாருங்கள்! இவ்வுலகம் செழித்திருக்கவே இவ்வளவு நேரமாக கணபதியிடம் மன்றாடியிருக்கிறான். அது தன்னால் நிகழ வேண்டும்... நிகழ்த்த முடியும்... என்னும் திடநம்பிக்கையுடன்!

'உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்; மனக் கேதம் யாவினையும் மாற்றி, எனக்கே நீ நீண்ட புகழ் வாழ்நாள், நிறைசெல்வம், பேரழகு வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து' என உடனே அடுத்ததாகக் கேட்கிறான்!

இது கொஞ்சம் வியப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவு நேரம் நம் அனைவருக்குமாக வேண்டியவன், என்னடா! இப்போது இவையெல்லாவற்றையும் கேட்கிறானே! என்று முகம் சுளிக்க வைக்கிறானோ?!!!

சற்றுப் பொறுங்கள்! பாரதியின் உள்ளம் விரைவில் புரியும்!

'விரைந்து உன் திருவுளம் என்மீது இரங்கிட வேண்டுமைய்யா! குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன், அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா! வரங்கள் பொழியும் முகிலே! என் உள்ளத்து வாழ்பவனே!' என்று, காக்கும் கடவுள் திருமாலையும் சேர்த்தழைத்து, கூடவே இலக்குமியையும் வைத்துப் பாடுகிறான்.

நம் வியப்பு இன்னமும் அதிகமாகிறது!

இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பது போல விநாயகர் பார்க்கிறார்!
அதற்கும் உடனே ஒரு பதில் தயாராக வைத்திருக்கிறான் பாரதி!

'வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத பணிமலரே!' என் உள்ளத்தில் சலனமில்லாது முதலில் நீ வந்து உட்கார்! இந்தப் பரந்த வெளி முழுவதும் அன்பினால் சூழட்டும்! எல்லாத் துயர்களையும் தொலைத்துவிடு! தொலையாத இன்பத்தை விளைத்துவிடு! இந்தக் கலிகாலத்தின் கொடுமையெல்லாம் வீழ்ந்து போகச் செய்! கிருத யுகத்தை எங்களுக்குக் கொடு!' எனக் கட்டளையிடுகிறான்!

'ஆழ்க உள்ளம் சலனமிலாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெல்லாம்! கிருத யுகந்தான் மேவுகவே!'

எனப் பாடியவனின் கவனம் உடனே தன் நெஞ்சத்தின் மீது படிகிறது!

நடப்பது எதுவும் புரியாமல், உணராமல் அது இன்னமும் அச்சத்துடன் நடுங்கிக் கொண்டிருக்கிறது! பாரதிக்குக் கோபம் வரத் தொடங்குகிறது!

'நான் தான் இங்கே உனக்காகக் கேட்டுக் கொண்டிருக்கின்றேனே... பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்! இன்னமும் உனக்கு ஏன் அச்சம்?' என்பதுபோலக் கடிகிறான்!

யார் இந்தப் பாரதியின் 'உள்ளம்"?
கவனமாகக் கேளுங்கள்! பாரதியின் உள்ளம் புரியும்!

'மேவி, மேவித் துயரில் வீழ்வாய்; எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்! பாவி நெஞ்சே!'
பார்மிசை நின்னை இன்புறச் செய்வேன்; எதற்கும் இனி அஞ்சேன்; ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் அபயம் இங்கு அளித்தேன்.....நெஞ்சே!'
என்று அதற்கு தைரியம் கொடுக்கிறான்!

நாடு என்பதற்கு இரு பொருள் கொடுத்திருந்தான் சற்று நேரம் முன்னர்! இந்தப் பரந்த நாடு, நமது விரிந்து பரந்த உள்ளம் இரண்டையும் பார்த்தே இந்த சாடலைச் செய்கிறான் பாரதி.

'நான் சொன்ன சொல் தவறாதவன். இப்போது உனக்கு நான் சொன்னதை நிலை நிறுத்துவதற்காக, தீயில் குதிப்பேன்; கடலினில் விழுவேன்; விடம் கூட உண்பேன்; இந்த உலகத்தையே அழிக்கவும் தயார்; எது வேண்டுமானாலும் செய்து உன்னைக் காப்பேன்' எனச் சொல்லிவரும் பாரதி, ஒரு அற்புதமான சொல்லைச் சொல்லி, தான் யார்? தன் உள்ளம் எத்தகையது என நிரூபிக்கிறான்........ இல்லை, இல்லை!....... அவன் யாருக்கு நிரூபிக்க வேண்டும்?...... தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான்!

"மூட நெஞ்சே! முப்பது கோடி முறை உனக்கு உரைத்தேன்; இன்னும் மொழிவேன்" என்கிறான்.

பாரதி வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது!

ஆம்! அந்த முப்பது கோடி மக்களையும் தன உள்ளமாகப் பாவித்துத்தான், இதுவரை இவன் விநாயகரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்!

மன விடுதலை, நாட்டு விடுதலை இரண்டையும் தன்னால் நிகழ்த்த முடியும்.... கணபதி அருளோடு எனத் திடமாக நம்பினான்!

உன் தலையில் இடி விழுந்தால்கூட கவலைப் படாதே...... விடுதலையை நாடு!
எது நிகழ்ந்தாலும் நமக்கேன் என்றிரு!...... விடுதலையை மட்டுமே நாடு!
பராசக்தி பார்த்துக் கொள்வாள்! ...... விடுதலை!!

"நான் என்றோர் தனிப்பொருள் இல்லை; நான் எனும் எண்ணமே வெறும் பொய்" என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன் பதம்!'

மிக மிகக் கவனமாக சொற்களை வைக்கிறான் பாரதி!

முதலில் காக்கும் கடவுளைக் கூப்பிட்டான்....... தன் தேவைகளுக்கு!

இப்போது விடுதலை பற்றிப் பேசுகையில், நிர்வாணா எனும் தத்துவத்தைப் போதித்த புத்தனை வணங்குகிறான்.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தன் சுய விடுதலை பற்றிய தோத்திரம் போல இது தெரிந்தாலும், அவன் வேண்டுவதெல்லாம் இந்த நாட்டு விடுதலை ஒன்றை மட்டுமே!

ஒரே கவியில் இரு பொருள் வைத்துப் பாடுகிறான்.

புதுவையில் தஞ்சம் அடைந்திருந்த நேரத்தில் பாடிய பாடல் இது! அதிகம் சொல்ல அவனால் இயலாது!

எனவே, சொல்கிறான்!

'இனி எப்போதும் உரைத்திடேன்; இதை நீ மறவாதிருப்பாய்; மடமை நெஞ்சே! கவலைப் படுதலே கருநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி! சிவன் ஒருமகன் இதை நினக்கு அருள் செய்கவே!'

என்ன செய்ய வேண்டும் இந்த மனம்! இந்த மக்கள்!
விடுதலை பெற?

[அடுத்த பதிவில்]

8 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Tuesday, May 20, 2008 10:12:00 PM  

////மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், தன் சுய விடுதலை பற்றிய தோத்திரம் போல இது தெரிந்தாலும், அவன் வேண்டுவதெல்லாம் இந்த நாட்டு விடுதலை ஒன்றை மட்டுமே!

ஒரே கவியில் இரு பொருள் வைத்துப் பாடுகிறான்.

புதுவையில் தஞ்சம் அடைந்திருந்த நேரத்தில் பாடிய பாடல் இது! அதிகம் சொல்ல அவனால் இயலாது!///

எளிய பாடலுக்கு ஒரு அரிய விளக்கம். சிறப்பாக உள்ளது!
நன்றி வி.எஸ்.கே சார்

VSK Wednesday, May 21, 2008 12:31:00 AM  

ஆசானுக்குப் புரியாமல் போகுமா?

நன்றி ஐயா!

jeevagv Wednesday, May 21, 2008 8:14:00 AM  

//மன விடுதலை, நாட்டு விடுதலை இரண்டையும் தன்னால் நிகழ்த்த முடியும்.... கணபதி அருளோடு எனத் திடமாக நம்பினான்!
//
அச்சமில்லை, அச்சமில்லை என்று சொன்னதின் பின்புலம் இதுதானோ!

VSK Wednesday, May 21, 2008 9:03:00 AM  

அப்படித்தான் இருக்கவேண்டும், ஜீவா.

படிக்கப் படிக்க புதிய கருத்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.
நன்றி.

வல்லிசிம்ஹன் Thursday, May 22, 2008 10:03:00 AM  

விடுதலை நமக்கு இப்போது எளிது. உடல் விடுதலை.
ஆன்ம விடுதலையையும் வேண்டி இருப்பானோ.

பாரதி....சோகம் மேலிடுகிறது.

Kavinaya Friday, May 23, 2008 9:40:00 AM  

//அந்த முப்பது கோடி மக்களையும் தன உள்ளமாகப் பாவித்துத்தான், இதுவரை இவன் விநாயகரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்!//

அருமையான விளக்கம்.

//படிக்கப் படிக்க புதிய கருத்துகள் வந்துகொண்டே இருக்கின்றன.//

சரியாகச் சொன்னீர்கள், டாக்டர். உங்கள் விளக்கங்களைப் படிக்கையிலும் அவ்விதமே!

VSK Friday, May 23, 2008 10:38:00 AM  

//பாரதி....சோகம் மேலிடுகிறது.//
சோகம் இல்லை வல்லியம்மா!
இது உள்ளிருந்து பீறிடும் ஆத்ம வெள்ளம்!
இன்னமும் சுதந்திர வேட்கையின்றி இருக்கிறாயே என மனத்தையும் நாட்டுமக்களையும் பார்த்துப் போடும் கோபக்கூச்சல்!

VSK Friday, May 23, 2008 10:40:00 AM  

சரியான முறையில் இதைப் புரிந்துகொண்டு நீங்கள் பாராட்டுவது மனதுக்கு இதமாயிருக்கிறது கவிநயா! நன்றி.
இந்தப் பதிவின் மூலக்கருத்தே அந்த வரிகள்தாம்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP